Showing posts with label தமிழக அரசியல். Show all posts
Showing posts with label தமிழக அரசியல். Show all posts

Monday, December 18, 2017

கெளரவப்பிரச்சினயான ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்

தமிழக அரசியல் அரங்கில் ஆர்.கே.நகர் மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. முதலமைச்சரின் தொகுதி என்ற மிடுக்குடன் இருந்த ஆர்.கே.நகர், இலஞ்சம் தலை விரித்தாடும் தொகுதியாக மாறியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் மாதம் இடைத்தேர்தல் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டது. வாக்காளர்களுப் .பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதால் இடைத்தேர்தல் நிறுத்தப்பட்டது. மீண்டும் தேர்தல் அறிவிப்பு வெளியானது. அரசியல் கட்சிகள் தமது பலத்தைக் காட்ட களம்  இறங்கியுள்ளன.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரும்புக் கோட்டையான ஆர்.கே. நகரில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும்  உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைமைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட  ஸ்டாலினுக்கு ஆர்.கே. நகர் வெற்றி அத்தியாவசியமானது. கருணாநிதி ,ஜெயலலிதா ஆகிய இரண்டு அரசியல் ஆளுமைகளும் இல்லாத இடைத்தேர்தல். திராவிட முன்னேற்றக் கழகத்தை செயல் தலைவர் ஸ்டாலின் வழிநடத்துகிறார்.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டாகப் பிளவு பட்டுள்ளது, தினகரன் தனி ஒருவனாக நின்று அனைவரையும் எதிர்த்துப் பிரசாரம் செய்கிறார். எடபடியும் பன்னீரும் ஒன்றாக நின்று தேர்தல் பரப்புரை செய்கின்றனர். இரண்டு அணிகளும் இனைந்தன. மனங்கள் இணையவில்லை என்று அவர்களே ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார்கள்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான ஆர்.கே. நகரைக் கைப்பற்றித் தனது செல்வாக்கை உயர்த்த வேண்டும் என ஸ்டாலின் கங்கணம் கட்டியுள்ளார். ஜெயலலிதாவின் தொகுதியைத் தக்க வைக்க வேண்டிய கடமைப்பாடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உள்ளது. கழகமும் சின்னமும் அங்கே இருந்தாலும் தொண்டர்கள் எனக்குப் பின்னால் நிற்கிறார்கள் என அடித்துச்சொல்கிறார் தினகரன்.

  திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பளராக  ஆர்.கே. நகரைச்சேர்ந்த மருதுகணேஷ், களம்  இறங்கி உள்ளார்.  ஆர்.கே. நகரில் இரண்டு முறை வெற்றி பெற்ற மதுசூதனன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பலறக்கப் போட்டியிடுகிறார். சுயேட்சை வேட்பாளராக தினகரன், வளம் வருகிறார்.நாம் தமிழர் கட்சியும் பாரதீய ஜனதாவும் தமது கட்சியின் வேட்பாளர்களைக் களம் இறக்கி உள்ளனர். நான்கு தினகரன், மூன்று மதுசூதனன், மூன்று ரமேஸ், இரண்டு பிரேம்குமார் ஆர்.கே. நகரில் போட்டியிடுகிறார்கள். சின்னத்தைப் பார்க்காது பெயரைப்பார்த்து வாக்களித்தால் பிரதான வேட்பாளர்களின் வாக்குகள் குறைய வாய்ப்பு உள்ளது.

ஏப்ரல் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது பன்னீரும் எடப்பாடியும் எதிரும் புதிருமாக இருந்தனர். பன்னீர் அணியின்வேட்பளராக மதுசூதனனும் எடப்பாடியின் அணி வேட்பாளராக தினகரனும் போட்டியிட்டனர். இன்று பன்னீரும் எடப்பாடியும் ஒன்றாக நின்று தினகரனை எதிர்த்துப் பிரசாரம் செய்கின்றனர். தமிழகத்தில் த்சம்ச்து கட்சியும் இருக்கிறது என்பதனை வெளிக்காட்டுவதற்காக பாரதீய ஜனதா வேட்பாளரை நிறுத்தியுள்ளது. கடந்த முறை வேட்புமனுத் தாக்கல் செய்த கங்கை அமரன் இம்முறை பினவங்கி விட்டார். ஆகையால் இன்னொரு கட்சியில் இருந்து தாவியவரை பாரதீய ஜனதா வேட்பாளராக்கி உள்ளது. நாம் தமிழர் கட்சியும் தம் பங்குக்கு ஒருவரை நிறுத்தியுள்ளது.

ஜெயலலிதா இருந்தபோது பிரபலமான எந்த ஒரு கட்சியுடனும்  கூட்டணி சேரவில்லை. திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் ஒன்றாக இருந்தன. வைகோ,விஜயகாந்த்,திருமாவளவன்,இடதுசாரிகள் ஆகியோர் இணைந்து போட்டியிட்டனர். ஆர்.கே. நகர்  இடைத்தேர்தலில் விஜயகாந்தைத் தவிர அமர்றைய அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஆளும் கட்சிக்கும் எதிர்க் கட்சிக்கும் இடையிலான போட்டியாக இல்லாமல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தினகரனுக்கும் இடையிலான போட்டியாக ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் மாறி விட்டது. வெற்றி பெறவிட்டலும் இரண்டாம் இடம் யாருக்கு என்ற கெளரவப் பிரச்சினையாக பிரசாரம் செய்யப்படுகிறது.  கடந்த முறை வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தைப் பெறுவதற்கு நீதிமன்றத்தின் உதவியை நாடினார் தினகரன். அதில் தலையிட முடியாது என நீதிமன்றம்  மறுத்துவிட்டது. தொப்பி சின்னத்துக்கு வாக்களிப்பதற்கு அதிகளவு பணம் கொடுக்கப்பட்டதால் 29 சுயேட்சை வேட்பாளர்கள் தொப்பி சின்னத்தைத் தமக்கு வழங்கக்கோரினர். இவர்களுடன் இரண்டு கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. கட்சியில் கோரிக்கைக்கு முதலிடம் கொடுக்கப்பட வேண்டும் என்ற விதியால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிக்கு தொப்பி வழங்கப்பட்டது.

  தினகரனின் விருப்பமாக  விசில்,கிரிக்கெற் மட்டை என்பன இருந்தன. தினகரனின் விருப்பத்தை  நிறைவேற்றக்கூடாது என்பதற்காக அவருக்கு குக்கர் சின்னமாக வழங்கப்பட்டது. மக்கள் மனதில் மிக இலகுவாக பதியக்கூடியகுக்கரால் தினகரன் மகிழ்ச்சியடைந்துள்ளார். பன்னீரும் எடப்பாடியும் இரட்டை  இலையை நம்பி பிரசாரம் செய்கின்றனர். புதிய சின்னமான குக்கரை பிரபலயப் படுத்துவதில் தினகரன் முந்திவிட்டார்.

வாக்காளருக்குப் பணம்  கொடுத்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரை திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் ஆதரத்துடன் பிடித்து உரிய அதிகாரிகளிடம் கொடுத்துள்ளனர்.  தினகரனின் ஆதரவாளர்கள் பணம் கொடுத்தபோது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். இப்படியான தில்லு முல்லுகளைக் கண்டு பிடிப்பதற்காக கூடுதலான பொலிஸார், பறக்கும் படை,துணை இராணுவம் என்பன கலத்துள் ரோந்து வருகின்றன. பணம் கொடுப்பவர்கள் யாரும் அவர்களின் கண்ணில் சிக்கவில்லை. ஆதாரத்துடன்  பிடித்துக் கொடுத்தாலும் ஆளும் கட்சியைச் சேந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என எதிர்க் கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்பது தேர்தல் ஆணையம் உறுதியாக இருக்கிறது.  இரண்டாவது முறையும் இடைத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டால் அது மிகப்ப பெரிய அவமானமாகும். கொடுக்கிற பணத்தை வாங்குகிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஆர்.கே. நகர் வாக்காளர்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. வாங்கிய சொற்ப பணத்துக்காக தமது வாக்கை விற்பப்போகிறார்களா என்பதை அறிவதற்கு தேர்தல் முடிவுவரை காத்திருக்க வேண்டும்.  நடக்கப்போவது இடைத் தேத்தல் என்றாலும் பொதுத் தேர்தலுக்கான ஆரம்பம் என்றே கருத வேண்டி உள்ளது.     

