பங்களாதேஷûடனான போட்டியில் தோல்வியடைந்த அயர்லாந்து, இங்கிலாந்துடனான போட்டியில் வெற்றி பெற்று கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 327 ஓட்டங்கள் அடித்துவிட்டு வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கையில் களமிறங்கிய இங்கிலாந்துக்கு எதிராக 329 ஓட்டங்கள் அடித்து மூன்று விக்கெட்டுகளினால் வெற்றி பெற்ற அயர்லாந்து பெரும் எதிர்பார்ப்புடன் களமிறங்கியது.
பங்களாதேஷûடனான போட்டியில் வெற்றி பெற்று இங்கிலாந்துடனான போட்டி வெற்றி தோல்வியின்றி முடிந்ததனால் கட்டாய வெற்றியை நோக்கி இந்தியா களமிறங்கியது.
இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. அயர்லாந்து அணியில் கேரி வில்சன் நீக்கப்பட்டு அன்ரூ வை சேர்க்கப்பட்டார்.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டோனி களத்தடுப்பைத் தேர்வு செய்தார். பகல் இரவு போட்டியின்போது நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற அணி துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்வதே வழமை. டோனி களத்தடுப்பைத் தேர்வு செய்தார்.
முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 207 ஓட்டங்கள் எடுத்தது.
முதலாவது ஓவரில் சகிர்கானின் வேகத்தில் ஸ்டர்லிங் ஓட்டமெதுவும் எடுக்காது ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் நான்கு ஓட்டங்கள் எடுத்த ஜொய்ஸ் ஆட்டமிழந்தார். போட்டர் பீல்ட், நீல் ஓ பிரையன் ஜோடி சிறப்பாக விளையாடி யது. 46 ஓட்டங்கள் எடுத்த பிரயன் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 26.5 ஓவர்களில் மூன்று விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது யுவராஜ் பந்து வீசினார். யுவராஜின் சுழலில் அயர்லாந்து விக்கெட்டுகள் மளமளவென வீழ்ந்தன.
யுவராஜின் சுழலில் அன்ரூ வைட் (5), கெவின் ஓபிரையன் (9) ஆட்டமிழந்தனர். இந்திய வீரர்களுக்குத் தொல்லை கொடுத்த அணித் தலைவர் போல்டர் பீல்ட் 75 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது யுவராஜின் பந்தை ஹர்பஜனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார். இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அசத்திய மூனி ஐந்து ஓட்டங்களிலும் கியூசெக் 24 ஓட்டங்களிலும் யுவராஜின் வலையில் வீழ்ந்தனர்.
47.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்த அயர்லாந்து 207 ஓட்டங்கள் எடுத்தது. 10 ஓவர்கள் பந்து வீசிய யுவராஜ் சிங் 31 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். சகிர்கான் மூன்று விக்கெட்களையும் முனாப் பட்டேல் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 208 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா 46 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஷேவாக்கும் சச்சினும் பவுண்டரிகளுடன் இந்தியாவின் ஓட்ட எண்ணிக்கையை ஆரம்பித்தனர். ஜோன்ஸ்டனின் பந்தில் ஷேவாக் ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் அதிர்ந்தனர். ஜோன்ஸ்டன் தனது சிக்கன் நடனத்தின் மூலம் அயர்லாந்து ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தினார்.
டெண்டுல்கருடன் கம்பீர் ஜோடி சேர்ந்தார். 10 ஓட்டங்கள் எடுத்த கம்பீரையும் ஜோன்ஸ்டன் ஆட்டமிழக்கச் செய்தார்.
சச்சினுடன் கோஹ்லி ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் இந்திய அணியை காப்பாற்றுவார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த வேளையில் 38 ஓட்டங்களில் எல் பீ டபிள்யூ முறையில் சச்சின் ஆட்டமிழந்தார். கோஹ்லி 34 ஓட்டங்களில் ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். யுவராஜுடன் டோனி இணைந்தார். 41ஆவது ஓவரில் 34 ஓட்டங்கள் எடுத்த டோனி ஆட்டம் இழக்க இந்திய ரசிகர்கள் பதற்றமடைந்தனர். 40.1 ஓவரில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 167 ஓட்டங்கள் எடுத்தது இந்திய அணி.
அடுத்து களமிறங்கிய யூசுப்பதான் இர ண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடித்து நம்பிக்கையூட்டினார். மறுமுனையில் ஒரு நாள் போட்டியில் 47ஆவது அரைச் சதத்தைக் கடந்தார் யுவராஜ் சிங்.
46 ஓவர்களில் ஐந்து விக்கெட்களை இழந்து 210 ஓட்டங்கள் எடுத்து இந்தியா வெற்றி பெற்றது. யுவராஜ் சிங் ஆட்டமிழக்காது 50 ஓட்டங்களும் யூசுப் பதான் ஆட்டமிழக்காது 30 ஓட்டங்களும் எடுத்தனர். ஆட்டநாயகனாக யுவராஜ் சிங் தெரிவு செய்யப்பட்டார். உலகக் கிண் ணப் போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி 50 ஓட்டங்கள் எடுத்த முதலாவது வீரர் என்ற சாதனை வீரராக யுவராஜ் திகழ்கிறார். இதேவேளை உலகக் கிண்ண வரலாற்றில் 31 ஓட்டங்களைக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் புதிய
சாதனையைச் செய்துள்ளார்.
ரமணிசூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ்
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்