Tuesday, July 25, 2017

ரசிகர்களுடன் பகடையாடும் பிக்பொஸ்

பொழுது போக்கான ஆரம்பிக்கும் விஷயங்கள் நாம் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெற்று நேரத்தையும் பணத்தையும் விரயமாக்குவதுண்டு. பிக்பொஸ் நிகழ்ச்சி ஆரம்பமானபோது  மெகா சிரியலில்  மூழ்கிக்கிடந்த தாய்க்குலம் அதனைக் கண்டுகொள்ளவில்லை. உள்ளே நடக்கும் பிரச்சினைகள் போட்டுக்கொடுத்தால் ஆகியவற்றைக் கேள்விப்பட்டதும். பிக்போஸின் ரசிகர்களாக மாறிவிட்டார்கள். கமலின் ரசிகர்கள் அதனை விரும்பிப்பர்க்கிரர்கள். கமலின் எதிரிகள் குறைகண்டு பிடிப்பதற்காகப் பார்க்கிறார்கள். மீம்ஸ்களை உருவாக்குபவர்கள் கழுவி ஊத்துவதற்காகப் பார்க்கிறார்கள். 

வீடு அலுவலகம் அங்கும் இப்போது பிக்பொஸ் பற்றியே பேச்சு முதல் நாளில் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்து மகிழ்ச்சியாகக் கொண்டாடினார்கள். அடுத்த நாளில் இருந்து உண்மை முகம் வெளியாகத் தொடங்கியது. காயத்திரி ரகுராமும் ஆர்த்தியும் சேர்ந்து  ஜூலியைக் குறிவைத்துத் தாக்கினார்கள். ஜூலியை வெளியேற்றுவதில் இருவரும்  ஒன்றிணைந்து    போராடினார்கள். ஜூலி சபதமிட்டதுபோல ஆர்த்தி  வெளியேற்றப்பட்டார். ஆரம்பத்தில் ஜூலியின்மீது ரசிகர்கள் அன்பு பாராட்டினார்கள். அவரின் உண்மை முகம்  தெரிய வந்ததும் அவரை வெறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். சுகவீனம் காரணமாக  ஸ்ரீ வெளியேறினார். சக போட்டியாளர்களின்  தொல்லை தங்க முடியாமல் சுவர் ஏறிக்குதிக்க முயன்ற பரணி போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். கஞ்சா கருப்பை மக்கள் வெளியேற்றிவிட்டனர்.
ரசிகர்களின்  ஒட்டுமொத்த ஆதரவைபெற்ற ஓவியா பிக்பொஸின் வீட்டில் தொடர்ந்து தங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.  பிக்பொஸின் விட்டில் இருந்து ஓவியாவை  வெளியேற்றுவதில் அங்குள்ள அனைவரும் குறியாக உள்ளனர். ஆனால், ரசிகர்களின் ஒட்டுமொத்த ஆதரவைப்பெற்ற ஓவியா தொடர்ந்தும்  உள்ளே இருக்கிறார்.
வயிற்று வலியால் துடித்த ஜூலி பொய் சொல்கிறார் நடிக்கிறார் என காயத்திரியும் நமீதாவும் சொல்வதை மற்றவர்கள் நம்புகின்றனர். ஓவியா ஜூலிக்கு ஆதரவு தெரிவித்து அரவணைக்கிறார். சுகமடைந்ததும் ஓவியாவை கழற்றி விடுகிறார் ஜூலி  நமீதா காயத்திரி ஜூலி ஆகிய மூவரும் இணைந்து ஓவியவுக்குத் தொல்லை கொடுத்தனர்.ஒருநாள் இரவு  ஆண்களின் அறையில் ஓவியா தங்கினார்.  ஜூலி சொன்னதை நம்பியவர்கள் அனைவரும் ஓவியாவை வெளியேற்ற வேண்டும் என பிக்பொஸ்ஸிடம் கோரிக்கை வைத்தனர்.உண்மையை பிக்பொஸ்  தெரிவித்ததால் ஜூலியின் மீது  கோபமடைகின்றனர். 
   .காயத்திரியையும் நமீதாவையும் பற்றி தன்னிடம் ஓவியா தவறாகச் சொல்லி யதாக ஜூலி தெரிவிக்கிறார். அப்படி ஒரு பதிவு தங்களிடம் இல்லை என  கமல் விளக்கியுயும் ஜூலி அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஜூலியைக் கண்டித்த கமல் அங்கு சகுனி வேலை செய்யும் கயத்திரியைக் கண்டுகொள்ளாளதை பலரும் விமர்சித்துள்ளனர். கமலின் கட்டிப்பிடி வைத்தியத்தை சினேகன் கச்சிதமாகச்  செய்கிறார். சிநேகனும் வையாபுரியும் அவ்வப்போது அழுது புலம்பி தமது உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றனர். ஆரம்பத்தில் ஜூலி அழுதபோது கலங்கிய ரசிகர்கள் இப்பொழுது கண்டு கொள்வதில்லை. நல்லவனாக இருந்த சக்தியின் மீதும் வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

தொலைக்காட்சித் தொடரில் வில்லன் வில்லி யார் என்பதை அடையாளம் கட்டிவிடுவார்கள். பிக்பொஸ்ஸின் வீட்டில் இருப்பவர்களுக்கு தமது எதிரியை அடையாளம் காண முடியாதுள்ளது. பிக்பொஸ்ஸின் விட்டில் இருந்து வெளியேறிய நமீதா அது ஒரு ஃபவ் ஸ்டார் சிறை என்றார். வெளியிலையும் அது இருக்கு என அரசியலை  சுட்டிக் காட்டினர் கமல்.பிரபலங்களைச் சிறைவைத்து நடைபெறும் இந்த பகடையாட்டம் உச்சத்தை அடையும் என்பதில் சந்தேகமில்லை.