Thursday, December 14, 2017

புயலைக் கிளப்பிய விஷாலின் அரசியல் விளையாட்டு

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு அரசியல் கட்சிகள் தயாராகிய வேளையில்  சுயேட்சை வேட்பாளராக நடிகர் விஷால் குதித்தது  அனைவரையும்  ஆச்சரியப்பட வைத்தது. தமிழக அரசியலில் இருந்து சினிமாவைப் பிரிக்க முடியாது. தமிழக அரசியலைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ,ஜெயலலிதா ஆகிய நால்வரும் சினிமாவுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்.

சினிமாவுடன் தொடர்புடைய  பலர் அரசியல்வாதியாகவும் இருக்கின்றனர். அரசியல்வாதிகள் சிலர் சினிமாத் தயாரிப்பாளர்களாகவும் விநியோகஸ்தர்களாகவும் செயற்படுகின்றனர். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர். தீவீர அரசியலில்  இறங்கப் போவதாக பந்தா காட்டிவிட்டு ரஜினி அமைதியாகிவிடுவார். விஜயிடமும் அரசியல் ஆசை இருக்கிறது. அவருடைய தகப்பன் பலமுறை வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். கமல் தனது அரசியல் கருத்துக்களை டிவிட்டரில் தெறிக்க விடுகிறார். கமலும் ரஜினியும் அரசியலில் குதிக்க நாள் பார்த்துவிட்டதாக செய்திகள் வெளியான நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் திடீரென விஷால் அரசியல்வாதியானார்.

விஜயின் படம் வெளியாகும் போது பிரபல நடிகர்களின் படங்கள் வெளியாவதில்லை.விஜயின் படம் வெளியாகும் அதே தினத்தில் தனது படத்தை அடம் பிடித்து வெளியிடுபவர் விஷால்.இளைய தளபதி விஜய்க்குப் போட்டியாக புரட்சித் தளபதி என தனது பெயருக்கு முன்னால் போட்டு அழகு பார்த்தவர் விஷால். எதிர்ப்பு வலுவடைந்ததால் புரட்சித் தளபதியைக் கைவிட்டார்.

விஷாலுக்குப் பின்னால் இருபவரை அறிவதற்கு திரை உலகமும் அரசியல் களமும் ஆர்வமாக இருந்தன. டுவிட்டரில் அரசியல் நடத்தும் கமலின் பிரதிநிதியாக விஷால் களம் இறங்கியதாக கருதப்பட்டது. நடிகர் சங்கத்தில் தலைவராகவும் செயலாளராகவும்  இருந்த சரத்குமாரையும் ராதாரவியையும் வெளியேற்றி புதிய நிர்வாகத்தை அமைத்ததில் விஷாலுக்கு முக்கிய பங்கு உள்ளது. அப்போது விஷாலுக்கு ஆதரவாக கமல் இருந்தார். நடிகர் சங்கத்தைத் தொடர்ந்து தயாரிப்பாளர் சங்கத்தையும் விஷாலுடைய குழு கைப்பற்றியது. நடிகர் சங்கம் தயாரிப்பாளர் சங்கம் ஆகிய இரண்டு தேர்தல்களிலும் வெற்றி பெற்றதனால் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் குதித்ததாக ஒரு தோற்றப்பாடு ஏற்பட்டது.

கமல்,ரஜினி, விஜய் ஆகியோருக்கு இருப்பது போன்ற தீவீர வெறிகொண்ட ரசிகர் பட்டாளம் விஷாலுக்கு இல்லை. எம்.ஜி ஆரை முதலமைச்சராக்கியது அவரது ரசிகர்கள் தான். அதன் பின்னர்தான் ரசிகர்கள் தொண்டர்களாகினர். அதன் பின்னர் அப்படி ஒரு நிலைமை எந்த ஒரு நடிகருக்கும் ஏற்படவில்லை. விஷாலின் அரசியல் பிரவேசத்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பதறியது. தினகரனின் தூண்டுதலால் அரசியலில் களம் புகுந்த விஷாலால்  தமது வாக்கு வங்கி சிதறிவிடும் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அச்சம் அடைந்தனர்.

ஜெயலலிதாவின் மரணத்தின் பிற்பாடு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி சிதறிவிட்டது. பன்னீர் குழு ,எடப்பாடி குழு என பிரிந்ததனால் தொண்டர்கள் திகைத்தனர். இப்போது அவர்கள் இணைந்தாலும் தினகரனின் போராட்டம் அவர்களுக்கு பெரும் சோதனையாக இருக்கிறது. ஆர்.கே.நகரில் உள்ள மக்களில் 20 சத விகிதத்தினர் தெலுங்கு பேசும் மக்கள்.அவர்களில் அதிகமானோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள்.  அவர்களின் வாக்குகளைக் கவருவதற்காக தினகரனின் திட்டத்தின் படி விஷால் அரசியல் அவதாரம் எடுத்ததாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் குற்றம் சாட்டினர்.

சினிமா என்ற மாயை விஷாலை முன்னிலைப்படுத்தியது. விஷால் தன்னை அரசியல்வாதியாகவே நினைத்துக் கொண்டார். கமராஜர்,அண்ணா,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி ஆகியோரின் நினைவிடங்களுக்குச் சென்று மரியாதை செய்தபின்னர் வேட்புமனுத் தாக்கல் செய்தார். அப்போதுதான் சினிமாவில் வரும் தேர்தலுக்கும் நிஜமான தேர்த;லுக்கும் உள்ள வித்தியாசத்தை விஷால் அறிந்துகொண்டார். வரிசையில் நின்று டோக்கன் வாங்கவேண்டும் என வேட்பு மனுத்  தாக்கல் செய்யக் காத்திருந்தவர்கள் தெரிவித்தார்கள். டோக்கன் வாங்கி 4௦ ஆவது ஆளாக தேர்தல் அதிகரிவிடம் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார் விஷால்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் வேட்பு மனுவில் அந்தத் தொகுதியில் வசிக்கும் 10 பேர் முன் மொழிந்து  கையெழுத்திட வேண்டும் என்பது விதி விஷாலை முன் மொழிந்தவர்களில் சாந்தி, தீபன் ஆகிய இருவரும் அது தமது கையெழுத்து அல்ல எனத் தெரிவித்ததால் விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. நம்பிக்கையான 10 பேரைத் தேடிக்கண்டு பிடிக்க முடியாதவர் என்று விஷாலின் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அதிர்ச்சியடைந்த விஷால் தேர்தல் அதிகாரியுடன் வாக்குவாதம் செய்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்  மிரட்டியதால் தான் அவர்கள் இருவரும் அப்படிச்சொன்னர்கள் என தொலைபேசி ஆதாரத்துடன் விளக்கமளித்தார்.

