Showing posts with label கங்குலி. Show all posts
Showing posts with label கங்குலி. Show all posts

Sunday, July 31, 2022

கிரிக்கெட் களத்தில் விளையாட தயாராகும் தாதா கங்குலி

சர்வதேச கிரிக்கெட்டில் தங்களது அபார திறமையால் நாட்டுக்காக ஏராளமான வெற்றிகளை பெற்றுக்கொடுத்து தங்களை உலகத்தரம் வாய்ந்த வீரர்களாக நிரூபித்த வீரர்கள் ஒரு கட்டத்தில் வயதின் காரணமாக ஓய்வு பெறும் நிலையை சந்திக்கின்றனர். அதனால் காலம் காலமாக சிறப்பாக செயல்பட்டு சரித்திர வெற்றிகளை பெற்றுக்கொடுத்த தங்களுக்கு மானசீக வீரர்களின் ஆட்டத்தை மேற்கொண்டு பார்க்க முடியாத நிலைமை ரசிகர்களுக்கு ஏற்படுகிறது. அவர்களின் மன குறையைப் போக்கும் வகையில் ஓய்வு பெற்ற ஜாம்பவான் வீரர்கள் பங்கேற்ற லெஜெண்ட்ஸ் லீக் கிரிக்கெட் கடந்த ஜனவரி மாதம் துபாயில் நடைபெற்றது. இந்திய மஹாராஜாஸ், ஆசிய லயன்ஸ், உலக ஜெய்ன்ட்ஸ் ஆகிய 3 அணிகள் பங்கேற்ற அந்த தொடரில் சாம்பியன் பட்டத்தை உலக ஜெய்ன்ட்ஸ் அணி வென்றது.

விரேந்திர சேவாக், நமன் ஓஜா, வாசிம் ஜாபர், யூசுப் பதான், இர்பான் பதான், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், சுப்ரமணியம் பத்ரிநாத் உள்ளிட்ட நிறைய முன்னாள் நட்சத்திர வீரர் பங்கேற்ற அந்த தொடரில் இந்திய ரசிகர்களின் மனதை கவர்ந்தது. இந்த நிலையில் இந்த தொடரின் 2-வது சீசன் வரும் செப்டம்பர் 20 முதல் அக்டோபர் 10 வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் இந்த தொடர் மிகப்பெரிய வெற்றி கண்டதால் இம்முறை இந்தியாவில் நடைபெறும் இந்த தொடரில் மேலும் சில நட்சத்திர முன்னாள் ஜாம்பவான் வீரர்களை சேர்க்க அதை நடத்தும் நிர்வாகம் முயற்சித்து வருகிறது.

இந்திய லெஜெண்ட்ஸ் அணியில் முன்னாள் க‌ப்டன் சவுரவ் கங்குலி விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் மிகச்சிறந்த இடதுகை பேட்ஸ்மேனாக போற்றப்படும் இவர் 90களில் அறிமுகமாகி தனது அற்புதமான பேட்டிங்கால் உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் பந்தாடி இந்தியாவுக்கு ஏராளமான வெற்றிகளை பெற்று கொடுத்தவர். குறிப்பாக சுழல் பந்துவீச்சாளர்களை இறங்கி இறங்கி வந்து பளார் பளார் என அவர் பறக்க விட்ட சிக்ஸர்களையும் ஆஃப் சைட் திசையில் அசால்டாக தெறிக்கவிட்ட பவுண்டரிகளையும் ரசிகர்களால் மறக்க முடியாது.

க‌ப்டனாகவும் இந்தியா சூதாட்ட புகாரில் சிக்கி தவித்த போது பொறுப்பேற்று வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் உள்ளிட்ட நிறைய இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்து சில வருடங்களிலேயே இந்தியாவை வெற்றிநடை போட வைத்த அவர் வரலாற்றின் மகத்தான இந்திய கேப்டன்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். கடந்த 2008இல் சர்வதேச கிரிக்கட்டில் ஓய்வு பெற்ற அவர் ஐபிஎல் தொடரில் சில வருடங்கள் விளையாடி பின்னர் வர்ணனையாளராக செயல்பட்டு கடந்த 2019 முதல் பிசிசிஐ தலைவராக செயல்பட்டு வருகிறார்.

சமீப காலங்களில் அவரின் ஆட்டத்தை பார்க்க முடியாமல் இருக்கும் அவரின் ரசிகர்களுக்கு வரப்பிரசாதமாக இந்த லெஜெண்ட்ஸ் தொடரில் விளையாட உள்ளதாக அவரே அறிவித்துள்ளார். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 வருடங்கள் நிறைவு பெறுவதை முன்னிட்டு அதை இந்திய அரசு “அசாதி கா மஹாட்சோவ்” என்ற பெயரில் விளையாட்டுத்துறையில் கொண்டாட முடிவு செய்துள்ளது. அதில் ஒரு அங்கமாக இந்த லெஜெண்ட்ஸ் கிரிக்கெட் தொடரின் ஒரு போட்டி மகளிர் விளையாட்டுக்கு நிதி திரட்டும் வகையில் நடைபெற உள்ளது. அந்த போட்டியில் விளையாட உள்ளதாக அறிவித்துள்ள சவுரவ் கங்குலி அதற்காக தற்போது உடற்பயிற்சி கூடத்தில் தீவிர பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள அவர் குறிப்பிட்டுள்ளது பின்வருமாறு. “அசாதி கா மஹாட்சோவ் சார்பாக நிதி திரட்டும் ஒரு கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு தயாராகும் வகையில் பயிற்சிகளை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். 75 வருட இந்திய சுதந்திர தினத்தையும் மகளிர் உரிமைகளையும் கொண்டாடும் வகையில் டாப் ஜாம்பவான்களுடன் லெஜெண்ட்ஸ் லீக் தொடரில் விளையாட காத்திருக்கிறேன். விரைவில் கிரிக்கெட் பந்தை அடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