Sunday, July 23, 2017

அரசியல் சதுரங்கத்தில் சிக்கிய சசிகலா

வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் நான்கு வருட சிறைத்தண்டனை பெற்ற சசிகலா இலஞ்சம் கொடுத்து சிறையில் சலுகைகள் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டால் கர்நாடக அரசுக்கு சிக்கல் எழுந்துள்ளது. காங்கிரஸும்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் அரசியலில் இருதுருவங்களாக இருக்கின்றன. கர்நாடக காங்கிரஸ் சசிகலாவுக்கு உதவி செய்வதில் ஆர்வம்  காட்டுகிறது.  அங்கு காங்கிரஸை விழுத்த காத்திருந்த பாரதீய ஜனதாக் கட்சி புகுந்து விளையாடியுள்ளது.  


வருமானத்துக்கு அதிகமான சொத்து குவித்த வழக்கின் முதலாவது எதிரியான ஜெயலலிதா மரணமானதால் அவரது பெயர் வழக்கில் இருந்து விடுபட்டது இரண்டாம்.மூன்றாம், நான்காம் எதிரிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டு நான்கு வருட சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டது. சசிகலா சிறையில் இருந்துகொண்டே அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க செய்த முயற்சிகள் அனைத்தும் கைநழுவிப் போயின. இப்போது இலஞ்சம் கொடுத்து சலுகை பெற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதால் எடப்பாடி பழனிச்சாமியின்முன்னால்   இருந்த முட்டுக்கட்டை விலகி உள்ளது.
  
சிறையில் நடைபெறும் வழமையான சோதனையின் போது சசிகலாவுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் பற்றிய தகவல் தெரிய வந்தது எனக் கூறப்பட்டது. கர்நாடக ஆளும் கட்சியான  காங்கிரஸுக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவே   ரூபா கர்நாடக சிறைத்துறைக்கு  மாற்றப்பட்டதாக தகவல் அறிந்த வட்டாரம் தெரிவிக்கிறது. போதைப் பொருள், கைத்தொலைபேசி போன்றவற்றை சிறையில் பாவிக்க முடியாது.  திடீரென நடைபெறும்  சோதனையின்போது தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறையில் சிக்குவதும் காலப்போக்கில் அவை மீளவும் பாவனைக்கு வருவதும் புதிய விடயமல்ல.

பெங்களூர் பரப்பான அக்ரஹார சிறையில் கைதியாக இருக்கும் சசிகலாவின் செல்லுடன் மேலதிகமாக  ஐந்து அறைகள்  அவருக்கு வழங்கப்பட்டடு  அவற்றுள் குக்கர் சமையல் பாத்திரங்கள் மெத்தை தலையணை போன்றவை இருப்பதைக் கண்ட டி.ஐ.ஜி ரூபா அதுபற்றிய விபரங்களை மேலிடத்துக்கு அனுப்பினார். அந்த இரகசியத் தகவல் கசிந்து செய்தியாக வெளியானதும், ரூபாவின் அறிக்கை பொய்யானது என டி.ஜி.பி.  சத்தியநாராயண ராவ்  தெரிவித்தார். அதற்குப் பதிலளித்த ரூபா அவை எல்லாம் உண்மை என்னிடம் ஆதாரம்  இருக்கிறது எனத் தெரிவித்தார்.இரண்டு அதிகாரிகளும் ஏட்டிக்குப் போட்டியாக அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும் வேளையில் கர்நாடக தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பான  வீடியோக்கள்   நிலைமையை மேலும் சிக்கலாக்கின. 

 சிறைத்தண்டனைக் கைதியான சசிகலா கைதியின் உடை இல்லாமல் நைற்ரியுடன் உலாவுவது,  சசிகலாவும் இளவரசியும் சல்வார் உடையுடன் தோழில் பையைத் தூக்கிக்கொண்டு நடப்பது அவர்களுடன் சிறை காவலர் சீருடையுடன் பெண் ஒருவர்  நிற்பது போன்ற வீடியோக்கள் தொலைக் கட்சியில் ஒளிபரப்பாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதைப்  போன்று மேலும் இரண்டு வீடியோக்கள் இருப்பதாக வெளியான செய்தியால் பலர் கலக்கத்தில் உள்ளனர்.அவை சிசிரிவி கமராவில் பதியப்பட்டவை என்றும் திட்டமிட்டு கைத் தொலைபேசியில் பதியப்பட்டு வெளியிடப்பட்டவை என்றும் இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் பாகுபலியை மிஞ்சிய கிராபிக்ஸ் என சசிகலாவுக்கு ஆதரவானவர்கள் தெரிவிக்கின்றனர்.
சிறைச்சாலையின் விதிகள் அனைத்தும் மீறப்பட்டு சசிகலாவுக்கு சலுகை வழங்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது.  இதற்காக இரண்டு கோடி ரூபா இலஞ்சம் கொடுக்கப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் வெளிவந்துள்ளது. அது தவிர சிறைச்சாலையில் உள்ள உயர் அதிகாரிகளுக்கு மாதாந்தம் இலட்சக்கணக்கான பணம் விநியோகிக்கப்பட்டதாகவும் தெரியவருகிறது. கடந்த பெப்ரவரி மாதம் 14  ஆம் திகதி சிறையில் அடைக்கப்பட்ட  சசிகலா 13  நாட்கள் தான் சிறையில் இருந்ததாகவும் மிகுதி நாட்களில் அவர் சொகுசு மனையில் தங்கியதாகவும்  இன்னொரு தகவல் கசிந்துள்ளது. உயர் அதிகாரியின் காரில் சசிகலாவும் இளவரசியும் அடிக்கடி வெளியில் சென்று வந்தார்கள். சொப்பிங் சென்றார்கள். என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.


