Sunday, December 20, 2020

அதிகமாக ஆசைப்படும் பிரேமலதா

 

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான கருணாநிதி,ஜெயலலிதா ஆகிய இருவருக்கும் எதிராகத் தேர்தலில் போட்டியிட்டு  நெருக்கடி கொடுத்தவர் விஜயகாந்த். அவரின்   சிம்ம கர்ஜனையை ரசித்த கூட்டம் அவரின் பின்னால் சென்றது. மேடை தோறும் கருணாநிதியையும், ஜெயலலிதாவையும்  விமர்சித்து அரசியல் செய்தவர் விஜயகாந்த்

இன்று, பொம்மைபோல இருக்கும் விஜயகாந்தை பக்கத்தில் வைத்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார் அவரின் மனைவி பிரேமலதா. உச்சத்தில் இருந்த விஜயகாந்தின் செல்வாக்கு அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. அந்த அரசியல் யதார்த்தத்தை உணர்ந்துகொள்ளாமல் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவும், மைத்துனர் சுதீஷும்  பேசும் பேச்சுக்களும், வெளியிடும் அறிக்கைகளும் அரசியல் என்றால் என்னவென்றே தெரியாத நிலையில் அவர்கள் இருப்பதை வெளிப்படுத்தியுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்ம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  ஆகியவற்றின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜயகாந்தின் கட்சி இருந்தது. 2005 ஆம் ஆண்டு கட்சியை ஆரம்பித்த விஜயகாந்த் 2006 ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் 232 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டார். மக்களுடந்தான் கூட்டணி எனும் விஜயகாந்தின் தனித்துவமான பேச்சால் பலர் கவரப்பட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்ம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்   ஆகிய இரண்டு கட்சிகளையும் விரும்பாத வாக்காளர்கள் விஜயகாந்தின் கட்சிக்கு வாக்களித்தனர்.


2005 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் 8.45 சத வாக்குகளைப் பெற்று ஆளும் கட்சிக்கும் பிரதான எதிர்க் கட்சிக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார் விஜயகாந்த். அந்தத் தேர்தலில் விஜயகாந்த மட்டும் வெற்றி பெற்றார்.  ஏனைய வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டாலும் விஜயகாந்தின் கட்சி பெற்ற வாக்குகள் பிரதான கட்சிகளைக் கிலிகொள்ள வைத்தது. விஜயகாந்தின் வளர்ச்சி கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் அசைத்துப் பார்த்தது. அவருடன் கூட்டணி சேர இருவரும் தூது விட்டனர்.

2011 ஆம் ஆண்டு  தமிழக சட்ட சபைத் தேர்தலில் ஜெயலலிதா 41 தொகுதிகளை ஒதுக்கியதால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் விஜயகாந்தின் கட்சி போட்டியிட்டது. 29 தொகுதிகளில் விஜயகாந்தின் கட்சி வெற்றி பெற்றதால் அவர் எதிர்க் கட்சித்தலைவரானார். திராவிட முன்னேற்றக் கழகம் பல இடங்களில்  மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. எதிர்க் கட்சித்தலைவர் பதவி கருணாநிதிக்குக் கிடைக்கவில்லை. விஜயகாந்தின் உறுப்பினர்களைப் பிரித்தெடுத்து  அவரின் எதிர்க் கட்சி உறுப்பினர் பதவியை பறித்தார் ஜெயலலிதா. அதன் பின்னர் வீழ்ந்த விஜயகாந்தின் கட்சி இன்னமும் தலை தூக்கவில்லை.

2016 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் விஜயகாந்துடன் கூட்டணி சேர கருணாநிதி விரும்பினார். பழம் நழுவி பாலில் விழும் நிலை எனக் கூறினார்.  விஜயகாந்தை வளைத்த மூன்றாவது அணி அவரை முதல்வர்  வேட்பாளராக்கியது.  மூன்றாவது அணி படு தோல்வியடைந்தது. மூன்றாவது அணியால் கருணாநிதி முதல்வராக முடியாத நிலை ஏற்பட்டது. விஜயகாந்தின் கட்சியின் வாக்கு 2.2 சத வீதமாக வீழ்ச்சியடைந்தது.

