Showing posts with label நாடகம். Show all posts
Showing posts with label நாடகம். Show all posts

Tuesday, March 14, 2023

தெரிந்த சினிமா தெரியாத சங்கதி

வி.சி.கணேசன் எனும் நடிகரின் உண்மையான அடையாளத்தை மறைத்து சிவாஜி என உலகுக்கு அடையாளப்படுத்திய நாடகம் தான்  ’சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்’ எனும் நாடகம். அந்த நாடகத்தில் நடித்ட வி.சி. கணேசன் வீர சிவாஜியாக வாழ்ந்ததால் சிவாஜி எனும் பெயர் அவருக்கு நிலைத்து விட்டது.

அறிஞர் அண்ணா எழுதிய’சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்’ எனும் நாடகத்தில் நடிப்பதற்கு முதலில் தெரிவானவர் எ.ம்.ஜி.ஆர். அதன் பின்னர் பலருடைய பெயர் பரிசீலிக்கப்பட்டு இறுதியில் வி.சி.கணேசன் சிவாஜியாக நடிப்பதென  முடிவு செய்யப்பட்டது. 

11 வயதில் அரிதாரம்  பூசி நாடக  மேடையில் அரங்கேறியவர் சிவாஜி.  பரமக்குடியில் கதரின் வெற்றி என்ற நாடகம் நடந்தது. அப்போது கணேசனுக்கு 11 வயதுதான். அப்போது பொன்னுசாமி பிள்ளை நாடகக் கம்பெனியில் இருந்த  கணேசன், கொஞ்சநாளில் அதிலிருந்து விலகி சரஸ்வதி கான சபாவில் சேர்ந்தார். அந்த நாடகக்குழுவை சில பங்குதாரர்களோடு சேர்ந்து எம்.ஆர்.ராதா நடந்திவந்தார். அந்த நாடகக் குழு சென்னைக்குச் சென்றபோது பங்குதாரர்களுடன் பிரச்சினை ஏற்பட்டு ராதா விலகிவிட்டார். அதன் பிறகு கேரளத்தைச் சேர்ந்த கிருஷ்ணப்பிள்ளை அந்தக் குழுவை நடத்தும் பொறுப்பை ஏற்றார்.கணேசன்    மங்கள கான சபாவில் இணைந்தார். அதை விலைக்கு வாங்கிய கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அதற்கு என்.எஸ்.கே. நாடக சபா என்று பெயரிட்டார். சில நாட்களிலேயே கலைவாணர் லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிறை செல்ல நேர்ந்தது. சகஸ்ரநாமத்திடம் பொறுப்பைத் தந்தார். அங்கிருந்த நடிகர் கே.ஆர்.ராமசாமிக்கு அது பிடிக்காமல் வெளியேறினார். அவருடன் டி.என்.நாராயணசாமியும் கணேசனும் வெளியேறி  மூவரும் நேராக அறிஞர் அண்ணா நடத்திவந்த திராவிட நாடு பத்திரிகை அலுவலகத்தில் சேர்ந்தார்கள்.  அங்கே சின்னச் சின்ன வேலைகளை கணேசனும் மற்றவர்களும் செய்தார்கள்.

  திராவிடர் கழகத்தின்   ஏழாவது சுயமரியாதை மாநாட்டில்   அரங்கேற்றுவதற்காக  ’சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்’  எனும் நடகத்தை அண்ணா எழுதினார்.  அந்த நாடகத்தைத் தயாரிக்கும் பொறுப்பை  டி.வி.நாராயணசாமியிடம் ஒப்படைத்த அண்ணா அவரை சிவாஜியாக நடிக்கும்படி சொன்னார்.  ‘மாயா மச்சீந்திரா’ படம் அப்போது வெளியாகி இருந்தது.  அதில் எம்ஜிஆர் மிகவும் அருமையாகக் கத்திச்சண்டை போட்டு நடித்திருந்தார். அதைப் பார்த்திருந்த நாராயணசாமி, நாடகத்தில் சிவாஜி வேடத்திற்கு எம்ஜிஆர் தான் பொருத்தமாக இருப்பார் என்று  எம்ஜிஆரை  அண்ணாவுக்கு  அறிமுகம் செய்துவைத்தார். அன்றுதான்  எம்ஜிஆர்  முதன் முதலாக அண்ணாவைச் சந்தித்தார். பிற்காலத்தில் அரசியலில் அண்ணாவின்  பெயரிலான கட்சியை ஆரம்பிப்பேன் என எம்.ஜி.ஆர் கனவிலும் நினைத்திருக்க மாட்டார்.  இன்று நாங்கள் பார்க்கும் எம்.ஜி.ஆருக்கும் அன்றைய எம்.ஜி.ஆருக்கும் இடையில் நிறைய வித்தியாசம், வேறுமைகள்  இருந்தன. கதர் உடை,கழுத்தில் உருத்திராட்சக் கொட்டை, நெற்றியில் விபூதிப்பட்டை என  சைவப்பழமாகக் காட்சியளித்தர் எம்.ஜி.ஆர்.

எம்.ஜி.ஆருன் கட்டுமஸ்தான உடல், முக கவர்ச்சி, சிவப்பு நிறம் எல்லாம் அண்ணாவைக் கவர்ந்தன. வீர சிவாஜி எம்.ஜி.ஆர் தான் என முடிவு செய்தார் அண்ணா. நாடக வசனங்கள் எம்.ஜி.ஆரிடம் கொடுக்கப்பட்டன. சத்திரபதி சிவாஜிக்கான உடைகள் தைக்கப்பட்டன.அப்போது   ‘ராஜகுமாரி’ படத்தில் கதாநாயகனாக நடித்துக்கொண்டிருந்தார் எம்ஜிஆர். ஒத்திகையின் போது   ஒருசில காட்சிகளை மாற்றியமைத்தால் நன்றாக இருக்குமே டி.வி. நாராயணசாமியிடம் சொன்னார் எம்ஜிஆர்.அண்ணாவுக்கு அதில் ஆட்சேபனை ஏதும் இருக்கவில்லை. அண்ணாவுக்கு நேரமில்லை என்றால், தான் அந்தத் திருத்தங்களைச் செய்துதருவதாக ‘ராஜகுமாரி’ பட இயக்குநர் ஏ.எஸ்.ஏ.சாமி சொன்னார். அண்ணா பெருந்தன்மையோடு அதற்கும் ஒப்புக்கொண்டார். அப்படியிருந்தும் சிவாஜி வேடத்தில் நடிப்பதா வேண்டாமா என்ற குழப்பம் எம்ஜிஆருக்கு ஏற்பட்டது.