சிறைக்கைதி ஒருவரை பதினைந்து நாட்களுக்கு ஒருமுறைதான் பார்வையாளர்கள் சந்திக்க முடியும் சசிகலாவின் விடயத்தில் இந்த சிறைச்சாலை விதி மீறப்பட்டுள்ளது. 117  நாட்களில்  82 பார்வையாளர்கள்  32  முறை சந்தித்திருக்கிறார்கள். சட்டப்படி எட்டுப்பேர்தான் சசிகலாவைப் பார்த்திருக்க வேண்டும். தேசிய மனித உரிமை ஆணையம் இது பற்றி விளக்கம் கோரி கர்நாடக டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  போயஸ்காடனில் வேலை பார்த்த ரஜினி எனும் பெண்   சிறையில் சசிகலாவுக்கு சமைத்துக் கொடுத்ததாகவும் செய்தி வெளியாகி உள்ளது. சிறைககைதியான சசிகலாவின்  அறையில் குக்கர்,சமையல் பாத்திரங்கள்,பாய்,தலையணை ஆகியன இருக்கும் படங்கள் சமூக அவைத் தளங்களில் வெளியாகின.

இரட்டை இலைச்சின்னத்தைப் பெற  இலஞ்சம் கொடுத்த புகாரில் தினகரன் கைது செய்யப்பட்டபோது அவருடன்  தொடர்புடைய பலரை  டில்லி பொலிஸார் விசாரணை செய்தனர். மல்லிகார்ஜுனின் நண்பர் பிரகாஷ் என்பவரை விசாரித்த டில்லி பொலிஸாருக்கு அதிர்ச்சிகரமான புதிய தகவல் ஒன்று கிடைத்தது. கர்நாடக முன்னாள் உள்துறை அமைச்சர் பரமேஸ்வரனின் உதவியாளரான பிரகாஷ் கொடுத்த அந்தத்  தகவலால் கர்நாடக அரசை உலுக்கி உள்ளது. இரட்டை இலைச்சின்னத்தைப் பெறுவதற்காக பிரகாஷ் மூலம் பணப்பட்டுவாடா எதுவும் நடைபெறவில்லை. சசிகலவுக்காக கர்நாடகச் சிறையில் பணம் கொடுக்கப்பட்டதை பிரகாஷ் தெரிவித்தார். இந்தத்தகவல் மேலிடத்துக்கு அனுப்பப்பட்டதும் மத்திய மந்திரி ஒருவரின் சிபார்சில் சசிகலா இருக்கும் சிறைக்கு டிஜிபியாக  ரூபா அனுப்பபட்டார்.



