Showing posts with label இசை. Show all posts
Showing posts with label இசை. Show all posts

Friday, July 13, 2018

விரல்கள் மீட்டிடும் வேளையில்....


மனித வாழ்வுடன் இரண்டறப்பிணைந்திருப்பது இசை. தாலாட்டில் ஆரம்பித்து ஒப்பாரியில் முடியும் மனித வாழ்க்கையில் பல சந்தர்ப்பங்களின் மனித வாழ்வை வளப்படுத்தும் காரணியாக இசை இருக்கிறது. கோயில் திருவிழாக்கள் மூலம் நாதஸ்வரம்,தவில்,உடுக்கு,பறை போன்றவற்றை ரசிக்க நாம் பழகிவிட்டோம். இசைக்கச்சேரிகள் வாயிலாக வயலின்,மத்தளம்,கடம்,கெஞ்சிரா போன்றவற்றையும் ரசிக்க ஆரம்பித்துவிட்டோம்.

வீணை என்னும் அற்புதமான இசைக்கருவியின் ரசனை எமக்கு எட்டாத்தூரத்திலேயே இருந்தது. வீணை பாலசந்தர், சிட்டி பாபு போன்றவர்களின் வீணாகானத்தை இசையை பற்றித் தெரிந்தவர்கள் மட்டும் தான் ரசித்தார்கள். பக்திப் பாடல்களும் சினிமாப் பாடல்களும் வீணை இசையை நமது அருகில் கொண்டுவந்தன. ராஜேஸ் வைத்யா என்ற அற்புதமான கலைஞனின் கையில் வீணை  சென்ற பின்னர் தான், அதற்கான ரசிகர்கள் கூட்டம் அதிகரித்தது.

வதிரி சைவசமய பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் வதிரி டைமன் மைதானத்தில் ராஜேஸ் வைத்யாவின் “வீணையின் ராகங்கள்” எனும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. வீணையின் இசையை ரசிக்க அதிகமானவர்கள் வருவார்களா என்ற சந்தேகம் ஆரம்பத்தில் பலருடைய மனதிலும் ஏற்பட்டது. நிகழ்ச்சி ஆரம்பமாகி முடியும்வரை வீணையின் லயத்தில் மூழ்கிக் கிடந்த ரசிகர்களின் அங்கீகாரம்  அதனை சிதறடித்தது.

  வாதாபி கணபதி எனும் விநாயக வணக்கத்துடன் இசை நிகழ்ச்சி ஆரம்பமானது.  வாதாபி கணபதி எனச்சொல்லிவிட்டுத்தான் நிகழ்ச்சியை ஆரம்பித்தார். அடுத்து என்ன பாடல் எனச்சொல்லமாட்டேன் நீங்களே கண்டு பிடியுங்கள் என ரசிகர்களுக்கு சவால் விட்டார். இரண்டாவது பாடலுக்காக வீணையில் அவரது கரங்கள் நர்த்தனமாடியபோது, ”ஜனனி ஜனனி ஜகம் நீ” என ரசிகர்களின் வாய் முணுமுணுத்தது.  ”கல்லானாலும் திருச்செந்தூரின் கல்லாவேன்” அது ரிஎம் எஸ்ஸின் குரல் போலவே ஒலித்தது. “சின்னஞ்சிறு பெண்போல” சீர்காழியில் குரல்   நெஞ்சை வருடியது.   இடையில் உள்ள வரியில் இருந்துதான் பாடல் ஒலிக்க்கும். ரசிகர்கள் உடனே கண்டுபிடித்துவிடுவார்கள்.

” என் மனவானில் சிறகை விரிக்கும்.......” எனும் பாடலுடன் சினிமாப் பாடல்கள் ஆரம்பமானது. அந்தக் கிறக்கத்தில் இருந்து மீழ்வதற்கிடையில் “அத்தான்ன்ன் என் அத்தாதாதான்......”  ஒரு இளம் பெண் தன்னுடைய காதலனைக் கூவி அழைப்பதைப்போல இருந்தது.  அந்தக்காதல் போதையில் இருக்கும்போதே “சித்திரம் பேசுதடி என் ....”  என ரசிகர்களின் சிந்தனையைத் திருப்பினார் ராஜேஸ் வைத்யா.  சிந்தை சிதறிய வேளையில் “உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல....”  என யாரையோ தேட வைத்தார். பழைய பாடல்கள் அனைத்தையும் சிறுவர்களும் முணுமுணுத்தனர்.

