Showing posts with label போத்துகல். Show all posts
Showing posts with label போத்துகல். Show all posts

Friday, July 10, 2026

போத்துகல் அணியின் பயிற்சியாளராக ஜோர்ஜ் ஜீசஸ் நியமனம்

போத்துகல் உதைப்ந்தாட்ட அணியின்  தலைமைப் பயிற்சியாளராக ராபர்டோ மார்டினெஸுக்குப் பதிலாக ஜோர்ஜ் ஜீசஸ் நியமிக்கப்படுவார் என  ஏ போலா' ஊடகம் தெரிவித்துள்ளது .

  உலகக்  கிண்ண காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெய்னிடம்    1-0 என்ற கோல் கணக்கில் போத்துகல் தோல்வியடைந்த , சில நிமிடங்களிலேயே மார்டினெஸ்  இராஜினாமாச் செய்தார். 

71 வயதான ஜீசஸுக்கும், போத்துகல்  உதைபந்தாட்ட  கூட்டமைப்பின் தலைவரான பெட்ரோ புரோயென்காவுக்கும் இடையே ஒரு சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏ போலா செய்தி வெளியிட்டுள்ளது.

போத்துகல் கப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ இடம்பெற்றிருந்த சவுதி புரோ லீக் அணியான அல் நஸ்ரை,ஜீசஸ் கடந்த சீசனில் லீக் பட்டத்திற்கு வழிநடத்தினார்.

போத்துகலின்  பென்ஃபிகா, ஸ்போர்டிங் லிஸ்பன் ,துருக்கியின் ஃபெனர்பாச்சே ஆகிய அணிகளுக்கு ஜீஸஸ்  பயிற்சியளித்துள்ளார். அமோராவுடன் தனது பயிற்சியாளர் பணியைத் தொடங்குவதற்கு முன்பு, ஜீசஸ் 1973 முதல் 1990 வரை தொழில்முறை வீரராக விளையாடினார்.

 


Friday, July 3, 2026

குரோஷியாவின் கோலை மறுத்த ஸ்னிக்கோ தொழில்நுட்பம்

போத்துகல்,குரோஷியா ஆகியவற்றுக்கிடையே  டொராண்டோவில் நடைபெற்ற போட்டியில்  2-1 என்ற கோல் கணக்கில் போத்துகல் வெற்றி பெற்றது.

கூடுதல் நேரத்தின் இறுதிக் கட்டத்தில் ரூபன் நெவ்ஸ் பந்தைத் தனது சொந்த வலைக்குள் திருப்பியபோது, குரோஷியா அணி ஆட்டத்தைக் கூடுதல் நேரத்திற்கு இழுத்துவிட்டதாக நினைத்தது. ஆனால், VAR மறுஆய்வுக்குப் பிறகு அந்த கோல் ஒஃப்சைட் காரணமாக இறுதியில் நிராகரிக்கப்பட்டது.

கோல் அடிக்கப்படுவதற்கு முன்னர், குரோஷிய வீரர் பந்தைத் தொட்டாரா என்பதைத் தீர்மானிக்க, கிரிக்கெட்டில் அதன் பரவலான பயன்பாட்டிற்காக நன்கு அறியப்பட்ட 'ஸ்னிக்கோ' தொழில்நுட்பமும் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது.

இந்தத் தொழில்நுட்பம், 2022-ல் கட்டாரில் நடைபெற்ற  உலகக் கிண்ணத்  தொடர் முதல் அதன் VAR அமைப்பின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது.

"உலகக் கிண்ண அதிகாரப்பூர்வ போட்டிப் பந்தான அடிடாஸ் ட்ரியோண்டாவில் உள்ள 'கனெக்டட் பால் டெக்னாலஜி' வழங்கிய தரவுகளின்படி, போத்துகலுக்கு எதிரான கோல் அடிக்கப்படுவதற்கு முன்னர் குரோஷியாவின் இகோர் மட்டனோவிச் பந்தைத் தொட்டது நிரூபிக்கப்பட்டது. இதன்மூலம் நடுவர் ஓஃப்சைட்டைச் சரியாகத் தீர்மானித்து, கோலை நிராகரிக்க முடிந்தது," என்று ஃபிஃபா கூறியது.