விஜயகாந்தின் வாக்கு வங்கி வீழ்ச்சியடைந்ததை கணக்கில் எடுக்காத மனைவி பிரேமலதாவும், மைத்துநர் சுதீஷும் தாம் இன்னமும் உயரத்தில் இருப்பதாகவெ எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.  விஜயகாந்தின் மகனோ தன்னைலை மறந்து   பேசுகிறார்.  எல்லாக் கட்சிகளும் விஜயகாந்தின் காலடியில் கிடக்கின்றன.  விஜயகாந்துடன் கூட்டணி வைக்க கட்சிகள் வரிசையில் காத்திருக்கின்றன என விஜயகாந்தின் மகன் சொல்கிறார்.


சிங்கம் போல் கர்ஜித்த விஜயகாந்த் பொம்மைபோல் உட்கார்ந்திருப்பதைப் பார்க்க பரிதாபமாக இருக்கிறது. கட்சிப் பிரசாரத்துக்கு தலைவர் வருவார் என பிரேமலதா சொல்லும் கதை நம்பும்படியாக இல்லை. விஜயகாந்தின் வீழ்ச்சியை உணராது  41 தொகுதிகளைத் தருபவர்களுடன் தான்  கூட்டணி என  பிரேமலதா யாரும் கணக்கில் எடுக்க மாட்டார்கள். விஜயகாந்தின் கட்சியில் உள்ள பலர் வேறு கட்சிகளுக்குச் சென்றுவிட்டார்கள்.  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய வேட்பாளர்கள் யாரும்    இல்லை.  கூட்டணிக் கட்சியின் உதவி  இல்லாமல் வெற்றி பெற  முடியாது என்ற உண்மை பிரேமலதாவுக்குத் தெரியும். ஆனாலும் போலிக் கெளரவத்தால்  அதிக தொகுதிகளுக்கு ஆசைப்படுகிறார்.

தமிழக சட்ட சபைத் தேர்தலில் சகல தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்த பிரேமலதா அந்தப் பரபரப்பு அடங்குவதற்கிடையில்  41 தொகுதிகலைத் தருபவர்களுடன் தான் கூட்டணி என அறிவித்துள்ளார்.  விஜயகாந்த் என்ற மாயை மறைந்து விட்டது.    அதனால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜயகாந்த் இல்லை. கடந்த சட்ட சபைத் தேர்தலில் 1.1 சத வீத வாக்குகளால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைப் பிடிக்க  முடியாது தோல்வியடைந்தது. இன்றைய அக் கட்சியின் 2 சதவீத வாக்கு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அவசியம் தேவையானது.  ஆனால், அதற்காக 41 தொகுதிகளைத் தூக்குக் கொடுக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இல்லை.


சட்டசபைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டாலும் வெற்றி பெறக்கூடிய செல்வாக்கு பிரேமலதா, விஜய பிரபாகரன்,,சுதீஷ் ஆகியோருக்கு இல்லை. சுதீஷை நாடாளுமன்ற உறுப்பினராக்க வேண்டும் என்ற கனவு பிரேமலதாவுக்கு இருக்கிறது.  அதனால்தான் நடக்க முடியாத ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார். கடந்த சட்ட சபைத் தேர்தலின் போது அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் விஜயகாந்தின் கட்சியை பிரேமலதா இணைத்தார். கடைசி நேரம் வரை  திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பேரம் பேசிய அசிங்கமும் வெளிச்சத்துக்கு வந்தது.

