Tuesday, May 31, 2016

அதிகாரப் போட்டியில் சிக்கிய மாகாணசபைகள்!


மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாகாணசபைகளின் அதிகாரங்களை முடக்குவதற்கென மத்திய அரசால் நியமிக்கப்படுபவர்தான் ஆளுநர். இந்திய அரசாங்கத்தில் இதுவரை காலமும் நிலவிய இந்த நிர்வாகச் சிக்கல் இப்போ இலங்கையிலும் அரங்கேறத் தொடங்கிவிட்டது. அரசாங்கத்தின் தலையாட்டிப் பொம்மைகளாக இருக்கும் ஆளுநர்களின் செயற்பாடுகளினால் இந்திய அரசியலில் பல நிர்வாகச் சிக்கல்கள் உருவாகின. ஆளுநர்களின் பரிந்துரையினால் மக்களால் தெரிவு செய்யப்பட்ட மாநில அரசுகளின் பதவிக்காலம் இடை நடுவில் பிடுங்கப்பட்டன. இந்தியாவின் ஆலோசனையுடன் இலங்கையில் நடைமுறையில் இருக்கும் மாகாணசபையிலும் ஆளுநரின் அதிகாரம் அதிகளவில் இருக்கிறது.
வடமாகாணசபை இல்லாதபோது ஆளுநரின் அதிகாரம் பற்றி எதுவுமே தெரியவில்லை. மஹிந்த ஜனாதிபதியாக இருந்தபோது பதவியில் இருந்த முதலமைச்சர்கள் அனைவரும் தலையாட்டிப் பொம்மைகளாகவே இருந்தனர். அப்போது ஆளுநரைப் பற்றிய செய்திகள் பெரியளவில் வெளிவரவில்லை. முன்னாள் இராணுவ அதிகாரிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். ஏனைய மாகாணங்களுக்கு முன்னாள் அரசியல்வாதிகள் ஆளுநர்களாக நியமனம் பெற்றார்கள். வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒருவித இராணுவக் கட்டமைப்பில் வைத்திருக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கம். இராணுவ உடையைக் களைந்து ஆளுநர் உடைக்கு மாறிய அதிகாரிகளின் மனநிலை இராணுவக் கட்டமைப்பில் இருந்து விலகவில்லை. இதனால் சிவில் நிர்வாகத்தினுள் இராணுவத்தின் கை ஓங்கியது.
இராணுவத்துக்குக் கட்டைளை இடும் அதிகாரிகளால் சிவில் நிர்வாகத்துக்கு கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. வடமாகாணசபைத் தேர்தலின் போது ஆளுனரை மாற்றுவது முக்கிய இடம் வகுத்தது. ஆளுனரை மாற்றுவதற்கு வடமாகாண மக்கள் பெருவிருப்பத்துடன் வாக்களித்தார்கள். அன்றைய ஜனாதிபதியின் விருப்பத்துக்கமைய ஆளுநர் தொடர்ந்தும் பதவியில் நீடித்தார். வடமாகாண முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையிலான இழுபறியினால் நிர்வகச்சிக்கல் உருவானது. வடமாகாண மக்களுடனும் வடமாகாண அரசுடனும் இணக்கமாகச் செயல்பட வேண்டிய ஆளுநர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முக்கியமான சில முடிவுகளை இழுத்தடித்தார். நல்லிணக்கம் என்ற பெயருடன் புதிய அரசு பதவி ஏற்ற பின்னர் ஆளுநராகக் கடமையாற்றிய முன்னாள் இராணுவ அதிகாரி மாற்றப்பட்டார். முதலில் பள்ளிக்கர வந்தார் இப்போது ரெஜினோல்ட் கூரே வடமாகாண ஆளுநராகக் கடமையாற்றுகிறார். இவர் மேல்மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர். அப்போது இவருக்கும் ஆளுநருக்கும் இடையில் எதுவித முரண்பாடும் தோன்றவில்லை.
