Thursday, August 17, 2017

அரசியல் நாடகத்தால் அகற்றப்பட்ட சிவாஜி சிலைஇசையில் மூழ்கிக் கிடந்த தமிழ் சினிமாவை வசனத்தின் பக்கம் திசை திருப்பி சாதனை புரிந்தவர் வி.சி.கணேசன். அறிஞர் அண்ணா எழுதிய சிவாஜி கண்ட இந்துசாம்ராஜ்யம் நாடகத்தில் சிவாஜியாக வாழ்ந்ததால்பெரியாரால்  சிவாஜி கணேசன் என அழைக்கப்பட்டார். பின்னர் கணேசன் என்ற அவரது பெயர் மறைந்து சிவாஜி என்ற அடையாளம் ஒட்டிக்கொண்டது. சிவாஜியின் நடிப்பைப் பார்த்துத்தான் சினிமாவில் நடிக்க வந்தேன் என்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை பலரும் ஒப்புவித்தார்கள். சிவாஜிக்கு முன் சிவாஜிக்குப் பின் என்றே தமிழ் சினிமா பிரிக்கப்பட்டுள்ளது.  கலைஞர் கருணாநிதியின் வசனங்களுக்கு உயிரூட்டியவர் சிவாஜி. கட்சி வேறுபாடின்றி இருவரும் நெருக்கமாக இருந்தனர். சிவாஜி இறந்தபின்னர் அவரது  உருவச்சிலையை சென்னையில் நிறுவி தினமும் அதனைப் பார்வையிட்டு சிவாஜியைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை அனைவருக்கும் வழங்கியவர் கருணாநிதி.  அந்தச்சிலைதான் இரவோடு இரவாக அகற்றப்பட்டது.
சிவாஜி சிலையால் அடிக்கடி விபத்தும் போக்குவரத்து இடைஞ்சலும் ஏற்படுகிறது. என வழக்குத் தாக்கல்செய்யப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் சிவஜிசிலையை அகற்ற உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின்படி அகற்றப்பட்ட சிலை சிவாஜி மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ளது மேலோட்டமாகப் பார்த்தால் நீதிமன்ற உத்தரவால் சிவாஜிசிலை அகற்றப்பட்டது போன்று தோற்றமளிக்கிறது. இதன் அரசியல் பின்புலத்தை அலசி ஆராய்ந்தால் உண்மைத்தோற்றம் வெளிப்படும். கருணாநிதிக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையிலான அரசியல் பகமையின் உச்சக்கட்டமே சிவாஜிசிலை அகற்றம். கருணாநிதி ஆட்சி புரிந்தபோது இருந்த அடையாளங்கள் எவையும் இருக்கக்கூடாது என்பதே ஜெயலலிதாவின் கொள்கை.

.  கருணாநிதியால் நிறுவப்பட்ட கண்ணகிசிலை ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில்பட்டபாடு நாடே அறியும். ஜெயலலிதாவின் உத்தரவால் தூக்கி மூலையிலே போடப்பட்ட கண்ணகிசிலை கருணாநிதி ஆட்சிபீடம்   ஏறியதும் உரிய இடத்துக்கு வந்தது. புதிய சட்டசபை அமைப்பதற்கு ஜெயலலிதா பகீரத முயற்சி செய்தார். முடியவில்லை. கருணாநிதியால் கட்டப்பட்ட புதிய தலமைச்செயலகத்துக்குள் செல்லமாட்டேன் என ஜெயலலிதா உறுதிமொழி எடுத்தார். ஜெயலலிதா முதலமைச்சரானதும் மக்கள் வரிப்பணத்தில் கருணாநிதியால் கட்டப்பட்ட புதிய தலைமைச்செயலகம் வைத்தியசாலையாக மாற்றப்பட்டது. இவை இரண்டும் சிறு உதாரணங்கள் தான்..
 தமிழகத்தில் சுமார் 13 ஆயிரம் சிலைகள் இருப்பதாக புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. அவற்றில்  சிவாஜிசிலையால் மட்டும் தான் இடைஞ்சலா? மற்றையவற்றால் எதுவித தடங்கலும் இல்லையா? சிவாஜிசிலைக்கு அருகே நடந்த அனைத்தும் உணமையிலேயே நடைபெற்ற விபத்துகளா அல்லது அச்சிலையை அகற்றுவதற்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட விபத்துகளா என்பதை யாரும் ஆராய்ந்து பார்க்கவில்லை..ஜெயலலிதாவின்  ஆட்சிக்காலத்தில் கண்ணகிக்கு நேர்ந்தகதிதான் சிவாஜிக்கும் நேர்ந்துள்ளது.  கருணாநிதி ஆட்சிக்கு வந்தபின்னர்தான் நீதி கேட்டுபோராடிய கண்ணகிக்கு  நீதி கிடைத்தது.இப்போது கருணாநிதி மெளனித்துப்போயுள்ளார். ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் எதாவது நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