தென்றல் வந்து தீண்டும் போது.... அந்தத் தென்றலே ஒரு கணம் நின்று ரசித்தது. “மலரே மெளனமா......  வை மெளனமாக ரசித்துக்கொண்டிருக்கும் வேளையில்  திடீரென அதற்குள்  “முத்துக்களோ கண்கள் தித்திப்பதோ கன்னம்  எனும்  பாடலைப் புகுத்தினார். “வெண்ணிலவே வெண்ணிலவே யன்னல் தாண்டி .,,........சபையைக் கட்டிப்போட்டது.

கண்ணுக்குமை எழுது,சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா,மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி,ராஜ ராஜ சோழன் நான், சுந்தரி கண்ணால் ஒரு சேதி,வெள்ளைப்புறா ஒன்று ஆகிய பாடல்கள் ராஜேஸ் வைத்யாவின் விரல்களால் தேனருவியாகப் பாய்ந்தது.

மண்ணில் இந்த காதலன்றி, ஓ ரசிக்கும் சீமானே, பார்த்த ஞாபகம் இல்லையோ, நான் பார்த்ததிலே அவள் ஒருத்தியைத் தான், செந்தமிழ் தேன் மொழியாள் ஆகிய பாடல்களைத்  தொடர்ந்து இடை விடாது மீட்டி ரசிகர்களைப் பரவசப் படுத்தினார்.

ராஜேஸ் வைத்யாவுடன் இணைந்த பக்க வாத்தியக் கலைஞர்களும் அவருக்கு ஈடுகொடுத்து இசை நிகழ்ச்சியை உச்சத்துக்குக்கொண்டு போனார்கள்.மிருதங்கம் மோகனராமன்,தபேலா சந்திரஜித், கடம் சாய்ஹரி,ஓகன் விஜயன்,சிறப்பு சப்தம் சுப்பிரமணியம் ஆகியோர் இசையாலும் உடல் மொழியாலும் ரசிகர்களைக் கிறங்க வைத்தனர்.
 37 பாடல்கள் ராஜேஸ் வைத்யாவின் விரல்களில் இருந்து ஒலித்தன. சுமார் மூன்றரை மணித்தியாலம் போனதே தெரியவில்லை. இன்னும் கொஞ்ச நேரம் நீடித்திருக்கலாம் என்ற  எண்ணத்துடன் மனமில்லாமல் ரசிகர்கள் மெதுவாகக் கலைந்தனர்.

 டைமன் மைதானத்தில்  உள்ளக அரங்கைப் போன்று கனகச்சிதமாக அரங்கம் அமைக்கப்பட்டிருந்தது. ஒலி,ஒளி என்பன மெருகூட்டின. ராஜேஸ் வைத்யாவுக்கான பிரத்தியேக வரவேற்புப்பாடல், அதற்கான நடனம் என்பனவற்றுடன் இசை நிகழ்ச்சி அமர்க்களமாக ஆரம்பமானது.
நாட்கள்,மாதங்கள், வருடங்கள் பல கடந்தாலும் வீணையின் ராகங்கள் மனதை விட்டு அகலாது.
ரமணி
ஞாயிறு தினக்குரல்
10/ ஜூன்/ 2018