சாமியின் அறிவுரையின் பிரகாரம்  அறிவுரை கூற, அண்ணாவின் சிவாஜி நாடகத்தில் நடிக்க இயலாது என்று சொல்லி விலகினார் எம்ஜிஆர்.அதன் பிறகு நடிகர் எஸ்.வி.சுப்பையாவை சிவாஜி வேடத்தில் நடிக்க வைக்க ஒரு முயற்சி நடந்தது. சுயமரியாதை இயக்கம் கடவுள் மறுப்பு பேசும் இயக்கம் என்று கூறி மறுத்துவிட்டார் சுப்பையா. ‘பராசக்தி’யில் பூசாரியாக நடித்த கே.பி.காமாட்சி அப்போது நாடகங்களில் முக்கிய நடிகராக இருந்தார். அவரையும் பரிசீலித்தார்கள்.  அவரும் சரிப்பட்டு வரவில்லை..


 மாநாடு நடக்கும் நாள் நெருங்கிக்கொண்டிருந்தது.சிவாஜியாக நடிப்பதற்கு எவரும் பொருந்தவில்லை.   திராவிட நாடு அலுவலகத்தில் கே.ஆர்.ராமசாமி, கணேசன், சிவசூரியன், கிருஷ்ணன், சிதம்பரம் போன்ற நடிகர்களும் இருந்தார்கள். நம்ம கணேசனை சிவாஜி வேடத்தில் போட்டால் என்ன என்று  சிதம்பரம் கேட்டார். நாராயணசாமி அண்ணாவிடம் சொன்னார்.   "கணேசன் பெண் வேடங்களில் நடித்துப் பார்த்திருக்கிறேன்..." என்று அண்ணா, இழுத்தார். தயார் செய்துவிடலாம் என்று நம்பிக்கையளித்தார் நாராயணசாமி. கணேசனிடம் நாராயணசாமி கேட்டார்சிவாஜி எங்கே நான் எங்கே என கணேசன் மறுத்தார். நாராயணசாமி நம்பிக்கையூட்டினார். அந்த நம்பிக்கைதான் கணேசனை சிவாஜியாக மாற்றியது.

முயற்சித்துப்பார் கணேசா... உன்னால் முடியும்என்றார் அண்ணா.   தொண்ணூறு பக்க வசனங்களையும் கணேசனிடம் கொடுத்த அண்ணா  படித்துப்பார். நான் மாலை வருகிறேன் என்று சொல்லி வீட்டிற்குச் சென்றுவிட்டார்.  அப்போது காலை 6 மணி மாலை 6 மணிக்கு வந்து படித்தாயா என்று கணேசனிடம் கேட்டார். கணேசன் உற்சாகத்தோடு அண்ணாவை ஒரு நாற்காலியில் உட்காரச் சொன்னார். அண்ணா எழுதித்தந்த அத்தனை வசனங்களையும் கணேசன் பேசி நடித்துக் காண்பித்தார். அக்கம்பக் த்தில் இருந்தவர்களெல்லாம் கணேசனின் கம்பீரக் குரல் கேட்டுக் கூடிவிட்டார்கள்


சிவாஜியின் வீர வசன உச்சரிப்பைக் கேட்ட அண்ணாவின் கண்ண்களில்  இருந்து  கண்ணீர் வெளியேறியது. கணேசனைக் கட்டித்தழுவிய  அண்ணா"இனி நீதான் சிவாஜி!" - என்றார். நாடகத்துக்கு நான்கு நாட்கள்தான் இருந்தன. எம்ஜிஆருக்காகத் தைக்கப்பட்ட உடைகள் கணேசன் அளவுக்குத் திருத்தித் தைக்கப்பட்டன. முடியாத இடங்களில் பஞ்சு வைத்து அடைக்கப்பட்டது.அப்போது கணேசனுக்கு எம்ஜிஆரைவிட மெலிந்த தேகம். ஏழாவது சுயமரியாதை மாநாடு சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிர்ப்புறம் நடந்தது. அங்கிருந்த பெரிய திரையரங்கில் அண்ணாவின்சிவாஜி கண்ட இந்துராஜ்ஜியம்நாடகம் அரங்கேறியது. நாடகம் மூன்று மணிநேரம் நடந்தது. நாடகத்தில் காகப்பட்டராக அண்ணாவே நடித்தார்.

நாடகத்தை முழுவதும் பார்த்து ரசித்த தந்தை பெரியார் மேடையேறிப் பேசினார்: "நான் பத்து மகாநாட்டில் சொல்ல வேண்டிய கருத்துக்காளை ஒரே நாடகத்தில் கூறிவிட்டார் அண்ணா. சிவாஜி வேடத்தில் குறுக்கும் நெடுக்கும் ஓடிக்கொண்டு, மிகச் சிறப்பாக நடித்த அந்தச் சின்னப்பையன் யார்?" - எனக் கேட்டர்.அவன்தான் கணேசன் என்று சொல்லி, பெரியார் முன்பு கணேசனை அழைத்துவந்து நிறுத்தினார்கள்.

  கணேசனைப் பார்த்த்த  பெரியார் : "நீதான் கணேசனா? இல்லை... இல்லை... இன்று முதல் நீ சிவாஜி!"  என்றார். அன்று முதல் அவர் உலகமே போற்றிய நடிப்பு மேதை சிவாஜி கணேசன் எனப் போற்றப்பட்டார். சிவாஜி கணேசன் என்ற பெயர் தந்தை பெரியார எனக்குப்போட்ட பிச்சை என்று பின்னாளில் தனது சுயசரிதையில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டிருந்தார்   நடிகர்திலகம்.

அண்ணா எழுதுவதர்கு முன்னர் வீர சிவாஜி நாடகம் பலரால் மேடையேற்றப் பட்டது. அண்ணாவின் வசனமும், கணேசனின் நடிப்பும் நாடக  உலகில் புதியதொரு அத்தியாயத்தை உருவாக்கியது.

Friday, March 21, 2014

நடிப்பின் மூலம் திறமையை வெளிப்படுத்துவதும் கலைதான்

நடிப்பின் மூலம் திறமையை வெளிப்படுத்துவதும் கலைதான்

உடுவை தில்லை நடராஜா.

அரசில் உயர் பதவி வகிப்பவர். இலக்கிய உலகில் தனக்கென‌ ஒரு இடம் பிடித்து வைத்திருப்பவர். ஆன்மீகப் பக்கத்திலும் தடம் பதித்தவர். ஓய்வின்றி வேலை செய்யும் நிலையிலும் நாடகத்துக்கென நேரம் ஒதுக்கி நாடக மேடையிலும் தனது முத்திரையைப்பதித்தவர் உடுவை தில்லை நடராஜா.


மாணவப்பருவத்திலேயே பத்திரிகைகளில் ஆக்கங்களை எழுதி இருந்தார். தில்லை நடராஜா என்ற பெயரில் வேறு இருவர்  எழுதிய ஆக்கங்களை இவர் எழுதியதா சிலர் பாராட்டிய போது, தனக்கென ஒரு தனித்துவமான பெயர் வேண்டும் எனச்சிந்தித்து உடுவை தில்லை நடராஜா என்று தன‌து தனித்துவத்தை அடையாளப்படுத்தினார். 