எம்.ஜி.ஆர்,என்.எஸ்.கிருஷ்ணன் ஆகிய இரண்டு நடிகர்களுக்கு மட்டும் தான் சென்னையில் சிலை இருந்தது. இந்த வரிசையில் சென்னையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்பட்டது. அது இப்போது அகற்றப்பட்டுவிட்டது. சிவாஜியின் சிலை  அகற்றப்பட்டதால் அவரது ரசிகர்கள் கொந்தளித்துப்போய் உள்ளனர். ஆனாலும் அமைதியாகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கமல் சீமான் போன்றவர்கள் தமது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளனர். உறக்கத்தில் இருந்த நடிகர் சங்கம் எல்லாம் முடிந்தபின்னர் அறிக்கை விட்டுள்ளது. ஏதாவது ஒரு அரசியல் கட்சியில் தஞ்சமடைந்திருந்தால் சிவாஜிசிலை காப்பாற்றப்பட்டிருக்கும். அவரது பிள்ளைகளான ராம்குமாரும் பிரபுவும்  அதனை விரும்பவில்லை.  சென்னையில் சிவாஜிக்கு சிலை வைக்க ஏற்பாடு செய்யப்படும் என அவர்கள் கூறியதால் சிவாஜி ரசிகர்கள் ஆறுதலடைந்துள்ளனர். 
சிவாஜியின் தகப்பன் சுதந்திரப்போராட்ட காலத்தில் காந்தி மீதும் காங்கிரஸ் மீதும் நம்பிக்கை வைத்தவர். திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பமானபோது சிவாஜி அக்கட்சியில் சேர்ந்து பிரசாரம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கடவுள் மறுப்புக் கொள்கையை அவர் மீறியதால் அக்கட்சியில் இருந்து வெளியேறி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கர்மவீரர் அடிபட்டு எல்லாவற்றையும் இழந்து கரை ஒதுங்கினார். அரசியலில் வெவ்வேறு இடங்களில் இருந்தாலும் கருணாநிதி ,சிவாஜி-எம்.ஜி.ஆர்,சிவாஜி ஆகியோரின் நட்புக்குப் பாதகம் ஏற்படவில்லை.


செக்கிழுத்த செம்மல் வ.உ.சி, வீரபாண்டிய கட்டபொம்மன்,கொடி காத்த குமரன்சாம்ராட்அசோகன்,  அரிச்சந்திரன், சாஜகான்,சலீம்,கர்ணன், கர்ணன்,ராஜராஜ சோழன்,திருநாவுக்கரசர், சோக்கிரடீஸ், மகாகவி காளிதாஸ் போன்ற புராண இதிகாச பாத்திரங்களை கண்முன்னே நிறுத்தியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சிலை வைத்து மரியாதை செய்தவர். அப்படிப்பட்ட ஒருவரின் சிலையை அகற்றுமாறு கோரி ஒருவர் நீதிமன்றத்தை அணுகியபோது ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு கைகட்டி வேடிக்கை பார்த்தது. இந்தியாவே வியப்புடன் திரும்பிப்பார்த்த வைபவம் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனுடைய திருமணம். தனது வளர்ப்பு மகனின் திருமணத்தின் மூலம் சிவாஜி வீட்டு சம்பந்தியானார் ஜெயலலிதா. கருணாநிதியின் பகைக்கு முன்னால் சிவாஜியின் உறவு அவருக்குப் பெரிதாகப்படவில்லை.

கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னையில் சிவாஜிக்கு சிலை அமைக்கப்படும் என ஆளுநரின் அறிவிப்பு வெளியானது. 2006   ஆம் ஆண்டு ஜூலை மாதம் 21 ஆம் திகதி   750 கிலோ நிறை உடைய 8 அடி உயரமுள்ள கம்பீரமான  சிவாஜியின் சிலை திறக்கப்பட்டது  சிவஜிக்குச்சிலை வைக்கும் எண்ணம் உதயமானபோது பண்டிச்சேரிக்குச்சென்ற கருணாநிதி அங்குள்ள சிவாஜியின் சிலையை பார்த்தார். அச்சிலை அவரின் மனத்தைக் கவர்ந்தது. அதனை வடித்த ஸ்தபதி மணியிடம் பொறுப்பை ஒப்படைத்தார். அவர் வெளிநாடு  செல்ல நேர்ந்ததால் அவருடைய உதவியாளர் ஸ்தபதி ரவி சிலையை நிறைவு செய்தார்.
காந்தியவாதி சீனிவாசன் என்பவர் சிவாஜியின் சிலையை அகற்ற வேண்டும் என வழக்குத் தாக்கல் செய்தார். காந்தி எனும் வழக்கறிஞர் வாதாடி சிலையை அகற்றும் ஆணையைப் பெற்றார். சிலையை அகற்றக்கூடாது என்பதற்கான காரணம் எதனையும் தமிழக அரசு முன்வைக்கவில்லை. 2015  ஆம் ஆண்டு தீர்ப்பு  வழங்கப்பட்டது.  அரசியல் கட்சி அல்லது சாதி அமைப்புத் தலைவரின் சிலை என்றால் தமிழகத்தில் வன்செயல் வெடித்திருக்கும். சிவாஜி ரசிகர்கள் இன்று முதியவராகிவிட்டனர். ஆனாலும் சிவாஜியின் மீதான அவர்களது பற்றும் பாசமும் சிறிதளவும் குறையவில்லை.


சென்னையில் தலைவர்களின் சிலைகள் இருக்கும் இடத்தில் சிவாஜிக்குச்சிலை வைக்க வேண்டும் என்ற கோஷம் வலுவாக எழுந்துள்ளது. கட்சி பேதமற்று அனைவரும் ஒருமித்துக் குரல் கொடுத்துள்ளனர்.இனி ஒரு விதி செய்வோம் சிவாஜிக்குச்சிலை அமைப்போம் அரசியலுக்கு அப்பால் என கமல் தெரிவித்துள்ளார். சிவாஜிக்கு இன்னொரு சிலை வைக்கலாம். அது நடிகருடைய நட்புக்கு இலக்கணமாக கலைஞர் அமைத்த சிலைக்கு ஈடாகாது என்பது நிதர்சனம்.

