தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ராஞ்சியில் நடந்த பரபரப்பான ஒரு நாள்போட்டியில் 17 ஓட்டங்களால் இந்தியா வெற்றி பெற்றது,
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற தென் ஆபிரிக்கா பந்து வீச்சைத் தேர்வு செய்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 8 விக்கெற்களை இழந்து 349 ஓட்டங்கள் எடுத்தது. ரோஹித் 57 கோலி 135, கே.எல்.ராகுல்,60 ஓட்டங்கள் எடுத்தனர்.350 என்ற இமாலய இலக்கை எதிர் நோக்கி களம் இறங்கிய தென் ஆபிரிக்கா இறுதிவரை போராடியது.
முதல் மூன்று விக்கெட்டுகளை 11 ஓட்டங்களில் இழந்து விட்டதால், நிச்சயம் தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாத்யூ 72 ஓட்டங்கள், மார்கோ ஜேன்சன் 70 ஓட்டங்கள் அடித்து பயத்தைக் காட்டினர். இவர்கள் இருவரையும் ஒரே ஓவரில் குல்தீப் யாதவ் வீழ்த்திய பிறகு, போட்டி மீண்டும் இந்தியா பக்கம் திரும்பியது. இருப்பினும், கார்பின் போஸ்ச் அபாரமாக விளையாடி 67 ஓட்டங்கள் அடித்து மீண்டும் இந்திய அணிக்கு பயத்தை காட்டினார்.
இறுதியில், தென்னாப்பிரிக்க அணி கடைசி ஓவரில் 18 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்தபோது, பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சில் கடைசி பேட்ஸ்மேன் அவுட் ஆனார். இதனால், இந்திய அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
டெஸ்ட் தொடர் தோல்விக்குப் பிறகு கம்பீர் மீது விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், ரோஹித் , கோலி ஜோடி களத்தில் தங்களது பழைய ஆதிக்கத்தை மீண்டும் நிலைநாட்டியது. ரோஹித் சர்மா அரைச் சதம் அடித்தபோதும், கோலி சதம் அடித்தபோதும் கம்பீர் அமைதியாக இருந்தார்.
ரோஹித் அரை சதம் அடித்த போது ரோஹித் உற்சாகமாகக் கத்தினார் . கோலி சதம் அடித்தபோது பெவிலியனில் இருந்த ரோதித் ஆர்ப்பாட்ட செய்தார்.ரோஹித்தையும், கோலியையும் ஒருநாள் அனியில் இருந்து நீக்குவதற்கு கம்பீர் முயற்சி செய்கிறார்.இருவரும் துடுப்பால் பதிலளித்துள்ளனர்.
. இந்த போட்டியில் ரோஹித், கோலி ஜோடி 136 ஒட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது. இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக ஓட்டங்கள் குவித்த ஜோடிகள் பட்டியலில் சங்கக்கரா - தில்ஷன் ஜோடியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளனர். ரோஹித் - கோலி இணைந்து 5619 ஓட்டங்கள் குவித்துள்ளனர்
இருவரும் இணைந்து 20 முறைக்கு மேல் 100 ஓட்டங்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சாதனை படைத்துள்ளனர். ரோஹித் 37 வயதிலும், கோலி 38 வயதிலும் களத்தில் காட்டும் வேகம் இளம் வீரர்களுக்கு சவாலாக உள்ளது.