வடமாகாண சபையின் ஆளுநர் மாற்றப்பட்டாரே தவிர ஆளுனரின் மேலாதிக்கம் மறையவில்லை. அவரும் தன்னிச்சையாக பல காரியங்களை தொடருகிறார். வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், இது பற்றி ஜனாதிபதி மைத்திரியின் கவனத்துக்குக் கொண்டுவந்துள்ளார். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், மிகப்பிரமாண்டமான புத்தர் சிலைகள் காடு அழிப்பு என்பன தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவை எதுவுமே ஆளுநரின் கண்களுக்குத் தெரிவதில்லை. வடமாகாண முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையிலான பனிப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. வடமாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் இடையில் எதுவித தொடர்பும் இல்லை என்பதுபோலவே கிழக்கு மாகாண சபை செயற்படுகிறது.
கிழக்கு மாகாண முதலமைச்சருக்கும் கடற்படை அதிகாரிக்கு இடையிலான பிரச்சினை இன்று பூதாகரமாக வெடித்துக் கிளம்பி உள்ளது. கடற்படயினர் சம்பூரில் உள்ள பாடசாலை ஒன்றில் உதவி வழங்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்தார்கள். அமெரிக்கத் தூதுவர், ஆளுநர் கடற்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் காபிஸ் நசீர் அஹமட்டுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அந்த வைபவத்துக்கு சென்ற கிழக்கு மாகாண முதலமைச்சர் கடற்படை அதிகாரியையும் ஆளுநரையும் திட்டித் தீர்த்து தனது கோபத்தை வெளிக்காட்டினார்.
இனவாதத்தை மிகைப்படுத்துபவர்களுக்கு இந்தச்சம்பவம் தேனாக அமைந்துள்ளது. கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராக இனவாத சக்திகள் ஒன்று கூடியுள்ளன. மாகாண சபையின் அதிகாரங்கள் எல்லாவற்றையும் காலில் மிதித்து கிழக்குமாகாண முதலமைச்சருக்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. சிங்கள கடற்படை அதிகாரியா முஸ்லிம் முதலமைச்சரா மேலானவர் என்ற கருத்தியல் முன்வைக்கப்பட்டுள்ளது. வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள படையினர் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர் மக்களுக்கு படையினர் உதவி செய்கிறார்கள் என்ற கோதாவில் சில வைபவங்களில் படையினரின் தலையீடு அதிகமாக உள்ளது. இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்பதற்காக வடமாகாண சபை ஆளுநருடன் சில சமயங்களில் முரண்படுகிறது. கிழக்கு மாகாண முதலமைச்சர் காரசாரமாக தனது எதிர்ப்பை வெளிக்காட்டி உள்ளார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் கட்சி வாய் மூடி மெளனமாக இருக்கிறது. அது முதலமைச்சரை பலிக்கடா ஆக்கப் போகிறதா அல்லது ஆதரவுக்கரம் நீட்டப்போகிறதா என்பதற்கான விடை அது வாயைத் திறக்கும் போது தெரியவரும்.
துளியம்.கொம்