சில்லையூர்,தாளையடி தெளிவத்தை, வதிரி என ஊர்ப் பெய‌ரைச் சொன்னதும் எழுத்தாளர்களின் பெயர்  பிரதிபலிப்பது போல உடுவை என உச்சரித்தாலே தில்லை நடராஜா என்ற பெயர் மனதிலே ஒட்டிக்கொள்ளும். 

உடுப்பிட்டி அமெரிக்க மிஷன் கல்லூரியில் க.பொ.த[சா/தா] தரம் வரை படித்தபின் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தரம் படித்தார்.மாணவப்பருவத்திலே நடிக்க ஆரம்பித்த உடுவை தில்லை நடராஜா அரசில் உயர் பதவி வகித்தபோதும் நடிப்பைக் கைவிடவில்லை. நடிகர்கள் கேவலமானவர்கள் அல்லர். உயர்வாகப்பார்க்கப்பட வேண்டியவர்கள் என நிரூபித்துள்ளார். தன‌து நாடக அனுபவங்களை மனம் திறந்து வெளிப்படுத்துகிறார். 

கே; சிறுவயதிலேயே எழுத்து நாடகம் என  இரண்டிலும் தடம் பதித்தீர்கள். இது எப்படிச்சாத்தியமானது? 

ப; அப்பாதான் காரணம். பாடசாலையில் படிக்கும் போதே புத்தகங்கள் வாங்கித்தருவார்.கூட்டங்கள், நாடகம், படம் ஆகியவற்ருக்குப் போகும் படி கூறுவார்.கல்கண்டு,கரும்பு ஆகிய புத்தகங்களை விரும்பிப் படித்தேன்.ப‌டித்து முடிந்ததும் கதையைக்கேட்பார்.படம் ,நாடகம் என்றாலும் அப்பபடித்தான். இலக்கியம், அரசியல் கூட்டங்களுக்குப்போனால் அங்கு ந‌டைபெற்றதைக் கூறவேண்டும். மறுநாள் பத்திரிகையில் நான் சொல்லாத தகவல் ஏதும் வந்தால் ஏன் சொல்லவில்லை என்று கேட்பார். அந்தப் பயிற்சி பின்னாளில் உயர் பதவி வகிக்கும் போதும் எனக்கு உதவுகிறது.


கே; மாணவப்பருவத்து எழுத்துக்கு வரவேற்பு எப்படி இருந்தது?

ப; பத்திரிகைகளில் எனது பெயருடனும்,படத்துடனும் கதைகள் பிரசுரமானபோது தனி உலகத்தில் மிதந்தேன். மாணவர்களும் ஆசிரியர்களும் என்னைப்பற்றி உயர்வாகப்பேசினர். ஈழநாடு,சுதந்திரன் ஆகியவற்றில் எனது எழுத்துக்கள் வெளியாகின. அப்போதே சில தொடர்கதைகளும் எழுதினேன். ராஜகோபல், சிவகுருநாதன் ஆகியோர் என்னை உற்சாகப்படுத்தினர்.அப்பா வேலை செய்த யாழ்.தில்லைபிள்ளை லக்ஷ்மி விலாசில் டொமினிக் ஜீவா போன்றவர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.


 கே.கே.எஸ் வீதியில் உள்ள தமிழ்ப் பண்னை புத் சாலை,லங்கா புத்தகசாலை,மறவன்புலோ சச்சிதானந்தத்தில் காந்தளகம் அச்சகம் ஆகியவற்றுக்கு அடிக்கடி போவதனால் அதிகமான புத்தகங்கலைப் ப‌டிக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. காசு கொடுக்காமல் அதிக புத்தகங்களைப் படித்தேன்.பின்னர் அரசு காசுதந்து ஆலயங்களுக்குப்போய் ஆய்வு செய்யச்சொன்னது. தணிக்கை சபை உறுப்பினராக இருந்ததனால் படம் பார்க்க காசு தந்தார்கள். இவை எல்லாம் மற்றவர்களை விட எனக்குப்புதுமையான அனுபவங்கள்.

கே;நாடகத்தின் பக்கம் உங்கள் பார்வை எப்போது திரும்பியது?

ப; அருள் எம்பெருமான்தான் எனக்கு முதன் முதலில் நடிக்கச்சந்தர்ப்பம் தந்தார். அதன் பின்னர் திருமதி சிவராஜா எனக்கு நாடகப்பயிற்சி தந்தார். அருள் எம்பெருமானின் "உலகம் போறபோக்கைப்பாரு", திருமதி சிவராஜாவின் "சகுந்தலை","வீரபாண்டியகட்டபொம்மன்" ஆகியவை பாடசாலை காலத்தில் எனக்கு பெருமை தேடித்தந்தவை.

கே; நாடகத்தில் நடிக்கும்போது உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?


ப; மிகவும் பெருமையாக இருக்கும்.அரசனாக நடிக்கும் போது அம்மாவின் சீலையை தாறுபாச்சி உடுத்துவார்கள். பருத்தித்துறையச்சேர்ந்த சீன் சிவலிங்கம் என்பவரிடம் அரச உடுப்பு வங்குவேன். முகத்துக்கு ம் உத்துவெள்ளை பூசுவார்கள். சப்பாத்துக்கு தங்க சரிகை ஒட்டி முன்னுக்கு கூர்வைத்து வடிவமைப்போம். மேக்கப் செய்வதை சிலர் வந்து புதினம் பார்ப்பார்கள். புதினம் பார்க்கவரும் சிறுவர்களைக் கலைப்போம். எல்லம் கொஞ்ச நேரம் தான்.பிறகு மேக்கப் அரிக்கத்தொடங்கும்.தலையில்வைத்த டோப்பாவின் மனம் வயிற்றைப்புரட்டும்.எல்லாவற்றையும் சகித்துக்கொண்டுதான் நடிப்போம்.தேங்காய் எண்னெய் போட்டுத்தான் மேக்கப்பைக்களைய வேண்டும்.

கே; நாடகமேடை அனுபவத்தில் உங்களைப்பாதித்த சம்பவம்?

ப; யாழ் இந்துக்கல்லூரி வைரவிழாவின் போது யாழ்ப்பாணம் தேவனின் நாடகத்தில் கம்பனாக நடித்தேன். எனக்கான ஒப்பனை முடிந்ததும் அங்கு வந்த சொக்கன் என்னைப்பார்த்தார். "தம்பி, கம்பன் ஆழ்வார் அவர் விபூதி பூசுவதில்லை. ஒப்பனையை மாற்று" என்றார். அவரின் ஆலோசன எனக்குப்பிடிக்கவில்லை. நான் ஏறுமாறாகப்பேசிவிட்டேன்.அவர் யார் என்பதும் எனக்கு அப்போது தெரியாது.நாடகம் முடிந்ததும் எனது நண்பர்களான பாமா ராஜகோபாலன்,சபாரட்ணம்,பெருமாள்,கோபு ஆகியோர் ஒப்பனையின் குறையைச்சுட்டி காட்டினார்கள்.அதன் பின் சொக்கனிடம் நான் மன்னிப்புக்கேட்டேன்.