டிரையோண்டா பந்தினுள் பொருத்தப்பட்டுள்ள IMU சென்சார்கள், பந்தில் ஏற்படும் மிகச்சிறிய தொடர்பையும் கண்டறியும் திறன் கொண்டவை. இது ஒளிபரப்பில் பார்வையாளர்களுக்கு 'இதயத்துடிப்பு வரைபடம்' போலக் காட்டப்பட்டு, வேகமான மற்றும் துல்லியமான முடிவுகளை எடுக்க அதிகாரிகளுக்கு முன் எப்போதும் இல்லாத அளவிலான தரவுகளை வழங்குகிறது.

  

உலகக் கிண்ணத்தில் ரொனால்டோவின் சாதனைக் கோல்

டொராண்டோ மைதானத்தில்  குரோஷியாவுக்கு எதிரான நொக் அவுட் போட்டியில் விளையாடிய போத்துகல் 2-1 என்ற கோல் கணக்கில்  வெற்றி பெற்று ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

 உலகக்கிண்ண உதைபந்தாட்டத் தொடரின் நொக் அவுட்  சுற்றில் கோல் அடித்த மூத்த வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.  இப்போட்டியின் முதல் பாதியில் போர்ச்சுகல் அணி பந்தை அதிக நேரம் தன் வசம் வைத்திருந்த போதிலும், கோல் அடிக்கத் தடுமாறியது. மைதானத்தில் குரோஷியா ரசிகர்கள் தொடர்ந்து ரொனால்டோவை கூச்சலிட்டு சீண்டினர். ஆட்டத்தின் 53-வது நிமிடத்தில் குரோஷியாவின் இவான் பெரிசிக் முதல் கோல் அடித்து தனது அணிக்கு 1-0 என முன்னிலை தந்தார். அதனால் 2018-இல் ரன்னர்அப் , 2022-இல் 3-வது இடத்தைப் பிடித்த குரோஷியா இந்த முறை ரொனால்டோ அணியை வீழ்த்தி விடுமோ? என்ற பரபரப்பு ஏற்பட்டது.   68-வது நிமிடத்தில்  போத்துகல் வீரர் ரெனாடோ வைகாவை, குரோஷியாவின் விலாசிக் ஃபவுல் செய்ததால் பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த வாய்ப்பை கிறிஸ்டியானோ ரொனால்டோ மிக நேர்த்தியாக கோலாக மாற்றி ஆட்டத்தை 1-1 என சமநிலைக்குக் கொண்டு வந்தார். இதன் மூலம் உலகக் கிண்ண நொக் அவுட்  போட்டியில் முதல் கோல் , மிக மூத்த வீரர் என்ற  இரட்டைச் சாதனையை அவர் படைத்தார்.

 81-வது நிமிடத்தில் ரொனால்டோ வெளியேற்றப்பட்டார். தொடர்ந்து கூடுதல் நேரத்தின் 4-வது நிமிடத்தில், மாற்று ஆட்டக்காரராக களம் இறங்கிய கோன்சலோ ராமோஸ் தலையால்  கோல் அடித்து   2-1 என போத்துகலை  முன்னிலை பெறச் செய்தார்.

 ஆட்டத்தின் கடைசி வினாடியில் குரோஷியா அணி அடித்த கோல், விஏஆர் (VAR) பரிசோதனைக்குப் பிறகு ஆஃப்சைடு என அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த குரோஷியா ரசிகர்கள் மைதானத்திற்குள் குப்பைகளை வீசி எறிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இரு அணிகளும் தத்தமது குழுக்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்தன. கிறிஸ்டியானோ ரொனால்டோ (41 வயது மற்றும் 147 நாட்கள்) மற்றும் லூகா மோட்ரிச் (40 வயது மற்றும் 296 நாட்கள்) ஆகியோர் களத்தில் இருந்த நிலையில், 40 வயதுக்கு மேற்பட்ட இரண்டு கள வீரர்கள் உலகக்  கிண்ணப் போட்டியில் நேருக்கு நேர் மோதியதும் இதுவே முதல் முறையாகும்.