Showing posts with label தமிழகம் விஜயகாந்த். Show all posts
Showing posts with label தமிழகம் விஜயகாந்த். Show all posts

Tuesday, June 19, 2012

ஜெயலலிதாவின் ச‌வாலைச‌மாளித்த விஜயகாந்த்


புதுக்கோட்டை இடைத் தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது. எதிர்த்துப் போட்டியிட்ட விஜயகாந்தின் வேட்பாளர் தோல்வியடைந்தார். புதுக்கோட்டை இடைத் தேர்தல் திகதி அறிவிக்க முன்னரே வேட்பாளரை அறிவித்து இடைத் தேர்தலுக்கு தயாரானார் ஜெயலலிதா. சங்கரன் கோவில் இடைத் தேர்தலில் கட்டுப்பணம் இழந்ததனால் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு எதிர்க்கட்சியினர் தயங்கினர். கருணாநிதி வை.கோ, ராமதாஸ் ஆகியோர் புதுக்கோட்டை இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தனர். பிரதான எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பையும் மீறி 73.43 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
கருணாநிதி, வை.கோ, டாக்டர்  ராமதாஸ் ஆகியோரின் கட்டளைக்கு அடிபணியாது புதுக்கோட்டை வாக்காளர்கள் தமது தொகுதியில் உறுப்பினரை தேர்ந்தெடுத்துள்ளனர். இந்த மூன்று தலைவர்களும் இணைந்தால் ஜெயலலிதாவினால் வெற்றி பெற முடியாது.
இந்நிலையில் இவர்கள் மூவரும் தனித் தனியாக விடுத்த அறிவிப்பை அவர்களது கட்சித் தொண்டர்களே ஏற்றுக் கொள்ளவில்லை. தலைவர்களின் கட்டளைக்கு மதிப்பளிக்காது தொண்டர்கள் வாக்களித்துள்ளனர்.
ஒரு இலட்ச‌த்துக்கும் அதிகமான வாக்குகளால் வெற்றிபெற வேண்டும் என்ற ஜெயலலிதாவின் கட்டளை நிறைவேற்றப்படவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக்கழக ஆட்சிக்கு எதிரான மக்கள் உள்ளதையே இது எடுத்துக் காட்டுகிறது.
தமிழக அமைச்ச‌ர்கள் பெரும் எடுப்பில் புதுக்கோட்டையில் முகாமிட்டு இரவு பகலாகப் பிரசாரம் செய்தும் பிரமாண்டமான வெற்றியைப் பெற முடியவில்லை. விஜயகாந்தின் வேட்பாளர் தோல்வியடைந்தாலும் ஜெயலலிதா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால் அமைச்ச‌ர்கள் கதிகலங்கிப்      போயுள்ளனர். புதுக்கோட்டை இடைத்தேர்தல் தோல்வியிலிருந்து விஜயகாந்த் புதிய எழுச்சி பெற்றுள்ளார்.

