Sunday, September 25, 2016

அவிழ்க்கப்படாத மர்மமுடிச்சு

  
  கர்நாடகம் தரமறுத்த கவிரிநீரை   தமிழகத்துக்குக் கொண்டுவந்த சந்தோசத்தைக் கொண்டாட முடியாத நிலையில் தமிழக அரசு சிக்கித் தவிக்கிறது.தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிட்டதால் கர்நாடகத்தில் ஏற்பட்ட வன்முறை, கர்நாடகத்தில் தமிழரின் சொத்துக்கள் தீயிடப்பட்டமை, கர்நாடகத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு எதிரான போராட்டம் தமிழக அரசுக்கு எதிராகத் திசை திரும்பியமை,சட்ட மன்றத்தைக் கூட்டிய  கர்நாடகம் காவிரி நீரைத் தரமறுத்தது,சுவாதி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தமை ஆகியன தமிழக அரசுக்கு எதிராகக் கடந்த வாரம் மிகப் பெரும் அதிர்வலையைத் தோற்றுவித்துள்ளன.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சனநெரிசல் மிகுந்த  காலைவேளை சுவாதி என்ற இளம் பெண் அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டாள். சுவாதி பிராமணப்பெண். உடனடியாக அக்கொலைக்கு இந்து, முஸ்லிம் சாயம் பூசப்பட்டது. சுவாதிக்கு முஸ்லிம் நண்பர் இருந்ததால்,  பொலிஸாரின் விசாரணைக்கு முன்னமே சில இணைய தளங்களும், சமூக வலைத்தளங்களும் தமது கற்பனைக்கு ஏற்றவாறு பரபரப்பான செய்திகளை உணமைபோல் வெளியிட்டன. உண்மையான குற்றவாளியைக்  கண்டுபிடிக்க வேண்டிய அழுத்தம் பொலிஸார் மீது திணிக்கப்பட்டது.

சுவாதி கொல்லப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் மீனாட்சிபுரத்தில் ராம்குமார்  என்ற இளைஞரை  அவரது வீட்டில் நள்ளிரவு பொலிஸார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.  ரம்குமாரைக் கைது செய்ய பொலிஸார் சென்றபோது அவர் கழுத்தை அறுத்து தற்கொலைசெய்ய முயன்றதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சுவாதி படுகொலை வழக்கு பரபரப்பானது.இணைய தளங்களும்,சமுக வலைத்தளங்களும் கேள்விமேல் கேள்வி கேட்டன. சுவாதியைக் கொலை செய்தது  ராம்குமார் தான் அதற்கான போதிய அதரங்கள் உள்ளன என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், பொலிஸாரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை.


ராம்குமார் தான் சுவாதியைக் கொலை செய்தான் என சிலரும் ராம்குமார் சுவாதியைக் கொலை செய்யவில்லை. சுவாதியைப் படுகொலை செய்த பின்னணியில் பலமானவர்கள் இருப்பதனால் அவர்களைக் காப்பாற்ற பொலிஸார் முயற்சி செய்கின்றனர் என்ற செய்தி பரவலாக வெளியானது.  அப்படி நடக்க  சந்தர்ப்பம் இல்லை என ஆரம்பத்தில் கருதியவர்கள் சந்தேகப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். சுவாதியைக் கொலை செய்தவர்கள் பற்றிய தகவல்களை சிலர் மேலோட்டமாக வெளியிட்டனர். அவர்களால் போதிய ஆதாரங்களை வெளியிட முடியவில்லை.
ராம்குமாரின் ஒருதலைக் காதல் தான் சுவாதி கொலை செய்யப்பட்டதற்கான கரணம்  என பொலிஸ் தரப்பில்  கூறப்பட்டது. தன்னை யாரோ பின் தொடர்வதாக சுவாதி கூறியதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். சுவாதியை ஒரு இளைஞன் ரயில் நிலையத்தில் அடித்ததைக் கண்டதாக ஒரு ரயில் பயணி வாக்கு மூலம் கொடுத்துள்ளார். சுவாதி பெங்களூரில் தங்கி இருந்ததால் அவரது நடவடிக்கைகள் ஆராயப்பட வேண்டும் என சிலர் கருத்துத் தெரிவித்தனர். ராம்குமாரின் பின்னணியை ஆரய்ந்தபோது அவர் முன்னரும் ஒரு தடவை ஒருதலைக்காதலில் சிக்கி  தப்புச் செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   பொலிஸ்  விசாரணைக்கு அப்பால் வெளியான இத்தகவல்களால் சுவாதி கொலை வழக்கு விசாரணை மேலும் சிக்கலாகியது.