சாந்தி, தீபன் ஆகிய இருவரும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள்.  .விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட வேண்டும் என்பதற்காக அவர்கள் கையெழுத்திட்டார்களா என்ற சந்தேகத்துக்கு  விடை தெரியவில்லை.  தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம்  விஷால் கெஞ்சி மன்றாடினார். இரவு 9 மணியளவில் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சந்தோஷமடைந்த விஷால் அனைவருக்கும் நன்றி தெரிவித்து பத்திரிகையாளர்கள் முன் வெற்றி பெறுவேன் எனத் தெரிவித்துவிட்டு வீட்டுக்குச்சென்று விட்டார்.  இரவு 11 மணிக்கு விஷாலின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக செய்தி வெளியானது.

விஷாலின் வேட்பு மனுவை நிரகரித்த தேர்தல் அதிகாரி, விஷால் வேண்டியதால் அதனை ஏற்றுக்கொண்டார். பின்னர் அதனை ஏன் நிராகரித்தார் என்ற சந்தேகம் பரவலாக எழுந்தது. முடிவெடுக்கும் முழு அதிகாரம் தேர்தல் அதிகாரியிடம் உள்ளது. நிராகரிக்கப்பட்ட வேட்புமனுவை விஷாலின் கோரிக்கைக்கு இணங்க ஏற்றுக்கொண்டார். பின்னர் யருடைய நெருக்குதலால் விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தார் என்பது மர்மமாகவே இருக்கிறது. தேர்தல் அதிகாரியின் நடவடிக்கையில் அனைவருக்கும் சந்தேகம் உள்ளது

தமிழக தலமைத் தேர்தல் அதிகாரி லக்கானியிடம்  விஷால் முறையிட்டார். கையெழுத்திடவில்லை என தெரிவித்த  இருவரும் நேரில் வந்து விளக்கமளித்தால் விஷாலின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்படும் என கால  அவகாசம் கொடுத்தார்.  தேர்தலில் தான் போட்டியிடுவதைவிட அவர்களின் பாதுகாப்பு முக்கியம் என விஷால் தெரிவித்தார். சினிமாவில் ஏழைகளுக்கு உதவும் கதாநாயகன் நிஜத்தில் பின்வாங்கிவிட்டார். ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியின்  நடவடிக்கை அநீதியானது என்பதை உணர்ந்த தமிழகத் ,தலைமைத் தேர்தல் அதிகாரி லக்கானி அவரை  நீக்கி விட்டு பிரவீன் நாயரை, ஆர்.கே. நகர் தேர்தல் அதிகாரியாக நியமித்தார். எட்டு மாதங்களுக்கு முன்னர் இதே ஆர்.கே. நகரில் தேர்தல் அதிகரியகக் கடமை புரிந்தவர் பிரவீன் நாயர். தொகுதியில் நடந்த பணப் பட்டுவாடாவைத் தடுக்க முடியாததால் அன்றைய இடைத் தேர்தல் இடை நிறுத்தப்பட்டது.

  விஷாலில்  அரசியல் பிரவேசம் தயாரிப்பாளர் சங்கத்திலும் நடிகர் சங்கத்திலும் பிரச்சினையை  உருவாக்கியது. தயாரிப்பாளர் சங்கம் அரசியல் சார்பானது அல்ல. இடைத் தேர்தலில் போட்டியிடும் விஷால், தயாரிப்பாளர் சங்க தலைவர் பதவியை இராஜினாமாச் செய்ய வேண்டும் என சேரன்  போர்க்கொடி தூக்கி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினார். விஷாலுக்கு எதிரானவர்கள் அனைவரும் சேரனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் பொன்வண்ணன்   இராஜினாமாச் செய்தார். நடிகர் சங்கத்தில் அரசியல்வாதிகளின் ஆதிக்கம் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான் சரத்குமார், ராதாரவி ஆகியோரை வெளியேற்றி விட்டு நாம் பதவி  ஏற்றோம். நடிகர் சங்க செயலாளரான விஷால், தேர்தலில் போட்டியிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் தெரிவித்தார். விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதால் சேரனின் போராட்டம் கைவிடப்பட்டது. பொன்வண்ணன் தனது இராஜினாமாவை  வாபஸ் வாங்கி மீண்டும் பதவியில் தொடருவதாக அறிவித்தார். இவை தற்காலிக முடிவா அல்லது நிரந்தரமான முடிவா  என்பதை விஷாலின் அடுத்தகட்ட நடவடிக்கைதான் முடிவு செய்யும்.

நான், அரசியல்வாதியாகத் தேர்தலில் போட்டியிடவில்லை.  மக்களுக்குச்சேவை செய்ய சுயேட்சையாகப் போட்டியிடுகிறேன் என்ற விஷாலின் விளக்கம் குழப்பமாக இருக்கிறது. கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிடுபவர் அரசியல்வாதி.  சுயேட்சையாகத் தேர்தலில் போட்டியிடுபவர் அரசியல்வாதி இல்லை என்ற விஷாலின் கருத்தை அரசியலைப் பற்றித் தெரியாதவர்களும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அரசியலைப் பற்றிய தெளிவு எதுவும் இல்லாமலே விஷால் அரசியலில் இறங்கியுள்ளார். அரசியல்வாதி ஒருவர்  வேட்புமனுவைத்  தாக்கல் செய்யும்போது அவருடைய கட்சியைச்சேர்ந்த இன்னொருவர்  வேட்புமனுத் தாக்கல் செய்வார். அவருடைய வேட்புமனு ஏற்கப்பட்டால் மற்றவர் தனது  வேட்புமனுவை வாபஸ் பெறுவார். மாறாக நிராகரிக்கப்பட்டால், தனக்குப் பதிலாக வேட்புமனுத் தாக்கல் செய்தவரை அவர் ஆதரிப்பார். இதனைத் தெரிந்து கொள்ளாத விஷால்,  வேட்புமனுத் தாக்கல் செய்வதிலே தோல்வியடைந்தார்.

ஆர்.கே. நகரில் சுயேட்சை வேட்பாளர் ஒருவரை ஆதரிக்கப்போவதாக அறிவித்த விஷால் அதைப்பற்றிய விபரம் எதனையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. விஷாலின் அரசியல் களேபரத்தால் ஆர்.கே. நகற், நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றில் சுழன்றடித்த புயல் ஓய்ந்துவிட்டது. அது  சுறாவளியாக மாறுமா அல்லது அமையுமா என்பதை விஷால்தான் முடிவு செய்ய வேண்டும்.


Thursday, November 30, 2017

இரட்டை இலையும் இடைத்தேர்தலும்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் இரத்தத்தில் ஊறிய சின்னம். மக்கள் திலகமான எம்.ஜி.ஆர் மக்கள் தலைவனானதும் தன்னை நம்பிய தொண்டர்களுக்கு அடையாளம் காட்டிய சின்னம். வலது கையைத் தூக்கி இரண்டு விரல்களை விரித்து எம்.ஜி.ஆர் காட்டும்போது அது இரட்டை இலையின் அடையாளம் என்பதைத் தொண்டர்கள் புரிந்து கொண்டனர். எம்.ஜி.ஆரின் அரசியல் எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த இரட்டை இலைச்சின்னம். தமிழக அரசியல் வரலாற்றில் இரண்டு முறை முடக்கப்பட்டது. அந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் ஜெயலலிதாதான்  பின்னணியில் இருந்தார்  என்பதுதான் விதியின் விளையாட்டு.

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அவரின் மனைவி ஜானகி அணி ஜெயலலிதா அணி என இரண்டாகப் பிரிந்தபோது இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. ஜெயலலிதா இறந்தபின்னர் சசிகலா அணி ஓ.பன்னீர்ச்செல்வம் அணி என இரண்டாகப் பிரிந்தது. சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சசிகலா, சிறைக்குச்செல்ல முன்பு தனது பிரதிநிதியாக டி.டி.தினகரனை நியமித்தார்.
சசிகலாவின் பெயர் மறைந்து தினகரன் முன்னிலைப்படுத்தப்பட்டார். ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தினகரன் வேட்புமனுத் தாக்கல் செய்தார். முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி பேசாமடைந்தையானார்.எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் அடையாளம் கட்டிய இரட்டை இரட்டை இலைச்சின்னம் வெற்றி தரும் என தினகரன் நம்பினார்.