Saturday, May 28, 2016

ஆச்சரியப்படவைத்த ஜெயலலிதா

  
தமிழக முதலமைச்சராகஜெயலலிதா பொறுப்பேற்றபின்னர் ஜெயலலிதாவின் முதலாவது கையெழுத்து தமிழக மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தேர்தல் பரப்புரையின் போது அவரை வசைபாடிய  அரசியல் தலைவர்கள் அவரை வாழ்த்தியுள்ளனர்.  சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் ஆளுநர் ரோசையா முன்னிலையில் ஜெயலலிதா பதவியைப் பொறுப்பேற்றார்.

சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டுவிழா மண்டபம் ஜெயலலிதாவுக்கு ராசியான மண்டபமாகக் கருதப்படுகிறது. வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் இருந்து விடுதலையான பின்னர் இதே மண்டபத்தில்தான் ஜெயலலிதா பதவியைப் பொறுப்பேற்றார். பதவியைப் பொறுப்பேற்ற பின்னர் ஜெயலலிதா முதலில் என்ன செய்வார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தாம் முதலமைச்சரானால்  மதுவிலக்குத்தான் முதலாவது கை எழுத்து என்று கருணாநிதியும் அன்புமணியும் தேர்தல் பிரசாரத்தின் போது தெரிவித்திருந்தார்கள். படிப்படியாக மதுவிலக்கு அமுல் படுத்தப்படும் என்று ஜெயலலிதா கூறியிருந்தார்.

 ஜெயலலிதாவின் பதவி ஏற்புவிழாவில் எதிர்பார்த்த  ஆடம்பரங்கள் எவையும் இருக்கவில்லை. கட் அவுட் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. வெற்றி பெற்ற சந்தோசத்தில் கட் அவுட்களால் சென்னை திக்குமுக்காடும் என எதிர்பார்த்திருந்தவர்கள் எமாற்றமடைந்தார்கள். காலில் விழும் கலசாரமும்  முடிவுக்கு வந்துள்ளது. அமைச்சர்கள் பதவி ஏற்கும் போது யாரும் காலில் விழக்கூடாது என கண்டிப்பான உத்தரவு போடப்பட்டது. அதையும் மீறி செல்லூர் ராஜா காலில் விழுந்தார். ஜெயலலிதாவின் கோபப்பார்வை மற்றவர்களை அடக்கி விட்டது.
 ஜெயலலிதா சிறையில் இருந்தபோது பன்னீர்ச்செலம்தலைமையில் பதவி ஏற்ற அமைச்சர்கள் அழுது குழறி அட்டகாசம் செய்தார்கள். இப்போதைய பதவி ஏற்பு விழாவில் அனைவரும் ஜெயலலிதாவின் கட்டளைக்கு இணங்க காலில் விழவில்லை. ஒருவர் மட்டும்  விழுந்தார் அது தவறெனத் தெரிந்ததும் மற்றையவர்கள் காலில் விழ முயற்சிக்கவில்லை.

தமிழக அமைச்சர்கள் ஜெயலலிதாவின் காலில் விழுவதும்,  அவருக்கு வைக்கப்படும் கட்  அவுட்களும் எதிர் மறையான விமர்சனங்களை உருவாக்குகின்றன. இதனை உணர்ந்த ஜெயலலிதா இந்த இரண்டையும் இம்முறை ஒழித்துவிட்டார்.. பதவி ஏற்புவிழாவைப்பற்றிய சர்ச்சைகள்  எவையும் வெளிவரக்கூடாது என்பதில் ஜெயலலிதா மிகக்கவனமாக இருந்துள்ளார். இதில் அவர் வெற்றி பெற்றுள்ளார். சொன்னீர்களே செய்தீர்களா என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் விளம்பரத்துக்குப் பதிலடியாக தேர்தல் சமயத்தில் கொடுத்த ஐந்து வாக்குறுதிகளை நிறைவேற்ற கையெழுத்திட்டார். யாரும் எதிர் பார்க்காத வகையில் குடிமகன்களுக்கு முட்டுக்கட்டை போட்டார். 500 சிறிய மதுபானக்கடைகள் மூடப்படும். மதுபானக் கடைகளை திறக்கும் நேரம் தள்ளி வைக்கப்படுகிறது. இதுவரைகாலமும் 10 மணிக்கு திறக்கப்பட்ட மதுபானக் கடைகள் 12 மணிக்கு திறக்கப்பட்டு நள்ளிரவு 12 மணிக்கு பூட்டப்படும். தாலிக்கு 8 சவரண் பவுன் வழங்கபடும். விவசாயக்கடன் தள்ளுபடி. 100 யுனிட்டுக்குள் மின்சாரம் இலவசம் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச உணவு போன்ற அதிரடிகள் ஜெயலலிதாவின் மதிப்பை உயர்த்தியுள்ளன.

ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்ற நிகழ்ச்சியிலும்  அமைச்சரவை பதவியேற்பு விழாவிலும்   மு.க.ஸ்டாலின் தனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் கலந்து கொண்டார்.   பதவியேற்பு விழாவில் வேறு கட்சிகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், திரையுலகினர், பல்துறைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

ஸ்டாலினுடன் பொன்முடி, எ.வ.வேலு, கேபிபி சாமி, கு.பிச்சாண்டி, ப.ரங்கநாதன், கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், அன்பில் பொய்யாமொழி, பி.கே.சேகர்பாபு, கு.க செல்வம், சுதர்சனம், மு.க.மோகன், தாயகம் கவி உள்ளிட்ட அவரது கட்சி எம்.எல்.ஏக்களும் கலந்து கொண்டனர். ஜெயலலிதா பதவியேற்பில் ஸ்டாலின் கலந்து கொள்வது புதிதல்ல. ஏற்கனவே கடந்த 2002ம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றபோது அவரும், அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அன்பழகனும் கலந்து கொண்டனர் என்பது நினைவிருக்கலாம். அப்போது ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
   தேர்தலில் தோல்வியடைந்த சரத் குமாருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்கி ஸ்டாலினுக்கு  பின் வரிசையில் இடம் ஒதுக்கி ஜெயலலிதா பழி வாங்கிவிட்டார் என கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்

கருணாநிதியின் குற்றச்சாட்டை ஜெயலலிதா மறுத்துரைத்துள்ளார் திட்டமிடப்பட்ட பழி வாங்கல் என்பதை அவர் அழுத்தம் திருத்தமாக மறுத்துள்ளார். தனது பதவி ஏற்பு விழாவில் பங்கெடுத்த ஸ்டாலினுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார். தமிழக சட்ட சபையில் ஸ்டாலினுக்கு வணக்கம் செலுத்தினார். ஸ்டாலினும் பதிலுக்கு வணக்கம் தெரிவித்தார். இது வரை காலமும் ஸ்டாலினைக் கணக்கெடுக்காது இருந்த ஜெயலலிதாவின் பார்வை சற்று வித்தியாசகமாக உள்ளது. தமிழக சட்ட சபையில் கருணாநிதியைச் சந்திப்பதை ஜெயலலிதா தவிர்த்தார்.கருணாநிதி சத்தியப் பிரமாணம் செய்யும்போது ஜெயலலிதா வெளியேறிவிட்டார்.

தமிழக வளர்ச்சிக்காக திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து செயற்பட ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளார். தனது அரசியல் எதிரியான கருணாநிதியை ஒதுக்கு வைத்துவிட்டு ஸ்டாலினுடன் இணக்க அரசியல் செய்ய ஜெயலலிதா முன்வந்துள்ளார் போல் தெரிகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தவிர வேறு கட்சிகள் எவையும் தமிழகத்தில் இல்லை என்பதனால் மற்றைய கட்சிகளைப்பற்றி ஜெயலலிதா கவலைப்படவில்லை.

தமிழக சட்டசபைத் தேர்தலையொட்டி தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரிகள் மீண்டும் பழைய பொறுப்புகளுக்கு   இடமாற்றம் செய்யப்பட்டனர். சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக கரன் சின்ஹா நியமிக்கப்பட்டுள்ளார். ட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக மீண்டும் ஜே.கே.திரிபாதி நியமிக்கப்பட்டார். சென்னை மாநகர காவல்துறை ஆணையராக டி.கே.ராஜேந்திரன் திரும்பி வந்துள்ளார். கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபியாக சைலேந்திரபாபு நியமிக்கப்ட்டுள்ளார். உளவுத்துறை ஐ.ஜியாக சத்தியமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். அமலாக்கப் பிரிவு ஏடிபிஜியாக அசுதோஷ் சுக்லா நியமிக்கப்பட்டுள்ளார். கலக்டர்கள் சிலருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் இடமாற்றம் செய்யப்பட்டவர்களை தமிழக முதலமைச்சர் மீண்டும் தனது கட்டுப் பாட்டில் கொண்டு வந்துள்ளார். ஆட்சி மாறியிருந்தால் இவர்கள் தூக்கி அடிக்கப்பட்டிருப்பார்கள்.
 
