Tuesday, August 24, 2010

ஜெயலலிதாவின் அரவணைப்பில் சின்னக்கட்சிகள்பெரிய கட்சியைத் தக்கவைக்க கருணாநிதி முயற்சி

தமிழக சட்டசபைத் தேர்தலைக் குறிவைத்து பொதுக்கூட்டங்களையும், தமிழக அரசுக்கு எதிரான கூட்டங்களையும் நடத்தி வருகிறார் ஜெயலலிதா.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலின் போது மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்ஸிட் கட்சி ஆகியவற்றின் துணையுடன் போட்டியிட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணி படுதோல்வியடைந்தது.
செல்வாக்கு மிக்க தலைவர்களுடனும் வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிகளுடனும் இணைந்து தேர்தலைச் சந்தித்து படுதோல்வியடைந்த ஜெயலலிதா, சிறிய கட்சிகளைத் தன்பக்கம் கொண்டு வருவதில் முழுக்கவனத்தையும் செலுத்துகிறார். தமிழக ஆட்சியைத்தக்க வைப்பதற்கு வியூகம் வகுக்கும் முதல்வர் கருணாநிதியை வீழ்த்துவதற்கு கூட்டணியைத் தயார்படுத்துவதில் ஜெயலலிதா மிகவும் ஆர்வமாக உள்ளார்.
கடந்த தமிழக சட்டசபைத் தேர்தலின் போது சுமார் 20 தொகுதிகளில் குறைந்தளவு வாக்கு வித்தியாசத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் தோல்வியடைந்தது. சிறிய கட்சிகளின் ஆதரவு இருந்தால் அந்த 20 தொகுதிகளிலும் தோல்வியைத் தவிர்த்திருக்கலாம். அதேபோல் மேலும் சில தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கலாம் என்று கருதிய ஜெயலலிதா சிறிய கட்சிகளை அன்புடன் அரவணைக்கிறார்.
சாதிக் கட்சிகளும், மதக் கட்சிகளும் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைப்பதற்குப் பேச்சுவார்த்தை நடத்தி வெற்றியடைந்துள்ளன. அகில இந்திய மூவேந்தர் முன்னேற்றக்கழகம், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்தியக் குடியரசுக் கட்சி, வன்னியர் கூட்டமைப்பு, பார்வேர்ட்பிளக் ஆகியன ஜெயலலிதாவுடன் ஐக்கியமாகி உள்ளன. ஒவ்வொரு வாக்கின் பெறுமதியையும் ஜெயலலிதா உணர்ந்துள்ளார். கூட்டணி சேரத்துடிக்கும் கட்சியின் அமைப்பின் தலைவர்களை ஜெயலலிதாவே நேரடியாகச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலின் போது தொகுதிப் பங்கீடு பற்றிப் பேசிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் குழு உரிய முறையில் செயற்படவில்லை. அதன் காரணமாகச் சில சிறிய கட்சிகள் தேர்தலில் நேரடியாகப் போட்டியிட்டதாக அக்கட்சிகளின் வாக்குகள் இருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் என்று ஜெயலலிதா நம்புகிறார்.
ஜெயலலிதாவைச் சந்திப்பது சிரமம். இடையில் உள்ள தலைவர்களை அல்லது அவர் நியமிக்கும் ஒருசிலரைத் தான் சந்திக்க முடியும். ஜெயலலிதாவுடன் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்ற அவப்பெயரைத் துடைப்பதற்கு ஜெயலலிதா முயற்சி செய்கிறார். சகல நடவடிக்கைகளும் தன் மூலம் தான் நடைபெறுகிறது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்காகவே தன்னுடன் இணைய இருக்கும் தலைவர்களுடன் நேரடியாகக் கலந்துரையாடுகிறார் ஜெயலலிதா.
சிறிய கட்சிகளையும், சாதி அமைப்புகளையும் தனது வலையில் வீழ்த்திய ஜெயலலிதா, காங்கிரஸ், விஜயகாந்த் ஆகிய இரு பெரும் திமிங்கிலங்களுக்காகத் தனது கட்சியின் கதவை அகலத் திறந்து வைத்துள்ளார். ஜெயலலிதா பங்குபற்றும் கூட்டங்களில் முதல்வர் கருணாநிதியையும் அவரது குடும்பத்தவரையும் குறிவைத்து உரையாற்றுகிறார். சகல கூட்டங்களிலும் மக்கள் விரும்பும் கூட்டணி அமையும் என்று சூசகமாகத் தெரிவிக்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியைப் பிரிக்க வேண்டும் என்பதே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகளில் முதன்மையானது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் காங்கிரஸ் கட்சியுடன் இணைய உள்ள நம்பிக்கையை மறைமுகமாகத் தொண்டர்களுக்குத் தெரியப்படுத்துகிறார் ஜெயலலிதா.
ஏட்டிக்குப்போட்டியாக கூட்டங்களினால் கோவை குலுங்கியது. தமிழக அரசின் செம்மொழி மாநாட்டினால் கோவை கலகலப்பாகியது. செம்மொழி மாநாட்டுக்கு சபையில் கூடிய கூட்டத்தினரைக் கண்டு பிரமித்த ஜெயலலிதா கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநாட்டை நடத்தினார். கோவையில் ஜெயலலிதாவைக் காண்பதற்குத் திரண்ட மக்கள் கூட்டத்தைப் பார்த்து திராவிட முன்னேற்றக் கழகம் தனது செல்வாக்கை வெளிப்படுத்த கோவையில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தினார் முதல்வர் கருணாநிதி. மக்கள் வெள்ளத்தால் திக்குமுக்காடியது கோவை.
திருச்சியில் நடைபெற்ற அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தின் கூட்டத்துக்குத் திரண்ட தொண்டர்களைப் பார்த்து உற்சாகமடைந்தார் ஜெயலலிதா. ஜெயலலிதாவின் அணுகுமுறையில் இப்போது புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கூட்டம் நடைபெறும் மைதானங்களில் எம்.ஜி.ஆரின் படங்கள் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதா தனது உரையிலே சந்தர்ப்பத்துக்கு ஏற்ற வகையில் எம்.ஜி.ஆரின் படப்பாடல்களைப் பாடி தொண்டர்களை உற்சாகப்படுத்துகிறார்.
ஜெயலலிதாவின் அடுத்த பிரமாண்டமான கூட்டம் மதுரையில் நடக்க உள்ளது. மதுரை அழகிரியின் கோட்டை, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் வாலாட்ட முடியாது. அழகிரியின் விருப்பம்தான் மதுரையில் அரங்கேறும். சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கத் தயாராகிறார் ஜெயலலிதா. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மதுரையில் கூட்டம் நடத்துவதற்கு அனுமதிகோரிய போது இழுத்தடிக்கப்பட்டது. அழகிரியின் கட்டுப்பாட்டில் இருக்கும் மதுரையில் பிரமாண்டமான கூட்டத்தை நடத்தத் தயாராகிறார் ஜெயலலிதா. மதுரையில் ஜெயலலிதா கூட்டம் நடத்தத் தயாராகையால் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐக்கியமாகின்றனர். இதன் காரணமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் சலசலப்பு எழத்தொடங்கி உள்ளது. அண்ணா திரõவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்களில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவப்போவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில் தனது கட்சியை பலப்படுத்த தொண்டர்ளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டிய கடமை ஜெயலலிதாவுக்கு உள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தேடிச் சிறிய கட்சிகள் செல்வதனால் தொண்டர்கள் மத்தியில் சிறிதளவு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் பல கட்சிகள் இருப்பதை வெளிப்படுத்தவே பெரும் முனைப்புடன் செயற்பட்டு வருகிறார் ஜெயலலிதா. திராவிட முன்னேற்றக் கழகம் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகிய இரு பெரும் கட்சிகளின் துணை இன்றி தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்தவர்கள் இரண்டு கட்சிகளில் ஒன்றுடன் கூட்டணி சேரத் துடிக்கிறார்கள். கூட்டணியில் போட்டியிட்டு ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றாலும் மக்கள் மத்தியில் இடம்பிடித்துவிடலாம் என்ற எண்ணத்தில் பல அரசியல் கட்சிகள் கூட்டணி சேர்வது குறித்து பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளன.
தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக்கழகத்தைத் தனிமரமாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் செயற்பட்டு வருகிறார் ஜெயலலிதா. காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி ஆகிய கட்சிகளைத் தன்பக்கம் இழுப்பதற்கு முயற்சி செய்கிறார். இதேவேளை விஜயகாந்தின் வரவை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார்.
துணை முதல்வர் பதவியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளதால் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேரும் கட்சிகள் துணை முதல்வர் பதவிக்குக் குறி வைக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தையும் ஒன்றிணைத்தால் ஜெயலலிதா வெற்றி பெற முடியும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு
22/08/10

