Wednesday, September 30, 2020

யார்க்கரில் மிரட்டிய நடராஜனுக்கு வீரர்கள் பாராட்டு


 

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் டெல்லி க‌ப்பிட்டல்ஸுக்கு எதிரான  போட்டியில் ஹைதராபாத் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் ஸ்டம்பை குறி வைத்து யார்க்கரா  போட்டு மிரட்டினார். குறிப்பாக அவர் தனது கடைசி இரு ஓவர்களில் (அணியின் 14,18-வது ஓவர்) மட்டும் துல்லியமாக 10 யார்க்கர்களை வீசி திணறடித்தார். ஹைதராபாத் அணியின் வெற்றியில் அவரது பந்து வீச்சும் முக்கிய பங்கு வகித்தது.

அவரை பாராட்டியுள்ள இந்திய முன்னாள் வீரர் ஷேவாக், ‘நடராஜனின் பந்து வீச்சை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது. கடைசி கட்டத்தில் மிகச்சிறப்பான முறையில் நேர்த்தியாக யார்க்கர் வீசினார் என்றார். ‘அற்புதம் நடராஜன் என்று அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் பிரெட்லீ தனது டுவிட்டர் பக்கத்தில் புகழ்ந்துள்ளார்.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் அபாரமாக பந்து வீசி அதன் மூலம் ஐ.பி.எல். போட்டிக்குள் நுழைந்தவர், 29 வயதான நடராஜன். சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர். 2017-ம் ஆண்டு ஐ.பி.எல்.-ல் ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்ட நடராஜன் அந்த ஐ.பி.எல்.-ல் பெரிய அளவில் (6 ஆட்டத்தில் 2 விக்கெட்) ஜொலிக்கவில்லை. இதன் பிறகு 2018-ம் ஆண்டில் ரூ.40 லட்சத்திற்கு ஐதராபாத் அணி அவரை வாங்கியது. ஆனால் 2018 மற்றும் 2019-ம் ஆண்டு சீசனில் ஒரு ஆட்டத்தில் கூட களம் இறக்கப்படவில்லை. என்றாலும் தமிழக அணிக்காக உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி தனது திறமையை வளர்த்துக் கொண்ட நடராஜன் இப்போது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். இந்த ஆட்டத்தில் அவர் 4 ஓவர் பந்து வீசி 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

கம்பீர் கண்டு பிடித்த நவ்தீப் சைனி


 

 மும்பைக்கு எதிரான பெங்களூர் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த நவ்தீப் சைனிக்கு பின் மிகவும் உருக்கமான கிரிக்கெட் வரலாறு உள்ளது. 2012 அக்டோபர் மாதம் ஹரியானாவை சேர்த்த 20 வயது இளைஞர் டெல்லிக்கு செல்கிறார். விடுமுறை தினங்களை நண்பர் வீட்டில் கழிப்பதற்காக டெல்லிக்கு ரயில் ஏறினார் அந்த இளைஞர்.. ஆனால் அவருக்கு தெரியாது அந்த ரயில் பயணம்தான் தனது வாழ்க்கையை மாற்ற போகிறது என்று... அந்த இளைஞர்தான் நவ்தீப் சைனி.

ஹரியானா மாநிலத்தில் இருக்கும் சின்ன சின்ன கிரிக்கெட் கிளப்கள், மாநில அணிகளில் நவ்தீப் சைனி விளையாடி இருக்கிறார். டெல்லி வந்த போது, இவருக்கு பெரிய அளவில் இந்திய கிரிக்கெட் உலகில் பெயர் இல்லை. நவ்தீப் சைனி டெல்லிக்கு விடுமுறையை கழிக்க வந்தவர்.. டெல்லி மைதானத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி செய்வதை தெரிந்து கொண்டு அதை பார்க்க ஆவலாக சென்றார். கம்பீர், சேவாக், கோலி எல்லாம் அங்குதான் பயிற்சி செய்து வந்தனர். இவர்களை பார்த்து கிரிக்கெட் பயிற்சி கற்றுக்கொள்ளலாம் என்று இவர் அந்த மைதானத்திற்கு சென்றார்