சூரன்.ஏ.ரவிவர்மா 

Saturday, August 12, 2017

எப்பயமும் எனக்கில்லை


ஐந்து கரங்களில் ஒரு கரத்தில்
அங்குசமும் மறு கரத்தில் பாசமும்
அபயக்கரம் காட்டி அருள்
பாலிக்கும். மறுகரத்தில் லட்டும்
தும்பிக்கையில் குடமும் கொண்டு
நம்பிக்கையாய் வந்தவர்க்கு
தும்பிக்கையால் அருள் பாலிப்பவர் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 1

ஈரேழு உலகமும் ஈன்றெடுத்த 
தாய் தந்தையர் என
உலகுக்கு உணர்த்தியவரும் 
அறுகம்புல்லின் புனிதமான வாசனையிலும் 
சந்தனத்தின் மஞ்சளிலும் பால் 
அபிஷேகத்தில் என்றும் உறைபவரும்
ஆனையின் வடிவமானவர் என்
உடனிருக்கு எப்பயமும் எனக்கில்லை. 2

வான் மதியின் முழு ஒளியையும்
தன் கண்களினுள் அடக்கி
ஆகாயம் போன்ற பரந்த மனதைக் கொண்டவரும்
தீ போன்று அசுரருக்கு கனலாயிருப்பவரும்
காற்றைப்போன்று எங்கும் கரைந்திருப்பவரும்
நிலத்தைப்போன்று நீண்டு வியாபித்திருப்பவரும்
நீரைப்போன்று நித்தியமாயிருப்பவரும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 3

எழில் கொஞ்சும் சோலையிலே
வண்டுகள் இடும் ரீங்காரத்தில் பிரணவத்தின்
பொருளாய் திகழ்பவரும்
வள்ளியை மணம் புரிய
முருகனுக்கு உதவிய ஆனை முகத்தவரும்
பார்வதியின் பாசத்திற்குரிய
பிள்ளையாரும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை 4


வியாசருக்கு தன் தந்தத்தை முறித்து
பார் போற்றும் பாரதம் மகாபாரதமாக
உருவெடுக்க உதவிய
வேத நாயகனாகிய விநாயகரும்
பிரம்மனின் மகள்களாகிய
கமலையையும் வல்லியையும் வல்லீஸ்வரர்
அருளால் கரம் பிடித்த கணபதியும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 5

முதற்படை வீடாகிய திருவண்ணாமலையில்
அருணாச்சலேஸ்வரரோடு திகழும்
அல்லல்போம் விநாயகரும்
இரண்டாம் படைவீட்டிற்குரிய விருத்தாச்சல
விருத்தகிரீஸ்வரருடன் உறையும் ஆழத்துப் பிள்ளையாரும்
எமனை ஈஸ்வரன் உøத்த மூன்றாவது படைவீடான
திருக்கடவூரில் உள்ள கள்ளவாரணப் பிள்ளையாரும்என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 6


நான்காவது படைவீடாகிய மதுரை மீனாட்சியம்மனுடன்
உள்ள முக்குறுணி விநாயகரான
சித்தி விநாயகரும் பிள்ளையார் பட்டி காசியை
ஐந்தாவது படைவீடாக கொண்ட
வலம்புரி விநாயகரும் துண்டி விநாயகரும்
ஆறாவது படைவீடான திருநாரையூரில்
அருள் பாலிக்கும் பொல்லாப் பிள்ளையாரும் என்
உடனிருக்க எப்பயமம் எனக்கில்லை. 7

மனிதனைப் போல இரு கரங்களைக்
கொண்ட கற்பக விநாயகரும்
வரங்களை வாரி வழங்கும்
வரதராஜ விநாயகரும்
நம்பியின் மூலம் திருமுறைகளை உலகுக்கு
வெளிப்படுத்திய வலம்புரி விநாயகரும்
தேவர்களுக்கு அமிர்த கலசத்தைக் கொடுத்தவரும் என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 8

ஈஸ்வரனின் புதல்வனே இன்பமாக
என்னுள் உறையும் ஐந்து கரத்தோனே
லம்போதர சுதனே உமைக்கு
உண்மையாயிருந்த உத்தமனே
முருகனுக்கு மூத்தவனே
மாயவனுக்கு மருமகனே
மூஷிக வாகனனே மோதகப் பிரியனே நீ என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை. 9

முக்காலமும் ஒரு காலமாய் முற்றாக
உணர்ந்த மூலப் பொருளோனே
எக்காலமும் அடியாருக்கு துணையாக
வருகின்ற சுந்தர விநாயகனே
ஆலமர்ச் செல்வனின் புதல்வனே
பூவற்கரையில் அருள் பாலி¬க்கும்
பூவற்கரைப் பிள்ளையாரே நீ என்
உடனிருக்க எப்பயமும் எனக்கில்லை 10

தாட்ஷா வர்மா

Wednesday, August 9, 2017

பீகாரைக் கைப்பற்றிய பிஜேபி


பாரதீய ஜனதாக் கட்சியை எதிர்க்கும் பலமான கட்சிகளைப் பலவீனப்படுத்தி சிதைத்து ஆட்சியை பிடிக்கும் ராஜதந்திரத்தைக் கனகச்சிதமாக அரங்கேற்றி வருகிறது மோடி, அமித்ஷா கூட்டணி.  பாரதீய ஆட்சியில் இல்லாத மாநிலங்களில்  மூக்கை நுழைத்து அங்கு  தமது ஆதிக்கத்தை இவர்கள் நிலை நாட்டுகிறார்கள். ஜெயலலிதா உயிருடன் இருக்கும் வரை வாலாட்டாது அமைதியாக இருந்த மோடி, அவர் இறந்ததும் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தை மூன்றாக உடைத்துள்ளார்.எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர்ச்செல்வம்,தினகரன் ஆகிய மூவரின் தலைமையில் இயங்கும் நிர்வாகிகள் தமிழக மக்களைப்பற்றிக் கவலைப்படாது ஆட்சியைத்  தக்க வைப்பதற்கும்  ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும்  முயற்சிக்கிறார்கள். மோடி தலைமையிலான மத்திய அரசு இதற்குத் துணை போகிறது.