இந்திய ஜனாதிபதித் தேர்தல் காங்கிரஸ் கட்சிக்கும் பாரதீய ஜனதாக் கட்சிக்கும் பெரும் தலையிடியைக் கொடுத்துள்ளது. ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்களின் பெயரை அறிவித்து வெற்றி பெறும் நிலையில் காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் இல்லை. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு இல்லாமல் காங்கிரஸ் கட்சியாலும்     பாரதீய ஜனதாக் கட்சியாலும் வெற்றிபெற முடியாது. பிரணாப் முகர்ஜியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. காங்கிரஸ் அறிவிக்கும் வேட்பாளரை ஆதரிப்பதற்கு கருணாநிதி போன்ற கூட்டணித் தலைவர்கள் தயாராக இருக்கின்றார்கள். சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவும், திரிணõமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பனர்ஜியும் பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பிரதமர் மன்மோகன்சிங் மூத்த இடதுசாரி தலைவரும் முன்னாள் சபாநாயகருமான சோம்னாத் சட்டர்ஜி ஆகிய மூவரில் ஒருவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று முலாயம் சிங் யாதவும் மம்தா பானர்ஜியும் கூறியுள்ளனர். அப்துல் கலாமுக்கும் சோனியாகாந்திக்கும் எட்டாப் பொருத்தம் என்பது உலகறிந்த ரகசியம். இந்திய ஜனாதிபதிப் பதவிக்கு கௌரவமளித்த அப்துல் கலாமை இரண்டாவது தடவையாக ஜனாதிபதியாக்க சோனியா காந்தி விரும்பவில்லை. ஆகையினால் உலகமே மதித்த சிறப்பான ஒரு ஜனாதிபதியை இந்தியா இழந்தது. அரசியல்வாதிகளுக்கு முன்மாதிரியாக விளங்கினார் அப்துல் கலாம்.
மன்மோகன் சிங் பிரதமராக இருப்பதை மம்தாவும் முலாயம் சிங்யாதவும் விரும்பவில்லைபோல் தெரிகிறது. அதனால்தான் அவரை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். மன்மோகன் ஜனாதிபதியானால் அடுத்த பிரதமர் யார் என்ற சிக்கல் காங்கிரஸுக்குள் ஏற்பட்டுவிடும்.  முழு   நம்பிக்கைக்குரிய பாத்திரமான மன்மோகனை ஜனாதிபதியாக்க சோனியா காந்தி விரும்பமாட்டார். மூத்த அரசியல்வாதியான சோம்நாத் சட்டர்ஜிக்கும் மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி தலைவரான பிரகாஷ் காரத்துக்கும் இடையேயான மோதலை அடுத்து சோம்நாத் சட்டர்ஜி கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இவரை வேட்பாளராக்கினால் இடதுசாரிகளின் வாக்குக் கிடைக்காது. மம்தாவின் கோரிக்கைக்கு காங்கிரஸ் கட்சி அடி பணியாது தான் விரும்பிய பிரணாப் முகர்ஜியைஜனாதிபதி வேட்பாளராக நிறுத்துகிறது. காங்கிரஸ் வேட்பாளருக்கு பாரதீய ஜனதாக் கட்சி ஆதரவளித்தால் ஜெயலலிதாவின் பிரதமர் கனவும் இந்திய ஜனாதிபதித்தேர்தலால் நொருங்கிப்போய்விடும்
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு17/06/12

Tuesday, June 5, 2012

மத்திய அரசை எதிர்க்கும் தி.மு.க.