ராம்குமார் குற்றவாளி இல்லை எனக் கூறிக்கொண்டு ஒரு வழக்கறிஞர் தானாக முன்வந்து ஆஜரானார். அவர் பாரதீய ஜனதாக்  கட்சியின் ஆதரவாளர் என்ற உண்மை வெளியானதால் அவர் பின் வாங்கிவிட்டர்.  ராம்குமார் குற்றவாளி இல்லை என்றவர்களின் குரல் ஓங்கி ஒலித்தபோது அவருடைய தகப்பனும்  தன மகன் குற்றவாளி இல்லை என அறிவித்தார்.  ராம்குமாருக்காக வாதாட களம் இறங்கிய வழக்கறிஞர் அவர் குற்றவாளி இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். ராம்குமார் பிணையில் வெளிவராத முறையில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்  அதுவும்  தொண்ணூறு நாட்களுக்கிடையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என்றால்  ராம்குமார் பிணையில் வெளிவந்து விடுவார். சுவாதி கொலை வழக்கை விசாரணை செய்யும் பொலிஸாருக்கு அழுத்தம் அதிகரித்த வேளையில் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளிகள் மீதும் சந்தேக நபர்கள் மீதும் சிறைச்சாலைகளில் சித்திரவதை நடைபெறுவதாக குற்றச்சட்டுகள் அதிகரித்து வரும் வேளையில் ராம்குமாரின் தற்கொலை  அதனை உறுதிப்படுத்துவது  போல் இருக்கிறது. சிறையில் ராம்குமார் சித்திரவதை செய்யப்படுவதாக அவரது தகப்பனும் வழக்கறிஞரும் தெரிவித்திருந்தனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிரிவ் கமரா இல்லாமையால் சுவாதியைப் படுகொலை செய்தது ரம்குமார்தான் என நிரூபிக்க முடியவில்லை. வெளியில் இருந்த சிசிரிவி கமராவில் பதிந்த உருவத்தை வைத்து ராம்குமார் கைது செய்யப்பட்டார்.  புழல் சிறையில் இருந்த சிசிரிவி காமரா பழுதடைந்தமையினால் ராம்குமார் தற்கொலை செய்ததை உறுதிப்படுத்த முடியவில்லை.

 தற்கொலை செய்ய முயற்சி செய்த கைதியை உரிய முறையில்  கண்காணிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாங்கள் மிகக் கவனமாக ரம்குமரைக் கையாண்டோம் எதிர்பாரத முறையில் இது நடந்துவிட்டது என சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்படும் கைதி தற்கொலை செய்ய முடியாத வகையில் தான் சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் சில கைதிகள் தற்கொலை செய்கின்றனர் என ஒரு கருத்து உள்ளது.  சிறை அதிகாரிகளின் அசமந்தப்போக்கு தான் சிறையில் கைதிகள்  தற்கொலை செய்வதற்கு முக்கியகாரணம்.

