நண்பர் சூரன் ரவிவர்மா அவர்கள் ஒரு பத்திரிகையாளார் என்பதை அறிவேன்.ஆயினும் அவர் தன்னை முன்னிலைப்படுத்திச் செயற்படாததனால் அவர் பற்றிய முலு விவரங்களையும் நான் அறியேன்.
கடந்த நூற்றாண்டிலே வீரகேசரி நாளிதழ் ஞாயிறு பதிப்புகளின் இணை ஆசிரியராகச் சிறிது காலம் சக ஆசிரியர் ஆ.சிவநேசச்செல்வனுடன் இணைந்து பணி புரிந்த போது ரவிவர்மா அவர்கள் அந்த நிறுவனத்தில் வேலை செய்தாரோ நான் அறிந்திருக்கவில்லை.
அன்றைய காலகட்டத்தில் நான் 'வீரகேசரி' அலுவலகத்திற்கு ஒரு கட்டுரையாளராக அன்றைய ஞயிறு பதிப்பின் ஆசிரியர் தேவராஜ் அவர்களை சந்திக்கச் சென்ற பொழுது, ரவிவர்மா அவர்களை தற்செயலாக சந்தித்துப் பேச நேர்ந்தது.அப்பொழுது அவர் மெட்ரோ என்ற நாளிதழின் ஆசிரியராக இருந்தார் என்று நினைக்கிறேன்.
பின்னர் ஃபேஷ் புக் ஊடாக அதாவது முகநூல் என்ற இணயதளம் மூலம் நட்புக் கொண்டேன். பின்னர் தெரிந்தது அவர் மறைந்த எழுத்தாளரும், தினகரன் நாள்தழின் ஆசிரியராகவிருந்த அமரர் ராஜ ஸ்ரீ காந்தனின் உறவினர் என்பதை.
திரு.ரவிவர்மா அவர்கள் அரசியல் திறனாய்வாளராகவும் வெளிநாட்டுச் செய்திப் பகுப்பாளராகவும் மெட்ரோ இதழில் எழுதுவதை சில வேளைகளில் நான் பார்த்தும் வாசித்துமிருக்கிறேன்.
இப்படியிருக்கையில் ஒருநாள் கொழும்புத் தமிழ்ச் சங்கக் கூட்டமொன்றில் திரு.ரவிவர்மாவை சந்தித்த பொழுது தனது நூல் ஒன்று அண்மையில் வெளியிடப்பட இருக்கிறது என்றும், அந்த வெளியீட்டு விழாவிலே கலந்து கொள்ள வேண்டும் என்றும் என்னைக் கேட்டுக் கொண்டார். நானும் மகிழ்ச்சியுடன் உடன்பட்டேன்.
திரு.ரவிவர்மா அவர்கள் ஒரு கற்றை பத்திரிகைகளைக் கொண்டு வந்து தந்து அவற்றைப் படித்து அபிப்பிராயம் சொல்லும் படி கேட்டுக்கொண்டார். இக்கட்டுரைகளை அவர் தனது வழக்கமான ரவிவர்மா என்ற பெயரில் எழுதாமல் புனை பெயரில் எழுதியிருப்பதை அவதானித்தேன். அந்தப் புனை பெயர் "ரமணி" என்றிருக்கக் கண்டேன்.
பல்துறை சார்ந்த கலை இலக்கியங்களில் நாட்டமுடையவன் என்ற முறையில் நான் திரைப்படக் கலை பற்றியும் ஈடுபாடுடையவனாக இருந்து வருகிறேன். திரைப்படங்களைப் பற்றி நான் 1960 முதல் வானொலியிலும், ஏடுகளிலும் நான் ஒலிபரப்பியும் எழுதியும் வருகிறேன்.
உயர்தரக் கலைப்படங்கள் தொடர்பான அக்கறையுள்ளவனுக்கு "ரமணி" என்கின்ற ரவிவர்மா அவர்கள் என்னைப் பலவந்தமாக இத்தகைய கட்டுரைகளைப் பற்றியும் படிக்கும் படி பணித்திருக்கின்றார்.
இங்கு நான் அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்.ஏனெனில் ரமணி அதாவது ரவிவர்மா அவர்கள் எனக்குப் புதியதோர் எழுத்தாளராவார்.
சூரன் ரவிவர்மா, ரமணி தமது சினிமாக் கட்டுரைகளைத் தொகுத்து சீர் செய்து தனிப் புத்தகமாக வெளியிட வேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் நிறைய நாம் தெரிந்து வைத்திருக்காத பல செய்திகளையும், அபிப்பிராயங்களையும், பகுப்பாய்வுகளையும் அவர் நிறையச் செய்துள்ளார்.
ரமணிபோல, பாலசங்குப்பிப் பிள்ளை, ஷண், மானா மக்கீன், யசீந்திரா போன்றவர்களும் தமிழ் சினிமா பற்றி நிறையத் தகவல்களைப் பத்திரிக்கை வாயிலாகத் தெரிவித்து வந்துள்ளனர்.
இந்த இடத்தில் இலங்கைத் தமிழ் சினிமா தொடர்பாக ஆதாரபூர்வமான முறையில் நூல்களையும்,கட்டுரைகளையும் எழுதிவரும் தம்பி ஐயா தேவதாஸ் வரிசையில் ரவிவர்மாவின் முயற்சியும் பாராட்டுக்குரியது.
கே.எஸ்.சிவகுமாரன்.
தினகரன் வாரமஞ்சரி 29/09/2013
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்