Tuesday, August 17, 2010

விஜயகாந்த் முதுகில் சவாரி செய்யதயாராகிறார் டாக்டர் ராமதாஸ்


கருணாநிதியின் முதுகிலும், ஜெயலலிதாவின் முதுகிலும் சவாரி செய்து அரசியலில் உச்சக்கட்டத்தை அடைந்த டாக்டர் ராமதாஸ் இப்போது தனது பரம எதிரியான விஜயகாந்தின் முதுகில் சவாரி செய்யத் தயாராகி விட்டார்.
வன்னியரின் எதிர்கால வளமான வாழ்வுக்காக இயக்கம் ஒன்றை ஆரம்பித்த டாக்டர் ராமதாஸ் காலத்தின் கட்டாயத்தினால் வன்னியருக்கான இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றினார். அரசியல் கட்சியை ஆரம்பிக்கும் போது பல உறுதிமொழிகளை வழங்கினார். அவற்றில் பலவற்றை அரசியல்வாதிகளின் தனித்துவத்துக்கு ஏற்ப மீறினார்.
தமிழக அரசியலில் படிப்படியாக முன்னேறிய டாக்டர் ராமதாஸின் அரசியல் கட்சி மத்திய அமைச்சரவையிலும் தன்னைப் பலப்படுத்திக் கொண்டது.
தமிழகத்தில் டாக்டர் ராமதாஸின் பாட்டாளி மக்கள் கட்சி இருக்கும் கூட்டணியே வெற்றிக் கூட்டணி என்ற மாயையில் தனக்குத் தேவையான தொகுதிகளைப் போராடிப் பெற்றார். தனது மகன் அன்புமணியை நாடாளுமன்ற உறுப்பினராக்குவதற்காகவே அடிக்கடி கூட்டணி மாறினர் என விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி படுதோல்வி அடைந்தது. ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியிலிருந்து வெளியேறிய டாக்டர் ராமதாஸ், தனது மகனின் நாடாளுமன்றப் பதவியைத் தக்க வைப்பதற்காக முதல்வர் கருணாநிதியின் உதவியைப் பெறுவதற்காகத் தூதனுப்பினார். டாக்டர் ராமதாஸின் குணத்தைப் பற்றி நன்கு தெரிந்த முதல்வர் கருணாநிதி பட்டும் படாமலும் பதிலளித்தார். தனது மகனின் நாடாளுமன்றப் பதவி பறிபோய் விடும் என்பதைப் புரிந்து கொண்ட டாக்டர் ராமதாஸ் வெறுப்பின் உச்சிக்கே சென்றார்.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் டாக்டர் ராமதாஸை தமது கூட்டணியில் சேர்ப்பதற்கு முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் முன்னுரிமை வழங்கினர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் அவை எல்லாம் அடியோடு மாறி விட்டன. கருணாநிதியும் ஜெயலலிதாவும் தன்னை ஒதுக்கி வைத்திருப்பதை நன்கு உணர்ந்து கொண்ட அவர், புதிய கூட்டணிக்காக அத்திவாரமிட்டுள்ளார்.
டாக்டர் ராமதாஸுக்குப் பிடிக்காதவர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர்கள் நடிகர்கள். தமிழக அரசியல் கட்சிகள் நடிகர்களுக்கு முதலிடம் கொடுத்துள்ளன. நடிகர்களைத் தூற்றுவதில் பாட்டாளி மக்கள் கட்சி முதலிடம் வகிக்கிறது. டாக்டர் ராமதாஸின் எதிரிகள் பட்டியலில் ரஜினிகாந்தும், விஜயகாந்தும் உள்ளனர். ரஜினி, விஜயகாந்த் ஆகியோரின் ரசிகர்களும், பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும் பலமுறை மோதியுள்ளனர். இவை இவ்வாறு இருப்பினும் தனது அரசியல் இருப்பை உறுதிப்படுத்துவதற்காக தற்போது விஜயகாந்துடன் கூட்டணி சேரத் தயார் என அறிவித்துள்ளார் டாக்டர் ராமதாஸ்.
மக்களுடன்தான் கூட்டணி என்ற கோஷத்துடன் அரசியல் நடத்தி வரும் விஜயகாந்தும் கூட்டணி சேரும் எண்ணத்தில் உள்ளார். அவரது முதலாவது தெரிவு காங்கிரஸ் கட்சி. அது திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டு விட்டு வந்தால் கூட்டணி சேரத் தயார் என்று காங்கிரஸ் கட்சிக்கு சூசகமாக அறிவித்துள்ளார் விஜயகாந்த். திராவிட முன்னேற்றக் கழகத்தை அடிபணிய வைக்க விரும்பும் காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிடத் தயாராக இல்லை.
காமராஜரின் ஆட்சிக்குப் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் முதுகில் சவாரி செய்து தேர்தல்களில் ஜெயித்த காங்கிரஸ் கட்சி இப்போது முதல்வர் கருணாநிதி, விஜயகாந்த் என்ற இரட்டை வண்டியில் சவாரி செய்யத் தயாராக இருக்கிறது.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் பிரிப்பதற்கு பலர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் பிரிப்பதற்காகவே விஜயகாந்துடன் கூட்டணி சேரத் தயார் என்று டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு வெளியேறி விஜயகாந்துடன் கூட்டணி அமைத்தால் அந்தக் கூட்டணியில் சேர்வதற்குத் தான் தயாராக இருப்பதாக டாக்டர் ராமதாஸ் சமிஞ்ஞை காட்டியுள்ளார்.
ராகுல் காந்தி, இளங்கோவன், கார்த்தி சிதம்பரம் போன்றோர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை விரும்பவில்லை. சோனியா, மன்மோகன், தங்கபாலு போன்றோர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை விரும்புகின்றனர். கருணாநிதி, விஜயகாந்த் காங்கிரஸ் கூட்டணியை தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் விரும்புகின்றனர். ஜெயலலிதா, விஜயகாந்த், காங்கிரஸ் கூட்டணியை தமிழக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிலர் விரும்புகின்றனர்.
காங்கிரஸ் கட்சி திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் மறைமுகமாக ஆலோசனை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி விஜயகாந்துடன் இணைந்தால் அக்கூட்டணியில் தான் சேர்வதற்குத் தயாராக இருப்பதாகவும் அவர் மறைமுகமாகத் தெரிவித்துள்ளார். ராமதாஸின் இந்த ஆலோசனைக்கு மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ காங்கிரஸும் விஜயகாந்தும் பதிலளிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தோற்கடிக்கும் பலம் தன்னிடம் உள்ளதாக ராமதாஸ் கருதுகிறார்.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையிலான கூட்டணிக் கட்சிகள் இருமுனையில் போட்டியிட்டாலும் வெற்றி தோல்வியை நிர்ணயிப்பது சிரமம். கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என மும்முனைப் போட்டி ஏற்பட்டால் தனது தலைமையிலான கூட்டணிக் கட்சி வெற்றி பெறும் என்ற அசையாத நம்பிக்கை முதல்வர் கருணாநிதியிடம் உள்ளது.
முதல்வர் கருணாநிதியும், ஜெயலலிதாவும் டாக்டர் ராமதாஸுக்கு முதல் மரியாதை கொடுத்த காலம் மலையேறி விட்டது. ஏதாவது ஒரு கூட்டணியில் என்னைச் சேர்க்கிறீர்களா என்று டாக்டர் ராமதாஸ் கெஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழக அரசின் பங்காளியாக இருந்த பாட்டாளி மக்கள் கட்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியையே எதிர்க்கட்சியை விட மோசமாக விமர்சித்தது. தமிழக அரசின் திட்டங்கள் அனைத்தும் தவறு என்று மேடைக்கு மேடை முழங்கியது.
தமிழக அரசு செயற்படுத்த முனைந்த பல திட்டங்களை முடக்கியது. எல்லாவற்றையும் பொறுமையுடன் அவதானித்த முதல்வர் கருணாநிதி தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்த போது டாக்டர் ராமதாஸை ஒதுக்கி விட்டார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இருபெரும் விருட்சங்களைப் பற்றிப் படர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி இன்று பற்றிப் பிடிக்க கொழுகொழும்பு இன்றித் தவிக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சி இல்லையென்றால் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றி பெற முடியாது என்ற இறுமாப்பு அடங்கிப் போயுள்ளது.

வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 15/08/10

Thursday, August 12, 2010

உலகக் கிண்ணப் போட்டியை நடத்தமுட்டி மோதும் நாடுகள்

தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி உவுசலாவின் ஓசையுடன் சிறப்பாக நடைபெற்றது. அடுத்த உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி 2014 ஆம் ஆண்டு லம்பா நடனத்துடன் பிரேஸிலில் நடைபெற உள்ளது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியின் போது பிரேஸில் நாட்டின் பாரம்பரிய நடனமான லம்பா ரசிகர்களின் கண்களுக்கு பெரு விருந்தாக அமையும். தென் ஆபிரிக்காவின் உவுசலா ஓசை
காதைப்பிளந்தது. பிரேசிலின் லம்பா நடனம் உதைபந்தாட்ட ரசிகர்களின் ஒட்டு மொத்த பார்வையையும் தன்பால் ஈர்க்க உள்ளது.
2018 ஆம் ஆண்டும் 2022 ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது 2018 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு ஐரோப்பிய நாடுகள் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. நெதர்லாந்து, பெல்ஜியம், ரஷ்யா, இங்கிலாந்து, ஸ்பெய்ன், போர்த்துக்கல் ஆகியன உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த முன் வந்துள்ளன.
உதைபந்தாட்ட ரசிகர்கள் மிக அதிகமாக உள்ள கண்டம் ஐரோப்பா. ஐரோப்பாக் கண்டத்தின் எந்த நாட்டில் உலகக்கிண்ண உதைபந்தாட்டம் நடைபெற்றாலும் ரசிகர்கள் வெற்றி பெறச் செய்து விடுவார்கள். உலகக் கிண்ண உதைபந்தாட்டச் சம்பியனான ஸ்பெயின், இரண்டாவது இடம் பிடித்த நெதர்லாந்து ஆகியன 2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த மிக ஆர்வமாக உள்ளன.
ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியன கூட்டாக 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த ஆர்வமாக உள்ளன. ஜப்பானும், தென்கொரியாவும் இணைந்து 2000 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்ட போட்டியை வெற்றிகரமாக நடத்தின. மீண்டும் ஒரு வாய்ப்புக்காக அவைகள் காத்திருக்கின்றன. உதைபந்தாட்டப் போட்டியை ரசிப்பவர்களின் தொகை ஜப்பானில் அதிகரித்துள்ளது. ஒசாகா உதைபந்தாட்ட மைதானத்தின் 83000 ரசிகர்கள் அமர்ந்து போட்டிகளை பார்க்கக் கூடிய வசதி உள்ளது.
பிஃபாவில் அங்கம் வகிக்கும் 208 நாடுகளில் இருந்து 6000 சிறுவர்களை ஜப்பானுக்கு அழைத்து உதைபந்தாட்டப் போட்டிகளைப் பார்க்க ஏற்பாடு செய்யப்படும் என ஜப்பான் அறிவித்துள்ளது. 34 வசதியுடனான நேரடி ஒளிபரப்புச் செய்வதாகவும் உறுதியளித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு அவுஸ்திரேலியா ஆர்வமாக உள்ளது.
ஒலிம்பிக் போட்டியை வெற்றிகரமாக நடத்திய அனுபவம் இருப்பதால் உதைபந்தாட்டப் போட்டியை தம்மால் நடத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது அவுஸ்திரேலியா.2018 ஆம் ஆண்டும், 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு விண்ணப்பித்த நாடுகளுக்கு பிஃபா குழு விஜயம் செய்து வருகிறது.
மைதானங்கள், தங்குமிட வசதிகள், போக்குவரத்து, பாதுகாப்பு போன்றவற்றை பீஃபா குழு ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்கும் டிசம்பர் 2 ஆம் திகதி சூரிச்சில் நடைபெறும் வைபவத்தில் 2018, 2022 ஆம் ஆண்டுகளில் உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டி நடைபெறும் நாடுகள் அறிவிக்கப்படும்.
2026 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு விண்ணப்பிக்க சீனா தயாராகி விட்டது.
2022 ஆம் ஆண்டு உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த ஆசியநாடுகளுக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் சீனாவின் ஆசை நிராசையாகிவிடும்.

ரமணி
மெட்ரோநியூஸ்



Sunday, August 8, 2010

அங்கீகாரம் இழந்த கட்சிகள்அந்தரத்தில் தலைவர்கள்





மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் அங்கீகாரத்தை முறையே தமிழ் நாட்டிலும், புதுச்சேரியிலும் தேர்தல் ஆணையம் இரத்துச் செய்துள்ளது. கடைசியாக நடந்த தேர்தலில் வெற்றி பெறத் தவறியதாலும் செல்லுபடியான மொத்த வாக்குகளில் ஆறு சதவீத வாக்குகளைப் பெறத் தவறியதாலும் மறுமலர்ச்சி திராவிடக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பம்பரச் சின்னமும், பாட்டாளி மக்கள் கட்சியின் மாம்பழச் சின்னமும் அடுத்த ஆறு வருடங்களுக்கு நீடிக்கும். ஆறு வருடங்களுக்கு தமிழகத்தில் மறுமலர்ச்சி திராவிடக் கழகமும், புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளாகச் செயற்பட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்ட சபைத் தேர்தலிலும் படுதோல்வி அடைந்ததனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற தகுதியை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் இழந்துள்ளது.
இதேபோன்றே பாட்டாளி மக்கள் கட்சியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து படுதோல்வி அடைந்ததனால் புதுச்சேரியில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்துள்ளது.
தமிழக அரசியலில் மிகப் பெரும் சக்தியாக விளங்குபவர் வைகோ. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு அரும்பாடுபட்டவர்களில் ஒருவர் திராவிட முன்னேற்றக் கழகத்துடனான ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கட்சியிலிருந்து வெளியேறி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் சவால் விடுத்தவர். தமிழகத் தேர்தலின் வெற்றி தோல்வியை நிர்ணயித்த வைகோவின் கட்சி அங்கீகாரத்தை இழந்துள்ளது.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற பந்தா இல்லாது தொண்டர்களின் பலத்தில் கட்சியைக் கட்டி வளர்த்தவர் வைகோ. ஸ்டாலினின் எதிர்காலத்துக்கு வைகோவால் ஆபத்து என்பதை உணர்ந்த கருணாநிதியால் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டவர் வைகோ என்ற கருத்து தமிழக அரசியலில் பரவலாக உள்ளது.திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட வைகோ திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்தது அரசியல் சித்து விளையாட்டுக்களில் ஒன்று. கூட்டணி பேரம் எதிர்பார்த்தது போல் இல்லாமையினால் ஜெயலலிதாவுடனும் கருணாநிதியுடனும் கைகோர்த்து அரசியலை நடத்துகிறார் வைகோ.
ஜெயலலிதாவின் பாரிய வீழ்ச்சி, வைகோவுக்குப் படுபாதகமாக அமை ந்து விட்டது. இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஆகியவற்றில் ஜெயலலிதாவுடன் கைகோர்த்து கருணாநிதியை கடுமையாகத் தாக்கிப் பிரசாரம் செய்த வைகோவின் கட்சி தேர்தலில் வெற்றி பெற முடியாது தவிக்கிறது.
தமிழ் நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் ஒன்று. தேர்தல் சின்னங்கள் ஆணையத்தின் படி மறு மலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சின்னமாகப் பம்பரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின் படியே அரசியல் கட்சியின் அங்கீகாரம் நீடிக்கப்படுகிறது.
