Sunday, January 31, 2010

ஜெயாவின் டில்லி விஜயம்ஏற்படுத்திய சலசலப்பு




அரசியலில் இரு துருவங்களான சோனியா காந்தியும் ஜெயலலிதாவும் டில்லியில் சந்தித்தமை அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்திய தேர்தல் ஆணையகத்தின் வைர விழா டில்லியில் சிறப்பாக நடைபெற்றது. இதில் பங்குபற்றுமாறு இந்திய அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. உடல் நிலை காரணமாக தமிழக முதல்வர் கருணாநிதி கலந்து கொள்ளமாட்டார். துணை முதல்வர் ஸ்டாலின் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துணை முதல்வர் ஸ்டாலின் இந்த விழாவில் கலந்துகொள்ளவில்லை. மத்திய அமைச்சர் ஆர். ராசாவும் தமிழக அமைச்சர் பொன்முடியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கலந்து கொண்டார்கள்.
டில்லியில் நடைபெறும் தேர்தல் ஆணையத்தின் வைர விழாவில் கலந்து கொள்ளும் ஜெயலலிதா, சோனியாகாந்தியைச் சந்திப்பார் என்ற ஒருவரிச் செய்தி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தேர்தல் ஆணையத்தின் மிக முக்கியமான இந்த விழாவில் சோனியா காந்தி கண்டிப்பாகக் கலந்து கொள்வார். அப்போது ஜெயலலிதாவை அவர் சந்திப்பார் என்ற தகவல் பல ஊகங்களாகக் கிளம்பியது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவில் சிறிது விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையேயான உறவு புதுப்பிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்துடனான கூட்டணி வலுவாக உள்ளது என்று தங்கபாலு அறிக்கை விட வேண்டிய நிலைமை ஏற்பட்டது.
அரசியல் அவதானிகள் எதிர்பார்த்தது போன்றே ஜெயலலிதாவும் சோனியா காந்தியும் சந்தித்தனர். இருவரும் சம்பிரதாயமாக நலம் விசாரித்தனர். தனியாகச் சந்திப்பு நடைபெறவில்லை. தேர்தல் ஆணையத்தின் 60 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மாநிலக் கட்சித் தலைவர்கள் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தனர். பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்து நிகழ்ச்சியைப் பார்ப்பதற்காகவா ஜெயலலிதா சென்னையில் இருந்து டில்லி சென்றார் என்ற கேள்வி எழுந்தது.
தேர்தல் ஆணையத்தின் 60 ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னையில் இருந்து தனி விமானத்தில் டில்லிக்குச் சென்றார் ஜெயலலிதா. அரசியல் முக்கியத்துவம் இல்லாத ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக எதற்காக தனி விமானத்தில் செல்ல வேண்டும். ஜெயலலிதாவுடன் கூடச் சென்றவர்கள் யார்? அவர்கள் அங்கு யாருடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் போன்ற விபரங்கள் வெளிவரவில்லை.
மக்களுடன் தான் கூட்டணி என்று கூறி வந்த விஜயகாந்த், அரசியல் கட்சிகளுடன் கூட்டணி சேர்வதற்கு தயார் என்று அறிவித்துள்ளார். விஜயகாந்துடன் கூட்டணி சேர வேண்டும் என்று டில்லியிலும் தமிழகத்திலும் உள்ள சில காங்கிரஸ் தலைவர்கள் யோசனை தெரிவித்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடனான உறவை காங்கிரஸ் துண்டித்தால் விஜயகாந்துடன் கூட்டணி சேராது தன்னுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற சமிக்ஞையை ஜெயலலிதா விடுத்துள்ளார்.
மத்திய அமைச்சர் அழகிரியின் செயற்பாட்டில் காங்கிரஸ் கட்சி திருப்தி அடையவில்லை. அழகிரியின் செயற்பாடுகளினால் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான பனிப்போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மத்திய அமைச்சர்கள் சிலரின் செயற்பாடுகளில் தான் திருப்தி அடையவில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பட்டியலில் அழகிரியின் பெயரும் உள்ளது. இது திராவிட முன்னேற்றக் கழகத்தை எரிச்சலடையச் செய்துள்ளது. காங்கிரஸ் கட்சியுடனான பல பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து வைத்த முதல்வர் கருணாநிதி இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முடியாது தடுமாறுகிறார்.
பெண்ணாகரம் இடைத்தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்ற செய்தியையடுத்து அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஜெயலலிதாவின் இந்த அறிவிப்பு பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களை எரிச்சலடைய வைத்துள்ளது. பெண்ணாகரம் இடைத்தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்திருந் தார். பெண்ணாகரத்தில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிக செல்வாக்கு இருப்பதனால் தனது கட்சி நிறுத்தும் அபேட்சகருக்கு சகலரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். பெண்ணாகரத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் போட்டியிடும் என்ற ஜெயலலிதாவின் அறிவிப்பு பொது வேட்பாளர் என்ற டாக்டர் ராமதாஸின் திட்டத்தை தவிடு பொடியாக்கி உள்ளது.
எதிர்க்கட்சிகளுக்கிடையேயான பிரிவு திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தும். இடதுசாரிகள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையே ஆதரிப்பார்கள். ஆகையினால் பாட்டாளி மக்கள் கட்சி நிறுத்தும் வேட்பாளர் வெற்றி பெற முடியாது. ஆனால் கூட்டணி இல்லாது தனித்து போட்டியிட்டு தனது செல்வாக்கை வெளிப்படுத்துவதில் பாட்டாளி மக்கள் கட்சி முனைப்பில் உள்ளது.
பெண்ணாகரத்தில் வன்னியர் சமூகத்தவர்கள் அதிகளவில் உள்ளதனால் தனது கட்சிக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்று டாக்டர் ராமதாஸ் எதிர்பார்க்கிறார். பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு சரிந்து விட்டது.
அக்கட்சியைப் பகைத்துக் கொண்டால் வெற்றி பெற முடியாது என்ற நம்பிக்கை தகர்ந்து போயுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியுடன் சேர்ந்தாலும் வெற்றி பெற முடியாது என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள தமிழக சட்டசபைத் தேர்தலில் கூட்டணி சேர வேண்டிய அவசியம் உள்ளதால் தனது கட்சியின் செல்வாக்கை பரீட்சித்துப் பார்ப்பதற்காகவே டாக்டர் ராமதாஸ் வேட்பாளரை நிறுத்த உள்ளார். ஜெயலலிதாவின் முடிவில் பாட்டாளி மக்கள் கட்சி கலக்கத்தில் உள்ளது.
கூட்டணி என்ற முடிவில் இருக்கும் விஜயகாந்த் பெண்ணாகரம் இடைத் தேர்தலில் தனது கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்துவாரா அல்லது ஒதுங்கிக் கொள்வாரா என்ற கேள்வியும் உள்ளது. ஆனால் கூட்டணி உறுதியாகும் வரை தனது தனித்தன்மையை விஜயகாந்த் விட்டுக் கொடுக்க மாட்டார் என்ற கருத்தும் உள்ளது
. வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 31/01/10