இந்திய நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உள்ள நிலையில்,ராஜ்யசபாவிலும்நான்காவது பெரிய கட்சியாக உருவெடுக்கப்போகிறது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  கடந்த நாடாளுமன்றத்   தேர்தலில்பெரும் வெற்றியை பெற்று,அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், 37 எம்.பி.,க்கள் தேர்வுசெய்யப்பட்டனர்இதனால்பாரதீய ஜனதா,காங்கிரஸ் ஆகியவற்றுக்கு அடுத்து  மூன்றாவது பெரிய கட்சியாகஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.,உருவெடுத்துள்ளது


சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்றதன் மூலம்ராஜ்யசபாவில்நான்கு எம்.பி.,க்கள்,  கிடைக்கவுள்ளனர்ராஜ்யசபாவில்

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பலம், 13 ஆக உயரவுள்ளதுஇதனால்காங்.கிரஸ், - பாரதீய ஜனதா, சமாஜ்வாதி ஆகிய கட்சிகளுக்கு அடுத்துநான்காவது பெரிய கட்சியாகராஜ்யசபாவில்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உருவெடுக்க உள்ளது. நாடாளுமன்றத்தில் 37; ராஜ்யசபாவில், 13 என,மொத்தம்   50  நாடாளுமன்ற உருப்பினர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்குக்  கிடைக்கஉள்ளனர்.நாடாளுமன்ற வரலாற்றில்,தமிழகத்தைச் சேர்ந்த ஒரு கட்சிக்குஇவ்வளவு பெரிய கெளரவம் இதுவரைகிடைத்தது இல்லைஆனாலும்சபை நடவடிக்கைகளில்அண்ணா திராவிட முன்னேற்றக் கழகஉறுப்பினர்களின் பங்கேற்பு,ஏமாற்றம் அளிக்கும் வகையிலேயே உள்ளதுகடந்த இரண்டு ஆண்டுகளில்இரண்டு சபைகளிலுமே, அண்ணா திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள்எவரும் பாராட்டத்தக்க வகையில்ஜொலிக்கவில்லைசபை அலுவல்களில் ஆர்வமின்மைதலைமை மீதான அளவு கடந்த பயம் ஆகியவைகாரணங்கள் என்றாலும்மொழிப் பிரச்னை மிகப்பெரிய தடையாக உள்ளதுஇதனால்,பெரும்பாலானவர்கள் சபையில் பேச முடியாமல் தடுமாறுவது அப்பட்டமாகத் தெரிகிறது.  
இந்நிலையில் தான்தற்போதுராஜ்யசபாவிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் எண்ணிக்கை உயரவுள்ளது தமிழகத்தில் காலியாக உள்ள ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 15 மாநிலங்களில் இருந்து வரும் ஜூன்  ஓகஸ்ட் மாதங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலாவதியாக உள்ளது மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான இந்த தேர்தலில் தமிழகத்திலும் ஆறு பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் பதவி வரும் ஜூன் 29ஆம் திகதி காலியாக உள்ளன. ஜூன் 11 ஆம் திகதி தேர்தல் நடைபெற உள்ளது.

