
ஜனநாயகம், தீவிரவாதம் என்ற இரண்டு குதிரைகளில் பயணம் செய்த முஷாரப்பை ஜனநாயகவாதிகளும் தீவிரவாதிகளும் புறம் தள்ளிவிட்டனர். மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் என்ற போர்வையில் பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியை நடத்தி வந்த ஜனாதிபதி முஷாரப்பை அவர் பெரிதும் நம்பி இருந்த இராணுவமும் கைவிட்டு விட்டது.
பாகிஸ்தானுக்கு இராணுவ ஆட்சி புதியதல்ல, ஆனால் சர்வ அதிகாரத்தையும் வைத்திருந்த இராணுவ ஜனாதிபதி ஒருவரை ஜனநாயகக் கட்சிகள் ராஜினாமாச் செய்ய வைத்தமை புதியது.
நவாஸ் ஷெரீப் பிரதமரான போது இராணுவத் தளபதியாக இருந்த ஜெனரல்ஜெஹாங்கிர் கராமத் இராஜினாமாச் செய்தார். அப்போது அப்பதவிக்கு தகுதியானவர்கள் பலர் இருந்த போதும் அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டு முஷாரப்பை இராணுவத் தளபதியாக நியமித்து அழகு பார்த்தார் நவாஸ் ஷெரீப்.
தனக்கு விசுவாசமாக முஷாரப் இருக்கும் வரை தனது பதவிக்கு ஆபத்து இல்லை என்று நவாஸ் ஷெரீப் நம்பினார். முஷாரப் மீதான நம்பிக்கை தகர்ந்தபோது அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கு நவாஸ் ஷெரீப் தயாரானார். அதனை அறிந்த முஷாரப் அதிரடியாக தனது விசுவாசமான இராணுவ அதிகாரிகளின் துணையுடன் பாகிஸ்தானின் ஆட்சியை பிடித்தார்.
1999 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இலங்கையில் நடைபெற்ற இராணுவ விழா ஒன்றில் கலந்து விட்டு நாடு திரும்பிய முஷாரப்பை விமான நிலையத்தில் கைது செய்ய நவாஸ் ஷெரீப் திட்டமிட்டார். இதனை அறிந்த முஷாரப் நடுவானில் பறந்தபடியே தனக்கு விசுவாசமான இராணுவத் தளபதிகளின் உதவியுடன் நவாஸ் ஷெரீப்பை வீட்டுக் காவலில் வைத்தார்.
நவாஸ் ஷெரீப்புக்கு விசுவாசமான அமைச்சர்கள் கைது செய்யப்பட்டனர். தொலைக்காட்சி, வானொலி ஆகியன முஷாரப்பின் விசுவாசமான படைகளின் கட்டுப்பாட்டில் வந்தன. அன்றிலிருந்து இன்றுவரை பாகிஸ்தானில் ஆட்சி செய்த முஷாரப்பை எதிர்த்த எவரும் வெற்றியடையவில்லை.
முஹமது அயூப்கான் என்பவரே பாகிஸ்தானில் இராணுவ ஆட்சியை முதன் முதலில் அமுல்படுத்தியவர். 1969 ஆம் ஆண்டு இராணுவத் தளபதி யஹியா கானிடம் அவர் ஆட்சியை ஒப்படைத்தார். அவரது ஆட்சிக் காலத்தில் கிழக்கு பாகிஸ்தானில் முஜிபுர் ரஹ்மானின் அவாமி லீக் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதனை ஏற்க மறுத்த யஹியா கான் கிழக்கு பாகிஸ்தானை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சித்தார். இந்தியாவின் தலையீட்டினால் கிழக்கு பாகிஸ்தான் தனி நாடாகியது. பங்களாதேஷ் என்ற பெயருடன் பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் இருந்து கிழக்கு பாகிஸ்தான் விடுவிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தை பூட்டோ கையேற்றார். அவரது ஆட்சியை வீழ்த்திய ஜெனரல் ஷியா உல் ஹக் பாகிஸ்தானின் ஆட்சியை தன் வசப்படுத்தினார். பூட்டோவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 1983 ஆம் ஆண்டு ஜெனரல் ஷியா உல் ஹக் சென்ற விமானம் வெடித்துச் சிதறி அவர் பலியானார்.
அதன் பின்னர் பூட்டோவின் மகளான பெனாசிர் பூட்டோவை தமது தலைவியாக ஏற்ற பாகிஸ்தான் மக்கள் அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தனர்.
பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் தமது உறவுகளை வலுப்படுத்த பெரிதும் பிரயத்தனப்பட்டனர். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் யுத்த முறுகல் அமெரிக்காவின் பக்கம் பாகிஸ்தானை தள்ளியது.
தலிபான், அல் குவைதா ஆகிய அமைப்புக்கள் பாகிஸ்தானுடன் நெருக்கமாக இருப்பவர்களை தமது எதிரியாகவே பார்த்தன. ஆப்கானிஸ்தான் மீது ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது அதிகாரங்களை திணித்தபோது கிளர்ந்தெழுந்த தலிபான்கள் அதனை எதிர்த்துப் போரிட்டனர். அவர்களுக்கு உதவியாக அல் குவைதா களம் இறங்கியது. இந்த இயக்கங்களுக்கு பாகிஸ்தான் சகல உதவிகளையும் செய்து வந்தது.
தலிபான் அல் குவைதா ஆகியவற்றை அடக்குவதற்கு பாகிஸ்தானை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என விரும்பிய அமெரிக்கா அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. ஆப்கானிஸ்தான், ஈராக் ஆகிய நாடுகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தபோது அதற்கு பாகிஸ்தான் சகல உதவிகளையும் வழங்கியது. பாகிஸ்தானின் இப்போக்கு அமெரிக்காவுக்கு எதிராகப் போராடும் குழுக்கள் அத்தனையையும் வெறுப்பேற்றின. அதன் விளைவாக பாகிஸ்தானில் குண்டு வெடிப்புகள் நடைபெற்றன.
முஷாரப்பை பதவியில் இருந்து வெளியேற்ற வேண்டும் அல்லது கொல்லப்பட வேண்டும் என்ற முனைப்புடன் ஆயுதக் குழுக்கள் செயற்பட்டன. முஷாரப்பை கொல்வதற்கு ஒன்பது தடவைகள் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஒன்பது தடவையும் அவர் தப்பிவிட்டார்.
தனக்கு எதிராகச் செயற்படும் பெனாசிர், நவாஸ் ஷெரீப் இருவரையும் கட்டாயத்தின் பேரில் நாட்டை விட்டு வெளியேற்றினார் முஷாரப்.
நவாஷ் ஷெரீப்பை நாட்டை விட்டு வெளியேற்றியது தவறு என்று நீதிமன்றம் விடுத்த தீர்ப்பினையும் முஷாரப் மதிக்கவில்லை.
முஷாரப்பை எதிர்ப்பதற்காக நவாஸ் ஷெரீப்பும் பெனாசிரும் எடுத்த முயற்சிகளை அவ்வப்போது முஷாரப் முறியடித்து வந்தார்.
செம்மசூதி மீதான தாக்குதலில் உயர் நீதிமன்ற நீதிபதிகளை பதவி நீக்கம் செய்தது போன்ற காரணங்களினால் முஷாரப்புக்கு எதிராக பாகிஸ்தானில் பேராட்டம் வெடித்தது. அப்போராட்டங்களை இராணுவத்தின் உதவியுடன் அடக்கி வந்தார் முஷாரப்.
பாகிஸ்தானில் இருந்து தனக்கு எதிராகப் போரõடும் ஆயுதம் ஏந்தியவர்களை ஒழிப்பதற்கு அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஏராளமான நிதி உதவி செய்தது. அந்தப் பணத்துக்கு என்ன நடந்தது என்ற விபரம் அமெரிக்காவுக்குத் தெரியாது. தனக்கு எதிரான தீவிரவாதம் பாகிஸ்தானில் வளர்வதற்கு முஷாரப் உதவி செய்கிறார் என்ற சந்தேகம் அமெரிக்காவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆகையினால் அவரை பதவியில் இருந்து இறக்குவதற்கு அமெரிக்கா சந்தர்ப்பம் பார்த்திருந்தது. தன்னை இறுதிவரை அமெரிக்கா காப்பாற்றும் என்று முஷாரப் நம்பி இருந்தார். அமெரிக்கா கைவிட்டதும் முஷாரப்பின் வீழ்ச்சிக்கு ஒரு காரணம்.
ஜனாதிபதி இராணுவத் தளபதி என்ற இரட்டைப் பதவியில் சொகுசாக இருந்த முஷாரப் அதில் ஏதாவது ஒரு பதவியை ராஜினாமாச் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டபோது ஜனாதிபதி என்ற உயர் பதவியை தக்க வைக்க விரும்பினார். ஜனாதிபதியாக இருந்த தான் இராணுவத் தளபதியாகி புதிய ஜனாதிபதிக்கு தலை வணங்க அவர் விரும்பவில்லை. இராணுவத்தில் தனக்கு விசுவாசமான கியானியை இராணுவத் தளபதியாக்கினார்.