கே; உங்களுக்குப் புகழைத்தேடித்தந்த நாடகங்கள் எவை?

 

ப; தேவன் யாழ்ப்பாணம் எழுதிய தெய்வீகக்காதல்,சொக்கனின் இராஜ ராஜசோழன்,ஞானக்கவிஞன்,சங்கிலி யோகனாதனின் கல்லறைக்காதல், எஸ்.எஸ். கணேசபிள்ளையின் அசட்டு மாப்பிள்ளை,சி.சண்முகத்தின் வாடகை வீடு ஆகிய நாடகங்கள் எனக்குப் புகழைத்தேடித்தந்தன.

 

கே;யாழ்ப்பாணத்தில் நாடகம் நடித்த உங்களுக்கு யாழ்ப்பாணத்துக்கு வெளியே நடிப்பதற்கான சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது?

 

ப; எனது முதல் வேலை  என்ன என்பது பலருக்குத் தெரியாது. பொலிஸ் திணைக்களத்தில் எழுது வினைஞ‌ராகக் கடமையாற்றினேன் அதுதான் எனது முதல் வேலை.வவுனியாவில் வேலை செய்தபோது முற்றவெளி திறந்தார்கள். எனக்குப் பழைய நாட‌கவியாதி பிடித்தது. அங்கு ந‌ண்பர்களுடன் நாடகங்கள் நடித்தேன். அப்போதுதான் மு.பாக்கியநாதன்,அவரின் தம்பி பாக்கியராஜா,வதிரி.சி.ரவீந்திரன் ஆகியோருடன் தொடர்பு ஏற்பட்டது.கொழும்புக்கு மாற்றாலாகியபின் எஸ்.எஸ்.கணேசபிள்ளையும் நானும் ஒரே அறையில் இருந்தோம். அதன்பின் எனது வளர்ச்சியைப்பார்த்து நானே வியந்தேன்.

 

கே; கொழும்பு நாடக அனுபவம் எப்படி இருந்தது?

 

ப; மில்கவைற்றின் ஆதரவில்வெள்ளவத்தை இராமகிருஷ்ண மண்டபத்தில் அசட்டு மாப்பிள்ளை நாடகம் நடந்தது. நாடகம் முடிந்ததும் நடிகர்களை அறிமுகப்படுத்தினார்கள். நான் உடை மாற்றிக்கொண்டிருந்ததனால் என்னை அழைக்கத் தாமதமானது.அப்போது சபையிலிருந்து தில்லை நடராஜா என்று பலர் சத்தம் போட்டார்கள். வவுனியாவில் இருந்துவந்த நண்பர்கள் தான் சத்தம் போட்டதாக பின்னர் அறிந்தேன்.


கே; நாடகங்களை அரங்கேற்றுவது இலகுவானதாக இருந்ததா?

 ப; நடிக்கும்போது அந்தப்பிரச்சினை பற்றி எனக்கு எதுவுமே தெரியாது.நாடகத்தை மேடை ஏற்றும்போதுதான் பிரச்சினைகள் தெரிய ஆரம்பித்தன. நான் பொலிஸ் என்பதனால் எல்லோரும் எனக்கு உதவி செய்தனர். வாகன‌ வசதி, நிதி உதவி எல்லாம் எனக்கு தாராளமாகக் கிடைத்தன. 

கே; பொலிஸில் இருந்து அரச உயரதிகாரியான பின்பும் நீங்கள் நடிப்பதை நிறுத்தவில்லையே. என்ன காரணம்? 

ப; நடிப்பது இழிவான செயலல்ல. உயரதிகாரியானபின் எனது திறமையை வெளிக்காட்டுவதில் தவறில்லை. எனக்குக் கீழே இருப்பவர்களும் அப்போதுதான் தம‌து திறமைகளை வெளிப்படுத்துவார்கள். இளவாலை ஹென்றி அரசன் பாடசாலையின் நிதி உதவிக்காக அசட்டு மாப்பிள்ளை நாடகம் நடத்த எஸ்.எஸ். கணேசபிள்ளையிடம் கேட்டார்கள். தில்லை நடித்தால் நான் தயார் என்றார்.அப்போது நான் அர‌ச‌ அதிப‌ராக‌ இருந்தே. என்னிட‌ம் கேட்டார்க‌ள். நானும் ஒப்புத‌ல‌ளித்தேன். ஜோன் டீ சில்வா அர‌ங்கில் ந‌டைபெற்ற‌ அந்த‌ நாட‌க‌த்தின் மூல‌ம் மூன்று இல‌ட்ச‌ம் ரூபா நிதி சேர்ந்த‌து. என‌து உத‌வியினால் அதிக‌ள‌வி நிதி சேர்ந்த‌தையிட்டு நான் ச‌ந்தோஷ‌ப்ப‌ட்டேன். 

கே; உங்க‌ளின் திற‌மையை எப்ப‌டி நீங்க‌ள் ப‌ட்டை தீட்டினீர்க‌ள்? 

ப‌; அப்ப‌டி ஒரு ச‌ந்த‌ர்ப்ப‌ம் என‌க்கு வ‌வுனியாவில் கிடைத்த‌து. நாட‌க‌த்துக்கான‌ அறிவித்த‌ல்க‌ள் த‌வ‌று என சில ந‌ண்ப‌ர்க‌ள் சுட்டிக்காட்டினார்க‌ள். என‌து அறிவித்த‌ல்க‌ளை ஒலிப்ப‌திவு செய்து பார்த்த‌போது  த‌வ‌றை உண‌ர்ந்தேன்.அத‌ன் பின்ன‌ர் எப்ப‌டிப்பேசுவ‌து என‌ ஒத்திக்கை பார்த்தேன். 

கே; நாட‌க‌த்தின் ப‌க்க‌ம் அதிக‌ அக்க‌றையுட‌ன் நீங்க‌ள் செய‌ற்ப‌ட‌ ஊக்க‌ம் த‌ந்த‌து யார்?