காங்கிரஸின்  ஆட்சியில் உள்ள புதுவையில் பாரதிய ஜனதாவின் முகவர்  போல் செயற்படும்  ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயனசாமிக்குக்  குடைச்சல் கொடுக்கிறார். பாரதீய ஜனதாக் கட்சி வடமாநிலங்களிலும்  இதே கொள்கையைக் கடைப்பிடிக்கிறது. பீகாரில் எதிர்க்கட்சியாக இருந்த பாரதீய ஜனதா அங்கு ஆட்சியைக் கைப்பற்றுவதில் வெற்றி பெற்றுள்ளது. லல்லு பிரசாத் யாதவ்,  சோனியா ஆகியோரின் ஆதரவுடன் பீகார் மாநில முதல்வராக நிதிஷ்குமார் பதவி ஏற்றார். லல்லுவின் இளைய மகன்   தேஜஸ்வி துணை முதல்வரானார் லல்லுவின் குடும்பத்துக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறை அதிரடிச்சோதனை நடத்தியது.   அவர்களுக்குக் கிடைத்த ஆவணங்களின் அடிப்படையில் லல்லு,  தேஜஸ்வி ஆகியோரின் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஊழல் செய்த  துணை முதல்வர் தேஜஸ்வியைப் பதவி விலகும்படி முதலமைச்சர்  நிதிஷ்குமார் வேண்டுகோள் விடுத்தார். வெளிப்படையாகப் பார்த்தால் நிதிஷ்குமார் ஊழலுக்கு எதிரானவர் போன்ற தோற்றம்  ஏற்படும்.
நிதிஷ்குமாருடன் கூட்டணி அமைத்து தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முன்பே லல்லுகுடும்பத்தின் ஊழல் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.  அதெல்லவற்றையும் தெரிந்து கொண்டுதான் நிதிஷ்குமார் லல்லுவுடன்  கூட்டணி அமைத்து முதலமைச்சரானார். நிதிஷ்குமாரின் இன்றைய அறிக்கையைப் பார்த்தால்  லல்லுவின் மகன் இந்த ஆட்சியில் ஊழல் செய்தது போன்ற  தோற்றம் ஏற்பட்டுள்ளது. தனது  வேண்டுகோளை  துணை முதலமைச்சர் தேஜஸ்வி ஏற்றுக்கொள்ளாததால் முதலமைச்சர் நிதிஷ்குமார் இராஜினாமா செய்தார். நிதிஷ்குமார் இராஜினாமா செய்த அடுத்த நொடியில் பாரதீய ஜனதா  கைகொடுத்தது. இதன் மூலம் அவருடைய  இராஜினாமா நாடகத்தின் பின்னணியில் பாரதீய ஜனதா  இருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.   பிரதமர் வேட்பாளராக மோடி முன்னிறுத்தப்பட்டதும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய நிதிஷ்குமார் சோனியாவுடனும் லல்லுவுடனும் கைகோர்த்து  பீகார் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சரானார்.  தான் எதிர்த்த மோடியின் ஆதரவுடன் இப்போது  மீண்டும் முதலமைச்சராகியுள்ளார்.


பீகார் சட்டசபைத் தேர்தல் 2015  ஆமாண்டு நடைபெற்றது.  அப்போது லல்லுவின் ராஷ்ட்டிய 80  தொகுதிகளிலும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 71  தொகுதிகளிலும், சோனியா தலைமயிலான காங்கிரஸ்  27  தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இக் கூட்டணியை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி 58 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாரதீய ஜனதா  53  தொகுதிகளில் வெற்றி பெற்று நான்காவது இடத்த்தைப் பெற்றது.  பீகாரில் லல்லுவின் செலவாக்கு இன்னமும் குறையவில்லை.  அதிகளவான தொகுதிகளை லல்லுவின் கட்சியே பெற்றது. என்றாலும் அரசியல் சிக்கல் காரணமாக முதலமைச்சர் பதவியை நிதிஷ்குமாருக்கு அவர் விட்டுக் கொடுத்தார்.

காங்கிரஸ் கட்சி மத்தியில்  ஆட்சியில் இருந்தபோது ரயில்வே அமைச்சராக லல்லு பதவி வகித்தார். அப்போது அவர்  செய்த ஊழல் பற்றிய ஆவணங்களை தூசு தட்டிய பாரதீய ஜனதா அல்லுவின் மீதும் அவருடைய மகன் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. கூவத்தூர் கூத்து, குட்க விற்பனைக்கான இலஞ்சம், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பண விநியோகம் போன்றவை தமிழகத்தில் நடைபெறுவதை  பாரதீய ஜனதா கண்டுகொள்ளவில்லை. பாரதீய ஜனதாவுக்கு அடிமையான கட்சி தமிழகத்தை ஆட்சி  செய்கிறது. பாரதீய ஜனதாவை  எதிர்க்கும் கூட்டணி பீகாரில் ஆட்சியில் இருக்கிறது. அங்கும் தான் விரும்பியவாறு பாரதீய ஜனதா ஆட்சியை கைப்பற்றியுள்ளது.
பீகாரை பாரதீய  ஜனதா குறிவைத்ததும், பிரதமர் மோடிக்கும் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்தது. நிதிஷ்குமாரின் மதுவிலக்குக் கொள்கைக்கு மோடி பாராட்டுத் தெரிவித்தார். மோடி அரசின் பணமதிப்பு கொள்கையை எதிர்க்கட்சிகள் அனைத்தும் கடுமையாக எதிர்த்தன. நிதிஷ்குமார் அதற்கு ஆதரவு தெரிவித்தார். துணை ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் எதிர்க்கட்சிகளின்  கூடடத்தில்  நிதிஷ்குமார் கலந்து கொள்ளாமல் தனது பிரதிநிதியை அனுப்பி  வைத்தார்.இதேவேளை லல்லுவுக்கும் நிதிஷ்குமருக்குமான உறவில் விரிசல் ஆரம்பமானது.  பீகாரில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்ற லல்லுவின்  குற்றச்சாட்டு இதில் முதன்மையானது. 