  . ஒரு ராஜ்யசபா உறுப்பினருக்கு  34 சட்டசபை உறுப்பினர்களின் வாக்கு தேவைஅண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மூன்று உறுப்பினர்களும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இரண்டு உறுப்பினர்களும் நிச்சயம். . ஒருவேளை, அரவக்குறிச்சி   தஞ்சாவூர் ஆகிய இரு தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஜெயித்தால் 4 உறுப்பினர்களை அக்கட்சியால் தேர்ந்தெடுக்க முடியும்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களாக   அக்கட்சியின் செய்தித்தொடர்பாளரான டி.கே.எஸ்.இளங்கோவன் , அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி  ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்களாக, நவநீதகிருஷ்ணன், ஏ.விஜயகுமார், எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் ஆகியோர் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பதவிக்காலம் முடிவடையும் நவநீதகிருஷ்ணனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.  வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன் சமீபத்தில் தமிழ் மாநில காங்கிரசில் இருந்து விலகி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்த மூத்த தலைவர். இதேபோல் ஆர்.வைத்திலிங்கம் சட்டசபைத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர்.. அதிகாரம் மிக்க ஐவர் அணியில் இருந்த வைத்தியலிங்கத்தின் அரசியல் அஸ்தமனமாகி விட்டது என அனைவரும் கருதிய நிலையில் அவருக்கு மீண்டும் ஜெயலலிதா வாழ்வளித்துள்ளார்.

ஜெயலலிதாவின் தலைமையில் தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிட வாசன் விரும்பினார் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட ஜெயலலிதா விடுத்த கோரிக்கையை நிராகரித்த வாசன் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்டு படுதோல்வியடைந்தார். காங்கிரஸில் இருந்து வாசனுடன் வெளியேறிய எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன் இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட வேண்டும் என விரும்பினார். ஜெயலலிதாவை விட்டு  வாசன் வெளியேறிய போது பாலச்சுப்பிரமணியன் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார்.வாசனுக்குக் கிடைக்க வேண்டிய எம்பி பதவி அவருடைய சகபாடியான பாலசுப்பிரமணியத்துக்குக் கிடைத்துவிட்டது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயற்பாடு திருப்திகரமாக இல்லை என்பதனால் அனுபவசாலியான பாலசுப்பிரமணியனின் மூலம் டில்லியில் தனது அரசியலை ஸ்திரப்படுத்த ஜெயலலிதா விரும்புகிறார்.  
நான்காவது பெரிய கட்சி என்ற பெருமையைராஜ்யசபாவில் பெறவுள்ள  அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம்., அதற்கு ஏற்ற வகையில் செயலாற்ற வேண்டிய கட்டாயம் உள்ளதுஅதற்குஏற்றாற்போல்ராஜ்யசபா நடவடிக்கைகளில் பழைய கம்பீரத்தை மீட்டெடுக்க ., தலைமை முன்வருமாஎன்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

வர்மா

Wednesday, May 25, 2016

முடங்கிப் போன மூன்றாவது அணி


தமிழக அரசியல் களத்தில்  அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் மாற்றீடான கட்சி எதுவும் இல்லை என்பதை தமிழக மக்கள் மீண்டும் ஒரு முறை  நிரூபித்துள்ளனர். ஜெயலலிதாவையும் கருணாநிதியையும் வீட்டுக்கு அனுப்பி வைப்போம் எனச் சபதம் எடுத்து மூன்றாவது அணியை அமைத்த தலைவர்கள் அனைவரும் மண்னைக் கெளவியுள்ளனர்.  திராவிட முன்னேற்றக்கழகத்துடன் விஜயகாந்த் இணைந்து தேர்தலில் போட்டியிட்டால் ஜெயலலிதா வெற்றி பெற முடியாது என்பது வெளிப்படையான உண்மை. இந்த யதார்த்தத்தைப் பொய்யாக்க வைகோ எடுத்த பெருமெடுப்பிலான முயற்சி எதிர் பார்த்தது போலவே தோல்வியடைந்தது.