ப‌; அம்மாவின் அம்மாவுட‌ன் சென்று வ‌ல்லிபுர‌க்கோவிலில் ந‌டைபெறும் நாட‌க‌ங்க‌ளைப்பார்ப்பேன். தேருக்கு முத‌ல் நாள் போய் தேரில‌ன்று நாட‌க‌ம் ந‌டை பெறும் நாடகத்தைப் பார்த்து விட்டு அடுத்த‌ நாள் தான் வீட்டுக்கு வ‌ருவேன்.வி.வி.வைர‌முத்து, கொக்குவில் செல்வ‌ராசா ஆகியோரின் நாட‌க‌ங்க‌ள் எம‌து ஊரில் போட்டிக்கு ந‌டைபெறும். வீர‌ப‌த்திர‌ர் கோவிலில் வி.வி.வைர‌முத்துவின் நாட‌க‌மும், விதானையார் ப‌ட‌லையில் கொக்குவில் செல்வ‌ராசாவின் நாட‌க‌மும் ந‌டைபெறும். ஏட்டிக்குப் போட்டியாக‌ விள‌ம்ப‌ர‌ம் செய்வார்க‌ள்.அரிச்ச‌ந்திர‌ம‌யான‌காண்ட‌ம் ப‌ல‌ரின் ந‌டிப்பில் பார்த்தேன். வி.வி. வைர‌முத்துவுக்கு ஈடு இணை யாருமில்லை. 

கே; ம‌ற‌க்க‌முடியாத‌ அனுப‌வ‌ம்?

ப‌; எழுதும‌ட்டுவானில் ந‌டைபெற்ற‌ நாட‌கத்தை ம‌ற‌க்க‌முடியாது. வானொலி நாட‌க‌க்க‌லைஞ‌ர்க‌ள் ந‌டிக்கும் ஆறு நாட‌க‌ங்க‌ள் ந‌ட‌க்கும் என்று ஒரு வார‌மாக‌ விள‌ம்ப‌ர‌ம் செய்தார்க‌ள். மாலை ஆறு ம‌ணிக்கு ஆர‌ம்ப‌மாகும் என்ற‌ நாட‌க‌ம் இர‌வு 10 ம‌ணிக்கு ஆர‌ம்ப‌மான‌து. மூன்று ம‌ணிக்கு நாட‌க‌ம் முடிந்து விட்ட‌து. ச‌ன‌ம் க‌லைய‌வில்லை. இன்னும் ந‌டியுங்கோ அல்‌ல‌து பாடுங்கோ என்றார்க‌ள். எங்க‌ளுக்கும் ச‌ந்தோஷ‌ம். எம்ம‌வ‌ர்க‌ள் த‌ம‌து திற‌மைக‌ளை வெளிப்ப‌டுத்தினார்க‌ள். கடைசியாக‌த்தான் எம‌க்கு உண்மைதெரிய‌வ‌ந்த‌து. அதிக‌மான‌வ‌ர்க‌ள் அய‌ற்கிராம‌ங்க‌ளில் இருந்து வ‌ண்டிலில் வ‌ந்தார்க‌ள். அவ‌ர்க‌ள் வ‌ரும்போது லாம்பு கொண்டுவ‌ர‌வில்லை. விடியும் வ‌ரை காத்திருக்க‌ வேண்டும் என்ப‌த‌னால்தான் எங்க‌ளை ந‌டிக்கும்ப‌டி கூறினார்க‌ள்.


கே; ப‌யிற்சிய‌ளித்தால் ந‌டிப்ப‌தில் ஆர்வ‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் முன் வ‌ருவார்க‌ளா?
ப‌;கொழும்பிலே மிக‌வும் குறைவான‌ சாத்திய‌மே உள்ள‌து. அன்ர‌னி ஜீவா சில‌ முய‌ற்சிக‌ள் செய்கிறார். க‌லைச்செல்வ‌னும் இதில் முய‌ற்சி செய்தார். பேராசிரிய‌ர் மெள‌ன‌குரு, குழ‌ந்தை ச‌ண்முக‌ம் ஆகியோர் த‌ம‌து பிர‌தேச‌த்தில் செய்வ‌தாக‌ அறிந்தேன்.

கே; நீங்க‌ள் ந‌டிப்ப‌தைப்ப‌ற்றி உங்க‌ளுக்கு இணையான‌ உய‌ர் அதிகாரிக‌ள் என்ன‌ க‌ருதுகிறார்க‌ள்?   


ப‌; அவ‌ர்க‌ளும் அதை வ‌ர‌வேற்கிறார்க‌ள். ந‌டிக‌ர் காமினிதிச‌நாய‌க்காவுட‌ன் நான் ப‌ணியாற்றிய‌போது ந‌டிக‌னுக்கு முன்னால் இன்னொரு ந‌டிக‌ன் என‌ பெருமையாக‌க் கூறினார்.சில‌ விருந்துக‌ளின் போது ம‌ற்ற‌‌வ‌ர்க‌ளை ம‌கிழ்விக்கும்செய‌ல்க‌ளைச்சில‌ர் செய்வார்க‌ள். சிலர் பாடுவார்கள். சிலர் நடிப்பார்கள்.சிலவேளை நடிப்பென்று தெரியாமல் ஏதாவது செய்வார்கள்.க‌டைசியில் தான் அது ந‌டிப்பென்று ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்குத்தெரியும்.

அண‌மையில் எம‌து பாட‌சாலை ப‌ழைய‌ மாண‌வ‌ர் விழா கொழும்பில் ந‌டைபெற்ற‌போது  ஏதாவ‌து ந‌டியுங்க‌ள் என்று ந‌ண்ப‌ர் விஜ‌ய‌பால‌ன் கேட்டார். அங்கிருந்த‌ ஜெய‌சோதியுட‌ன் க‌தைத்துவிட்டு நான் போய்விட்டேன். அவ‌ர் ச‌த்த‌மாக‌ உடுவையைக்க‌ண்டீர்க‌ளா என‌க்கேட்டார். அவ‌ர் ப‌ல‌ரிட‌ம் கேட்ட‌போது அன‌வ‌ரும் என்னைத்தேடினார்க‌ள். பின்ன‌ர்தான் அது ந‌டிப்பு என‌ ம‌ற்ற‌வ‌ர்க‌ளுக்குத்தெரிந்த‌து.

கே; தொலைக்காட்சி நாடகத்தில் நடித்துள்ளீர்களா? 

ப‌ ; ரூபவாஹினியில் விக்ரர் ஹென்றி கொடவின் தொடர் நாடகத்தி நடித்தேன். விஸ்வநாதன் நெறியாள்கை செய்தார். 

கே; பலரின் நாடகத்தில் நடித்திருக்கிறீர்கள் நீங்கள் நாடகம் எழுதினீர்களா?



ப; பலநாடகங்கள் எழுதினேன்.ஈழநாடு 10ஆவது ஆண்டுவிழாவில் மேடை ஏறிய பூமலர் என்ற ஓரங்க நாடகம் பரிசு பெற்றது. பல வானொலி நாடகங்கள் எழுதினேன். 

கே; உங்களுடைய நாடக வெற்றிக்கு யார் காரணம்? 

ப; எனக்கு நடிக்கச் சந்தர்ப்பம் தந்தவர்களும், என்னுடன் நடித்தவர்களும் தான் காரணம். மயில்வாகனம் சர்வானந்தா, கமலினி செல்வராஜா,அச்சுதன்,ராஜபுத்திரன் யோகராஜா, விஜயாள் பீற்றர்,ஏ.எம்.சி.ஜெயசோதி போன்ற‌வ‌ர்க‌ளின் ஒத்துழைப்பும் என‌து வெற்றிக்குக் கார‌ண‌ம்.

