Showing posts with label கரவெட்டி. Show all posts
Showing posts with label கரவெட்டி. Show all posts

Sunday, August 25, 2024

தேடினேன் கிடைத்தது.

வதிரி பூவற்கரைப் பிள்ளையார் , அம்மன் கோயில் ஆகிய இரண்டு ஆலயங்களின் மீது எனது மாமி செல்வி சூரன் சிவபாக்கியம் ஊஞ்சல் பாட்டு  எழுதியதாக படிக்கும் காலத்தில் அறிந்தேன். அது ஒரு சம்பவம் என நினைத்து காலப் போக்கில் அதனை மறந்து விட்டேன்எனக்குத் தேவையான ஒரு சிலவற்றைப் பற்றித்தேடல் செய்தபோது அவை ஞாபக்த்துக்கு வந்தன.

அது சம்பவம் அல்ல, வரலாறு, ஆவணம் என்பதை உணர்ந்துகொண்டேன். இரண்டு கோயில்களுக்குமான ஊஞ்சல் பாடல்களைப் பற்றி பலரிடம் கேட்டேன்.  தெரியாது எனும் பதில்தான் கிடைத்தது.

புலோலி, துன்னாலை,வல்லிபுரக்குறிச்சி  ஆகிய ஊர்களில் உள்ள ஏதோ ஒரு அம்மன் கோயிலுக்கு மாமி ஊஞ்சல் பட்டு எழுதியதாக ஞாபகம் எந்த ஊர் என்பது சரியாக ஞாபகம்  இல்லை. அந்த அம்மன் கோயில் ஊஞ்சல் பாட்டு எழுதியதைப் பற்றிய சம்பவத்தை மாமி எனக்குச் சொன்னது  பசுமையாக மனதில் உள்ளது.

கோயிலுக்கு எல்லாம் சிறப்பாக அமைந்துள்ளது. ஊஞ்சல் பாட்டு கட்டாயம் வேண்டும்என குருக்கள் சொன்னார். அப்போது  அங்கிருந்தவர்கள், அந்தக் காலத்தில்  பிரபலமாக இருந்த பண்டிதர், புலவர் போன்றோரின் பெயரை கூறி அவர்களில் ஒருவரிடம் கேட்கலாம் என்றார்கள்.

கோயிலைக் கும்பிடச்சென்ற மாமிநான் எழுதுகிறேன்என்றார்.

ரீச்சர் உங்களால் முடியாது. வேறை ஆக்களிடம் கொடுக்கலாம்என சிலர் சொன்னார்கள்

அங்கு நின்ற ஒரு சிறுவனிடம் காசைக் கொடுத்த மாமி கொப்பி வாங்கி வரும்படி கூறினார். கோயில் மண்டபதில் இருந்து ஒரு மணித்தியாலத்தில்  ஊஞ்சல் பாட்டை எழுதினார். அதனைப் பார்த்த குருக்கள் பாராட்டினார்.

பொன்னூஞ்சல் பாடல் எழுதியமைக்காக கோயில் கும்பாபிஷேகத்தின் போது  சூரன் புத்திரி சிவபாக்கியத்தைப் பாராட்டி மாலை அணிவித்து பொன்னாடை போர்த்தி பாராட்டுப் பத்திரம் கொடுத்தார்கள். எமது ஊரில் இருந்து திரு.கமலாகரன், திரு புவனேந்திரன் ஆகிய இருவரும் அந்த விழாவுக்கு சென்றனர். அந்த விழாவைப் பற்றி இருவரும் எனக்குப் பலமுறை சொன்னார்கள்.

அட்சரத்த்தின் ஏற்பாட்டில் புலவரின் பாடல்களை இறுவட்டாக வெளியிடுவதற்காக புலவரைப் பற்றிய  புத்தகங்களைத் தேடினேன். தன்னிடம் சில புத்தகங்கள் இருப்பதாக திரு குலசேகரம் அவர்கள் சொன்னார்கள். உடனே அவருடன் அவரின் வீட்டுக்குச்சென்றேன்.  மாமி எழுதிய ஊஞ்சல் பாடல் பற்றி அவரிடம் வினவினேன். புலோலி மனோன்மணி அம்மனைப் பற்றியது எனச்சொல்லி தன்னிடம் புத்தகம் இருக்கிறது என்றார்.

