Monday, August 31, 2009

அரசியலில் ஆழம் பார்க்கும் விஜய்க்கு வலைவீச முயற்சிக்கும் காங்கிரஸ் கட்சி





தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியைப் பலப்படுத்தும் முயற்சியில் இறங்கி இருக்கும் ராகுல்காந்தி தமிழகத்தின் பிரபல நடிகரான விஜøய சந்தித்து தமிழக அரசியலில் பெரும் புயலைத் தோற்றுவித்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் மீது இளைஞர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கு கவர்ச்சிகரமான தலைவர் ஒருவரைத்தேடும் காங்கிரஸ், விஜயை தனது பக்கம் இழுக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது.
ராகுல் காந்தி அடுத்த மாதம் தமிழகத்துக்கு விஜயம் செய்து இளைஞர் காங்கிரஸை பலப்படுத்த திட்டமிட்டுள்ளார். இந்தப் பின்னணியில் டில்லியில் விஜயை ராகுல் காந்தி சந்தித்ததில் அரசியல் நோக்கம் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவிலே தான் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் நடந்த தேர்தல்களில் வெற்றி பெறுகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தயவு இன்றி காங்கிரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியும் என்ற நிலையை உருவாக்குவதற்கான வேலைத்திட்டத்தை ராகுல் காந்தி ஆரம்பித்துள்ளார்.
நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றத்தின் மூலம் பல உதவித்திட்டங்களைச் செய்து வருகிறார். தனது மகன் அரசியல் வாதியாக வேண்டும் என்று விஜயின் தந்தை சந்திரசேகர் விரும்புகிறார். அதன் முன்னோடியாகவே விஜய் ரசிகர் மன்றக் கொடி அறிமுகப்படுத்தப்பட்டது. ரசிகர் மன்றத்தையும் தாண்டி மக்கள் நற்பணி இயக்கம் தொடங்கிய விஜய் அந்த இயக்கத்தின் மூலமும் ஏழை மக்களுக்கு உதவி செய்கிறார். அண்மையில் நடந்த வைபவம் ஒன்றில் உரையாற்றிய விஜய், அரசியலில் ஆர்வம் உண்டு. ஆனால், அதற்குரிய நேரம் இது அல்ல என்றார்.
விஜயின் மனதில் அரசியல் ஆர்வம் உள்ளது. அதற்குரிய காலம் வரும் வரை அவர் காத்திருக்க விரும்புகிறார். பலமான வாக்கு வங்கி உள்ள அரசியல் கட்சிகளும், நடிகர்களின் அரசியல் கட்சிகளும் தேர்தல்களில் படுதோல்வி அடைந்ததைத் தெரிந்து கொண்டே விஜய் தனது அரசியல் ஆசையை வெளிப்படுத்தினாரே தவிர அரசியலில் தீவிரமாக இறங்க வேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இல்லை.
அரசியலா சினிமாவா என்ற கேள்விக்கு சினிமாதான் இப்போதைக்கு முக்கியம் என்ற முடிவிலே விஜய் உள்ளார். ராகுல் காந்தி விஜய் சந்திப்பு பற்றிய முழு விபரம் உடனடியாக வெளிவரவில்லை. ராகுல் காந்தி தமிழகத்துக்கு விஜயம் செய்யும் போது விஜய்யின் அரசியல் பிரவேசம் பற்றிய மர்ம முடிச்சு சிலவேளை அவிழ்க்கப்படலாம். தற்போது அரசியலில் பிரவேசிப்பதில்லை என்று விஜய் முடிவு செய்தால் காங்கிரஸ் புதியதொரு கூட்டணியை நாட வேண்டிய நிலை ஏற்படும்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணி பலமானதாக உள்ளது. ஆனால், இரண்டு கட்சியும் ஒன்றை ஒன்று சந்தேகத்துடனேயே பார்க்கின்றது. மத்திய அரசில் திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பார்த்த அமைச்சுக் கள் கிடைக்கவில்லை. தமிழக அரசில் அமைச்சராக வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் ஆசை இன்னமும் நிறைவேறவில்லை. ஒற்றுமையாக இருப்பது போல் காட்டிக் கொண்டாலும் இரண்டு கட்சிகளுக்கும் இடையே உட்பூசல்கள் அதிகமாக உள்ளன. காங்கிரஸின் ஆதரவு இன்றி திராவிட முன்னேற்றக்கழகம் ஆட்சி செய்ய முடியாது. இதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சி தமிழக தேர்தலில் வெற்றி பெறுவது கடினம்.
தமிழகத்தில் செல்வாக்கோடு இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தேசிய கட்சியாக மாறவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். இந்திய மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டணியின் பலத்திலேயே உள்ளன. மத்திய அரசியலில் பலமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி விரும்புகிறார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியில் உள்ள ஒரு சிலர் விரும்புகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் தோல்விகளின் பின்னர் அதனுடன் கூட்டணி சேர்வது பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியாத நிலை உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியைப் பிடிக்காதவர்கள் சிலர் காங்கிரஸ் கட்சியில் உள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து போட்டியிட்டதனால் பெற்ற தொடர் வெற்றிகளால் அவர்களுடைய கருத்து அடிபட்டுப் போய்விட்டது. மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற கருத்துடன் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் சிலர் உள்ளனர். தமிழகத்தில் பிரபல நடிகரான விஜயை வளைத்துப் போட்டால் காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகரிக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர். அந்த நம்பிக்கையின் வெளிப்பாடõகவே ராகுல்காந்தி விஜய் சந்திப்பு நடந்திருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
விஜய் அமைதியானவர், கூச்ச சுபாவம் உள்ளவர், அதிகம் பேசாதவர், ராகுல் காந்தியுடனான முதலாவது சந்திப்பில் காங்கிரஸில் சேர்கிறேன் என்று அவர் ஒப்புதலளித்திருக்க மாட்டார். தனது மக்கள் இயக்கத்தின் வளர்ச்சிக்கான மத்திய அரசிடமிருந்து சில உதவிகளை அவர் எதிர்பார்ப்பதாலும் இச்சந்திப்பு நடைபெற்றிருக்கலாம்.
திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் போட்டியாளர் எனக் கருதப்பட்ட விஜயகாந்தின் கட்சி தமிழக இடைத்தேர்தலில் தோல்வியடைந்தது. திராவிட முன்னேற்றக்கழக கூட்டணிக்கு எதிராக வாக்குகளைப் பெற்று வெற்றியின் விகிதம் குறையும் என்ற ஊகங்கள் பொய்த்துவிட்டன. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆதரவாளர்களின் வாக்குகள் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் கணிசமான அளவில் விழுந்தன. ஜெயலலிதாவின் தேர்தல் பகிஷ்கரிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் சாதகமாக அமைந்து விட்டது.
தமிழக இடைத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சி பெற்ற வாக்குகளின் விகிதம் அதிகரித்துள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தேர்தலில் போட்டியிடும் போது இப்போது பெற்ற விகிதம் குறைவடையும் நிலை உள்ளது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சியை தடுப்பதற்குரிய திட்டங்கள் எதுவும் இன்றி எதிர்க்கட்சிகள் தடுமாறுகின்றன. இந்த நிலையைப் பயன்படுத்தி கழகத்தை பலப்படுத்தும் நடவடிக்கைகளை முதல்வர் கருணாநிதி செய்து வருகிறார்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 27/08/09