கே;  எதிர்கால கால நாடக‌‌ உல‌க‌ம் எப்ப‌டி இருக்கும் என‌ நினைக்கிறீர்க‌ள்?


ப‌; ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் நாட‌க‌மும் அர‌ங்கிய‌லும் இருப்ப‌த‌னால் புதிய‌ எழுச்சி பெறும் என‌ நினைக்கிறேன்.


ரவி
சுட‌ர் ஒளி 09/03/14

Friday, February 28, 2014

ரசிகர்கள் சிரிப்பதனால் சந்தோஷப் படுகிறேன் ஆர்.யோகராஜன்

இலங்கை  ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் செய்திப் பிரிவின் உதவியாளராகப் பொறுப்பேற்று தென்றல் நிகழ்ச்சிப் பணிப்பாளராக உயர்ந்திருப்பவர் இராஜபுத்திரன் யோகராஜா. வி.என்.மதியழகன், சற்சொரூபவதி நாதன், எழில்வேந்தன், சர்வானந்தா, ஜோர்ஜ் சந்திரசேகரன், எஸ்.புண்ணியமூர்த்தி, நடராஜசிவம், அப்துல் ஹமீத்  போன்றவர்களுடன் பணியாற்றிய இவர், இன்று புதிய தலைமுயினருடன் தனது கடமையை மேற்கொள்கிறார். வதிரி மெதடிஸ்த மிஷன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்ற இவர் பின்னர் நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்தில் உயர்கல்வியைக் கற்றார்.

தொழில் நிமித்தம் நீண்டகாலமாகக் கொழும்பிலே வசித்தாலும் ஊரின் மீது மாறாத பாசம்  பற்று கொண்டதனால் வதிரியைச் சேர்ந்த யோகராஜா என்பதில் பெருமிதம் கொள்கிறார். வானொலியில் பல பதவிகளைப் பெற்றிருந்தாலும் இவரது  நகைச்சுவைப் பாத்திரங்களே இவரை அடையாளப்படுத்தின. அப்பாவியான தோற்றமும், கதை பேசும் கண்களும்  இவரைப் பார்த்ததும் சிரிப்பை உண்டாக்கிவிடும்.
இவர் நடித்த பல பாத்திரங்களில் மறக்கமுடியாத டவுட்டு கணேசன், நேத்ரா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுஜாதா தியனி எனும் கொரிய நாடகத்தில் டுக்கு மாமாவாக சிறியவர்களையும், பெரியவர்களையும் மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறார். 

கே: நாடகம் நடிப்பதற்குரிய சந்தர்ப்பம் எப்படி ஏற்பட்டது?  நடிகனாக வரவேண்டும் என விரும்பினீர்களா?

ப: நடிப்பில் எனக்கு ஆர்வம் இருக்கவில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைதான் என்னை நடிகனாக்கியது. கொழும்பிலே எனது பெரியத்தான் சடகோபனின் வீட்டிலே இருந்தபோது திருகோணமலை துறைமுகத்தில் வேலை கிடைத்தது. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் செய்திப் பிரிவின் உதவி ஆசிரியர் பதவிக்கு ஆள் தேவை என விளம்பரம் வந்துள்ளதாக வி.ஏ. சிவஞானம் கூறி  என்னை விண்ணப்பிக்கத் தூண்டினார். பத்திரிகை ஆசிரியர் ஆர்.சிவகுருநாதன், இலக்கிய ஆளுமை உள்ள  சில்லையூர் செல்வராஜா, இசைப்புலமை மிக்க எல்.கே.பரராஜசேகரம் ஆகியோர் நேர்முகத் தேர்வு செய்தனர்.  நேர்முகம் முடிந்தபின், தம்பி உன்னால் ஏன் நடிக்கமுடியாது? நிச்சயமாக நடிக்கமுடியும் என்று எஸ்.கே.பரராஜசிங்கம் கூறினார். அப்போது நான் அதைப் பெரிதாக நினைக்கவில்லை. இன்று அது உண்மையாகியுள்ளது.



கே: உங்களுடைய முதல் நாடக அனுபவம் எப்படியிருந்தது?

ப: கிராமிய சஞ்சிகை நிகழ்ச்சித் தயாரிப்பாளர் வி.ஏ. சிவஞானசுந்தரத்தின் வழிகாட்டலில் சில கவிதைகள் வாசித்தேன். அப்போதுதான் நாடகத்தில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைத்தது.  கே.சண்முகத்தின் நாடகம் ஒன்று புதன்கிழமை ஒலிப்பதிவானது. ~~முகூர்த்த நேரம் முடியப்போகுது. தாலியைக் கட்டுங்கோ  கெட்டிமேளம்  கெட்டிமேளம்.|| இதுதான் நான் முதலில் பேசிய வசனம். வானொலி நாடகம் என்றாலும் நான் நன்றாகச் செய்தேனா என்று பயம் ஏற்பட்டது. அவர் எதையும் கூறமாட்டார்.  இரண்டு நாட்களின் பின்னர் ரைமிங் நல்லா இருக்கு என்றார். அதுவே எனக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அகளங்கனின் ~அம்மா நான் வெளிநாடு போறன்| என்ற நாடகமும் எனக்குப் புகழைத் தந்தது.

கே: மேடை நாடகத்தில் எப்படி அறிமுகமானீர்கள்?

ப: சில்லையூர் செல்வராஜனின் தணியாத தாகம் நூல் வெளியீட்டு விழாவுக்கு திருகோணமலைக்குச் சென்றபோது எஸ்.எஸ். கணேசபிள்ளையிடம் என்னை  சில்லையூர் செல்வராஜா அறிமுகப்படுத்தினார். மேடையிலே ஒத்திகையின்றி எஸ்.எஸ். கணேசபிள்ளை, ஏ.எம்.சி. ஜெயசோதியுடன் நானும் இணைந்து சில காட்சிகளில் நடித்தேன். கொழும்பிலே அசட்டு மாப்பிள்ளை| நாடகத்துக்கான ஒத்திகைக்குப் போனபோது  எனக்கு வேலைக்காரன் பாத்திரம் தந்தார். எனக்குப் பிடிக்கவில்லை. வேண்டா வெறுப்பாக நடித்தேன்.மறுநாள் சற்றுத் தாமதமாகப் போனேன். என் மனநிலையைப் புரிந்துகொண்ட எஸ்.எஸ். கணேசபிள்ளை என்னைத் தனியாக அழைத்து அந்தப் பாத்திரத்தின் தன்மையைக் கூறினார். எனது தம்பியின் பாத்திரம் இது. உன்னை எனது தம்பியின் இடத்தில் வைத்து இதனைத் தந்துள்ளேன். உனக்குத்தான் அதிக கைதட்டல் கிடைக்கும் என்றார். அவர் கூறியது போன்று அந்த நாடகத்தில் எனக்குத்தான் அதிக கைதட்டல் கிடைத்தது.