புதையல் கிடைத்தது போன்ற சந்தோஷம் எனக்கு ஏற்பட்டது. வீட்டுக்குள் போய் ஐந்தி நிமிடங்களில் வந்து காணவில்லை. கிடக்கும் தேடித்தருகிறேன் என்றார்.  சிறகடித்த பட்டாம் பூச்சிகள் சிறகிழந்து விழுந்தது போன்ற நிலை ஏற்பட்டது. கோயிலின் பெயர் தெரிந்து விட்டது. அந்தக் கோயிலுக்குப் போனால் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வந்துவிட்டேன்.

ஒருமாதத்தின் பின் இன்று கலையில் வீட்டுக்குவந்து  திருப்பொஞ்னூஞ்சல்புத்தகத்தைத் தந்தார். அம்மன் அருள் கிடைத்ததுபோல் மகிழ்சி ஏற்பட்டது.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து, கங்கை அமரன், போன்றவர்கள் பாடல் எழுதிய கதையைப் படித்து வியக்கும் எனக்கு  அன்று எனக்கு இந்த ஊஞ்சல் பாடலின்கதை வியப்பாகத் தெரியவில்லை.

திருவூஞ்சல் பா  அமைந்த கதை என  அம்பாள் அடியான் திரு . நடராசா அந்தப் புத்தகத்தில் குறுப்பிட்டுள்ளார்.

 

Saturday, September 23, 2023

செவிப்புலனற்றவர்களின் விளையாட்டுப் போட்டி

 வடமராட்சி செவிப்புலனற்றோர் சங்கத்தின் 10 ஆவது விளையாட்டு விழா கடந்த வாரம் வதிரி டைமன்ஸ் மைதானத்தில் நடைபெற்றது.வடமராட்சி, முல்லைத்தீவு,வவுனியா,திருகோணமலை,மட்டக்களப்பு ஆகிய வற்றின் செவிப்புலனற்ற சுமார் 75 வீர, வீராங்கனைகள்  இந்த விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றினர்.

   உதைபந்தாட்டம், கிறிக்கெற்,வலைப்பந்தாட்டம் ஆகிய போட்டிகள் மூன்று நாட்களாக நடைபெற்றன.  வெற்றியடைந்தவர்கள்   தமது இரண்டு கைகளையும்  உயர்த்தி  மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினர்.எதிரணியை அவமானப்படுத்தும் ஆக்ரோஷம் எவையும்  எவையும் அங்கு இருக்கவில்லை.  மிக அமைதியாகவும் நேர்த்தியாகவும் அனைத்து விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன.

பரிசளிப்புவிழா மிகவும் நேர்த்தியாக நடத்தப்பட்டது. பரிசுக்குரியவரின்  பெயர் அறிவிக்கப்பட்டதும்,  தாமதமின்ரி மேடைக்குச் சென்று பரிசைப் பெற்றுக்கொண்டனர். பரிசளிப்பு விழா சர்வதேச தரத்துக்கு அமைவாக நடத்தப்பட்டது. ஆட்ட நாயகன், தொடர் நாயகன்    அதிக கோல் அடித்தவர்,  சிறந்த கோல் கீப்பர், அதிக  ஓட்டங்கள் அடித்தவர், அதிக சிக்ஸர்கள் அடித்தவர், அதிக பவுண்டரிகள் அடித்தவர் என உதைபந்தாட்ட, கிரிக்கெற் போட்டிகளின் விருதுகள் வழங்கப்பட்டன.

உதைபந்தாட்டத்தில் வடமராட்சியை எதிர்த்து விளையாடிய மட்டக்களப்பு சம்பியனானது. வடமராட்சிய எதிர்த்து விளையாடிய வவுனியா  கிறிக்கெற்றில் சம்பியனாகியது. வலைப்பந்தாட்ட சம்பியனானது வடமராட்சி மகளிர் அணி. 