  ஆனால் அவரை மைதானத்திற்கு உள்ளேயே விடாமல் காவலாளி விரட்டிவிட்டார். இதனால் மறுநாள் வலை பயிற்சியில்பந்து வீசும் வீரர் போல  வெள்ளை உடை அணிந்து கொண்டு , கிழிந்த ஷூ ஒன்றை அணிந்து கொண்டு மைதானத்திற்கு உள்ளே சென்றுள்ளார். பவுண்டரி லைனில் நின்றவருக்கு அன்றுதான் அடித்தது லக். அன்று வலை பயிற்சியில் பவுலிங் செய்ய ஆள் இல்லை.. இதனால் பவுண்டரில் லைனில் பால் மேனாக நின்ற நவ்தீப் சைனிக்கு பந்து வீச அழைப்பு வந்தது.

அதுவரை நவ்தீப் சைனி சிவப்பு நிற ''கார்க்'' பந்தை அவர் தொட்டு கூட பார்த்தது இல்லை. டென்னிஸ் பந்துகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார். அதுவும் அன்று அவர் முதல் பந்து போட சென்றது.. கம்பீருக்கு. ஒரே ஒரு தரிசனம் கிடைக்காத என்று மைதானத்திற்கு வந்தவருக்கு கம்பீருக்கு பந்து வீசும் வாய்ப்பு கிடைத்தது. நவ்தீப் சைனியின் முதல் பந்து 135 கிமீ வேகத்தில் பவுன்ஸ் ஆனது. யார்க்கர் அடுத்தடுத்து பந்துகளில் கம்பீரை தனது வேகப்பந்து மூலமும், துல்லியமான யார்க்கர் மூலமும் நவ்தீப் சைனி நடுங்க வைத்தார் . ஒவ்வொரு முறை கம்பீருக்கு கஷ்டமான பந்து போட்டுவிட்டு ''சாரி பாய்'' என்று சொல்வதை வழக்கமாக வைத்து இருந்தார். இவரின் பவுலிங்கை பார்த்து அசந்து போன கம்பீர் அவருக்கு புதிய ஷூ வாங்கி கொடுத்தார். அதோடு வலைப்பயிற்சியில் பவுலிங் செய்ய அனுமதி கொடுத்துள்ளார். ஒரு சின்ன ஆர்வம்.. முயற்சி அவரின் வாழ்க்கையையே அன்று மாற்றியது.

நவ்தீப் சைனிக்கு கம்பீர் முறையின்றி அனுமதி கொடுத்ததாக டெல்லி கிரிக்கெட் போர்ட் கம்பீருடன் சண்டை கூட போட்டது. ஆனாலும் கம்பீர் தொடர்ந்து நவ்தீப் சைனிக்கு ஆதரவு அளித்தார். இந்த தொடர் முயற்சி தீவிர பயிற்சி, கம்பீரின் உதவி காரணமாக 2013ல் ரஞ்சி கிண்ணப் போட்டியில் டெல்லி அணிக்காக ஆட நவ்தீப் சைனி தேர்வானார்.

. ரஞ்சி கிண்ணப் போட்டியில் இவரின் ஆட்டம் காரணமாக 2016ல் சையது முஷ்டாக் அலி கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் 2017ல் நடந்த ரஞ்சி கோப்பை போட்டியில் இவர் 34 விக்கெட்டுகளை 8 போட்டிகளில் எடுத்தார். சராசரியாக ஒரு போட்டியில் 4 விக்கெட் எடுத்து அந்த தொடரின் அதிக விக்கெட் டேக்கர் என்ற பெயரை பெற்றார்.

  இந்த சாதனை காரணமாக 2017 ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் நவ்தீப் சைனி ஏலம் எடுக்கப்பட்டார். இதற்கும் கம்பீர்தான் காரணம். 10 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டவர் அந்த தொடரில் சிறப்பாக பந்து வீசினார். இதனால் அடுத்த வருடமே கோஹ்லி இவரை 3 கோடி கொடுத்து பெங்களூர் அணிக்கு எடுத்தார். அங்குதான் இவரின் பவுலிங் ஸ்டைல் பாகுபலி சிலை போல விஸ்வரூபம் எடுத்தது. பயிற்சி எடுத்தார் அதுவரை யார்க்கர் மட்டும் போட்டு வந்த நவ்தீப் சைனி சிறப்பு பயிற்சி மூலம் புதிய புதிய டெக்னிக்குகளை கற்றுக்கொண்டார்.