தினகரனின் நம்பிக்கைக்கு பன்னீர் முட்டுக்கட்டை போட்டார். எடப்படியின் அணியில் இருந்த முக்கியஸ்தர்கள் சிலர் பன்னீரின் பக்கம் சாய்ந்தனர். பன்னீர் அணியின் கோரிக்கையால் இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டது. வாக்களர்களுக்கு பணம் கொடுக்கப்பட்ட ஆவணங்கள் கிடைத்ததால் ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.  இரட்டை இலையின் மகாத்மியத்தைப்  புரிந்துகொண்ட எடப்பாடி அணி, பன்னீர்  அணியுடன் இணங்கிப்போக விரும்பியது. ஜெயலலிதாவின் மர்ம மரணத்தை அறிய விசாரணைக் கமிஷன், சசிகலாவையும் மன்னார்குடி குடும்பத்தையும் ஒதுக்கி வைத்தல் ஆகியவற்றுக்கு எடப்பாடி பச்சைக்கொடி காட்டினார்.

எடப்படியின் தலைமையில் இருந்தவர்கள் தினகரனின் தலைமையில் பிரிந்து சென்றார்கள். இரட்டை இலைச்சின்னத்தைத் தமக்குத் தரவேண்டும் என கொரிய பன்னீர் தரப்பு உரிய ஆவணங்களை தேர்தல்  தலைமை அலுவலகத்துக்குக்  கொடுத்தது. ஏட்டிக்குப் போட்டியாக எடப்படியும் தினகரனும் ஆவணங்களுடன் தேர்தல் தலைமை அலுவலகத்தை நாடினார்கள். இவர்களுக்கிடையில் தீபாவும் இரட்டை இலைக்கு உரிமை கோரி ஆவணங்களைச் சமர்ப்பித்தார்.

எடப்பாடி,பன்னீர்,தினகரன் ஆகிய மூவரின் தலைமையிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பிரிந்திருந்தது. ஒன்றரைக்கோடி தொண்டர்களும் தமது பக்கம் என்றே மூவரும் பிரசாரம் செய்தார்கள். எடப்பாடியின் தலைமையிலான தமிழக அரசைத் தூக்கி ஏறிய வேண்டும் என பன்னீரும் தினகரனும் தமிழக ஆளுநரிடம் கோரிக்கை வைத்தனர். ஆளும் கட்சி உறுப்பினர்களின் விருப்பத்தைக் கணக்கில் எடுக்காது, தமிழக அரசைக் காப்பாற்றுவதில் மத்திய அரசு கண்ணும்  கருத்துமாக இருந்தது.

எடப்பாடியையும் பன்னீரையும்  ஒற்றுமையாக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு குறியாக இருந்தது. அவர்கள் இருவரும் பிரிந்திருந்தால் அது திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாக இருக்கும் என பாரதீய ஜனதா கருதியது. மிகுந்த சிரமத்தின் மத்தியிலேயே இருவரும் இணைத்து வைக்கப்பட்டார்கள். பிரிந்தவர்கள்  இணைந்தார்கள். கட்சியின் மிக முக்கியமான பொறுப்பான பொதுச்செயலாளர் பதவி இல்லாமல் ஆக்கப்பட்டது. அதற்குப் பதிலாக ஒருங்கினப்புக்குழு அமைக்கப்பட்டது. ஓ.பன்னீர்ச்செல்வம்  ஒருங்கிணைப்பாளராகவும் எடப்பாடி பழனிச்சாமி துணை ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டனர்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலை நடத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதாவும் இரட்டை இலையும் இல்லாத தேர்தலை எதிர்கொள்ள அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகம் தயங்கியது. எட்டு மாதங்களின் பின்னர் இரட்டை இலைச்சின்னமும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பெயரும் பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டது. அவைத் தலைவர் மதுசூதனனின் அணிக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டது. எடப்படியும் பன்னீரும் இணைந்தாலும் அறுதிப் பெரும்பனமைக்குரிய பலம் அவர்களிடம் இல்லை. ஆனால்,அதிகளவான  உறுப்பினர்களும், நிர்வாகிகளும் அவர்கள் பக்கம் இருப்பதால் சின்னமும் பெயரும் அவர்களுக்குக் கிடைத்துள்ளது.

இரட்டை இலைச்சின்னத்தையும் கழகப் பெயரையும் பயன் படுத்த அனுமதி வழங்கப்பட்ட மறுநாள் ஆர்.கே. நகர் இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டதால், இதன் பின்னணியில் மத்திய அரசு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரச இயந்திரங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் கைப்பாவை என்ற குற்றச்சாட்டுக்கு உரிய பதில்  இதுவரை கிடைக்கவில்லை.

இரட்டை இலைச்சின்னம் கிடைத்ததால் வெற்றி பெறலாம் என எடப்பாடியும் பன்னீரும் நினைக்கின்றனர். ஜெயலலிதா உயிருடன் இருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இப்போது இல்லை. ஜெயலலிதா சொல்வதை அன்று அனைவரும் வேதவாக்காக ஏற்றுக்கொண்டனர். ஆனால், இன்றைய அண்ணா  திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களின் சொல்லை நிர்வாகிகள் தட்டிக் கழிக்கிறார்கள்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில்  போட்டியிடுவதற்கு முன்னர் மனுத் தாக்கல் செய்த மருது கணேஷையே திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் அறிவித்துள்ளது. எட்டு மாதங்களுக்கு முன்னர் எடப்பாடி அணியில் தினகரனும் பன்னீர் தரப்பில் மதுசூதனனும் வேட்பு மனுத் தாக்கல் செய்தனர். தினகரன் இல்லாததால் மதுசூதனன் வேட்பளராக அறிவிக்கப்படுவார்  என்றே அனைவரும் பார்த்தனர். ஆனால், விரும்பு மனுத் தாக்கல் செய்யுமாறு அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்தபோது இப்படி ஒரு நிலைமை ஏற்படவில்லை. அவர் அறிவிப்பவர்தான் வேட்பாளர். விருப்பு மனு என்ற  நடைமுறையை அவர் பின்பற்றவில்லை. மதுசூதனன் போட்டியிடுவதை எடப்பாடி அணி விரும்பவில்லை என்பதை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துகிறது.

மதுசூதனன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாலகங்கா, முன்னாள் தமிழக அமைச்சர் கோகுல இந்திரா உட்பட 20 பேர் விருப்ப மனுத் தாக்கல் செய்தனர். மூன்று நாள் இழுபறிக்குப் பின்னர் வேட்பளராக மதுசூதனன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத் தேர்தலுக்கு முன்னரே வேட்பாளர் தெரிவில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் பலத்த போட்டி நடைபெற்றது.

ஆர்.கே. நகர் இடைத் தேர்தலில் இரட்டை இலை துளிர்ப்பதும் முடங்குவதும் நீதிமன்றத்தின் கையில் உள்ளது. தங்களுடைய புகாருக்கு விளக்கம் தெரிவிக்காமல் எடப்பாடி பன்னீர் தரப்புக்கு இரட்டை இலையைக் கொடுத்தது தவறு என தினகரன்  நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். தினகரன் இப்படி ஒரு காரியம் செய்வர் என்பதை உணர்ந்த பன்னீர் தரப்பு முன்கூட்டியே  நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளது. இரட்டை இஅலையெக் கேட்டு யாராவது முறையிட்டால்  எங்களைக் கேட்காமல் முடிவு எடுக்கக் கூடாது என மனுத் தாக்கல் செய்துள்ளது.  

