அவுஸ்திரேலிய அணி ஹட்ரிக் சாதனை செய்யும் என எதிர்பார்க்கப்பட்டபோது இங்கிலாந்தும், நியூசிலாந்தும் அவுஸ்திரேலியாவை அடித்துத் துவைத்துவிட்டன.
அவுஸ்திரேலிய மண்ணில் இங்கிலாந்து பெற்ற வெற்றி ஏனைய அணிகளுக்கு உற்சாகத்தைக் கொடுத்துள்ளன. உலகக் கிண்ண கிரிக்கட் போட்டியில் 16 அணிகள் பங்குபற்றுகின்றன. ஆனால் அவுஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான்,இலங்கை, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய எட்டு நாடுகளுக்கிடையேதான் கடும்
போட்டி நடைபெறும்.
உலகக் கிண்ணத்தை எந்த அணி வென்றாலும் தமது துடுப்பாட்டம் மூலம் ரசிகர்களுக்கு விருந்து கொடுக்க சில வீரர்கள் காத்திருக்கிறார்கள். டெண்டுல்கர், ஜயசூரிய,லாரா, ரிக்கி பொண்டிங், இன்சமாம், பிளேமிங், ஜக் கலீஸ், பிளிண்டொப் ஆகிய வீரர்கள் தமது திறமையை வெளிப்படுத்த தயாராக இருக்கிறார்கள். பந்துவீச்சாளர்களும் களத்தடுப்பாளர்களும் கொஞ்சம் அசந்தால் போதும் பவுண்டரிகளும் சிக்ஸரும் அவர்களின் கணக்கில் சேர்ந்து விடும்.
கிரிக்கட்டைப் பொறுத்தவரை சச்சின் டெண்டுல்கர்தான் அதிரடி நாயகன். நான்கு
உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய சாதனையாளன். மகேந்திர சிங் டோனி, ட்ராவிட், கங்குலி, யுவராஜ் சிங் என இந்திய அணியின் துடுப்பாட்ட பட்டாளம் இருந்தாலும் சச்சினின் பங்களிப்பை குறைத்து மதிப்பிட முடியாது.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் 536 ஓட்டங்களும் 2003 ஆம்
ஆண்டு 628 ஓட்டங்களும் குவித்து ரசிகர்களுக்கு விருந்து கொடுத்தவர்.
1999 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெற்றபோது சச்சினின் தகப்பன் காலமாகிவிட்டார். சச்சின் இல்லாதபோது சிம்பாப்வேயுடனான போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. கென்யாவுடனான போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தகப்பனின் இறுதிக் கிரிகைகளின் பின்னர் கென்யாவுடனான போட்டியில் 140 ஓட்டங்கள் அடித்து வெற்றியை உறுதி செய்தார் சச்சின்.
இங்கிலாந்து, இலங்கை ஆகியவற்றையும்வென்று சுப்பர் சிக்ஸுக்கு இந்தியா தகுதிபெற்றது. 2003 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப்போட்டியில் நமீபியாவுக்கு எதிராக 153 ஓட்டங்களும் பாகிஸ்தானுக்கு எதிராக 98 ஓட்டங்களும், இலங்கைக்கு எதிராக 96 ஓட்டங்களும் அடித்தார் சச்சின்.
2005 ஆம் ஆண்டு எல்போ பிரச்சினையால் அவதிப்பட்ட சச்சின் மீண்டும் தனது
திறமையை நிரூபித்து வருகிறார். உலகக்கிண்ணப் போட்டியில் சச்சினின் பங்களிப்பு மிக அதிகமாகவே இருந்தது. இம்முறையும் அவர் தனது திறமையை நிரூபிப்பார்.
பந்துவீச்சாளராக அணியில் இணைந்து அதிரடி ஆட்டக்காரராக மிளிர்பவர் சனத்
ஜயசூரியா, களுவிதாரண, மஹேல ஜயவர்த்தன ஆகியோரும் இலங்கை அணியில் இருந்தாலும் ஜயசூரிய ஆட்டமிழக்கும்வரை எதிரணி வீரர்கள் பதற்றமாகவே இருப்பார்கள்.

1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் ஆரம்பத் துடுப்பாட்டக்காரராக முதன் முதலாக களமிறங்கினார் ஜயசூரிய. பந்துவீச்சாளரால் எப்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரராகப்பிரகாசிக்க முடியும் என அனைவரும் கேள்வி எழுப்பினர். அன்றைய பயிற்சியாளர் வட்மோரின் எண்ணத்தை ஜயசூரியா பூர்த்திசெய்ததால் இலங்கை அணி உலகக்கிண்ணத்தை வென்றது.