ராம்குமார் தற்கொலை செய்யவில்லை. திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்றுதான் பலர் சந்தேகப்படுகிறார்கள். சுவாதியைக் கொலை செய்தது ராம்குமார் தான் என நிரூபிக்க  முடியாமையால் அவரைக் கொலை செய்து வழக்கை முடிப்பதற்கான திட்டமிடுதலில் ஒரு பகுதிதான் இத் தற்கொலை என்று சிலர் வாதாடுகின்றனர். ராம்குமார் உயிரோடு இருந்த போது அவர்தான் குற்றவாளி என நிரூபிக்கத் தவறியவர்கள், ராம்குமார் இறந்தபின்னர் எப்படி உறுதி செய்வார்கள் என்ற கேள்வி மேலெழுந்துள்ளது.  கைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் சுவிஸ் பெட்டியை உடைத்து கடித்து தற்கொலை செய்வதற்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டதா   என்ற கேள்விக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.
ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யமுடியாத நிலை தோன்றியுள்ளது. அரச வைத்தியரில் நம்பிக்கை இல்லை. தனியார் வைத்தியர் வேண்டும் என ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்துகளைச் சொன்னதால் மூன்றாவது நீதிபதியின் தயவு நாடப்பட்டது. அவரின் முடிவையும் ராம்குமாரின் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் மரண விசாரணை தள்ளிப் போகிறது. மரண விசாரணை அறிக்கையில் சந்தேகம் இருந்தால் மென் முறையீடு செய்யலாம். அதனை விடுத்து தாம் விரும்பும் ஒருவர் மரணவிசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதும் சட்ட விரோதம்.

ராம்குமாரின் உடல் உரிய முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் அதற்கு அவரது குடும்பம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ராம்குமாரின் மரணத்தில்  புதைந்திருக்கும்  மர்மத்தை வெளிக்கொணர்வதற்கு அவரது  குடும்பம் முயற்சி செய்ய வேண்டும்.
வர்மா 

Thursday, September 15, 2016

காவிரிக்காக எரிக்கிறது கர்நாடகம் கையேந்துகிறது தமிழகம்

தமிழகம் கர்நாடகம் ஆகிய மாநிலங்களுக்கிடையிலான உறவு காவிரியினால்  கனன்று போயுள்ளது. காவிரியில் பெருக்கெடுத்தோடி வரும்  நீரைக் கட்டுப்படுத்தும் அதிகாரம் கர்நாடகத்திடம் இருப்பதனால் காவிரி நீருக்காக  கர்நாடகத்திடம் கையேந்த வேண்டிய நிலையில் தமிழகம் இருக்கிறது.. காவிரி நீரைப பங்கிடும் பிரச்சினை நிதிமன்றம் வரை சென்று முடிவு காணப்பட்டது.  உச்ச நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரைகொடுக்க  கர்நாடகம் மறுக்கிறது.


தமிழகத்துக்கு கொடுக்க வேண்டிய நீரைக் கொடுக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 10  நாட்களுக்கு   15 ஆயிரம் கன அடி நீரை திறந்து விட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றத் தீர்ப்பை அமுல்படுத்த  கர்நாடகம் தயங்கியது. தமிழக அரசியலுடனும் கர்நாடக அரசியலுடனும் காவிரி பின்னிப் பிணைந்துள்ளது. காவிரி நீரைத்  தமிழகத்துக்கு கொண்டுவந்தது எனது அரசாங்கம் தான் என்று உரிமை கொண்டாடுவதில் ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. விவசாயிகளின் வாக்கு வங்கியைக் குறிவைத்து திராவிட முன்னேற்றக் கழக‌மும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக‌மும் அரசியல் செய்கின்றன.
கர்நாடக அரசியலும் காவிரியை முன்னிறுத்தியே நடைபெறுகிறது. தமிழகத்துக்கு காவிரி நீரைக் கொடுக்காத கட்சிதான் அங்கு கொடிகட்டிப் பறக்க முடியும். காவிரி நீரை தமிழகத்துக்குக்  கொடுத்தால் அங்கு  அரசியல் நடத்து முடியாது. காவிரி நடுவர் மையம்வழங்கும் பரிந்துரைகளையும், நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளையும் கர்நாடக அரசியல்வாதிகள்  கவனத்தில் எடுப்பதில்லை.இம்முறை உச்ச நீதிமன்றம் கடுமையான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவுக்குக்    கீழ்ப்படிய‌ வேண்டிய கடப்பாடு கர்நாடக முதலமைச்சருக்கு உள்ளது. தன மீதான பொறுப்பைத் தட்டிக் கழிப்பதற்காக அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கலந்தாலோசித்து கனத்த இதயத்துடன் நீரைத் திறந்து விடுகிறேன் எனக் கூறியுள்ளார்.