இரட்டை இலைக்காகவே  எடப்பாடியும் பன்னீரும் இணைந்தனர். பிரிந்த அணிகள் இணைந்தன. ஆனால், மனங்கள் இணையவில்லை என்ற உண்மையை டிவிட்டர் வெளிப்படுத்தியுள்ளது. எடப்பாடி கலந்துகொண்ட எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்கு பன்னீர் தரப்புக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை. இதே போன்ற பல உள் குத்துகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. அவை அனைத்தும் வெளிச்சத்துக்கு வருவதில்லை. சோதனையில் பன்னீர் தரப்பு வெற்றி பெற்று விட்டது. இந்த வெற்றி நிரந்தரமா இல்லையா என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும்.

வர்மா 

Monday, December 5, 2016

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் விடி வெள்ளி மறைந்தது


  அரசியலில் சக்தி மிக்கவராகத் திகழ்ந்த தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கடந்த 5 ஆம் திகதி திங்கட்கிழமை நள்ளிரவு 11.30  மணிக்குக்  காலமானார் என்ற செய்தி அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காய்ச்சல், நீர்ச்சத்துக் குறைவு  ஆகிய நோய்த்தக்கத்தினால் கடந்த செப்ரெம்பர் மாதம் 22  ஆம் திகதி  சென்னை அப்பலோ வைத்தியசாலையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். 75   நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணம் அண்ணா திராவிட  முன்னேற்றக்கழகத்துக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இரண்டாம் கட்டத் தலைவர் இல்லாத கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை ஜெயலலிதா கட்டி எழுப்பி உள்ளார். எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர்  இரண்டாகப் பிரிந்த  கட்சியை  மீண்டும் ஒன்றாக்கி அரியணையில் ஏற்றிய பெருமை ஜெயலலிதாவைச்சாரும். அரசியல் சனக்கியாரான கருணாநிதிக்கு தக்க பதிலடி  கொடுத்து  தந்து அரசியல் இருப்பைத் தக்க வைத்துக் கொண்டவர் ஜெயலலிதா. வைகோ,ராமதாஸ், விஜயகாந்த ஆகியவர்களின்   கட்சிகளுக்கு   அரசியல் அங்கீகரம் பெற்றுக்கொடுத்தவர். தனது தேவை  முடிந்ததும் அவர்களை அரசியல் அநாதையாக்கி   தனது கட்சியை முன்னுக்குக் கொண்டு வந்த அரசியல்  வித்தகர்.

ஜெயலிதாவின் இழப்பு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மிகப்பெரிய பேரிடி. ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த எதிர்க் கட்சிகளுக்கு ஜெயலலிதா இல்லாத அரசியல் மிகவும் இலகுவானதாக இருக்கப்போகிறது.

ஜெயலலிதா இறந்துவிட்டதாக கடந்த திங்கட்கிழமை    மாலை வெளியான   செய்தியால் அண்ணா திராவிட  முன்னேற்ற கழகத் தொண்டர்கள்  சோகத்தில் அளந்தனர். சிலர்  கொதித்துப்போய்  வன்முறையைக் கையில் எடுத்தனர். ஜெயலலிதா இறக்கவில்லை என அப்பலோ அறிக்கை வெளியிட்டதால் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. நிம்மதியாக நித்திரைக்குப் போனவர்கள் கலையில் எழுந்ததும் ஜெயலலிதா மரணமான செய்தி  அதிர்ச்சியளித்தது. ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வெளியான செய்தியைக் கேள்விப்பட்ட ஐந்து பேர் அதிர்ச்சியில் இறந்துவிட்டனர்.  ஐவர் மாரடைப்பால் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமாவும் ஏழைகளுக்கு செய்த உதவியும் எம்.ஜி.ஆரை முதலமைச்சராக்கியது. எம்.ஜி.ஆரின் அரவணைப்பும் ஆதரவும் ஜெயலலிதாவை முதல்வராக்கியது.  அரசியலுக்குள்  நுழைந்த போது அரசியல் பற்றிய பாலபாடம்  எதுவுமே தெரியாதவராக இருந்த ஜெயலலிதா தந்து ஆற்றலின் மூலம் அரசியல்வித்தகர்களை எல்லாம்  ஆட்டிப்படைத்தார்.


ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய  பன்னீர்ச்செல்வம்   முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். அவருடன் 31   அமைச்சர்களும் பதவிப்பிரமாணம்   எடுத்துள்ளனர். இவர்கள் பதவிப்பிரமாணம் செய்யும் வரை ஜெயலலிதாவின் மரணச்செய்தி  வெளியிடப்படவில்லை. ஜெயலலிதா மரணமான பின்னர் இரகசிய அரசியல்காய்  நகர்த்தல்கள் பல நடைபெற்றுள்ளன. ஜெயலலிதாவின்  இறுதிக்கிரியை இன்று  மாலை  செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ளது. இனிமேல்தான் தமிழக அரசியல் சூடுபிடிக்க உள்ளது.

Sunday, December 4, 2016

தலைமை இல்லாத தமிழக அரசியல்

 
தமிழக அரசியலில் சக்தி மிக்க தலைவர்களாக விளங்கும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் தமிழக அரசியல் தலைமையில் பாரிய இடைவெளி விழுந்துள்ளது. சென்னை அப்பலோ  வைத்தியசாலையில்  ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு  70   நாட்கள் கடந்துவிட்டது. சுகவீனம் காரணமாக வீட்டில் சிகிச்சை பெற்றுவந்த கருணாநிதி கடந்த வாரம் ஆழ்வார்பேட்டை  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதாவின் உடல் நிலைபற்றி விசாரிப்பதற்கு மத்திய தமிழக அமைச்சர்கள், அரசியல்வாதிகள், சினிமா கலைஞர்கள், தொழிலதிபர்கள்  அப்பலோ வைத்தியசாலைக்கு படையெடுத்தனர். இப்போது கருணாநிதியின் முறை அவரின் உடல்நிலை பற்றி விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினும் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மையாரும்  ஜெயலலிதாவின் உடல்நிலை பற்றி விசாரிப்பதற்காக அப்பலோ வைத்தியசாலைக்குச் சென்றது அரசியல் நோக்கர்களால் உற்று கவனிக்கப்பட்டது. தயாளுஅம்மையரும் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி சசிகலாவும் சந்தித்ததற்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்தன. இப்போது கருணாநிதியின் உடல் நிலைபற்றி தயாளுஅம்மையாரிடம் சசிகலா விசாரித்ததை ஊடகங்கள் முக்கிய செய்தியாக வெளியிட்டன. ஜெயலிதா பூரணமாக சுகமடைந்து வீடுதிரும்ப வேண்டுமென கட்சிபேதமின்றி அனைவரும் பிரார்த்தித்தனர்.  விதி விலக்காக விஜயகாந்த் மட்டும் ஜெயலிதாவின் உடல் நிலை பற்றி விசாரிப்பதற்காக அப்பலோ வைத்தியசாலைக்குச் செல்லவில்லை.

 ஜெயலலிதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதற்கு காய்ச்சல் நீர்ச்சத்துக் குறைவு ஆகியவையே கரணம் எனக்கூறப்பட்டது. அவருக்குச் சிகிச்சையளிப்பதற்காக இலண்டனில் உள்ள வைத்திய நிபுணர் ஐந்து முறை  அப்பலோவுக்கு விஜயம் செய்தார்.  ஜெயலலிதாவுக்கு  பிசியோதெரபி சிகிச்சை வழங்குவதற்காக சிங்கப்பூரில் இருந்து இருவர்  வரவழைக்கப்பட்டனர். எய்ம்ஸ் மருத்துவர் குழு ஜெயலலிதாவைப்  பார்வையிட்டது. சுமார் 27  வைத்தியர்கள் ஜெயலலிதாவுக்குச்  சிகிச்சையளித்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன கடந்த  4 ஆம் திகதி இரவு ஜெயலலிதாவுக்கு மரடைப்பு ஏற்பட்டதாக அப்பலோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்  தொண்டர்கள் கதிகலங்கிப்போயுள்ளனர். ஜெயலலிதா குணமடைந்து விட்டார். எப்போது வீடு திரும்புவதென்பதை அவர்தான் முடிவு செய்ய வேண்டும் என அப்பலோ அறிவித்தது. ஜெயலலிதா  சுகமடைந்து வீடு திரும்புவர் என சந்தோசத்தில் மிதந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத் தலைவர்களும் தொண்டர்களும் அப்பலோவை முற்றுகையிட்டுள்ளனர்.

ஜெயலலிதாவுக்கு என்ன நடக்கும் என்ற பதற்றம் தமிழகத்தைத் தொற்றிக்கொண்டுள்ளது. இதற்கிடையில் அரசியல் காய் நகர்த்தல்களும் ஆரம்பமாகிவிட்டன. அண்ணா திராவிட  முன்னேற்றக்கழக சட்ட மன்ற உறுப்பினர் அனைவரையும் சென்னைக்கு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகி  உள்ளது. யார்மூலம்  இந்த உத்தரவு வெளியிடப்பட்டதென்ற விபரம் வெளியாகவில்லை. ஆதரவுக் கடிதம் பெறுவதற்காகவே அவர்கள் சென்னைக்கு அழைக்கப்படிருக்கலாம் என்ற கருத்து எழுந்துள்ளது. ஜெயலலிதா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கையில் அவரது கட்சியைச்சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்க முயற்சி நடைபெற்றதாக  தகவல் ஏற்கெனவே  வெளியானது. இந்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழக  சட்ட மன்ற உறுப்பினர்கள் சென்னைக்கு அழைக்கப்பட்டிருப்பது அதனை உறுதி செய்வதாக அமைந்துள்ளது.

மோடியால் அறிவிக்கப்பட்ட  செல்லாக்காசு பற்றிய செய்திகள் அனைத்தும்  பின் தள்ளப்பட்டு ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய  செய்தி முன்னிலைக்கு வந்துள்ளது. ஜெயலலிதா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அவருடைய உடல் நிலை பற்றி தமிழகம் ஆவலாக  இருந்தது. அவருடைய நோய், அவருக்குச்சிகிச்சை வழங்கப்படும் முறைபற்றிய  செய்தி அனைத்தும் இரகசியமாக கையாளப்பட்டன. எதிர்க்கட்சியினரின் வற்புறுத்தலால் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய அறிக்கை வெளியானது.  அந்த அறிக்கையை அப்பலோ நிர்வாகம் வெளியிடவில்லை என்ற பிரச்சினை எழுந்தது. பின்னர் அப்பலோவின் சார்பில் அவ்வப்போது அறிக்கைகள் வெளியாகின. அண்ணா திராவிட  முன்னேற்றக்கழகத்  தலைவர்களும் ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி அவ்வப்போது தகவல் வெளியிட்டனர்.

தமிழக ஆளுனர் வித்யாசாகர், ராகுல்காந்தி, ஸ்டாலின், திருமாவளவன், வைகோ, ராமதாஸ், அன்புமணி உட்பட மத்திய அமைச்சர்களும் ஜெயலலிதாவைப் பார்க்க அப்பலோவுக்குச் சென்றார்கள். யாருடைய கண்ணிலும் ஜெயலலிதா சிக்கவில்லை. அப்பலோவில் யாரோ சொன்னதைக் கேட்டு கிழிப்பிள்ளைபோல   ஜெயலலிதா சுகமாக இருக்கிறார். என ஒப்புவித்தார்கள்.

தமிழக அரசியல் சதுரங்கத்தின் பகடைக் காயாக ஜெயலலிதாவை யாரோ பயன் படுத்துகிறார்கள். எம்.ஜி.ஆரின் உடல் நிலைபாதிக்கப்பட்டபோது அமெரிக்காவுக்குச் சென்று சிகிச்சைபெற்று மீண்டும் வந்து முதலமைச்சரானார். சிங்கப்பூருக்குச் சென்று  சிகிச்சை பெற்றபின் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கிறார் ரஜினிகாந்த். முன்னாள் மத்திய அமைச்சர் மாறனின்  உயிரைக் காப்பாற்றுவதற்காக அம்புலன்ஸ் விமானத்தில் சிங்கப்பூருக்குக் கொண்டு சென்றார்கள்.  துரதிர்ஷ்டவசமாக அவரது உயிரைக் காப்பற முடியவில்லை. ஜெயலிதாவின் உடல் நிலை பற்றிய உணமைகளை ஏன் வெளியிடவில்லை. மேலதிக சிகிச்சைக்காக அவரை ஏன் வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லவில்லை என்ற கேள்விகளுக்கான பத்தி இப்போதைக்கு வெளிவராது மர்மமாகவே இருக்கப்போகிறது.
வர்மா


Wednesday, October 26, 2016

ஜெயலலிதாவின் உடல் நிலையும் தமிழகத்தின் கொந்தளிப்பும்

 
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலை பாதிக்கப்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு ஒருமாதம் கடந்து விட்டது.. அவருடைய உடல்நிலை பற்றிய செய்திகளை விட வதந்திகள்தான் அதிகளவில் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவின் அதரவாளர்களும்  எதிரிகளும் ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கைகளை விட்டவண்ணம் உள்ளனர். ஜெயலலிதாவின் உடல்நிலை பாதிப்பும் காவிரிப்பிரச்சினையும் ஒரே சமயத்தில் ஏற்பட்டன. தமிழக அரசும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்களும் ஜெயலலிதாவின் உடல் நிலைக்கு முக்கியத்துவம் கொடுத்தன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் கவிரிப்பிரச்சினையைக் கையில் எடுத்தன.

இந்திய உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புறந்தள்ளிய கர்நாடகம் தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டிய நீரைக் கொடுக்க மறுத்து அடம் பிடிக்கிறது. இரண்டு மாநிலங்களுக் கிடையிலான பிரச்சினையைச் சமரசமாகத் தீர்க்க  வேண்டிய  மத்திய அரசு ஒருதலைப்பட்சமாகச் செயற்படுகிறது. மத்திய அரசு வஞ்சிப்பதாகத் தமிழக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால்,  தமிழக அரசு அதற்கு முன்னுரிமை  கொடுக்காது ஜெயலலிதா மீண்டு வரவேண்டும் என பிரார்த்திக்கிறது தமிழக  விவசாயிகளின் வாழ்வாதரப் பிரச்சினையான காவிரி  நீர்ப் பிரச்சினையில் ஆர்வத்துடன் தலையிடுவதற்கு  தமிழக அரசு தயங்குகிறது.

தமிழக விவசாயிகளின் வாழ்வாதரப் பிரச்சினையை விட ஜெயலலிதாவின் உடல் நிலையின் முன்னேற்றம்தான் தமிழக அரசுக்கும்  அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்துக்கும் முக்கியமானதாக உள்ளது. காவிரிப் பிரச்சினையை நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளோம்.  நீதிமன்றம் அதற்கான தீர்வைப் பெற்றுத்தரும் என தமிழக அரசு நினைக்கிறது. உச்ச நீதி மன்றத்தீர்ப்பை கர்நாடக அரசு துச்சமாக  மதித்துச் செயற்படுகிறது. நீதி மன்றம் அதைக் கவனிக்கும் என தமிழக அரசு கைகட்டி வாய்பொத்தி காத்திருக்கிறது.காவிரித் தண்ணீரைத் தமிழகத்துக்குக் கொடுக்கக்கூடாது என்பதில் கர்நாடகம் உறுதியாக இருக்கிறது.  கர்நாடகத்தின் அனைத்துக் கட்சிகளும் கர்நாடக அரசின்   பின்னால் இருக்கின்றன. தமிழகத்தின் நிலை இதற்கு எதிர்  மாறாக உள்ளது. தமிழக அரசு தனி வழி போகிறது.. எதிர்க்கட்சிகள் தனித்தனியாக போராட்டம் நடத்துகின்றன.