ஸ்ரீகாந்த், சித்து ஆகியோருக்குப்பின்னர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரராக
களமிறங்கி அதிரடித் துடுப்பாட்டம் மூலம் ரசிகர்களை உற்சாகப்படுத்தியவர் ஜயசூரியா. 1996 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் டெண்டுல்கர், மஞ்ச்ரேக்கர், ஜடேஜா ஆகியோரின் விக்கட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை முடக்கினார்.
2003 ஆம் ஆண்டு ஜயசூரியா தலைமையிலான இலங்கை அணி உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடியது. அரை இறுதியில் அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததால் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் அவரைத் தேடி தலைவர் பதவி வந்தது. இப்போது மஹேல தலைமையிலான இலங்கை அணியின் நம்பிக்கை நாயகனாக உள்ளார் சனத் ஜயசூரிய.
நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய இன்னொரு சாதனையாளர் பாகிஸ்தான் அணித் தலைவர் இன்சமாம் உல் ஹக். 1992 ஆம் ஆண்டு வசீம் அக்ரம் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் கிண்ணத்தைப் பெற காரணமானவர் இன்ஸமாம். பாகிஸ்தான் நாட்டின் செல்லப் பிள்ளை.
இவர் ஆட்டம் ஆரம்பித்து ஐந்து ஓவர்களுக்குள் இவரை ஆட்டமிழக்கச்செய்ய வேண்டும் இல்லையேல் களத்தடுப்பாளர்களுக்கு இவர் சிம்ம சொப்பனமாக இருப்பார். அதன்பின்னர் இவரது துடுப்பு சுழலிலும் பந்துகள் நாலா திசையும் பறக்கும். அடிக்கத் தொடங்கிவிட்டார் என்றால் அடங்கமாட்டார். இந்த உலகக் கிண்ணப் போட்டி இன்ஸமாமுக்கு இறுதிப் போட்டியாக இருக்கும் என்பதால் சிறப்பான ஆட்டத்தை இன்ஸமாம் வெளிப்படுத்துவார்.
உலகக் கிண்ணத்தை தொடர்ச்சியாக இரண்டு முறை பெற்று சாதனை படைத்து
மூன்றாவது முறையாகவும் இறுதிப் போட்டியில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 1983 ஆம் ஆண்டின் பின்னர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெறவில்லை. அதிரடி வீரர் லாராவின் தலைமையில் மேற்கிந்தியத் தீவுகள் அணி இம்முறை உலகக் கிண்ணப் போட்டியில் களமிறங்குகிறது.
1992 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் லாரா முதன் முதலாக உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடினார். 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் அரை இறுதிவரை அணியை அழைத்துச் சென்றார் லாரா. இம்முறை தனது துடுப்பாட்டத்தின் மூலம் ரசிகர்களை திருப்திப்படுத்துவதுடன் மேற்கிந்தியத் தீவுகள் கிண்ணத்தைப் பெறும் என்ற நம்பிக்கையில் உள்ளார் லாரா.
அவுஸ்திரேலிய அணி என்றதும் சாதனையின் சொந்தக்காரர்கள் பலர் கண்முன்னே வந்து போவார்கள். ரிக்கி பொண்டிங்கின் தலைமை அணிக்கு உரமாக உள்ளது. மூன்றாவது முறை கிண்ணத்தை வென்ற அணி அவுஸ்திரேலியா. தொடர்ச்சியாக இரண்டுமுறை கிண்ணத்தை வென்ற அவுஸ்திரேலியா இம்முறையும் வென்றால் ஹட்ரிக் சாதனை படைக்கும். ரிக்கி பொண்டிங் அதிரடியில் இறங்கினால் ஹட்ரிக் சாதனை அதிக தூரத்தில் இல்லை. இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய இரு நாடுகளிடமும் அடிவாங்கிய அவுஸ்திரேலியா கொஞ்சம் நொந்து போயுள்ளது. பீனிக்ஸ் பறவை போன்று உயிர்த்தெழும் வல்லமை அவுஸ்திரேலிய அணிக்கு உண்டு.
அதிகமான ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் நான்கு உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனைகளுடன் உள்ளார் நியூசிலாந்து அணியின் பிளெமிங். இளம் வீரர்களுடன் இணைந்த நியூசிலாந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல தயாராக உள்ளார்.
பந்துவீச்சு, துடுப்பாட்டம், களத்தடுப்பு மூன்றிலும் சம அளவில் கலக்குபவர் தென்னாபிரிக்க அணியின் ஜக் கலீஸ். தென்னாபிரிக்காவில் உலகக் கிண்ணப் போட்டி நடைöபற்றபோது முதல் சுற்றிலிருந்து அந்த அணி வெளியேறியது. இம்முறை அணியை இறுதிப் போட்டிவரை அழைத்துச் செல்லவேண்டும் என்ற முடிவில் வீரர்கள் அனைவரும் பயிற்சி பெறுகின்றனர். அதிர்ஷ்டமில்லாத தென்னாபிரிக்க அணிக்கு கிடைத்த அற்புதமான வீரர் ஜக் கலீஸ். அவருடைய விளையாட்டைப் பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.