தமிழகத்தின் நிலை இதற்கு எதிர் மாறாக உள்ளது. நெருக்கடியான நேரத்தில் அனைத்துக் கட்சிகளையும்  கூட்டி ஆலோசனை செய்வதற்கு  ஜெயலலிதா விரும்புவதில்லை.  காவிரி நீர் வருவதற்கு நான் மட்டும் தான் காரணம் எனக் கூறுவதையே ஜெயலலிதா விரும்புவார். மற்றைய தலைவர்கள் அதில் உரிமை கோருவதை அவர் விரும்பமாட்டார். இதனைத் தெரிந்து கொண்டும்  அனைத்துக்  கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு  ஏனைய தலைவர்கள் கூப்பாடு போடுவார்கள் ஜெயலலிதாவின் காதுக்கு அவை கேட்பதில்லை தமிழகத்துக்கு என ஒரு நன்மை நடந்தாலும் அதற்கு ஜெயலலிதா   தான் கரணம் என மற்றவர்கள் சொல்ல வேண்டும் என்பதே அவரின் இலட்சியம். அதனால்  ஏனைய தலைவர்களை அலட்சியப்படுத்துகின்றார்.

காவிரி நிறை தமிழகத்துக்குக் கொடுக்க வேண்டும்  என்ற உச்ச நீதி மன்றத் தீர்ப்பு கர்நாடகத்துக்கு எதிரானது என்ற மனநிலை அந்த மாநிலத்தவர்களின் மத்தியில் தோன்றியுள்ளது.  அப்படி ஒரு மனநிலை இயற்கையாகத் தோன்றவில்லை. அங்குள்ள அரசியல் கட்சிகளினால் தோற்றுவிக்கப்பட்டது.மலின  அரசியலுக்காக கர்நாடக அரசியல்வாதிகள் காவிரி நீரை பகடைக்காயாக்கி  உள்ளார்கள் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழர்களுக்கு எதிரான வன்முறையாக உருவெடுத்துள்ளது. தமிழர்களுக்கு  எதிரான வன்முறை கலந்த போராட்டங்களை கர்நாடக பொலிஸார் கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தனர். நான்கு நாட்கள்  நடைபெற்ற வன்முறை உச்சக்கட்டத்தை அடைந்தபின்னர்தான் மத்திய ரிசவ் படை களத்தில் இறங்கியது.
கர்நாடகத்தில் இருக்கும் தமிழர்கள் அச்சுறுத்தப்பட்டர்கள், தாக்கப்பட்டார்கள். தமிழகத்தில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. நூற்றுக்கும்  அதிகமான சொகுசு பஸ்களும் லொறிகளும் தீக்கிரையகின.    கர்நாடகத்துக்கு   எதிரான போராட்டம் தமிழகத்தில்   ஒரு சில இடங்களில் நடைபெற்றாலும் அவை கட்டுப்படுத்தப்பட்டன. அப்படிப்பட்ட போராட்டங்களை நடத்த வேண்டாம் என தமிழகத் தலைவர்கள் அறிவித்தனர். கர்நாடக   நடிகர்கள்  தமது  கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து போராட்டம் நடத்தினர். ஒரு சிலர கடுமையாகப் பசொனாலும் சிலர் மென்போக்கைக் கடைப்பிடித்தனர். 