இவருக்கு கடந்த இரண்டு வருடமாக ஆர்சிபி அணி தனியாக பயிற்சி கொடுத்துள்ளது.2018ல் டெஸ்ட் போட்டியிலும், 2019ல் உலகக் கிண்ணப்போட்டியிலும் இவர் இந்திய அணிக்காக தேர்வானார். ஆனால் விளையாடவில்லை.

கடந்த வருடம் மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிராக இந்திய ரி20 அணியில் இணைந்து, முதல்முறையாக சர்வதேச போட்டிகளில் அறிமுகம் ஆனார். அந்த தொடரில் கரிப்பீயனின் மாஸ் பேட்ஸ்மேன்களை சிதறவிட்டு தனது திறமையை நிரூபித்தார்.

மும்பைக்கு எதிராக வீசிய 19வது ஓவரில் வெறும் 12 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இந்த ஓவர்தான் போட்டியையே மாற்றியது.அதன்பின் சூப்பர் ஓவரிலும் கூட வெறும் 7 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். பெங்களூர் அணியின் வெற்றிக்கு இவர்தான் காரணம் என்று கோஹ்லியே பாராட்டி உள்ளார்.

ஓநாய் டாட்டூவோடு வலம் வரும் இவர் ''ஓநாயை நீங்கள் சர்க்கஸில் பார்க்க முடியாது.. காட்டில்தான் பார்க்க முடியும். நான் காட்டில் இருக்க விரும்புகிறேன். சர்க்கஸில் அல்ல'' என்று விளக்கம் அளித்துள்ளார்.  

தடுமாறும் அணித்தலைவர் கோஹ்லி


 

இந்தியா பெங்களூரு ஆகியவற்றின் தலைவரான கோஹ்லியின் துடுப்பாட்டம் ஏமாற்றமளிக்கிறது. உலகக்கிண்ணப் போட்டியில் ஜொலிக்காத கோஹ்லி ஐபிஎல்லிலும் தடுமாறுகிறார். இந்தியாவின் துணைக் கப்டனும் மும்பையின் கப்டனுமாகிய ரோஹித் சர்மா, தான் சார்ந்த அணிகளை வெற்ரிப் பாதைக்கு இட்டுச் செல்கிறார்.

: மும்பைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் தனது விக்கெட்டை இழந்த பின் பெங்களூர் கப்டன் கோலி தலையை தொங்கபோட்டபடி வெளியேறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . மும்பை, பெங்களூர் என்ற இரண்டு பரம வைரிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் பெங்களூர் கொஞ்சம் ஆதிக்கம் செலுத்தியது.

 பெங்களூர் அணி மெதுவாக தொடங்கினாலும் போக போக அதிரடி காட்டியது. பெங்களூரின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பின்ச், டி வில்லியர்ஸ் மூன்று பேரும் மும்பை வீரர்களின் பந்துகளை துபாயில் இருக்கும் பாலைவனங்களுக்கு பறக்கவிட்டனர்.

 உலகக் கிண்ணத் தொடரிலும் கப்டன் கோஹ்லி சரியாக விளையாடவில்லை. ரோஹித் சர்மா அதிரடியாக சதங்களை அடிக்க கோஹ்லி சதம் அடிக்க முடியாமல் திணறி வந்தார். உலகக் கிண்ணத்தொடரில் எப்படியும் பழைய நிலைக்குத் திரும்பி விடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்.. அந்த தொடர் முழுக்க அவர் ஏமாற்றினார். அதன்பின் நடந்த போட்டிகளிலும் கோலி ஏமாற்ரினார்.

  கொரோனா காரணமாக கோஹ்லி வீட்டில் முடங்கினார். இதனால் கோஹ்லியின் பயிற்சி பாதிக்கப்பட்டது. துடுப்பாட்டத்தில் கோஹ்லி கஷ்டப்படுவது தெரிந்தது. பழைய கோலி முன்பு போல பேட்டை சுற்ற முடியாமல், பந்தை கணிக்க முடியாமல் தடுமாறுகிறார்.