Friday, August 28, 2009

அழகிகளின்நாடு





பஹாமாஸ் தலைநகரில் நடைபெற்ற மிஸ்யூனிவர்ஸ் 2009 பட்டத்தைப் பெற்று அழகிகளின் நாடு வெனிசுவேலா என்பதை நிரூபித்துள்ளார் வெனிசுவேலா நாட்டின் அழகியான ஸ்டெபானியா பெர்னாண்டஸ். 83 நாடுகளைச் சேர்ந்தஅழகிகளினால் பஹாமாஸ் நாடு ஜொலித்தது. தமது நாட்டு அழகி பட்டத்தை வென்று பெருமை சேர்ப்பார் என்று பல
நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கையில் ஸ்டெபானியா பெர்னாண்டஸ் பட்டத்தை வென்று தனது நாட்டுக்கும் பெருமைசேர்த்துள்ளார்.
மிஸ் யூனிவர் 2008 பட்டத்தை வென்ற வெனிசுவேலா நாட்டின் அழகி டயானா மென்டெஸ் அந்தப் பட்டத்தை இன்னொரு நாடு தட்டிச் செல்ல வாய்ப்பளிக்காது தனது நாட்டிற்கே அதனை மீண்டும் எடுத்துச் சென்றுள்ளார் ஸ்டெபானியா பெர்னாண்டஸ்.
பியூட்டோரிகா, ஐஸ்லாந்து, அல்பேனியா, செக்கஸ்லோவேகியா, பெல்ஜியம், சுவீடன், கொசோவா, அவுஸ்திரேலியா, பிரான்ஸ், சுவிட்ஸர்லாந்து, அமெரிக்கா, வெனிசுவேலா, தென் ஆபிரிக்கா, டொமினிக்கன், குரோஷியா ஆகிய 15 நாடுகளின் அழகிகள் இறுதிச் சுற்றுக்குத் தேர்வானார்கள்.
15 நாடுகளின் அழகிகளிடையே நடைபெற்ற போட்டிகளில் இருந்து வெனிசுவேலா, அவுஸ்திரேலியõ, பியூப் டோரிக்கா ஆகிய நாட்டு அழகிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவு செய்யப்பட்டனர். வெனிசுவேலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ், அவுஸ்திரேலிய அழகி ராச்சல் பின்ச், பியூடோரிகா அழகி மாஸ்ரா மாடோஸ் பெரேஸ் ஆகிய மூவரும் இறுதிப் போட்டிக்குத் தெரிவானார்கள்.
பரபரப்பாக நடைபெற்ற இறுதிப் போட்டியில் வெனிசுவேலா அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸ் பட்டம் வென்றார். மிஸ்யூனிவர்ஸ் 2009 பட்டத்தை வென்ற ஸ்டெபானியா பெர்னாண்டஸ் (18 வயது) வின் தகப்பன் கனிலோஸ் பெர்னாண்டஸ் தாயார் பெயர் கிருபிஜ் ஹோலோஜாத் உக்ரைன், போலந்து ஆகிய நாடுகளின் பின்னணியைக் கொண்டவர் ஸ்டெபானியா. நீச்சலும், டென்னிஸும் இவரது பொழுதுபோக்கு. இவரது ராசி கன்னி என்று தமிழ்ப் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
அழகிப் பட்டம் வெல்வதில் வெனிசுவேலே புதிய சாதனையை படைத்துள்ளது. ஐந்து மிஸ் யூனிவர்ஸ், ஐந்து மிஸ் வேர்ல்ட், நான்கு மிஸ் இன்ரநஷனல் பட்டங்களைவென்று அழகிகளின் நாடு என்பதை உலகுக்கு எடுத்தியம்பியுள்ளது வெனிசுவேலா.
இறுதி சுற்று கேள்விஉலக அளவிலான 83 அழகிகளில் இருந்து 10 அழகிகள் முதலில் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், இறுதி சுற்றுக்கு, 5 பேர் மட்டும் தேர்வாகி இருந்தனர். வெனிசுலா, டொமினிக் குடியரசு, கொசோவா, அவுஸ்திரேலியா, போர்டோரிகோ ஆகிய 5 நாடுகளின் அழகிகள் தேர்வாகினர். அவர்களிடம் போட்டி நடுவர்கள் கேள்விகளை கேட்டனர்.வெனிசுலா நாட்டு அழகி ஸ்டெபானியா பெர்னாண்டஸிடம் கேள்வி கேட்டபோது, "ஆண்களுக்கு நிகராக நாங்கள் (பெண்கள்) ஏற்கெனவே முன்னேறி விட்டோம்'' என்று தன்னம்பிக்கையுடன் பதில் அளித்தார். அதைத் தொடர்ந்து, அவரையே ஹமிஸ் யுனிவர்ஸ் 2009' பட்டத்துக்கான அழகியாக நடுவர்கள் தேர்வு செய்தனர்.
18 வயது வெனிசுலா அழகி ஸ்டெபானியாவுக்கு, கடந்த ஆண்டின் (2008) மிஸ் யூனிவர்ஸாகத் தெரிவான அழகி டயானா மெண்டோசா கிரீடம் சூட்டினார். அவரும் வெனிசுலா நாட்டைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, தொடர்ந்து இரண்டாவது முறையாக வெனிசுலா நாட்டுக்கு பிரபஞ்ச அழகி பட்டம் செல்கிறது. இது போன்று, ஒரே நாடு தொடர்ந்து பட்டத்தை வெல்வது இதுவே முதல் முறையாகும்.தற்போது ஆறாவது முறையாக பட்டம் பெற்று இருக்கிறது. இதையடுத்து, அதிக அளவில் பிரபஞ்ச அழகிகளைக் கொண்ட இரண்டாவது நாடு என்ற பெருமையை வெனிசுலா நாடு பெறுகிறது. ஏழு முறை பட்டம் வென்ற அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது. தென் அமெரிக்க நாடான வெனிசுலா, பிரபஞ்ச அழகி போட்டியில் இரண்டாவது இடத்தை டொமினிக் குடியரசை சேர்ந்த அடா அய்மி குருஸ் என்ற அழகியும், மூன்றாவது இடத்தை கொசோவா நாட்டு அழகி கோனா டிரவுசாவும் பெற்றனர். புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதில் சிறந்த அழகியாக தாய்லாந்தை சேர்ந்த சுட்டிமா டுரோங்டெஜ் மற்றும் சிறந்த முக அழகியாக சீனாவை சேர்ந்த வாங் ஜிங்யாவ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.இறுதி சுற்று நிகழ்ச்சியின் போது, ஒவ்வொரு நாட்டை சேர்ந்த அழகியும் அந்தந்த நாடுகளின் பாரம்பரிய ஆடையை அணிந்தபடி மேடையில் வலம் வந்தனர்.
ரமணி
மெட்ரோநியூஸ் 28/08/09