செவிப்புலனற்றவர்களின்  பேச்சையும்,  பிரதம விருந்தினர், சிறப்பு விருந்தினர்களின் உரைகளையும் மொழிபெயர்ப்பதற்கு செவிப்புலனற்றவர்களின் சைகை தெரிந்த மூவர் வந்திருந்தனர்.

 இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா ஆகிய நாடுகளில் வசிக்கும் செவிப்புலனற்றவர்கள் இந்த விளையாட்டுப் போட்டிக்கான அனுசரணையை வழங்கினர். சுவிட்ஸர்லாந்தில் வசிக்கும்  முல்லைத்தீவைச் செர்ந்தசெவிப்புலனற்ற  ஒருவர் விளையாட்டு விழாவில் கலந்து கொண்டு  தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மூன்று நாட்களும்  உடனுக்குடன் குப்பைகளையும், கழிவுகளையும் அப்புறப்படுத்தினார்கள்.

Monday, June 26, 2023

சூர தரிசனம்


 

யாழ்ப்பாணத்து இனிய நினைவுகள்  8


----------------------

இம்முறை யாழ்ப்பாணம் அனுபவங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை அதில் ஒன்று நான் கண்ட சூர தரிசனம் ஆகும்

சூர தரிசனமா?  என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள்

. ஆம் அது எனக்கு ஒரு  தரிசனமாகவே இருந்தது

கிழக்கு பல்கலைக் கழகத்தில் இந்து நாகரிகத்துறையில் எம் பில் பட்டம் மேற்கொள்ளும்  வினோகா   எனும் மாணவி தேவரையாளி  இந்து கல்லூரியினை  நிறுவிய சூரன் எனும் பெரியாரையும். அவரின் கல்விப் பணிக ளையும்  ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்

அவருக்கு நானும் ஒரு மேற்பார்வையாளர்

மேற்பார்வையாளரின கடமைகளுள்  ஒன்று  மாணவருக்கு உதவியாக களப்பணியில் ஈடுபடுவ தாகும். ( இதை அவர் செய்யாமலும் விடலாம்)  

 மாணவருடன் கள ஆய்வு வேலைகளில் ஈடுபட இந்த சந்தர்ப்பத்தை நான் பயன்படுத்திக் கொண்டேன்

ஒரு நாளின் பெரும் பகுதியை அதற்கு ஒதுக்கினேன்

அதன்படி அன்று காலை அச்சுவேலி சென்று காரில் விவோகாவை ஏற்றிக் கொண்டுகொண்டு தேவரையாளி இந்துக் கல்லூரி இருக்கும் பகுதிக்குச் சென்றேன்

தேவரையாளி  இந்துக் கல்லூரியில் எம்மைக் காத்துக் கொண்டு நின்றார் சூரனின்  பேரனான ரவி வர்மா அவர்கள்

கல்லூரியின் முன்னால் சூரன் என்னும் பெரியாரின் உருவச்சிலை நீண்டு உயர்ந்து   மிகக்  கம்பீரமாக நின்று. கொண்டு இருந்தது

ஏனைய தமிழ் அறிஞர்களின் சிலைகளைப் போல சூரன் அமர்ந்து  கொண்டிராமல் நின்று கொண்டிருந்தமை எனக்கு ஒரு குறியீடாகக் காணப்பட்டது

யாழ்ப்பாணத்தில் அன்று நிலவிய கல்விச் சமத்துவமின்மைக்கு எதிராக போராடி

ஒரு நிறுவனத்தையே நிறுவிய அவரைப் பற்றி எனக்கு பேராசிரியர் சிவத்தம்பி ஏற்கனவே கூறி இருந்தார்

பேராசிரியர் சிவத்தம்பியின் தந்தையார்  கார்த்திகேசு அங்கே   ஒரு காலத்தில் ஆசிரியராகவும் இருந்திருக்கிறார் என்ற செய்தியும் எனக்கு தெரியும்

