Tuesday, December 28, 2010

தி.மு.க.வைக் கைவிடதயாராகிறது காங்கிரஸ்

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் உறுதியாக இருக்கிறார் ராகுல் காந்தி. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேற தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்பவில்லை. தமிழக அரசின் இலவசத் திட்டங்கள், சலுகைகள் என்பன மக்களின் மனதில் நன்கு ஊன்றிப் போயுள்ளது. ஆகையினால் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெளியேறினால் பாதிப்பு ஏற்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் நினைக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறிய கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்தன என்ற முதல்வர் கருணாநிதியின் புள்ளி விபரம் அவர்களை சிந்திக்கத் தூண்டியது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தை ஸ்பெக்ரம் விவகாரம் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய ஊழல் என்ற பெருமை ஸ்பெக்ரம் விவகாரத்துக்குக் கிடைத்துள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ராசா தப்புச் செய்யவில்லை என்று முதல்வர் கருணாநிதி அடித்துக் கூறுகிறார். ஸ்பெக்ரம் விவகாரத்தினால் முதல்வர் கருணாநிதிக்கு ஆதரவான தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறுகின்றனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பனிப்போர் ஏற்கனவே ஆரம்பமாகி விட்டது. தமிழகத்தில் காங்கிரஸ் பிரமுகர்களுக்கு அமைச்சுப் பதவி கொடுக்கப்படாமையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது காங்கிரஸ் தலைவர்கள் பலர் மிகுந்த ஆத்திரத்தில் உள்ளனர். அவர்கள் சீறும் போது காங்கிரஸ் தலைமை அவர்களை அடக்கி வைத்திருந்தது காங்கிரஸ் தலைமை. இன்று தலைமையைத் தட்டிக் கேட்கும் துணிவு தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு பிறந்துள்ளது.
காங்கிரஸ் தலைமைப் பீடத்திலும் தமிழகக் காங்கிரஸிலும் திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களும் உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவாளர்கள் தமது கருத்துக்களை பகிரங்கமாக வெளிவிடுவதில்லை. இளங்கோவன் போன்ற ஒரு சிலர் மட்டும் அவ்வப் போது துணிவுடன் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கருத்துக்களைக் கூறி வந்தனர். ஸ்பெக்ரம் விவகாரத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவுத் தலைவர்கள் வெளிப்படையாகத் தமது கருத்துக்களைக் கூறத் தொடங்கி விட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகம் வாரி வழங்கிய இலவசங்களும், சலுகைகளும் ஸ்பெக்ரம் என்ற மிகப் பிரமாண்டமான ஊழலின் முன்னால் அடிபட்டுப் போகும் நிலை உள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையின் போது திராவிட முன்னேற்றக் கழகம் தனித்து விடப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராசாவுக்கு எதிரான கருத்துக்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்கள் பகிரங்கமாகக் கூறவில்லை. ராசாவைக் கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசியத் தொடங்கியுள்ளன. ராசாவைக் காப்பாற்றுவதற்காக தலித் என்ற ஆயுதத்தை முதல்வர் கருணாநிதி கையில் எடுத்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறினால் திராவிட முன்னேற்றக் கழகம் பலமிழந்து விடும். காங்கிரஸுடன் கூட்டணி சேர்வதற்கு ஜெயலலிதா மிகவும் ஆர்வமாக உள்ளார். ஜெயலலிதாவின் மீது மதிப்பு வைத்திருக்கும் காங்கிரஸ் தலைவர்களும் அதற்கு முழு முயற்சி செய்து வருகின்றனர்.
ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் போன்றவர்கள் பகிரங்கமாக இதனைத் தெரிவித்துவருகின்றனர் திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து வெளியேறும் கட்சிகள் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறும் கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவதும் வாடிக்கையான சம்பவம். இந்த வழமையை மாற்ற வேண்டும் என்று ராகுல்காந்தி விரும்புகிறார். காங்கிரஸின் முதுகில் ஏனைய கட்சிகள் தொடர்ந்தும் சவாரி செய்ய இடமளிக்கக் கூடாது. காங்கிரஸுடன் மற்றக் கட்சிகள் சேர வேண்டும் என்பதே ராகுலின் குறிக்கோள்.
ராகுல்காந்தியின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு ஸ்பெக்ரம் விவகாரம் ஒரு காரணியாக அமைந்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளில் ஏதாவது ஒன்றுடன் இணைந்தால் காங்கிரஸ் கட்சியின் தனித்துவம் இல்லாமல் போய் விடும். காங்கிரஸ் கட்சி மதிப்புடனும் மரியாதையுடனும் இருக்க வேண்டுமானால் காங்கிரஸின் தலைமையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார்.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய இரண்டு கட்சிகளில் உள்ள பலர்மீது. ஊழல் குற்றச் சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன. ஒரு சிலர் குற்றவாளிகளாகத் தண்டனை பெற்றுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்ந்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல் பட்டியலை திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ஊழல் கட்சி தான் என்பதை நிரூபிக்கும். ஊழல் குற்றச்சாட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யாரும் பதவி வகிக்க முடியாது. ஊழலை ஊக்குவிப்பதற்கு காங்கிரஸ் கட்சி ஒரு போதும் இடமளிக்காது என்று காங்கிரஸ் மாநாட்டில் சோனியா காந்தி கூறியுள்ளார். சோனியாவின் இந்தக் கூற்று திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எச்சரிக்கை மணியாக அடிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகக், கூட்டணியில் இருந்து வெளியேறினால் விஜயகாந்துடன் கூட்டணி சேரும் சூழ்நிலை உள்ளது. தமிழகத்தில் செல்வாக்கு மிக்க ஊழல் இல்லாத கட்சி தலைவராக விஜயகாந்த் உள்ளார் என்ற கருத்து உள்ளது.
இளைஞர் காங்கிரஸில் உள்ளவர்கள் அடுத்த தமிழக முதல்வர் என்று இளைஞர்களை உசுப்பி விட்டுள்ளார் ராகுல் காந்தி. தமிழக காங்கிரஸ் கட்சிக்குள் பல பிரிவுகள் உள்ளன. வாசன், இளங்கோவன், சிதம்பரம் போன்ற தலைவர்களின் பின்னால் பலர் அணி வகுத்து உள்ளனர். ஒரு தலைமையின் கீழ் தமிழக காங்கிரஸ் செயற்பட வேண்டும் என்று ராகுல் காந்தி விரும்புகிறார். ராகுல் காந்தியின் விருப்பத்தை நிறைவேற்ற தமிழக இளைஞர் காங்கிரஸ் தயாராக உள்ளது. ஆனால் அதற்குள்ளும் சில கோஷ்டிப் பூசல்கள் உள்ளன.
ஸ்பெக்ரம் விவகாரம் ஜெயலலிதாவை உற்சாகமடைய வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் முக்கிய எதிர்பார்ப்பு. காங்கிரஸ் கட்சியின் வெளியேற்றம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாதிப் பலத்தைக் குறைத்து விடும். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கடும் கோபத்தில் இருக்கும் விஜய் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டப் போவதாகத் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு விஜய் விரும்பினார். அவரைக் கட்சியில் சேர்ப்பதற்கான சமிக்ஞையை காங்கிரஸ் வெளியிடாததால் அரசியல் ஆர்வத்தை அடக்கி வைத்திருந்தார். இப்போது விஜய் அரசியலில் இறங்கும் சூழ்நிலை அதிகரித்துள்ளது.
விஜயின் வரவை ஜெயலலிதா எதிர்பார்க்கிறார். இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் போக்குக் காட்டி விட்டு காங்கிரஸ் கட்சியில் விஜய் சேரலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. திராவிடக் கட்சிகளில் இணைந்தால் ஊழலைப் பற்றிப் பிரசாரம் செய்ய முடியாது. ஸ்பெக்ரமின் முன்னால் போஸ் ஊழல் காணாமல் போய் விட்டது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான சக்திகள் அனைத்தும் பலமடைந்து வரும் வேளையில் ராசாவுக்கு எதிரான நடவடிக்கையை எடுக்க வேண்டிய கட்டாயம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. ராசாவை கட்சியில் இருந்து நீக்கினால் துணிவுடன் பிரசாரம் செய்யலாம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் ராசாவை பலிக்கடா ஆக்குவதிலேயே தங்கியுள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 26/12/10