கடைசியாக நடந்த சட்ட சபைத் தேர்தலில் ஒரு கட்சியின் வேட்பாளர், செல்லுபடியான மொத்த வாக்குகளில் ஆறு சதவீதத்துக்குக் குறையாது பெற்றிருப்பதுடன் இரண்டு தொகுதிகளிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது கடைசியாக நடந்த சட்டமன்றத் தேர்தலில் செல்லுபடியான மொத்த வாக்குகளில் ஆறு சதவீதத்துக்குப் பெற்றிருப்பதுடன் ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது சட்ட சபைத் தேர்தலில் மொத்தத் தொகுதிகளில் மூன்று சதவீதத் தொகுதிகளிலோ அல்லது மூன்று தொகுதிகளிலோ வெற்றி பெற்றிருக்க வேண்டும். அல்லது நாடாளுமன்றத் தேர்தலில் 25 தொகுதிகளுக்கு ஒரு தொகுதி வீதம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த விதிமுறைகளின் பிரகாரம் ஒவ்வொரு தேர்தல் முடிந்த பின்னரும் ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்குகள் தேர்தல் ஆணையத்தினால் ஆய்வு செய்யப்படுகின்றன.
தேர்தல் ஆணையகத்தின் ஆய்வின்படி தமிழகத்தில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் 3.67 சதவீத வாக்குகளைப் பெற்றது. சட்ட சபைத் தேர்தலில் 5.98 சதவீதவாக்குகளைப் பெற்றதுடன் ஆறு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் ஆணையகத்தில் விதிமுறைகளின்படி அக்கட்சி தனது அங்கீகாரத்தை வைத்துக் கொள்ளும் விதிமுறையைப் பூர்த்தி செய்யவில்லை. ஆகையினால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரத்தை ஏன் இரத்துச் செய்யக் கூடாது என்பதற்கான விளக்கம் கோரப்பட்டது.
தேர்தல் ஆணையத்துக்குச் சென்ற வைகோ தனது தரப்பு நியாயங்களை முன் வைத்தார். 5.98 சதவீதத்தை ஆறு சதவீதமாகக் கணிக்குமாறு கோரிக்கை விடுத்தார். அவரது கோரிக்கையை நிராகரித்த தேர்தல் ஆணையம் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரத்தைத் தமிழகத்தில் ரத்துச் செய்தது.
இதேவேளை தமிழகத்திலும் புதுச்சேரியிலும் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாகப் பாட்டாளி மக்கள் கட்சி விளங்குகிறது. புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி 34.29 சதவீத வாக்குகளைப் பெற்றது. ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. சட்ட சபைத் தேர்தலில் 3.80 வாக்குகளைப் பெற்று இரண்டு தொகுதிகளில் வெற்றி பெற்றது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளைப் பூர்த்தி செய்யாததனால் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரத்தை ஏன் இரத்துச் செய்யக் கூடாது என்று விளக்கம் கோரப்பட்டது.
தேர்தல் ஆணையகத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. புதுச்சேரியில் ஒரே ஒரு தொகுதிதான் உள்ளது. அத்தொகுதியில் வெற்றி பெறா விட்டாலும் இரண்டாவது இடத்துக்கு வந்ததாகப் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றத் தீர்ப்பு தேர்தல் சின்ன ஆணை விதிமுறைகளின் பிரகாரம் புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் அங்கீகாரம் இரத்துச் செய்யப்பட்டது. ஆனால், தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக நீடிக்கும் என அறிவிக்கப்பட்டது.
நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்ட மன்றத் தேர்தலிலும் வெற்றி பெற்றால் மட்டும் போதாது தேர்தல் ஆணைய விதிமுறைகளின் பிரகாரம் ஆறு சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகளைப் பெற வேண்டும். இதேவேளை தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் ஆறு சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும்.
தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேட்பாளரின் செல்வாக்கு, கட்சியின் செல்வாக்கு என்பனவற்றுடன் கூட்டணிக் கட்சியின் பரிபூரண ஆதரவும் கிடைக்க வேண்டும். வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகிய இருவருக்கும் ஆறு வருட அவகாசத்தைத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது. இந்த ஆறு வருட காலத்தினுள் நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தல் இந்திய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவற்றில் அபரிமிதமான வெற்றியைப் பெற்று ஆறு சதவீத வாக்குகளுக்கு அதிகமாகப் பெற வேண்டும். வைகோவும், டாக்டர் ராமதாஸும் தமது கட்சியின் செல்வாக்கை நிரூபிக்கத் தவறினால் அரசியல் கட்சியின் சின்னத்தையும் இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம்.
தமிழக அரசையும் கருணாநிதியையும் தாக்கிப் பேசி கை தட்டல் வாங்குவதிலேயே எதிர்க்கட்சிகள் அனைத்தும் குறியாக உள்ளன. வளர்ந்து விட்ட கட்சியில் செல்வாக்கைத் தக்க வைப்பதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் தவறி விட்டன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் பலர் கட்சி தாவினாலும் அக்கட்சியின் செல்வாக்குச் சரியவில்லை. அதனுடைய வாக்கு வங்கியில் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மாக்சிஸ்ட் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதா இழந்த பெருமையை மீண்டும் பெற்றார். ஜெயலலிதாவுடன் கை கோர்த்த இக்கட்சிகள் இருந்ததையும் இழந்து விட்டன.
இந்நிலையில், தமிழக சட்ட மன்றத் தேர்தலிலும் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் போட்டியிட்டு தேர்தல் ஆணைய விதிமுறைகளின் பிரகாரம் வாக்குகளைப் பெற்று இழந்து விட்ட தமது கட்சியின் அங்கீகாரத்தை மீளப் பெற வேண்டிய நிலைக்கு வைகோவும், டாக்டர் ராமதாஸும் தள்ளப்பட்டுள்ளனர்.
புதுச்சேரி காங்கிரஸின் கோட்டை கருணாநிதியுடனும் காங்கிரஸுடனும் கைகோர்த்து புதுச்சேரியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வெற்றி பெற்றது. ஜெயலலிதாவுடன் இணைந்த பாட்டாளி மக்கள் கட்சி தனது வெற்றியைப் பறிகொடுத்தது. புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெற வேண்டுமானால் காங்கிரஸுடனும் திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் கூட்டணி சேர வேண்டும். ஆகையினால் அடுத்த சட்டமன்றத் தேர்தலில் புதுச்சேரியில் தனது செல்வாக்கை நிலை நிறுத்தி வாக்கு வங்கியை உயர்த்துவதற்காக காங்கிரஸினதும் திராவிட முன்னேற்றக் கழகத்தினதும் தயவை டாக்டர் ராமதாஸ் எதிர்பார்க்கிறார்.
வைகோவின் நிலை மிகப் பரிதாபமாக உள்ளது. தன்னை நம்பி அரசியல் கட்சியை ஆரம்பித்த வைகோ கட்சியின் வெற்றிக்காக ஜெயலலிதாவை நம்பி கட்சியை வழி நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெறும் கட்சியின் தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டால்தான் இழந்த அங்கீகாரத்தைத் திரும்பப் பெற முடியும். ஜெயலலிதாவின் தலைமையிலான இன்றைய கூட்டணி மிகவும் பலவீனமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியையும் விஜயகாந்தையும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் ஜெயலலிதா. காங்கிரஸ் என்பது விஜயகாந்த் ஜெயலலிதாவுடன் இணைந்து தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட்டால் வைகோவின் செல்வாக்குக் குறைந்து விடும்.
காங்கிரஸுக்கும் விஜயகாந்துக்கும் அதிக தொகுதிகளை ஒதுக்கி விட்டு குறைந்த தொகுதிகளே வைகோவுக்கு வழங்கப்படும். குறைந்த தொகுதிகளில் போட்டியிட்டு இழந்த அங்கீகாரத்தை பெறுவது சற்று சிரமமான காரியம்.
பல சிரமங்களுக்கு மத்தியில் ஜெயலலிதாவுடன் இணைந்திருக்கும் வைகோ, தனது கட்சியின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டிய நிலையில் உள்ளார் என்பதே நிதர்சனம்.