சிறிது நேரத்தில் அங்கு வன்னிய குலம்

ராஜேஷ் கண்ணா

 எஸ் கே லோகநாதன்

வதிரி ரவீந்திரன்

போன்ற புத்திஜீவிகள் வந்து விட்டார்கள்

சிலர் ஏற்கனவே நான் அறிந்தவர்கள்

உரையாடல் தொடங்கியது

கலந்துரையாடல் மெருகேற மெருகேற  அகழ்வாய்வில் அசாதாரணமான பொருட்கள் மேற்கிளம்புவது   போல பல புது புது விஷயங்கள் வெளிவர தொடங்கின

மண்ணைத் தோண்டி அகழ்வாய்வு செய்வது போல மனிதர்களின் மனதை தோண்டியும் அகழ்வாய்வு செய்ய வேண்டும்

மண் தரும் உண்மைகள் போல மனமும் பல உண்மைகளைத் தரும்

ஆங்கிலம் கற்பிக்கும் சைவப் பாடசாலைகளை ஆறுமுகநாவலர் ஆரம்பித்த காலத்தில்  அப் பாடசாலைகளில் பலருக்கும் படிக்கும் வாய்ப்பு ஏற்படவி ல்லை 

படிக்கும் வாய்ப்பும் சிலருக்கு மறுக்கவும்  பட்டது

முக்கியமாக விளிம்பு நிலை மக்களுக்கு அந்தச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை

அதனை ஓரளவு போக்கியவர்கள் கிறிஸ்தவர் மிஷனரிகளே

இந்த நேரத்தில் ஆங்கிலம் கற்பிக்கும் பாடசாலைகளை சைவ  அறிஞர்கள் புரவலர்கள்  துணையுடன் ஆரம்பித் தார்கள்

அத்தகைய. ஒரு  பாடசாலை ஏனைய ஆங்கிலப் பாடசாலைகளில் கற்கும் சந்தர்ப்பம் ஏற்படாத மாணவர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமைந்தது

அந்தப் பாடசாலையின் முன்னோடியாகதா திகழ்ந்தது தேவரையாளி இந்து கல்லூரி என்பது புரிய வந்தது

தேவரையாளி இந்துக் கல்லூரி நிறுவிய சூரனின் கல்விப் பணிகளை  ஆறுமுகநாவலரின் பணிகளின் நீட்சி என்று கூறுவார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்

ஆறுமுக நாவலர் அன்று  யாழ்ப்பாணத்தில் பெரும் செல்வந்தர்களாக  இருந்த

செல்வந்தரிடமிருந்து பணம் திரட்டியது போல

 சூரனும் அப் பிரதேசத்தில் மேல் எழுந்த வர்த்தகர்களிடமிருந்து பணம் திரட்டி இந்தப் பாடசாலையை ஆரம்பித்திருக்கிறார் என்பதும் தெரிய வந்தது


இதற்கு சமாந்தரமாக சிங்களப் பகுதிகளில் பாடசாலைகளும் ஆரம்பித்துள்ளன

இலங்கை கல்வி வரலாற்றை  ஆராய்பவருக்கு   இவை  முக்கிய தகவல்கள் ஆகும்

 மர வேலையிலே தேர்ச்சி பெற்ற  தொழிலாளியாக இருந்த  சூரன் தன் சுய வரலாற்றை எழுதி வைத்திருக்கிறார்.

அது ஒரு காலத்தின் வரலாறு ஆகும்

 அதைப் பதிப்பித்திருக் கிறார்  இருக்கிறார் ராஜ ஸ்ரீகாந்தன்

அதற்கான ஒரு அழகான முன்னுரையும் எழுதி இருக்கிறார் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்