இந்திய மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தைத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பித்துள்ளது. பெற்றோல், டீசல் ஆகியவற்றின் விலை என்றுமில்லாதவாறு அதிகரித்துள்ளது. தமிழகத்தில் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. எரிபொருளின் விலை உயர்வைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் பங்காளியான திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகத்தில் போராட்டம் நடத்தியுள்ளது.
இதேவேளை தமிழகத்தில் பால் விலை, மின் கட்டணம், பஸ் கட்டணம் என்பன உயர்த்தப்பட்டதைக் கண்டித்தும் திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்தியது. மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய போராட்டம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
எரிபொருளின் விலை உலகச் சந்தையில் அதிகரித்துள்ளது. அதனால் தான் இந்த விலை உயர்வு என்று மத்திய அரசு காரணம் கூறினாலும் அண்டை நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் எரிபொருள் விலை அதிகம் என்று ஸ்டாலின் ஆதாரங்களுடன் புட்டு வைக்கிறõர். மத்திய அரசுக்கு எதிராகச் செயற்பட வேண்டிய கட்டாயம் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட்டுள்ளது. எரிபொருள் விலை உயர்வு அதற்கு தகுந்த காரணமாக அமைந்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் எரிபொருள் விலை உயர்வால் எதுவித பாதிப்பும் ஏற்படவில்லை. மத்திய அரசின் ஆலோசனையின்படி வற் வரியை நீக்கியதால் எரிபொருள் விலை உயர்வினால் காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் பாதிப்பு எதுவும் இல்லை.
எரிபொருளுக்கான வற் வரியைக் குறைக்குமாறு மத்திய அரசு மாநில அரசைக் கேட்டது. மத்திய அரசில் குற்றங் காண சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி இருக்கும் தமிழக அரசு அதற்கு மறுப்புத் தெரிவித்து விட்டது. எரிபொருள் விலை உயர்வுக்கு மத்திய அரசு தான் காரணம் என்ற மாயையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மக்களின் மீதான சுமையைக் குறைப்பதற்குத் தமிழக அரசு விரும்பினால் வற் வரியைக் குறைத்து எரிபொருளின் விலையைச் சீராக்கலாம். அப்படிச் செய்தால் மத்திய அரசின் மீது தமிழக மக்கள் குற்றம் சுமத்தமாட்டார்கள் என்று தமிழக அரசுக்கு நன்கு தெரியும்.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் வெற்றியை எதிர்நோக்கி இருக்கும் ஜெயலலிதாவுக்கு எரிபொருள் விலை உயர்வு வரப்பிரசாதமாக அமைந்து உள்ளது. மக்கள் மீது மத்திய அரசு விதித்த பெரும் சுமையாக எரிபொருள் விøல உயர்வு புதுக்கோட்டை இடைத் தேர்தலில் பிரதான பாத்திரத்தை வகிக்கப் போகிறது. புதுக்கோட்டை இடைத் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாக முன்னரே வெற்றி நமதே என்ற நம்பிக்கையுடன் தேர்தல் பணியை ஆரம்பித்தது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தின் அரச பலத்தின் முன்னால் இடைத் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த எதிர்க்கட்சிகள் எல்லாம் புதுக்கோட்டை இடைத் தேர்தலில் இருந்து ஒதுங்கியுள்ளன. படுதோல்வியானாலும் பரவாயில்லை ஜெயலலிதாவை எதிர்ப்பதே ஒரே ஒரு குறிக்கோள் என்ற எண்ணத்துடன் புதுக்கோட்டை இடைத் தேர்தலைச் சந்திக்கிறார் விஜயகாந்த். தமிழக அரச‌யந்திரம் அனைத்தும் புதுக்கோட்டையில் குவிக்கப்பட்டுள்ளது. ஆகையினால் இடைத் தேர்தலுக்கு முன்பே தேர்தல் முடிவை ஊகிக்கக் கூடியதாக உள்ளது.
புதுக்கோட்டை இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மார்க்சிஸ்ட் கொம்யூனிஸ்ட் கட்சி விரும்பியது. அதன் விருப்பத்துக்கு மதிப்பளிக்காது தனது கட்சி வேட்பாளரை அறிவித்தார் விஜயகாந்த். விஜயகாந்தின் வாதத்தினால் பொது வேட்பாளர் என்ற நிலை இல்லாமல் போய்விட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் கண் அசைத்தால் புதுக்கோட்டை இடைத் தேர்தல் சூடு பிடிக்கும். விஜயகாந்தின் வேட்பாளருக்கு திராவிட முன்னேற்றக் கழகம் ஆதரவளித்தால் இடைத் தேர்தல் பரபரப்பாக இருக்கும். வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்பட்ட தேர்தலாகவே புதுக்கோட்டை இடைத் தேர்தல் நடைபெறப் போகிறது.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக சங்மாவின் பெயரை ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரதான கட்சிகள் எவையும் சங்மாவை ஆதரிப்பதாக அறிவிக்கவில்லை. ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக சங்மா அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு இந்தியத் தேசியக் கட்சிகளை கொதிப்படையச் செய்துள்ளது. இந்த நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியை ஜனாதிபதியாக்க வேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புவதாகச் செய்தி கசிந்துள்ளது.
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வல்லமை உடைய காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் தடுமாறிக் கொண்டிருக்கையில் தமிழகத்தில் இருந்து வெளியாகும் கருத்துகள் டில்லி அரசியலில் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி விரும்பினாலும் அவரை ஜனாதிபதியாக்குவதற்கு காங்கிரஸ்கட்சி ஒத்துக் கொள்ளாது. ஆகையினால் கருணாநிதிக்கு எதிரானவர்களினால் பரப்பப்பட்ட வதந்தியாகவே இது உள்ளது.
இந்திய மத்திய அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கருணாநிதிக்கும் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற மாட்டேன் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார். மத்திய அரசு தவறு விடும்போது தட்டிக் கேட்பேன். மத்திய அரசில் இருந்து இப்போதைக்கு வெளியேறமாட்டேன் என்ற உத்தரவாதத்துடனேயே கருணõநிதி போராட்டம் நடத்துகிறார். இந்தப் போராட்டத்தின் காரணமாக மத்திய அரசு இறங்கி வரப் போவதில்லை. மத்திய அரசு அமுல்படுத்தியுள்ள எரிபொருள் விலை உயர்வு புதுக்கோட்டை இடைத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு வெற்றியைக் கொடுக்கப்போகிறது.

வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு03/06/12