பீகாரின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்ததாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். அவரின் முடிவில் யாருடைய நலன் மிகுந்திருப்பதென்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. ராகுல்காந்தி காந்தி நிதிஷ்குமாரை அழைத்துப் பேசியும் அவர் மசிந்து கொடுக்கவில்லை. நிதிஷ்குமாரை முதல்வராக்கிய லல்லுவும் சோனியாவும் எதுவும் செய்ய முடியாத நிலையில் கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர். ஜனநாயக முறைப்படி மக்கள் விரும்பி ஆட்சி அமைப்பார்கள். அரசியல்வாதிகள் தமது விருப்பத்துக்கேற்ப ஆட்சியை  மாற்றுவார்கள். தமிழகத்தில் நடைபெறும்  அதே கூத்துத் தான் பீகாரிலும் நடைபெறுகிறது.

நிதிஷ்குமார் தனது விருப்பப்படி பீகாரில் ஆட்சியை மாற்றி அமைத்ததை ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சரத் யாதவ் விரும்பவில்லை. நிதிஷ்குமாருக்கு பீகாரில்  மட்டும் தான் செல்வாக்கு உள்ளது. அடுத்து வரும் தேர்தல்களில் தனித்து போட்டியிட்டு ஆட்சி அமைக்கும் பலமும் அவருக்கு இல்லை.தேசிய அளவில் அவருக்கு செல்வாக்கில்லை. பீகாரில் உள்ள கட்சித் தொண்டர்களும்  நிதிஷ்குமாரின் அணி மாற்றத்தை விரும்பவில்லை. அவருக்கு எதிரான போராட்டங்கள் சிறியளவில் நடைபெறுகின்றன.அடுத்த தேர்தல் வரும் வரை நிதிஷ்குமாரின் பதவிக்கு ஆபத்தில்லை.