 மும்பைக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி வீரர்கள் நன்றாக துடுப்பெடுட்தாடினார்கள். ஆனால் கோஹ்லி வந்த பின் அதிக பந்துகளை வீணாக்கிய காரணத்தால் பெங்களூரின் ஓட்ட விகிதம் அப்படியே சரிந்தது.   அந்த போட்டியில் 11 பந்துகளை சந்தித்த கோஹ்லி 3 ஓட்டங்கள் மட்டும் எடுத்தார். ஹைதராபாத்திற்கு எதிரான முதல் போட்டியில் 13 பந்துகள் எதிர்கொண்டு 14 ஓட்டங்கள் மட்டுமே கோஹ்லி எடுத்தார். பஞ்சாப்பிற்கு எதிரான போட்டியில் 5 பந்துகளுக்கு முகம் கொடுத்து ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்தார்.

  கடந்த 8 ஐபிஎல் போட்டிகளில் கோலி வெறும் 25 ஓட்டங்கள் மட்டுமே எடுத்துள்ளார்.கோஹ்லியின் திணறல் அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.அணி தோல்வியடைந்தால் அல்லது கப்டன் மோசமாக விளையாடினால் கப்டனைத் தூக்கி விடுவார்கள். ஆனால், இந்தியாவும் பெங்களூருவும் கோஹ்லியைக் கைவிடுவதாகத் தெரியவில்லை. 

ஹைதராபாத் அணிக்கு முதல் வெற்றி; டெல்லிக்கு முதல் தோல்வி


 

இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாகத் தோல்வியடைந்த ஹைதராபாத்துக்கும் இரண்டு போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற டெல்லிக்கும் இடையே நடைபெற்றபோட்டியில் ஹைதராபாத் வெற்றி பெற்றது. 

அபுதாபியில் நேற்றிரவு நடந்த11-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத் சன்ரைசர்ஸ்- டெல்லி கப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டெல்லி அணியில் அவேஷ் கானுக்கு பதிலாக இஷாந்த் ஷர்மா சேர்க்கப்பட்டார். ஹைதராபாத் அணியில் முகமது நபி, விருத்திமான் சஹா நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன், அப்துல் சமத் இடம் பிடித்தனர்.

ரஷித் கானின் மாயஜால சுழற்பந்துவீச்சு, வில்லியம்ஸனின் அதிரடி,, பேர்ஸ்டோவின் அரைசதம் ஆகியவற்றால் அபு தாபியில் நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் 11-வது லீக் போட்டியில்டெல்லி கபிடல்ஸ் அணியை 15 ஓட்டங்களில் தோற்கடித்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

முதலில் துடுப்பெடுத்தாடிய  சன் ரைசர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்கள் சேர்த்தது. 163 ஓட்டங்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கபிடல்ஸ் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் மட்டுமே அடித்து 15 ஓட்டங்களில் தோல்வி அடைந்தது.

நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற டெல்லி கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் ஹைதராபாத்தை துடுப்பாடப் பணித்தார். டேவிட் வானரும், ஜானி பேர்ஸ்டோவும் ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.


 

டெல்லி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறிய இருவரும் முதல் 5 ஓவர்களில் 24 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தனர். அடுத்த ஓவரில் வானர் ஒரு சிக்சர், பவுண்டரி அடித்தார். பவர்-பிளேயான முதல் 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 38 ஓட்டங்கள் சேர்த்தனர். வானர்-பேர்ஸ்டோ கூட்டணி உடையாமல், பவர்-பிளேயில் எடுத்த மந்தமான ஸ்கோர் இதுவாகும்.   வானர் ரன்-அவுட் கண்டத்தில் இருந்தும், பேர்ஸ்டோ கேட்ச் வாய்ப்பில் இருந்தும் தப்பித்தனர். 

அடித்தாடிய வானர்  35 பந்துகளில் 45 ஓட்டங்கள் எடுத்த போது (33 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) அமித் மிஸ்ராவின் சுழலில்  விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மனிஷ் பாண்டே  3 ஓட்டங்களுடன் வெளியேறினார். 