வர்மா


வீரகேசரிவாரவெளியீடு 08/08/10


Thursday, August 5, 2010

ஓய்ந்தது சுழல்


அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 1992 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 ஆம் திகதி கொழும்புபிரேமதாஸ மைதானத்தில் உருவான முரளி எனும் சுழல் 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் திகதி காலியில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியுடன் அமைதியடைந்தது.முரளி என்ற சுழல் அகோரப் பசிக்கு 800 விக்கெட்டுகள் இரையாகின.முரளிதரன் அறிமுகமான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றிமுடிவடைந்தது. இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்ற முரளி தனது கடைசி டெஸ்ட் போட்டியிலும் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளார்.முரளி என்ற பெயரைக் கேட்டாலே எதிரணி வீரர்கள் அச்சத்தில் உறைவார்கள். அடித்தாடும் வீரர்களும் முரளியின் பந்தை சரியாகக் கணித்த பின்னரே அடிக்கத் தொடங்குவார்கள். முரளியின் பந்துக்கு அடிப்பதா? தடுத்து ஆடுவதா? எனத் தடுமாறும் வீரர்கள் ஆட்டமிழந்துவிடுவார்கள். இலங்கைக்கு எதிராக விளையாடும் நாடு ஓட்டங்களைக் குவிக்கும் போது இலங்கை ரசிகர்கள் பொதுவாகக் கேட்கும் கேள்வி முரளி பந்து வீசவில்லையா என்பதாகும். முரளி பந்து வீச ஆரம்பித்தால் எதிரணி விக்கெட்கள் வீழ்ந்து விடும் அல்லது ஓட்ட எண்ணிக்கை குறைந்து விடும். டெஸ்ட் போட்டிகளிலும் ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை கிரிக்கெட் அணி அதிகளவு வெற்றிகளைப் பெறாத காலத்திலேதான் கிரிக்கெட் அரங்கினுள் முரளி புகுந்தார். இலங்கை கிரிக்கெட் அணியை வெற்றித் தேவதையின் பக்கம் அழைத்துச்
சென்றதில் முரளியின் பங்கு முக்கியமானது. 800 விக்கெட் என்ற சாதனையைத் தொடுவதற்கு முரளி கடந்து வந்த பாதை மிக மிகக் கரடுமுரடானது.
நிறபேதம், இன பேதம் வளர்ந்துள்ள அவுஸ்திரேலிய மண்ணில் அவர்பட்ட அவமானங்கள், சாதனைபுரிய வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தின.
கிரிக்கெட் அரங்கில் சுழல் பந்து வீரர்கள் சாதனைகளைப் செய்த போதும் துஷ்ரா என்ற மாயச் சுழலை கனகச்சிதமாக வீசி விக்கெட்களை கைப்பற்றியவர் முரளிதரன் மட்டுமே. துஷ்ராவை அறிமுகப் படுத்தியவர் பாகிஸ்தான் முஷ்டாக் அகமது. துஷ்ராவை நேர்த்தியாகக் கையாண்டவர் முரளி. கையைச் சுழற்றி முழியைப் பிதுக்கி எதிரணி விக்கெட்டுகளை துவம்சம் செய்த சுழல்பந்து வீச்சு சக்கரவர்த்திக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் 1995 96 ஆம் ஆண்டு புயல் ஒன்று வீசியது. முரளிதரன் பந்தை எறிகிறார் என்று நடுவர் டேரர் ஹேர் குற்றம் சாட்டினார்.
பந்து வீச்சுப் பரிசோதனையின் பின்னர் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார் முரளிதரன். 1998 99 ஆம் ஆண்டு மீண்டும் அவுஸ்திரேலியாவில் றோய் எமர்சன் என்ற நடுவர் முரளிதரனின் பந்து வீச்சில் குற்றம் பிடித்தார். இரண்டாவது முறை நடைபெற்ற சோதனையின் போதும் குற்றமற்றவன் என்பதை நிரூபித்தார்முரளிதரன்.
2004 ஆம் ஆண்டு இது போன்ற சர்ச்சை கிளம்பியது. பிஷன்சிங்பேடி, அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் போன்றோரும் முரளிதரனின் பந்து வீச்சு தவறு என்று விமர்சித்தார்கள். ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளினால் முரளியின் சாதனைக்குத்தடை போட முடியவில்லை. அவுஸ்திரேலிய மண்ணில் முரளிக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்ட போது அன்றைய அணித் தலைவரான அர்ஜுன ரணதுங்க சீறி எழுந்தார். முரளிதரன் நிரபராதி என்பதை நிரூபிப்பதற்காக மைதானத்தில் நடுவருடன் வாதிட்டார். அர்ஜுன ரணதுங்க ஆவேசப்படாது மௌனமாக இருந்திருந்தால் முரளியின் கிரிக்கெட் பயணம் அன்றே முடிந்திருக்கும். முரளியின் வாழ்வில் புதிய அத்தியாயத்தை ஆரம்பித்த பெருமை அர்ஜுன ரணதுங்கவைச்சாரும். இலங்கை அணியின் கிரிக்கெட் வீரனுக்கு ஏற்படும் அவமானம் இலங்கை நாட்டுக்கு ஏற்படும் அவமானம் என்பதை உணர்ந்த அர்ஜுன இலங்கையின் மதிப்பை உயர்த்தினார்.
1992 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஐந்து தலைவர்களின் கீழ் முரளி விளையாடியுள்ளார். அர்ஜுன ரணதுங்க, சனத் ஜயசூரிய, திலகரத்ன, அத்தபத்து, மஹேலஜயவர்த்தன, சங்கக்கார ஆகிய ஆறு தலைவர்களின் வெற்றிக்கு முரளி பெரும் பங்காற்றியுள்ளார். வேர்ள்ட் ஙீஐ அணியில் ஸ்மித்தின் தலைமையில் விளையாடினார். ஐ. பி. எல். போட்டியில் டோனியின் தலைமையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடுகிறார். கிரிக்கெட்டில் சாதனைகள் பலவற்றின் உரிமையாளரான முரளி எனும் கறுப்பு முத்தைக் கண்டு மெருகேற்றியவர் கிரிக்கெட் பயிற்சியாளரான சுனில் பெர்னாண்டோ, சென் அன்ரனீஸ் பாடசாலை மைதானத்தில் ரென்னிஸ் பந்தில் பாடசாலைச் சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிய போது பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோவின் பார்வை முரளிதரனின் மீது படிந்தது. முரளி பந்து வீசும் பாணியை அவதானித்த சுனில் பெர்னாண்டோ, முரளிக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பதை உணர்ந்தார்.
சிறுவர்கள் விளையாடி முடிந்ததும் சிறப்பாகப் பந்து வீசிய சிறுவனை அழைத்து உன் பெயர் என்ன எனக் கேட்டார் பயிற்சியாளர் சுனில் பெர்னாண்டோ.அந்தச் சிறுவன் முரளிதரன் என்று பதிலளித்தான். கனிஷ்ட கிரிக்கெட் அணியில் விளையாடுகிறாயா என்று பயிற்சியாளர் கேட்ட போது முரளிதரன் அதற்குப் பதில் எதுவும் கூறவில்லை. தனது எதிர்காலம் கிரிக்கெட்தான் என்பதை முரளிதரன் அப்போது உணரவில்லை. பந்து வீச்சில் தன்னிடம் இருக்கும் திறமை பற்றி முரளி என்றுமே அறிந்திருக்கவில்லை.திறமையான ஒரு வீரனை இழக்கக் கூடாது என்று
முடிவெடுத்த பயிற்சியாளர் முரளியின் பெற்றோரிடம் சென்று முரளியின் திறமையைப் பற்றிக் கூறி கனிஷ்ட கிரிக்கெட் அணியில் இணைத்தார். வேகப்பந்து வீச்சையே முரளிதரன் தெரிவு செய்தார். அவரை சுழல்பந்து வீச்சாளராக மாற்றியவர் பயிற்சியாளர் சுனில் பெர் னாண்டோ.
அன்று ஆரம்பித்த சுழல் இன்றுவரை ஓயவே இல்லை. டெஸ்ட்டில் முரளிதரன் ஓய்வு பெற்றாலும் ஒருநாள் போட்டியிலும் 20 20 போட்டியிலும் எதிரணிகளை அச்சுறுத்தத் தயாராகஇருக்கிறார்.
800 விக்கெட்களைப் பெறுவதற்கு எட்டுவிக்கெட்டுகள் இருக்கையில் தனது ஓய்வு பற்றி அறிவித்தார் முரளிதரன். முரளி அவசரப் பட்டு விட்டாரோ என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்பட்டது. இரண்டாவது டெஸ்ட்டிலும் விளையாடினால் 800 என்ற இலக்கு இலகுவானது என்ற எண்ணம் ரசிகர்களிடம்
ஏற்பட்டது. முரளியின் தன்னம்பிக்கை அவரைக் கைவிடவில்லை. 800 ஆவது விக்கெட்டை முரளிக்குக் கொடுக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இந்திய வீரர்கள் போராடினர்.ஒரே ஒரு விக்கெட் கிடைத்தால் 800 என்ற இலக்கை அடைந்து விடலாம் என்ற உத்வேகத்துடன்முரளி களத்தில் நின்றார்.
இந்திய வீரர்கள் முரளியிடம் அகப்படக் கூடாது என்ற உறுதியுடன் விளையாடினர். உலகமே பதைபதைப்புடன் பார்த்திருந்த நீண்ட போராட்டத்தின் பின் 800ஆவது விக்கெட்டைப் பெற்று இலங்கையின் டெஸ்ட் வெற்றியை உறுதி செய்தார் முரளிதரன். லாரா, டெண்டுல்கர் ஆகியோர் பிரபல்யமாக இருந்தவேளை முரளி அவர்களை எதிர்கொண்டõர். சச்சின் டெண்டுல்கரை ஒன்பது தடவை ஆட்டம் இழக்கச் செய்தார். சச்சினை அதிக தடவை ஆட்டம் இழக்கச் செய்தவர் முரளி. லாரா, டெண்டுல்கர், ஷேவக் ஆகிய மூவருமே முரளியின் சுழலுக்குக் கட்டுப்படாது அவ்வப்போது தமது துடுப்பாட்டத் திறமையை வெளிப்படுத்தி உள்ளனர்.
இலங்கைக்கு வழங்கப்படும் டெஸ்ட் போட்டிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவானது. இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென்னாபிரிக்கா ஆகிய நாடுகளின் டெஸ்ட் தொடர்களின் போது ஐந்து போட்டிகள் விளையாடப்படுகின்றன. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இரண்டு அல்லது மூன்று டெஸ்ட் தொடர்களிலேயே விளையாடுகின்றன. தனக்குக் கிடைத்த மிகக் குறைந்தளவு சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி யாரும் நெருங்க முடியாத உயர்ந்த சாதனையைப் படைத்துள்ளார் முரளிதரன்.முரளிக்கு அடுத்தது யார் என்று கேட்டால் யாராலும் பதிலளிக்க முடியாது. எனக்கு அடுத்தது ஹர்பஜன் சிங் என்று முரளி கூறியுள்ளார். இன்னும் 10 வருடங்கள் விளையாடினால்தான் ஹர்பஜனால் முரளியின் இலக்கை நெருங்க முடியும். டெஸ்ட் போட்டியில் 800 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார் முரளி. முரளிக்குப் பின்னர் உள்ள ஷேன்வோர்ன், கும்ப்ளே, மக்ராத், வாஸ், கபில்தேவ், ஹட்லி, பொலக், வசீம் அக்ரம், அம்புரூஸ் ஆகியோர் ஓய்வு பெற்று விட்டனர். தென்னாபிரிக்க வீரரான நிதினி 390 விக்கெட்டுகளுடன் விளையாடிக் கொண்டிருக்கிறார். நிதினி, முரளியின் சாதனையை நெருங்குவது மிகவும் சிரமமான காரியம். புதிய பந்து வீச்சாளர்கள் முரளியின் சாதனையை பார்த்து வியக்க முடியுமே தவிர நெருங்குவதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.ஊடகங்களுடனும் பொதுமக்களுடனும் முரளி மிகவும் நெருக்கமாகப் பழகவில்லை என்பது முரளிக்கு எதிரான குற்றச்சாட்டு. அமைதியான முறையில் பல சமூக சேவை செய்துள்ளார். ஆனால் அவற்றைப் பிரபலப்படுத்தவில்லை. சேர்.பொன் இராமநாதனைச் சிங்களத் தலைவர்கள் தமது தோளில் சுமந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பின்னர், கிரிக்கெட் விளையாட்டு வீரர்கள் முரளியை தோளில் சுமந்து தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.டெஸ்ட்டில் அமைதியடைந்த சுழல் ஒருநாள் போட்டியிலும் 20 20 போட்டியிலும் விக்கெட்களை கபளீகரம் செய்ய காத்திருக்கிறார்.