சூரன்.ஏ.ரவிவர்மா

Wednesday, August 2, 2017

அது எங்கட காலம்


எழுத்தாளர், வானொலி ஊடகவியலாளர், விமர்சகர், இலக்கியவாதி,  வாசகர் என பன்முக ஆளுமைகளைக் கொண்டவர்  கானா பிரபா. ஒவ்வொரு துறையும் ஒரு சமுத்திரம். அந்தச்சமுத்திரங்களில் குதிக்காலை நனைத்துவிட்டு பெருமை பேசுபவர்களின் மத்தியில் ஆழ்கடலுக்குள் மூழ்கி முத்துக்களை வெளியில்  கொண்டுவருபவர் கானா பிரபா. அவர் தனது மாணவப் பருவ வாழ்வியலை " அது எங்கட காலம்" என்ற நூலின் வாயிலாகத் தந்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் வாழும் அவர்  "அது எங்கட காலம்" - தாயகத்து நினைவுகளை இரை மீட்கும் ஊர்க் குருவியின் பதிவுகள் மூலம் தனது மாணவப் பருவத்து ஐந்து அனுபவங்களையும், தான் சந்தித்த தன்னை வழி நடத்திய ஒன்பது மனிதர்களையும், சந்தோசமாக குடும்பத்துடன்கொண்டாடிய ஐந்து விழாக்களையும் 21  தலைப்புகளில் நினைவுபடுத்தியுள்ளார். அப்படி ஒருகாலம் எல்லோருக்கும் இருக்கிறது. சுகமான நினைவுகளை உறவினர்களுடனும்  நண்பர்களுடனும் பகிர்ந்துகொண்டு காலத்தைக்  கடத்துவார்கள். ஆனால்,கானா பிரபா அதனைப் புத்தகமாக்கி வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டுள்ளார். அது எங்கட காலம் எனும்  இப் புத்தகம் கானா பிரபாவின் சுயசரிதையின் ஒரு பாகம் என்றும் கூறலாம். காந்தி, கண்ணதாசன் போறவர்கள் உண்மையை அழுத்தி கூறியது போன்று கானாவும் கலப்படமற்ற உண்மையைத் தந்துள்ளார். 
என் இனிய மாம்பழமே
என் இனிய மாம்பழமே எனும்தலைப்பில் மாமரத்தின் சரித்திரத்தைப் பகிர்ந்துள்ளார். இதனைப் படித்து முடித்ததும். பாடசாலைக் காலத்தில் மாங்காய்,,புளியங்காய்,நெல்லிக்காய், விளாங்காய், இலந்தைப்பழம்  போன்றவற்றை திருடிய  ஞாபகம் வந்து போவதைத் தவிர்க்க முடியாது.  புட்டுடன் மாம்பழத்தைச் சேர்த்து சாப்பிட்ட அனுபவத்தை கானா பிரபா சொல்லும் போது நமக்கும் அந்த அனுபவம் ஏற்படுகிறது. விலாட்டு,அம்பலவி,செம்பட்டான்,சீலம்,கறுத்தக்கொழும்பான்,வெள்ளைக்கொழும்பான்,பாண்டி,பச்சைத்தண்ணி [பச்சை தின்னி],கிளிச்சொண்டு ஆகிய மாம்பழங்களின் சுவை எப்படி இருக்கும்.வடிவம் எப்படி இருக்கும். அவற்றைப் பழுக்க வைக்கும் முறைகள் போன்றவற்றை அனுபவித்து விபரித்துள்ளார்.
புளி மாங்காய்  தக்காளி,கத்தரி,கருவாட்டு தீயல் சோதி என்பவற்றை ருசியாக்கும். உப்பும் மிளகாய்த்தூளும்கலந்து  சாப்பிட  ருசியான மாங்காய்   கடித்துச்சப்பிடும் மாங்காய்,சுவரில் குத்தி உடைத்துச்சாப்பிடும் மாங்காய் என மாங்காய்களை வகைபடுத்தி சுவையை அனுபவிக்கத்துண்டும் வகையில் தந்துள்ளார். மங்க்கொட்டைகளின் வடிவம். அவற்றுடன் இணைந்த விளையாட்டுக்கள் என்பனவற்றை கானா பிரபா மனதில் நிறுத்துகிறார். செங்கை ஆழியான், கல்கி, சாந்தன் ஆகியோர்  மாம்பழம் பற்றி சொன்னதையும் கோடிட்டுக் காட்டியுள்ளார். கானா பிரபாவின் முதல் வருமானம் அம்மம்மாவுடன் இணைந்து விற்ற  மாங்காய்கள்.  அவரது முதல் முதலாவது முதலீடு ராணி காமிக்ஸ், மல்லிகை, கமலம் பிரசுரம், யாழ். இலக்கிய வட்ட வெளியீடுகள் என மனம் திறந்து சொல்லியுள்ளார்.
உயரே மாமரக்  கொப்புகளூடே கடந்து நிலத்தில் தெறித்துத் திசைக்கொன்றாய் சிதறியோடும் வெம்பல் மாங்க்காய்யாய் எம் சமூகம் எனத் தனது மாம்பழ அனுபவங்களை நிறைவு செய்துள்ளார் கானா பிரபா.   சகல கட்டுரைகளிலும் அவர் பதிந்திருக்கும் முத்தாய்ப்பு மனதை நெருடுகிறது.
வருசப்பிறப்பு வந்துட்டுது
   வருஷம் பிறக்கப்போகுதென்றால் வீடும் கோயிலும் எப்படி இருக்கும் என்பதை கானா பிரபா மனதில் உலாவ விட்டுள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பே வீட்டின் தூசியைத் தட்டி துப்புரவாக்கி,  வீட்டைக் கழுவும்   சடங்கால் நடைபெறும் சம்பவங்களை அழகாகக் கண் முன் கொண்டுவந்து நிறுத்தியுள்ளார்.  வருசப்பிறப்பின் முக்கியத்துவங்களில் மருத்து நீரும் அடக்கம். மருத்து நீர் வாங்குவது, தலையில் வைத்து தோய்வது, புதிய உடுப்பு போடுவது, கைவிசேஷம் கொடுப்பது வாங்குவது, உறவினர்களின் வீடுகளுக்குப் போவது என எல்லாவற்றையும் அசைபோட வைத்துள்ளார் கானா பிரபா.
வீடு காயுமட்டும் அறையளுக்குள்ளை போகேலாது எண்டு பயங்கரவாத தடுப்புச்சட்டம் போட்டு விடுவினம்.  பலாலிப் பக்கமா ஒரு  பொம்பர் போகுது இண்டைக்கு அவங்களுக்கும் கொண்டாட்ட நாள் தானே  என அன்றைய யுத்த காலத்தையும் கானா பிரபா நினைவு படுத்தியுள்ளார்.
நான்கு வருஷங்களுக்குப் பின்னால் ஆமிக்காறனிடம் தப்ப நாட்டை விட்டு ஓடி, ரஷ்யாவின் பணி வனாந்தரத்தில் ஏஜென்சிக்காரனால் கைவிடப்பட்டு அனாதையாய் செத்துப் போவோம் என்ற தன் விதியை  உணராத சுதா என்னை சைக்கிள் பாறில் வைத்துக் கொண்டே பெடலை வலிக்கிறான். எதிர்க்காத்து மூஞ்சையில் அடிக்குது.
அன்று நாங்கள் நிறையச் சிரித்துக்கொண்டிருந்தோம். மிச்சம் ஏதும் வைக்காமல்.............
என கானா பிரபா முடிக்கும் போது வருஷப்பிறப்பின் சந்தோஷத்தை அனுபவிக்க முடியாதுள்ளது.
 செய்யது பீடியும் இந்தியன் ஆமியும்
இந்தய இராணுவம் வட கிழக்கில் நிலை கொண்டிருந்தகாலத்தில் பட்ட துன்ப துயரம்  ஒருபுறம் இருக்க வேடிக்கையான வினோதமான பல அனுபவங்களும் எமக்குக் கிட்டின. அதில் ஒன்றுதான் செய்து பீடியும் இந்தியன் ஆமியும். பீடி, சிகரெட் என்ற பொதுவான  பெயர்களை மட்டும் அறிந்துள்ள சிறுவர்கள் அவற்றின் வித்தியாசங்களை அறிந்திருக்கவில்லை. தமிழும் ஆங்கிலமும் தெரியாத இந்திய ஆமியுடன் மல்லுக்கட்டியகாலம் அது.