Friday, December 24, 2010

இந்திய அரசியலை அதிரவைக்கும் ஸ்பெக்ரம் தமிழக சினிமாவைஆட்டிப்படைக்கும் அரசியல்


தமிழக அரசியலில் இருந்து தமிழ் சினிமாவை பிரித்துப் பார்க்க முடியாது. அரசியல் கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்துக்கும் அரசியலில் சேரப் போவ தாக அறிவித்த விஜய்க்கும் தொடர்ந் தும் நெருக்கடிகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. ஆர். ராசாவின் பிரச்சினையின் சூடு ஆறுவ தற்கு முன்னர் சீமானின் விடுதலை தமிழக அரசியலை இன்னும் சூடாக்கியுள்ளது.
எம்.ஜி.ஆர்., ரஜினி ஆகியோருக்குப் பின்னர் தமிழ் சினிமாவில் அதிக வசூலை பெற்ற விஜயின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைவதற்கு தமிழக அரசியல் தான் காரணம் என்று கருத்து நிலவுகிறது. நடிகர் விஜய் காங்கிரஸில் சேரப் போகிறார் என்ற தகவல் வெளியான நிலையில் அவர் ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசினார். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கே ராகுலைச் சந்திப்பதற்கு இலகுவில் அனுமதி வழங்கப் படுவதில்லை. விஜய் ராகுலைச் சந்தித்தது அரசியலில் பெரும் புயலைக் கிளப்பிவிட்டது. விஜயின் எதிர்பார்ப்பு நிறைவேறாததனால் அரசியல் பிரவேசம் தடைப்பட்டது.
அரசியல் கட்சி ஆரம் பிக்க வேண்டும் என்று எண்ணம் விஜ யிடம் இருக்க வில்லை. ஏதாவது ஒரு கட்சியில் இணைந்து அரசியல் நீரோட்டத்தில் கலக்க வேண்டும் என்பதே அவரது எண்ணமாக இருந்தது. இதனை அறிய அவரது ரசிகர்கள் தமது தலைவரை முதல்வராக்கப் போவதாக அறிவித்தார்கள். முதல்வர் கனவில் அரசியலில் இறங்கிய விஜயகாந்த் இன்னமும் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வெற்றி வாய்ப்பை மட்டும் தடுக்கிறது விஜயகாந்தின் கட்சி. விஜயகாந்த் எனும் நடிகர் வெற்றி பெற்றாரே தவிர விஜயகாந்தின் செல்வாக்கினால் அவரது கட்சியில் போட்டியிட்ட யாரும் வெற்றி பெறவில்லை. இந்த நிலையில் தான் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய தகவல் வெளியானது.
விஜயின் தகப்பன் எஸ்.ஏ. சந்திரசேகரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தீவிர அபிமானி தனது மகனை முதல்வர் அரவணைப்பார் என்று எதிர்பார்த்தார். எம்.ஜி.ஆர். வைகோ ஆகியோரின் வெளியேற்றத்தின் பின்னர் திராவிட முன்னேற்றக் கழகம் பட்ட அவஸ்தைகளை மனதில் கொண்ட திராவிட முன்னேற்றக் கழகம் விஜயை இணைப்பதற்கு தயக்கம் காட்டியது. விஜய் நடித்த படங்களை வெளியிடுவதற்கு தமிழக தியேட்டர் உரிமையாளர் கள் போட்டி போடுவார்கள். கூடுதல் பணம் கொடுத்து விநி யோக உரிமையை வாங்குவார்கள். விஜய் நடித்த "காவலன்'படத்தை வெளியிடு வதற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை. இந்த மாதம் படம் வெளியிட வேண்டிய காவலன் படம் அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
எஸ்.ஏ. சந்திரசேகரன், ஜெயலலிதா ஆகியோரின் சந்திப்பு பற்றிய உண்மையான தகவல்கள் வெளிவரவில்லை. ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணையுமாறு விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியில் இணைவதற்கு முன்னர் தனது ரசிகர்களின் பலத்தைக் காட்டுவதற்கு பிரமாண்டமான மாநாடு ஒன்றை நடத்தும் எண்ணம் விஜயிடம் உள்ளது.
விஜயகாந்தின் மைத்துனர் தயாரித்து விஜய்காந்த் இயக்கி நடித்த விருதகிரி என்ற படத்தைத் திரையிடுவதற்கு தமிழகத்தில நல்ல தியேட்டர்கள் கிடைக்கவில்லை. தமிழக அரசியல் தமிழ் சினிமாவை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதால் ஆளும் கட்சியை விமர்சிப்பவர்களின் படங்கள் வெளியிட முடியாத நிலை உள்ளது. எதிர்ப்பை மீறி வெளியிட்டாலும் வெற்றி பெற முடியாதுள்ளது.
ராசாவை சுற்றி பின்னப்பட்ட ஸ்பெக்ரம் என்னும் வலை டில்லியையும் தமிழகத்தையும் அதிர வைத்துள்ளது. நீதிமன்றத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது அரசாங்கம் திணறுகிறது. "ஸ்பெக்ரம்' விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களின் அலுவலகங் களிலும் வீடுகளிலும் திடீர் திடீரென சோதனைகள் நடைபெறுகின்றது. திடீர் சோதனைகளின் போது முக்கியமான ஆவணங்கள் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகினவே தவிர அவை பற்றிய விபரம் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை.
"ஸ்பெக்ரம்' விவகாரத்தினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சோனியாவின் ஒப்புதல் இல்லாமல் சோதனைகள் நடைபெற வாய்ப்பு இல்லை என்று திராவிட முன்னேற்றக் கழகம் கருதுகிறது. "ஸ்பெக்ரம்' ஒதுக்கீடு முறைப்படி தான் நடைபெற்றது என்பதில் மத்திய அரசு உறுதியாய் உள்ளது. "ஸ்பெக்ரம்' ஒதுக்கீட்டி"ல் ஊழல் நடைபெற்றிருந்தால் அது அரசாங்கத் துக்குத்தான் அவமானம் என்று காங்கிரஸ் கட்சி கருதுகிறது. ராசாவின் ராஜினாமாவின் மூலம் விவகாரத்தை அடக்கி விடலாம் என்ற எண்ணம் நிறைவேறவில்லை.
"ஸ்பெக்ரம்' விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்குத் தொடர்பு இல்லை. திராவிட முன்னேற்றக் கழக அமைச்சர் தான் இதனைச் செய்தார் என்ற கருத்து காங்கிரஸ் தலைவர்களிடம் உள்ளது . "ஸ்பெக்ரம்' ஒதுக்கீட்டு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக் கும் தொடர்பு உள்ளது என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்துகின்றன.
ராசாவைக் கட்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்று ஸ்டாலின், தயாநிதி மாறன், அழகிரி ஆகிய மூவரும் ஒன்றாகச் குரல் கொடுக்கின்றனர். எதிரும் புதிருமாக இருக் கும் மூவரும் ராசாவின் விவகாரத்தில் ஒற்றுமையாக உள்ளனர். ராசாவை விட கட்சி பெரிது என்று மூவரும் ஒருமித்துக் குரல் கொடுக்கின்றனர். ராசா தப்பிச் செல்லவில்லை என்று அடித்துக் கூறிய முதல்வர் கருணாநிதி என்ன செய்வது என்று தெரியாது தடுமாறுகின்றார்.
அமைச்சர் பூங்கோதையும் நீரா ராடியாவும் பேசியதாக கூறப்படும் தொலைபேசி உரையாடல் வெளியாகி திராவிட முன்னேற்றக் கழகத்தை இன்னமும் சூடாக்கியுள்ளது. முதல்வரின் மனைவி தயாளு அம்மாளுக்கு மிகவும் நெருக்கமானவர் அமைச்சர் பூங்கோதை. இவ் விவகாரம் தயாளு அம்மாளுக்கும் நெருக்கடியைக் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கைத் தமிழருக்கு ஆதரவான சீமானின் பேச்சு அவரை சிறைக்கு அனுப்பியது அவருக்கு விதிக்கப்பட்ட தடுப்புக் காவல் சட்டத்துக்கு முரணானது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சிறையிலிருந்து வெளிவந்த சீமான் முதல்வர் கருணாநிதிக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். முதல்வர் கருணாநிதி போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் சீமான். இந்த சவால் எதிர்க்கட்சிகளை மகிழச்சியில் ஆழ்த்தியுளளது. கருணாநிதிக்கு எதிராக சீமான் பொது வேட்பாளராக போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தங்களால் முடியாததை சீமானால் செய்ய முடியும் என்று எதிர்க்கட்சிகள் கருதுகின்றன. தமிழக சட்ட சபைத் தேர்தலில் தோல்வி அடையாத தலைவர் என்ற பெருமையுடன் இருக்கும் கருணாநிதியை வீழ்த்த நல்லதொரு அஸ்திரம் கிடைத்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 19/12/10