இந்தியாவுக்காக இணைந்து அதிக போட்டிகளில் விளையாடிய ஜோடிகள்:
விராட் கோலி & ரோஹித் சர்மா - 392 போட்டிகள்* சச்சின் டெண்டுல்கர் & ராகுல் டிராவிட் - 391 போட்டிகள் ராகுல் டிராவிட் & சவுரவ் கங்குலி - 369 போட்டிகள் சச்சின் டெண்டுல்கர் & அனில் கும்ப்ளே - 367 போட்டிகள் சச்சின் டெண்டுல்கர் & சவுரவ் கங்குலி - 341 போட்டிகள் தற்போதைய அணியில் இடம்பெற்றுள்ள விராட் கோலி , ரவீந்திர ஜடேஜா ஜோடியும் இதுவரை 309 போட்டிகளில் இணைந்து விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ரன் மெஷின் கோலி சாதனைகள்:
ரன் மெஷின் என்று ரசிகர்களால் அன்புடன் வர்ணிக்கப்படும் விராட் கோலி இந்த போட்டியில் 120 பந்துகளில் 11 பவுண்டரி 7 சிக்ஸருடன் 135 ஓட்டங்கள் எடுத்தார். விராட் கோலிக்கு இது 52வது சதம் ஆகும். இந்த சதம் மூலமாக விராட் கோலி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
1. இந்த சதம் மூலமாக ஒரு தனிப்பட்ட வடிவ கிரிக்கெட்டில் அதிக சதம் விளாசிய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதம் விளாசியதே ஒரு தனிப்பட்ட வடிவத்தில் அதிக சதமாக இருந்த நிலையில், அவரின் 14 ஆண்டுகால சாதனையை இன்று விராட் கோலி முறியடித்துள்ளார்.
2. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக விராட் கோலி விளாசிய 6வது சதம் இதுவாகும். இந்த சதம் மூலமாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் அதிக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இந்த சாதனையை இதற்கு முன்பு சச்சின் டெண்டுல்கரும், டேவிட் வார்னரும் 5 சதங்களுடன் தங்கள் வசம் வைத்திருந்தனர்.
3. சொந்த மண்ணில் அதிக அரைசதம் விளாசிய கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சச்சின் டெண்டுல்கரிடம் இருந்து விராட் கோலி பறித்துள்ளார். சச்சின் இதற்கு முன்பு இந்தியாவில் மட்டும் 58 அரைசதம் விளாசிய நிலையில், விராட் கோலி 59 அரைசதங்கள் விளாசி அந்த சாதனையை முறியடித்துள்ளார்.
4. டோனியின் சொந்த மைதானமான ராஞ்சி விராட் கோலிக்கு ராசியான மைதானம் ஆகும். இந்த மைதானத்தில் மட்டும் 519 ஓட்டங்களை 6 இன்னிங்சில் விளாசியுள்ளார். இதில் 3 சதங்கள் மற்றும் 1 அரைசதம் அடங்கும். ஸ்ட்ரைக் ரேட் 110.19 ஆகும். இந்தாண்டு விராட் கோலி 11 ஆட்டங்களில் ஆடி 484 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 53.77 ஆகும். அதில் 2 சதங்கள், 3 அரைசதங்கள் அடங்கும்.
37 வயதான விராட் கோலி இதுவரை 306 ஒருநாள் போட்டிகளில் ஆடி 294 இன்னிங்சில் பேட் செய்துள்ளார். அதில் 14 ஆயிரத்து 390 ஓட்டங்களை குவித்துள்ளார். இதில் 52 சதங்கள், 75 அரைசதங்கள் அடங்கும். அதிகபட்சமாக 183 ரன்கள் குவித்துள்ளார். 2027 உலகக்கோப்பையில் ஆட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு ஆடி வரும் விராட் கோலி சதம் மூலமாக தனது திறமையையும், உடற்தகுதியையும் பிசிசிஐக்கு மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்தப் போட்டியில் அவர் அடித்த ஏழு சிக்ஸர்களையும் சேர்த்து இதுவரை சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாம் இடத்தில் களமிறங்கி அதிக சிக்சர்களை விளாசிய வீரராக விராட் கோலி 223 சிக்ஸருடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார் இந்த போட்டிக்கு முன்னதாக ரிக்கி பொண்டிங் 217 சிக்ஸர்களை அடித்ததே சாதனையாக இருந்து வந்த வேளையில் அவரது இந்த சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார். அதுமட்டும் இன்றி தனது சர்வதேச ஒருநாள் கரியரில் ஒரு போட்டியில் 7 சிக்ஸர்களை அவர் அடிப்பது இது இரண்டாவது முறை என்பது குறிப்பிடத்தக்கது.