ஸ்டாலினுக்கு முடி சூட்டுவதில்உறுதியாக உள்ள கருணாநிதி






அரசியலிலிருந்து ஓய்வு பெறுவது என்ற முடிவில் முதலமைச்சர் கருணாநிதி உறுதியாகவுள்ளார். ஓய்வுகள் இன்றி அரசியலிலும் இலக்கியத்திலும் பணியாற்றி வரும் முதல்வர் கருணாநிதி ஓய்வு பெற வேண்டிய வயதையும் தாண்டி கடமையாற்றுகின்றார். ஸ்டாலினை முதல்வராக்க வேண்டும் என்ற எண்ணத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காகவே முதல்வர் ஓய்வு எடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முதல்வர் கருணாநிதியின் ஓய்வு அறிவிப்பு, திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு மகிழ்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தமிழக முதல்வருடன் மிக நெருக்கமாகப் பழகிய திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் கருணாநிதியின் ஓய்வை விரும்பவில்லை. ஸ்டாலினின் ஆதரவாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடனும் உற்சாகத்துடனும் உள்ளனர். முதல்வர் கருணாநிதியின் முடிவு அவர்களுக்கு வருத்தத்தைக் கொடுத்தாலும் ஸ்டாலின் முதல்வராவார் என்ற நம்பிக்கை அவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.
தமிழக சட்ட சபைத் தேர்தலுக்கு இன்னமும் ஒரு வருடம் இருக்கும் நிலையில் முதல்வர் கருணாநிதியின் தீர்மானம் இரண்டாம் கட்டத் தலைவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. கருணாநிதி என்ற பெயருக்கு உள்ள மதிப்பும் மரியாதையும் ஸ்டாலின் என்ற பெயருக்கு வருமா என்ற சந்தேகம் அவர்களுக்கு உள்ளது. ஸ்டாலினின் அரசியல் வளர்ச்சியும் தியாகமும் தேர்தலின்போது அவருக்கு கை கொடுக்கும் என்ற நம்பிக்கையும் கட்சித் தொண்டர்களிடையே உள்ளது.
எந்தவித பிரச்சினையும் இன்றி சென்ற ஸ்டாலினின் அரசியல் பயணம், அழகிரியின் அரசியல் பிரவேசத்தினால் சற்று அதிர்ந்தது. மிக நீண்டகாலமாக அரசியலில் கோலோச்சி வரும் ஸ்டாலினுக்கு உரிய கௌரவம் வழங்கப்படுவதற்கு முன்னர் அரசியலில் நுழைந்த அழகிரி மத்திய மந்திரி ஆகிவிட்டார். மந்திரிப் பதவியில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மாநில அரசுப் பக்கம் அழகிரி தாவப் போவதாக செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அழகிரியைத் திருப்திப்படுத்தாமல் ஸ்டாலின் உயர் பதவியில் அமர முடியாது என்ற கருத்து பரவலாக உள்ளது.
ஸ்டாலினின் எதிரி ஜெயலலிதாவோ அல்லது விஜயகாந்தோ அல்ல அழகிரிதான். ஸ்டாலினின் எதிரி என்ற எண்ணம் சில பத்திரிகைகள் மூலம் பிரபலப்படுத்தப்பட்டுள்ளது. பத்திரிகைச் செய்திகளை ஸ்டாலினும் அழகிரியும் கவனத்தில் எடுக்கவில்லை. நடைபெற்று முடிந்த அனைத்து இடைத் தேர்தல்களிலும் இருவரும் இணைந்து பணியாற்றி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குள் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் வெற்றியைத் தேடிக் கொடுத்துள்ளனர்.
ஸ்டாலினை முதல்வராக்குவது என்பது அவசரப்பட்டு எடுத்த முடிவு அல்ல. பல வருடங்களாக ஸ்டாலினின் செயற்பாடுகளை அவதானித்து அவருக்கு பல பதவிகளைக் கொடுத்துத்தான் ஸ்டாலினை முதல்வராக்கும் முடிவை முதல்வர் கருணாநிதி எடுத்துள்ளார். துணை முதல்வர் பதவியில் ஸ்டாலின் சிறப்பாகச் செயற்படுகிறார் என்பதையும் கண்டு கொண்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தமிழக முதல்வர் கருணாநிதி தனது ஓய்வை முறைப்படி அறிவித்ததும் திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள மூத்த தலைவர்களும் படிப்படியாக தமது ஓய்வை அறிவிப்பார்கள். கட்சியை அடுத்த தலைமுறையிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கருத்தின் அடிப்படையில் கருணாநிதி ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளார். அதனைப் பின்பற்றி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர்கள் சிலர் ஓய்வு பெற உத்தேசித்துள்ளனர். ஸ்டாலினின் தலைமையை விரும்பாத சில தலைவர்களும் உண்மையான காரணத்தை வெளிப்படுத்தாது ஓய்வு பெறும் முடிவில் உள்ளனர்.