Thursday, August 27, 2009

திரைக்குவராதசங்கதி 14


பாசம் படத்தில் எம்.ஜி.ஆ.ரின் ஜோடியாக தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகமானவர் ஷீலா. சிறந்த நடிகையாகி கதாசிரியராகி, இயக்குனராக திரை உலகில் பவனிவந்தவர் ஷீலா. இயக்குநர் ராமண்ணாவினால் தமிழ்த்திரை உலகுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர். ஷீலாவின் திரைஉலகப் பிரவேசத்துக்குக் காரணமானவர் எஸ்.எஸ். ஆர். என அழைக்கப்படும் எஸ்.எஸ். ராஜேந்திரன்.எஸ்.எஸ். ஆரின் நாடகக் குழு கோவையில் முகாமிட்டு நாடகங்களை நடத்தியது. எஸ்.எஸ். ஆரின் நாடகத்தைப்பார்ப்பதற்கு ஷீலா ஒருநாள் சென்றா.அன்றே அவர் எஸ்.எஸ். ஆரைக்கவர்ந்து விட்டார். பக்கவாதத்தால்ஷீலாவின் தகப்பன் படுக்கையில் வீழ்ந்ததைத் தொடர்ந்து படிப்பதற்காக ஷீலாஅவர் நாடகங்களில் நடித்தார். நாடகநடிகை என்ற ரீதியில் ஷீலா நாடகம்பார்க்கச் சென்றார்.ரசிகர்கள் எல்லோரும் நாடகத்தைப்பார்த்துக் கொண்டிருந்தனர். நடித்துக்கொண்டிருந்த எஸ்.எஸ். ஆரின்பார்வை எல்லாம் பார்வையாளர் பக்கத்தில்இருக்த‌ ஷீலாவின் மீது விழுந்தது.நடிகர்களுடன் சேர்ந்து தனது உணர்ச்சிகளை வெளிப்படுத்தி ரசித்ததார் ஷீலா.நாடகம் முடிந்ததும் நடிகர்களைச் சந்
தித்து, வாழ்த்துத் தெரிவிக்க சென்றார்ஷீலா. ஷீலாவைக் கண்ட எஸ்.எஸ்.ஆர். அவரைப் பற்றி விசாரித்தார். தனதுகுடும்பத்தின் நிலையை ஷீலா கூறினார். ஷீலா கூறியவற்றைமிக அவதானமாகக் கேட்ட எஸ்.எஸ்.ஆர். அவரை சென்னைக்கு வரும்படிஅழைப்பு விடுத்தார். எஸ்.எஸ். ஆரின்வேண்டுகோளின்படி கோவையில்தங்கி இருந்த ஷீலா குடும்பத்துடன்சென்னைக்கு குடியேறினார்
.சென்னைக்குச் சென்றதும் எஸ்.எஸ்.ஆரைச் சென்று பார்த்தார் ஷீலா. கோவையில் வாக்களித்தபடி தனது நாடகக்கொம்பனியில் நடிப்பதற்கு சந்தர்ப்பம்கொடுத்தார் எஸ்.எஸ்.ஆர். நடிப்பில்ஆர்வமும் முகத்தில் உணர்ச்சிகளைவெளிப்படுத்தும் ஆற்றலும் கொண்டஷீலாவின் நடிப்பை ரசிகர்கள் வெகுவாகப் பாராட்டினார்கள்.பானை பிடித்தவள் பாக்கியசாலி என்ற
படத்தை வெளியிட்ட டி.எஸ். துரைராஜுக்குநண்பர் ஒருவர் ஷீலாவின் நடிப்பைப்பற்றி கூறினார். நண்பனின் சிபார்சினால் ஷீலாவைச் சந்தித்த டி.எஸ்.துரைராஜ் தனது அடுத்தபடத்தில் அவரை கதாநாயகியாக அறிமுகப்படுத்துவதாகவாக்குறுதி அளித்தார். ஷீலாவின்புகைப்படங்களை பத்திரிகைகளுக்குவழங்கிய டி.எஸ்.துரைராஜ் அவரைப்பற்றி பெரிதாக விளம்பரம் செய்தார்.பத்திரிகைகளுக்கு டி. எஸ்.துரைராஜால்கொடுக்கப்பட்ட படங்களை பார்த்தஇயக்குனர் ராமண்ணா தனது படத்தின்கதாநாயகியாக ஷீலா வை ஒப்பந்தம்செய்தார்.பாசம் படத்தில் எம்.ஜி.ஆரின்ஜோடியாகவும், அசோகனின்
தங்கையாகவும் நடித்தார். ஷீலா பாசம் படம் வளரும் போதே ஷீலாவின்நடிப்பை பலரும் பாராட்டத் தொடங்கிவிட்டனர்.கவியரசு கண்ணதாசன் தனது படத்தில்நடிப்பதற்கு ஷீலாவை ஒப்பந்தம் செய்தார். ஷீலாவின் நடிப்பை கேள்விப்பட்டதயாரிப்பாளர் ஜோசப் தளியத் தனதுஅடுத்தபடத்தில் அவர் நடிக்க வேண்டும் என்று கேட்டார். வாஹினி ஸ்டூடியோவில் ஷீலாவின் நடிப்பைப் பார்த்தமலையாளக் கதாசிரியர் பாஸ்கர்ஷீலாவை மலையாளத் திரைப்படத்துக்குஅழைத்துச் சென்றார்.தமிழ், மலையாளம் ஆகிய இரண்டுமொழிகளிலும் ஷீலா பிஸியாகி நடிகையாகமாறினார். 18வயதில்திரைஉலகுக்கு
நுழைந்த ஷீலா வெற்றிப் படநாயகியாக வலம் வந்தார்.படங்களில் நடிக்கத் தொடங்கியதும்சிறந்த திரைப்படங்களைத் தேடிப்பார்க்கத்தொடங்கினார். ஒவ்வொரு காட்சியிலும் மற்றைய நடிக நடிகைகள் தமதுஉணர்ச்சியை எப்படி வெளிப்படுத்துகின்றனர் என்பதை அறிந்து தனது நடிப்புக்கு மெருகேற்றினார் ஷீலா.
காதலிக்க நேரமில்லை நாயகன்ரவிச்சந்திரனை காதலித்து மணமுடித்தஷீலாவின் மகனான அம்சவர்த்தனும் நடிகராக உள்ளார்.