ரமணி
மெட்ரோநியூஸ்

Sunday, August 1, 2010

உலகக் கிண்ண உதைபந்தாட்டம் 2010


குழு "ஏ'யில் தென் ஆபிரிக்கா, மெக்ஸிகோ, உருகுவே, பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடம்பிடித்தன. முதலாவது நாடாக பிரான்ஸ் தெரிவாகும், இரண்டாவது நாடாகத் தெரிவாவதற்கு மெக்ஸிகோவுக்கும், உருகுவேக்கும் இடையே பலத்த போட்டி நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. குழு "ஏ'யின் முடிவு உதைபந்தாட்ட இரசிகர்களின் முடிவை புரட்டிப் போட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிரான்ஸ் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாது ஒரே ஒரு புள்ளியுடன் வெளியேறியது. பிரான்ஸுடனான போட்டியை சமப்படுத்திய உருகுவே தென் ஆபிரிக்கா, மெக்ஸிகோ ஆகியவற்றுடனான போட்டியில் வெற்றி பெற்று ஏழு புள்ளிகளுடன் முதலாமிடத்தைப் பிடித்தது. தென் ஆபிரிக்காவுடனான போட்டியைச் சமப்படுத்தி பிரான்ஸை வென்ற உருகுவேயிடம் தோல்வி அடைந்த மெக்ஸிக்கோ நான்கு புள்ளிகளுடன் இரண்டாமிடம் பெற்றது. குழு "ஏ'யில் இறுதி இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட தென் ஆபிரிக்கா 21 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வென்று ஆறுதலடைந்தது.
மெக்ஸிக்கோ, தென்னாபிரிக்கா ஆகியன தலா நான்கு புள்ளிகளைப் பெற்றன. இரண்டு நாடுகளும் தலா மூன்று கோல்கள் அடித்தன. மெக்ஸிக்கோவுக்கு எதிராக இரண்டு கோல்களும், தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ஐந்து கோல்களும் அடிக்கப்பட்டன. கோல்களின் அடிப்படையில் மெக்ஸிக்கோ இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
குழு "பீ'யில் ஆர்ஜென்ரீனா, நைஜீரியா, தென் கொரியா, கிரீஸ் ஆகியன விளையாடின. முதலிடத்தை ஆர்ஜென்ரீனா பிடிக்கும். இரண்டாவது இடத்துக்கு கிரீஸ் அல்லது நைஜீரியா தெரிவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று எதிர்பார்த்தது போலவே ஆர்ஜென்ரீனா தெரிவானது. யாரும் எதிர்பார்க்காத வகையில் தென் கொரியா இரண்டாவது இடத்தைப் பிடித்தது. ஆர்ஜென்ரீனாவிடம் தோல்வியடைந்த தென்கொரியா, நைஜீரியாவுடனான போட்டியைச் சமப்படுத்தி கிரீஸுடனான போட்டியில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது.
குழு "சீ'யில் இங்கிலாந்து, அமெரிக்கா, அல்ஜீரியா, ஸ்லோவேனியா ஆகியன இடம்பிடித்தன. இங்கிலாந்து முதலாமிடத்தையும் அமெரிக்கா இரண்டாமிடத்தையும் பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவு செய்யப்படும் என்று உதைபந்தாட்ட ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்ப்புக்கு மாறாக அமெரிக்கா முதலாமிடத்தையும் இங்கிலாந்து இரண்டாம் இடத்தையும் பெற்று இரண்டாமிடத்துக்குத் தெரிவாகின.
அமெரிக்கா, இங்கிலாந்து ஆகியன தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று தலா இரண்டு போட்டிகளை சமப்படுத்தின. இரண்டு நாடுகளும் தலா ஐந்து புள்ளிகளைப் பெற்றன. கோல்களின் அடிப்படையில் அமெரிக்கா முதலாமிடத்தையும் இங்கிலாந்து இரண்டாமிடத்தையும் பெற்றன.
குழு "ஈ'யில் இடம் பிடித்த நெதர்லாந்து, டென்மார்க், ஜப்பான், கமரூன் ஆகியவற்றில் இருந்து நெதர்லாந்தும், டென்மார்க்கும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். எதிர்பார்த்தது போன்று நெதர்லாந்து முதலாமிடத்தைப் பெற்றது. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற ஜப்பான் இரண்டாமிடம் பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது.
குழு "எஃப்'பில் இடம்பிடித்த இத்தாலி, பரகுவே, நியூசிலாந்து, ஸ்லோவாக்கியா ஆகிய நாடுகளில் இருந்து இத்தாலியும், பரகுவேயும் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. உதைபந்தாட்ட ரசிகர்களை இத்தாலி ஏமாற்றி விட்டது. ஒரு போட்டியில் கூட வெற்றி பெறாது முதல் சுற்றுடன் உலகக் கிண்ணப் போட்டியில் இருந்து வெளியேறியது. இத்தாலி, பரகுவே முதலாமிடத்தையும் ஸ்லோவாக்கியா இரண்டாமிடத்தையும் பிடித்தன.
பிரேஸில், வட கொரியா, ஐவரிகோஸ்ட், போர்த்துக்கல் ஆகியன குழு "ஜி'யில் இடம் பிடித்தன. எதிர்பார்த்தது போன்றே பிரேஸிலும் போர்த்துக்கல்லும் முறையே முதலாமிடத்தையும் இரண்டாமிடத்தையும் பிடித்தன.
குழு "ஜி'இல் ஸ்பெய்ன், சுவிட்சர்லாந்து, ஹொண்டூராஸ், சிலி ஆகியன இடம்பிடித்தன. எதிர்பார்த்தது போன்றே ஸ்பெயின் முதலாமிடத்தையும் சிலி இரண்டாமிடத்தையும் பெற்றன.

ஏமாற்றிய நாடுகள்
2006ஆம் ஆண்டு சம்பியனான இத்தாலியும் பிரான்ஸும் ஒரு போட்டியில்கூட வெற்றி பெறாது ஒட்டுமொத்த ரசிகர்களையும் ஏமாற்றின. பரகுவே, நியூசிலாந்து ஆகியவற்றுக்கு எதிராக தலா 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்தது. இத்தாலி நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை 11 என்ற சமநிலையில் முடித்த ஸ்லோவாக்கிய பரகுவேக்கு எதிரான போட்டியில் 20 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது. இத்தாலி இரண்டு புள்ளிகளுடனும் ஸ்லோவாக்கியா ஒரு புள்ளியுடனும் பரபரப்பான கடைசிப் போட்டியில் மோதின. போட்டியை சமப்படுத்தினால் இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகும் நிலையில் இத்தாலியும் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திலும் ஸ்லோவாக்கியாவும் மோதின. யாருமே எதிர்பார்க்காத நிலையில் 32 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்ற ஸ்லோவாக்கியா இரண்டாவது சுற்றுக்குத் தெரிவாகியது. ஸ்லோவாக்கியா ஒரு புள்ளியையும் இத்தாலி இரண்டு புள்ளிகளையும் பெற்றன. வெற்றி பெற்ற ஸ்லோவாக்கியா நான்கு புள்ளிகளைப் பெற்று இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானது.
உதைபந்தாட்ட ரசிகர்களை பெரிதும் ஏமாற்றிய நாடு இங்கிலாந்து. இங்கிலாந்து இண்டாவது சுற்றுக்குத் தெரிவானாலும் முதற் சுற்றில் இரண்டு கோல்கள் மட்டும் இங்கிலாந்து அடித்தது. ரூனி, பிரங்லம்பட் ஆகியோர் ஒரு கோல் கூட அடிக்காது ஏமாற்றினார்கள். தட்டுத்தடுமாறி இரண்டாவது சுற்றுக்குத் தெரிவான இங்கிலாந்து ஜேர்மனியிடம் சரணடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
முதல் சுற்றில் ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தெரிவான போர்த்துக்கல் ரசிகர்களை ஏமாற்றி விட்டது. உலகின் அதிகூடிய பெறுமதி மிக்க நட்சத்திர வீரரான கிறிஸ்ரியானோ ரொனால்டோவின் மீது ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தனர். பிரேஸிலுக்கும் ஐவரி கோஸ்டுக்கும் எதிரான போட்டியில் கோல் அடிக்கா தும், கோல் அடிக்க இடம் கொடுக்காதும் சமப்படுத்திய போர்த்துக்கல் பலம் குறைந்த வடகொரியாவுக்கு எதிராக ஏழு கோல்கள் அடித்து முதல் சுற்றில் அதி கூடிய கோல்கள் அடித்த நாடு என்ற பெருமையைப் பெற்றது.
ரமணி

மெட்ரோநியூஸ்

காங்கிரஸை அரவணைக்க விரும்புகிறார் கருணாநிதிதமிழக ஆட்சியைப் பிடிக்கத் துடிக்கிறார் ராகுல்