Monday, December 20, 2010

உதைபந்தாட்டத்தில் உலக நாடுகளுக்குஅதிர்ச்சி கொடுத்த ரஷ்யாவும் கட்டாரும்

உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை 2018 ஆம் ஆண்டு நடத்துவதற்கான உரிமையை ரஷ்யா பெற்றுள்ளது. 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமையை குட்டி நாடான கட்டார் பெற்றுள்ளது.
சூரிச்சில் கடந்த வாரம் நடைபெற்ற இரகசிய வாக்கெடுப்பின் மூலம் இந்த அதிர்ச்சியான முடிவு வெளியானது. உதைபந்தாட்டப் போட்டியில் பலம் வாய்ந்த நாடுகளை சிலவேளை குட்டிநாடுகள் தோற்கடித்து பெருமைபெறுவது போல இங்கிலாந்து, ஹொலண்ட், ஸ்பெய்ன் ஆகிய நாடுகளை தோற்கடித்து 2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமையை ரஷ்யா பெற்றுள்ளது. சகல வசதிகளும் உள்ள அமெரிக்காவையும் அவுஸ்திரேலியாவையும் தோல்வியடையச் செய்து 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமையை கட்டார் பெற்றுள்ளது.
2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்துவதற்கு இங்கிலாந்து, ரஷ்யா ஆகியனவும் ஸ்பெயின், போர்த்துக்கல்லுடன் இணைந்தும், பெல்ஜியம், ஹொலண்டுடன் இணைந்தும் போட்டியிட்டன. உலகக் கிண்ண உதைபந்தாட்ட சம்பியனான ஸ்பெய்ன் தனது நாட்டில் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்த பெரிதும் ஆர்வம் காட்டியது. ஆனால் இங்கிலாந்தின் முயற்சிகள் ஏனைய நாடுகளைப் பின்னுக்குத் தள்ளி 2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி இங்கிலாந்தில் தான் நடைபெறும் என்ற மாயையைத் தோற்றுவித்தது.
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம், பிரதமர் டேவிட் கமருன், இங்கிலாந்து உதைபந்தாட்ட அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர உதைபந்தாட்ட வீரருமான டேவிட் பெக்கம் ஆகியோர் முழு மூச்சாகப் பிரசாரம் செய்தனர். ரஷ்யாவில் போக்குவரத்து செய்வது மிகவும் கடினமானதால் வீரர்களின் பல அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டி யிருக்கும் என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. தென் ஆபிரிக்காவில் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் வீரர்கள் சுமார் நான்கு மணி நேரம் பயணம் செய்து மைதானத்தைச் சென்றடைந்ததை சுட்டிக் காட்டியவர்கள் ரஷ்யாவிலும் அதேபோன்று பல மணி நேரம் பயணம் செய்து மைதானத்தை அடைய வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.
2018 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமையைப் பெறாததனால் இங்கிலாந்து பெரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இளவரசர் வில்லியம், பிரதமர் டேவிட் கமரூன், உதைபந்தாட்ட நட்சத்திரம் டேவிட் பெக்கம் ஆகியோரின் முயற்சி வீணாகியது. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் நாட்டைத் தெரிவு செய்யும் அங்கத்தவர்களுடன் தனிப்பட்ட முறையில் உரையாடி தமக்கு ஆதரவு கோரினர். வாக்களிக்கும் உறுப்பினர்களின் உறுதி மொழியினால் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமை தங்களுக்குக் கிடைக்கும் என்று இங்கிலாந்து எதிர்பார்த்தது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் நாட்டைத் தெரிவு செய்யும் வாக்களிப்பில் ஊழல் நடைபெறும் என்று ரஷ்யா கருதியது. அதன் காரணமாக புட்டின் அந்த விழாவில் பங்குபற்ற வில்லை. உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் நாட்டைத் தெரிவு செய்யும் அங்கத்தவர்களில் இருவர் ஊழல் காரணமாக வாக்களிக்கத் தடை செய்யப்பட்டனர்.
ஊழல் காரணமாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமை தமக்குக் கிடையாது என்று ரஷ்யா எதிர்பார்த்தது. ஆனால் எதிர்பார்க்காது உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமை ரஷ்யாவுக்குக் கிடைத்தது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி இன்னொரு பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தி விடும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர். 13 உதைபந்தாட்ட மைதானங்களைப் புனரமைப்பதற்கு 3.5 பில்லியன் டொலரை செலவு செய்ய ரஷ்யா திட்டமிட்டுள்ளது. உதைபந்தாட்ட மைதானங்களின் புனரமைப்புப் பணி நிறைவுறும் போது இந்தத் தொகை மேலும் பல பில்லியன்களாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதை பந்தாட்டப் போட்டியை நடத்த அவுஸ்தி ரேலியா, அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா, கட்டார் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் இணைந்து 2002 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தியதால் மீண்டும் அந்த நாடுகளுக்கு சந்தர்ப்பம் கிடைக்காது என்பதால் போட்டியிலிருந்து ஜப்பானும் தென்கொரியாவும் வெளியேறின.
சிட்னி ஒலிம்பிக்கை பிரமாண்டமாக நடத்தியதால் அவுஸ்திரேலியாவின் மீது எதிர்பார்ப்பு கூடியது. அமெரிக்காவும், அவுஸ்திரேலியாவுக்குப் போட்டியாகப் பரப்புரை செய்தது. குட்டி நாடான கட்டாரை யாரும் கணக்கில் எடுக்கவில்லை. எதிர்பார்ப்புகளை உடைத்து 2022 ஆம் ஆண்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் உரிமையை கட்டார் பெற்றுள்ளது.
கட்டாரின் வெப்ப நிலை உதைபந்தாட்ட வீரர்களின் உடல் நிலையைப் பாதிக்கும் என்ற குற்றச்சாட்டு உள்ளது. வீரர்களின் தங்கி இருக்கும் ஹோட்டல்களையும் விளையாட்டு மைதானங்களையும் குளு குளு என வைத்திருக்கப் போவதாக கட்டார் உறுதியளித்துள்ளது.