தமிழகத்தில் நடைபெற உள்ள அடுத்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஸ்டாலின் தலைமை ஏற்க உள்ளார். ஜெயலலிதா, விஜயகாந்த், வைகோ ஆகிய தலைவர்களை எதிர்த்து தனது கட்சியை ஆட்சியில் அமர்த்த வேண்டிய சூழ்நிலை ஸ்டாலினுக்கு உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் சில தலைவர்கள் ஸ்டாலினுக்கு பூரண ஆதரவு தெரிவிப்பார்கள்.
இடது சாரி தலைவர்களும் டாக்டர் ராமதாஸும் திராவிட முன்னேற்றத்துக்கு எதிராகவே செயற்படுகின்றனர். அவர்களையும் சமாளிக்க வேண்டிய நிலையில் உள்ளார் ஸ்டாலின். திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்காலம் ஸ்டாலினின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய எம். ஜி.ஆர்., வைகோ ஆகியோர் வெளியேறி புதிய கட்சியை ஆரம்பித்த போதும் கட்சியை சிறந்த முறையில் வழிநடத்தினார் கருணாநிதி. பல தோல்விகளைச் சந்தித்த போதும் துவண்டு விடாது கட்சியைக் கட்டி வளர்த்தார்.
பெண்ணாகரம் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் முற்று முழுதாக ஸ்டாலினின் மேற்பார்வையிலேயே பிரசாரத்தை முன்னெடுக்க உள்ளது. முதல்வரின் ஓய்வு அறிவிப்புக்குப் பின்னர் நடைபெறவுள்ள தேர்தல் ஆகையினால் அது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது. பெண்ணாசரத்தில் பொது வேட்பாளரை நிறுத்தி திராவிட முன்னேற்றக் கழகத்தை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என்ற கருத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராம்தாஸ் தெரிவித்துள்ளார்.
டாக்டர் ராமதாஸின் கருத்தை எதிர்க் கட்சித் தலைவர்கள் எவரும் இதுவரை ஆமோதிக்கவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்க்கும் கட்சிகளில் பலமுள்ள கட்சியாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கருதப்படுகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணை இன்றி திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்த முடியாது என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆகையினால் டாக்டர் ராமதாஸின் கருத்துடன் எதிர்க் கட்சித் தலைவர்கள் யாரும் ஒத்துப் போகவில்லை.
கூட்டணி சேரத் தயார் என அறிவித்த விஜயகாந்தின் அடுத்த கட்ட நடவடிக்கையை தமிழக மக்கள் மிக ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். பெண்ணாசரம் இடைத் தேர்தலின்போது சாதகமான சமிக்ஞையை விஜயகாந்த் வெளியிடுவாரா என்ற ஆவல் மேலோங்கி உள்ளது. வந்தவாசி, திருச்செந்தூர் இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த விஜயகாந்த் பெண்ணாசரம் இடைத் தேர்தலில் போட்டியிடாது ஒதுங்குவாரா அல்லது பிரதான எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயற்படுவாரா என்ற கேள்வியும் தமிழக மக்களிடம் எழுந்துள்ளது.
அழகிரியைப் பற்றி பல செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. அழகிரி ராஜினாமாச் செய்யப் போகிறார். அழகிரி தமிழக அரசியலில் தீவிரம் காட்டப் போகிறார் என பரபரப்பாக வெளிவரும் செய்திகள் பற்றி அழகிரி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
அழகிரியைச் சுற்றிப் பின்னப்படும் செய்தி வலைகள் எப்போதும் அவரைத் தாக்குவதாகவே உள்ளன. வழமை போல் அவற்றை புறந்தள்ளி விட்டு மதுரையிலேயே முகாமிட்டுள்ளார் அழகிரி.
நாங்கள் விட்டுச் செல்லும் பணிகளை ஸ்டாலின் பொறுப்பேற்பார் என்று பகிரங்கமாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார். ஸ்டாலினுக்கு முக்கிய பொறுப்புகள் கையளிக்கப்படும் அதேவேளை அழகிரிக்கும் மிக முக்கிய பொறுப்புக்கள் கையளிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 24/01/10