பெங்களுருவில் இருந்து  சுமார்  300  கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள தாவன்கேரே என்ற ஊரைப் பூர்வீகமாகக்கொண்டவர்  ரூபா. 2000 ஆம் ஆண்டு பொலிஸ் துறையில் சேர்ந்தார்.   2016  ஆம் ஆண்டு ஜனாதிபது விருது பெற்றார். கர்நாடக மாநில பிதர் எஸ் பியாகப் பொறுப்பேற்றபின் கனிமவளக் கொள்ளையைக் கட்டுப்படுத்தினர். அதன் பிரதிபலனாக இஅடமர்ரம் செய்யப்பட்டார். துணிச்சல் மிக்க ரூபா அரசியல்வாதி அதிகாரி எனப் பாரபட்சம் கட்டாமல் கைது செய்வார் அல்லது எச்சரிக்கை விடுப்பார். ரூபாவின் பெயரைக் கேட்டாலே குற்றவாளிகள் நடுங்குவார்கள். பரப்பன  அக்ரஹார சிறைக்கு ரூபா மாற்றப்பட்டதும் அவரைப்பற்றித் தெரிந்தவர்கள் அதிரடியை எதிர்பார்த்தார்தகள்.  அவருடைய அறிக்கையால் சசிகலாவுக்கும் அவருக்கு உதவிய அதிகாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுக்கது. 
கர்நாடகா உள்துறை செயலர், ஊழல் தடுப்புத் துறை இயக்குநர், காவல்துறை ஐ.ஜி ஆர்.கே தத்தா ஆகியோருக்கு, சிறைத்துறை டி.ஐ.ஜி-யான  ரூபா,ஜூலை 12 ஆம் திகதி   புகார் அறிக்கை ஒன்றை அனுப்பினார்.
அதில், 'சிறைக்குள் இருக்கும் சசிகலாவுக்கு சிறையில் வழங்கப்படும் உணவு, மருந்துகளைக் கொடுக்காமல், வீட்டிலிருந்து சமைத்து எடுத்து வருவதற்கும், சிறைக்குள்ளேயே சமைக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் சிறை என்றே அறியாத வண்ணம் ஒரு சொகுசு வாழ்க்கை வாழ, சிறைத்துறை டி.ஜி.பி சத்திய நாராயண ராவுக்கு சசிகலா தரப்பு ஒரு கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளது. ஏனைய சிறை கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் ஒரு கோடி ரூபாய் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு கோடி ரூபாய் லஞ்சமாகக் கொடுக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளார்.  
   "நான் எந்த லஞ்சமும் வாங்கவில்லை. சசிகலா சாதாரணக் கைதியைப் போலவே நடத்தப்படுகிறார்" என்று பெங்களூரில் செய்தியாளர்களைச் சந்தித்து
சிறைத்துறை டி.ஜி.பி சத்தியநாராயண ராவ், அன்று விளக்கமளித்தார். 
அன்றே, இதற்குப்  பதில் தரும்விதமாக சிறை டி.ஐ.ஜி ரூபா, "என்னிடம் அனைத்துக்கும் ஆதாரம் உள்ளது. கர்நாடகா சிறைத்துறை டி.ஜி.பி என்ற அடிப்படையில், அவர் மீதான புகாருக்காக சத்தியநாராயண ராவுக்கும் நான் புகார் கடிதம் அனுப்பியுள்ளேன். என்மீது எந்த நடவடிக்கை எடுத்தாலும் கவலையில்லை. கேட்கும்போது முழு ஆதாரங்களையும் சமர்ப்பிக்கத் தயாராக உள்ளேன்" என்றார்.
 இதன் தொடர்ச்சியாக,  ஜுலை 17ஆம் திகதி  சிறைத்துறை பொறுப்பில் இருந்து, பெங்களூரு நகர போக்குவரத்துத் துறைக்கு ரூபாமாற்றப்பட்டார்."ரூபா பணியிட மாற்றம் செய்யப்பட்டது துறை ரீதியிலான நடவடிக்கையே ஆகும்" என்று விளக்கமளித்துள்ளார் கர்நாடகா முதல்வர் சித்தராமையா. சிறைத்துறைக் கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமாரின் பதவி பறிக்கப்பட்டது. டிஜிபி சத்தியநாராயண ராவ் காத்திருப்போர் பட்டியலில் உள்ளார். 
பாரதீய ஜனதாக் கட்சி  எறிந்த  ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் விழுந்திருக்கின்றன. அதாவது, சசிகலாவுக்கும் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் சிறை விவகாரம் சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. வழக்கமாக சிறைக்குள் இருக்கும் வி.வி.ஐ.பி.க்களுக்கு இத்தகைய சலுகைகள் என்பது சர்வசாதாரணம். ஆனால், அதை ரூபா வெளிப்படுத்தியிருக்கிறார். இதன் பின்னணியில் ஓர் அரசியல் சதுரங்க வேட்டை இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஜனாதிபதித்  தேர்தலுக்குப்பிறகு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  மாற்றங்கள் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்ட நேரத்தில் சசிகலா சிறை விவகாரம் சூடுபிடித்துள்ளது. சசிகலாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு சாதகம் என்று அந்த அணியினர் சொல்கின்றனர். 
ஏற்கெனவே இரட்டை இலைச் சின்ன விவகாரத்தில் டெல்லி பொலிஸார்  தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் டி.டி.வி. தினகரனின் பெயர் இடம் பெறவில்லை. இதை டி.டி.வி.தினகரனின் ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்துக் கொண்டாடி வருகின்றனர். ஆனால், டெல்லி பொலிஸ் , அடுத்த குற்றப்பத்திரிகையில் நிச்சயம் டி.டி.வி.தினகரன் பெயர் இடம் பெறும் என்று சொல்கின்றனர். டி.டி.வி.தினகரன் மீதான பிடி விலகுவதாகத் தெரிந்தாலும் அவரும் பாரதீய ஜனதாவின் கண்காணிப்பில் இருப்பதகச் சொல்லப்படுகிறது.


இந்த விவகாரம் பற்றி விசாரிப்பதற்கு முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரத்தை மூடி மறைப்பதற்கு தன்னிடம் பேரம் பேசப்பட்டதாக ரூபா தெரிவித்துள்ளார். முன்னதாக விசாரணை செய்யும் போது சசிகலா மிரட்டியதாகவும் தெரியவருகிறது. பரப்பான சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கொலைக்கதியான கியாத்தே சேட்டனின் பிறந்தநாளன்று பிஸ்ரல் வடிவிலான கேக் வெட்டிக் கொண்டாடப்பட்டதாக படத்துடன் சமூக வலைத்தளத்தில் செய்தி வெளியாகி உள்ளது.அந்தப் பிறந்தநாள்  கொண்டாட்டத்தில் சிறை அதிகாரிகள் சிலரும் கலந்து கொண்டனர். முத்திரை மோசடி மன்னன் தெல்கிக்கும்  சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளைத் திருத்துவதற்கு அமைக்கப்பட்ட சிறைகளில் செல்வாக்கு உள்ளவர்களும் வசதி உள்ளவர்களும் அவ்வப்போது செய்திகள் வெளியாவதும் பின்னர் அவை மறுக்கப்படுவதும் வாடிக்கையான சம்பவங்கள். நீதியான விசாரணை நடைபெற்று உண்மை வெளிவரும்போது அரசியலில் பல மாற்றங்கள் நடைபெற வாய்ப்புஉள்ளது. 