கருணாநிதியும் விஜயகாந்தும் சேரக்கூடாது என்பதே ஜெயலலிதாவின் விருப்பம். ஜெயலலிதாவின் விருப்பத்தை வைகோ கனகச்சிதமாக நிறைவேற்றியுள்ளார்.. தமிழகத்தில்  கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என்ற தமிழக அரசியல் தலைவர்களின் விருப்பத்தை தமிழக மக்கள் நிராகரித்துவிட்டனர். முதலமைச்சர் வேட்பாளராகக் களம் இறங்கிய அன்புமணியும் விஜயகாந்தும் படு தோல்வியடைந்தனர், சினிமாவில் இருந்து அரசியலில் கால் பதித்த விஜயகாந்த், தமிழக அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக உருவெடுத்தார். கடந்த சட்ட மன்றத் தொடரில் எதிர்க்கட்சித் தலவராக வலம் வந்த விஜயகாந்த் இப்போது நடந்த தேர்தலில்  கட்டுப்பணத்தை இழந்து படு தோல்வியடந்தார்.

ஜெயலலிதாவுக்கு எதிராக மிகப்பிரமாண்டமான எதிர்ப்பு அலை எதுவும் இருக்கவில்லை. ஆனால்,ஜெயலலிதாவுக்கு எதிரான சிறியளவிலான எதிர்ப்பு இருந்தது, அந்த எதிர்ப்பை ஒரிடத்தில் குவித்து வெற்றிக்கான வியூகத்தை வகுக்க எதிர்க்கட்சித் தலைவர்கள் தவறிவிட்டனர். வைகோவால் வழிநடத்தப்பட்ட மக்கள் நகக் கூட்டணி கருணாநிதியை மூர்க்கமாக எதிர்த்தது. ஜெயலலிதாவுக்கு எதிராக மிக மோசமான விமர்சனங்களை மக்கள் நலக் கூட்டணி முன் வைக்கவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிழல் கட்சியே மக்கள் நலக் கூட்டணி என்ற கருத்து இருந்தது, தேர்தல் முடிவு அதனை மெய்ப்பிப்பது போல இருக்கிறது. வைகோவும்  திருமாவளவனும் இடது சாரிகளுடன் சேர்ந்து தேர்தலுக்கு முகம்  கொடுக்கப் போவதாக அறிவித்தபோது எந்தவித சந்தேகமும் தோன்றவில்லை. அப்போது மக்கள் நலக் கூட்டணியின் மீது மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. தமிழக முதலமைச்சராக வைகோவா  இடதுசாரித் தலைவர்களா என்ற கேள்வி எழுந்த போது தலித்துக்கு சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும் என வைகோவின்  குரல் ஒலித்தது. வைகோவின் விருப்பத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்தனர். கருணாநிதியும் ஜெயலலிதாவும் முதலமைச்சராவதற்கு இரத்தம் சிந்தி வேலை செய்த வைகோ, தமிழகத்தின் அடுத்த முதலமைச்சர் என்று விஜயகாந்தை அறிமுகப்படுத்தியபோது  தமிழகமே அதிர்ச்சியில் உறைந்தது.

இராஜதந்திரம் மிக்க மூத்த அரசில்வாதியான வைகோவின் அறிவிப்பு மக்கள் நலக் கூட்டணிக்கு ஆப்பு வைத்தது. தமிழக அரசியலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும்  அசைக்க முடியாத வாக்கு வங்கி உள்ளது.  இதுவரை நடந்த தேர்தல்களில் அவர்களது  வாக்கு வங்கி பெரியளவில் சரிந்ததில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தைவிட அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு ஐந்து சதவீத வாக்கு அதிகமாக உள்ளது. விஜயகாந்தின் மூலம் அந்த ஐந்து சதவீத வாக்கை சரிக்கட்டலாம் என கருணாநிதி கணக்குப் போட்டார். கருணாநிதியின் கணக்கை இடையில் புகுந்த  வைகோ குழப்பி அடித்து விட்டார்.

மூன்றாவது அணி என்ற பெயரில் கடந்த இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய கட்சிகள் அனைத்தும் இணைந்து போட்டியிட்டன. தமிழக வாக்காளர்கள் மூன்றாவது அணியை அப்போதே நிராகரித்து விட்டனர். மாயையில் மக்களைக் குழப்பினர். மக்கள்  நலக் கூட்டணியின் மாயையில் சிக்கிய  வாக்காளர்களினால் கருணாநிதியின்  சாதனை தகர்ந்தது. மின்வெட்டு, மழைவெள்ள அனர்த்தம், மதுபானசாலை திறப்பு போன்ற வற்றை முன்னிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகம் பிரசாரம் செய்தது. தேர்தல் நெருங்கும் சமயத்தில் வெற்றி பெறலாம்என்ற  மனநிலை கருணாநிதிக்கு ஏற்பட்டது.