Sunday, January 24, 2010

கசந்தது தனி வழிபிறக்கிறது கூட்டணி


தமிழக சட்ட சபைத் தேர்தல், இடைத் தேர்தல்கள் ஆகியவற்றில் தனித்துப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த விஜயகாந்த், கூட்டணி சேரத் தயார் என்று பச்சைக் கொடி காட்டியுள்ளார். கூட்டணி சேர்ந்தால்தான் வெற்றி பெறலாம் என்பதை காலம் தாழ்ந்து உணர்ந்து கொண்டார் விஜயகாந்த்.
வாக்கு வங்கி பலமாக இருந்தாலும் கூட்டணி இல்லாமல் வெற்றி பெற முடியாது என்பதை உணர்ந்த விஜயகாந்த், கூட்டணி சேர பச்சைக் கொடி காட்டியதால் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். மக்களுடன்தான் கூட்டணி என்று இதுவரை காலமும் கூறி வந்த விஜயகாந்த் இறங்கி வந்ததனால் தமிழக அரசியலில் கூட்டணியில் பாரிய மாற்றம் ஏற்படும் சாத்தியம் உண்டு.
விஜயகாந்தின் முதல் தெரிவு காங்கிரஸ் கட்சியாகவே இருக்கும். திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட்டு வந்தால் கூட்டணியில் சேரலாம் என்ற எண்ணம் விஜயகாந்திடம் இருந்தது. ஆனால், திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட காங்கிரஸ் தயாராக இருக்கவில்லை. விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் மீது தமிழகத்தில் மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவற்றுக்கும் போட்டியாக விஜயகாந்த் இருப்பார் என்ற எதிர்பார்ப்பு தேர்தல் முடிவுகளின் மூலம் கலைந்தது.
முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் மூலம் வெற்றி பெற்ற கட்சியின் வாக்கு விகிதத்தை குறைப்பதில்தான் விஜயகாந்தின் கட்சி வெற்றி பெற்றது. விஜயகாந்துக்கு ஆரம்பத்தில் இருந்த வரவேற்பு படிப்படியாகக் குறைந்தது. வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய இடைத் தொகுதிகளின் இடைத் தேர்தலில் விஜயகாந்தின் கட்சி அபேட்சகர்கள் படுதோல்வி அடைந்ததுடன் கட்டுப்பணத்தையும் இழந்தனர்.
தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்ற பிரசாரத்துடன் அரசியலுக்குள் நுழைந்த விஜயகாந்துக்கு திருச்செந்தூர் வந்தவாசி இடைத் தேர்தல் முடிவு பலத்த அடியாக விழுந்துள்ளது. அந்த அடிதான் கூட்டணி என்ற முடிவுக்கு வரத் தூண்டியது. எந்தக் கட்சியுடன் கூட்டணி சேர்வது என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் விஜயகாந்துக்கு வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்தின் முடிவுதான் அவரின் கட்சியின் முடிவாக இருக்கும்.
தமிழகத்தில் உள்ள பெரும்பாலான கட்சிகளின் முடிவு கட்சித் தலைவரின் தனிப்பட்ட முடிவாகவே இருக்கும். அதைப் போன்றே விஜயகாந்தின் முடிவை அவரின் கட்சி ஏற்றுக் கொள்ளும். அவர் கட்சி ஆரம்பித்த போது இருந்த செல்வாக்கும் கவர்ச்சியும் படிப்படியாகக் குறைந்துள்ளன. விஜயகாந்தின் பின்னால் அதிக கூட்டம் சேரும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துப் போய்விட்டது. இந்த நிலையில் விஜயகாந்த் கூறப் போகும் நிபந்தனைகளுக்கு உடனடியாகத் தலை அசைப்பதற்கு எந்தக் கட்சியும் தயாராக இல்லை.
விஜயகாந்த் எதிர்பார்ப்பது போல் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கைவிட காங்கிரஸ் கட்சி இப்போதைக்கு தயாராக இல்லை. தமிழகத்தில் நடைபெற்ற சகல இடைத் தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியும் அமோக வெற்றி பெற்றன. ஒவ்வொரு இடைத் தேர்தலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி விகிதம் கூடிக் கொண்டே போனது. இந்த நிலையில் முதல்வர் கருணாநிதியைக் கைவிட்டு விஜயகாந்துடன் கை கோர்க்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி இல்லை.
கட்சியை வளர்க்க வேண்டுமானால் கூட்டணி சேர வேண்டும். கூட்டணிக் கட்சியின் ஆதரவுடன் போட்டியிட்டால் தான் தேர்தலில் வெற்றி பெறலாம். தேர்தலில் வெற்றி பெற்றால் தான் ஆட்சியைப் பிடிக்கலாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் விஜயகாந்த்.
காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம் இல்லை என்றால் அடுத்த பெரிய கட்சி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், ஜெயலலிதாவுக்கும் விஜயகாந்துக்கும் இடையே நடந்த பிரசாரப் போரை தமிழகம் இன்னமும் மறந்து விடவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் தேசிய முற்போக்கு திராவிடக் கட்சிக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கடந்த காலங்களில் செய்தி கசிந்தது. அந்தப் பேச்சுவார்த்தையின் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்துதான் விஜயகாந்த் இப்படி ஓர் அறிவித்தலை வெளியிட்டிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.
பொண்ணாகரம் இடைத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு பொங்கல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. பொண்ணாகரம் இடைத் தேர்தலில் விஜயகாந்தின் கூட்டணி முடிவு அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் ஆழமாக வேரூன்ற காத்திருக்கும் இடதுசாரிகள் விஜயகாந்தை பற்றிப் பிடிக்கும் சாத்தியம் உள்ளது. இடதுசாரிகளுடனும் ஏனைய சிறு கட்சிகளுடனும் சேர்ந்து போட்டியிட்டால் முதலமைச்சராகலாம். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தால் முதலமைச்சராக வர முடியாது என்பதும் விஜயகாந்துக்குப் புரியும்.
பலமான கட்சியுடன் கூட்டணி அமைத்து சட்ட சபையிலும் நாடாளுமன்றத்திலும் தனது கட்சி உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதே விஜயகாந்தின் இன்றைய விருப்பம். அவரின் விருப்பத்தை நிறைவேற்றும் கட்சிகளுடன் கை கோர்க்க தயாராக உள்ளனர்.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, இடதுசாரிகள் ஆகியவற்றின் துணையுடன் இந்திய நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆசனங்களைப் பெற்றது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு உதவிய கூட்டணிக் கட்சிகள் படுதோல்வி அடைந்தன.
தமிழகத்தில் செல்வாக்கு இழந்து தவிக்கும் பாரதீய ஜனதாக் கட்சி தன்னை ஸ்திரப்படுத்துவதற்காக தமிழகத்தில் செல்வாக்கு உள்ள கட்சியுடன் கூட்டணி சேரத் துடிக்கிறது.
தமிழகக் கட்சிகள் எவையும் பாரதீய ஜனதாக் கட்சியைக் கண்டு கொள்ளவே இல்லை. விஜயகாந்துடன் கூட்டணி சேர்வதற்கு பாரதீய ஜனதாக் கட்சி பலமுறை முயற்சி செய்தது. விஜயகாந்த் பிடி கொடாமல் நழுவி விட்டார்.