தமிழகத்தில் இழந்து விட்ட காங்கிரஸ் கட்சியின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றுவதற்கு ராகுல்காந்தி முனைப்புடன் செயற்படுகிறார். தற்போதைய ஆட்சியைத் தக்க வைப்பதற்கு முதல்வர் கருணாநிதி காய்நகர்த்துகிறார். தமிழக அரசியல்பற்றிய விபரங்களைத் துல்லியமாகத் தெரிந்து வைத்திருக்கும் ராகுல்காந்தியின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது. தடுமாறுகின்றனர் தமிழக காங்கிரஸ் பிரமுகர்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று ராகுல்காந்தி நினைக்கிறார். இளங்கோவனைப் போன்ற ஒரு சில தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையின் கீழ் இருப்பதற்கு விருப்பம் இல்லை. காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற முடியாது என்பதை ராகுல் காந்தி அறிவார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதே ராகுல் காந்தியின் விருப்பமாகும்.
கூட்டணிக் கட்சியின் ஆதரவு இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்பதை முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் அறிவார்கள். ஆகையினால் காங்கிரஸ் கட்சியை கைவிட கருணாநிதி தயாராக இல்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைக்க ஜெயலலிதா ஆர்வம் காட்டி வருகிறார். தமிழக காங்கிரஸ் தலைவர்களின் செயற்பாடுகள் மெச்சும்படியாக இல்லை.
காமராஜரின் நினைவு தின நிகழ்வில் தனித் தனிக் கோஷ்டியாகச் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். பெருந் தலைவர் காமராஜரின் நினைவு தினத்தில் ஒன்றாகச் சென்று அஞ்சலி செலுத்தாத தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழகத்தில் காமராஜரின் ஆட்சியை ஏற்படுத்த முடியுமா என்ற சந்தேகம் உள்ளது.
காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் மாநிலக் கட்சிகள் அனைத்தும் காங்கிரஸ் கட்சிக்கு குடைச்சல் கொடுப்பதிலேயே குறியாக உள்ளன. மத்திய அரசுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிவரும் ஆதரவில் எந்த விதமான தடங்கலும் இல்லை. திராவிட முன்னேற்றக் கழகம் விடுக்கும் கோரிக்கைகளினால் காங்கிரஸ் கட்சிக்கு எதுவித சங்கடங்களும் ஏற்படவில்லை. அதேவேளை மத்திய அரசை மிரட்டும் தொனியிலும் திராவிட முன்னேற்றக் கழகம் அறிவிப்பு எதனையும் வெளிவிடுவதில்லை.
வட பகுதியில் உள்ள மாநிலக் கட்சிகளின் நெருக்கடிகளில் இருந்து வெளியேறுவதற்குத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவி காங்கிரஸ் கட்சிக்குத் தேவையாக உள்ளது. இந்தியப் பொதுத் தேர்தலுக்கு இன்னமும் நான்கு வருடங்கள் உள்ளன. அதனையும் கருத்தில் கொண்டே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும்.
தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பது ராகுல் காந்தியின் விருப்பமாக உள்ளது. தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கான கூட்டணிப் பேச்சுவார்த்தையின் போது காங்கிரஸ் கட்சிக்கு அதிகளவு ஆசனங்களை ஒதுக்க வேண்டும். துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும். தமிழக ஆட்சியில் பங்கு வேண்டும் போன்ற கோரிக்கைகள் முன் வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.
தமிழக காங்கிரஸ் கட்சி பல கோஷ்டியாகப் பிரிந்துள்ளது. எந்தக் கோஷ்டிக்கு அதிக தொகுதி ஒதுக்குவது என்ற பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது. துணை முதல்வர் பதவிக்கு பலர் போட்டியிடும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிதம்பரம், ஜி.கே. வாசன், இளங்கோவன் போன்றவர்களின் தலைமையில் தமிழக காங்கிரஸ் பிளவுபட்டுள்ளது. இந்தத் தலைவர்களின் நடவடிக்கைகளினால் வெறுப்புற்றிருக்கும் தமிழக காங்கிரஸ் தொண்டர்களிடம் ராகுல் தலைமையிலான குழு ஒன்றைத் தமிழகத்தில் அமைக்கும் காலம் விரைவில் உருவாகும் என்ற எதிர்பார்ப்பும்உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம்காங்கிரஸ் கூட்டணியில் விஜயகாந்தையும் இணைப்பதற்கு ராகுல் காந்தி முயற்சி செய்கிறார். தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற கோஷத்துடன் அரசியலில் இறங்கியுள்ள விஜயகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டு விட்டு வந்தால் தாம் கை கொடுக்கத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளார். விஜயகாந்துக்காகத் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிடுவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் பலர் விரும்புகிறார்கள். ராகுலும் இதைத்தான் விரும்புகிறார் என்று சூசகமாகத் தெரிவிக்கப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளுக்கு கருணாநிதி கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் ஜெயலலிதா கொடுக்கமாட்டார் என்பது வெளிப்படையானது. ஆகையினால் கூட்டணியில் மாற்றம் ஏற்படக் கூடாது என்பது காங்கிரஸ் கட்சியில் உள்ள பலரது அபிப்பிராயம்.
தமிழக அரசியலில் திருப்பு முனையை ஏற்படுத்த வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். ஆனால் அதற்கான ஒத்துழைப்பைத் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வழங்கவில்லை. வட இந்திய மாநிலங்களில் ராகுலின் திட்டம் வெற்றியளித்துள்ளது. அதேபோன்ற திட்டத்தை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி திராவிடக் கட்சிகளை வலுவிழக்கச் செய்ய வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். வட இந்திய மாநிலக் கட்சிகளின் மாற்றுக் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. ஆகையினால் ராகுல் காந்தியின் திட்டம் வெற்றியளித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மாற்றீடாக காங்கிரஸ் கட்சி இல்லை. ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் எதிர்த்து களமிறங்கியுள்ள விஜகாந்த்தும் பலம் குன்றிய நிலையிலேயே உள்ளார். ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறும் சாத்தியம் மிக மிக குறைவாகவே உள்ளது.
தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்லானாவின் பதவிக் காலம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது. மாநில அரசைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு உண்டு. மத்திய அரசுடன் அனுசரித்துச் செல்லும் மாநில ஆளுநர்கள் எதுவித பிரச்சினைகளையும் எதிர்நோக்குவதில்லை. மத்திய அரசுக்கு எதிரான கட்சிகளின் கையில் இருக்கும் மாநிலங்களில் உள்ள ஆளுநர்கள் சட்டப் புத்தகமும் கையுமாகவே இருக்க வேண்டும். மாநில அரசின் சட்டம் ஒழுங்கு கெட்டு விடாமல் பாதுகாக்க வேண்டிய அரசு எல்லை மீறி விட்டது எனக் கருதும் பட்சத்தில் அதுகுறித்த ஆதாரங்களை வழங்க மாநில ஆளுநர் தயாராக இருக்க வேண்டும்.
தமிழக ஆளுநர் தமிழக அரசுக்கு மிகவும் நெருக்கமாகவே உள்ளார். தமிழக அரசுக்கு அவ்வப்போது ஏற்பட்ட நெருக்கடிகளைச் சாதுரியமாகத் தீர்த்து வைத்தார் ஆளுநர். சுஜிர்ஜித் சிங் பர்னாலான ஆளுநரின் மகன் மீது அவ்வப்போது பல புகார்கள் கூறப்பட்டன. மத்திய அரசும் மாநில அரசும் அதனைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆளுநருக்கு எதிரான குற்றச்சாட்டு எதனையும் தமிழக அரசு சுமத்தவில்லை. சுர்ஜித் சிங் பர்னாலா போன்றே அடுத்து வரப் போகும் ஆளுநரும் இருக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. ஆனால் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு வேறு விதமாக உள்ளது.
ஓய்வு பெற்ற தலைமைத் தேர்தல் அதிகாரி நவீன் சாவ்லாவை தமிழக ஆளுநராக நியமிக்க வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புவதாக செய்தி வெளியாகியுள்ளது.
ஜெயலலிதாவுடன் மிகவும் நெருக்கமானவர் நவீன் சாவ்லா என்ற கருத்தும் உள்ளது. ஜெயலலிதாவுக்கு நெருக்கமாக இருப்பவரை தமிழக முதல்வர் கருணாநிதி விரும்பமாட்டார். ஆகையினால் நவீன் சாவ்லாவை தமிழக ஆளுநராக நியமித்தால் காங்கிரஸ் கட்சியின் சில கோரிக்கைகளை முதல்வர் கருணாநிதி நிறைவேற்ற இணங்குவார் என்பது காங்கிரஸ் தரப்பின் எதிர்பார்ப்பு.
தமிழகத் தேர்தல் காலத்தில் ஆளுநரின் கடமை மிக முக்கியமானது. தேர்தலின் போது ஏற்படும் குளறுபடிகளைத் தீர விசாரித்து முடிவு காண வேண்டிய பரிந்துரைகளை ஆளுநர் மத்திய அரசுக்கு வழங்க வேண்டும். காங்கிரஸ் கட்சியின் இந்த ஏற்பாடு பற்றிய தகவல்கள் தமிழக முதல்வருக்கும் எட்டியிருக்கும். காங்கிரஸுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் அடிபணியுமா? அல்லது திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பத்துக்கு காங்கிரஸ் கட்சி இணங்குமா என்பது விரைவில் தெரிந்து விடும்.