Sunday, August 23, 2009

ஜெயலலிதாவின் புறக்கணிப்பால்நன்மையடைந்த கருணாநிதி



தமிழக இடைத் தேர்தலை பகிஷ்கரிக்கும்படி ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளைப் புறக்கணித்த வாக்காளர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியை வெற்றி பெறச் செய்துள்ளனர்.
தமிழகத்தின் மிகப் பெரிய கட்சிகளில் ஒன்றான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியனவும் தேர்தலைப் பகிஷ்கரிக்கும்படி விடுத்த வேண்டுகோள் புறக்கணிக்கப்பட்டதனால் ஜெயலலிதா புதிய சிக்கலை எதிர்நோக்கி உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சியில் தமிழக மக்கள் வைத்துள்ள நம்பிக்கை வலுப்பெற்றுள்ளதையே இடைத் தேர்தல் முடிவு வெளிக்காட்டி உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றிடமிருந்த தொகுதிகளை திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியே கைப்பற்றியுள்ளது.
"மைனாரிட்டி அரசு' என்று தமிழக அரசை அடைமொழி வைத்து அழைக்கும் ஜெயலலிதாவின் முடிவினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் எண்ணிக்கை தமிழக சட்டசபையில் அதிகரித்துள்ளது.
வாக்களிக்க விரும்பாதவர்கள் படிவம் ஒன்றை நிரப்பிக் கொடுக்கும் நடைமுறை இந்தியாவில் உள்ளது. ஐந்து தொகுதிகளிலும் சுமார் 250 பேர் அந்தப்படிவத்தை நிரப்பிக் கொடுத்துள்ளனர். ஜெயலலிதாவின் வேண்டுகோளை ஐந்து தொகுதியிலும் உள்ள மக்கள் புறக்கணித்ததனால் திராவிட முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுடன் விஜயகாந்த் நேருக்கு நேர் மோதி வெற்றி பெறுவார் என்று எதிர்பார்த்த ஜெயலலிதா ஏமாந்து போயுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டிருந்தால் இடைத் தேர்தலின் முடிவு சில வேளை மாறி இருக்கலாம். அல்லது திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் இலகுவாக வெற்றி பெற்றிருக்க முடியாது.
இடதுசாரிகளின் நிலை தமிழகத்தில் மிகவும் பரிதாபகரமாக உள்ளது. அவர்கள் போட்டி யிட்ட ஐந்து தொகுதிகளிலும் தோல்வியடைந்துள்ளனர். தமிழக ஆளுங்கட்சிக்கு மாற்றீடான எதிர்க்கட்சி இல்லாமையினால் ஆளுங்கட் சியை தட்டிக் கேட்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற தகுதியை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மெல்ல மெல்ல இழந்து வருகிறது. 2011 ஆம் ஆண்டு தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு முன்னர் பல முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய நிலைக்கு ஜெயலலிதா தள்ளப்பட்டுள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய பிரமுகர்களை வெளியேற்றாது அவர்களை அணைத்துச் செல்ல வேண்டிய கடமையை ஜெயலலிதா உணரத் தவறிவிட்டார்.
தமிழக சட்டமன்ற இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும்படி ஜெயலலிதா விடுத்த வேண்டுகோளை கம்பம், தொண்டாமுத்தூர், பாகூர், இளையான்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகிய தொகுதிகளில் உள்ள மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஐந்து தொகுதிகளிலும் 67 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான கம்பத்தில் 77 சதவீத வாக்குகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கோட்டையான பாகூரில் 72 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்ளன.
இடைத்தேர்தல் நடைபெற்ற ஐந்து தொகுதிகளிலும் உள்ள அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றின் ஆதரவாளர்கள் தமது தலைமையின் கட்டளையையும் மீறி வாக்களித்தனர்.
வாக்களிப்பு இயந்திரத்தில் உள்ள முறைகேடு, தமிழக அரசின் அதிகாரம், தாராளமான பண பரிமாற்றல் என்பவற்றின் காரணமாக தேர்தலைப் புறக்கணிப்பதென ஒருதலைப்பட்சமாக ஜெயலலிதா முடிவெடுத்தார். ஜெயலலிதாவின் முடிவுக்கு வைகோவும், டாக்டர் ராமதாஸும் கட்டுப்பட்டனர்.
திராவிட முன்னேற்றக்கழகத்துக்குச் சவாலாக உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், தமிழகத் தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாகப் பெருøம பேசும் வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோரின் வேண்டுகோளையும் மீறி ஐந்து தொகுதிகளிலும் உள்ள மக்கள் வாக்களித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் வேண்டுகோளைப் புறக்கணிக்க ஐந்து தொகுதிகளிலும் உள்ளவர்கள் தமக்குரிய பிரதிநிதியைத் தெரிவு செய்துள்ளனர்.
தேர்தலின் போது அதிகளவான வன் செயல் நடைபெறும் , ஆளும் கட்சி தனது அதிகாரங்களைத் துஷ்பிரயோகம் செய்யும் என்ற எதிர்க்கட்சிகளின் கோஷங்கள் இடைத்தேர்தலில் பொய்யாக்கப்பட்டது. இரண்டொரு சிறு சம்பவங்களைத் தவிர பெரியளவிலான தேர்தல் வன்செயல்கள் எவையும் நடைபெறவில்லை.
வெப் கமராக்கள் மூலம் வாக்களிப்பு கண்காணிக்கப்பட்டது. வன் செயல்கள், ஆள்மாறாட்டம் எல்லாம் இதனால் கட்டுப்படுத்தப்பட்டன.
இடைத்தேர்தலில் போட்டியிட்டவர்களின் செலவை ஜெயலலிதா குறைத்துள்ளார். வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுகிறது என்ற ஜெயலலிதாவின் பிரசாரமும் காற்றில் கரைந்துள்ளது. பலமான போட்டி இல்லாமையால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி அதிக பணத்தைச் செலவு செய்யாது தேர்தல் பிரசாரம் செய்தது.
இடைத்தேர்தல் நடைபெற்ற தொகுதிகளில் உள்ள மக்களுக்கு சட்டமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு ஒருவர் தேவை இல்லை என்ற ஜெயலலிதாவின் தீர்மானத்தை அத்தொகுதியில் உள்ள மக்கள் நிராகரித்து விட்டனர். தமது குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஒரு பிரதிநிதி தேவை என்பதை அத்தொகுதியில் உள்ள மக்கள் உறுதி படத் தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதாவின் இந்த அணுகுமுறை அவருக்கும் கட்சிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. தமது தேவையை நிறைவேற்றுபவருக்கு தமது ஆதரவு உண்டு என்பதை வாக்காளர்கள் வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளனர்.
வர்மா
வீரகேசரிவவாரவெளியீடு 23/08/09

Thursday, August 20, 2009

Miss Universal 2009

பகாமஸ் நாட்டின் தலைநகரான நகாசுவை நோக்கி உலகின் அத்தனை கண்களும் திரும்பியுள்ளன. 85 உலக நாடுகளின் அழகிகள் அங்கு வலம் வருவதால் அழகை ஆராதிக்கும் கண்கள் பகாமஸை உற்று நோக்கியுள்ளன. 1952 ஆம் ஆண்டு கலிபோர்னியாவில் முதன் முதலாக மிஸ் யூனிவர்ஸ் அழகிப் போட்டி ஆரம்பமானது. அன்றிலிருந்து இன்று வரை இப்போட்டியில் பங்குபற்றுவதற்காக உலக நாடுகள் அழகிகளைத் தேர்வு செய்கின்றன.
இந்தியாவைச் சேர்ந்த சுஸ்மிதா சென் 1994 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 2000ஆம் ஆண்டு இந்தியாவைச் சேர்ந்த லாரா தத்தா மிஸ் யூனிவர்ஸாகத் தேர்வு செய்யப்பட்டார். இவர்களின் தெரிவு தென் ஆசியாவில் இப்போட்டியைப் பற்றி அறியும் ஆவலைத் தூண்டியது. 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிஸ் யுனிவர்ஸ் தெரிவு செய்யப்படுவார்.