வாசிகசாலைக்குப் போய்விட்டுத் திரும்பும்போது இந்திய ஆமியிடம் அகப்பட்ட அனுபவத்தை அற்புதமாகச்சொல்லியுள்ளார் கானா பிரபா. கானாவை மறித்த சீக்கிய ஆமிக்காரன் பீடி வாங்கிவரும்படி பத்து ரூபாவைக் கொடுக்கிறான். பீடியைப்பற்றிய மேலதிக விபரம் தெரியாத கானா பிரபா கடைக்காரன் கொடுத்த  பீடிக்கட்டை ஆமியிடம் கொடுக்கிறார். கானா கொடுத்தது ஆர்விஜி  பீடி அந்த பீடியை சீக்கிய  ஆமிக்காரன் புகைப்பதில்லை.  அவன் தன்னிடம் இருந்த பீடிக்கட்டின் சரையைக் காடுகிறான். அது செய்து பீடி. கடைக்காரரிடம் விபரத்தைக் கூறியபோது செய்யது பீடி விற்பதில்லை. அது பெரியகடையில் கிடைக்கும் என்பதால் கொஞ்ச தூரம் போய் வாங்கிவந்து கொடுத்தார்.
கானா பிரபா படித்த பாடசாலையில் ஒரு பகுதி இராணுவ முகமாக இருந்தது.  போட்டிக்கு மாடியில் ஏறி விழுந்து முழங்காலில் காயமடைந்த போது அங்கு வந்த இந்திய ஆமிக்காரன் மருந்து கட்டிவிட்டான். அப்போதுதான் ஆமிக்காரரில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்ற  உணர்வு வந்தது. யுத்த காலத்தில் பிரபா என்ற பெயர் எவ்வளவு கொடுமையானது என்பதையும் கானா  பிரபா தெரிவித்துள்ளார்.
அப்பாவின் பி எஸ் ஏ சைக்கிள் இராணுவத்தின் சுற்றி வளைப்பு சோதனை தாக்குதல் என்பனவற்றையும்  கண்முன் கொண்டு வந்து  நிருத்துகிறார் கானா பிரபா.
வெடி கொளுத்தி ஒரு ஊர்ப் பொங்கல்
பொங்கலுக்குத் தேவையான சாமான்களுடன் வெடியும் முக்கிய இடத்தைப் பிதிக்கும். சிறுவர்களின் கையில் வெடியைக் கொடுக்கமாட்டார்கள். கானா பிரபாவின் வீட்டிலும் அவரின் கையில் இனிப்பைக் கொடுத்துவிட்டு அண்ணனின் கையில் வெடியைக் கொடுப்பார்கள். பெரியவனானதும் வெடியுடன் தனக்கிருந்த தொடர்புகளை இக்கட்டுரையில் பதிவிட்டுள்ளார். வட்டப்பெட்டி,சரவெடி, மத்தாப்பு, பூந்திரி [கை மத்தாப்பு], ஈர்ற்க்கில்  வாணம் [ஈர்ற்கு  வாணம்], அட்டை வாணம் [சக்கர  வாணம்] என தான் கொளுத்தி மகிழ்ந்த  வெடிகளைப் பகிர்ந்துள்ளார். சம்பியன்,யானை,ஜம்போ , அனுமான் ஹனுமான் வெடியை இப்படித்தான் சொல்வார்கள். என வெடிகளின் வகைகளையும் பட்டியலிடுகிறார்.
நாயின் மீது றோட்டால் போராவர்கள் மீது  வெடிகொளுத்திப் போட்ட மகிழ்ந்த குறும்பை  மீண்டும் மனதில் நிலை நிறுத்தியுள்ளார். மண்ணெண்ணை பரலுக்குள் வெடிகொளுத்திப்போட்டதையும் புதிய புதிய கண்டுபிடிப்புகளுடன் வெடி கொளுத்திய அனுபவத்தை  விபரமாகத் தந்துள்ளார்.  வெடிக்காத வெடிகளைப் பொறுக்கி நூலை அவிழ்த்து அவற்றை எரிப்பதும் ஒரு சந்தோசம்தான்.
சிரட்டை, ரின்பால் பேணி என்பனவற்றைக் கவிழ்த்து வைத்து வெடியைக் கொளுத்தும்போது அவை உயரே பறக்கும். கண்ணி வெடியின் முன்னோடி  அது என்பது அப்போது யாருக்கும் தெரியாது. வட கிழக்கில் வேடிக்குத் தடை விதித்த போது போலியாக வெடி கொளுத்தி மகிந்ததை கானா பிரபா பகிர்ந்துள்ளார்.
காகங்களுக்கு படையல் இருக்கும்.ஆனால் அவை ஒழுங்காகச் சாப்பிட உந்த வெடி வெடிக்கிறவங்கள்  விட்டால் தானே  என இக்கட்டுரையை முடிக்கிறார்.
தேரடியில் தேசிகனைக் கண்டேன்
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த சித்தர்களைப் பற்றிய சிறு குறிப்பு. இந்தச்சித்தர்களைப் பற்றிய பதிவுகள்  சரியான  முறையில் மக்களிடம் கொண்டு செல்லப்படவில்லை. தன்னுடைய வாசகர்களுக்கு சித்தர்களை அறிமுகப்படுத்தும் பணியை  கானா பிரபா செய்துள்ளார். அவருடைய வெற்றிகளுக்கு சித்தர்களுடைய ஆசியும் ஒரு காரணமாக இருக்கலாம்.  சித்தர்கள் குடிகொண்டிருக்கும் தலமாகையால் நல்லாரின் சிறப்பை உலகம் போற்றுகிறது. நல்லூர்  ஆலயத் திருவிழாவுக்கு இலட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். அங்குள்ள சித்தர்களை வணங்குபவர்களின் தொகையை விரல் விட்டு எண்ணிவிடலாம்.
எங்கட பள்ளிக்கூடம் வந்த கொம்பியூட்டர்
புதியவை அறிமுகமாகும் போது அதற்கு இருக்கும் மதிப்பும் மவுசும்  காலப்போக்கில் அல்லாமல் போவதை எங்கட பள்ளிக்கூடம் வந்த கொம்பியூட்டரில் விபரித்துள்ளார் கானா பிரபா. கொம்பியூட்டர் அறிமுகமனபோது அதனைப் பார்த்தாலே புண்ணியம் என்ற கருத்து நிலவியது. கானா பிரபா படித்த பாடசாலைக்கு வந்த கொம்பியூட்டரைப் பார்ப்பதற்கு அவரும் நண்பர்களும் பட்ட அவஸ்தைகளை விபரித்துள்ளார் கணக்கிலும் ஆங்கிலத்திலும் எண்பது மாக்ஸ் எடுத்தாத்தான் கொம்பியூட்டர்  படிக்கலாம் என்று அதிபர் அறிவித்ததும் கானா பிரபாவின் ஆசையில் மண் விழுந்தது. அவுஸ்திரேலியாவில் கொம்பியூட்டர்  வாங்கியதையும் அதனை எப்படிப் பாவித்தது என்பதையும் விபரமாகத் தந்துள்ளார். கொம்பியூட்டர் இன்று இல்லாத வீடு இல்லை என்பதையும் பதிந்துள்ளார்.
மண்ணெண்ணெயில் பார்த்த படங்கள்
மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான சில பொருட்களை யுத்தத்தைக் காரணம் காட்டி யாழ்ப்பாணத்துக்கு கொண்டு  செல்வதை அரசாங்கம் தடை செய்திருந்தது.எரிபொருள் மின்சாரம் ஆகியன இல்லாமல் மக்கள் பட்ட துன்பங்களும் துயரங்களும் அதிகம். அவற்றை அவர்கள் எப்படிச் சமாளித்தார்கள் என்பதும் வரலாற்றுப் பதிவு தான். கலர் கலரான மண்ணெண்ணெய் சைக்கிள் டைனமோவில் ரேடியோவை இயக்குவது தண்ணிர் இறைக்கும் இயந்திரங்கள் ஜென்றேற்ரராக மாறியது அந்தக்காலம் வெளிவந்த சினிமாப்படங்கள் போன்றவற்றை கானா பிரபா  ஞாபகப்படுத்துகிறார்.
 சிவராத்திரி படக்காட்சி
சிவராத்திரியன்று கோயிலில் நித்திரை முழித்து நான்கு சாமப் பூசையில் பக்தியுடன் கலந்து கொள்ளு அடியவர்கள் ஒரு புறம் இருக்க அன்று நடைபெறும் நாடகங்களைப் பார்ப்பதற்கு ஒரு  கூட்டம் கோயிலுக்குச் செல்லும். தொலைக்காட்சிப் பேட்டி வீடியோ  டெக் ஆகியன வாடகைக்கு கொடுக்கும் தொழில் அறிமுகமானதும் சிவராத்திரியன்று  வீட்டில் படம் பார்ப்பவர்களின் தொகையும் அதிகரித்தது. சிவராத்திரியில் பார்த்த படங்கள் தானும் நண்பர்களும் நடித்த நாடகம் பற்றியும் கானா பிரபா விளக்கியுள்ளார்.
இலவசப் படக்காட்சி பின்னர் கட்டணம் வசூலிக்கும் கட்சியாக மாறியது. சினிமாத் தியேட்டர்கள் இல்லாமல் போனதால் மினிசினிமாக்கள் புற்றீசல்கள் போல் கிளம்பின. மினிசினிமாவில் படம் பார்க்கும் கானா பிராபாவின் ஆசையை கடைசிவரை அம்மா அனுமதிக்கவில்லை.