எண்ணெய் வளம் மிக்க நாடான கட்டார் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிக்காகச் செலவு செய்யத் தயாராக உள்ளது. அங்கு அமைக்கப்படப் போகும் உதைபந்தாட்ட மைதானங்கள் எதிர்காலத்தில் கட்டாருக்குப் பயன்படுமா என்ற கேள்விக்கு கட்டார் பதிலளிக்கவில்லை.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் புதிய நாடுகளில் நடைபெற வேண்டும் என்பதில் பீஃபா உறுப்பினர்கள் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது. ரஷ்யாவிலும் கட்டாரிலும் முதன் முதலாக உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டி நடைபெற உள்ளது.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் நாட்டைத் தெரிவு செய்வதற்கு 24 உறுப்பினர்கள் ரகசியமாக வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர்களில் ரெய்னல்ரெமாரி (ரெமாரி) அமோஸ் அடமு (நைஜீரியா) ஆகியோர் தமது வாக்குகளை பணத்துக்கும் பெண்ணுக்கும் விற்பனை செய்ய முன் வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டதால் வாக்களிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஐரோப்பாக் கண்டத்தைச் சேர்ந்த ஒன்பது உறுப்பினர்களும் ஆசியாக் கண்டத்தைச் சேர்ந்த நான்கு உறுப்பினர்களும் ஆபிரிக்கா, தென் அமெரிக்கா, வட / மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த தலா மூன்று உறுப்பினர்களும் வாக்களித்தனர்.
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை நடத்தும் நாட்டைத் தெரிவு செய்வதற்காக வாக்களித்த உறுப்பினர்களின் விபரம்:
தலைவர்
செப் பிளெச்சர் (வயது 74, சுவிற்ஸர்லாந்து) பீஃபா தலைவர் 1998 ஆம் ஆண்டு முதல் தலைவராக இருக்கும் இவர் பீஃபாவின் எட்டாவது தலைவர்.
மூத்த உப தலைவர்கள்
ஜுலியோ குரோடோனா (வயது 79, ஆர்ஜென்ரீனா) பிரபல தொழிலதிபரான இவர் உதைபந்தாட்டக் கழகமாக அர்செனாவின் ஸ்தாபகர் இஸ்ஸா ஹயரோ (64, கமரூன்), கமரூன் சுல்தானின் மகனான இவர் கமரூனின் முன்னாள் பிரதமர். கமரூன் உதைபந்தாட்ட அணியின் தலைவராகவும் செயலாளராகவும் பணியாற்றியவரின் சகோதரர்.
டாக்டர் சுங் மொங் யூன் (59, தென் கொரியா), அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெறும் பீஃபா தலைவர் தேர்தலில் இன்றைய தலைவருக்கு போட்டியாளராக விளங்குபவர் உலகின் பிரபலமான ஹுண்டாய் நிறுவனத்தின் பிரதான பங்காளர், ஜக் வார்னர் (67, ரினிடாட் அன்ட்டுபாக்கோ) CONCACAFதலைவர், ரினிடாட்டின் போக்குவரத்து அமைச்சர், 1980 ஆம் ஆண் டும் 1990 ஆம் ஆண்டும் தற்காலிக பிரதமராகப் பதவி வகித்தவர்.
அஞ்ஜில் வில்லாஇலானோ (60, ஸ்பெயின்), ஸ்பானிய பெடரேஷன் தலைவர், சட்டத்தரணி, ஸ்பானிய அணியின் முன்னாள் வீரர் 1970 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற போட்டிகளில் விளையாடி 22 வெற்றிக் கிண்ணங்களை ஸ்பெயின் பெறுவதற்கு பிரதான காரணியாக இருந்தவர். மைக்கல் பிளட்டின் (55 பிரான்ஸ்), UEFA தலைவர், பிரான்ஸ் அணியின் முன்னாள் வீரர் பிரான்ஸ் அணியின் வெற்றிக்காகப் பல கோல்களை அடித்தவர். 1984 ஆம் ஆண்டு ஐரோப்பிய வெற்றிக் கிண்ணத்தை பிரான்ஸ் பெற்ற அணியில் விளையாடியவர். 1978, 1982, 1986 ஆகிய ஆண்டுகளில் உலகக் கிண்ணப் போட்டிகளில் பிரான்ஸ் அணிக்காக விளையாடியவர். பிரான்ஸ் உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நான்கு வருடங்கள் பணியாற்றியவர்.
ஜோம் தோம்ஸன் (64, இங்கிலாந்து) முன்னாள் நீதிபதி FA தலைவர், UEFAஉபதலைவர்.
அங்கத்தவர்கள்
டாக்டர் மைக்கல் டுகூச் (64 பெல்ஜியம்)பெல்ஜியம் FA தலைவர் ரிக்காடோ ரெரா ரெக்ஸிரா (63, பிரேஸில்) 2014ஆம் ஆண்டு பிரேசில் உலகக் கிண்ண உதைபந்தாட்டக் குழுவின் இணைத்தலைவர். பீஃபாவின் முன்னாள் தலைவரும் ஜோகோஹாவெலெஞ்சின் மகனை மணமுடித்து விவாகரத்துப் பெற்றவர்.
மொஹமட் பின் ஹம்மான் (61, கட்டார்) பல நிறுவனங்களின் முகாமைத்துவப் பணிப்பாளர். அடுத்த ஆண்டு நடைபெறும் பீஃபா தலைவர் தேர்தலில் இன்றைய தலைவருக்கு பிரதான போட்டியாளராக இருப்பவர். செனஸ் எரிக் (68, துருக்கி) UEFAஉபதலைவர், துருக்கி FA தலைவர்.CONCACAP சொக்பிஸைர் (65, அமெரிக்கா), இணிணஞிச்ஞிச்ணீ பொதுச் செயலாளர். வொரவி மகுடி (59) தாய்லாந்துFAபொதுச் செயலாளர் நிக்கோலம் நியோஸ் (82, பரகுவே) வழக்கறிஞர் விளையாட்டுச் செய்தியாளர் பகுதி நேர சரித்திர விரிவுரையாளர் ஜுஜி ஒகுரா (72, ஜப்பான்) போகுவாவின் பொது முகாமையாளர், ஜப்பான் FA தலைவர், மரியோஸ் எலப்கரிஸ் (64, சைப்பிரஸ்) UEFA பொரு ளாளர், சைப்பிரஸ் FA தலைவர்.
ஜக்குயில் அனோயுமா (58, ஐவரிகோஸ்ட்) ஐவரிகோஸ்ட்FAதலைவர், பிரான்ஸ் பெக்கேன் போயூர் (65, ஜேர்மனி), கைசர் என்வாசல்லமாக அழைக்கப்படும் இவர் ஜேர்மனி அணி 1974, 1990 ஆம் ஆண்டு உலகக் கிண்ணம் வென்ற போது அணித் தலைவராகவும் பின்னர் பயிற்சியாளராகவும் கடமையாற்றினார். 1974 முதல் 1976ஆம் ஆண்டு வரை தொடர்ச்சியாக மூன்று முறை ஜேர்மனி ஐரோப்பியச் சம்பியனான அணியில் விளையாடியவர். 2006ஆம் ஆண்டு உலகக் கிண்ண அமைப்புக் குழுவில் பணியாற்றினார்.
ரபீல் சல்குரோ (63, கௌதமாலா) கௌதமாலா அணியின் முன்னாள் வீரர் ஹனி அபோரிடா (57, எகிப்து) பொறியியலாளர், க்+20 2010 ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டிக் குழுவின் அங்கத்தவர். விராலி முற்கோ (51, ரஷ்யா) ரஷ்ய உதைபந்தாட்ட யூனியனின் முன்னாள் வீரர். 2006ஆம் ஆண்டு அவுஸ்திரேலியா உதைபந்தாட்ட அணியில் பயிற்சியாளராகக் கடமையாற்றினார். 2008ஆம் ஆண்டு வரை ரஷ்ய விளையாட்டு அமைச்சராக கடமையாற்றினார்.
ரமணி
சூரன்.ஏ,ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 10/12/10