Tuesday, January 26, 2016

மறைக்கப்பட்ட பாடலாசிரியரும் மறைந்தார்



இலங்கையிலும்  தமிழ்நாட்டிலும்  நகரம்கிராமம்  உட்பட பட்டிதொட்டியெங்கும்   பிரசித்தமான  பாடல்தான்  "  சின்ன  மாமியே  உன்  சின்னமகளெங்கே பள்ளிக்குச்சென்றாளோ படிக்கச்சென்றாளோ ?   "
தமிழ்த்திரைப்படங்கள்  சிலவற்றிலும்  இடம்பெற்றுள்ளது.  இலங்கை வடமராட்சியைச்சேர்ந்த  கலைஞர்  கமலநாதன்  இயற்றிய அந்தப்பாடல்தற்பொழுது  அவுஸ்திரேலியா  மெல்பனில்  வதியும் பிரபல  பாடகர்  நித்தி கனகரத்தினத்தால்  பிரசித்தி பெற்றது.
ஒரு  கால கட்டத்தில்  இளைஞர்களை   பெரிதும்  வசீகரித்த இந்தப்பாடலை  இயற்றிய  கமலநாதன்  நேற்று (26-01-2016)  வடமராட்சி  -  வதிரியில்  அக்கினியுடன்    சங்கமமானார்.
சில   மாதங்களாக  சுகவீனமுற்றிருந்த  கமலநாதன்வடமராட்சியில் சிறந்த  கல்விப்பாரம்பரியத்தின்  பின்னணியிலும்  கலை, இலக்கிய ஊடகத்துறை  செயற்பாட்டாளர்களின்   பின்னணியிலும்  வாழ்ந்தவர்.
சிறந்த   உதைபந்தாட்ட  வீரர்.   பின்னர்  உதைபந்தாட்டப்போட்டிகளுக்கு    மத்தியஸ்தராகவும்  விளங்கியவர்.
பாடல்   புனையும்  ஆற்றலும்  இவருக்கிருந்தமையால்  சுமார் அரைநூற்றாண்டுக்கு  முன்னர்  எழுதிய  பாடல்தான்  சின்ன  மாமியே.   எனினும்  அதனை  மேடைகள்தோறும்  நித்தி கனகரத்தினம் பாடிக்கொண்டிருந்தமையால்கமலநாதனின்  பெயர்  வெளியில் தெரியவில்லை.   எனினும்  இப்பாடலின்  ரிஷிமூலத்தை  காலம் கடந்து  எழுத்தாளர்  வதிரி சி. ரவீந்திரன்  வெளிச்சத்திற்கு கொண்டுவந்திருந்தார்.
இலங்கை   பத்திரிகைகளில்  இச்செய்தி  பகிரங்கமானபொழுது தன்னடக்கம்    பேணியவர்  கமலநாதன்.
ஒரு  காலகட்டத்தில்ஏ.ஈ. மனோகரன்நித்தி  கனகரத்தினம், இராமச்சந்திரன்முத்தழகு, அமுதன் அண்ணாமலை  முதலான  பலரால்  பொப்பிசைப்பாடல்கள்    இலங்கையிலும்  தமிழ்  நாட்டிலும்  பிரபல்யம்   பெற்றன. அவ்வாறே  சிங்கள  மக்கள்  மத்தியில்  எச்.ஆர். ஜோதிபாலபிரடீ சில்வா,   ஷெல்டன்  பெரேராஎம்.எஸ். பெர்னாண்டோமில்டன் மல்லவராச்சி  முதலானோரும்  பிரபல்யம்  பெற்றிருந்தனர்.
 சமூக சீர்திருத்தம்  தொடர்பாகவும்   மனிதர்கள்மற்றும்   மாறிவரும் உலகத்தின்   நவநாகரீகம்   பற்றிய  அங்கதச் செய்திகளும்  இந்தப்பொப்பிசைப்பாடல்களில்   தொனிக்கும்.    இன்றைய   நவீன கணினி   தொழில்நுட்ப  சாதனங்கள்  இல்லாமலேயே   குறைந்தளவு வசதிகளுடன்   பொப்  பாடல்களின்  ஊடாக அவற்றை    இயற்றியவர்களின்  கருத்துக்களை  நகைச்சுவையுடனும் சோகரசத்துடனும்  நளினமான  ஆடல்கள்  மூலமும்  இந்தப் பாடகர்கள்   மக்கள்  மத்தியில்    எடுத்துச்சென்றனர்.