 அந்நூல் எமக்குப் பல பழைய தகவல்களைத் தருகின்றது

பாடசாலையின் வரலாறு

 அதனை உருவாக்க நடத்திய போராட்டங்கள்

 அதில் கல்வி கற்றோர்

 கற்பித்தோர்

அதன் மூலம் உயர்நிலை அடைந்தோர்

எனப்பல தகவல்களை அங்கு வந்தோர் உரையாடினர்

நீங்கள்  வராவிட்டால் இவ்வளவு பேர்களையும் ஒன்றாகச்சந்தித்திருக்க முடியாது சேர்

 என்று விவோவா கூறினாள்

நிறையத் தகவல்களை ஒருங்கே பெற்றுக் கொண்ட பெரு மகிழ்ச்சி அவளுக்கு

அங்கு வந்திருந்த ராஜேஷ் கண்ணா சமூகவியல் விரிவுயாளர்

அவர் பார்வை எனக்கு வித்தியாசமாக இருந்தது.

அவரது விளக்கங்கள் என்னை புதிய திசைகளில் சிந்திக்க வைத்தன

இன்றைய இளம் தலைமுறையின் பார்வை அது.

 அவரிடம் ஆலோசனைகள்  பெறுமாறுமாறு. நான் விவோகாவைக் கேட்டுக் கொண்டேன்.

 விவோகாவுக்கு உதவி புரியுமாறு அவரிடமும் கேட்டுக் கொண்டேன்

 அவர் தான் எழுதிய மூன்று நூல்களை எனக்குத் தந்தார்

மதிய உணவு உண்டு செல்லும்படி கேட்டுக் கொண்டனர் ஆனால் விவேகா தன் வீட்டில் எனக்கான மதிய உணவுகளைச் செய்திருந்தாள்

நண்பர் கலாமணி அந்த ஊரவர். அவர் சுகயீனமுற்று இருப்பதாக அறிந்தேன்

அவரைச் சந்திக்க மனம் அவாவியது

நண்பர் ரவீந்திரனும் தன் வீட்டுக்கு வரும்படி அழைத்தார்

தேவரையாளி கல்விச் சமூகத்திடம் இருந்து விடைபெற்று கலாமணி வீடு நோக்கிச் சென்றேன்

பாடசாலைக்கு வெளியே வரும்போது மீண்டும் சூரன் சிலைக்கு முன்னால்  நின்றேன்

அப் பெரியார் இன்னும் பெரிதுயர்ந்து நிற்பதாக எனக்குத் தோன்றியது

அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் செய்தல்

அன்னயாவிவிலும் புண்ணியம் கோடி

ஆங்கோர் ஏழைக்குஎழுத்தறிவித்தல்

என் பாரதி பாடல் ஞாபகத்துக்கு வந்தது

ஆயிரம் கோயில்கள் கட்டுவதை விட ஏழை மக்களுக்காக ஒரு பாடசாலை நிறுவிய சூரன்

என் மனதை நினைத்து நின்றார்

மீண்டும் சூரன் சிலையை நோக்கினேன்

இன்னும் அது  நெடிதுயர்ந்து நின்றது

இப்போது சொல்லுங்கள்

அது

 சூர தரிசனம் தானே?

 

Wednesday, December 7, 2022

மருத்துவப் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் மக்கள்

  கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்து   நிலையில், கடந்த சில மாதங்களாக மருந்து மருந்துகள் மற்றும் இதர மருத்துவப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அமெரிக்க டொலர்களை வாங்குவதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிரமப்படுகின்றனர். பல நிறுவனங்கள் மற்றும் நாடுகளின் பல்வேறு மானியங்கள் மற்றும் நன்கொடைகளால் நிலைமை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தணிந்திருந்தாலும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் இன்னும் பாதிக்கப்பட்டுள்ளன. எவ்வாறாயினும், மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை பாரிய அளவில் இல்லை என்றும், சிகிச்சையை வழங்குவதை நிர்வகிக்க முடியும் என்றும் சுகாதார அமைச்சு சமீப காலமாக கூறி வருகிறது.