Tuesday, December 14, 2010

ராசாவைக் கைவிட விரும்பாத கருணாநிதிsகூட்டணியை உதறமுடியாது தவிக்கும் காங்கிரஸ்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னால் அமைச்சர் ராசாவின் டெல்லி வீட்டிலும் அலுவலகத்திலும் சி. பி. ஐ. நடத்திய அதிரடிச் சோதனையின் மூலம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசல் விழலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 2ஜி அலைவரிசை ஒதுக்கிய விவகாரத்தில் அன்றைய தொலைத் தொடர்புகள் அமைச்சர் ராசாவின் மீது ஊழல் புகார் சுமத்தப்பட்டது. காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் ஊழல் குற்றச்சாட்டு பொய் என்று நிரூபிப்பதற்கு மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் வீணாயின. ஸ்பெக்ரம் ஊழல் விவகாரம் நீதிமன்றத்திற்கும் சென்ற போது அமைச்சர் ராசா இராஜினõமாச் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
ராசாவின் இராஜினாமாவின் பின்னர் பிரச்சினை ஓய்ந்து விடும் என்று காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்பார்த்தன. எதிர்க்கட்சிகளின் விடாப்பிடியால் ராசா மீதான ஊழல் விவகாரத்தை சமாளிக்க முடியாது காங்கிரஸும், திராவிட முன்னேற்றக் கழகமும் தடுமாறுகின்றன. எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற முடக்கம் காங்கிரஸ் கட்சியை நிலை தடுமாற வைத்துள்ளது. ராசாவின் பிரச்சினையால் காங்கிரஸ் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவு பாதிப்படையுமோ என்று இரண்டு கட்சிகளும் சிந்திக்கத் தொடங்கிவிட்டன. ஆனால் அதனை வெளியே காட்டாது இரண்டு கட்சிகளும் அடக்கி வாசிக்கின்றன.
ஸ்பெக்ரம் அலை ஒதுக்கீட்டின் மூலம் 1.76 இலட்சம் கோடி ஊழல் நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒரு ஊழல் நடைபெறவேயில்லை என்று அடித்துக் கூறிய முதல்வர் கருணாநிதி தனி ஒருவரால் எப்படி இவ்வளவு ஊழல் செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். ராசா ஊழல் செய்யவில்லை என்று முதல்வர் கூறுகிறாரா அல்லது ஊழலில் மற்றவர்களுக்கும் பங்கு இருப்பதாகக் கூறுகின்றாரா என்று தெரியவில்லை.
ஸ்பெக்ரம் ஒதுக்கீட்டில் முக்கிய தரகராகச் செயற்பட்டு வந்த நீரா ராடியாவிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல உண்மைகளை அவர் வெளிப்படுத்தியுள்ளார். ஸ்பெக்ரம் ஒதுக்கீடு முறைப்படி இல்லாமல் தரகர்கள் மூலம் நடைபெற்றது என்பது இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஸ்பெக்ரம் விவகாரத்தில் ஊடகங்கள் பல தகவல்களை பகிரங்கப்படுத்தின. ஊடகங்களில் வெளியான பல தகவல்கள் முக்கியஸ்தர்கள் சிலரை அசௌகரியப்படுத்தியுள்ளன. பிரபல தொழிலதிபர் ரத்தன்டாடாவுக்கும் நீரா ராடியாவுக்கும் இடையில் நடைபெற்ற தொலைபேசி உரையாடல் தனது தனி மனித உரிமையை மீறியதாக நீதிமன்றத்தை நாடியுள்ளார் டாடா.
ஸ்பெக்ரம் ஒதுக்கீட்டில் நடைபெற்ற ரகசிய பேரங்கள் பகிரங்கமானதால் அதன் பின்னணியில் உள்ளவர்கள் கலங்கிப் போயுள்ளனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளுஅம்மாள், மகள் கனிமொழி ஆகியோரும் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் கதைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. நீரா ராடியாவுடன் உரையாடும் குரல் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோருடையது தானா என்பதை உறுதிப்படுத்திய பின்னர் அவர்களிடம் விசாரணை செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியல்வாதிகளில் பலர் ஊழல் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நீதிமன்றத்தின் மூலம் தண்டனை பெற்றனர். சிலர் குற்றவாளி இல்லை என்று விடுதலை செய்யப்பட்டனர். தமிழக முதல்வர் கருணாநிதியின் அரசியல் எதிரியான ஜெயலலிதா ஊழல் குற்றச்சாட்டில் நீதிமன்றத்தின் மூலம் தண்டனை விதிக்கப்பட்டார். கருணாநிதி குடும்பத்தவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. தயாளு அம்மாளும், கனிமொழியும் விசாரிக்கப்பட்டால் ஜெயலலிதாவுக்கு அது சாதகமாகி விடும். ஜெயலலிதாவின் ஊழல் பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்தவர்கள் வாய் திறக்க முடியாத நிலை தோன்றி விடும்.
தமிழகத்தின் கோடீஸ்வரர்களில் கருணாநிதியும் ஒருவர் என்ற குற்றச்சாட்டு அவரது அரசியல் எதிரிகளினால் சுமத்தப்பட்டது. கருணாநிதி குடும்பத்தின் செல்வச் செழிப்பு அக்குற்றச்சாட்டு உண்மையில் இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. தனது சொத்து விபரத்தை முதல்வர் கருணாநிதி வெளியிட்ட போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் விடுவிக்கப்பட்டன தலைவரைத் தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களும் ஏனைய தலைவர்களும் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது.
நடிகர் விஜயை அரசியல் நீரோட்டத்தில் தள்ளி விடுவதற்காக முயற்சிகள் ஒருபுறம் நடைபெறுகின்றன. ரசிகர் மன்ற நிர்வாகிகளை விஜய் சந்தித்தார்.கட்சி ஒன்று ஆரம்பிக்கப் போகிறார். ஜெயலலிதாவுடன் இணையப் போகிறார் என்ற செய்தி கடந்த வாரம் முழுவதும் ஊடகங்களின் தலைப்புச் செய்திகளாக வெளியாகின. திருச்சி மாநாட்டில் விஜய், அஜித் ஆகியோருக்கு ஆதரவாக ஜெயலலிதா பேசியதால் இந்த ஊகம் கிளம்பியுள்ளது.
விஜய் அண்மையில் நடித்து வெளியான படங்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. விஜய் நடித்து வெளியான தோல்விப் படங்களை விநியோகம் செய்தது சன்பிக்ஸர்ஸ், சன்பிக்ஸர்ஸின் தயாரிப்பில் விஜய் நடித்து வெளியான படமும் படு தோல்வி அடைந்தது. தோல்வியடைந்த கவலையில் இருந்து மீள்வதற்காக விஜய் மிகுந்த பிரயத்தனப்படுகிறார். அவரை அரசியல் குளத்தில் விழுத்துவதற்கு சிலர் முயற்சி செய்கின்றனர். விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்களில் சிலர் விரும்புகின்றனர். அவர் செய்யும் நல்ல காரியங்களின் பின்னணியில் அரசியல் இருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசியலுக்கு வந்த விஜயகாந்த் இன்னமும் உரிய இலக்கை அடையவில்லை. இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக விஜயகாந்த் மிளிர்கிறார். தனித்து நின்று அவரால் வெற்றி பெற முடியவில்லை. சட்ட சபைத் தேர்தலில் விஜயகாந்த் மட்டும் வெற்றி பெற்றார். அவருடைய செல்வாக்கை நம்பி தேர்தலில் போட்டியிட்ட அனைவரும் கட்டுப்பணத்தையும் இழந்தனர்.
விஜயகாந்தின் அரசியல் தோல்வி சினிமா நட்சத்திரங்களின் அரசியல் பிரவேசத்துக்கு முக்கிய பாடமாக அமைய வேண்டும். சினிமா நடிகர்களின் அரசியல் தோல்வியைக் கண்ட பின்னராவது விஜய் ரசிகர்கள் உணர்ந்திருக்க வேண்டும். அதனைத் தெரிந்து கொண்டும் தமிழகத்தின் அடுத்த முதல்வர் விஜய் என்று அவரது ரசிகர்கள் கோஷமிடுகின்றனர். விஜயின் அரசியல் பிரவேசம் பற்றி பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகச் கட்டுரைகள் பிரசுரமா கின்றன.
அரசியல் ஊகங்களுக்கு முன்னர் புள்ளி வைக்க விஜய் விரும்பவில்லை. தன்னைப் பற்றி வெளியாகும் செய்திகளை உன்னிப்பாக அவதானித்து வரும் விஜய் அவற்றை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. மறுக்கவும் இல்லை. விஜய் அரசியலில் குதித்தால் தமிழக அரசியலில் எதிர்பார்க்கும் பாதிப்பு எதுவும் தோன்றப் போவதில்லை.
தமிழகத்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்புகள் நடிகர் விஜய்க்கு அதிகம் செல்வாக்கு இருப்பதை வெளிக்காட்டியுள்ளன. ரஜினியை விட அதிக செல்வாக்குமிக்கவர் விஜய் என்பது கருத்துக் கணிப்புகள் மூலம் தெரியவந்துள்ளது. அரசியல்வாதி விஜய்க்கு செல்வாக்கு இருக்கிறதா என்ற கருத்துக் கணிப்பு நடைபெறவில்லை. தமிழக அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகி விட்டன. விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாரா இல்லையா என்ற விபரம் தமிழக சட்ட சபைத் தேர்தல் நெருங்கும் போது தெரிந்து விடும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு12/12/10