Friday, July 14, 2017

இந்திய சீன எல்லையில் யுத்த மேகம்

மிகப்பெரிய நிலப்பரப்பு, அதிகளவு சனத்தொகை, பலமான இராணுவக்கட்டமைப்பு, பொருளாதரத்தில் உச்சநிலை,தொழில்நுட்ப வளர்ச்சி கொண்ட சீனா அண்டை நாடுகளை மிரட்டுவதில் குறியாக இருக்கிறது. சீனாவுக்கு அடுத்து மிகப்பெரிய நிலப்பரப்பு அதிகளவு சனத்தொகை சீனாவுக்கு போட்டியாக தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ பலம், பொருளாதார உச்சநிலையில் இருக்கும் நாடு இந்தியா. எல்லைப் பிரச்சினையால் இந்தியாவும்  சீனாவும் அடிக்கடி முட்டுப்படுகின்றன. சிக்கிம் மாநில எல்லையில் சீன இராணுவம் சாலை பூட முயன்ற போது இந்திய இராணுவம் தடுத்தது. இரண்டு நாடுகளும் அப்பகுதியில் இராணுவத்தைக் குவித்து பலப்படுத்தியதால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது.

இந்தியா, பூட்டான், சீனா ஆகிய மூன்று நாடுகளின் எல்லையில் ஒரு  நிலைப்பகுதி உள்ளது. அது ஒரு பீடபூமியாகும்  அந்தப் பீடபூமியை "டோகாலாம்" என பூட்டான் அழைக்கிறது. 'டோங்லாங்" என சீனா அதற்குப் பெயர் சூட்டி உள்ளது.  பூட்டானுடன் இந்தியா செய்து கொண்டுள்ள ஒப்பந்தப்படி அந்த பீடபூமியின் பெரும்பகுதி இந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. திபெத்தை தனது கட்டுப்பாட்டில்  வைத்திக்கும் சீனாவால் அந்தப் பீடபூமியில்    கால் பதிக்க முடிந்தது திட்டமிட்டபடி சாலை  அமைக்கப்பட்டால் சீனா மிக எளிதாக இந்தியாவுக்குள் நுழைந்துவிடும். 20 கிலோ மீற்றர் பரப்பளவு கொண்ட அப்பகுதியை "கோழியின் கழுத்து" என்பார்கள். அந்தப் பகுதியில் சீனா இராணுவம் பதித்தால், இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களான அசாம்,மிசோராம்,நாகலாந்து, மேகாலயா, மணிப்பூர், அருணாசலம், திரிபுரா ஆகிய ஏழு மாநிலங்களையும் இந்தியாவில் இருந்து பிரித்துவிட முடியும். இதனை உணர்ந்தே இந்தியா தடுத்து நிறுத்தியது.

பூட்டானின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சாலை அமைப்பதை இந்தியாவல் தடுக்க முடியாது என சீனா சொல்கிறது. சீனா இராணுவத்துடன் முட்டி மோத பலம் இல்லாத பூட்டான் தனது எதிர்ப்பை அறிக்கை மூலம் தெரிவித்தது. சீனாவின் நோக்கத்தைப் புரிந்து கொண்ட இந்தியா துணிச்சலுடன் எதிர்ப்புக் காட்டியது. எல்லை மீறிய சீனா இராணுவம் இந்தியாவின் பதுங்கு குழிகளை அழித்தது. இந்திய இராணுவத்தின் பலமான எதிர்ப்பினால் சாலை போடும் பணியை  சீனா கைவிட்டது. 1962 ஆம் ஆண்டு யுத்தத்தில் இந்தியாவின் சிலபகுதிகளை சீனா, கைப்பற்றியது. அதனை நினைவுபடுத்தி 1962 ஆம் ஆண்டை மறக்க வேண்டாம் என சீனா ஞாபகப்படுத்தியது. 1962 ஆண்டை விட நாம்  முன்னேறிவிட்டோம் என  இந்தியா பதிலளித்துள்ளது.


இந்தியாவின் கிழக்குப் பக்கத்தில் சீனாவும் மேற்குப்பக்கத்தில் பாகிஸ்தானும் எல்லையில்  தொல்லை கொடுக்கின்றன. அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாததால் பாகிஸ்தான்  உலக நாடுகளில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. உள்நாட்டுப் பிரச்சினைகளால் துவண்டிருக்கும் பாகிஸ்தானால் இந்தியாவுடன் நேரடியாக மோதமுடியதுள்ளது. ஆனால், சந்தர்ப்பம் கிடைக்கும்போது இந்தியாவை சீனா சீண்டிப்பார்க்கிறது  உலக வரை படத்தில் நேபாளம்,சிக்கிம் பூட்டான் ஆகியன ஒரு நேர்கோட்டில் சீனாவிடம் இருந்து இந்தியாவைப் பாதுகாக்கின்றன.   இம்மூன்றுடனும்  இந்தியா அதிக நட்புறவு பாராட்டி வருகிறது .1975 ஆம் ஆண்டு சிக்கிம்  நாட்டை தனது மாநிலமாக இந்தியா அறிவித்தது. இதனை சீனாவால் ஜீரணிக்க முடியவில்லை தனது எல்லையில் உள்ள நாடுகள் இந்தியாவுடன் நட்புறவு பாராட்டுவதால் சீனா எரிச்சலடைந்துள்ளது.
 ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்டபோது இந்திய எல்லையைப் பற்றி சீனா அக்கறை காட்டவில்லை. ஆங்கிலேய அரசு 12  தடவை குழுக்களை அமைத்து இந்திய சீன எல்லையை வரையறுத்தது. நிரந்தரமான எல்லை வரையறுக்கப்படவில்லை.  இந்தியா சுதந்திரமடைந்தபோது எல்லைப் பிரச்சினையை சீனா  கிளறவில்லை.1949 ஆம் ஆண்டு  மாவோவின் தலைமையில் சீனா அசுர வளர்ச்சி பெற்றது. சீனாவின் மண் ஆசையால் அண்டை நாடுகள் தமது நிலத்தை இழந்தன. 1951  ஆம் ஆண்டு திபெத்தை சீனா ஆக்கிரமித்தது. 1955  ஆம் ஆண்டு  சீனா வெளியிட்ட வரை படத்தில்  இந்திய மாநிலங்களான சிக்கிம்,அசாம், காஷ்மீர்  ஆகியவற்றின் சில பகுதிகளை தனக்குரியதென அடையாளப்படுத்தியது. அன்று முதல் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையில் எல்லைப்பிரச்சினை ஆரம்பமானது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே  1962 ஆம் ஆண்டு  யுத்தம் நடந்தபோது இந்தியாவுக்குள் புகுந்த சீனா பல ஆயிரம்கிலோ மீற்றர் பரப்பளவை கைப்பற்றியது. இன்றுவரை அதனை சீனாவிடம் இருந்து மீட்கவில்லை. தற்போது சீனா  வெளியிட்டுள்ள  வரைபடத்தில்  காஷ்மீரின் ஒருபகுதி, இமாசலப் பிரதேசம் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகள் தனது பூர்வீக பகுதி என்றும், அருணாசலப் இரதேசத்தின் ஒரு பகுதியை தனது மாகாணம் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் தான் சிக்கிம் பகுதியில் சீனா கால் வைத்துள்ளது. எல்லையை விட்டு இந்திய இராணுவம்  உடனடியாக வெளியேற வேண்டும் இல்லையேல் பாகிஸ்தான் வேண்டுகோள் விடுத்தால் காஷ்மீருக்குள் சீன இராணுவம் நுழையும் என சீனாவின் அதிகார பூர்வ நாளிதழ் எச்சரித்துள்ளது.