சுதீஷை ராஜ்ய சபா எம்பியாக்க வேண்டும் என்ற கனவான் ஒப்பந்தத்துடன்  கூட்டணியில் இணைந்தார் பிரேமலதா தேர்தல் முடிந்ததும் கனவான் ஒப்பந்தத்தை கைவிட்டது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.  அந்தப் படிப்பினையால் இம்முறை எழுத்து மூல ஒப்பந்தம் செய்து தான் கூட்டனியில் சேர்வார் பிரேமலதா.

விஜயகாந்தால் உருவாக்கப்பட்ட கட்சியைப் பற்றியோ அதன் வளர்ச்சி பற்றியோ கிஞ்சித்தும் அக்கறை இல்லாது  சுதீஷுக்கு ஒரு எம்பி பதவி வாங்குவதிலேயே பிரேமலதா குறியாக இருகிறார்.

வர்மா 

 

 

 

 


Wednesday, November 18, 2020

ஐபிஎல் தொடரில் மோசமான ஓவர்கள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த 13-வது சீசன் ஐபிஎல் போட்டியில் பெரும்பாலான ஆட்டங்கள் அனைத்தும் சுவாரஸ்யம் மிகுந்தவையாகவே இருந்தன. சில போட்டிகள் தொடக்கத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, கடைசியில் ஏமாற்றிய போட்டிகளும் இருந்தன..

சில போட்டிகள் பேட்ஸ்மேன்களுக்குச் சாதகமாகவும், சில போட்டிகள் பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாகவும் இருந்தன. அதிலும் ஒவ்வொரு ஆட்டத்திலும் கடைசி 5 ஓவர்கள் ரசிகர்களை இருக்கையின் நுனிவரை அமரவைத்தன.

ஏனென்றால், அந்தக் கடைசி 5 ஓவர்களில்தான் பந்துவீச்சாளர்கள் முழுத் திறமையையும் பயன்படுத்தி டெத் ஓவர்களை வீச முயன்றனர். அந்த டெத் ஓவர்களைத் தங்கள் காட்டடி ஷாட்களால் சிக்ஸர்களுக்கும், பவுண்டரிகளுக்கும் தெறிக்கவிட்ட வீரர்களும் இருந்தனர்.

  ஐபிஎல் தொடரில் 5 பந்து வீச்சாளர்கள் வீசிய ஓவர்களை ஒருபோதும் அவர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு துடுப்பாட்ட வீரர்கள் வெளுத்து வாங்கினர்.

1. ஷெல்டல் காட்ரெலைக் காலி செய்த திவேட்டியா

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் இடையே நடந்த லீக் ஆட்டத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்திருக்க முடியாது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வெற்றி பெறுவது சந்தேகம் என்று நினைத்திருந்த ஆட்டத்தை அந்த அணியின் ராகுல் திவேத்தியா 6 சிக்ஸர்கள் விளாசி ஒரே நாளில் நாடு முழுவதும் பேசக்கூடியவராக மாறினார்.

ஷார்ஜாவில் நடந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 224 ஓட்டங்கள் இலக்கு நிர்ணயித்திருந்தது பஞ்சாப் அணி. ஆனால் 17-வது ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்புக்கு 173 ஓட்டங்கள்தான் சேர்த்திருந்தது. அதன்பின் ஷெல்டன் காட்ரெல் வீசிய ஓவரில் 5 சிக்ஸர்கள் விளாசி, ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அந்த ஓவரில் மட்டும் 30 ஓட்டங்கள் சேர்ததார் திவேட்டியா. இதுதான் ஐபிஎல் தொடரிலேயே மோசமாக வீசப்பட்ட ஓவராகும். அந்தப் போட்டியில் ராஜஸ்தான் அணி வென்றது.