தமிழ்த் திரைப்படம் வெளியிட்ட தியேட்டர்கள் இழுத்து  மூடப்பட்டன..கட அவுட்கள் கிழித்தெறியப்பட்டன. ஜெயலளிதவிம் உருவபொம்மைகள் தீஇட்டுக் கொளுத்தப்பட்டன. ஜெயலலிதாவின் உருவ பொம்மையை எரிப்பது தவறு என்ற குரலும் கர்நாடகத்தில் ஒலித்தது. தமிழ் நட்டு நடிகர்கள் தமது எதிர்ப்பை அறிக்கையில் மட்டும் வெளிப்படுத்தி உள்ளனர். தமிழகத்தில் பிரபலமான நடிகர்களில் பலர்  கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள்.கர்நாடகத்  திரைப்படங்கள் தமிழகத்தில் திரையிடப்படுவதில்லை. அதனால் அவர்கள் துணிச்சலுடன் தமது எதிர்ப்பை   வெளிப்படுத்தினர். தமிழ் நடிகர்களின் படங்கள் கர்நாடகத்தில் அதிக வசூலைப்  பெறுகின்றன ஆகையால் தமிழ் நடிகர்கள் அடக்கி வாசிக்கின்றனர். 
உச்ச நீதிமன்றத் தீர்ப்பினால் கர்நாடகம் கொந்தளிக்கிறது.ஆகையால் தீர்ப்பை மாற்ற வேண்டும் என கர்நாடகம் கோரிக்கை வைத்தது. கர்நாடகத்தின்  கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.    நீதிமன்றத் தீர்ப்பை ஆல்படுத்த வேண்டும் என  குட்டு வைக்கப்பட்டது. மக்கள் போராட்டத்தால் நீதிமன்றத் தீர்ப்பை மற்ற முடியாது என்பதை கர்நாடக அரசியல்வாதிகள் உணரத் தவறியதன் விளைவை அம்மாநில மக்கள் அனுபவிக்கின்றனர். ,நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனச் சொல்லும் மனப்பக்குவம் கர்நாடக அரசியல் தலைவர்களிடம் இல்லை.


 கர்னாடகத்தில்   காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர்களும்  தமிழக காங்கிரஸ் தலைவர்களும் மெளனமாக இருக்கிறர்கள். நிஜத்தைப் பேசினால் கர்நாடகத்தில் ஆட்சியைத் தக்கவைக்க முடியாது என்பதனால் காங்கிரஸ் தலைமை மெளன சாட்சியாக இருக்கிறது. எமது மக்களுக்கு குடிக்கத் தண்ணீர் இல்லை. தமிழகத்தில் விவசாயம் செய்ய எப்படித் தண்ணீர் தருவது என கர்நாடக அரசு கேட்கிறது.   மழை  வீழ்ச்சி  குறைவு எனக் கூறி தமிழகத்துக்கு காவிரி நீரைக்   கொடுக்க கர்நாடகம் பின்னடிக்கிறது.   ழை  வீழ்ச்சி  குறைவுதான் கர்நாடகம் சொல்வது போல் குறைவு அல்ல என  தமிழகம் கூறுகிறது. 
காங்கிரஸ்,பாரதீய ஜனதாக்  கட்சி,மத சார்பற்ற ஜனதாதளம்,விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் தமிழகத்திலும் கர்நாடகத்திலும்  உள்ளன.  கர்நாடகத்தில் உள்ள இக்கட்சிகள் அங்குள்ள மக்களுக்கு சரியான வழியைக் காட்ட முன்வரவில்லை.

காவிரி பாலாறு , சிறுவாணி , முல்லைப்பெரியாறு  ஆகியவற்றின் காரணமாக  அண்டை மாநிலங்களுடன் தமிழகம் முரண்படும்போது இரண்டு மாநில மக்களும் பாதிக்கப்படுகின்றனர். இதற்குரிய உறுதியான முடிவை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும் தவறினால் இந்தியன் இன்ற பலம் குறைந்துவிடும்.
வர்மா 


Tuesday, September 6, 2016

கால்கள் இல்லாத உதைபந்தாட்ட வீரன்

ஒரு கால் இல்லாதவர் அந்தக்காலைக் காட்டி பிச்சை  எடுத்து இலகுவாகச் சம்பாதிக்கிறார். இரண்டு கால்களும் இல்லாதவர் மிக இலகுவாக அடுத்தவரின் அனுதாபத்தைப் பெறுகிறார்.  இரண்டு கால்களும் இல்லாதமுகமட் அப்துல்லா என்ற 22 வயது இளைஞர் உதை  பந்து விளையாடி பார்ப்பவர்களை அசர வைக்கிறார். சிறுவயதில் உதைபந்தாட்டத்தில் அதிக விருப்பம் கொண்ட முகமட் அப்துல்லா 10 வருடங்களுக்கு முன்னர் ரயில் விபத்தில்  முழங்காலுக்குக்  கீழே இரண்டு கால்களையும் இழந்த நிலையிலும்  மனதைச் சோரவிடாது இரண்டு கால்களும் உள்ளவர்களுடன் போட்டி போட்டு விளையாடுகிறார். தனது ஆதர்ச நாயகன் கிரிஸ்ரியானி ரொனால்டோ போல் விளையாட வேண்டும் என்பதே அவரது ஆசை.