ரஷ்ய,கொரியா, மங்கோலியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் ,தஜிகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம் ,பூட்டான்,மியான்மார், லாவோஸ், மியன்மார் ஆகிய 13 நாடுகள் சீனாவுடன் தமது எல்லையைப் பகிர்ந்துள்ளன. இது தவிர  பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியின் எல்லையையும் சீனா பயன் படுத்த பாகிஸ்தான் விட்டுக்கொடுத்துள்ளதால் அங்கும் சீனா தனது காலைப் பதித்துள்ளது. 14நாடுகளுடன்   22 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை சீனா பகிர்ந்துள்ளது.
ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகளுடன் கிழக்கு சீன கடல் பகுதியையும்,பிலிப்பைன்ஸ்,வியட்ன,ஆகிய நாடுகளுடன் தென் சீன கடல் எல்லையையும் சீனா பகிர்ந்துள்ளது.இந்தக் கடல் எல்லைகளில் சீனாவுக்கும் ஏனைய நான்கு நாடுகளுக்கும் முறுகல் வராத நாளே இல்லை. பிலிப்பைன்ஸ், வியட்னாம் ஆகிய நாடுகளின் கடல் பகுதியின் 90  சத வீதத்தை சீனாவின் கடற்படை ஆக்கிரமித்துள்ளது.

இந்தியாவும் சீனாவும் பொருளாதரத்தில் போட்டி போட்டு முன்னேறி வருகின்றன.உலக  நாடுகள் இந்தியாவுடன் மிக நெருக்கமாக இருக்கின்றன. இந்தியாவுடன் விடுபட்ட நட்பை ரஷ்யா பலப்படுத்தி உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருப்பதாக பென்டகன் அமெரிக்க  அரசிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இராணுவ ரீதியிலும் விண்வெளி ஆய்விலும் இந்திய வெகுதுரம் முன்னேறி உள்ளது.  யுத்தம் மூண்டால்பொருளாதார ரீதியில் சீனா பாதிப்படையும். இந்தியாவும் சீனாவும் பகை நாடுகளாக இருந்தாலும் கடந்த 10 வருடங்களில் இரு தரப்பு வர்த்தகமும் பொருளாதார உறவும் மிக அதிகமாக உடர்ந்துள்ளது.  இரு நாடுகளுக்கும் இடையே  71  பில்லியன் டொலர் வர்த்தகம் நடைபெறுகிறது.   58.33   பில்லியன் டொலர் சீனாவில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதியாகிறது.  11.76  பில்லியன்  டொலர் இந்தியாவில் இருந்து சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது.
முனையும் தொழில் பாதைக்கு பதிப்பு ஏற்படும். சீனாவில் ஆரம்பித்து பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் வழியாக ஈரானின் அல்லியை ஒட்டி பாகிஸ்தானின் கவ்தர் துறைமுகம் வரை சாலை அமைக்கும் பணியை சீனா ஆரம்பித்துள்ளது. இந்தத் திட்டத்துக்கு இந்திய தனது கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளது.