Tuesday, August 18, 2009

உற்சாகத்தில்தி.மு.கவினர் சோகத்தில் அ.தி.மு.கதொண்டர்கள்

தமிழக இடைத் தேர்தலைப் பகிஷ்கரிப்பதற்கு அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா கூறிய முக்கிய காரணிகளில் ஒன்றான மின்னணு வாக்கு இயந்திரத்தில் தில்லு முல்லு என்ற குற்றச்சாட்டு பிசுபிசுத்துப் போயுள்ளது.
மின்னணு இயந்திரத்தில் முறைகேடு எது
வும் செய்ய முடியாது எனக் கூறிய தேர்தல் ஆணையகம் முறைகேட்டை நிரூபிக்கும்படி வேண்டுகோள் விடுத்தது. மின்னணு வாக்கு இயந்திரத்தில் முறைகேடு உண்டு என்று பத்திரிகையாளர்கள் மாநாட்டில் உரத்துக் கூறிய ஜெயலலிதாவும் டாக்டர் ராமதாஸும் தங்கள் குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறிவிட்டனர். மின்னணு வாக்கு இயந்திரத்தில் குறைபாடு உண்டு என்று கூறி தேர்தலைப் பகிஷ்கரிப்பதனால் திராவிட முன்னேற்றக் கழகமும் தேசிய முற்போக்கு திராவிடக் கழகமுமே இலாபமடையப் போகின்றன.
விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சியைத்
தடுக்க வேண்டிய பாரிய பொறுப்பில் இருந்து ஜெயலலிதா தவறிவிட்டார். விஜயகாந்த் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக் கூடாது என்று திட்டமிட்டு முதல்வர் கருணாநிதி செயற்பட்டு வருகிறார். ஆனால், ஜெயலலிதாவோ விஜயகாந்த் வளர்வதற்காக விட்டுக் கொடுத்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழக சட்டமன்றத் தேர்தலிலும் தமிழக இடைத் தேர்தல்களிலும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிட்டபோது அதற்குச் சவாலாக விளங்கிய விஜயகாந்த் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியை நம்பி இடைத் தேர்தலில் களமிறங்கியுள்ளார்.
இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வாக்களிக்கக்
கூடாது என்று ஜெயலலிதா கட்டளை பிறப்பித்தபோதும் வாக்களிக்க விருப்பம் உடையவர்களை வளைத்துப் போடுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் விஜயகாந்தின் கட்சியும் போட்டியிடுகின்றன.
2011 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலும் இதே இயந்திரங்கள் தான் பாவிக்கப்படும் அப்போதும் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகமும் மத்தியில் காங்கிரஸ் கட்சியும் ஆட்சியில் இருக்கப் போகின்றன. அந்தத் தேர்தலையும் ஜெயலலிதா புறக்கணிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த இடைத் தேர்தலைப் போன்றே 2011 ஆம் ஆண்டும் சகல அரச அதிகாரங்களுடனும் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலைச் சந்திக்கும் அதற்காக பயந்து தேர்தலைப் புறக்கணிப்பாரா ஜெயலலிதா என்ற கேள்விக்கு அவர் இன்னமும் பதில் கூறவில்லை.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகமும், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன வாக்குப் பதிவு இயந்திரத்தில் குறை இருப்பதாகக் கூறுகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட இடதுசாரிகள் வாக்களிக்கும் இயந்திரத்தில் குறை இருப்பதாகக் கூறவில்லை.
இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் ஜெயலலிதாவின் முடிவை அக்கட்சியில் உள்ள பலர் ஏற்றுக் கொள்ளவில்லை. அதேவேளை, இதனை வெளிப்படையாக விமர்சிப்பதற்கு அவர்கள் தயங்குகின்றனர். ஜெயலலிதாவின் இந்த முடிவினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உற்சாகம் இழந்து உள்ளனர்.
தேர்தலில் வாக்களிப்பது அந்த நாட்டுப் பிரஜையின் ஜனநாயகக் கடமை. திராவிட முன்னேற்றக் கழகத்துக்குப் போட்டியிட உள்ள பலம் வாய்ந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தனது கட்டுப்பாட்டினுள் வைத்திருக்கும் ஜெயலலிதாவின் தீர்மானம் கட்சியின் முடிவு அல்ல என்பது வெளிப்படையானது. தனது தனிப்பட்ட தீர்மானத்தையே ஜெயலலிதா கட்சிக்குள் திணித்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஏற்பட்டிருக்கும் சிறு சலசலப்பும் ஜெயலலிதாவின் இந்தத் தீர்மானத்துக்குக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. முதல்வர் கருணாநிதி தனது வாரிசுகளை அரசியல் களத்தில் இறக்கி விட்டது போன்று ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியான சசிகலா தனது உறவினர்களை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் பொறுப்பான பதவிகளில் நியமித்துள்ளார்.
சசிகலாவின் நடவடிக்கைகள் பிடிக்காது அதனை விமர்சித்தவர்கள் மீது ஜெயலலிதாவின் கோபப் பார்வை திரும்பியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து அனிதா ராதாகிருஷ்ணன், என்.வி. சேகர் ஆகியோர் வெளியேற்றப்படுவதற்கு சசிகலாவும் காரணம் என்று நம்பப்படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து
வெளியேற்றப்பட்ட அனிதா ராதாகிருஷ்ணன் பத்தாயிரம் ஆதரவாளர்களுடன் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்துள்ளார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையுடன் முரண்பட்டிருப்பவர்களையும் சசிகலாவின் நடவடிக்கைகளைப் பிடிக்காது வெறுப்புற்றிருப்பவர்களையும் தன் பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் திராவிட முன்னேற்றக் கழகம் இறங்கியுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் புள்ளிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைவது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதகமாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சாதகமாகவும் உள்ளது. இதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள சில முக்கிய புள்ளிகளின் செல்வாக்கும் குறையும் சூழ்நிலையும் தோன்றியுள்ளது. அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டிய நிலை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு தோன்றி உள்ளது. கடந்த தேர்தலின்போது எதிரும் புதிருமாக செயற்பட்டு ஒருவர் மீது ஒருவர் வசைபாடியவர்கள் இன்று ஒரே மேடையில் தோன்றி ஒருவரை ஒருவர் புகழும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐந்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கியுள்ளது. வெற்றியின் சதவீதம் கூட வேண்டும். எதிர்த்துப் போட்டியிடுபவர்கள் கட்டுப்பணம் இழக்க வேண்டும் என்ற செயற்றிட்டத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் களத்தில் இறங்கியுள்ளது.
ஒரே ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விஜயகாந்த் இடைத் தேர்தலில் களமிறங்கி உள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றின் வாக்குகள் சிதறுவதற்குரிய சந்தர்ப்பம் இல்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் வாக்குகள் சிதறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் இலாபமடையப் போவது யார் என்ற கேள்விக்கான விடை இடைத் தேர்தலின் பின்னர் தெரிந்துவிடும்
.வர்மா


வீரகேசரிவாரவெளியிடு 16/08/09

Thursday, August 13, 2009

யசூசிஅகாசி

நம் உறவு முறைமிகவும் அலாதியானது வயதுக்கு மூத்தவர்களை பேர் சொல்லி அழைப்பதில்லை. அண்ணா அண்ணண்ணா,சின்னண்ணா,பெரியண்ணா,மூத்தண்ணா,ஆசைஅண்ணா,குட்டிஅண்ணா.

இதேபோன்றுதான் அக்கா,அக்கக்கா,சின்னக்கா,ஆசைஅக்கா,பெரியக்கா,குட்டிஅக்கா. பெரியப்பா இன்னருவர் இருந்தால் ஆசை அப்பா ,ஆசை அய்யா,சித்தப்பா, இவருக்கு போட்டியாக வேறுபெயர் இருப்பதாகத்தெரியவில்லை.

அண்ணனின் ம்கன் என்னை சித்தப்பா என்று கூப்பிடத்தெரியாது சித்தா என்றான்.அது ஏதோ புதுமுறை என்று நினைத்த அயலட்டையில் உள்ளவர்கள்தங்கடை சித்தப்பாவையும் சித்தா என்றுசுருக்கிவிட்டார்கள்.

அம்மாவை தங்கச்சி என்று சொல்லத்தெரியாத அம்மாவின் அண்ணன் முறையான ஒருவர் அன்னைச்சி என்றார்.அதுவும் ஒருபுதுமுறை எனநினைத்தசிலர் தங்கடை சொந்தக்காரரில் ஒருவரை அன்னைச்சி என்றார்கள்.

அம்மா தனது சகோதரனை அண்ணா என்று கூப்பிடுவதைப்பார்த்து நாங்களும் அவரை அண்ணா என்றுகூப்பிடுவோம்.

கொப்பரை கோயிலிலை கண்டனான்,
கொம்மா சந்தைக்குபோட்டா.
கொப்பர் பெரியாளே
கொம்மாவை வரச்சொல்லு
கொக்கா எங்கபோட்டா
அப்பா அம்மாவை ஓய் என்றுதான் கூப்பிடுவார்.
அம்மா, வாருங்கோ என்பா
மாமா, அப்பாவை ஓய் மச்சான் என்பார்

இப்ப எல்லாம் தலை கீழாப்போச்சு.புருசனை பேர்சொல்லித்தான் கூப்பிடுவார்கள்.அவரும் பெண்டிலை பேர் சொல்லி மரியாதையாக வாருங்கோ போங்கோ என்பார்.அந்தக்காலத்திலை ஒரு பெண்ணிடம் வீட்டுக்காரரின் பெயரைக்கேட்டபோது , வீட்டுக்காரரின் பெயரை சொன்னால் பாவம் என்று மறுத்து விட்டார். எந்த ஊர் என்று கேட்டபோது அதுதானே அவற்றை பேர் என்றார். ஊர் பெயர் சிதம்பரம்.

அம்மாவை பெரியவர்கள் சின்னவர்கள் எல்லோரும் அன்னச்சி என்பதுபோல்சில உறவுகள் பொதுச்சொல்லாக மாறிவிடும்.எனது தம்பி ஒருவன் என் மகளை எங்கு கண்டாலும் ஹலோ என்பான். அவனை என்மகள் ஹலோ சித்தப்பா என்பார். அவனை நாம் எல்லோரும் ஹலோ சித்தப்பா என்போம்.