மொகமட் அப்துல்லாவுவின் ஏழு வயதில் தாய் இறந்துவிட்டார்.  தகப்பன் இன்னொரு திருமணம் செய்ததில் அவருக்கு உடன்பாடில்லை.தகப்பனுடன் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறிய முகமட் அப்துல்லா ரயில் நிலையத்துக்குப்போய் ஒரு ரயிலில் ஏறினார். சிறிது நேரத்தில் அவர் தூங்கிவிட்டார். ஓடும் ரயிலில் இருந்து அவர் வழுக்கி  தண்டவாளத்தில் விழுந்தபோது எதிரில் வந்த ரயில் அவரது கால்களைத் துண்டாடியது.
டாக்கா மெடிகல் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சத்திர சிகிச்சையளிக்கப்பட்டது.உற்றார் உறவினர் யாருமற்ற முகமட் அப்துல்லா டாக்காவில்  உள்ள பரிசல் யூசுவ் பாடசாலையில் சேர்க்கப்பட்டார். 18 மாதங்களில் அங்கிருந்து   வெளியேறினார். அடுத்துஎன்ன செய்வதெனத் தெரியாத நிலையில் பசி வயிற்றைச் சுரண்டியது.  பிச்சை எடுப்பது இலகுவானதாக இருந்தது. இரண்டு கால்களும் இல்லாத சிறுவனின் மீது இரக்கப்பட்டு அதிகளவானோர் பிச்சை போட்டார்கள்
மொகமட் அப்துல்லாவின் தன்மானம் பிச்சை எடுப்பதை வெறுத்தது.உடம்பிலே வலு இருக்கிறது. இரண்டு கைகளும் உறுதியாக உள்ளன. நான் ஏன் பிச்சை எடுக்க வேண்டும் ஏன் உழைத்துச் சாப்பிடக்கூடாது என மொகமட் அப்துலா கேள்வி எழுப்பினார்.  அபராஜியோ பங்களா என்னும் அரச சார்பற்ற தொண்டு நிறுவனம் மொகமட் அப்துல்லாவுக்கு உதவி செய்ய முன்வந்தது. டாக்கா படகுத் துறையில் பொதி சுமக்கும் வேலையை மொகமட் அப்துல்லா செய்து வருகிறார். அவரது ஆசையைத் தெரிந்துகொண்ட அரச சார்பற்ற நிறுவனம் அவருக்கு உதைபந்தாட்ட பயிற்சியை வழங்கியது. ஆரம்பத்தில் எல்லோரும் அவரை ஏளனம் செய்தனர்.  மன உறுதியும் கடும் பயிற்சியும் அவரை சிறந்த உதை பந்தாட்ட வீரனாக்கியது. மொகமட் அப்துல்லாவின் விளையாட்டைப் பார்ப்பதற்காக மிகப் பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. உலக நாட்டு அணிகள் விளையாடும் டாக்கா மைதானத்தில் விளையாடும் பெருமையை மொகமட் அப்துல்லா பெற்றுள்ளார்,