வர்மாவீரகேசரிவாரவெளியீடு 01/08/10

களையெடுக்கிறார் ஜெயலலிதாஉற்சாகத்தில் அ.தி.மு.க.


அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறுவோர் அனைவரும் ஜெயலலிதாவின் தலைமைத்துவத்தையே விமர்சித்து வருகின்றனர். ஜெயலலிதாவை இலகுவில் சந்திக்க முடியாது. அவரைச் சுற்றி இருப்பவர்கள் தவறான கருத்துகளை வழங்கி வருகின்றனர். அவற்றை அப்படியே நம்பி விடும் ஜெயலலிதா தவறான முடிவுகளை எடுக்கிறார் போன்ற குற்றச்சாட்டுகளை வெளிப்படுத்துகின்றனர். அவர்கள் கூறுவதில் ஓரளவு உண்மை உள்ளது. கட்சியில் திட்டமிட்டு ஓரம் கட்டப்படும் சிலர் தமது சார்பு நியாயங்களை எடுத்துச் சொல்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. ஜெயலலிதாவைச் சுற்றி இருப்பவர்கள் விடும் ஒரு சில தவறுகளினால் தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்கள் பலர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றுள்ளனர். இதனை எல்லாம் காலம் தாழ்த்தி உணர்ந்து கொண்ட ஜெயலலிதா அதிரடியாக சில முடிவுகளை அமுல்படுத்தி உள்ளார்.
ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியான சசிகலாவின் உறவினர்கள் பலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொறுப்பு வாய்ந்த பதவிகளில் உள்ளனர். வாரிசு அரசியல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இல்லை என்றாலும் சசிகலாவின் உறவினர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆக்கிரமித்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு உள்ளது.
சசிகலாவின் நெருங்கிய உறவினரான டாக்டர் வெங்கடேஷ் கடந்த ஆண்டு மே மாதம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைகளின் செயலாளராக நியமிக்கப்பட்டார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்கு பாடுபட்ட பலர் இருக்கையில் சசிகலாவின் உறவினர் என்ற ஒரே ஒரு தகுதியுடன் கட்சியின் முக்கிய பொறுப்பில் டாக்டர் வெங்கடேஷ் நியமிக்கப்பட்டதை பலர் விரும்பவில்லை. அதே நேரம் சசிகலாவைப் பகைத்துக் கொள்வதைத் தவிர்ப்பதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டது தவறு என்று சுட்டிக்காட்டவில்லை.
தஞ்சாவூர், திருவாவூர் ஆகிய மாவட்டங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொறுப்பாளர் பதவியில் இருந்து டாக்டர் வெங்கடேஷ் அதிரடியாக நீக்கப்பட்டார். கட்சியின் முக்கிய பிரமுகர்கள் ஜெயலலிதாவைச் சந்திப்பதற்கு பெரும் தடையாக இருந்தவர் டாக்டர் வெங்கடேஷ். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகர்கள் பலர் கட்சியை விட்டு வெளியேறி திராவிட முன்னேற்றக் கழகத்தில் சரணடைவதற்கு டாக்டர் வெங்கடேஷ்தான் காரணம் என்ற குற்றச்சாட்டும் உள்ளது. டாக்டர் வெங்கடேஷின் நடவடிக்கையைக் கட்டுப்படுத்துவதற்காக அவரிடமிருந்த பதவிகளில் ஒன்றை மட்டும் ஜெயலலிதா பிடுங்கியுள்ளார்.
டாக்டர் வெங்கடேஷை ஜெயலலிதா எச்சரிக்கும் விதத்தில் நடவடிக்கை எடுத்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள பலர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வருவதனால் கட்சியில் உள்ள சில முறைகேடுகளை நிவர்த்தி செய்யும் நடவடிக்கையை ஜெயலலிதா ஆரம்பித்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பிரமுகர்களும் தொண்டர்களும் ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கையினால் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதேபோல் டி. வி. டி. தினகரனின் பதவியையும் பிடுங்கியுள்ளார் ஜெயலலிதா. மாநிலங்களவை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் பதவியிலிருந்து டி. வி. டி. தினகரன் நீக்கப்பட்டுள்ளார். டாக்டர் வெங்கடேஷ், டி. வி. டி. தினகரன் ஆகிய இருவரையும் ஜெயலலிதா ஓரம் கட்டியதால் அடாவடி செய்யும் ஏனையவர்கள் கலங்கிப் போயுள்ளனர்.
தமிழக சட்டமன்றத் தேர்தலைச் சந்திப்பதற்காக துரிதகதியில் செயற்படும் ஜெயலலிதாவுடன் டாக்டர் கிருஷ்ணசாமி இணைந்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக ஜெயலலிதாவுடன் முதன் முதலில் இணைந்துள்ளார் கே. ஏ. கிருஷ்ணசாமி. தலித் மக்களின் கணிசமான வாக்கு வங்கி இவரிடம் உள்ளது. திருமாவளவன், கே. ஏ. கிருஷ்ணசாமி ஆகிய இருவரும் தலித் மக்களின் பெரு நம்பிக்கைக்குரிய தலைவர்களாவர். கிருஷ்ணசாமி ஜெயலலிதாவுடன் ஐக்கியமானதால் திருமாவளவனை கைக்குள் வைத்துக் கொண்டு தலித் வாக்குகளை கவர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் முதல்வர் கருணாநிதி.
காங்கிரஸ் கட்சியையும், விஜயகாந்தையும் எதிர்பார்க்கும் ஜெயலலிதா, சிறிய கட்சிகளை தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். யாருடன் கூட்டணி சேர்வதென்று தெரியாது தனித்திருக்கும் டாக்டர் ராமதாஸுக்கும் ஜெயலலிதா சாதக சமிக்ஞை காட்டியுள்ளார். கூட்டணியின் பலமறிந்து வெல்லும் கூட்டணியில் சேர்வதற்காக முடிவை அறிவிக்காது காத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ்.
தமிழக முதல்வர் கருணாநிதி தான் விரும்பிய அனைத்தையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுக் கொள்கிறார். ஆனால், தமிழக காங்கிரஸ் தலைவர்கள் தமிழக அரசிடமிருந்து எதனையும் பெற்றுக் கொள்ள முடியாத நிலை உள்ளது. இதன் காரணமாக இளங்கோவன் போன்ற தமிழகத் தலைவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர்பைத் துண்டிக்க வேண்டும் என்று பகிரங்கமாகக் கூறி வருகின்றனர். இதனை உறுதிப்படுத்துவது போன்று ராகுல் காந்தியும் காங்கிரஸ் ஆட்சி தமிழகத்தில் மலர வேண்டும் என்று அடிக்கடி குரல் கொடுத்து வருகிறார்.
காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிட்டால் அல்லது சிறிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தமிழகத்தில் போட்டியிட்டால் ஆட்சியைப் பிடிக்க முடியாது என்பது வெளிப்படையானது. திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் தலைமையின் கீழ் தேர்தலில் போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும் என்ற உண்மை காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். ஆட்சியில் பங்கு கேட்க வேண்டும் என்பதில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் உறுதியாக உள்ளனர். காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்தை ஜெயலலிதா நன்கு உணர்ந்துள்ளார். ஆகையினால் ஆட்சியில் பங்கு கொடுத்து காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்தால் காங்கிரஸ் தலைவர்களின் முதல் தெரிவு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக இருக்கும்.
ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்வதை சோனியா விரும்பமாட்டார். தமிழக ஆட்சியில் பங்கு கொடுக்க ஜெயலலிதா தயாராக இருக்கிறார் என்றால் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வதற்காக தமிழக முதல்வர் கருணாநிதியும் இறங்கி வர வேண்டிய சூழ்நிலை ஏற்படும். காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க முதல்வர் கருணாநிதி ஒப்புதலளித்தால் ராகுல் காந்தியின் திட்டமும் இளங்கோவன் போன்றவர்களின் எதிர்பார்ப்பும் தவிடு பொடியாகி விடும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் எழுந்த பூசலுக்கு முடிவு காணப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் போதிய பரிச்சயமின்மையினால் அழகிரி அமைச்சுப் பதவியைத் துறந்து விட்டு தமிழக அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக பரபரப்பாகச் செய்தி வெளியானது. நாடாளுமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் எழுதிப் பதிலளிக்கலாம் என்ற சபாநாயகரின் அனுமதியினால் உற்சாகமடைந்துள்ளார் அழகிரி. நாடாளுமன்றத்தில் நெருக்குதல் இன்றி கடமையாற்றலாம் என்ற நம்பிக்கையில் தமிழக சட்ட சபைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளார் அழகிரி.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு
25/07/10