திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழக அரசியலில் இருபெரும் சக்திகளாக விளங்குகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்திடம் தமிழக ஆட்சியைப் பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் மாறி மாறி கூட்டணி சேர்ந்தே தமிழ் அரசியலில் பிரகாசிக்கிறது. இரண்டு திராவிடக் கட்சிகளையும் எதிர்த்து கூட்டணி அமைக்கும் துணிவு இன்னமும் காங்கிரஸுக்கு வரவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட எம்.ஜி.ஆர் புதிய கட்சியை ஆரம்பித்ததும் திராவிட முன்னேற்றக் கழகம் வீழ்ந்து விடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எம்.ஜி.ஆர். என்ற நட்சத்திரத்தின் வலிமையினால் திராவிட முன்னேற்றக் கழகம் என்ற உதய சூரியன் மேலெழ முடியாது மறைந்திருந்தது. எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னரே உதய சூரியன் வெளிச்சம் தர ஆரம்பித்தது.
திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வைகோ தூக்கி எறியப்பட்டபோது திராவிடக் கட்சிகளுக்கு மாற்றீடான புதிய கட்சி ஒன்று உதயமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. வைகோவின் பின்னால் திரண்ட தொண்டர்கள் புதிய யுகம் படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. வைகோவுக்குத் தோள் கொடுத்த தலைவர்கள் சந்தர்ப்ப சூழ்நிலையில் திராவிடக் கட்சிகளில் ஐக்கியமானõர்கள் தனித்து நின்று தாக்குப் பிடிக்க முடியாத வைகோவும் ஜெயலலிதாவிடமும் கருணாநிதியிடமும் சரணடைந்தார்.
அரசியல் ரீதியாக நலிந்திருக்கும் வன்னியருக்காக டாக்டர் ராமதாஸ் ஆரம்பித்த இயக்கம் நாளடைவில் அரசியல் கட்சியாக மிளிர்ந்தது. மிகச்சிறந்த அரசியல் வியாபாரியான டாக்டர் ராமதாஸ் தனது கட்சியை அடகு வைத்தார். இன்று திராவிடக் கட்சிகள் இரண்டும் டாக்டர் ராமதாஸை ஒதுக்கி வைத்துள்ளன. ""சீச்சி இந்தப் பழம் புளிக்கும்'' என்ற நரியின் கதை போல் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர மாட்டேன் என்று சபதமெடுத்துள்ளார்.
கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் மாற்றீடாக புதியதொரு தலைவனாக மேலெழுந்தார் விஜயகாந்த். திராவிடக் கட்சிகள் மீது வெறுப்புள்ளவர்கள் விஜயகாந்தை ஆதரித்தார்கள். ""மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி"" என்ற வேத வாக்குடன் அரசியல் களம் புகுந்த விஜயகாந்த் கட்சியைக் காப்பாற்றுவதற்காக ஜெயலலிதாவிடம் சரணடைந்தார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று தொண்டர்களால் போற்றப்பட்ட செல்வி ஜெயலலிதாவை முதல்வராக்கி அழகு பார்க்கிறார்.
திராவிடக் கட்சிகளை அழிக்கவேண்டும் என்ற சபதத்துடன் அரசியல் களம் புகுந்த தலைவர்கள் எல்லோரும் இறுதியில் திராவிடக் கழகங்களிடம் சரணடைந்ததே வரலாறு. திராவிடக் கட்சிகளின் முதுகில் சவாரி செய்த வைகோவும் டாக்டர் ராமதாஸும் திராவிடக் கட்சிகளை அழிக்கப் போவதாகக் கூறிக் கொண்டு அரசியல் களத்தின் மீண்டும் தோன்றியுள்ளார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விரும்பாதவர்களின் முதல் தெரிவாக விஜயகாந்த் இருந்தார். ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் மாற்றீடான சக்திமிக்க தலைவராக விஜயகாந்த் உருவாகுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்ததனால் அந்த எதிர்பார்ப்பு தவிடு பொடியானது. விஜயகாந்த் விட்டுச் சென்ற இடத்தை நிரப்ப வைகோவும் டாக்டர் ராமதாஸும் முயற்சி செய்கின்றனர்.
தமிழகத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் வைகோவும் டாக்டர் ராமதாஸும் இணைந்து போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாடாளுமன்ற சட்டமன்ற தேர்தல்களின் தோல்வியிலிருந்து மீள்வதற்கு உள்ளாட்சித் தேர்தலையே வைகோவும் டாக்டர் ராமதாஸும் நம்பியுள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டால் இவர்கள் தலைமையில் இணைவதற்கு சிறிய கட்சிகள் சில தயாராகவுள்ளன.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் தோல்வி, 2 ஜி ஸ்பெக்ரம் ஊழல் ஆகியவற்றினால் விரிசலடைந்த திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பூசல் விலகுவதற்கான சூழ்நிலை தமிழக சட்ட மன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் இணைந்து செயற்பட வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். அசுர பெரும்பான்மையுடன் ஆட்சி பீடம் ஏறிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமக்கு உரிய மரியாதை கொடுக்கவில்லை என்ற எதிர்க்கட்சிக் குற்றம் சாட்டியுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் ஜெயலலிதா எதிர்க் கட்சியாகவே நோக்குகிறார். தமிழக சட்டமன்றத்தில் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு ஒரே இடத்தில் ஆசனம் ஒதுக்காமையினால் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சட்டமன்றத்தைப் பகிஷ்கரித்தனர்.
எதிர்க்கட்சிக்கு உரிய மரியாதையை தமிழக அரசு கொடுக்கவில்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் குற்றம் சாட்டியுள்ளது. திராவிட முன்னேற்ற கழகம் தனது உரிமைக்காக குரல் கொடுக்கும் போது கூட்டணிக் கடசியான காங்கிரஸும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று கருணாநிதி விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியின்போது சின்னச் சின்னப் பிரச்சினைகளுக்காக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சட்டமன்றத்தைப் பகிஷ்கரித்தது. அதேபோன்று தான் இன்று சிறு பிரச்சினையைப் பெரிதாக்கி திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக சட்ட மன்ற கூட்டத்தைப் பகிஷ்கரிக்கிறது.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் தோல்வியினாலும் ஊழல் வழக்குகளினாலும் துவண்டு போயிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் வெளியே வருவதற்கான சந்தர்ப்பத்தை தமிழக அரசு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. சமச்சீர் கல்விøயத் தடை செய்து நீதிமன்றத்திடம் குட்டுவாங்கிய தமிழக அரசு திராவிட முன்னேற்றக் கழக அங்கத்தவர்களுக்கு ஒரு பக்கத்தில் இடம் ஒதுக்காது பழிவாங்குகிறது. தமிழக அரசியலில் பலமான எதிர்க்கட்சி இல்லாமையினால் இப்படியான சம்பவங்களைப் பெரிதுபடுத்தி மக்களின் கவனத்தைப் தன் பக்கம் இழுக்க முயற்சிக்கிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு21/08/11
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்