2. இங்கிடி ஓவரைப் பிரித்தெடுத்த ஆர்ச்சர்


சிஎஸ்கே அணிக்கு எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதிய லீக் ஆட்டம்தான் சிஎஸ்கேவின் வெற்றியைப் பறித்தது. ஏனென்றால், லுங்கி இங்கிடி வீசிய கடைசி ஓவரில் ராஜஸ்தான் வீரர் ஜோப்ரா  ஆர்ச்சர் அடித்த ஸ்கோர்தான் அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அந்த ஸ்கோர்தான்சென்னையின் தோல்விக்கும் காரணமாக அமைந்தது. இங்கிடி கடைசி ஓவரில் 2 நோ பால்கள், ஒரு வைடு என 9 பந்துகள் வீசினார். இதைச் சரியாகப் பயன்படுத்திய  ஆர்ச்சர் முதல் பந்தில் சிக்ஸர், 2-வது பதில் ஒரு சிக்ஸர், 3-வது பந்து நோபாலாக வீசப்பட்டதால், ப்ரீஹிட்டில் ஒரு சிக்ஸர் விளாசினார். 4-வது பந்தில் மீண்டும் சிக்ஸர் என மொத்தம் 30 ஓட்டங்கள் விளாசப்பட்டது. 

3.பூரனின் அதிரடி ஆட்டம்


சன்ரைசர்ஸ் அணிக்கும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும் இடையே நடந்த ஆட்டத்தில் நிகோலஸ் பூரனின் அதிரடி ஆட்டமும் பேசப்பட்டது. சாதனையாகவும் அமைந்தது. சன்ரைசர்ஸ் சுழற்பந்துவீச்சாளர் அப்துல் சமது வீசிய ஒரு ஓவரில் 6,4,6,6,6 என 28 ஓட்டங்கள் சேர்த்தார் பூரன்.

இந்தப் போட்டியில் அதிரடியாக ஆடிய பூரன், 17 பந்துகளில் அதிவிரைவாக அரை சதம் அடித்து 30 பந்துகளில் 77 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஐபிஎல் தொடரில் 2-வது மிக மோசமான ஓவராக இது அமைந்தது. 

4. ஜம்ப்பா ஓவரை நொறுக்கிய பொலார்ட்


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்  பொலார்ட் வெளுத்து வாங்கிய இந்த ஆட்டத்தையும் குறிப்பிட வேண்டும். ஆர்சிபி சுழற்பந்துவீச்சாளர் ஆடம் ஜம்ப்பா வீசிய ஓவரில்  பொலார்ட் பொளந்து கட்டினார்.

ஜம்ப்பாவின் ஒரு ஓவரில் மட்டும் பவுண்டரி, சிக்ஸர், சிக்ஸர், 2 ஓட்டங்கள், சிக்ஸர், 3 ஓட்டங்கள் என 27 ஓட்டங்கள் சேர்க்கப்பட்டன. இது ஐபிஎல் தொடரில் 3-வது மோசமான ஓவராக அமைந்தது.

5. ஹர்திக் பாண்டியாவின் ருத்ர தாண்டவம்


ஹிட்டர்ஸ் பேட்ஸ்மேன்கள் பற்றிப் பேசினால் ஹர்த்திக் பாண்டியா பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. இந்தத் தொடரில் ஹர்த்திக் பாண்டியா   சிறப்பாக விளையாடப் போதுமான வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், கிடைத்த வாய்ப்புகளில் தனது அதிரடியை வெளிக்காட்ட மறக்கவில்லை.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக ஹர்த்திக் பாண்டியா  ஆடிய ருத்ர தாண்டவத்தை மறக்க முடியாது. ராஜஸ்தான் வீரர் அங்கித் ராஜ்புத் வீசிய ஒரு ஓவரில் 26 ஓட்டங்களை விளாசினார் ஹர்திக் பாண்டியா. 21 பந்துகளில் 60 ஓட்டங்களை இந்த ஆட்டத்தில் ஹர்த்திக் பாண்டியா  எடுத்தார். அதுமட்டுமல்லாமல் மைதானத்தில் கறுப்பினத்தவர்களுக்கு ஆதரவாக ஒற்றைக் காலை மடக்கி தனது கைகளை உயர்த்தி ஆதரவும் அளித்தார். ஆனால், இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணிதான் வென்றது.