Friday, November 29, 2024

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி” – அணிந்துரை


 ஈழத்து இலக்கிய உலகில் ஊடகப் பரப்பில் இருந்து கொண்டு இலக்கியம்

சமைத்தோரில் பரவலான எழுத்துகளை வெளிப்படுத்திய வகையில் ரவிவர்மா தனித்துவமானவர். வடமராட்சி மண்ணின் மைந்தன் அவரின் தொடர்பு இந்த இணைய உலகில் தான் கிடைத்தது.

ரவிவர்மாவின் எழுத்துகளை வலைப்பூக்கள் வழியாகப் படித்த போதும், “வடக்கே போகும் மெயில் என்ற அவரது சிறுகதைத் தொகுதியைப் படித்த போதும், என் பால்யகாலத்தில் ஊடகராக இயங்கிக் கொண்டு எழுத்தாளராகப் பரிணமித்த நெல்லை.க.பேரன் தான் நினைவுக்கு வந்தார்.

தான் கொண்ட களத்துக்கேற்ப எழுத்தைக் கொடுக்கும் பட்டறவு ரவிவர்மாவிடம் உண்டு. அதனால் தான் அவரின் பிரதேச வழக்கியல் சார்ந்த மொழி நடையோடு சிறுகதைகளை எழுதியவர், திரைக்கு வராத சங்கதி வழியாக ஒரு பொதுத்தமிழைக் கையாண்டிருக்கிறார். இதனால் ஈழத்தவருக்கு மட்டுமன்றி தமிழகத்தவரும் இலகுவில் இவரின் மொழி நடையோடு இயல்பான வாசிப்பனுபவத்தைப் பெற முடியும்.

ஈழத்து எழுத்துலகில் உலக சினிமா அளவுக்கு இந்திய சினிமா அதுவும் குறிப்பாகத் தமிழ் சினிமா குறித்த சங்கதிகள் பேசப்படுவது அரிது எனலாம். அதை ஒரு தீண்டத்தகாத சமாச்சாரமாகவும் பார்ப்பவர்கள் உண்டு. ஆனால் நூற்றாண்டு தொடப்போகும் தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஆச்சரியமானதும், சாதனைக்குரியதுமான பக்கங்கள் பலவுண்டு. அத்தோடு இலக்கியத்தரமான படைப்புகளைக் காட்சி ஊடகம் வழி பரந்து விரிந்த பாமர உலகுக்குக் கொண்டு சென்ற வகையில் தமிழ் சினிமாவின் ஆச்சரியப் பக்கங்கள் பலவுண்டு.

ரவிவர்மாவின் “திரைக்கு வராத சங்கதி யில் அவர் கொடுத்த கட்டுரைகளைப் படித்தாலேயே போதும், முன் சொன்னதன் நியாயம் புரியும். சினிமாக் கட்டுரைகளில் ஆய்வு, வரலாற்றுத் தன்மை இவற்றில் மிக ஆழமான பின்புலத்தோடு இருந்தாலொழிய சினிமாக் கட்டுரைகளில் ரவிவர்மா கையாண்டிருக்கும் தொடர்ச்சித்தன்மையும், ஒன்றிலிருந்து இன்னொன்றைத் தொடர்புபடுத்தி எழுதும் வல்லமையும் இலகுவில் கிடைக்காது.

இந்தக் கட்டுரைகளில் ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன் நடந்த சங்கதிகளைத் தற்காலத்தோடும், கடந்த் தசாப்தத்தோடும் இணைத்து எழுதும் பண்பும், அவற்றின் மெய்த்தன்மையும் ரவிவர்மாவின் எழுத்துகளின் பலம் எனலாம்.

ஏற்கனவே ஏவிஎம் நிறுவனம் குறித்த நூல்களை அந்த நிறுவனம்சார்ந்தவர்களாலேயே எழுதப்பட்டதைப் படித்த வகையில் சொல்கிறேன், “ஏவிஎம் படத்தலைப்பில் வாழும் நடிகர்கள் என்ற கட்டுரையைப் படித்த போது அந்த நூல்களில் கூட இடம்பெறாத செய்திகளும், அப்படியே இடம்பெற்ற செய்திகளையும் தகுந்த முடிச்சுப் போட்டுக் கொடுத்திருக்கிறார் எழுத்தாளர். 

படக்கதைகள் உருமாறிய வரலாறுகளையும், படத் தலைப்புகள் தலைமுறை கடந்து பயன்படுத்தப்பட்ட பாங்கையும் இணைத்து கட்டுரைகள் கொடுத்திருக்கிறார்.