தமிழகத்தின் அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்து கர்நாடகத்துக்கு எதிராகப் போராட வேண்டும் எனற எண்ணம் அண்ணா திராவிட முன்னேற்றக்  கழகத்திடம் கிஞ்சித்தும் இல்லை. தமிழக விவசாயிகள் துன்பப்பட்டாலும் பரவாயில்லை எதிர்க் கட்சிகளை  அரவணைப்பதில்லை என்பதில்l அது உறுதியாக இருக்கிறது.   தமிழகத்துக்கும் கர்நாடகத்துக்கும் இடையிலான இந்த முரண்பாடு அரசியல் ஆதாயம் கொண்டது.அனைத்துக் கட்சிகளும் இணைந்து முடிவெடுப்பதால்  மத்திய அரசுக்கு அழுத்தம் அதிகரிக்கும் என கர்நாடகம் நம்புகிறது. தமிழகத்தில் மற்றைய கட்சிகளை அணைத்துச்செல்ல அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ம் தயாராக இல்லை.

தமிழகத்துக்கு எதிராக கர்நாடகத்தில் நடைபெற்ற   எதிர்ப்பு தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக முறையாக வெடித்தது. அப்பொழுதும் தமிழக அரசு அமைதியாக கடிதம் எழுதியதே தவிர  கிளர்ந்து எழவில்லை.  மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க தமிழக அரசு தவறிவிட்டது. கர்நாடக மாநில நாடாளுமன்ற உறுப்பினர்கள்  அனைவரும் கட்சி பேதமின்றி டில்லியில் காய்நகர்த்துகின்றனர்.  தமிழக அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌ நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டும்  தனியகச்சென்று பிரதமரைச்சந்திக்க முயற்சி செய்தனர். திராவிட முன்னேற்றக் கழக‌ நாடாளுமன்ற உறுப்பினர்கள்  ஜனதிபதியைச் சந்தித்து மனுக்கொடுத்தனர். தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பதற்கு பிரதர் மோடி தயங்குகிறார்.

காவிரிப் பிரச்சினக்காக  தமிழக விவசாயிகள் போராட்டங்களை அறிவித்து முன்னெடுக்கும் போது  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தைத் தவிர அனைத்துக் கட்சிகளும் அதற்கு அதரவு தெரிவித்து போராட்டங்களில் கலந்து கொண்டன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த் தலைவர்களும் தொண்டர்களும் ஜெயலலிதா பூரண  குணமடைவதற்காக கோவில் கோவில் கோவிலாகச்சென்று  யாகம் செய்கின்றனர். விவசாயிகளின் போராட்டம் அவர்களுக்குப் பெரிதாகப்படவில்லை. ஜெயலலிதா பூரணசுகத்துடன் இருக்க வேண்டும் என்பதே அவர்களின் ஒரே இலக்கு.

ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றிய உண்மைத் தகவல் வெளிவராமையால்   வதந்திகள் ரெக்கை கட்டிப் பறந்தன. வதந்திகளால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தவர்கள் கோபமடைந்தனர். அதன் விளைவால்  வதந்தி பரப்பிய குற்றச்சாட்டில் சுமார் பத்துப் பேர் கைது செய்யப்பட்டனர். கருணாநிதி,ஸ்டாலின்,  விஜயகாந்த் ஆகியோரைப்பற்றி வதந்திகள்  பரப்பப்பட்டபோது கைகட்டி பார்த்துக்கொண்டிருந்த  பொலிஸார் ஜெயலலிதாவைப் பற்றி வதந்தி பரவியபோது களத்தில் இறங்கி  சம்பந்தப் பட்டவர்களைக் கைது செய்தனர். தமிழக அரசுக்கு ஆதரவாக பொலிஸார்  செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

 நீர்ச்சத்துக் குறைவு காய்ச்சல்  போன்ற நோய்களால்  ஜெயலலிதா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. ஆனால், அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் வேறு நோய்க்குரியவர்கள் என்பதனால் ஜெயலலிதாவின் உடல்  நிலை பற்றிய தகவல்கள்  சந்தேகத்தைக் கிளப்பின.சுவாசம்,பிசியோதெரபி, இதயநோய்,நிரிழிவு, நாளம் இல்லாத சுரபிச்சிகிச்சை உட்டச்சத்து நிபுணர்கள் என பல நோய்கள் பற்றிய அறிக்கைகள்  வெளியாகின.

ராகுல்,ஸ்டாலின் உட்பட அரசியல்தலைவர்கள் பலர் அப்பலோவுக்கு சென்று ஜெயலலிதாவின் உடல் நிலை பற்றி விசாரித்து அறிந்தனர்.  மத்திய அமைச்சர்களும் தம் பங்குக்கு அப்பலோவுக்குச் சென்று நலம் விசாரித்தனர். எம்.ஜி .ஆர் நோய்வய்பட்டபோதும் இதே போன்ற நிலை காணப்பட்டது. அது இவ்வளவு பரபரப்பாக இருக்கவில்லை. அன்று எம்.ஜி.ஆரைப் பார்ப்பதற்கு ஜெயலலிதா அனுமதிக்கப்படவில்லை. இன்று ஜெயலலிதாவைப் பார்க்க யாருமே அனுமதிக்கப்படவில்லை.

இந்த நிலையிலும் கருணாநிதி தனது அரசியலைக் கைவிடவில்லை. முதலமைச்சர் இல்லாமையால் நிர்வாகம் நிலை குலைந்துள்ளது. துணை முதலமைச்சரி நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன.  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தவர்களும் வைகோவும் கடுமையாக எதிர்த்தனர்.   நெருக்குதல்   அதிகரித்தமையால் முதலமைச்சரின் பொறுப்புகள் பன்னீர்ச்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டன. ஜெயலலிதாவின் ஒப்புதலுடன் அவருடைய பொறுப்புகள்  அனைத்தும் பன்னீர்ச்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக  ஆளுநர் அலுவலகம் அறிவித்தது. ஜெயலலிதா எப்படி  ஒப்புதளித்தார் என்ற சந்தேகம் கருணாநிதிக்கு ஏற்பட்டது. நேரடியாகத் தான் கேட்காது மக்கள் சந்தேகப்படுகிறார்கள் என அறிக்கைவிட்டார்.

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்ற கோஷத்துடன் கட்சி ஆரம்பித்தவர்கள் அனைவரும் காணமல் போய்விட்டார்கள்.தமிழகத்தின் முதலமைச்சரை தீர்மானிக்கும் சக்தியாக ஒருகாலத்தில் விளங்கிய வைகோவும்,ராமதாஸும்செல்லாகாசாகஒதுக்கப்பட்டுவிட்டர்கள்.முதலமைச்சருக்கு உரிய சகல தகுதியும் இருக்கும் ஸ்டாலினுக்கு முட்டுக்கட்டையாக கருணாநிதியும் அழகிரியும் இருக்கிறார்கள். எந்த  விதமான எதிர்பார்ப்பும் இல்லாமல் இரண்டு முறை தமிழகத்தின் முதலமைச்சரான பன்னீர்ச்செல்வத்துக்கு முன்றாவது முறையாகவும் முதலமைச்சருக்கு இணையான பதவி கிடைத்துள்ளது.