கொழும்பிலை ஆம்பிளயள் அங்கிள்,பொம்பிளையள் அன்ரி வேறுமுறை தெரியாது. எனது அலுவலகத்தில் ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது. நான் எடுத்தேன். ஒரு பெண்குரல்
என்னுடன் வேலை செய்யும் ஒருவரக்கேட்டது. அவர் வெளியே போய்விட்டார் என்றேன்.
அங்கிள் அவருக்கு ஒரு மசேச் சொல்லுவியளா என்று கேட்டது பெண்குரல்
எல்லாவற்றயும் கவனமாகக்கேட்டுவிட்டு கடைசியில் , தங்கச்சி எனக்கு 22 வயது. நான் வேலைக்குச்சேர்ந்து மூன்றுமாதம் தான் என்றேன். குழைஞ்சி குழைஞ்சு மன்னிப்புக்கேட்டார். எனக்குவயசு 40 என்றும் நான் 10 வருடமாக அங்கு வேலை செய்வதும் அவவுக்குத்தெரியாது.

ஜேர்மனியில் உள்ள தனது மகளீடம் போவதற்காக எனது உறவினர் ஒருவர் கொழும்புக்கு வந்தார். அவரை எல்லோரும் அக்காசி என்றுதான் அழைப்போம். சிறுவயதிலிருந்தே கொழும்பில் வளர்ந்த என்மகளூக்கு அக்காசி என்ற சொல் புதிதாக இருந்தது. ஒருநாள் வாய்தடுமாறி அக்காசியை யசூசிஅக்காசி என்றார். இப்போ அக்காசி மறைந்து யசூசிஅக்காசி நிரந்தரமாகிவிட்டது.

அயலட்டை////////////////////////////////பக்கத்துவீடுகள்
கொப்பர்///////////////////////////////////அப்பா
கொம்மா//////////////////////////////////அம்மா
கொப்பு////////////////////////////////////அப்பா
கோத்தை//////////////////////////////////அம்மா
கொக்கா///////////////////////////////////அக்கா
பெண்டில்//////////////////////////////////மனைவி
வீட்டுக்காரர்////////////////////////////////கணவன்
குழைஞ்சு குழைஞ்சு/////////////////////////அசடுவ‌ழிதல

நன்றி:http://eelamlife.blogspot.com/2009_07_01_archive.html

Sunday, August 9, 2009

எம்.ஜி.ஆர் விசுவாசிகளூக்கு வலைவீசும் விஜயகாந்த்


தமிழக சட்டமன்ற இடைத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. முதல்வர் கருணாநிதி இல்லாமல் நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் வெற்றியைத் தேடிக் கொடுத்த துணை முதல்வர் ஸ்டாலினும் அமைச்சர் அழகிரியும் பிரசாரத்தை தொடங்கி விட்டனர். மத்திய, மாநில அமைச்சர்களும் கட்சிப் பிரமுகர்களும் வெற்றிக்காக களத்தில் இறங்கி உள்ளனர்.
விஜயகாந்தும் மனைவி பிரேமலதாவும் தமது கட்சி வேட்பாளருக்காக சூறாவளிப் பிரசாரத்தில் இறங்கி உள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டையான பர்கூரில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் விஜயகாந்தும் மனைவியும் களத்தில் இறங்கி உள்ளனர். விஜயகாந்தின் கட்சி வேட்பாளரின் வேட்பு மனு பர்கூரில் முதலில் நிராகரிக்கப்பட்டது. பின்னர் அவர் சுயேச்சை வேட்பாளர் என்று அறிவிக்கப்பட்டார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தேர்தலைப் புறக்கணிப்பதனால் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் சோர்ந்து போயுள்ளது.
இடைத் தேர்தலைப் புறக்கணித்த ஜெயலலிதா, யாருக்கும் வாக்களிக்க வேண்டாம் என்று தனது கட்சி ஆதரவாளர்களுக்கு உத்தரவிட்டார். இப்போது தனது நிலையில் இருந்து மாறிய ஜெயலலிதா வாக்களிக்க விருப்பம் இல்லை என்ற படிவத்தை நிரப்பிக் கொடுக்கும்படி கூறியுள்ளார். வைகோ, டாக்டர் ராமதாஸ் ஆகியோருடன் ஒரே மேடையில் தோன்றி தமது நிலைப்பாட்டை தொண்டர்களுக்கு எடுத்தியம்ப ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார்.
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் தோல்விக்குப் பின்னர் கூட்டணித் தலைவர்களைச் சந்திக்காத ஜெயலலிதா அவர்களுடன் கைகோர்த்து தனது கருத்தை நியாயப்படுத்தப் போகிறார். நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் கூட்டணித் தலைவர்களை ஜெயலலிதா உதாசீனம் செய்கிறார் என்ற கருத்து பரவலாக எழுந்தது. அவற்றுக்கெல்லாம் பதிலளிக்காத ஜெயலலிதா தனது நிலைப்பாட்டை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதற்காக கூட்டணித் தலைவர்களின் தயவை எதிர்பார்க்கிறார்.
இடைத்தேர்தல் நடக்கும் தொகுதிகளின் வாக்காளர்கள் மீது ஜெயலலிதா திணித்த கருத்து வெற்றியா தோல்வியா என்பதை தேர்தல் முடிவு வெளிப்படுத்தும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளை நம்பி களத்தில் நிற்கும் விஜயகாந்த் அந்த வாக்குககளைக் கவர்வதற்கு புதிய வியூகம் அமைத்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் தனக்கு வாக்களிப்பார்கள் என்ற நப்பாசை விஜயகாந்திடம் உள்ளது.
யாருடனும் கூட்டணி இல்லை. மக்களுடன் மட்டும் தான் கூட்டணி என்று மேடைதோறும் முழங்கிய விஜயகாந்த் தற்போது அடக்கி வாசிப்பது அவர் தன் மீதான நம்பிக்கையை இழந்து விட்டார் என்பதை வெளிப்படுத் துவதாக சிலர் கருதுகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்ற அச்சத்தினால் எம்.ஜி.ஆரின் ரசிகர்களை தன் பக்கம் இழுப்பதற்கான முயற்சியை விஜயகாந்த் ஆரம்பித்துள்ளார்.
எம்.ஜி.ஆர். ஆரம்பித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறுபவர்களும் வெளியேற்றப்படுபவர்களும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைகின்றனர். இந்த நிலையில் விஜயகாந்தின் வேண்டுகோளை யாரும் கணக்கெடுப்பதாகத் தெரியவில்லை. தேர்தல் பிரசாரத்தின்போது ஒருவர் மீது ஒருவர் சேற்றை வாரி இறைப்பது வழமை. ஆனால், அழகிரியின் பிரசாரம் சற்று மாறுபட்டதாக இருக்கிறது.
இடைத்தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று உங்கள் கட்சித் தலைவி கூறுகிறார். தலைவியின் சொல்லுக்கு மதிப்பளித்து வாக்களிக்காதீர்கள் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு அவர் ஆலோசனை கூறியுள்ளார்.
விஜயகாந்தும், திராவிட முன்னேற்றக் கழகமும் வெற்றிக்காக தேர்தல் பிரசாரத்தில் மும்முரமாக களத்தில் காரியமாற்றும் வேளையில் இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி தனது பிரசாரத்தில் மெத்தனமாக இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றியைப் பெற்றுத் தந்திடும் என்ற எதிர்பார்ப்பு காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலரிடம் உள்ளது.
இடைத்தேர்தலில் போட்டியிட வாசனின் ஆதரவாளர்களுக்கு சந்தர்ப்பம் கொடுக்கவில்லை என்பதனால் கட்சிக்குள் சிறு சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவிடம் தோல்வியடைந்தாலும் பரவாயில்லை, விஜயகாந்திடம் தோல்வியடையக் கூடாது என்ற எண்ணத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் முனைப்புடன் உள்ளனர். பிரசாரப் பேச்சாளர்கள் யாரும் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சி தேர்தல் பரப்புரையை ஆரம்பித்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் துணையுடன் தமிழகத் தேர்தல்களைச் சந்தித்து வந்த இடதுசாரிகள் இம்முறை பலம் வாய்ந்த கூட்டணிகளின் ஆதரவு இல்லாமல் இடைத் தேர்தலைச் சந்திக்கின்றனர். தமிழகத்தில் தமது பலத்தைக் காண்பிக்க வேண்டிய சூழ்நிலை இடதுசாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
விஜயகாந்த் அரசியலுக்கு வந்ததன் பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகள் சிதறி விஜயகாந்துக்குச் சென்றன. இந்த இடைத்தேர்தலில் அப்படி ஒரு நிலை வரக் கூடாது என்பதற்காக தலைவியின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வாக்களிக்க வேண்டாம் என்று அழகிரி ஆலோசனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சிக்குக் கிடைத்த பத்து சதவீத வாக்குகளினால், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த முடியாது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உதவியுடன் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த முடியும்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் ஜெயலலிதாவின் சொல்லுக்கு கட்டுப்பட்டு இடைத்தேர்தலில் வாக்களிக்காமல் ஒதுங்கி இருப்பார்களா என்பதும் தமது பரம வைரியான திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்கு விஜயகாந்துக்கு வாக்களிப்பார்களா என்பது தேர்தலின்போது தெரிந்து விடும்.
வர்மா
வீரகேசரிவாரவெளீயீடு 09/08/09