இந்து மதத்தில் தீவிர பற்றுக் கொண்ட பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு விஜயகாந்த் இப்போதைக்கு விரும்ப மாட்டார். பாரதீய ஜனதாக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் முஸ்லிம் மக்களிடம் விஜயகாந்துக்கு இருக்கும் செல்வாக்கு சரிந்து விடும்.
விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் தமிழகத்தில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. விஜயகாந்தின் அரசியல் பிரவேசத்தினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கியில் பெரும் சரிவு ஏற்பட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி சரிந்ததனால் திராவிட முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சியில் குதித்தது. ஆனால் வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளில் நடைபெற்ற இடைத் தேர்தலில் சரிந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி பழைய நிலைக்கு திரும்பி விட்டது.
சரிந்திருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்கு வங்கி நிமிர்ந்ததனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மகிழ்ச்சியில் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகம் கலக்கத்தில் உள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணித்த இடைத் தேர்தலில் 20 சத வீத வாக்குகளைப் பெற்று தனது வாக்கு வங்கியை உயர்த்திய தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் வந்தவாசி, திருச்செந்தூர் இடைத் தேர்தலில் கட்டுப்பணத்தை இழந்தது. இடைத்தேர்தலின் தோல்வி விஜயகாந்தின் சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வாக்கு வங்கியைத் தக்க வைக்க வேண்டிய நிலைக்கு விஜயகாந்தை தள்ளியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையிலான உறவை பிரிக்க வேண்டும் அல்லது திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் கூட்டணியை தேர்தலில் தோல்வி அடையச் செய்ய வேண்டும். இந்த இரண்டில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான அடித்தளத்தை விஜயகாந்த் இட்டுள்ளார்.
கூட்டணி சேரத் தயார் என்று அறிவித்த கூட்டணிக் குதிரையில் ஏறி வெற்றிக் கம்பத்தைத் தொடுவாரா அல்லது குதிரையாக மாறி கூட்டணிக் கட்சியின் வெற்றிக்கு உதவுவாரா என்பது தேர்தலின் போது தெரிந்து விடும்.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 17/01/10