காவிரிப் பிரச்சினைக்கான போராட்டம் இன்றும் தொடருகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌த்தவர்கள் ஜெயலளிதவுக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள்.

வர்மா 

Thursday, September 1, 2016

தமிழக அரசை எச்சரிக்கும் அவதூறு வழக்குகள்

 சர்வதிகார ஆட்சியிடம் இருந்து விடுதலை வேண்டிப் போராடுபவர்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிடும் கொடுமைகள் சொல்லிலடங்கதவை.இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்பது சர்வதிகார ஆட்சியாளர்களின் மரபுவழித் தண்டனை. ஜெயலலிதாவின்  தலைமையிலான தமிழக அரசு அவதூறு வழக்கு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. 2011  ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 213 அவதூறு  வழக்குகளை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அரசையும் ஜெயலலிதாவையும் விமர்சித்தால் அல்லது கேள்விகேட்டால் அவர்கள் மீது அவதூறு  வழக்குகள் தொடுக்கப்படும். கருணாநிதி,ஸ்டாலின் உட்பட திராவிட முன்னேற்றக் கழக‌  தலைவர்களுக்கு எதிராக 85,  நக்கீரன், ஆனந்தவிகடன்,யூனியர் விகடன்,இந்தியருடே உட்பட ஊடகங்களுக்கு எதிராக  55, விஜயகாந்த்,பிரேமலதா உட்பட அவரது கட்சிக்கு எதிராக  28 , ராமதாஸ், அன்புமணி ஆகியோர் உட்பட பட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரக 9 தமிழக காங்கிரஸ் கட்சித் தாலைவர்களுக்கு எதிராக 7  சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக 3  அவதூறு  வழக்குகளை தமிழக அரசு தொடுத்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளையும் ஜெயலலிதா தாக்கல் செய்யும் அவதூறு  வழக்குகளையும் கவனிப்பதிலேயே தமிழக  அரச வழக்கறிஞர்கள்  காலத்தைக் கடத்துகிறார்கள். தமிழக மக்கள் வெள்ளத்தில் துன்பப்படும்போது ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார் என்று பொதுக் கூட்டத்தில்  பேசினால் அவர்மீதுஅவதூறு  வழக்கு பாயும். ஜெயலலிதாவுக்கு  எதிராகப் பேசினால் மட்டும் தான் அவதூறு  வழக்கு தொடுக்கப்படும் அக்கட்சியில் உள்ள ஏனைய தலைவர்களைப் பற்றிப் பேசினாலோ அல்லது விமர்சித்தால் அவதூறு  வழக்குகில் இருந்து தப்பிவிடலாம்.


ஒருவரைப்பற்றி  இல்லாததும் பொல்லாததும் சொன்னால்  அவதூறு  வழக்கு தொடுக்கலாம்.கருத்துச் சொல்பவர்களின் மீதும் கேள்வி கேட்பவர்களின் மீதும் அவதூறு  வழக்கு தொடுத்து கருத்துச் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறது தமிழக அரசு. ஜெயலலிதாவுக்கு எதிராக சுமார் 25 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கைத் தவிர அனைத்து வழக்குகளும் முடிந்துவிட்டன. சில வழக்குகளில் இருந்து எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டார். சில வழக்குகளில் குற்றவளி என தீர்ப்பு வழங்கப்பட்டு முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேல் முறையிட்டின் பின் நிரபராதி என விடுதலையானர். நீதிமன்றம், வழக்கு, தீர்ப்பு,   அப்பீல் என்பன ஜெயலலிதாவுக்கு புதியதல்ல.

ஜெயலலிதா தாக்கல் செய்த அவதூறு   வழக்குகளை சட்டப்படி சந்திக்கப்போவதாக எதிர்த்தரப்புகள் தெரிவித்துள்ளன. தனக்கு எதிரான அவதூறு   வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை பெற்றுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. இது ஜெயலலிதாவுக்கு சற்று பின்னடைவாகும். அவதூறு   வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் விஜயகாந்துக்கு எதிராக பிடிவிறந்து பிறப்பிக்கப்பட்டது. தனக்கு எதிரான அவதூறு  வழக்கின் நிபந்தனைகளைக் குறைக்குமாறு கோரியதால் பிரேமலதாவுக்கு 5000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. இவை ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்தன.

ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருந்த அவதூறு வழக்குகள் இப்போது அவருக்கும் தமிழக அரசுக்கும் எதிராகத் திரும்பிவிட்டன. அவதூறுவழக்குக்கு எதிராக விஜயகாந்த் தாக்கல் செய்த மேன் முறையீட்டை விசாரித்த  நீதிபதிகளின் கேள்விகள் தமிழக  அரசையும் ஜெயலலிதாவையும் அதிர்ச்சியடைய  வைத்துள்ளன. பொது வாழ்வில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்க வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இது தொடர்பாக பதிலளிக்கும் கடிதம் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டது. அப்படி ஒரு கடிதம் கிடைக்கவில்லை என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில்  தெரிவித்தார்.  அப் பதிலைக் கேட்ட நீதிபதிகள் அக் கடிதத்தை ஜெயலலிதாவிடம் கையளிக்குமாறு விஜயகாந்தின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். கடிதம் கிடைக்கவில்லை என பதில் சொல்ல முடியாது.
தனது அரசியல் எதிரிகளை அடக்கி ஒடுக்குவதற்காக ஜெயலலிதா தொடுத்த அவதூறு வழக்குகள் அவருக்கு எதிராகத் திரும்பத் தொடங்கிவிட்டன.நீதிமன்றம் கேட்கும் கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கு தெளிவான பதிலளிக்க வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் முறை கேடுகள் தொடர்பாக பொது நல வழக்குகள் பல தொடுக்கப்பட்டுள்ளன. அப்படித் தொடுக்கப்பட்ட சுமார் 15 வழக்குகளில் தமிழக அரசு மூக்குடைபட்டு   நிற்கிறது.     அரசின் தலமைச் செயலகத்தை  புதிய இடத்தில் கட்டுவதற்கு ஜெயலலிதா முயற்சி செய்தார். அவரது முயற்சி கைகூடவில்லை. கருணாநிதி முதலமைச்சாரக இருந்தபோது புதிய தலமைச்செயலகத்தை அமைத்தார். கருணாநிதி கட்டிய தலமைச் செயலகத்தினுள் செல்லப்போவதில்லை என சபதம் செய்த ஜெயலலிதா  முதலமைச்சரானதும்  பழைய தலமைச் செயலகத்தில் சட்ட சபையை கூட்டினார்.

அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் அண்ணா நூற்றாண்டு  வாசிகசாலை அமைக்கப்பட்டது. அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் ஜெயலலிதா முதல்வரானதும் அண்ணாவின் பெயரில் உள்ள அந்த  நூற்றாண்டு மண்டபத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்போவதாக அறிவித்தார். அதனை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆறு மாதகால அவகாசம் தரும்படி தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. முடிவெடுப்பதற்கு ஒரு நொடி ஒரு நொடியில் முடிவெடுப்பீர்க‌ள். பதிலளிப்பதற்கு ஆறு மாதம் வேண்டுமா என நிதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஜெயலலிதா தனது அரசியல் வாழ்க்கையில் சுமார் இருபது வருடங்களை வழக்குகளைச் சந்திப்பதற்கு செலவிட்டுள்ளார். நீதிமன்றத்தால் இரண்டு முறை முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டும் விடாது போராடி பதவியை இரண்டு முறையும் மீளப் பெற்றவர். இப்போது ஜெயலலிதாவுக்கு முன்னால் உள்ள வழக்குகள் அவருக்கு எதிராகத் திசை திரும்பும் அபாயம் உள்ளது.
வர்மா