இங்கிலாந்தின் அதிரடி நாயகன் பிளிண்டொப். ஏனைய வீரர்களை விட தான் என்றும் குறைந்தவர் அல்ல என்பது தனது துடுப்பாட்டத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இங்கிலாந்து அணி தோல்வியுற்றாலும் பிளின்டொப் தோல்வியடைய மாட்டார்.
மேற்கிந்திய தீவுகளுடனான போட்டியில் 3 1 என்ற கணக்கிலும் இலங்கையுடனான போட்டியில் 2 1 என்ற கணக்கிலும் வெற்றிபெற்ற இந்திய அணி நம்பிக்கையுடன் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றுள்ளது.
ஆஷஷ் கிண்ணத்தை அவுஸ்திரேலியாவுக்கு தாரை வார்த்தாலும் கொமன்வெல்த் கிண்ணத்தை கைப்பற்றிய நம்பிக்கையுடன் மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமானது இங்கிலாந்து. இங்கிலாந்தைவிட நாங்கள் ஒன்றும் குறைந்தவர்கள் அல்ல என அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று நம்பிக்கையுடன் உள்ளது நியூசிலாந்து.
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 3 1என்ற வெற்றிக் கணக்குடன் உலகக் கிண்ணத்தை குறிவைத்துள்ளது தென்னாபிரிக்கா. இந்த ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியநாடுகள் 300 ஓட்டங்களைக் கடந்தன. நியூசிலாந்து அணி இரண்டு முறை 350 ஓட்டங்களைக் கடந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டபோது அந்த அணிக்கு எதிராக இந்திய அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 333 ஓட்டங்கள் அடித்தது. மேற்கிந்திய தீவுகள் அணியும் சளைக்காது 8 விக்கட்டுகளை இழந்து 324 ஓட்டங்கள் அடித்தது.இன்னொரு போட்டியில் இந்திய அணி மூன்று விக்கட்டுகளை இழந்து 341 ஓட்டங்கள் அடித்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணி 181 ஓட்டங்கள் மட்டும் அடித்தது. அவுஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக அவுஸ்திரேலிய அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 343 ஓட்டங்கள் அடித்தது. நியூசிலாந்தும் சளைக்காது ஐந்து விக்கட்டுகளை இழந்து 335 ஓட்டங்கள் அடித்தது.அவுஸ்திரேலியாவில் நடந்த இன்னொரு போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து அணி ஏழு விக்கட்டுகளை இழந்து 318 ஓட்டங்கள் அடித்தது. இங்கிலாந்து 260 ஓட்டங்கள் அடித்தது.
நியூசிலாந்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி ஒன்றில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கட்டுகளை இழந்து 375 ஓட்டங்கள் அடித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி நான்கு விக்கட்டுகளை இழந்து 336 ஓட்டங்களை அடித்தது.
இன்னொரு போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி ஆறு விக்கட்டுகளை இழந்து 346 ஓட்டங்கள் அடித்தது.பதிலுக்கு துடுப்பெடுத்தாடியநியூசிலாந்து அணி பரபரப்பான சூழ்நிலையில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 350ஓட்டங்கள் அடித்து வெற்றி பெற்றது.
இந்த ஆண்டு 100 ஓட்டங்கள் அடித்தவர்கள்
பொண்டிங் 111, 104 அவுஸ்திரேலியா
சந்தர்போல் 149 ஆ.இ. மேற்கிந்தியத் தீவுகள்
சச்சின் 100 ஆ.இ. இந்தியா
ஹெய்டன் 117, 181 அவுஸ்திரேலியா
ஜொய்சி 107 இங்கிலாந்து
ஓரம் 101 ஆ.இ. நியூசிலாந்து
சங்கக்கார 110 இலங்கை
கொலிங்வுட் 120 ஆ.இ. இங்கிலாந்து
மக்மிலன் 117 அவுஸ்திரேலியா
சாமரசில்வா 107 ஆ.இ. இலங்கை
ஹஸே 105 அவுஸ்திரேலியா
டெய்லர் 115 நியூசிலாந்து
சதத்தை தவற விட்டவர்கள்
கங்குலி 98 இந்தியா
ஹட்ஜ் 99 ஆ.இ. அவுஸ்திரேலியா
வின்சென்ட் 90 நியூசிலாந்து
யுவராஜ் சிங் 95 இந்தியா
ரமணி
மெட்ரோநியூஸ் 08 03 2007
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்