Friday, December 10, 2010

பீகாரில் காங்கிரஸ் தோற்றதால்உஷாராகிவிட்டார் கருணாநிதி

பீகார் சட்ட சபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததனால் தமிழக முதல்வர் கருணாநிதி மிகுந்த உற்சாகமடைந்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையேயான கூட்டணி தொடரும் என்று திராவிட முன்னேற்றக் கழகமும், காங்கிரஸ் கட்சியும் அடிக்கடி வலியுறுத்தி வருகின்றன. ஆனால் தமிழக காங்கிரஸ் தலைவர்களில் சிலர் இந்தக் கூட்டணி தொடரக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்.
வட மாநில சட்ட சபைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. அதே போன்று தமிழகத்திலும் தனியாகப் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது ராகுல் காந்தியின் கனவு. ராகுல் காந்தியின் கனவை நிஜமாக்குவதற்கான பிரசாரங்களில் இளங்கோவனும், கார்த்திக் சிதம்பரமும் மும்முரமாகச் செயற்படுகின்றனர். இவர்களுடன் தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜும் கைகோர்த்துள்ளார். பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவி சோனியா ஆகியோருடன் தமிழக முதல்வர் கருணாநிதி மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறார்.
தமிழக காங்கிரஸ் கட்சியிலிருந்து வரும் நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு மன்மோகன் சிங்கும், சோனியா காந்தியும் பல வகையிலும் உதவி புரிந்து வருகின்றனர். மன்மோகன், சோனியா காந்தி, கருணாநிதி ஆகியோருக்கிடையே நல்ல புரிந்துணர்வு இருந்தாலும் தேர்தலின் போது கூட்டணி சேர்வதா, தனித்துப் போட்டியிடுவதா என்பதை ராகுல் காந்திதான் தீர்மானிக்கின்றார். ராகுல் காந்தியின் விருப்பப்படியே காங்கிரஸ் கட்சியின் தேர்தல் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
தமிழகத்துக்கு விஜயம் செய்யும் காங்கிரஸ் தலைவர்கள் தமிழக காங்கிரஸ் தலைமையகத்துக்குச் செல்லாது விட்டாலும் முதல்வர் கருணாநிதியை சந்திக்காது திரும்புவதில்லை. தமிழகத்துக்குப் பலமுறை விஜயம் செய்த ராகுல்காந்தி இதற்கு விதிவிலக்காக முதல்வர் கருணாநிதியையோ அல்லது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களையோ சந்திக்கவில்லை. ராகுல் காந்தியின் திட்டப்படி காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. பீகார் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததால் அந்த எதிர்பார்ப்பு சிதறிவிட்டது.
திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி தனித்துப் போட்டியிடும் அல்லது விஜயகாந்துடன் இணைந்து தமிழகத் தேர்தலை சந்திக்கும் என்ற கருத்து பலரிடமிருந்து வெளிவந்தது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறி தன்னுடன் இணையும் என்று ஜெயலலிதா எதிர்பார்த்தார். திராவிட முன்னேற்றக் கழகம் காங்கிரஸைக் கைவிட்டால் எந்தவித நிபந்தனையுமின்றி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதாகக் கூறி எதிர்பார்ப்பை அதிகரித்தார் ஜெயலலிதா.



திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட்டால் நஷ்டமடையப் போவது காங்கிரஸ் கட்சிதான் என்பதை கருணாநிதி வெளிப்படையாகக் கூறியுள்ளார். திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இருந்து வெளியேறிய வைகோ, ஜெயலலிதாவுடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்துப் படுதோல்வி அடைந்தார். ஜெயலலிதாவின் தலைமையிலான கூட்டணியில் வைகோ உள்ளார். ஆனால் அவரால் முன்னைய நாட்களைப் போன்று உரத்துக் குரல் கொடுக்க முடியாத நிலை உள்ளது. காங்கிரஸ் கட்சியுடன் கோபித்துக் கொண்டு கூட்டணியில் இருந்து பிரிந்த இடதுசாரிகள் ஜெயலலிதாவுடன் கைகோர்த்து நாடாளுமன்றத் தேர்தலை சந்தித்து படுதோல்வி அடைந்தனர். தோல்வியால் துவண்டுவிடாத இடதுசாரிகள் வழமை போல் அறிக்கைகளை வெளியிட்டு சவால் விடுத்து வருகின்றனர். பாட்டாளி மக்கள் கட்சி இல்லையென்றால் தமிழகத்தை யாரும் ஆட்சி செய்ய முடியாது என்று இறுமாப்புடன் பேசிய டாக்டர் ராமதாஸ் ஜெயலலிதாவுடன் இணைந்த பின்னர் அதுதான் வெற்றிக் கூட்டணி என்று உறுமினார்.
வைகோ, இடதுசாரிகள், டாக்டர் ராமதாஸ் ஆகியோருடன் இணைந்ததனால் ஜெயலலிதா இலாபமடைந்தார். வைகோ இடதுசாரிகள், டாக்டர் ராமதாஸ் ஆகியோர் உள்ளதையும் இழந்தனர். தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் செல்வாக்கு மிக்க கட்சிகளாக உள்ளன. இந்த இரண்டு கட்சிகளுடனும் இணைந்து போட்டியிட்டால்தான் தமிழகத்தில் உள்ள ஏனைய கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும். ஆனால் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் முடிவு திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை வெளிப்படுத்தியது.
அரசியல் கட்சித் தலைவர்களின் முடிவு வாக்காளர்களின் முடிவினால் நிராகரிக்கப்பட்ட சம்பவங்கள் பல முறை நடந்துள்ளன. சட்டம், ஒழுங்கு, அன்பளிப்பு, ஊழல் என்பனவற்றை எதிர்க்கட்சிகள் பட்டியலிட்டுப் பிரசாரம் செய்தாலும் பல தேர்தல்களில் அவற்றை மக்கள் புறக்கணித்துள்ளனர். தமிழகத்தின் வளர்ச்சி, மக்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள், மக்கள் அனுபவிக்கும் இலவசங்கள் என்பனவற்றைப் பட்டியலிட்டு தமிழக சட்டசபைத் தேர்தலைச் சந்திக்க திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக உள்ளது. ஸ்பெக்ரம் ஊழலைப் பற்றி உரத்துக் கூறி வரும் எதிர்க்கட்சிகள் தேர்தல் சமயத்தில் ஸ்பெக்ரம் பிரச்சினையையே முக்கிய கருப்பொருளாகப் பிரசாரம் செய்யும்.
அரசியல்வாதிகளின் ஊழல்களை விசாரிப்பதற்காக அவ்வப்போது விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டன. அந்தக் குழுக்களின் அறிக்கைகள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டன. ஊழலை வெளிப்படுத்துவதற்காக விசாரணை அமைத்த கட்சியே ஊழல் செய்த கட்சியுடன் கைகோர்த்து தேர்தலைச் சந்தித்த அவலமும் அரங்கேறியுள்ளன. நீதிமன்றத்தால் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட அரசியல் தலைவர்களும் அரசியல்வாதிகளும் மேன்முறையீடு செய்து விட்டு சுகபோகங்களை அனுபவிக்கின்றனர். கட்சித் தலைமை செய்யும் குற்றங்களை விசுவாசம் மிக்க தொண்டர்கள் மறந்து விடுவதே வழமையானது.
ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தினால் ராஜா தனது அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்துள்ளார். அவர் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தால் மட்டும் போதாது. அவரைக் கட்சியில் இருந்தே வெளியேற்ற வேண்டும் என்று தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜ் முதல்வர் கருணாநிதிக்கு எச்சரிக்கை கலந்த ஆலோசனையை வழங்கியுள்ளார். ஸ்பெக்ரம் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை எப்படி வழிக்குக் கொண்டு வருவது என்பது பற்றி தமிழக முதல்வர் கருணாநிதிக்கு நன்கு தெரியும்.
பீகார் தேர்தல் முடிவுகள் தமிழகத்தில் எதிரொலிக்க ஆரம்பித்துள்ளன. பீகாரில் தோல்வி அடைந்தது போல் தமிழகத்திலும் அடி வாங்குவதற்கு காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. ஜெயலலிதாவுடன் கூட்டு சேர்வதற்கு சோனியாகாந்தி தயாராக இல்லை. விஜயகாந்துடன் கூட்டணி அமைத்து பரீட்சார்த்தம் செய்ய காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் விரும்பவில்லை. கூட்டணி சேர்ந்தால்தான் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை காலம் கடந்து விஜயகாந்த் உணர்ந்து உள்ளார். காங்கிரஸ் கட்சியையே அவர் பெரிதும் நம்பி இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட காங்கிரஸ் கட்சி இப்போதைக்குத் தயாராக இல்லை. ஆகையினால் ஜெயலலிதாவின் பக்கம் சாய்வதற்கு விஜயகாந்த் தயாராகி விட்டார் போல் தெரிகிறது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி உடைந்தால் அது பாரதீய ஜனதாக் கட்சிக்குச் சாதகமாகிவிடும். தமிழகத்தில் காணாமல் போன பாரதீய ஜனதாக் கட்சி மீண்டும் வலுப் பெற்றுவிடும். மத்தியில் காங்கிரஸ் கட்சிக்கு அது நெருக்குதலைக் கொடுக்கும்.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு 05/12/10

Wednesday, December 8, 2010

சிறந்த உதைபந்தாட்ட வீரருக்குமூவரின் பெயர்கள் சிபாரிசு


சிறந்த உதைபந்தாட்ட வீரருக்கான விருதை பீஃபா ஒவ்வொரு வருடமும் வழங்கி வருகிறது. இந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதைப்பெறுவதற்கு லியனல் மேர்ஸி (ஆர்ஜென்ரீனா), ஷேவி (ஸ்பெய்ன்) அன்ரன் இன்ரென்ரா (ஸ்பெய்ன்) ஆகிய மூவரின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டுள்ளன.
ஆர்ஜென்டீனா வீரராக லில் மேர்ஸிக்கு உலகெங்கும் இலட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். 2009 ஆம் ஆண்டு போர்த்துக்கல் வீரரான கிறிஸ்ரியானி ரொனால்டோவுக்கும் லியனல் மேர்ஸிக்கும் இடையே நடந்த கடும் போட்டியில் லியனல் மேர்ஸி சிறந்த வீரராகத் தெரிவு செய்யப்பட்டார்.
ஸ்பெயின் உலகக் கிண்ணச் சம்பியனாவதற்கு ஷேவியின் சிறந்த விளையாட்டும், ஒரு காரணம், இந்த ஆண்டு லியனல் மேர்ஸிக்கு கடும் போட்டியாளராக ஷேவி உள்ளார். ஸ்பெய்ன் நாட்டின் இன்னொரு வீரராக அன்ரன் இன்லெஸ்ராவும் சிறந்த வீரருக்கான போட்டியில் உள்ளார். இவர்கள் மூவரும் பார்ஸிலோனா அணியின் வீரர்களாவர்.
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 07/12/10