Wednesday, January 13, 2010

உலகக்கிண்ணம்2010


வடகொரியா
உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்காக ஆசியாக் கண்டத்தில் இருந்து தகுதி பெற்ற மூன்றாவது நாடு வட கொரியா. 1966ஆம் ஆண்டுக்குப் பின்னர் உலகக் கிண்ண உதைப்பந்தாட்டத்தில் விளையாடும் தகுதியைப் பெற்றதனால் வட கொரியா மகிழ்ச்சியில் உள்ளது. அரசியல் ரீதியில் பகை நாடான தென் கொரியாவிடம் தகுதிகாண் போட்டியில் தோல்வி அடைந்தது வட கொரியா மக்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.
மூன்றாவது தகுதிகாண் போட்டியில் தென் கொரியா, வட கொரியா, ஜோர்தான், துஸ்மெரிஸ்தான் ஆகிய நாடுகள் குழு ஆஇல் போட்டியிட்டன. ஆறு போட்டிகளில் விளையாடிய வட கொரியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளைச் சமப்படுத்தியது. நான்கு கோல்கள் அடித்த வட கொரியாவுக்கு எதிராக ஒரு கோல்கூட அடிக்கப்படவில்லை. 12 புள்ளிகளுடன் நான்காவது சுற்றில் விளையாடும் தகுதியைப் பெற்றது வட கொரியா. மூன்றாவது சுற்றில் 20 நாடுகள் போட்டியிட்டன. எதிர் அணியினால் ஒரு கோல்கூட அடிக்கப்படாத ஒரே ஒரு நாடாக வட கொரியா திகழ்கிறது.
நான்காவது தகுதி காண் போட்டியில் தென் கொரியா, வட கொரியா, சவூதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய ஐந்து நாடுகள் குழு இரண்டில் போட்டியிட்டன. எட்டுப் போட்டிகளில் விளையாடிய வட கொரியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமப்படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது.
ஏழு கோல்கள் அடித்த வட கொரியாவுக்கு எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. 12 புள்ளிகளுடன் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது வட கொரியா.
வட கொரியாவைப் போன்றே சவூதி அரேபியாவும் எட்டுப் போட்டிகளில் விளையாடி மூன்று வெற்றிகளைப் பெற்று மூன்று போட்டிகளை சமப்படுத்தி, இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்து 12 புள்ளிகளைப் பெற்றது. குழு இரண்டில் இருந்து உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியை விகிதாசார அடிப்படையில் வட கொரியா பெற்றது.
மூன்றாவது, நான்காவது சுற்றில் 16 போட்டிகளில் விளையாடிய வட கொரியா எட்டு போட்டிகளில் தோல்வி அடைந்து இரண்டு போட்டிகளை சமப்படுத்தியது. 20 கோல்கள் அடித்த வட கொரியாவுக்கு எதிராக ஏழு கோல்கள் அடிக்கப்பட்டன.
வட கொரியாவுக்கு எதிராக 16 தடவை மஞ்சள் அட்டையும் மூன்று முறை சிவப்பு அட்டையும் காட்டப்பட்டன.
கொரியன் மிஷன் என செல்லமாக அழைக்கப்படும் ஹெங் யங் ஜோ, எயங் ரே சீ, மன் இன்குக் ஆகியவர்கள் வட கொரியாவின் நட்சத்திர வீரர்களாவர். கோல் கீப்பரான ரீ மொங் குக் மீது வட கொரிய ரசிகர்கள் பெரிதும் நம்பிக்கை வைத்துள்ளனர். அவரைத் தாண்டி கோல் அடிப்பது சற்று சிரமமான காரியம்.
ரிம் சோ மின் ஐந்து கோல்களும் பாக் சுயொங், கொங்கியாங் ஜோ, ஜொங் சோமின் ஆகியோர் தலா நான்கு கோல்களும் அடித்துள்ளனர். மொங்கோலியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 4 1 என்ற கோல் கணக்கிலும் இரண்டாவது போட்டியில் 5 1 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி உள்ளது வட கொரியா. 11 போட்டிகளில் வட கொரியாவுக்கு எதிராக எந்த ஒரு நாடும் கோல் அடிக்கவில்லை.பிரேசில், ஐவரிகோஸ்ட், போர்த்துக்கல் ஆகிய பலமான நாடுகளுடன் பிரிவில் வட கொரியா உள்ளது