ஆனால்கேட்டு  ரசித்து  தாமும்  பாடும்  மக்களுக்கோ  இந்தப்பாடல்களை    இயற்றியவர்  யார்  ?  என்பது  தெரியாது.   அவ்வாறே    கமலநாதனும்  கிணற்றுள்  விளக்காக  வாழ்ந்தார்.
கமலநாதன்  இயற்றிய  சின்னமாமியே   இளம்வட்டத்தினரை அக்காலகட்டத்தில்  பெரிதும்  கவர்ந்தது.   வீடுகளிலும்  மக்களால் முணுமுணுக்கப்பட்டது.   இதனை  பல  சிங்களப்பாடகர்களும் பாடியதனாலும்   சிங்களப்படங்களில்  இடம்பெற்றதாலும்  சிங்கள ரசிகர்களிடமும்  சின்னமாமியும்  சின்ன   மகளும்  சென்றனர். தலைமுறைவேறுபாடுகள்   இன்றி  பொப்பாடல்கள்  மக்களிடம் வாழ்ந்த  அக்காலம்  பாடலாசிரியர்களினதும்  பாடகர்களினதும் ரசிகப்பெருமக்களினதும்   வசந்தகாலம்.   ஆனால்அந்தக்காலம் படிப்படியாக   மங்கி  மறைந்ததற்கு,   தொலைக்காட்சியின்  வருகை முக்கிய  காரணம்.
இன்றும்  இலங்கையில்  பொது   அரங்குகளில்கட்சி  அரசியல் மேடைகளில்   இசைநிகழ்ச்சிகள்  நடக்கின்றன.  அவற்றுக்கு  கணினி சாதனங்கள்   பெரும்    துணையாகியுள்ளன.
ஆனால் -   தற்காலப்பாடல்கள்   நினைவில்   தங்குவதில்லை   என்பது அனைத்து   தரப்பு  மூத்ததலைமுறையினரின்  கருத்து.
ஆனால் , அவர்கள்  பாடிய பொப்    பாடல்களை  இயற்றியவர்கள்  பற்றிய  செய்தியை  பாடியவர்களும்  சொல்லவில்லை.   ஊடகங்களும்  கண்டுகொள்ளவில்லை.   அதனால்  ரிஷிமூலம்,   நதிமூலம்  தெரியாதிருப்பதுபோன்று  -  கட்டிடங்களின்  அத்திவாரம் வெளித்தெரியாதிருப்பது  போன்று  -  நெடும்  வீதிகளுக்கு  அடியில் மறைந்திருக்கும்  கற்கள்  போன்று   -  இந்தப்பாடலாசிரியர்களும் அறியப்படாமல்  மறைந்துவிடுகின்றனர்.   எழுதியவர்களும் உரிமைகோருவதற்கு  முன்வராமல்  அடக்கம்  பேணிவிடுவார்கள்.
தமிழகத்தின்  மூத்த கவிஞர்  ஊத்துக்காடு  வேங்கட  சுப்பையா இயற்றிய  அலைபாயுதே  கண்ணா  என்ற  பிரசித்திபெற்ற  பாடலை சிறந்த  இயக்குநர்  எனப்பெயரெடுத்த  மணிரத்தினமும்  தனது அலைபாயுதே  படத்தில்  ஒரு   காட்சியில்   பயன்படுத்தினார்.  ஆனால், தமிழ்மக்களிடம்   சாகாவரம்  பெற்ற  அந்தப்பாடலை   இயற்றியவரின்  பெயரை  அந்தப்படத்தின்  Title  இல்  காணமாட்டீர்கள்.
இலங்கையின் மூவின மக்களிடமும் பிரசித்திபெற்ற சின்னமாமியே பாடலின் ஆசிரியர் கமலநாதன் வதிரியில் நேற்று முன்தினம் 25 ஆம் திகதி மறைந்தார். இவர், தினகரன்  பத்திரிகையின்  முன்னாள்  பிரதம  ஆசிரியரும்  மூத்த இலக்கியவாதியும்    இலக்கிய  மொழிபெயர்ப்பாளரும்  அழகு சுப்பிரமணியத்தின்    ஆங்கிலப்படைப்புகளை    தமிழுக்கு கொண்டு வந்தவருமான    (அமரர்)  ராஜஸ்ரீகாந்தனின்  அண்ணா  உறவு முறையானவர்.   கமலநாதன்,    மற்றும்  ஒரு  ஊடகவியலாளரும்,   வதிரி  தேவரையாளி   இந்துக்கல்லூரியின்  ஸ்தாபகருமான   அமரர் (சூரன்) அவர்களின்   பேரன்    ரவிவர்மாவின்   நெருங்கிய    உறவினருமாவார்.