Thursday, September 1, 2016

தமிழக அரசை எச்சரிக்கும் அவதூறு வழக்குகள்

 சர்வதிகார ஆட்சியிடம் இருந்து விடுதலை வேண்டிப் போராடுபவர்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்கள் கட்டவிழ்த்துவிடும் கொடுமைகள் சொல்லிலடங்கதவை.இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம் என்பது சர்வதிகார ஆட்சியாளர்களின் மரபுவழித் தண்டனை. ஜெயலலிதாவின்  தலைமையிலான தமிழக அரசு அவதூறு வழக்கு என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது. 2011  ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை 213 அவதூறு  வழக்குகளை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழக  அரசையும் ஜெயலலிதாவையும் விமர்சித்தால் அல்லது கேள்விகேட்டால் அவர்கள் மீது அவதூறு  வழக்குகள் தொடுக்கப்படும். கருணாநிதி,ஸ்டாலின் உட்பட திராவிட முன்னேற்றக் கழக‌  தலைவர்களுக்கு எதிராக 85,  நக்கீரன், ஆனந்தவிகடன்,யூனியர் விகடன்,இந்தியருடே உட்பட ஊடகங்களுக்கு எதிராக  55, விஜயகாந்த்,பிரேமலதா உட்பட அவரது கட்சிக்கு எதிராக  28 , ராமதாஸ், அன்புமணி ஆகியோர் உட்பட பட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரக 9 தமிழக காங்கிரஸ் கட்சித் தாலைவர்களுக்கு எதிராக 7  சுப்பிரமணியன் சுவாமிக்கு எதிராக 3  அவதூறு  வழக்குகளை தமிழக அரசு தொடுத்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளையும் ஜெயலலிதா தாக்கல் செய்யும் அவதூறு  வழக்குகளையும் கவனிப்பதிலேயே தமிழக  அரச வழக்கறிஞர்கள்  காலத்தைக் கடத்துகிறார்கள். தமிழக மக்கள் வெள்ளத்தில் துன்பப்படும்போது ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுக்கிறார் என்று பொதுக் கூட்டத்தில்  பேசினால் அவர்மீதுஅவதூறு  வழக்கு பாயும். ஜெயலலிதாவுக்கு  எதிராகப் பேசினால் மட்டும் தான் அவதூறு  வழக்கு தொடுக்கப்படும் அக்கட்சியில் உள்ள ஏனைய தலைவர்களைப் பற்றிப் பேசினாலோ அல்லது விமர்சித்தால் அவதூறு  வழக்குகில் இருந்து தப்பிவிடலாம்.


ஒருவரைப்பற்றி  இல்லாததும் பொல்லாததும் சொன்னால்  அவதூறு  வழக்கு தொடுக்கலாம்.கருத்துச் சொல்பவர்களின் மீதும் கேள்வி கேட்பவர்களின் மீதும் அவதூறு  வழக்கு தொடுத்து கருத்துச் சுதந்திரத்தையும் பேச்சுச் சுதந்திரத்தையும் நீதிமன்றத்தின் முன் நிறுத்துகிறது தமிழக அரசு. ஜெயலலிதாவுக்கு எதிராக சுமார் 25 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துச் சேர்த்த வழக்கைத் தவிர அனைத்து வழக்குகளும் முடிந்துவிட்டன. சில வழக்குகளில் இருந்து எச்சரிக்கையுடன் விடுதலை செய்யப்பட்டார். சில வழக்குகளில் குற்றவளி என தீர்ப்பு வழங்கப்பட்டு முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. மேல் முறையிட்டின் பின் நிரபராதி என விடுதலையானர். நீதிமன்றம், வழக்கு, தீர்ப்பு,   அப்பீல் என்பன ஜெயலலிதாவுக்கு புதியதல்ல.

ஜெயலலிதா தாக்கல் செய்த அவதூறு   வழக்குகளை சட்டப்படி சந்திக்கப்போவதாக எதிர்த்தரப்புகள் தெரிவித்துள்ளன. தனக்கு எதிரான அவதூறு   வழக்குகளை விசாரிக்க இடைக்கால தடை பெற்றுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. இது ஜெயலலிதாவுக்கு சற்று பின்னடைவாகும். அவதூறு   வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததால் விஜயகாந்துக்கு எதிராக பிடிவிறந்து பிறப்பிக்கப்பட்டது. தனக்கு எதிரான அவதூறு  வழக்கின் நிபந்தனைகளைக் குறைக்குமாறு கோரியதால் பிரேமலதாவுக்கு 5000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டது. இவை ஜெயலலிதாவுக்கு சாதகமாக அமைந்தன.

ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருந்த அவதூறு வழக்குகள் இப்போது அவருக்கும் தமிழக அரசுக்கும் எதிராகத் திரும்பிவிட்டன. அவதூறுவழக்குக்கு எதிராக விஜயகாந்த் தாக்கல் செய்த மேன் முறையீட்டை விசாரித்த  நீதிபதிகளின் கேள்விகள் தமிழக  அரசையும் ஜெயலலிதாவையும் அதிர்ச்சியடைய  வைத்துள்ளன. பொது வாழ்வில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்க வேண்டும் என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.இது தொடர்பாக பதிலளிக்கும் கடிதம் ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டது. அப்படி ஒரு கடிதம் கிடைக்கவில்லை என ஜெயலலிதாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில்  தெரிவித்தார்.  அப் பதிலைக் கேட்ட நீதிபதிகள் அக் கடிதத்தை ஜெயலலிதாவிடம் கையளிக்குமாறு விஜயகாந்தின் வழக்கறிஞருக்கு உத்தரவிட்டனர். கடிதம் கிடைக்கவில்லை என பதில் சொல்ல முடியாது.
தனது அரசியல் எதிரிகளை அடக்கி ஒடுக்குவதற்காக ஜெயலலிதா தொடுத்த அவதூறு வழக்குகள் அவருக்கு எதிராகத் திரும்பத் தொடங்கிவிட்டன.நீதிமன்றம் கேட்கும் கிடுக்கிப் பிடி கேள்விகளுக்கு தெளிவான பதிலளிக்க வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார்.

தமிழக அரசின் முறை கேடுகள் தொடர்பாக பொது நல வழக்குகள் பல தொடுக்கப்பட்டுள்ளன. அப்படித் தொடுக்கப்பட்ட சுமார் 15 வழக்குகளில் தமிழக அரசு மூக்குடைபட்டு   நிற்கிறது.     அரசின் தலமைச் செயலகத்தை  புதிய இடத்தில் கட்டுவதற்கு ஜெயலலிதா முயற்சி செய்தார். அவரது முயற்சி கைகூடவில்லை. கருணாநிதி முதலமைச்சாரக இருந்தபோது புதிய தலமைச்செயலகத்தை அமைத்தார். கருணாநிதி கட்டிய தலமைச் செயலகத்தினுள் செல்லப்போவதில்லை என சபதம் செய்த ஜெயலலிதா  முதலமைச்சரானதும்  பழைய தலமைச் செயலகத்தில் சட்ட சபையை கூட்டினார்.

அண்ணாவின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அன்றைய தமிழக முதல்வர் கருணாநிதியால் அண்ணா நூற்றாண்டு  வாசிகசாலை அமைக்கப்பட்டது. அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருக்கும் ஜெயலலிதா முதல்வரானதும் அண்ணாவின் பெயரில் உள்ள அந்த  நூற்றாண்டு மண்டபத்தை குழந்தைகள் நல மருத்துவமனையாக மாற்றப்போவதாக அறிவித்தார். அதனை எதிர்த்து வழக்குத் தொடரப்பட்டது. நீதிமன்றத்தின் கேள்விகளுக்குப் பதிலளிக்க ஆறு மாதகால அவகாசம் தரும்படி தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. முடிவெடுப்பதற்கு ஒரு நொடி ஒரு நொடியில் முடிவெடுப்பீர்க‌ள். பதிலளிப்பதற்கு ஆறு மாதம் வேண்டுமா என நிதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஜெயலலிதா தனது அரசியல் வாழ்க்கையில் சுமார் இருபது வருடங்களை வழக்குகளைச் சந்திப்பதற்கு செலவிட்டுள்ளார். நீதிமன்றத்தால் இரண்டு முறை முதலமைச்சர் பதவி பறிக்கப்பட்டும் விடாது போராடி பதவியை இரண்டு முறையும் மீளப் பெற்றவர். இப்போது ஜெயலலிதாவுக்கு முன்னால் உள்ள வழக்குகள் அவருக்கு எதிராகத் திசை திரும்பும் அபாயம் உள்ளது.
வர்மா