கே: எத்தனை நாடகங்களில் நடித்துள்ளீர்கள்? 

ப: நூறுக்கும் அதிகமான வானொலி நாடகம், 10 தொலைக்காட்சி நாடகம், 15 மேடை நாடகம்.

கே: உங்கள் தயாரிப்பில் அதிக ரசிகர்களைக் கவர்ந்தது எது?

ப : ~வயலோடு வசந்தம்| அதிக ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. ~வீடே நாடகம்|, ~முகத்தார் வீடு| ஆகியவை ரசிகர்களை வசீகரித்த நாடகங்கள். அவை முடிவுக்கு வந்ததும் எனது தயாரிப்பில் ~வயலோடு வசந்தம்|  ஒலிபரப்பானது. அதனைக் கேட்ட பேராசிரியர் கா.சிவத்தம்பி என்னை தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாராட்டினார்.

கே:  உங்களுடைய இந்த வெற்றிக்குக் காரணம் என்ன?

ப : அன்று எனக்கு வழிகாட்டியாக இருந்தவர்கள் என்னைப் போன்றவர்களை வளர்த்தது தான் முக்கிய காரணம். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, மலையகம் என்ற பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட்டோம். இன்றும் அப்படித்தான் இருக்கிறோம்.  சார்க் நாடுகளின் ஊடகப் பிரிவு, பீ.பீ.சி., ஜேர்மனிய  வானொலி ஆகியவற்றின் பயிற்சிப் பட்டகள் எங்களை மிளிரச் செய்தன.

கே: திரைப்படத்தில் நடிக்க முயற்சி செய்யவில்லையா?

ப : எஸ்.எஸ்.கணேசபிள்ளையின் தம்பியின் மகன் ரவி அச்சுதனின்  ~மெதுவாக என்னைத் தொடு|  என்ற திரைப்படத்தில் நடித்தேன். கனடா, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளின் படப்பிடிப்பு நடைபெற்று கனடாவில் முழுமையான படமாக எடிட் செய்து வெளியிட்டார்கள். அதுவும் நகைச்சுவைப் பாத்திரம்தான். நான் வேறு பாத்திரம் கேட்டபோது,  ~~இதை  உங்களால் மட்டுமே செய்யமுடியும்|| என்றார். படம் வெளியான பின்னர் கனடாவிலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. ~மெதுவாக என்னைத்தொடு| படத்தில் நடித்ததற்கு பாராட்டிய அவர், தானும் அப்படத்தில் நடித்ததாகவும்  எனது உறவினர் என்றும் கூறினார். அவருடைய பெயர்  துரைமணி.






கே: சிங்கள நாடங்களில் நடிக்கச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லையா?

ப : என்னுடைய மீசைக்காக சிங்கள நாடகத்தில் நடிக்க அழைத்தார்கள்.  நான் மறுத்துவிட்டேன்.

கே:  ஏன் மறுத்தீர்கள்?

ப : அரசாங்கத்துக்கு எதிராகச் செயற்படும் பயங்கரவாதியாக நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்து விட்டேன். எத்தனையோபேர் இருக்க என்னை மட்டும் ஏன் பயங்கர வாதியாக நடிக்கத் தெரிவுசெய்தீர்கள் எனக் கேட்டேன். உங்கள் உடல் அமைப்பும் மீசையும் பொருத்தமாக இருக்கிறது என்றார்கள்.

கே: வானொலி, தொலைக்காட்சி, மேடை நாடகங்களில் உங்களுக்குச் சந்தர்ப்பம் தந்தவர்கள் யார்?

ப : எஸ்.எஸ். கணேசபிள்ளை, எஸ். சண்முகம், அகளங்கன், ஜோர்ஜ்   சந்திரசேகரன், எஸ். ராமதாஸ், சி.சண்முகம், சில்லையூர் செல்வராஜா,  பி.விக்னேஸ்வரன் ஆகியோரின் நாடகங்களில் நடித்தேன். வி.ஏ.சிவ ஞானசுந்தரம் எனது வளர்ச்சியில் பெரும் பங்காற்றினார்.

கே:  உங்களுடன் இணைந்து பணியாற்றியவர்கள் பற்றி?

ப : அது நீண்ட பட்டியல். மயில்வாகனம்சர்வானந்தா, வி. என். மதிஅழகன்,  சற்சொரூபவதி நாதன், எழில்வேந்தன், எஸ்.புண்ணியமூர்த்தி, நடராஜசிவம், எஸ்.ராமதாஸ், அப்துல் ஹமீத், ஏ.எம்.சி.ஜெயஜோதி, உடுவை தில்லை நடராஜா, கலிஸ்ராலூக்கஸ் பெர்னாண்டோ, வேதநாயகம் சக்திதரன் (இவர்தான் அசட்டு மாப்பிள்ளையாக நடித்தவர்) சோக்கல்லோ சண்முகம், ரஞ்சனி ராஜ்மோகன்,  ராஜசேகர், கமலினி செல்வராஜா, இரா.ரவீந்திரன், பி.விஸ்வநாதன், பி.விக்னேஸ்வரன் ,லோஷன்,வாமதேவன், இளையத்தம்பி தயானந்தா, அருணா செல்லத்துரை, ராஜேஸ்வரி சண்முகம், கே.எஸ்.பாலசந்திரன் என மிக நீண்ட பட்டியல். இப்போது புதியவர்களுடன் சேர்ந்து கடமையாற்றுகின்ன். நாம் ஒரு குடும்பம் போலவே அன்றும் பணியாற்றினோம் இன்றும் பணியாற்றுகிறோம். 





கே: உங்கள் தயாரிப்பில் வெளியான நாடகங்கள் எவை?

ப :  புத்திஜீவிகள் வெளியேற்றத்தை மையமாக வைத்துத் தயாரித்த நாடகம் தான் ~பிறந்தமண்| இது வெள்ளவத்தை இராமக்கிருஷ்ண மிஷனில் நடைபெற்றது. இந்நாடகம் பற்றி அப்போது தினகரனில் ~பல விழாக்களை மிஞ்சிய நாடக விழா| என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகியது. 

கே: உங்கள் நடிப்பைப் பாராட்டி விருதுகள் கிடைத்தனவா?

ப : அரச நாடக விழாவில் சிறந்த நடிகருக்கான விருது  போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளேன்.
  
கே: உங்கள் நடிப்புக்கு வீட்டில் எப்படி வரவேற்பு உள்ளது? வீட்டிலும் நடிப்பீர்களா? 