கூத்தும் கும்மாளமும்

சிவராத்திரி எண்டால் எங்களுக்கு உசார்வந்துவிடும். விடியவிடிய கன இடங்களீலை கூத்துநடக்கும்.அந்த இரவு மறக்கமுடியாத இரவாக இருக்கும்.கூத்துப்பாக்க எண்டு வீட்டிலை சொல்லிப்போட்டு வெளீக்கிட்டா கன சோலியளை செய்வம்.
அண்ணாச்சாமி வாத்தியாரின்ரை சீன் கன இடங்களூக்குப்போகும்.சீன்,லைற் எஞ்ஜின். ஸ்பீக்கர், மேக்கப் எண்டு எல்லாத்தையும் அண்ணாசாமிவாத்தியார் பொறுப்பெடுப்பார். முல்லைத்தீவு,மீசாலை,அல்வாய்,சமரபாகு,கொடிகாமம் எண்டு அஞ்சு இடத்திலை அவற்றை ஆக்கள்தான் சீன் கட்டுவினம்.
நாங்கள் கூத்துப்பாக்கஎண்டுசொல்லிப்போட்டு வேறை அலுவல்தான் பாப்பம்.இளனி களவெடுக்கிறது, மரவள்ளிக்கிழங்குபிடுகிங்கி அவிக்கிறது,படலையை களட்டி அவற்ரைகோவக்காரரின்ரை வீட்டிலை கட்டுறது,வாளைக்குலை வெட்டுறது எண்டுஎங்கடை வேலை விடியவிடியநடக்கும். சிவராத்திரிக்கு மூண்டாவது ஷோ எண்டாலும்கட்டாயம் பாப்பம்.
நடிகமணீ வி.வி. வைரமுத்துவின் மயானகாண்டம் எங்கையாவது நடக்கும் கட்டாயம் மயானகாண்டம் பாத்துப்போட்டுத்தான் படம் பாப்பம்.வைரமுத்துக்கு சோடியாக அரியாலை ரத்தினம் ஸ்திரிபாட் .சந்திரமதியாகரத்தினம் அழுதா சனமும் அழும். அச்சுவேலி மார்ககண்டுதான் யமனாக வருவார். அவருக்கு பேரேயமன் மார்க்கண்டுதான்.
மயானகாண்டம் நடக்கமுதல் பவூன் சின்னதுரையும் சீனா பானாவும் சனத்தசிரிக்கபண்ணுவினம்.ஒரு இடவெளி பாத்து பருத்துறைக்குப்போய் தோசை அப்பம் சாப்பிடுவம்.
கூத்துப்பாக்ககனசனம் வரும் கொஞ்சப்பேர்தான் விரதகாறர். மிச்சப்பேர் பம்பலுக்கு வாறவை.அது அந்தககாலம். இனிஅது போலைவராது.

கூத்து.........................நாடகம்
கும்மாளம்/குஷி......சத்தோசம்
உசார்..............உற்சாகம்
சீன்............நாடகதிரைச்சீலை
அலுவல் .......வேலை
படலை........வீட்டுக்குவெளீயே உள்ளகதவு
பம்பல்.......பொழுதுபோக்கு
ஸ்திரிபாட்......பெண் வேடமிடும் ஆண்
பவூன்..........நகைச்சுவை நடிகர
நன்றி;http://eelamlife.blogspot.com/2009/07/blog-post_10.html

Sunday, August 2, 2009

ஜெயலலிதா ஒதுங்கியதால்வெல்வாரா விஜயகாந்த்?