Monday, January 11, 2010

பா.ம.க.வைப் பலமாக்கபாதை தேடும் ராமதாஸ்


பெண்ணாகரம் இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதனால் தமிழக அரசியல் சற்று அமைதியாகக் காணப்படுகிறது. தமிழக ஆளுநரின் சட்டமன்ற உரை தமிழக அரசுக்கு சற்று தெம்பைக் கொடுத்துள்ளது. வன்முறை இல்லாத மாநிலமாக தமிழகம் திகழ்ந்ததாக ஆளுநர் தெரிவித்திருப்பது தமிழக அரசுக்கு சந்தோஷத்தைக் கொடுத்துள்ளது. பயங்கரவாதம், பிரிவினை போன்ற கோஷங்களினால் இந்தியாவின் சில மாநிலங்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுக்கு எதிராக எதிர்க் கட்சிகள் அவ்வப்போது சில போராட்டங்களை நடத்தி வருகின்றன. ஆனால் அவை அதிக வன்முறைகளை ஏற்படுத்தவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி ஆகியன தமது அரசியல் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தலும், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் நடத்திய விசேட செயற்குழுக் கூட்டமும் தொண்டர்களிடையே முக்கியத்துவம் பெற்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சி தேர்தலில் ஊழல், முறைகேடு நடப்பதால் அக்கட்சியின் தொண்டர்கள் சிலர் தொடர்ந்தும் குரலெழுப்பி வருகின்றனர். உட்கட்சித் தேர்தலின் பார்வையாளராக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மைத்திரேயனின் செயற்பாட்டில் அக்கட்சித் தொண்டர்களில் சிலர் நம்பிக்கை இழந்துள்ளனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அதிகம் தொண்டு புரியாத சிலர் தமது செல்வாக்கினால் கட்சியின் உயர் பதவிகளைப் பிடிக்க முயற்சிப்பதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்கள் குமுறுகின்றனர். நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், இடைத்தேர்தல்கள் ஆகியவற்றில் தோல்வி அடைந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களின் வெறுப்பு கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் சூழ்நிலை தோன்றியுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தல் பற்றி தொண்டர்கள் நடத்தும் போராட்டங்களை ஜெயலலிதா கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. தமக்கு நீதி கிடைக்கும் என்று போராட்டங்களை நடத்துகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உட்கட்சித் தேர்தலின் கண்காணிப்பாளர் மைத்திரேயனின் கார் தீ விபத்தில் எரிந்து நாசமாகியது. உட்கட்சித் தேர்தல் முறைகேடுகளை மைத்திரேயன் உரிய முறையில் தடுக்கவில்லை என்பதனால் அவர் மீது கோபம் கொண்டவர்களின் செயல் அது என்று கருத்து பரவியது. அதிகாரத்துக்காக அரசியல் படுகொலை பலவற்றை தமிழகம் சந்தித்துள்ளது. இதுவும் ஒரு அரசியல் பழிவாங்கலோ என்ற எண்ணம் மேலோங்கி இருந்தது. மைத்திரேயனின் கார் எரிந்தது தற்செயலானது என்ற பொலிஸ் அறிக்கையினால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஏற்பட இருந்த களங்கம் மறைந்தது. இதேவேளை, பலமான கூட்டணி இல்லாது தனித்து போட்டியிட்டால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை நன்கு உணர்ந்துள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கட்சியின் முக்கியஸ்தர்களை அழைத்து மிக முக்கிய கூட்டம் ஒன்றை டாக்டர் ராமதாஸ் நடத்தினார். அன்றைய கூட்டத்தில் கூட்டணி பற்றி ராமதாஸின் வாயிலிருந்து வெளிவரும் என்று எதிர்பார்த்தவர்கள் ஏமாந்து விட்டனர். நாடாளுமன்ற தேர்தல், இடைத்தேர்தல்கள் ஆகியவற்றில் படுதோல்வி அடைந்த ராமதாஸும் விஜயகாந்தும் கூட்டணியின் முக்கியத்துவம் பற்றி உணரத் தொடங்கி விட்டனர். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் பாட்டாளி மக்கள் கட்சி மீண்டும் இணையும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. எதிர்காலத் திட்டம் பற்றி கலந்துரையாடிய பாட்டாளி மக்கள் கட்,சி கூட்டணி பற்றி எந்தவிதமான முடிவையும் எடுக்காதது கட்சிக்குள் பலத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. பெண்ணாகரம் இடைத்தேர்தல் ஒத்தி வைக்கப்பட முன்னர் பாட்டாளி மக்கள் கட்சியும் திராவிட முன்னேற்றக் கழகமும் தமது வேட்பாளர்களை அறிவித்து விட்டன. தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதனால் பிரசார நடவடிக்கைகள் முடங்கிப் போயுள்ளன. ஆனால் ஆளுநரின் சட்டமன்ற உரை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளை விளக்கி வெளி வந்தாலும் பெண்ணாகரம் இடைத்தேர்தலின் முன்னோட்ட நடவடிக்கை போன்றே உள்ளது. ஆளுநரின் உரை வழமையான ஒன்றுதான். எதிர்க்கட்சிகளால் ஆளுநரின் உரையை ஜீரணிக்க முடியாதுள்ளது. வழமை போன்றே ஆளுநரின் உரைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். திராவிட முன்னேற்றக் கழக அரசு பல நல்ல செயற்றிட்டங்களை முன்னெடுத்துள்ளது. ஆகையினால் பெண்ணாகரம் இடைத்தேர்தலை எதிர்நோக்குவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் தயாராகி விட்டது. பெண்ணாகரம் இடைத்தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கையுடன் இடைத்தேர்தலைச் சந்திக்கத் தயாராக உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. அடுத்த சட்டமன்றத் தேர்தலின்போது பெரும்பான்மை பலத்துடன் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற திடசங்கற்பத்துடன் திட்டங்களை வகுத்துள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு முன்னர் நடைபெற உள்ள உலகச் செம்மொழி மாநாடு திரம்விட முன்னேற்றக் கழகத்தின் சாதனையை பறைசாற்றும் மாநாடாக நடைபெறும் சாத்தியம் உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைகளில் ஒன்றாக உலகச் செம்மொழி மாநாடும் பதியப்படும். உலக செம்மொழி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தமிழக அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. செம்மொழி மாநாட்டின் தீர்மானங்களும் வெற்றியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சாதனைப் பட்டியலில் இடம்பிடிக்க உள்ளது. தமிழக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் அவ்வப்போது பல ஆர்ப்பாட்டங்களையும் கண்டனக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றன. ஆனால் அவை வன்முறை அற்றதாகவே உள்ளன. தமிழகத்தில் வன்முறை, பயங்கரவாதம் இல்லாதது சிறப்பானது என்ற ஆளுநரின் உரை தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது என்பதை பகிரங்கப்படுத்தி உள்ளதா? திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் உள்ள குடும்ப ஆதிக்கம் களையப்பட்டால் தமிழகத்தின் எதிர்காலம் உயர்வடையும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 10/01/10