புகைப்படக் கலைஞர் மனசு வைத்தால் கூட நல்ல கலைஞர்களை அறிமுகப்படுத்தமுடியும் என்பதையும் ஒரு கட்டுரை சொல்லி வைக்கின்றது.

இலட்சிய நடிகருடன் ஜோடி சேர மறுத்த பானுமதி கட்டுரையின் தலைப்பைப் பார்த்தால் பானுமதியின் கர்வமான தோற்றம் தான் தோன்றி மறையும், ஆனால் அதன் பின்னால் நெகிழ வைக்கும் பின்னணியைக் கொடுக்கிறார். சினிமாவில் கூட யதார்த்தம் பேணிய முன்னோர்கள் என்பதை அது உணர்த்துகிறது.

கவிஞர் முத்துலிங்கத்துக்காக எம்.ஜி.ஆர் கேட்டு வாங்கிக் கொடுத்த பாட்டைப் பற்றி அவரே சுவைபடக் கூறினாலும் இங்கே அதைப் பற்றி எழுதும் ரவிவர்மா அதன் நீட்சியாக முத்துலிங்கம் குறித்த தகவல்களை இன்றைய சந்ததிக்கும் சொல்லி வைக்கிறார்.

தோல்வியை வெற்றியாக்கும் சூக்குமம் கைவரப்பெற்ற படைப்பாளிகளும் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். அவற்றை வெற்றிபெற்ற படங்களுக்குப் பின்னால் சொல்லியும் இருக்கிறார்கள். எழுத்தாளரும் தன்னுடைய கட்டுரைப் பதிவில் இத்தகு உதாரணங்களோடு எழுதிச் செல்கிறார்.

தமிழ்த் திரையுலகின் பழைய வரலாறுகளை மட்டுமன்றி கடந்த தசாப்தத்தில் புதிய அலையைப் படைத்த செல்வராகவன் குறித்த பின்னணியும் உண்டு. இன்று இசைஞானி இளையராஜா, கலைஞானி கமல்ஹாசன் என்ற பட்டங்களோடு அடையாளப்படுபவர்களின் ராசியை கலைஞர் வழங்கிய காலத்தால் அழியாத பட்டங்கள் வழிப் பதிவு செய்கிறார்.

இயக்குநர் பந்துலுவின் மகள் பி.ஆர்.விஜயலட்சுமி, தன் தந்தை திடீரென்று இறந்த போது கடன்காரர் தொல்லையால் குடும்பம் அவஸ்தைப்பட்ட சூழலில் தன் அண்ணனும், தானும் சேர்ந்து போய் அழுது கொண்டே எம்.ஜி.ஆரைச் சந்தித்து அவர் உதவிய வரலாற்றைச் சொல்லி இருக்கிறார்.இங்கோ பந்துலுவோடு எம்.ஜி.ஆருக்கு இருந்த பந்தத்தைக் காட்டி நிற்கின்றார் ரவிவர்மா.

ஒரு காலத்தில் திரைப்பட நாயகிகள் தற்கொலை செய்து கொள்ளும் வரலாறு போய், இன்று சின்னத்திரைக் கலைஞர்கள் தற்கொலை செய்யும் அவலத்தையும் காட்டுகிறார்.

கண்ணகி சிலைக்கு மாதிரி உருவமாக அமைந்த நடிகை விஜயகுமாரி குறித்துப் பதிவு செய்யும் போது அவரின் நதிமூலம், ரிஷிமூலம் எல்லாம் கொடுக்கிறார். 

நடிகர் விஜயகுமார் சினிமாவுக்கு வந்த கதையே ஒரு சினிமா ஆக்கக் கூடிய சுவாரஸ்யம் நிறைந்தது. அந்த சுவாரஸ்யம் ரவிவர்மாவில் எழுத்தில் மின்னுகிறது.  

சந்திரபாபு குறித்த கட்டுரையைப் படிக்கும் போது அதை நீட்டி முழு வரலாற்று நூலாக்கக் கூடிய பண்பு அமைந்திருக்கின்றது.

இன்று உறுதிப்படுத்தப்படாத பொய்ச் செய்திகளோடும், பரபரப்பு அறிக்கைகளோடும் இணைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கும் சூழலில் திரை இலக்கியத்தை மெய்த்தன்மை பொருந்திய வரலாற்றுச் சங்கதிகளோடு கொடுத்த ரவிவர்மாவுக்கு இந்த வேளை மனம் நிறைந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகுக.

No comments:

Post a Comment

உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்