இந்திய கிரிக்கெட் அணியின் கப்டனான ரோகித் சர்மா மே ஏழாம் திகதி சர்வதேச டெஸ்ட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அவரது இந்த அறிவிப்பு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் தற்போது 38 வயதாகும் ரோஹித் சர்மா ரி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தொடர்ச்சியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருப்பதாக ஏற்கனவே நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
இந்திய
அணியின் வெற்றிகரமான கப்டனாக ரி20 உலகக் கிண்ணம், ஐசிசி சம்பியன்ஸ் டிராபி என அடுத்தடுத்த கோப்பைகளை
வென்ற ரோஹித் சர்மா இன்னும் சில ஐசிசி கோப்பைகளை வெல்ல காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இந்திய அணி தவறவிட்டதிலிருந்து
அவரது டெஸ்ட் எதிர்காலம் குறித்த பல்வேறு பேச்சுகள் இருந்து வந்தன.
இங்கிலாந்து
தொடருக்கான இந்திய டெஸ்ட் அணியில் அவர் கப்டன்சியிலிருந்து நீக்கப்படுவார் என்றும்
சில செய்திகள் பரவி வந்தது. இவ்வேளையில் அவர்
திடீரென டெஸ்ட் கிறிக்கெற்றில் இருந்து
ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இப்படி திடீரென ரோஹித் சர்மா டெஸ்ட் கிரிக்கெட்டில்
இருந்து ஓய்வை அறிவிக்க இரண்டு முக்கிய காரணங்கள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து
அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது கப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் ரோகித்
சர்மாவிற்கு அணியில் இடம் கிடைப்பது மிகக் கடினம். அதன் காரணமாக அணியில் இடம் கிடைக்காமல்
போகும் அவலநிலை தனக்கு ஏற்படக்கூடாது என்று ரோகித் சர்மா நினைத்திருக்கலாம்.
தற்போது 38 வயதாகும் அவர் இன்னும் எத்தனை ஆண்டுகள்
விளையாடுவார் என்பது உறுதியாக தெரியாது. அதோடு அடுத்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின்
சுழற்சிக்கான முழு போட்டியிலும் அவரால் விளையாட முடியாது. இதன் காரணமாக 2027 ஒருநாள்
உலகக் கிண்ணத்திக் கருத்தில் கொண்டு அதில் மட்டும் கவனம் செலுத்தி
விளையாடலாம் என்பதற்காக ரோஹித் சர்மா இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று தெரிகிறது.
ரி20
, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றால் அவரது முழு கவனமும், செயல்பாடும் அந்த
ஒருநாள் உலகக்கோப்பையை நோக்கி மட்டுமே இருக்கும் என்பதனால் அந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம்
என்று தெரிகிறது.
. 2024-25 இல் நடைபெற்ற இந்தியா ,அவுஸ்திரேலியா அணிகளுக்கு
இடையேயான டெஸ்ட் தொடர் முடிவிலேயே அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கலாம்.
ஆனால், அப்போது கடைசி டெஸ்ட் போட்டியிலிருந்து தாமாக விலகியதாகக் கூறிய ரோஹித் சர்மா,
அதன் பின்னர் கடும் கேலி கிண்டலைச் சந்தித்தார். தற்போது இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு
மறுக்கப்பட்ட நிலையில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார். பிசிசிஐ
வாய்ப்பை மறுக்கும் அளவுக்கு ரோஹித் சர்மா சென்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால்
இந்த மோசமான நிலையை அவரே தான் தேடிக் கொண்டிருக்கிறார் என பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2024-25ல் இந்திய அணி விளையாடிய கடைசி இரண்டு டெஸ்ட் தொடர்களில் மோசமான தோல்வியைச்
சந்தித்தது. நியூசிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட தொடரில்
மூன்றிலும் தோல்வியடைந்தது இந்திய அணி. அந்தத் தொடரில் கப்டன் ரோஹித் சர்மா படுமோசமாக
விளையாடியிருந்தார்.
இந்திய மண்ணிலேயே ஓட்டம் குவிக்க முடியாத அவர் அவுஸ்திரேலியாவில்
எப்படி ஓட்டங்களைக் குவிப்பார் என்று கேள்வி அப்போதே இருந்தது. அப்போது
அவரை இந்திய டெஸ்ட் அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. இந்த நிலையில்,
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியிலிருந்து ரோஹித் சர்மா
பங்கேற்றார். முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி அடுத்து
ரோகித் சர்மா தலைமையில் விளையாடிய 3 போட்டிகளில் வரிசையாகத் தோல்வியடைந்தது. இதை அடுத்து,
ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்றது. அப்போது தனது மோசமான ஃபார்ம்
காரணமாக, ஐந்தாவது போட்டியிலிருந்து விலகுவதாக ரோஹித் சர்மா அறிவித்தார். ஒரு கப்டன்
எப்படி தன்னைத்தானே அணியிலிருந்து நீக்கிக் கொள்ள முடியும் என முன்னாள் அவுஸ்திரேலிய
வீரர்கள் அதைக் கேலி செய்தனர். ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் இது பற்றி நெத்தியடியாகப்
பேசியிருந்தார். "'ரோஹித் சர்மா தற்போது மோசமான ஃபார்மில் இருக்கிறார். அடுத்து
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மற்றொரு சுற்று துவங்க இருக்கிறது. இந்த நிலையில் அவர்
இந்திய அணியின் கப்டனாக மீண்டும் செயல்படுவது சந்தேகமே. எனவே அவர் விரைவாக தனது ஓய்வை
அறிவிக்க வேண்டும். இனி அவர் இந்திய அணிக்காக விளையாட ,மாட்டார்" என்று கூறியிருந்தார்.
அவர் சொன்னது போலவேதான் இப்போது நடந்துள்ளது. ரோகித் சர்மா சிட்னியில் ஓய்வு அறிவித்திருந்தால்,
அது அவருக்கும் கௌரவமாக அமைந்திருக்கும்.
67 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ரோஹித் சர்மா 4302 ஓட்டங்கள் எடுத்துள்ளார். சராசரி 40.57 ஓட்டங்கள் ஆகும். 12 செஞ்சரி, 18 அரை செஞ்சரி,88 சிக்ஸஸ், 473 பவுண்டரி. அதிக பட்சமாக 212 ஓட்டங்கள் அடித்துள்ளார்.இந்தியாவிற்கு வெளியே நடந்த டெஸ்ட் போட்டிகளில் அவரது சராசரி 31.01 ஓட்டங்கள் ஆகும். அவுஸ்திரேலியாவில் அவரது சராசரி 24.38 ஆகவும், தென்னாப்பிரிக்காவில் 16.63 ஆகவும் உள்ளது. ஆனால், இங்கிலாந்தில் அவரது சராசரி 44.66 ஓட்டங்கள் ஆகும்.
ரமணி
11/5/25
No comments:
Post a Comment
உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்