தொற்று அல்லாத நோய்களுக்கு (NCDs) சிகிச்சை பெறுகின்ற கிட்டத்தட்ட 3 மில்லியன் மக்கள், தடுக்கக்கூடிய குருட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்ட 1 மில்லியன் மக்கள், பைபாஸ் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டிய பட்டியலில் உள்ள 10,000 நோயாளிகள் மற்றும் 10,000 பேர் என அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் (ACMOA) கூறியுள்ளது. நாட்டில் நிலவும் மருந்து மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை காரணமாக புற்றுநோயாளிகள் தற்போது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ACMOA செயலாளர் டொக்டர் ஜயந்த பண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில், “நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் மற்றும் இதய நோய்கள் போன்ற ண்CDகளுக்கு தினமும் சுமார் 3 மில்லியன் மக்கள் மருந்து உட்கொள்கின்றனர். தற்போது மருத்துவமனைகளில் மருந்துகள் இல்லாததால், அவர்களுக்கு முறையாக மருந்துகள் கிடைப்பதில்லை. இவர்களுக்கு 10 மருந்துகள் தேவைப்பட்டாலும், மருத்துவமனைகளில் 5 மட்டுமே வழங்கப்படும் நிலை உள்ளது. மற்றவற்றை மருந்தகங்களில் வாங்குவதற்கு அவர்களிடம் பணம் இல்லை.

மேலும் பேசிய அவர், மருத்துவமனைகளில் கான்டாக்ட் லென்ஸ்கள் இல்லாததால் கண்புரை சத்திரசிகிச்சை செய்துகொள்ளக் காத்திருக்கும் தடுக்கக்கூடிய குருட்டுத்தன்மை கொண்ட சுமார் 1 மில்லியன் மக்கள் இலங்கையில் இருப்பதாக தெரிவித்தார். பைபாஸ் சத்திரசிகிச்சை செய்து கொள்வதற்காக நீண்டகாலமாக நிலுவையில் உள்ள பட்டியலில் 10,000 பேர் இருப்பதாகவும், ஆனால் தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் ஐந்து பைபாஸ் அறுவை சிகிச்சைகளுக்கு மேல் செய்ய முடியாது என்றும் அவர் கூறினார். மேலும், சுமார் 10,000 புற்று நோயாளர்களுக்கு உரிய மருந்துகளை கொள்வனவு செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய மருத்துவ ஆய்வக அறிவியல் கல்லூரியின் (சிஎம்எல்எஸ்) தலைவர் ரவி குமுதேஷ், தற்போது சுமார் 185 மருந்துகளுக்கு தட்டுப்பாடு இருப்பதாகவும், இது முன்பு 90 ஆக இருந்த எண்ணிக்கை என்றும் கூறினார். வரவிருக்கும் நேரம், இந்த பிரச்சினையை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கமும் சுகாதார அமைச்சகமும் ஒரு தொழில்நுட்ப குழுவை நியமிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.

சுகாதாரம் தொடர்பான அமைச்சர்களின் ஆலோசனைக் குழு சமீபத்தில் பாராளுமன்றத்தில் கூடியது, அங்கு அத்தியாவசிய மருந்துகள் தட்டுப்பாடு நிலவுவதாக பரப்பப்படும் ஊகங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் கவலைகளை எழுப்பினர்.

இதற்குப் பதிலளித்த சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, 14 வகையான அத்தியாவசிய மருந்துகளை வழங்குவதற்காக சீனா வழங்கிய 28 மில்லியன் டொலர் நன்கொடையாகவும், சுகாதாரத் துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்தியக் கடன் வரியிலிருந்து 200 மில்லியன் டொலர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்தியக் கடன் வரியான 1 பில்லியன் டொலரில் இருந்து 35 மில்லியன் டொலர்களை ஒதுக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார்.

மருத்துவப்  பற்றக்குறை பொது மக்களின் உயிரோடு விளையாடுவதற்கு ஒப்பாகும்.  இதனை உடனடியாக நிவர்த்தி செய்வதற்கு அரசு அவன செய்ய வேண்டும்.  இதே வேளை மருந்துகளின் விலையும் எட்டாத  உயரத்தில் இருக்கிறது. அதனையும் அரசாங்கம் கவனத்தில் எடுக்க வேண்டும்.