முஷாரப் தன்னை காப்பாற்றுவார் என்று நவாஸ் ஷெரீப் நினைத்தது போன்று கியானி தன்னை காப்பாற்றுவார் என்று முஷாரப் நினைத்தார். நவாஸ் ஷெரீப்பை தான் முஷாரப் ஏமாற்றியது போன்று கியானி தன்னை ஏமாற்றி விட்டதாக உணர்ந்த முஷாரப் ஜனாதிபதி பதவியை விட்டு விலக வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.
இந்தியாவுடனான முஷாரப்பின் செயற்பாடு திருப்திகரமாக இல்லை. கார்க்கில் யுத்தத்தின் சூத்திரதாரி முஷாரப் தான் என்பது உலகறிந்த உண்மை. முஷாரப்புடன் ஒரு மேசையில் இருக்க மாட்டேன் என்று இந்தியப் பிரதமராக இருந்த வாஜ்பாய் கூறியதால் சார்க் மாநாடு ஒன்று ஒத்திவைக்கப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் எதனையும் முஷாரப் நடைமுறைப்படுத்தவில்லை.
ஒன்பது ஆண்டு கால முஷாரப்பின் ஆட்சி முடிவுக்கு வந்துவிட்டது. முஷாரப்பை பதவியில் இருந்து வெளியேற்றுவதற்காக ஒற்றுமைப்பட்ட எதிர்க்கட்சிகள் பாகிஸ்தான் என்ற நாட்டைப் பற்றி இனிமேல் கவலைப்படப் போவதில்லை. தமது ஆட்சி வர வேண்டும் என்பதிலேயே பிரதான எதிர்க்கட்சிகள் இரண்டும் குறியாக இருக்கப் போகின்றன.
முஷாரப்பை எதிர்க்கட்சிகள் மன்னித்தாலும் தலிபான், அல் கொய்தா போன்ற இயக்கங்கள் அவரை மன்னிப்பதற்கு தயாராக இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது பாகிஸ்தான் இராணுவமும் உளவு அமைப்பும் முஷாரப்புக்கு பக்கத்துணையாக இருந்தன. அரசியல்வாதிகளாலும் இராணுவத்தாலும் கைவிடப்பட்ட முஷாரப்புக்கு பாகிஸ்தானில் பாதுகாப்பு இருக்காது என்பது அவருக்கும் நன்கு தெரியும். சவூதி அரேபியாவில் தஞ்சமடையும் சூழல் ஏற்படலாம்.
ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்க வேண்டும் என்பதில் பாகிஸ்தானின் கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. சகல அதிகாரங்களையும் பிரதமரிடம் கொடுக்க வேண்டும் என்பதே பாகிஸ்தானின் அரசியல்வாதிகளின் விருப்பம்.
ஜனநாயக நீரோட்டத்தில் நீந்துவதற்கு பாகிஸ்தானின் அரசியல்வாதிகள் தயாராகி விட்டனர். அவர்கள் அமெரிக்காவின் பக்கம் சாய்ந்தால் இப்போது குறைந்திருக்கும் வன்செயல் மீண்டும் வெடிக்கும் நிலை உருவாகும்.
ஈராக், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகியவற்றுடனான உறவுகளே பாகிஸ்தானின் ஆட்சியில் இருப்பவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகின்றன.
முஷாரப்பின் பதவி விலகலால் பாகிஸ்தானில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்படப் போவதில்லை. முஷாரப்பை வீழ்த்திய நவாஸ் ஷெரீப்பும் சர்தாரியும் தங்கள் பலத்தை வெளிப்படுத்த முற்படும்போது முஷாரப் விட்ட தவறுகளை விடாது தமது ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியை முன்னெடுத்தால் அவர்களின் ஆட்சிக்கு எதுவித ஆபத்தும் ஏற்படாது.
அமெரிக்காவையும் அமெரிக்காவின் எதிரிகளையும் சமாளிப்பதென்பது இயலாத காரியம்தான். பாகிஸ்தானில் யார் ஆட்சி பீடம் ஏறினாலும் இரட்டை வேடம் போட வேண்டிய இக்கட்டான சூழல் உள்ளது.
ரமணி
மெட்ரோநியூஸ் 22 08 2008