ப :  எனது முதல் ரசிகை மனைவிதான்.  நான் நடித்துப் பார்க்கையில் சில திருத்தங்களைக் கூறுவார். மேடையில் நடிக்கும்போது என்னையே  அவதானிப்பார். வீட்டுக்கு வந்தபின் நான் குனிந்து, கூனிக்கொண்டு நின்றதாகக் கூறி  அடுத்த மேடையேற்றத்தின்போது எப்படி நிற்கவேண்டும் என அறிவுரை கூறுவார். ஆனந்தவிகடன், குமுதம் சஞ்சிகைகளில் வரும் ஜோக்குகளை வாசித்து நடித்துப் பார்ப்பேன்.

கே:  நடிப்பில் இவ்வளவு உயர்ந்த நிலையில் இருக்கிறீர்கள். சிறுவயதில்  நாடகத்தில்  நடித்த அனுபவம் உள்ளதா?

ப :   இல்லை. படிக்கும் காலத்தில் ஒரே ஒரு  நாடகத்தில் நடித்துள்ளேன். ஜனககுமார், ரகு, பேரின்பம், ஆகியோருடன் சிறுவனாக  இருக்கும்போது பெண் வேடமிட்டு நடித்தேன்.  அதன்பின் நடிக்கவில்லை. பாடசாலையில் நாடகம், பேச்சுத் போட்டி எதிலும் கலந்துகொண்டதில்லை.



கே:  சிறுவயதில் நாடகங்களை விரும்பிப் பார்ப்பீர்களா?

ப :  நாடகம் பார்ப்பதிலும் நான் அதிக ஆர்வம் காட்டவில்லை. வதிரிகோவி நேசனின் ~காலம் கெட்டுப் போச்சு|  என்ற தாளலய நாடகத்தையும், வதிரி கிருபாவின் ~அலீமா| எனும் நாடகத்தையும்  தேடிப் பார்த்தேன். கோவிநேசனின் தாளலய நாடகம் என்னை வெகுவாகக் கவர்ந்தது. கிருபாவின் அலீமா ஆச்சரியப்படவைத்தது. பின்னணி இசை நடிப்பு  என்பன அன்று புதுமையாக இருந்தன. லெப்டினன் கேணலாக நடித்த ராஜதுரையின் நடிப்பு  என்னைக் கவர்ந்தது.

கே: உங்களைக் காண்பவர்கள்  டுக்கு மாமா என்கிறார்களே! இந்தப் பெயர் எப்படி வந்தது?

ப :    ~சுஜாதா தியனி| என்ற கொரிய நாடகம் நேத்ரா தொலைக்காட்சியில் தமிழில் ஒளிபரப்பாகிறது. அந்த நாடகத்தில் டுக்கு மாமா என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றேன்..

கே:  டுக்கு மாமாவுக்கு குரல் கொடுப்பதற்கு உங்களைத் தேர்வு செய்தது யாது?

ப :     சுஜாதா தியனியை தமிழில் ஒளிப்பரப்புச் செய்வதற்கு குரல் தேர்வு செய்வதற்கு என்னையும் அழைத்தார்கள்.  அந்தப் பாத்திரங்களுக்குப் பொருத்தமான குரலுடைய சிலரைநான் சிபாரிசு செய்தேன். டுக்கு மாமா என்ற நகைச்சுவைப் பாத்திரத்துக்கு யாருடைய குரல்  பொருந்தும் என யோசித்தேன்.  அப்போது டுக்குமாமாவுக்கு குரல்கொடுக்க ஒருவரைத் தேர்வு செய்துவிட்டதாகக் கூறினர். அது யாராக இருக்கும் என இரண்டு நாட்களாக யோசித்தேன். சுஜாதா தியனி ஒலிப்பதிவு நடைபெறுவதாகவும்  என்னை வரும்படியும் தொலைபேசியில் அழைத்தார்கள். அங்கு போனதும் நீதான் டுக்கு மாமா என்றார்கள்.
நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். ஆனால், அந்தப் பாத்திரம் எனக்கு பல ரசிகர்களைத் தேடிக் கொடுத்துள்ளது.

கே:  அன்று உங்களுக்குப் பெருமை தேடித் தந்த பாத்திரம் டவுட்டு கணேசன். இன்று தொலைக்காட்சியில் டாடீ எனக்கொரு  டவுட்டு சினிமாவில் மட்டக்களப்பு யோகராசு எனக் கொரு டவுட்டு, கணேஷ் டவுட்டு என்று  நடிகர்கள் நடிக்கும்போது என்ன நினைக்கிறீர்கள்
.
ப :    நண்பர்களும் இதைப்பற்றி என்னிடம் கேட்பார்கள். ரசிகர்களால் மறக்க முடியாத பாத்திரம். புகழ்பெற்ற ~~அடங்காப்பிடாரி|| நாடகப் பாத்திரத்தை மனதில் வைத்துத்தான் டவுட்டு கணேசன் உருவாகினான்.

கே:   நகைச்சுவைப் பாத்திரத்தை விரும்பி நடிக்கிறீர்களா?

ப :    குணசித்திர பாத்திரங்களில் நடிக்க விரும்புகின். உருவத்தை மாற்றி நடிக்கவும் ஆசைப்படுகிறேன். நகைச்சுவை நடிகர் என்றும் முத்திரை குத்திவிட்டார்கள். கவலையை மறந்து மற்றவர் சிரிக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

கே:    தனிநடிப்பில் கவனம் செலுத்தினீர்களா?

ப :   இலங்கை வானொலியின் பவளவிழா நிகழ்ச்சியின் போது அன்றைய  பணிப்பாளர்  திருமதி அருந்ததி 
ஸ்ரீரங்கநாதன்  எனக்கொரு சந்தர்ப்பம்  தந்தார். சுமார் அரைமணி நேரமாக நடந்த அந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. என்னுடன் பணியாற்றும் அனைவரையும் நகைச்சுவையாகக் கிண்டல் செய்தேன். தொலைக்காட்சியில் பணியாற்றும் பெண் ஊழியரை நான்  சந்திப்பதாக ஒரு காட்சி. அவரைப்பார்த்து நான் நான் கேட்ட கேள்விகள் சபையோரைக் குலுங்கக் குலுங்க சிரிக்கவைத்தன.
நீங்களே அந்தத் ரி.வி.  பெட்டியிலை வாறது. ரீ.வியிலைவரேக்கை  பவுடர் எல்லாம் போட்டு வடிவா இருக்கிறியள். ரேடியோவிலை அடிக்கடி நல்லூருக்கு அழைத்துப் போகிறம். என்று சொன்னியள். அது தான் நல்லூருக்குப் போறதுக்குப் பாயும் கொண்டு வந்தனான். எப்ப எங்களை அழைச்சுப்போகப் போறியள் என அவரைக் கேட்டேன். நல்லூர் தேர் தீர்த்த நேரடி ஒலிபரப்பு பற்றிய  விளம்பரத்தையே தான் அப்படிக் குறிப்பிட்டேன். இது வாழ்க்கையில் மறக்க முடியாத சந்தர்ப்பம்.

ரவி
 சுடர் ஒளி 23/02/14