இருநாட்டு அரசியல் தலைவர்களும் தமது போலி  கெளரவத்தைக் கைவிட்டு நாட்டினதும் மக்களினதும் நலனைக் கருத்தில்கொண்டு பேச்சு வரத்தை மூலம் எல்லைப் பிரச்சினைக்குத் தீர்வுகாண வேண்டும்.
வர்மா    

Monday, July 3, 2017

வேற்றுமையில் ஒற்றுமை காணும் அ.தி.மு.க


எம்.ஜி.ஆரால் ஆரம்பிக்கப்பட்ட  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை உயர்ந்த  ஸ்தானத்தில் வைத்த பெருமை ஜெயலலிதாவுக்குரியது. எம்.ஜி.ஆரின் மறைவின் பின்னர் அவருடைய மனைவி ஜானகி தலைமையிலும் ஜெயலலிதாவின் தலைமையிலும் கழகம் இரண்டானது. இரட்டை இலைச்சின்னம் முடக்கப்பட்டு இரண்டு அணிகளும் தேர்தலில் படு தோல்வியைச் சந்தித்தன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கதை முடிந்தது.என அனைவரும் நினைத்திருந்த வேளையில் கழகத்துக்குத் தலைமை ஏற்ற ஜெயலலிதா அதனை வெற்றிப் பாதைக்கு அழைத்துச்சென்றார். காங்கிரஸ்,  பாரதீய ஜனதாக் கட்சி போன்ற தேசியக் கட்சிகள் ஜெயலலிதாவின் தயவை நாடி நின்றன.  மத்திய ஆட்சியை அமைக்கும் அல்லது கலைக்கும் வல்லமை ஜெயலலிதாவிடம் இருந்தது.ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் இந்த நிலைமை தலை  கீழாகிவிட்டது.

ஜெயலலிதா மறைந்த பின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சிதறும் என எதிர்பார்க்கப்பட்டது.அந்த எதிர்பார்ப்புகளை எல்லாம் பொய்யாகி பன்னீர்ச்செல்வத்தின் தலைமையில் ஆட்சி அரங்கேறியது. ஜெயலலிதாவின் இடத்தை சசிகலா பிடிக்க முயன்றபோது சசிகலா அணி, பன்னீர்ச்செல்வம் அணி என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இரண்டானது. சசிகலா சிறைக்குப் போனதும் திரனரனின் ஆட்டம் தொடங்கியது. இரட்டை இலைச்சின்னத்தைப்பெற இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டில் தினகரன் கைது செய்யப்பட்டதும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தன்னை  ஸ்திரப்படுத்திக் கொண்டார். பிணையில் வெளிவந்த தினகரனை எடப்பாடி பழனிச்சாமி கண்டுகொள்ளவில்லை. தினகரனின் பின்னால் சில சட்டசபை உறுப்பினர்கள் இருக்கின்றனர். தமிழக அரசியல் அரங்கில் சசிகலா காணாமல் போய்விட்டார்.எடப்பாடி அணி, பன்னீர் அணி, தினகரன் அணி என   அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாகப் பிரிந்து போய்கிடக்கிறது.


எடப்பாடி அணியும் பன்னீர் அணியும்  இணைவதற்கு பல சுற்று சந்திப்புகள்  நடைபெற்றன. பிரிந்தவர்கள் இணைவதற்காக இரு  அணி தரப்பிலும் முன்வைக்கப்பட்ட நிபந்தனைகள் எதிர்த்தரப்பினால் நிராகரிக்கப்பட்டன. எடப்பாடி அணியில் உள்ளவர்களும் பன்னீரின் அணியில் உள்ளவர்களும் ஒருவர் மீது ஒருவர்  குற்றம்  சுமத்துகின்றனர். தினகரனின் பக்கம் நிற்பவர்கள் எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுகின்றனர். வெளியே இருந்து பார்த்தால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  மூன்றாகப் பிரிந்து இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால், ஆட்சியைக் காப்பாற்றுவதற்காக மூன்று அணிகளும் ஒரே கோட்டில் பயணிக்கின்றன. ஒரு அவையிலே எதிர்க்கட்சிகள் வெளிநடப்புச்செய்து தமது கருத்தைத் தெரிவிப்பது வழமையான சம்பவம். ஆளும்  கட்சியில் உள்ளவர்கள் வெளிநடப்புச்செய்து தமது கருத்தைத் தெரிவிக்கும் புதுமை தமிழகத்தில் நடைபெறுகிறது.


 மாநிலக் கட்சிக்குத் தலைமை ஏற்ற ஜெயலலிதா, தேசியக் கட்சிகளான காங்கிரஸையும் பாரதீய ஜனதாவையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பிரதமர் மோடியும் மத்திய அமைச்சர்களும் நட்பு நாடி ஜெயலலிதாவைத் தேடிச்சென்று சந்தித்தனர்.யாருக்காகவும் தனது கொள்கையை விட்டுக்கொடுக்காது தலை நிமிர்ந்து நின்றவர் ஜெயலலிதா.ஜெயலலிதாவின் பாதையில் செல்வதாகக் கூறும் பன்னீரும் எடப்பாடியும் பாரதீய ஜனதாவிடம் முற்று முழுதாகச் சரணடைந்து விட்டனர். எடப்பாடியிடம் பறிகொடுத்த ஆட்சியைக் கைப்பற்ற பன்னீர்ச்செல்வம் முயற்சிக்கிறார்.பன்னீரிடம் இருந்தும் தினகரனிடம் இருந்தும் ஆட்சியைக் காப்பாற்ற எடப்பாடி போராடுகிறார். பன்னீர்ச்செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் பாரதீய ஜனதாக் கட்சியை நம்பியே தமது அரசியல்பயணத்தைத் தொடர்கின்றனர்.