Wednesday, December 1, 2010

ஸ்பெக்ரம் ஊழல் பிரச்சினையால்தடுமாறுகிறது இந்திய மத்திய அரசு




இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஊழல்களுள் முதன்மையாகக் கருதப்படுவது "ஸ்பெக்ரம் 3ஜி' முறைகேடு. சுமார் 1.76 இலட்சம் கோடி மதிப்பான "ஸ்பெக்ரம் 3ஜி' விஷயத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டி தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக களமிறங்கின. எதிர்க்கட்சிகளின் நெருக்குதலை சமாளிக்க முடியாத மத்திய அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக ராசா அமைச்சுப் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். ராசாவின் ராஜினாமாவை கனத்த இதயத்துடன் அனுமதித்த முதல்வர் கருணாநிதி குற்றமிழைக்காத ராசா மீண்டும் அமைச்சராவார் என்று எதிர்பார்த்தார்.
குற்றம் என்ன செய்தார் ராசா என்று கேட்ட கருணாநிதிக்கு தகுந்த ஆதாரங்களுடன் குற்றப் பட்டியலை வெளியிட்டன டில்லி ஊடகங்கள். இணையத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியான ஆதாரங்களைக் கண்டு திகைத்துப் போயுள்ள முதல்வர் கருணாநிதி ராசாவின் ராஜினாமாவுடன் ஸ்பெக்ரம் விவகாரம் முற்றுப் பெற்றுவிடும் என்றே இந்திய மத்திய அரசு எதிர்பார்த்தது. ராசா ராஜினாமாச் செய்த பின்னரும் தொடர்ச்சியாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் செயற்படவிடாது எதிர்க்கட்சிகள் முடக்கின.
தொலைத் தொடர்புத்துறை அமைச்சு தயாநிதிமாறனுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த வேளை ராசாவின் கைகளுக்குச் சென்றது. கருணாநிதி, மாறன் குடும்பப் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிட்டதால் தயாநிதிமாறனுக்கு தொலைத் தொடர்பு அமைச்சுப் பதவி வழங்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொலை தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் வரக்கூடாது என்பதில் டில்லியில் உள்ள சில தரகர்கள் உறுதியாக இருந்தார்கள். தங்களுடைய தொழிலுக்கு தயாநிதிமாறன் இடைஞ்சலாக இருப்பார் என்று அந்தத் தரகர்கள் நம்பினார்கள். இது பற்றி நீரா ராடியார், கனிமொழி, ஆர். ராசா ஆகியோரின் தொலைபேசிப் பரிவர்த்தனைகள் அம்பலமாகியுள்ளன.
சி.பி.ஐ. பொறுப்பெடுத்த ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தில் பல பெரும்புள்ளிகள் அகப்படலாம் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ரம் ஒதுக்கீடு ரத்துச் செய்யப்படலாம் என்ற கருத்தும் உள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதனால் அரசாங்கம் இதில் தலையிட முடியாது. முறைப்படி ஏலம் விடாது ஒதுக்கீடு செய்ததனால் சுமார் 1.76 இலட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த இழப்பீட்டை நிவர்த்தி செய்தால் எதிர்க்கட்சிகள் அமைதியடைந்துவிடும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
இதேவேளை அப்படி ஒரு முடிவை அரசாங்கம் எடுத்தால் அன்று பெறுமதி குறைத்துக் கொடுத்ததற்கான காரணத்தை அரசாங்கம் வெளியிட வேண்டிய நெருக்கடி ஏற்படும். தவறு நடந்ததை அரசாங்கமே ஒப்புக் கொண்டதாக ஏற்பட்டுவிடும்.
ஸ்பெக்ரம் விவகாரத்தை இந்திய அரசு தீர்த்து வைத்தால் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கருதப்படும். நீதிமன்றம் கேட்ட சில கேள்விகள் இந்திய அரசை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன. ஸ்பெக்ரம் ஊழல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் இன்னமும் பதிலளிக்காதது ஏன் என்ற நீதிமன்றத்தின் கேள்வி அரசாங்கத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஸ்பெக்ரம் விவகாரத்தினால் காங்கிரஸ் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. பீகார் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அவமானத்தைக் கொடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. 243 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஆறு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற ராகுல் காந்தியின் பரீட்சார்த்த முயற்சி காங்கிரஸ் கட்சியை படுகுழியில் வீழ்த்தியுள்ளது.
பீகாரில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ராகுலின் விருப்பத்துக்கு இணங்க தனித்துப் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியின் பரம எதிரியான நீதிஸ்குமாரின் தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ராகுல் காந்தியின் வழிகாட்டல்களினால் வட இந்தியாவில் எழுச்சி கண்ட காங்கிரஸ் கட்சி பீகார் தேர்தல் முடிவும் சாதகமாக அமைந்தால் அதே வழியில் தமிழகத்திலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கோஷம் எழுந்திருக்கும். பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த படுதோல்வி தமிழகத் தலைவர்களின் மனதை மாற்றிவிடும் ஒரு நிலை ஏற்படலாம்.
விஜயகாந்த் நடித்து முதன் முதலாக இயக்கிய விருதகிரி அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் அதிக கவனம் செலுத்திய விஜயகாந்த் நடித்து அண்மையில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. திரைப்படத் தோல்வியிலிருந்து மீள்வதற்கு சொந்தமாகப் படத்தைத் தயாரித்து தானே இயக்கினார் விஜயகாந்த். விருதகிரி படத்தை வெளியிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று விஜயகாந் கூறியுள்ளார்.
தமிழக சினிமாத்துறை தமிழக அரசின் செல்வாக்கு மிகுந்தவர்களின் கைகளில் இருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகக் கூறிய விஜயை பணிய வைத்த திரைப்பட நிறுவனம் அவர் நடித்த படங்களைத் தோல்விப்படமாக்கியது. தமிழ்த் திரைப்படத்தின் அவலத்தை முதல்வரின் முன்னால் முழங்கிய அஜித் வீட்டுக்கு அழைத்து மிரட்டப்பட்டார் என்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மை என்பது போல் விஜயகாந்தின் கூற்று உள்ளது. கலாநிதிமாறன், ஸ்டாலினின் மகன் உதயநிதி, அழகிரியின் மகன் துளா தயாநிதி ஆகியோர் தமிழ்த் திரைப்படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள். தவிர இவர்கள் தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கிறார்கள். தமிழகத்தின் பல தியேட்டர்கள் இவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. தமிழகத்தின் பிரதான நகரங்களில் உள்ள வசதி மிக்க தியேட்டர்களை இந்த மூவரும் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆகையினால் அந்தத் தியேட்டர்களில் விஜயகாந்தின் திரைப்படம் திரையிடப்பட மாட்டாது.
தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் ஏ.பீ.சீ. என்று தரம் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ தரம் உள்ள நல்ல தியேட்டர்கள் கலாநிதி, உதயநிதி, துளா தயாநிதி ஆகியோரின் கைகளில் உள்ளன. அவர்களின் வசமுள்ள தியேட்டர்களில் விஜயகாந்தின் திரைப்படம் திரையிடப்பட மாட்டாது. தரம் குறைந்த தியேட்டர்களில்தான் விருதகிரி திரையிடப்பட வேண்டிய நிலை உள்ளது. விஜயகாந்தின் படத்துக்கு எதிர்பார்த்த வசூல் கிடைப்பது சாத்தியமில்லை. திராவிட முன்னேற்றக்கழகத்தின் கைகளில் உள்ள அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் விஜயகாந்தின் படத்தை இருட்டடிப்புச் செய்து விடும்.
விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் திராவிட முன்னேற்றக் கழகம் விஜயகாந்தின் திரைப்பட வளர்ச்சியை அடியோடு புரட்டிப் போட கங்கணம் கட்டியுள்ளது.
அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து மைலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினராகத் தெரிவான நடிகர் எஸ்.வி. சேகர், விஜயகாந்தைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர் கட்சியுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து புகழ்ந்து பாடினார்.
எஸ்.வி. சேகர் கட்சி மாறப் போகிறார் என்ற செய்தி பரபரப்பாக அடிபட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து கொண்டே தமிழக அரசைப் பாராட்டிப் பேசினார். பின்னர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறார் என்று வதந்தி பரவியது. விஜயகாந்த்தான் நாட்டை ஆளத் தகுதியானவர் என்று இப்போது திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
விஜயகாந்துக்கு ஆதரவாக பிரபல நடிகர்கள் யாரும் குரல் கொடுக்காத நிலையில் எஸ்.வி. சேகர் விஜயகாந்தை ஆதரித்துக் குரல் கொடுத்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கினால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.வி. சேகரினால் விஜயகாந்துக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு28/11/10