எம்.ஜி.ஆருக்குப்பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாக ஜெயலலிதா முதலமைச்சராகப் பதவி ஏற்றுள்ளார். ஜெயலலிதாவின் இந்த வரலாற்று வெற்றி வெறும் ஒருசதவீதத்தால் கிடைத்துள்ளது. அண்னா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு சற்று சரிவடைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் குறந்தளவு வாக்குகளினால் தோல்வியடந்துள்ளது. 200அல்லது,300 வாக்குகளால் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் தோல்வியடைந்துள்ளனர். மிகப் பிரபலமான திருமாவளவன் 87 வாக்கு களினால் தோல்வியடந்தார். திரப்பட நடிகரான கருணாஸ் வெற்றி பெற்றுவிட்டார். கருணாஸ் பிரபலமான நடிகர் அல்ல. சரத்குமார், விஜயகாந்த் ஆகியோருடன் ஒப்பிடுகையில் கருணாஸின் திரப்பட வாழ்க்கை பூஜ்ஜியம். ஜெயலலிதாவின் செல்வாக்கினால்தான் கருணாஸ் வெற்றி பெற்றார்.


பழைய பெருச்சாளிகளை ஜெயலலிதா ஓரம் கட்டியதும் அவருடைய வெற்றிக்கு ஒரு காரணம். புதியவர்களுக்கு வாய்ப்புக்  கொடுத்தார். அவர் எதிர் பார்த்ததுபோல புதியவர்கள் வெற்றி பெற்றனர். கருணாநிதியால் துணிச்சலுடன் பழையவர்களை ஓரம் கட்ட முடியவில்லை. ஒதுங்கிய பழையவர்கள் தமது வாரிசை களம் இறக்கினார்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோல்விக்கு இதுவும் ஒரு காரணம்..
திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் 172 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட்டன. திராவிட முன்னேற்றக்  கழகம் 89 தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 83 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. கடந்த தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திடம் தோல்வியடைந்த திராவிட முன்னேற்றக் கழகம் இம்முறை நடைபெற்ற தேர்தலைலிஒப்பீட்டளவில் வெற்றி பெற்றுள்ளது. இதே வெற்றியை அதனுடைய  கூட்டணிக்கட்சிகள் பெறவில்லை. அடித்துப் பிடித்து அதிக தொகுதிகளைப் பெற்ற  கங்கிரஸ் வெறும் எட்டுத் தொகுதிகளில் தான் வெற்றி பெற்றது. விஜயகாந்திடம் இருந்து பிரிந்து வந்தவர்களுக்கு ஸ்டாலின் அதிக முக்கியத்துவம் கொடுத்துவிட்டார். இதுவும் அவரது கட்சியின் தோல்விக்கு காரணமானது. ஜெயலலிதாவின் செல்வாக்கினால் தான் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை ஸ்டாலின் உணரத் தவறிவிட்டார்.


தமிழக அரசியலில் மூன்றாவது அணி எனக் கூறிக்கொண்டு யாரும் அரசியல்  நடத்த முடியாது என்பதை வாக்காளர்கள் தெளிவாக உணர்த்தியுள்ளனர். ஜெயலலிதாவை எதிர்க்க வேண்டும் என்றால் கருணாநிதியுடன் இணைய வேண்டும். இல்லை என்றால் ஜெயலலிதாவிடம் சரணடைய வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தைக் கூறிக் கொண்டு இவர்கள் அரசியல் செய்யும் காலம் வெகு தூரத்தில் இல்லை.
வர்மா
துளியம். கொம்