எடப்பாடியையும் பன்னீரையும் தனது கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு தமிழகத்தை ஆட்சி செய்கிறது பாரதீய ஜனதாக் கட்சி. தமிழக மக்களின் பிரச்சினைகள் எதனையும் கருத்தில் எடுக்காத தமிழக அரசு பாரதீய ஜனதா விரும்பும் எல்லாவற்றையும் செய்து கொடுக்கிறது.ஜனாதிபதித் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியின் கட்சியின்  வேட்பாளரான ராம்நாத் கோவிந்தை ஆதரிக்கப்போவதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். தனது அணியில் உள்ளவர்கள் ராம்நாத் கோவிந்துக்கு வாக்களிப்பார்கள் என்று பன்னீர்ச்செல்வம் தெரிவித்துள்ளார். பாரதீய ஜனதாவை எதிர்ப்பதற்கு தினகரனின் பின்னால் நிற்பவர்களுக்கும் துணிவு இல்லை.அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூன்றாகப் பிரிந்து நின்றாலும் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு தெரிவிப்பதில் ஒற்றுமையாக இருக்கின்றன.

  ஜெயலலிதா  புராணத்தையும் சசிகலாவை வாழ்த்துவதையும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் கைவிட்டு விட்டனர்.பாரதீய ஜனதாக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கும்  நிலைப்பாட்டை எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். அந்த அறிவிப்பு சசிகலாவின்  ஆதரவுடன் வெளியிடப்பட்டதாக தினகரனின் பின்னால் நிற்பவர்கள் தெரிவித்தனர்.அதனை எடப்படியின் அரசு மறுத்துள்ளது. சசிகலாவையும் தினகரனையும் கட்சியை விட்டு வெளியேற்றுவதை எடப்பாடி அணி விரும்புகிறது. ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த் தமிழகத்துக்கு விஜயம் செய்து எடப்பாடியையும் பன்னீரையும் தனித் தனித்தனியாகச் சந்தித்து ஆதரவு கோரினார். தினகரனின் அணியை அவர் கண்டுகொள்ளவில்லை. முன்னதாக வேட்புமனுத் தாக்கலின் போது எடப்பாடிக்கும் பன்னீருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. வேட்பாளரை வழி மொழிந்தவர்களின் பட்டியலில் அவர்களின் பெயர் இணைக்கப்பட்டது.தினகரனை பாரதீய ஜனதா தள்ளியே வைத்திருக்கிறது.

தமிழக அரசின் தலைமையில் எம்.ஜி.ஆர்  நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. அந்த விழாவில் தினகரனின் பின்னால் நிற்பவர்கள் கலந்துகொண்டதால் தினகரன் தனித்து விடப்பட்டுள்ளார். இலஞ்சக் குற்றச்சாட்டு வழக்கில் பிணையில் வெளிவந்த தினகரன் கழகத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பினார். எடப்பாடி பழனிச்சாமி அதற்கு இடம் கொடுக்கவில்லை.  எடப்பாடி தன்னை அழைத்துப் பேசுவார் என தினகரன் எதிர்பார்த்தார். அது நடக்கவில்லை.  அதனால் எடப்பாடியை விரும்பாதவர்களை ஒன்றிணைத்து தனது பலத்தைக் காட்ட முயற்சி செய்தார்.அது பிசுபிசுத்துப் போய்விட்ட்டது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தனியரசு,தமீம் அன்சாரி, கருணாஸ் ஆகிய மூவரும் தமிழக அரசுக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஜெயலலிதாவின் முன்னாள் கைகட்டி வாய்பொத்தி நின்றவர்கள் இப்பொழுது கைகாட்டிப் பேசுகின்றனர். தமது  தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யாத இவர்கள்  அடுத்த தேர்தலைக் குறிவைத்து காய் நகர்த்துகின்றனர். ஜனாதிபதித் தேர்தலில் தமிழக அரசை எதிர்த்து காங்கிரஸ் வேட்பாளர்  மீரா குமாருக்கு வாக்களிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளனர். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஏழு போரையும் தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும் என்ற குரலுடன் தமது புதிய அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளனர்.


தனியரசு, தமீம் அன்சாரி, கருணாஸ் ஆகிய  மூவரும் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினைச் சந்தித்துப் பேசியுள்ளனர். இச்சந்திப்பின் மூலம் தமது அடுத்த கட்ட நடவடிக்கை எப்படி இருக்கும் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளனர்.    விஜயகாந்தின் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பின்னர் அவரை எதிர்த்து தமிழக அரசின் பக்கம்  சாய்ந்தவர்களை அடுத்த தேர்தலில் ஜெயலலிதா கைவிட்டார். அவர்கள் புதிய கட்சி ஆரம்பித்து  ஸ்டாலினிடம் சரணடைந்தனர். கடந்த சட்ட மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அவர்கள் தோல்வியடைந்தனர்.  இவர்கள் மூவருக்கும் அதேகதிதான் ஏற்படும். தனியரசு, தமீம் அன்சாரி, கருணாஸ் ஆகியோரின் கட்சிகளுக்கு வாக்கு வங்கி இல்லை. ஜெயலலிதாவின் செல்வக்கினால் தான் வெற்றி பெற்றார்கள்.

தடை செய்யப்பட்ட குட்கா போன்ற போதைப்பொருட்களைத் தமிழகத்தில் விற்பனை செய்வதற்கு அமைச்சரும்  பொலிஸ் உயர் அதிகாரிகளும் 40 கோடி ரூபா இலஞ்சம்  பெற்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இது பற்றிய அறிக்கையை ஆளுநர் கோரியுள்ளார். இதெல்லாம் ஒரு பெரிய விடயமாக தமிழக அரசுக்குத் தெரியவில்லை. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் காலம் கனிந்துள்ளது. அப்போது தான் தமிழக மக்களின் உணர்வு என்ன என்பதை தமிழக அரசும் மத்திய அரசும் புரிந்துகொள்ளும்.
வர்மா