Monday, November 1, 2021

ஐபிஎல் புதிய அணியால் சர்ச்சையில் சிக்கிய கங்குலி

  ஐபிஎல் தொடருக்கான புதிய அணியை ஏலம் எடுத்த உரிமையாளரின் உதைபந்தாட்ட‌ கிளப்பில் கங்குலி இயக்குனர் பதவி வகிப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

புதிய  அணிகளுக்கான ஏலம் துபாயில் நடைபெற்றது. இதில் குஜராத் மாநிலம் அஹ‌மதாபாத்தை மையமாகக் கொண்ட ஒரு அணியும், உத்திரப் பிரதேச மாநிலம் லக்னோவை மையமாகக் கொண்ட ஒரு அணியையும் பி.சி.சி.ஐ உருவாக்கியது.

இதில், லக்னோ அணியை ரூபாய் 7090 கோடிக்கு ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்கா வாங்கினார். அகமதாபாத் அணியை ரூபாய் 5,600 கோடிக்கு சி.வி.சி கேபிடல்ஸ் குழுமம் வாங்கியது. இதன்மூலம் சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் வரை பிசிசிஐ வருமானம் ஈட்டியுள்ளது.

இந்நிலையில், லக்னோ அணியை வாங்கிய ஆர்.பி.எஸ்.ஜி குழுமத்தின் தலைவர் சஞ்சீவ் கோயங்காவின் உதைபந்தாட்ட  அணியில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இது தற்போது கிரிக்கெட் வட்டராத்தில் பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் (ISL) தொடருக்கான உதைபந்தாட்ட  கிளப்பான ATK மோகன் பாகனின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின்படி, கங்குலி அதன் இயக்குநர்கள் குழுவில் உறுப்பினராகவும், சஞ்சீவ் கோயங்கா தலைவராகவும் உள்ளார் என்று குறிப்பிடுகிறது. மேலும், இந்த அணி கொல்கத்தா கேம்ஸ் மற்றும் ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது என்றும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் க‌ப்டன் சவுரவ் கங்குலி, தொழிலதிபர்களான ஹர்ஷவர்தன் நியோடியா, சஞ்சீவ் கோயங்கா, உத்சவ் பரேக் ஆகியோர் முக்கிய பொறுப்பில் உள்ளார்கள் என்றும் அந்த இணைய பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், கடந்த செவ்வாயன்று CNBC TV18 செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், கங்குலியுடனான அவரது தொடர்பு இந்திய கிரிக்கெட் வாரியத்தில் சாத்தியமான மோதலை ஏற்படுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த சஞ்சீவ் கோயங்கா, “அவர் (கங்குலி) மோகன் பாகனில் இருந்து முற்றிலும் விலகப் போகிறார் என்றார். அது எப்போது நடக்கும் என்று கேட்டதற்கு, “நான் இன்று என நினைக்கிறேன்.” என்று கூறினார்: “அந்த அறிவிப்பை அவர் தான் வெளியிட வேண்டும். அதை நான் முன்கூட்டியே தெரிவித்ததற்கு என்னை மன்னிக்கவும் என்றும் தெரிவித்தார்.

கங்குலி இது போன்ற சர்ச்சையில் சிக்குவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு, ஜேஎஸ்டபிள்யூ (JSW) சிமென்ட் (ஜிண்டால் ஸ்டீல் ஒர்க்ஸ்) டி-சர்ட் அணிந்து, நிறுவனத்தின் பிராண்ட் தூதராக “வேலையில் இருப்பதாக கூறி இன்ஸ்டாகிராம் பதிவை வெளியிட்டார். ஜேஎஸ்டபிள்யூ ஸ்போர்ட்ஸ், வணிக நிறுவனமான ஜேஎஸ்டபிள்யூ குழுமத்தின் பிரிவானது, ஐபிஎல்லின் டெல்லி க‌பிடல்ஸின் கூட்டு உரிமையாளராக உள்ளது.

அந்த நேரத்தில் டெல்லி க‌ப்பிட்டல் அணியின் வழிகாட்டியாகவும் இருந்த கங்குலி, JSW சிமென்ட் நிறுவனத்தில் தான் பிராண்ட் அம்பாசிடராக இருப்பதற்கும் பிசிசிஐ தலைவர் பதவி வகிப்பதற்கும் எந்த முரண்பாடும் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.