இடைத் தேர்தலுக்காக தமிழகம் களை கட்டத் தொடங்கி விட்டது. தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகளான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தேர்தலைப் புறக்கணிக்கின்றன.
திராவிட முன்னேற்றக் கழகம், கொம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி, பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு கடும் போட்டியாக விஜயகாந்த் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாகூர் தொகுதியில் போட்டியிடுவதற்கு வேட்புமனுத்தாக்கல் செய்த விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த வி.சந்திரனின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. மாற்று வேட்பாளராக சுந்தர்ராஜன் வேட்புமனு தாக்கல் செய்தார். அவரின் வேட்புமனுவும் நிராகரிக்கப்பட்ட தால் பாகூரில் விஜயகாந்தின் ஆதரவாளர்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
அதிகார பலம், பண பலம், மின் வாக்களிக்கும் இயந்திரத்தில் உள்ள குறைபாடு ஆகியவற்றின் காரணமாக இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதற்கு ஜெயலலிதா முடிவு செய்தார். நாடாளுமன்றத் தேர்தலின் போது ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்த தலைவர்கள் இன்று ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்துள்ளனர். கூட்டணித் தலைவர்களுடன் ஆலோசனை செய்யாது தேர்தலைப் புறக்கணிக்கும் முடிவை தன்னிச்சையாக எடுத்தõர் ஜெயலலிதா.
ஜெயலலிதாவின் முடிவுக்கு வைகோவும் டாக்டர் ராமதாஸும் கட்டுப்பட்டனர். இடதுசாரித் தலைவர்கள் ஜெயலலிதாவின் சொல்லுக்குக் கட்டுப்படாது இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் ஜெயலலிதா தேர்தலில் வாக்களிக்க வேண்டாம் என்று தனது கட்சிக்காரர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இடைத் தேர்தலில் இருந்து ஒதுங்கியதும் விஜயகாந்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என்ற எதிர்பார்ப்பு உள்ளமை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியின் வாக்குகள் அனைத்தும் விஜயகாந்தின் கட்சிக்குக் கிடைத்தால் மட்டுமே கடும் போட்டியை உருவாக்க முடியும். விஜயகாந்தின் ஆதரவாளர்களினால் திராவிட முன்னேற்றக் கூட்டணிக்கு தோல்வியை ஏற்படுத்துவது முடியாத காரியம்.
பாகூர், தொண்டாமுத்தூர், கம்பம், இளையான் குடி, ஸ்ரீ வைகுண்டம் ஆகிய தொகுதிகளில் நடைபெறும் இடைத் தேர்தல்களில் வாக்களிக்க வேண்டாம் என்று ஜெயலலிதா தனது கட்சியினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். வைகோவும் டாக்டர் ராமதாஸும் இதே முடிவைத் தான் எடுத்துள்ளனர். இடைத் தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள மக்களின் குறைகளைத் தீர்க்கும் தார்மிகக் கடமையில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியன விலகி விட்டன. வெற்றி பெற முடியாது என்ற பயத்தினால் ஒதுங்கியிருக்கும் தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சிகள் அத்தொகுதியில் உள்ள தமது ஆதரவாளர்களை நட்டாற்றில் விட்டு விட்டன.
ஜனநாயக நாட்டில் வாக்களிக்கும் உரிமையை தடை செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. வன்னியில் அச்சுறுத்தல் போன்றே இதனையும் கருத வேண்டும். தமிழகத்தை ஆட்சி செய்யும் கட்சிக்கும் அதன் கூட்டணிக் கட்சிக்கும் தகுந்த பாடம் படிப்பிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கும் வாக்காளர்களை எதிர்க்கட்சித் தலைவர்கள் கட்டிப் போட்டுள்ளனர்.
இடைத் தேர்தல் நடைபெறும் ஐந்து தொகுதிகளிலும் விஜயகாந்தின் கட்சி மூன்றாவது இடத்தையே பிடித்தது. ஒரு தொகுதியிலாவது வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்க இருக்கும் விஜயகாந்த் அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியின் வாக்குகளை தனது பக்கம் சேர்க்கும் முயற்சியில் முழு மூச்சாக இறங்கியுள்ளார்.
இடைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் தமது வாக்கு வீதத்தை அதிகரிக்கும் முனைப்பில் செயற்படுகின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆதரவாளர்களைக் குறி வைத்தே ஏனைய கட்சிகள் தமது பிரசாரத்தை தீவிரப்படுத்தி உள்ளன.
இந்திய தேசியக் கட்சியான பாரதீய ஜனதாக் கட்சியின் நிலைமை பரிதாபமாக உள்ளது. தமிழகத்திலும் போட்டியிடுகிறோம் என்பதை வெளிக் காட்டுவதற்காகவே பாரதீய ஜனதாக் கட்சி இடைத் தேர்தலில் களமிறங்க உள்ளது. சரத்குமார், கார்த்திக் ஆகியோரின் உதவியுடன் நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த பாரதீய ஜனதாக் கட்சி தனியாகக் களமிறங்கியுள்ளது. கடந்த காலங்களில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றின் உதவியுடன் தமிழகத் தேர்தல்களில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற முடியாது என்ற நிலையிலும் தேர்தலைச் சந்திக்கத் தயாராகிவிட்டது.
இதே நிலையில் தான் இடது சாரிக் கட்சிகளும் உள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் இணைந்து வெற்றியை சுவைத்த இடதுசாரிக் கட்சிகள் தமது இருப்பை வெளிக்காட்ட தேர்தலைச் சந்திக்கின்றன.
இடைத் தேர்தலைப் புறக்கணிக்கும் ஜெயலலிதாவின் முடிவு விஜயகாந்துக்கு சாதகமாக அமையவுள்ளது. கடந்த சட்ட மன்றத் தேர்தலை விட அதிகமான வாக்குகளை விஜயகாந்தின் கட்சி வேட்பாளர்கள் பெறுவார்கள். விஜயகாந்த் பெறப்போகும் வாக்குகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளாகவே இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
ஸ்ரீ வைகுண்டம் தொகுதி காங்கிரஸுக்கு சாதகமானதாக உள்ளது. ஏனைய நான்கு தொதிகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணிக்கு சார்பானதாக உள்ளன.
ஜெயலலிதா வைத்திருக்கும் இப் பரீட்சையில் தமிழக முதல்வர் வெற்றி பெற்றால் ஜெயலலிதா புதிய வியூகங்களை வகுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.
வர்மா,
வீரகேசரிவாரவெளியீடு
02/08/09

அடுப்படி வைத்தியம்

எனது அம்மம்மா அடிக்கடி சொல்லும் வசனம் "கறி புளி முப்பத்திரண்டும் முடிஞ்சுபோச்சு". அந்த முப்பத்துரண்டுமென்னவென்று எனக்குத்தெரியாது. அம்மம்மாவை ஊரில் உள்ள உறவினர்கள் எல்லோரும் அப்புஅம்மா என்றுதான் அழைப்பார்கள்.நாங்களும் அவரை அப்புஅம்மா என்றுதான் கூப்பிடுவோம்..அயலவர்கள் மருந்தாச்சி என்பார்கள். அம்மாவின் தகப்பன் வைத்தியர். இதுபரம்பரைத்தொழில்.

அப்புஅம்மாசொல்லும் முப்பத்திரண்டும் முடிஞ்சுபோச்சு என்பதை அம்மாவும் அடிக்கடி சொல்வார். முப்பத்திரண்டும் என்னவென்று அம்மாவைக்கேட்டேன்.அம்மா சரியானபதில் சொல்லவில்லை.அப்புஅம்மாவிடம் கேட்டேன். அப்புஅம்மாசொன்னபதிலை நம்பமுடியவில்லை இப்படியும் இருக்குமா என்றசந்தேகம் மனதைக்குடைந்தது.

அம்மாவின் தகப்பனை உறவினர்கள் அப்பு என்பார்கள். நாங்களளும் அப்பு என்றே கூப்பிடுவோம். அயலவர்கள் மருந்தப்பு என்பார்கள். அவருடையபெயர் சிலம்பு என்பது பலருக்குத்தெரியாது.

ஜனனம் மரணம் இரண்டையும் நாடிபிடித்து சொல்லிவிடுவார்.நாடியைப்பிடித்து நோயைசொல்லிவிடுவார்.நோயாளியின் கையைப்பிடித்து அவர் இரண்டு நாள் தவணை சொன்னால் கொழும்பில் உள்ள உறவினர்களூக்கு தந்தி அடித்துவிடுவார்கள். சிலநோயளிகளைப்பார்த்து அவர் எதுவும் பேசாமல் போவார் அப்போது உறவினர்கள்மருந்தப்பு ஒண்டும் பற‌யாமல் போறியள் எனபார்கள்.அவர் ஒண்டும் பேசாதுபோனால் காரியத்தைப் பார்க்கவேண்டியதுதான்.

அப்புவுடன் சோர்ந்து இருந்ததனால் அப்புஅம்மாவும் அங்கீகரிக்கப்படாத வைத்தியரானார்.
முப்பத்திரண்டும் என்றால் குசினியில் உள்ள மஞ்சள்,மிளகு.வெந்தயம்,சீரகம் உள்ளி,வெங்காயம்,பெருங்காயம் போன்றவற்றுடன் நோய்தீர்க்கும் சில மரக்கறிகள்என அப்புஅம்மா கூறியதை சிறு வயதில் நான் நம்பவில்லை.

சுமார் 10 வருடங்களுக்குமுன்னர் கிச்சன் கிளினிக் எனும் கட்டுரை கல்கி சஞ்சிகையில் பிரசுரமானது. இலகுவாககிடைக்கக்கூடியஇயற்கைமூலிகள் 64 உள்ளன. அவற்றில் 32 எமது வீட்டுசமையறையில் உள்ளனஎன கல்கியில் படித்தபின்புதான் அப்புஅம்மாவைப்பற்றிபூரணமாக அறியமுடிந்தது.

தங்கச்சியும் மனிசியும் முப்பத்திரண்டும் முடிஞ்சு போச்சு எண்டு சொல்லத்தொடங்கிட்டினம்.

நாடி...................மணிக்கட்டில் உள்ள இரத்தம் ஓடும் நரம்பு
தவணை...............நோயாளி உயிருடனிருக்கும் காலம்.
தந்தி அடிப்பது..........உறவினர் சாகப்போகிறா என்ற அறிவிப்பு
பறயாமல்..............எதுவும் சொல்லாது
காரியம்................இறுதிக்கிரிகைக்கான எற்பாடு
குசினி/அடுப்படி ..................சமயலறை
நன்றி:
http://eelamlife.blogspot.com/2009_07_01_archive.html