கமலநாதனும்   குடும்பத்தினரும்  1990    இற்குப்பின்னர்   எங்கள் நீர்கொழும்பில்  - நான்   வசித்த  சூரியா  வீதியில்  வசித்தனர்.   அதனால்   இவரின்  பிள்ளைகள்  எங்கள்  ஊர்  பாடசாலையில்  எனது மனைவியின்   மாணவர்களாகவும்  இருந்தனர்.அங்கு  நடக்கும்  பொது  நிகழ்ச்சிகளிலும்  கலந்துகொள்வதனால் எனக்கும்  ஊரில்  எனது  குடும்பத்தினருக்கும்  நெருங்கியவராகவும் கமலநாதன்    திகழ்ந்தார்.
1997  ஆம்  ஆண்டு  நீர்கொழும்பில்  மல்லிகை  ஜீவாவை   நாம் பாராட்டி   கௌரவித்த  நிகழ்ச்சியிலும்  கலந்து  சிறப்பித்தார்.   அன்று இவருடன்   ராஜஸ்ரீகாந்தன்,   வதிரி சி. ரவீந்திரன்,   மேமன் கவி,  (அமரர்) துரை  விஸ்வநாதன்,   தெளிவத்தை  ஜோசப்,   (அமரர்)  பிரேம்ஜி ஞானசுந்தரன்,   மு. பஷீர்,   திக்குவல்லை கமால்,  (அமரர்)  தங்கவடிவேல்  மாஸ்டர்,   நவமணி  ஆசிரியர்  சிவலிங்கம்,   தினக்குரல் ஆசிரிய   பீடத்திலிருந்து  சிவநேசச்செல்வன்,   தனபாலசிங்கம், வனொலி  ஊடகவியலாளர்  இளையதம்பி  தயானந்தா, ரூபவாஹினியிலிருந்து  சி. வன்னியகுலம்,   வீரகேசரியிலிருந்து சூரியகுமாரி   உட்பட பலர்  கலந்துகொண்டனர்.   இவர்கள் அனைவரதும்    நேசத்துக்குரியவராகவும்  திகழ்ந்தவர்  கமலநாதன்.
அங்கு   எமது  இல்லத்தில்  1998  ஆம்  ஆண்டு   தைப்பொங்கலன்று நடைபெற்ற  இலக்கியச்சந்திப்பிலும்  பங்கேற்றார். இறுதியாக  2013   இல்   வடமராட்சியில்  என்னை   நெல்லியடியில் கண்டுவிட்டு  தமது  வீட்டுக்கு  அழைத்துச்சென்று  உபசரித்தார்.வடமராட்சியில்  முன்னர்   மும்மூர்த்திகள்  எனச்சொல்லப்படும் மூவர்    இலங்கையில்  எந்தப்பாகத்தில்  கலை,   இலக்கியமுற்போக்கு   அரசியல்  கூட்டங்கள்  நடந்தாலும்  அதில் காட்சி தருவார்கள்.
அவர்கள்   எழுத்தாளர்  தெணியான்,   தேவரையாளி  இந்துவின் எழுதுவினைஞர்   கிளாக்கர்  இராஜேந்திரம்சதானந்தன்  மாஸ்டர். இவர்களில்    சதானந்தனின்  தங்கையைத்தான்  கமலநாதன்  மணந்தார். பெரிய   குடும்பத்தின்  தலைவனாக  விளங்கிய  கமலநாதன்  மறைந்துவிட்ட  செய்தி  எனக்கு  நேற்று  தாமதமாகத்தான் தெரியவந்தது.
தொலைபேசி   ஊடாக  அவரின்  குடும்பத்தினருக்கு  அனுதாபம் தெரிவிக்கின்ற   சமயத்தில்  கமலநாதனின்  பூதவுடலுக்கு இறுதிக்கிரியைகள்  நடந்துகொண்டிருந்தன.
நேற்று  அக்கினியில்  சங்கமமான  இக்கலைஞரின்  பாடல்  வரிகள் இன்றும்  மங்காமல்  ஒலித்துக்கொண்டிருக்கிறது.   பல தலைமுறைகளாக   சின்னமாமியே   ஈழத்தமிழர்   புலம்பெயர்ந்த நாடுகளில்  நடக்கும்  இசை  - களியாட்ட  நிகழ்ச்சிகளில்  மட்டுமன்றி, வீடுகளில்   நடக்கும்   பிறந்தநாள்     விருந்துகளிலும்    இந்தப்பாடல் ஒலிக்கிறது.
முருகபூபதி அவுஸ்திரேலியா