. 3-வது விக்கெட்டுக்கு  பேர்ஸ்டோவுடன்வில்லியம்சன் இணைந்தார். பேர்ஸ்டோ 53 ஓட்டங்களில் (48 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்)  ஆட்டமிழந்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய  வில்லியம்சன்  26 பந்துகளில் 41 ஓட்டங்கள் ( 5 பவுண்டரி)  எடுத்து கடைசி ஓவரில் ஆட்டம் இழந்தார். 

20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 4 விக்கெட்களை  இழந்து 162 ஓட்டங்கள் எடுத்தது. டெல்லி தரப்பில் அமித் மிஸ்ரா, காஜிசோ ரபடா தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.


 

  163 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தன. பிரித்வி ஷா 2 ஓட்டங்கள், கப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 17 ஓட்டங்கள், ஷிகர் தவான் 34 ஓட்டங்கள் (31 பந்து, 4 பவுண்டரி), ஹெட்மயர் 21 ஓட்டங்கள், ரிஷாப் பண்ட் 28 ஓட்டங்கள், ஸ்டோனிஸ் 11 ஓட்டங்கள்  எடுத்து ஆட்டமிழந்தனர். 

மத்திய ஓவர்களில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் போட்ட கிடுக்குபிடியில் சிக்கி டெல்லி அணி தடம் புரண்டது. 20 ஓவர்கள் முழுமையாக ஆடிய டெல்லி அணி 7 விக்கெட்களை இழந்து 147 ஓட்டங்கள் எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 15ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

சுழலில் மிரட்டிய ரஷித்கான் 4 ஓவர்களில் 14 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகன் விருது பெற்ற ரஷித்கானின்  .பி.எல்.-ல் சிறந்த பந்து வீச்சு இதுவாகும். ரி20 போட்டிகளுக்கு சிறந்த பந்துவீச்சாளர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் ரஷித் கான். கடந்த இரு போட்டிகளிலும் தனது வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்து முடியாமல் சிரமப்பட்ட ரஷித் கானுக்கு நேற்று நல்ல வாய்ப்பு கிடைத்தது.3-வது போட்டியில் விளையாடிய ஆடிய ஹைதராபாத் அணிக்கு இது முதலாவது வெற்றியாகும். அதே சமயம் முதல் 2 போட்டிகளிலும் வெற்றி கண்டிருந்த டெல்லி அணிக்கு இது முதலாவது தோல்வியாகும்.


 

கடந்த இரு போட்டிகளிலும் தோல்வியைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சன்ரைசர்ஸ் அணி முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் வலிமையான வீரர்களைக் கொண்டுள்ள டெல்லி அணிக்கு எளிதாக அடையக் கூடிய இலக்குதான் என்றாலும் தனது வலிமையான, துல்லியமான, கட்டுக்கோப்பான பந்துவீச்சால் சன்ரைசர்ஸ் வெற்றி பெற்றது.

சன்ரைசர்ஸ் அணி குறைந்த ஸ்கோரை அடித்தும் வெற்றி பெற்றதற்கு ரஷித் கான், புவனேஷ்வர் ஆகியோரின்பந்துவீச்சு பிரதான காரணம்.

கடந்த இரு போட்டிகளிலும் தன்னை களமிறக்காமல் இருந்தது தவறு என்பதை கேப்டன் வானருக்கு நேற்றைய ஒரு போட்டியில் நிரூபித்துவிட்டார். வில்லியம்ஸன்.

பந்துவீச்சில் கடந்த இரு போட்டிகளிலும் விக்கெட் இன்றி தவித்த புவனேஷ்வர் குமார் நேற்றை ஆட்டத்தில் தனது வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்பிரித்வி ஷா, ஹெட்மயர் ஆகிய இரு முக்கிய வீரர்களை புவனேஷ்வர் வீழ்த்தினார்.

 தமிழக வீரர் நடராஜன் தனது பந்துவீச்சால் நேற்று கவனிக்கவைத்துள்ளார். ஸ்டாய்னிஷ்க்கு அவர் வீசி 5 யார்கர்களும் அற்புதமானவை. தொடர்ந்து நடராஜன் இவ்வாறு பந்துவீசினால் பிசிசிஐயால் கவனிக்கப்படுவார்.