மணியண்ணை தேவராசா அண்ணை குடும்பம் அண்ணா கோப்பி நடராசா மாமா லைப்ரரி சேர் வரதராஜன் மாஸ்டர் சுந்தரப்பா அருட்செல்வம் மாஸ்டர் வீடு ஆகியன வற்றின் மூலம்    தான் சந்தித்து அனுபவித்தவைகளையும் தன்னை வழிநடத்தியவர்களை அறிமுகப்படுத்துகிறார்  கானா பிரபாவை புடம் போட்ட இடங்களை  எங்களூர் வாசிகசாலைகள் எனும் தலைப்பில் தந்துள்ளார். தீவாளி வருஷங்கள் விளையாட்டுப்போட்டியும் வினோத உடையும் மட்டுவண்டிச் சவாரிகள் அம்மம்மாவை நினைவூட்டும் மாட்டுப்பொங்கல் எங்கட கோயில் கொடியேறி விட்டுது ஆகிய தலைப்புக்களும் அந்தக்கால  ஞாபகங்களைத்  தொட்டுச்செல்கின்றன.

கானா பிரபாவின் மடத்துவாசல் பதிப்பகம் வெளியிட்ட இப்புத்தகத் துக்கு முன்னுரையை லெ.முருகபூபதியும்  அணிந்துரையை மதி கந்தசாமியும் வழங்கியுள்ளனர். அமரர் திருமதி அருண் விஜராணிக்கு இப்புத்தகத்தை கானா பிரபா சமர்ப்பித்துள்ளார். பழைய காலத்து  வீட்டின் முன்னால் ஒரு சிறுவன் சைக்கிளில் ஓடும் அட்டைப்படத்துடன் இப் புத்தகம் வெளிவந்துள்ளது..மடத்துவாசல் பிள்ளையார் வெளியிட்ட இப்புத்தகம்   கலாமணி பரணீதரனால்  வடிவமைக்கப்பட்டு  பரணீ   அச்சகத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது.