Sunday, April 24, 2011

தலைவர்களை அடக்கி வைத்ததேர்தல் ஆணையம்

தமிழக சட்ட மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழக அரசையும் அரசியல்வாதிகளையும் ஆட்டிப் படைத்த தேர்தல் ஆணையம் தற்போது தனது பிடியைத் தளர்த்தியுள்ளது. புதிய திட்டங்கள் ஆரம்பிப்பது, இடமாற்றம், பதவி உயர்வு, ஊக்கத் தொகை வழக்குகள் அனைத்தையும் தேர்தல் முடிவு வெளியிடப்படும் வரை நடைமுறைப்படுத்தத் தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் சில ஆவணங்களைப் பார்வையிடுவதற்கும் தேர்தல் ஆணையாளரின் அனுமதி கோர வேண்டும். அவர் அனுமதியைக் கொடுத்தால்தான் முதல்வர் சில ஆவணங்களைப் பார்வையிட முடியும்.
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற இந்தியக் கிரிக்கெட் அணிக்கும் கிரிக்கெட் அணியில் உள்ள தமிழக வீரர் அஸ்வினுக்கும் தமிழக அரசின் சார்பில் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்தார். தேர்தல் நடைபெற்றதால் அப்பரிசுத் தொகையை வழங்க முடியாத நிலை உள்ளது. தமிழகத்தை ஆட்சி செய்வது தேர்தல் ஆணையாளரா? என்று பொறுப்புடன் முதல்வர் கருணாநிதி கேட்டுள்ளார்.
தமிழக சட்ட மன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதும் தமிழகத்தையே தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்தது தேர்தல் ஆணையம். தமிழக பொலிஸ் ஆணையாளர் வத்திகாசரன் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டார். தமிழக உளவுத் துறைத் தலைவர் ஜபாட் வேறு மாநிலத்துக்கு மாற்றப்பட்டார். வேறு மாநிலத்தில் வேலையைப் பொறுபேற்காத ஜபாட் விடுமுறையில் சென்று விட்டார். தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கை தமிழக அரசுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் அனைவரும் தமிழக உதவித் தேர்தல் ஆணையாளரைக் கடுமையாகச் சாடினார்கள். தமிழக உதவித் தேர்தல் ஆணையாளர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதாகப் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்கள். இவை எதையும் கவனத்தில் எடுக்காத தேர்தல் ஆணைய அலுவலர்கள் துணிச்சலுடன் செயற்பட்டு இலஞ்சம் கொடுக்க முயன்றவர்களைக் கைது செய்ததுடன் கோடிக்கணக்கான பணத்தையும் கைப்பற்றினர். தேர்தல் ஆணையகத்தின் முன் தமிழக அரசியல்வாதிகள் பலரும் பெட்டிப் பாம்பாக அடங்கி ஒடுங்கினர். தேர்தலில் வாக்களித்த பின்னர் கருத்துக் கூறிய வடிவேல், கட்சியின் பெயரைக் கூறலாமா? என்று பத்திரிகையாளர்களைக் கேட்ட பின் தான் கட்சியின் பெயரைக் கூறினார்.
தமிழகத் தேர்தல் முடிவுக்காக ஒரு மாதம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. ஏப்ரல் 13 ஆம் திகதி தேர்தல் நடைபெற்றது. மே மாதம் 13 ஆம் திகதி தன் முடிவுகள் வெளியாகும். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இந்த ஒரு மாத இடைவெளி புதியது. அஸாம் மாநிலத்தில் நடந்த சட்ட சபைத் தேர்தலின் பின்னர் முடிவை அறிய ஒரு மாதம் காத்திருந்தனர்.
தேர்தல் முடிவு தாமதமாக வெளியாவது ஆட்சி செய்யப் போகும் கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. எந்த ஒரு கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெறாது என்று தேர்தலுக்கு முன்னைய கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. மே மாதம் 13ஆம் திகதி தேர்தல் முடிவு வெளியாகிறது. மே மாதம் 17 ஆம் திகதி புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இடைப்பட்ட நான்கு நாட்களுக்குள் கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஆட்சியை அமைக்க வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அறுதிப் பெரும்பான்மை பெற்றால் எதுவித பிரச்சினையும் இன்றி ஆட்சி அமைக்கலாம். அறுதிப் பெரும்பான்மை பெறக் கூடிய சந்தர்ப்பம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை.
வெற்றி பெற்றவர்கள் தேர்தல் ஆணையத்திடம் தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். ஆட்சி அமைக்கப் போகும் கட்சி கூட்டணிக் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். தற்காலிக சபாநாயகர் தெரிவு செய்யப்பட வேண்டும். வெற்றி பெற்றவர்கள் சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும். அமைச்சரவை அறிவிக்கப்பட வேண்டும் இவை எல்லாம் நான்கு நாட்களில் நடைபெற்றாக வேண்டும்.
தொகுதிப் பங்கீட்டின் போதே திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தொல்லை கொடுத்த பங்காளிக் கட்சிகள் ஐந்து வருடம் ஆட்சி செய்யும் சந்தர்ப்பத்தை இலகுவில் விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டா என்பது வெளிப்படையானது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைத்தால் ஆட்சியில் பங்குபற்றப் போவதில்லை என்று விஜயகாந்த் ஏற்கனவே அறிவித்துள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால் வெளியில் இருந்து ஆதரவு தெரிவிக்கப் போவதாக டாக்டர் ராமதாஸும், திருமாவளவனும் அறிவித்துள்ளனர். விஜயகாந்த், டாக்டர் ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரால் ஜெயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் எதுவிதப் பிரச்சினைகளும் ஏற்பட மாட்டாது. மற்றைய கட்சிகள் கொடுக்கப் போகும் தொல்லை தான் தேர்தல் முடிவின் பின் தான் தெரிய வரும்.
தமிழக சட்ட சபைக்கு தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதற்காக திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு காங்கிரஸ் கட்சி அதிக தொல்லை கொடுக்காது. வேட்பாளர் தேர்தலின் போது கட்சிக்குள்ளேயே பெரிய போர் நடைபெற்றது. தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவின் கையே தேர்தல் வேட்பாளர் தெரிவின் போது ஓங்கி இருந்தது. தங்கபாலுவுக்கு எதிராகவே போட்டி வேட்பாளர் போட்டியிட்டார். இதேபோல் பல தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். போட்டி வேட்பாளர்களினாலேயே காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மாவீரகேசரிவாரவெளியீடு24/04//11

Thursday, April 21, 2011

அரச திருமணத்தின் எதிர்பார்ப்புகள்


உலகமே எதிர்பார்க்கும் பிரிட்டிஷ் அரச திருமண விழா 29ஆம் திகதி நடைபெறுகிறது. வில்லியம்கதே ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்ட பொருட்கள் உலகெங்கும் அதிகளவில் விற்பனையாகின்றன.
சார்ள்ஸ் டயானா திருமணத்தின் பின்னர் மீண்டும் பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் நடைபெறும் இத்திருமணத்துக்காக இங்கிலாந்து களை கட்டியுள்ளது.
வில்லியம் கதே திருமண ஏற்பாடுகள் கனகச்சிதமாக செய்யப்பட்டுள்ள அதேவேளை, அத்திருமணம் பற்றிய மக்களின் எதிர்பார்ப்பும் கூடியுள்ளது. கதேயின் திருமண ஆடையை யார் வடிவமைப்பார், என்பதில் ஆரம்பித்து கதே எப்போது குழந்தையைப் பெறுவார் என்பது வரை பலர் பந்தயம் கட்டியுள்ளனர்.
கதேயின் திருமண உடை ஐவொரி கலரில் இருக்கும் என்று அதிகமானோர் தெரிவித்துள்ளனர். கதேயின் உடை வெள்ளை நிறம் என்று கூறு பவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர். வனிலா, லெமன், கோல்ட், சில்வர், கறுப்பு, மஞ்சள், பச்சை உட்பட 22 நிறங்களைப் பட்டியலிட்டுள்ளனர். இதில் 22ஆவது இடத்தில் சிவப்பு உள்ளது.
கதேயின் உடையை சாரா போட்டன் வடிவமைப்பார் என்று அதிகமானோர் கூறியுள்ளனர். இங்கிலாந்தின் பிரபலமான ஆறு வடிவமைப்பாளர்களின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். கதேயின் திருமண ஆடைவேல் எட்டு அடியிலிருந்து 199 அடி நீளம் இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். எட்டு அடிக்கு குறைவாக இருக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். 32 அடிக்கு அதிகமானதாக இருக்கும் என்றும் சிலர் கூறியுள்ளனர்.
36 மில்லியனுக்கும் அதிகமானோர் பி.பி.சி. மூலம் திருமணச் செய்தியை அறிவார்கள் என்று சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
கதே எத்தனை மணிக்கு வருவார் என்ற கேள்விக்கு 11 மணியிலிருந்து 11 மணி 3 நிமிடங்களுக்குள் வருவார் என்று பலர் கூறியுள்ளனர். ஒருசிலர் 11 மணிக்கு முன்னர் வருவதாகக் கூறியுள்ளனர். 11 மணி 8 நிமிடத்துக்கும் 11 மணி 11 நிமிடத்துக்கும் இடையில் வருவதாகவும் சிலர் கூறியுள்ளனர்.
திருமணத்தின் பின் ""யூ ஆர் பியூட்டிபுல்'' என்ற பாடலுக்கு நடனமாடுவார்கள் எனப் பலர் கூறியுள்ளனர். ""ஐடோன்ற்''வோன்''ரு மிஸ் ஏ திங் என்ற பாடல் உட்பட 19 பாடல்களைப் பட்டியலிட்டுள்ளனர். திருமணத்தின் பின் நடைபெறும் இரவு விருந்தில் மாட்டிறைச்சியே பிரதான உணவாக இருக்கும் என்று பலர் கூறியுள்ளனர். கோழியையும் மீனையும் ஒரு சிலர் கூறியுள்ளனர். மிகக் குறைந்தளவானோர் பீஸா என்றனர்.
வில்லியம்கதே ஜோடி தேனிலவுக்கு எங்கே போவார்கள் என்ற எதிர்பார்ப்பு பலரிடம் உள்ளது. 21 நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. தேனிலவுக்காக கென்யாவுக்குச் செல்வார்கள் என்று அதிகமானோர் தெரிவித்துள்ளனர். 2012ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கதேக்கு முதலாவது குழந்தை பிறக்கும் என்று பலர் கூறியுள்ளனர். 2012ஆம் ஆண்டு டிசம்பரில் குழந்தை பிறக்கும் என்று சிலர் கூறியுள்ளனர். 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கதே தாயாவார் என்றும் சிலர் கூறியுள்ளனர். முதற் குழந்தை ஆண் என்று 10/11 பேரும் பெண் என்று 10/11 பேரும் கூறியுள்ளனர்.
திருமண நாளில் மகாராணி மஞ்சள் நிறத் தொப்பி அணிவார் என்று பலர் கூறியுள்ளனர். மெல்லிய நீலம், பிங்க், ஒரேஞ், பச்சை, கறுப்பு என 10 நிறத் தொப்பி அணிவார் என்று கருத்துக் கூறியுள்ளனர். இவற்றில் சில எதிர்பார்ப்புகள் நிறைவேறிவிட்டன. அதிகமானோர் கூறியது போன்றே ஐவெரி கலரையே கதே அணிவார். யாருமே எதிர்வு கூறாத ஜோர்தானுக்கு தேன்நிலவு கொண்டாட வில்லியமும், கதேயும் செல்ல உள்ளனர்.
ரமணி
சூரன்.ஏ.ரவிவர்மா
மெட்ரோநியூஸ் 22/04/11

Wednesday, April 20, 2011

சாதனையும் வேதனையும்



உலகக் கிண்ணக் கிரிக்கெட் ஆரம்பமானதில் இருந்து இன்றுவரை ஒரு சில போட்டிகளின் முடிவுகள் கிரிக்கட் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. உலகக் கிண்ணப் போட்டியின் முடிவுகளின் பின்னர் சில அணிகளில் பாரிய மாற்றங்கள் ஏற்படுவது வழமையான ஒன்றாக மாறி விட்டது. உலகக் கிண்ணப் போட்டியில் முதலில் பலிக்கடாவாகியவர் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ரிக்கி பொண்டிங்.
இந்தியாவுடனான காலிறுதிப் போட்டியில் தோல்வியடைந்ததும் அணித் தலைவர் பதவியைத் துறந்தார் பொண்டிங். ஆஷஸ் கிண்ணத்தை இங்கிலாந்திடம் பறிகொடுத்ததில் இருந்தே பொன்டிங்குக்கு நெருக்கடி அதிகரித்தது. அவரைத் தலைமைப் பதவியிலிருந்து அகற்றினால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் அணிக்குள் பிரச்சினைகள் ஏற்படுமே என்பதனால் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை.
அவுஸ்திரேலிய அணித் தலைவராக இருந்த பொண்டிங் லீக் போட்டிகளில் சிறப்பாக செயற்படவில்லை. இந்தியாவுக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் பழைய பொண்டிங்காக மாறி தனது திறமையை நிரூபித்தார். பொண்டிங்குக்கும் சச்சினுக்கும் இடையிலான இப்போட்டியில் சச்சின் முந்தி விட்டார். உலகக் கிண்ணப் போட்டிகளில் பொண்டிங், சச்சின், கங்குலி ஆகியோர் தலா நான்கு செஞ்சரிகள் அடித்துள்ளனர். இம்முறை சச்சின் இரண்டு செஞ்சரிகள் அடித்து முதலிடத்துக்குப் போய் விட்டார். பொண்டிங் ஒரு செஞ்சரி அடித்து இண்டாவது இடத்தைப் பிடித்தார்.
கிண்ணத்தை வெல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட அணிகளில் ஒன்றான தென்னாபிரிக்கா காலிறுதியுடன் வெளியேறியது. லீக் போட்டியில் எழுச்சியுடன் விளையாடிய பாகிஸ்தானை தகர்த்த தென்னாபிரிக்கா நியூஸிலாந்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பலம் வாய்ந்த தென்னாபிரிக்காவின் கனவை நியூஸிலாந்து சிதறடித்தது. உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே ஓய்வு பெறுவதாக தென்னாபிரிக்க அணித் தலைவர் ஸ்மித் அறிவித்தார்.
அரையிறுதிப் போட்டியில் இலங்கையும், நியூஸிலாந்தும் மோதின. தென்னாபிரிக்காவை வீழ்த்திய நியூஸிலாந்து ஏதாவது அதிர்ச்சியளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. நியூஸிலாந்தைத் தலையெடுக்க முடியாது கட்டுப்படுத்தியது இலங்கை. அரையிறுதியில் தோல்வியடைந்த நியூஸிலாந்து அணித் தலைவர் வெட்டோரி தலைமைப் பதவியிலிருந்து விலகி விட்டார். ஐ. பி. எல்லில் பெங்களூர் றோயல் சலஞ்ச் தலைவராக உள்ளார்.
இந்தியா இலங்கை ஆகியவற்றுக்கி??? இறுதிப் போட்டி??? ?? சச்சினையும் ஆட்டமிழக்கச் செய்த இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியைக் கொடுக்க இலங்கை அதன் பின் எழுச்சி பெறவேயில்லை. கம்பீரும், டோனியும் வெற்றியை நழுவ விடாது துடுப்பெடுத்தாடினர். கம்பீர் ஆட்டமிழந்ததும் திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. டோனியுடன் இணைந்து யுவராஜ்சிங் அந்த எதிர்பார்ப்பை பொய்யாக்கினர்.
உலகக் கிண்ணத் தொடரில் பொறுப்பாக விளையாடாத குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்த டோனி இறுதிப் போட்டியைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்து இந்தியாவுக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுத் தந்தார்.
உலகக் கிண்ணம் இந்தியாவுக்கா இலங்கைக்கா என்பதை விட சச்சினுக்கா, முரளிக்கா என்பதே முன்னிலை பெற்றது. உலகக் கிண்ணப் போட்டித் தொடருடன் முரளி ஓய்வு பெற்று விட்டார். தலைவர் சங்கக்கார, உபதலைவர் மஹேல, அணித் தேர்வுக் குழு உறுப்பினர்கள் அனைவரும் வரிசையாக ராஜினாமாச் செய்தார்கள். ஐ. பி. எல். டெக்கான் சார்ஜஸ் அணிக்கு சங்கக்கார தலைவராக உள்ளார்.
1983 ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளும் இந்தியாவும் இறுதிப் போட்டியில் விளையாடின. மூன்றாவது முறை தொடர்ச்சியாக மேற்கிந்திய தீவுகள் கிண்ணத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்பை சிதறடித்த இந்தியா கிண்ணத்தை வென்றது. 1996 ஆம் ஆண்டு இலங்கை அணி மீது எந்தவிதமான எதிர்பார்ப்பும் ஏற்படவில்லை. ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இப்படிதான் விளையாட வேண்டும் என்று புதிய விதியை உருவாக்கியவர் வட்மோர். ஆரம்பத் துடுப்பாட்டத்தில் அதிரடியை அறிமுகப்படுத்தியவர் ஸ்ரீகாந்த். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்கள் இருவரும் அதிரடியாக விளையாட வேண்டும் என்பதை நிரூபித்தவர் வட்மோர். ஜயசூரிய, களுவிதாரண ஆகிய இருவரும் வட்மோரின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்தனர்.
1996 ஆம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகளையும் 2007 ஆம் ஆண்டு இந்தியாவையும் தோற்கடித்து அவற்றை லீக் போட்டியில் இருந்து வெளியேற்றியது பங்களாதேஷ். 2003 ஆம் ஆண்டு அரையிறுதி வரை முன்னேறி கென்யாவின் கிரிக்கெட் வளர்ச்சிக்காக சர்வதேச கிரிக்கெட் சபை பாரிய நிதியை வழங்கியது. அந்நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலையும் ஊழலும் கென்ய கிரிக்கெட்டை வளர விடவில்லை. கென்ய அணிக்கு அனுசரணையாளர்கள் யாரும் இல்லை. இந்த நிலையில் எப்படி வளர்வது.
2007 ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானைத் தோற்கடித்த அயர்லாந்து இம்முறை இங்கிலாந்தைத் தோற்கடித்து அயர்லாந்து என்ற நாடு உருவாகக் கூடாது என்பதை விரும்பிய இங்கிலாந்தைத் தோற்கடித்து தமது பலத்தை நிரூபித்தது அயர்லாந்து. அயர்லாந்தில் றக்பிதான் புகழ்பெற்ற விளையாட்டு. அலுவலகம் முடிந்து பொழுதுபோக்காக ஒரு சிலர் கிரிக்கட் விளையாடுவார்கள். பொழுதுபோக்காக விளையாடுபவர்கள்தான் புதிய சாதனைகளை உருவாக்கியுள்ளனர்.
குறைந்த பந்தில் அதிவேக சதம், ஓட்டங்களை விரட்டி வெற்றி பெற்றது போன்ற சாதனைகளை அயர்லாந்து செய்துள்ளது. அதிவேக சதமடித்த கெவின் ஓ பிரைனுக்கு பக்கபலமாக இருந்த ஆசக் நான்கு வருடங்களுக்கு முன்னர் முழுநேர தச்சுத் தொழிலாளியாக இருந்தவர். அயர்லாந்து கடந்த வருடம் நான்கு போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளது. பங்களாதேஷுடன் இரண்டு போட்டிகளில் விளையாடியது. பெரிய அணிகள் அயர்லாந்துடன் விளையாடுவதில்லை. பண உதவியை அயர்லாந்து எதிர்பார்க்கவில்லை. தரமான அணிகளுடன் விளையாடி பயிற்சி பெறவே அயர்லாந்து விரும்புகிறது.
இந்திய அணி உலகக் கிண்ணத்தைப் பெற பிரதான காரணியாக இருந்தவர் பயிற்சியாளர் கரிகேர்ஸ்டன். இந்திய அணிக்கு உலகக் கிண்ணத்தைப் பெற்றுக் கொடுத்த பின் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகி விட்டார். அவரைப் போன்ற ஒரு திறமையானவரை இந்தியா தேடுகிறது. ஸ்ரீகாந் தலைமையிலான தேர்வுக் குழு தேர்வு செய்த அணி மீது ஒரு சில பத்திரிகைகளும் கிரிக்கெட் ஜாம்பவான்களும் விமர்சனம் செய்தனர். அந்த விமர்சனங்களை உலகக் கிண்ண வெற்றி அடக்கி விட்டது.


ரமணி


சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ் 15/04/2011

Tuesday, April 19, 2011

மக்கள் தீர்ப்புக்காகக்காத்திருக்கும் தலைவர்கள்



தமிழக சட்டமன்றத் தேர்தல் எதுவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக முடிவடைந்தது. தமிழகத்தில் இதுவரை காலமும் இல்லாத வகையில் 77.4 சதவீதமானோர் வாக்களித்துள்ளனர்.
அதிகளவான வாக்குகள் தேர்தலில் பதிவானால் ஆளும் கட்சிக்கு பாதகமானதாக அமையும் என்பது கடந்த தேர்தல்களின் போது நிரூபணமானது. திருமங்கலம் இடைத்தேர்தலில் அதிகளவானோர் ஆர்வத்துடன் வாக்களித்தனர்.
அந்தத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர் அமோகமாக வெற்றியைப் பெற்றõர். பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாவது இடத்தையும் தமிழக எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாவது இடத்தையும் பெற்றன.
மிக அதிகபட்சமாக கரூரில் 86 சதவீதமும் கன்னியாகுமரியில் 68.1 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன. தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் அதிகளவான வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜெயலலிதா போட்டியிட்ட ஸ்ரீ ரங்கத்தில் 80.9 சதவீதமும், விஜயகாந்த் போட்டியிட்ட ரிஷிவந்தியத்தில் 78 சதவீதமும், கருணாநிதி போட்டியிட்ட திருவாரூரில் 75 சதவீதமும் ஸ்டாலின் போட்டியிட்ட கௌத்தூரில் 68 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
அதிகளவான வாக்குப் பதிவு, எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பதை கணிக்க முடியாமலுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் வாரி வழங்கிய இலவசங்களும், சலுகைகளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும். ஆட்சி மாறினால் இதுவரை அனுபவித்த சலுகைகள் இல்லாமல் போய் விடும் என்ற பயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காக அதிகமானோர் வாக்களித்திருக்கலாம்.
அல்லது குடும்ப அரசியல், ஊழல், விலை வாசி உயர்வு என்பனவற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக அதிகளவில் வாக்களித்திருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தமிழக சட்ட சபைக்கான கருத்துக் கணிப்புகள் இரண்டு வகையாக வெளிவந்துள்ளன. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று சில கருத்துக் கணிப்புக்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று சில கருத்துக் கணிப்புகளும் வெளிவந்தன.
ஆனால் இரண்டு கட்சிகளும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற முடியாது கூட்டணி ஆட்சிதான் அமையும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்ததை நோக்கும் போது கருத்துக் கணிப்புகள் சறுக்கி விடும் போல் தெரிகிறது. பக்கம் சாராத வாக்காளர்கள் தமது மௌனப் புரட்சியை வெளிப்படுத்தி விட்டனர்.
தமிழக சட்ட சபைத் தேர்தலின் போது நடத்தப்பட்ட திடீர் சோதனைகளின் போது 45 கோடி ரூபா பெறுமதியான பொருட்களும் பணமும் கைப்பற்றப்பட்டன. இவற்றில் உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்ததனால் ஐந்து கோடி ரூபா திரும்ப ஒப்படைக்கப்பட்டது. 53 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1565 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
வைகோவின் வலது கரமான மல்லை சத்யாவின் பேச்சு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஜெயலலிதாவுடனான தொகுதிப் பங்கீட்டுப் பிரச்சினை காரணமாக வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலைப் புறக்கணித்தது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் பாடம் புகட்டும் என்று மல்லை சத்யா கூறியது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிக்க வேண்டாம் என்பதை மறைமுகமாக வெளிப்படுத்தியுள்ளது.
மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடவில்லை. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் தேர்தலில் வாக்களித்தனர். தமிழகத்தில் சுமார் ஆறு சதவீத வாக்கு வங்கியை வைத்திருக்கும் மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களும் தொண்டர்களும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு வாக்களித்திருக்க மாட்டார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு இது பாதகமானதாக அமையலாம்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் கார ணிகளாக உள்ளன. அண்டை நாட்டுடனான பிரச்சினையை மத்திய அரசுதான் தீர்த்து வைக்க வேண்டும்.
பிரதமர், பாதுகாப்பு அமைச்சர், காங்கிரஸ் தலைவி சோனியா ஆகியோருக்கு கடிதம் எழுதுவது தான் எனது வேலை. பிரச்சினையைத் தீர்த்து வைப்பது அவர்களின் கைகளில்தான் உள்ளது என்று கருணாநிதி தெளிவுபடக் கூறித் தப்பி விட்டார். குடும்ப அரசியல், ஸ்பெக்ரம் பிரச்சினை, விலைவாசி உயர்வு என்பவை திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பாதிக்கும் முக்கிய காரணிகள்.
மீனவர் பிரச்சினை யைத் தீர்க்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை.
அது மத்திய அரசின் கைகளில் உள்ளது என்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் கருத்தை மீனவர்கள் ஏற்றார்களா இல்லையா என்பது தேர்தல் முடிவின் பின்னர் தெரியவரும்.
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சீமானும் தமிழ் ஆர்வலர்களும் பிரசாரம் செய்தனர். காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் இவர்கள் தீவிரமாகப் பிரசாரம் செய்தனர்.
சீமானின் பிரசாரம் காங்கிரஸாரைக் கலங்க வைத்துள்ளது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு எதிராகவே இவர்கள் பிரசாரம் செய்ததனால் தமக்கு பாதிப்பு ஏற்படாது என்று திராவிட முன்னேற்றக் கழகம் நம்புகிறது.
தமிழக சட்ட சபைத் தேர்தலில் ரஜினிகாந்த் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிக்கவில்லை என்பதும் விலைவாசி உயர்வு பற்றி வட இந்திய தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய பேட்டியும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியைக் கொதிப்படைய வைத்துள்ளது.
தேர்தலில் வாக்களித்த பின்னர் பேட்டியளித்த நடிகர் விஜய் மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கின்றனர் என்ற பேட்டியும் திராவிட முன்னேற்றக் கழகத்தை எரிச்சலடைய வைத்துள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பிரசார மேடையில் விஜய் ஏறுவார் என்ற எதிர்பார்ப்பு இறுதிவரை ஏமாற்றமாகவே இருந்தது. வாக்களித்த பின்னர் அவர் வழங்கிய பேட்டி மனதில் உள்ளதை வெளிப்படுத்தியுள்ளது.
அரசியல் வாதிகளினதும் நடிகர் பட்டாளத்தினதும் பிரசாரப் புயல் ஓய்ந்து விட்டது. மக்களின் முடிவு மே மாதம் 13 ஆம் திகதிதான் தெரியும்.
அதுவரை அடங்கி இருக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர் அரசியல்வாதிகள். ஐந்து வருடம் ஆட்சி செய்யப் போகிறவர்களுக்கு ஒருமாதம் என்பது மிக நீண்ட நாட்கள்தான்.
அதுவரை பொறுமையாக இருப்பதைத் தவிர வேறு வழி இல்லை.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு17/04//11

Sunday, April 10, 2011

பலமான கூட்டணியில்தடுமாறும் தலைவர்கள்


தமிழக சட்ட சபைத் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. ஏட்டிக்குப் போட்டியான கூட்டங்களும் குற்றச்சாட்டுகளும் தேர்தல் பிரசாரத்தை கலகலப்பாக்கியுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகம் தனது சாதனைகளையும் நிறைவேற்றிய திட்டங்களையும் வழங்கிய இலவசப் பொருட்களையும் சலுகைகளையும் பட்டியலிட்டு பிரசாரத்தை மேற்கொள்கிறது. ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு என்பவற்றை எதிர்க்கட்சிகள் தமது பிரசாரத்தில் முன்னிலைப்படுத்துகின்றன. தமிழக சட்ட சபைத் தேர்தலின் நட்சத்திரப் பேச்சாளராக வடிவேல் திகழ்கிறார். வடிவேல் பிரசாரம் செய்யும் கூட்டங்களுக்கு மக்கள் அதிகளவில் கூடுகின்றனர். தமிழக அரசின் சாதனைகளைப் பட்டியலிடும் வடிவேலின் பிரசாரம் விஜயகாந்துக்கு எதிராகவே உள்ளது. நகைச்சுவை நடிகனான வடிவேல் தமிழக சட்ட சபைத் தேர்தலின் கதாநாயகனாக மாறிவிட்டார். வடிவேலின் வரம்பு மீறிய பிரசாரத்தை திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களும் தலைவர்களும் வெகுவாக ரசிக்கின்றனர். வடிவேலின் தேர்தல் பிரசாரத்துக்குப் பதில் கூறக் கூடிய பேச்சாளர்கள் எவரும் அ.தி.மு.க. கூட்டணியில் இல்லாமையால் வடிவேலின் பரம எதிரியான சிங்கமுத்துவைக் களமிறக்கியுள்ளது. அ.தி.மு.க. வடிவேலுக்கு நான் சளைத்தவனல்ல என்ற வகையில் சிங்கமுத்துவின் பேச்சு உள்ளது. விஜயகாந்தைப் பற்றிய வண்டவாளங்களை வடிவேல் எடுத்துக் கூற வடிவேலின் மறுபக்கத்தை சிங்கமுத்து அரங்கேற்றுகின்றார். சிங்கமுத்துவின் தேர்தல் பிரசாரமும் வடிவேலைத் தாக்குவதாகவே உள்ளது. கனல் தெறிக்கும் வசனங்களால் மக்கள் மனதில் இடம்பிடித்து புதிய அரசியல் சமுதாயத்தைத் தோற்றுவித்த திராவிடக் கழகங்கள் வடிவேலையும் சிங்கமுத்துவையும் தேர்தல் பிரசாரத்தில் களமிறக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. வடிவேலையும் சிங்கமுத்துவையும் பார்ப்பதற்கு மக்கள் கூடுகிறார்கள். அவர்களின் பேச்சுக்கு மக்கள் மதிப்பளித்தார்களா என்பது தேர்தல் முடிவின்போது தெரிந்துவிடும். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே ஒரு முறை ஒரு சில மணி நேரம் மட்டுமே சந்தித்துப் பேசினார்கள். பின்னர் இருவரும் சந்திக்கவில்லை. இருவராலும் நியமிக்கப்பட்ட குழுக்களே சந்தித்து தொகுதி பங்கீட்டு முறைகளுக் கான பேச்சுவார்த்தையை நடத்தின. ஜெயலலிதாவும் விஜயகாந்தும் கூட்டணி சேரக் கூடாது என்பதில் ஆளும் தரப்பு உறுதியாக இருந்தது. இருவரும் சேராவிட்டால் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி வெற்றி பெற்று விடும் என்பது வெளிப்படையானது. பல பிரச்சினைகளுக்கு மத்தியிலேதான் ஜெயலலிதாவுடன் விஜயகாந்த் கூட்டணி சேர்ந்தார். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒன்றிணைந்ததனால் ஆளும் தரப்பு அச்சமடைந்தது. உண்மையான கொள்கைக்காக இருவரும் இணையவில்லை. திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவதற்காகத்தான் இருவரும் இணைந்துள்ளனர் என்பது தமிழக மக்கள் அனைவருக்கும் தெரிந்த இரகசியம். கூட்டணித் தலைவர்கள் அனைவரும் ஒரு கூட்டத்தில் ஒன்றாகப் பேசி பிரசாரம் செய்வார்கள். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே மேடையில் ஏறிப் பிரசாரம் செய்ய மாட்டார்கள் என்று திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி பிரசாரம் மேற்கொண்டது. கூட்டணித் தலைவர்கள் ஒரே மேடையில் ஏறவில்லை என்றால் தொண்டர்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படாது என்பதனால் இருவரையும் ஒரே மேடையில் பிரசாரம் செய்வதற்கு கூட்டணித் தலைவர்கள் முயற்சி செய்தனர். மிகுந்த சிரமத்தின் மத்தியில் இறங்கி வந்த ஜெயலலிதா, விஜயகாந்துடன் இணைந்து பிரசாரம் செய்வதற்கு ஒப்புக் கொண்டார். ஜெயலலிதாவும் விஜயகாந்தும் ஒரே மேடையில் ஏறும் அரிய காட்சியை காண்பதற்கு தொண்டர்கள் குழுமினார்கள். ஜெயலலிதாவுடன் இணைந்து பிரசாரம் செய்வதற்கு விரும்பாத விஜயகாந்த் கோவையில் நடைபெற்ற அக்கூட்டத்தைப் புறக்கணித்துவிட்டார். திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியை வீழ்த்தி, கருணாநிதியை வீட்டுக்கு அனுப்புவதற்காகவே கூட்டு சேர்ந்தேன். ஜெயலலிதாவை முதல்வராக்குவது எனது எண்ணம் அல்ல என்பதை தெட்டத் தெளிவாக விளக்கி விட்டார் விஜயகாந்த். ஜெயலலிதாவை விஜயகாந்த் புறக்கணித்தது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தின் கட்சி போட்டியிடும் தொகுதிகளில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இதய சுத்தியுடன் பணியாற்றுவார்களா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதா போட்டியிடும் திருச்சியில் தேர்தல் பிரசாரம் செய்த விஜயகாந்த் அங்கு ஜெயலலிதாவின் பெயரைக் கூறி வாக்குக் கேட்கவில்லை. அதேபோல் விஜயகாந்த் போட்டியிடும் ரிஷிவந்தியத்தில் தேர்தல் பிரசாரம் செய்த ஜெயலலிதா வேட்பாளரான விஜயகாந்தின் பெயரைக் கூறி தேர்தல் பிரசாரம் செய்யவில்லை. 2001 ஆம் ஆண்டு அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியில் காங்கிரஸ் இணைந்திருந்தது. அன்று நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜெயலலிதாவுடன் சோனியா காந்தியும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஜெயலலிதாவுக்காக இரண்டு மணி நேரம் காத்திருந்த சோனியா ஏமாற்றத்துடன் சென்றார். இன்று விஜயகாந்துக்காக ஜெயலலிதா காத்திருந்தார் விஜயகாந்த் ஏமாற்றிவிட்டார். ஜெயõ தொலைக்காட்சியில் விஜயகாந்தின் பிரசாரம் ஒளிபரப்புவதில்லை. விஜயகாந்தின் தொலைக்காட்சி ஜெயலலிதாவின் பிரசாரத்தை இருட்டடிப்புச் செய்கிறது. ஒரே கூட்டணிக் கட்சிகள் இரண்டும் ஒன்றையொன்று எதிரியாகப் பார்க்கின்றன. ஆட்சி பீடம் ஏறுமுன்னே ஜெயலலிதா தனது பங்காளியான விஜயகாந்துக்கு முன்னுரிமை வழங்கவில்லை. ஜெயலலிதா அரியாசணத்தில் ஏறினால் விஜயகாந்துக்கு உரிய மரியாதை கொடுக்க மாட்டார். திராவிட முன்னேற்றக் கழக, காங்கிரஸ் கூட்டணி டெல்லி வரை சென்று இழுபறிப்பட்ட பின்னரே சுமுக நிலைக்குத் திரும்பியது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி என்று சோனியா உத்தியோகபூர்வமாக அறிவித்ததும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் கருணாநிதியையும் கடுமையாக எதிர்க்கும் இளங்கோவன் தனது பரிபூரண ஆதரவைத் தெரிவித்தார். இரண்டு கட்சித் தொண்டர்களும் உரிமையுடன் கை கோர்த்துள்ளனர். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் வழமைபோல தமக்குள் ஏட்டிக்குப் போட்டியாகச் செயற்படுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல என்பதை தமிழக மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய இக்கட்டான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்ட கருணாநிதி தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் சோனியா கலந்து கொள்ள வேண்டும் என்று விரும்பினார். நிலைமையைத் தெளிவாகப் புரிந்து கொண்ட சோனியா தமிழகத் தேர்தல் பிரசாரத்தில் கருணாநிதியுடன் ஒரே மேடையில் ஏறி பிரசாரம் செய்தார். திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் சந்தர்ப்பவாதக் கூட்டணி அல்ல என்பதை தமிழக மக்களுக்கு தெளிவுபடுத்திய அந்தப் பிரசாரக் கூட்டத்தினால் எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

வர்மா

வீரகேசரிவாரவெளியீடு03/04//11

ஏட்டிக்குப் போட்டியாக இலவச அறிவிப்புஅதிர்ச்சியில் தமிழக வாக்காளர்கள்


தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்துள்ளது. தொகுதிப் பங்கீட்டில் ஆரம்பித்த பிரச்சினை மனக் கசப்புக்களுடன் முடிவுக்கு வந்தது. இப்போது கட்சிகளுக்குள்ளேயே பூகம்பம் வெடித்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் இப்பூகம்பம் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தொகுதியில் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் முக்கிய பங்காற்றிய தங்க பாலுவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் களமிறங்கியுள்ளனர். தமிழக சட்ட சபைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிடுபவர்களின் பெயர் விபரங்கள் மேலிடத்துக்கும் அனுப்பப்பட்டது. அந்தப் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் நிராகரித்து மீண்டும் ஒரு பெயர், விபரம் அனுப்பப்பட்டது. இரண்டாவது பட்டியலும் நிராகரிக்கப்பட்டது. தமிழக சட்ட சபைத் தேர்தலில் புதியவர்களுக்கு இடம் கொடுக்க வேண்டும் என்று சோனியா விரும்பினார். இதன் காரணமாக பழையவர்கள் கலங்கினார்கள். புதியவர்கள் அகமகிழ்ந்தார்கள். ஆனால், மூன்றாவதாக வெளியிடப்பட்ட பெயர்ப் பட்டியலில் பழையவர்களும் அவர்களது வாரிசுகளும் உறவினர்களும் அதிகம் இடம்பிடித்தனர். தங்கபாலுவின் மனைவி தமிழக சட்ட சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. பலத்த எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் மனைவிக்கு இடம்பிடித்தார் தங்கபாலு. தங்கபாலு தேர்தலில் போட்டியிடாது மனைவிக்கு விட்டுக் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. தங்க பாலுவின் மனைவி கையளித்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட செய்தி தங்கபாலுவின் எதிரிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. அதே தொகுதியில் மாற்று வேட்பாளராகக் களமிறங்கிய தங்க பாலுவின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதை அறிந்த அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மாற்று வேட்பாளராகக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் வேட்பு மனுத் தாக்கல் செய்வது தான் வழமை. ஆனால், மனைவிக்கு மாற்று வேட்பாளராக தங்கபாலு களமிறங்கியது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகச் சரியாக நிரப்பப்பட்ட வேட்புமனுவில் தங்க பாலுவின் மனைவி கையெழுத்திடாததனால் அவரின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது. இது தெரியாமல் செய்த தவறா கணவனுக்காக தெரிந்து செய்த தவறா என்ற சந்தேகம் உள்ளது. காங்கிரஸ் திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியவற்றின் வேட்பாளர்களுக்கு எதிராக அதே கட்சியைச் சேர்ந்தவர்கள் போட்டி வேட்பாளர்களாகக் களமிறங்கியுள்ளனர். போட்டி வேட்பாளர்களினால் பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. என்றாலும், கட்சியின் கட்டுக் கோப்புக் குலைந்துள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகிய மூன்று தலைவர்களும் பாதுகாப்பான தொகுதியில் போட்டியிடுகிறார்கள். கருணாநிதி தனது சொந்தத் தொகுதியான திருவாரூரில் போட்டியிடுகிறார். தலைவரின் தொகுதி என்பதால் பெருமை பெற்றிருக்கும் அவரை திருவாரூர் அவரைக் கைவிடாது என்ற நம்பிக்கை உள்ளது. ஜெயலலிதா திருச்சியில் போட்டியிடுகிறார் எனது பூர்வீகம் திருச்சியில் தான் என்று அடித்துக் கூறி வாக்குச் சேகரிக்கிறார் ஜெயலலிதா. மாமனாரின் தொகுதியான ரிஷி பந்தியத்தில் போட்டியிடுகிறார் விஜயகாந்த். மாமனாரின் தொகுதி மாப்பிள்ளையைத் தூக்கிக் கொண்டாடும் என்று எதிர்பார்க்கிறார்கள் தொண்டர்கள். தமிழக அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி இடம் மாறியுள்ளது. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து கிராமப் புற மக்களின் வாக்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்தது. நகர்ப்புற மக்கள் அனைவரும் திராவிட முன்னேற்றக் கழகத்தை ஆதரித்தனர். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ் கட்சி, இந்திய மாக்சிஸ்ட் கட்சி ஆகியவற்றின் துணையுடன் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று வந்தது. தமிழக வாக்காளர்களின் மனநிலை தற்போது தலைகீழாக மாறிவிட்டது. நகர்ப்புற மக்கள் அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தையும் கிராமப்புறங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் ஆதரிக்கிறார்கள். ஸ்பெக்ரம், இலஞ்சம், குடும்ப அரசியல், பெற்றோல், காஸ் போன்றவற்றின் விலை உயர்வு, மின் வெட்டு ஆகியவற்றினால் பாதிக்கப்பட்ட நகர்ப்புற மக்கள் அண்ணா திராவிட முன்னேற்றத்தின் பக்கம் தமது பார்வையைத் திருப்பியுள்ளனர். ஒரு கிலோ அரிசி, பொங்கல் பரிசு, இலவச வேட்டி சால்வை குறைந்த விலையில் மானியப் பொருட்கள் என்பன கிராமப் புறத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கை உயர்த்தியுள்ளது. மாணவர்களுக்கு இலவச லப்டொப், வயதானவர்களுக்கு பஸ் பயணத்துக்கு இலவச பஸ் பாஸ் போன்ற அதிரடித் திட்டங்களினால் வாக்காளர்களின் மனதைத் தன்பால் கவர்ந்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். திராவிட முன்னேற்றக் கழகத்தின் இலவசங்களினால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். ஸ்பெக்ரம் ஊழல், வாரிசு அரசியல், பெற்றோல் விலை உயர்வு என்பன கிராமத்தில் உள்ளவர்களைப் பாதிக்கவில்லை. இலவசங் களும் சலுகைகளும் அவர்களுடைய கண்களை மறைத்து விட்டன. திராவிட முன்னேற்றக் கழக அரசு வழங்கிய இலவசங்களும் சலுகைகளும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்ததனால் ஜெயலலிதாவும் இலவசங்களை வழங்கப் போவதாக தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் உறுதி வழங்கியுள்ளார். இலவச சலுகைகளையும் தமிழக அரசின் வருமானத்தில் பாதிப்பு ஏற்படுவதாகக் கூறி ஜெயலலிதா வெற்றி பெறுவதற்காக இலவசங்களை வழங்க உறுதியளித்துள்ளõர். தமிழகத்தில் செல்வாக்கை இழந்துள்ள பாரதீய ஜனதா கட்சியும் வாக்காளர்களைக் கவர்வதற்காக இலவசமாக சிலவற்றை வழங்க உத்தரவாதமளித்துள்ளது. தமிழக அரசின் கொள்கை, சாதனை பொருளாதார முன்னேற்றம் எல்லாம் பின்னுக்குத் தள்ளப்பட்டு புதிய அரசாங்கம் வழங்கப் போகும் இலவசப் பொருட்களுக்காக தமிழக மக்கள் வாக்களிக்கப் போகும் நிலை தோன்றியுள்ளது. வாக்காளர்களுக்கு இலஞ்சம் கொடுத்து வாக்குப் பெறுவது சட்டப்படி குற்றம். ஆனால், இலவசம் என்ற இலஞ்சத்தைத்தரப் போவதால் அரசியல் கட்சிகள் வாக்களிப்பதற்கு முன்னரே உறுதியளித்துள்ளன. பொருளாதாரம், அபிவிருத்தி, வேலைவாய்ப்பு, கல்வி என்பன புறந்தள்ளிவிட்டு இலவசமாகப் பொருட்கள் வேண்டுமானால், எங்களுக்கு வாக்களியுங்கள் என்று அரசியல் கட்சிகள் வாக்காளர்களிடம் இரந்து வேண்டுகின்றனர். வருமானம் குறைந்த கிராமத்து மக்கள் சில பொருட்களை இலவசமாகப் பெறுவதை விரும்புகின்றனர். அவர்களின் பலவீனத்தில் ஆட்சி பீடத்தில் ஏற அரசியல் தலைவர்கள் துடிக்கின்றனர். தமிழகத்தில் சுமார் 60 தொகுதிகள் நகர்ப்புறத்தை அண்டியுள்ளன. ஏனைய தொகுதிகள் அனைத்தும் கிராமத்திலேயே உள்ளன. வீடு வீடாகச் சென்று வாக்குப் பிச்சை கேட்கிறார் வேட்பாளர். ஆனால், தமிழக அரசியல் கட்சிகளோ வாக்காளர்களைப் பிச்சைக்காரர்களாக நினைத்து அவர்களுக்கு இலவசம் என்ற மாயையே காட்டுகிறது. வர்மா வீரகேசரிவாரவெளியீடு03/04//11

Sunday, April 3, 2011

சம்பியன்களை வீழ்த்திமகுடம் சூட்டிய இந்தியா




மேற்கிந்தியத்தீவுகள், அவுஸ்திரே லியா, பாகிஸ்தான் இலங்கை ஆகிய முன்னாள் சம்பியங்களை வீழ்த்தி உலகக் கிண்ணத்தைக் கைப்பற்றியது இந்தியா. இலங்கை இந்திய அணிகளுக்கிடையே மும்பை, வன்கடே மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் ஆறு விக்கட்டுக்களினால் வெற்றி பெற்ற இந்தியா உலகக் கிண்ணச் சாம்பியனானது. நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற சங்கக்கார துடுப்பாட்டத்தைத் தேர்வு செய்தார். முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை 50 ஓவர்களில் 6 விக்கட்டுகளை இழந்து 274 ஓட்டங்கள் எடுத்தது. தரங்க, டில்ஷான் இணை முதலில் களமிறங்கியது. இலங்கையின் பலமான இரு துடுப்பாட்ட வீரர்கள் களம் புகுந்ததும் இலங்கை ரசிகர்கள் உற்சாகக் குரல் கொடுத்தனர். காயத்திலிருந்து மீண்ட முரளி இலங்கை அணியில் இடம்பிடித்தார். நெஹ்ராவுக்குப் பதிலாக ஸ்ரீசாந்த் இந்திய அணியில் இடம்பிடித்தார். சஹீர்கான், ஸ்ரீசாந்த் ஆகியோரின் ஆரம்பப் பந்து வீச்சு மிகவும் அபாரமாக இருந்ததனால் இலங்கையின் அதிரடி வீரர்கள் ஓட்டங்கள் எடுக்கத் தடுமாறினார். சஹீர்கான் முதலில் வீசிய இரண்டு ஓவர்களிலும் இலங்கை வீரர்கள் ஓட்டம் எடுக்கவில்லை. ஸ்ரீசாந்த் வீசிய ஆறாவது ஓவரில் டில்ஷான் இரண்டு பௌண்டரி அடிக்க இலங்கையின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. 20 பந்துகளுக்கு முகம் கொடுத்த தரங்க இரண்டு ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 38 பந்துகளில் 17 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து களமிறங்கிய அணித் தலைவர் சங்கக்கார, ஸ்ரீசாந்தின் ஓவரில் இரண்டு பௌண்டரி அடித்தார். இலங்கை வீரர்கள் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்த முற்பட்ட வேளையில் ஹர்பஜனின் சுழலில் சிக்கிய டில்ஷான் 32 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சங்கக்கார, டில்ஷான் ஜோடி 64 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்தது. மஹேல, சங்கக்கார ஜோடி இந்திய வீரர்களைத் திக்கு முக்காட வைத்தது. மஹேலவின் விஸ்வரூபத்தைத் தடுக்க முடியாது இந்திய வீரர்கள் தடுமாறினர். அனுபவமும் திறமையும் உள்ள மஹேலவும் சங்கக்காரவும் இலங்கையின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். 68 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் 62 ஓட்டங்கள் எடுத்தனர். யுவராஜ் சிங்கின் பந்தை டோனியிடம் பிடி கொடுத்த சங்கக்கார 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சமரவீர, மஹேல ஜோடி நிதானமாகத் துடுப்பெடுத்தாடியது. யுவராஜின் பந்தில் 21 ஓட்டங்களில் சமரவீர ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹப்புகெதர ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். 39.5 ஓவர்களில் ஐந்து விக்கட்டுக்களை இழந்து 182 ஓட்டங்கள் எடுத்தது இலங்கை. இக் கட்டான நேரத்தில் மஹேலவுடன் ஜோடி சேர்ந்தார் குலசேகர. துடுப்பாட்ட பவர்பிளேயைப் பயன்டுத்தி அதிரடியாக ஓட்டங்களைக் குவித்தனர். 50 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் இருவரும் 66 ஓட்டங்கள் எடுத்தனர். சஹீர்கானின் ஓவரில் இமாலய சிக்சர் அடித்து மிரட்டினார் குலசேகர. மறுபுறத்தில் பௌண்டரியுடன் சதமடித்தார். மஹேல 32 ஓட்டங்கள் எடுத்த குலசேகர ரன் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். மஹேல, பெரேரா ஜோடி இந்திய வீரர்களின் பந்து வீச்சைத் துவம்சம் செய்தது. சஹீர்கான் கடைசி ஓவரில் இரண்டு பௌண்டரி, ஒரு சிக்ஸர் அடங்கலாக 18 ஓட்டங்கள் எடுத்தõர். இலங்கை வீரர்கள் சஹீர்கானின் கடைசி ஐந்து ஓவர்களில் 63 ஓட்டங்கள் அடித்தனர். 50 ஓவர்களில் ஆறு விக்கட்டுக்களை இழந்த இலங்கை 274 ஓட்டங்கள் எடுத்தது. மஹேல ஆட்டமிழக்காது 108 ஓட்டங்கள் எடுத்தõர். 88 பந்துகளுக்கு முகம் கொடுத்த மஹேல 13 பௌண்டரிகள் அடங்கலாக 108 ஓட்டங்கள் எடுத்தார். ஒன்பது பந்துகளுக்கு முகம் கொடுத்த பெரேரா ஒரு சிக்சர் மூன்று பௌண்டரிகள் அடங்கலாக 22 ஓட்டங்கள் எடுத்தார். சஹீர்கான், யுவராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளையும் ஹர்பஜன் சிங் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். 275 என்ற பிரமாண்டமான வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியா 48.2 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 277 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷேவாக்கும் சச்சினும் களம் புகுந்தனர். ஆரம்பமே இலங்கை அணிக்கு சாதகமானதாக அமைந்தது. ஓட்டம் எதுவும் எடுக்காது ஷேவாக் மலிங்கவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 33 ஓட்டங்கள் எடுத்த சச்சினையும் மலிங்க வெளியேற்றினார். இந்திய அணியின் முக்கியமான இரு வீரர்கள் ஆட்டமிழந்ததால் இலங்கை வீரர்கள் உற்சாகமாயினர். கம்பீர், கோஹ்லி ஜோடியின் நிதானமான துடுப்பாட்டம் நம்பிக்கையளிக்கும் வகையில் இருந்தது. 30 ஓட்டங்களில் கம்பீரின் பந்தை குலசேகர நழுவ விட்டார். பின்னர் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்கும் சந்தர்ப்பம் தவறியது களத்தில் நிலைத்து நின்றார் கம்பீர். கம்பீர் கோஹ்லி ஜோடி 97 பந்துகளில் 83 ஓட்டங்கள் எடுத்தது. 35 ஓட்டங்களில் கோஹ்லி ஆட்டமிழந்தார். கோஹ்லி வெளியேறியதும் டோனி களம் புகுந்தார். உலகக் கிண்ணத் தொடரில் ஏமாற்றிய டோனி இறுதிப் போட்டியில் அசத்தினார். டோனி, கம்பீர் ஆகிய இருவரும் இந்தியாவின் வெற்றியை நோக்கி துடுப்பெடுத்தாடினர். அடிக்கவேண்டிய பந்துகளை அடித்தும் தவிர்க்க வேண்டிய பந்துகளைத் தவிர்த்தும் தடுக்க வேண்டிய பந்துகளைத் தடுத்து ஆடினர். 120 பந்துகளுக்கு முகம் கொடுத்த இவர்கள் இருவரும் 109 ஓட்டங்கள் எடுத்தனர். 97 ஓட்டங்கள் எடுத்தபோது பெரேராவின் பந்தை அடிப்பதற்காக முன்னோக்கி நகர்ந்த கம்பீர் ஆட்டமிழந்தார். டோனி, யுவராஜ் ஜோடி இந்திய அணியின் உலகக் கிண்ண வெற்றியை உறுதி செய்தனர். துடுப்பாட்ட பவர்பிளேயில் இவர்கள் இருவரும் இணைந்து குலசேகரவின் பந்தை சிக்சருக்கு அடி த்த டோனி வெற்றியை உறுதி செய்தார் டோனி. 42 பந்துகளுக்கு முகம் கொடுத்த டோனியும் யுவராஜும் 54 ஓட்டங்கள் எடுத்தனர். மலிந்த ஒரு விக்கட்டையும் பெரேரா, டில்ஷான் ஆகியோர் தலா ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக டோனியும் தொடர் நாயகனாக யுவராஜ்சிங்கும் தேர்வு செய்யப்பட்டனர். உலக கிண்ண போட்டியை நடத்தும் நாடு சம்பியன் ஆனாது இல்லை என்ற மூட நம்பிக் கையை தகர்த்து எறிந்த இந்தியா தாய் நாட் டில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் சம்பியனானது. . ரமணி சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

Friday, April 1, 2011

Hollywood Queen



ஆங்கிலத் திரைப்பட ரசிகர்களின் இதய சாம்ராஜ்யத்தில் கிளியோபட்ராவாக வீற்றிருந்த அழகு தேவதை எலிஸபெத் ரெய்லர். கடந்த 23 ஆம் திகதி புதன்கிழமை காலமானார். அமெரிக்க, பிரிட்டிஷ் தம்பதியரான பிரான்சிஸ்லென் ரெய்லருக்கும் சாராவுக்கும் 1932 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி பிறந்தார் எலிஸபெத் டெய்லர். 12 ஆவது வயதில் ""நஷனல் வெல்வெட்'' என்ற திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் சிறப்பாக நடித்ததைப் பாராட்டி பல பத்திரிகைகள் விமர்சனம் எழுதின. எலிஸபெத் ரெய்லரின் புகழ் ஹொலிவூட் திரை உலகில் பரபரப்பாகப் பேசப்பட்டது. 50 திரைப்படங்கள், இரண்டு ஒஸ்கார் விருதுகள், 100 சத்திர சிகிச்சைகள், எட்டுத் திருமணங்கள், போதை மருந்துப் பாவனை என்று பரபரப்பாக விமர்சிக்கப்பட்டவர் எலிஸபெத் டெய்லர். கிளியோபட்ரா, பட்டர் பீல்ட் 8 கூல் அப்ரைட் ஒவ் வேர்ஜினியா வூல்ப், றன்றீ கன்ட்ரி லாஸ்ட் சமர் ஆகிய திரைப்படங்கள் எலிஸபெத் ரெய்லரின் நடிப்புக்கு சான்றாக விளங்குகின்றன. 1963 ஆம் ஆண்டு வெளிவந்த பிரமாண்டமான திரைப்படமான "கிளியோபட்ரா' எலிஸபெத் ரெய்லருக்கு பெரும் புகழைத் தேடிக் கொடுத்தது. எகிப்திய எழிலரசியான கிளியோபட்ரா இப்படித்தான் இருந்திருப்பார் என்பதை உணர்த்தும் விதமாக அவரது நடிப்பு இருந்தது. நடிகர்களுக்கு இணையாக எலிஸபெத் ரெய்லர் பற்றிய செய்திகள் பத்திரிகைகளை அலங்கரித்தன. ஆங்கிலத் திரை உலகின் மிகப் பெரிய விருதான ஒஸ்காருக்கு நான்கு முறை எலிஸபெத் ரெய்லரின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. பட்டர்பீல்ட் 8 கூல் அப்ரைட் ஒவ்வேர்ஜினியா வூல்ப் ஆகிய திøரப்படங்களில் நடித்தமைக்காக இரண்டு முறை ஒஸ்கார் விருது பெற்றார். 1950 ஆம் ஆண்டு 18 ஆவது வயதில் நிக்கி ஹில்டனைத் திருமணம் செய்தார். 1952 ஆம் ஆண்டு பைல்கல்வைல்டில் 1957 இல் மைக்கல் டால்ட் என்பவரை திருமணம் செய்தார். இத்திருமணம் ஒரு வருடம் நீடிக்கவில்லை. விவாகரத்துச் செய்தார். 1959 ஆம் ஆண்டு எடிபிஷலாவை திருமணம் செய்தார். 1964 ஆம் ஆண்டு றிச்கட்மன்டனைத் திருமணம் செய்தார். ரிச்கட் பட்டனைத் திருமணம் செய்தார். ரிச்கட் பட்டனுடன் 10 வருடம் வாழ்ந்தார். 1974 ஆம் ஆண்டு அவரை விவாக ரத்துச் செய்தார். ரிச்சர்ட் பட்டனை மறக்க முடியாத எலிஸபெத் டெய்லர் 1976 ஆம் ஆண்டு அவரை மீண்டும் திருமணம் செய்தார். ஒரு வருடத்தில் வாழ்வு கசந்ததால் விவாகரத்துப் பெற்றார். 1976 ஆம் ஆண்டு நடிகர் ஜோன் வார்னரைத் திருமணம் செய்தார். 1991 ஆம் ஆண்டு 59 ஆவது வயதில் லாரி போர் டென்ஸ்தியைத் திருமணம் செய்தார். 1996 ஆம் ஆண்டு அவரை விவாகரத்துச் செய்தார். எயிட்ஸ் நோயை ஒழிப்பதற்காக அதிக அக்கறை காட்டினார். அதன் காரணமாக இதற்காக விசேட ஒஸ்கார் விருது வழங்கப்பட்டது. திரை உலகில் இருந்து ஒதுங்கிய பின்னர் மனிதாபிமானப் பணிகளில் முழு மூச்சுடன் செயற்பட்டார். 1963 ஆம் ஆண்டு ஜூன்ஹேர் ஷேஸ்ட் மனிதாபிமான விருது அவரைத் தேடி வந்தது. தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரை ஆகியவற்றுக்கு அடிமையானதால் அவற்றிலிருந்து விடுபடுவதற்காக விசேட சிகிச்சை வழங்கப்பட்டது. ஏழு பேரை எட்டு முறை திருமணம் செய்த எலிஸபெத் டெய்லருக்கு இரண்டு ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் 10 பேரக் குழந்தைகளும் நான்கு கொள்ளுப் பேரக் குழந்தைகளும் உள்ளனர். 1960 ஆம் ஆண்டு பிரமாண்டமான தயாரிப்பாக வெளிவந்த கிளியோபட்ராவில் எகிப்து பேரழகியாக ரசிகர்களின் உள்ளங்களில் புகுந்து எலிஸபெத் டெய்லர் அப்படத்தில் மார்க் அன்ரனியாக நடித்த ரிச்சர்ட் பட்டனிடம் மனதைப் பறிகொடுத்து அவரைத் திருமணம் செய்தார். ஹொலிவூட்டில் எந்த ஒரு நடிகையும் பெற்றிராத ஒரு மில்லியன் டொலரை சம்பளமாக பெற்றார். எலிஸபெத் ரெய்லருக்கு வழங்கப்பட்ட தொகையை அறிந்த ஹொலிவுட் நடிகர்களே அதிர்ச்சியடைந்தனர். 1963 ஆம் ஆண்டு கிளியோபட்ரா படம் வெளியான பின்னர் திரையில் இணைந்த ஜோடி நிஜமாகவே இல்லறத்தில் இணைந்தது. திரைப்படங்களில் மட்டுமல்லாது நாடகங்களிலும் நடித்து ரசிகர்களைத் தன்பால் ஈர்த்தார். 2004 ஆம் ஆண்டு இதயக் கோளாறு காரணமாக அவதிப்பட்டார். கணுக்கால், கால் பகுதியில் ஏற்பட்ட பலவீனத்தினால் ஐந்து முறை தவறி விழுந்து இடுப்பு உடைந்தது. மூளைக் கட்டி அறுவை சிகிச்சை தோல் புற்று நோய் ஆகியவற்றில் இருந்து மீண்டார். பொப்பிசை சக்கரவர்த்தி மைக்கல் ஜாக்சனுக்கு எதிராக சிறுவர் துஷ்பிரயோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட போது மைக்கல் ஜாக்சனுக்காகக் குரல் கொடுத்தார். உடல் நலம் இல்லாத போதிலும் சமூக சேவைகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டார். எலிஸபெத் ரெய்லர் மறைந்தாலும் கிளியோபட்ரா என்ற அழகு தேவதை ரசிகர்களின் மனதில் என்றும் நிலைத்து நிற்பார். ரம்ணி சூரன்,ஏ,ரவிவர்மா மெட்ரோநியூஸ் 01/04/11

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா



இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையே மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் 29 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்தியா, இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்போட்டியில் பாகிஸ்தானின் செயற்பாடு ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. இந்திய அணியின் பந்துவீச்சும் களத்தடுப்பும் பாகிஸ்தானை கட்டிப்போட்டது. இந்திய அணியில் அஸ்வின் நீக்கப்பட்டு நெஹ்ரா அணியில் இணைக்கப்பட்டார். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களை எடுத்தது. ஷேவாக், சச்சின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். ஷேவாக் வழக்கம் போல் பௌண்டரியுடன் ஆட்டத்தை ஆரம்பித்தார். உமர் குல்லின் முதல் ஓவரில் ஒரு பௌண்டரி அடித்த ஷேவாக் உமர் குல்லின் அடுத்த ஓவரில் ஐந்து பௌண்டரிகள் அடித்தார். அந்த ஓவரில் 27 ஓட்டங்கள் எடுக்கப்பட்து. ஷேவாக்கின் அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. வஹாப் ரியாஸின் பந்தில் 38 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். சச்சின், ஷேவாக் ஜோடி 36 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்தது. ஷேவாக் வெளியேறியதும் கம்பீர், சச்சினுடன் இணைந்தார். இவர்களின் ஆட்டம் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்தது. இந்த ஜோடியும் அதிக நேரம் நின்று பிடிக்கவில்லை. 27 ஓட்டங்கள் எடுத்த கம்பீர் மொஹமட் ஹபீஸின் பந்தை உமர் அக்மலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 79 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்தனர். அடுத்து வந்த விராத் கோஹ்லி ஒன்பது ஓட்டங்களுடன் வெளியேறினார். பத்தாவது உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங் வஹாப் ரியாஸின் பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்காது ஆட்டம் இழந்ததும் பாகிஸ்தான் ரசிகர்களின் ஆரவாரம் மொஹாலியை அதிரவைத்தது. இந்திய ரசிகர்களின் அதிர்ச்சியடைந்தனர். ஐந்தாவது இணைப்பாட்டத்தின் டெண்டுல்கருடன் டோனி இணைந்தார். இந்த இணை ஒற்றை இலக்கத்தில் ஓட்ட எண்ணிக்கையை அதிகமாக்கியதால் ரசிகர்களின் ஆரவாரம் குறைந்தது. ஒருநாள் அரங்கில் 95 ஆவது அரைச் சதம் அடித்தார் டெண்டுல்கர். சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய சச்சின் 85 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 25 ஒட்டங்களில் டோனி ஆட்டமிழந்தார். இந்திய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழக்க மறுமுனையில் ரெய்னா போராடினார். கடைசி கட்டத்தில் பவர்பிளேயைப் பயன்படுத்தி உமர் குல்லின் ஓவரில் இரண்டு பௌண்டரிகள் அடித்தார் ரெய்னா. ரெய்னா ஆட்டமிழக்காது 36 ஓட்டங்கள் எடுத்தார். வஹாப் ரியாஸின் பந்துவீச்சு இந்திய அணியை அதிரச் செய்தது. வஹாப் ரியாஸ் ஐந்து விக்கட்டுகளையும் சயிட் அஜ்மல் இரண்டு விக்கட்டுகளையும் மொஹமட் ஹபீஸ் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். 261 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 49.5 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்கள் எடுத்தது. கம்ரன் அஜ்மல், மொஹமட் ஹபீஸ் ஜோடி களமிறங்கியது. இவர்கள் இருவரும் இணைந்து 54 பந்துகளுக்கு 44 ஒட்டங்கள் எடுத்தனர். சஹீர்கானின் பந்தை யுவராஜிடம் பிடிகொடுத்து கம்ரன் அக்மல் 19 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். முனாப் பட்டேலின் பந்து வீச்சில் டோனியிடம் பிடி கொடுத்த மொஹமட் ஹபீஸ் 43 ஒட்டங்களில் ஆட்டம் இழந்தார். சுழற் பந்தில் அசத்திய யுவராஜ் சிங் அஸாட் சபீக்கை 30 ஓட்டங்களிலும் யுனிஸ்கானை 13 ஓட்டங்களிலும் வெறியேற்றினார். யுவராஜின் பந்தில் இரண்டு சிக்சர், ஒரு பௌண்டரி அடித்து மிரட்டினார் உமர் அக்மல், உமர் அக்மலின் ஆட்டத்தினால் பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமாகினர். ஹர்பஜனின் சுழலில் சிக்கிய உமர் அக்மல் 29 ஓட்டங்களில் வெளியேறினார். முனாப் பட்டேலின் பந்துவீச்சில் 3 ஓட்டங்களுடன் அப்துல் ரஸாக் வெளியேறினார். பாகிஸ்தான் அணி 36.2 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தபோது மிஸ்பா உல் ஹக்குடன் ஜோடி சேர்ந்தார் அணித் தலைவர் அப்ரிடி. மிஸ்பா உல் ஹக், அப்ரிடி ஜோடி அணியை மீட்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஹர்பஜனின் பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்ற அப்ரிடி ஷேவாக்கிடம் பிடிகொடுத்து 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 34 பந்துகளுக்கு 34 ஓட்டங்கள் எடுத்தனர். அப்ரிடி வெளியேறியதும் பாகிஸ்தானின் நம்பிக்கை தகர்ந்தது. இறுதிவரை போராடிய மிஸ்பா உல் ஹக் 56 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 49.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்த 231 ஓட்டங்கள் எடுத்தது. ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார். ரமணி சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்