Sunday, January 10, 2010

உலகக்கிண்ணம்2010


கொரிய குடியரசு(தென்கொரியா)
உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் விளையாட ஆசியாவில் இருந்து தெரிவான இரண்டாவது நாடு கொரியக் குடியரசு. வட கொரியா, ஜோர்தான், துக்மெரிஸ்தான் ஆகிய நாடுகள் மூன்றாவது குழுவில் மூன்றாவது சுற்றில் போட்டியிட்டன. ஆறு போட்டிகளில் வெற்றி பெற்ற கொரியக் குடியரசு மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமநிலையில் முடித்தது. 10 கோல்கள் அடித்த கொரியக் குடியரசுக்கு எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. 12 புள்ளிகளுடன் நான்காவது சுற்றில் நுழைந்தது கொரியக் குடியரசு.நான்காவது சுற்றில் கொரியக் குடியரசு, தென் கொரியா, சவூதி அரேபியா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியன குழு 2இல் போட்டியிட்டன. எட்டுப் போட்டிகளில் விளையாடிய கொரியக் குடியரசு நான்கு போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு போட்டிகளை சமநிலையில் முடித்தது. 12 கோல்கள் அடித்த கொரியக் குடியரசுக்கு எதிராக நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன. 16 புள்ளிகளைப் பெற்று உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.அரசியல் ரீதியாகப் பிளவுபட்டோருக்கும் தென் கொரியாவும் வட கொரியாவும் நான்காவது சுற்றில் இரண்டு முறை மோதின. வட கொரியாவில் நடைபெற்ற முதலாவது போட்டியில் இரு நாடுகளும் கோல் அடிக்ஸ்ரீகாமையினால் சமநிலையில் முடிந்தது தென் கொரியாவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் இரண்டு நாடுகளும் கோல் அடிக்காமையினால் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது. நான்காவது சுற்றில் இரண்டு நாடுகளும் மீண்டும் தென் கொரியாவில் மோதின. முதல் பாதியில் இரு நாடுகளும் கோல் அடிக்காமையினால் போட்டி பரபரப்பானது. இரண்டாவது பாதியில் தென் கொரியா ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றது.வட கொரியாவின் அச்சுறுத்தலுக்கு உலக வல்லரசுகளின் உதவியுடன் பதிலளித்து வரும் தென் கொரியா, உலக வல்லரசுகளின் துணையின்றி வட கொரியாவை வீழ்த்திய மகிழ்ச்சியைக் கொண்டாடியது. மூன்றாவது, நான்காவது சுற்றுக்களில் 14 போட்டிகளில் விளையாடிய கெம்ரியக் குடியரசு ஏழு வெற்றிகளைப் பெற்று ஏழு போட்டிகளை சமநிலைப்படுத்தியது. 22 கோல்கள் அடித்த கொரியக் குடியரசுக்கு எதிராக ஏழு கோல்கள் அடிக்கப்பட்டன. 22 முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஒருமுறை எச்சரிக்கை விடப்பட்டது.துக்மரிஸ்தானுக்கு எதிராக 4 0 கோல் கணக்கிலும் ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு எதிராக 4 1 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. கொரியக் குடியரசுக்கு எதிராக ஜோர்தான் ஆகக் கூடுதலாக இரண்டு கோல்கள் அடித்தது. அப்போட்டி 2 2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவுற்றது. ஆசியாக் கண்டத்தில் இருந்து முதன் முதலாக உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற நாடு கொரியக் குடியரசு. 1954ஆம் ஆண்டிலிருந்து இதுவரை ஏழு முறை உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடியுள்ளது. உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் அதிக தடவை விளையாடிய ஆசிய நாடாக கொரியக் குடியரசு திகழ்கிறது.அணித் தலைவரான பாக் ஜி சுங் அனுபவம்மிக்க வீரர். மான்செஸ்ர் யுனைட்டட் கழகத்தின் வெற்றிகள் பலவற்றுக்கு இவர் காரணியாக இருந்தார்.பெனால்டி எல்லையில் கிடைக்கும் பந்தை கோலாக்குவதில் அசகாய சூரரான பாக் சூ யங் அணிக்கு பலமாக உள்ளார். 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் கூ யுங் மோ பயிற்சியாளராக உள்ளார்.பாக் ஜி சுங் ஐந்து கோல்களையும் பாக் சூ யங் நான்கு கோல்களையும் அடித்துள்ளார். கடந்த உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டிகளின்போது பலமான நாடுகளை அச்சுறுத்திய கொரியக் குடியரசு இம்முறையும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் உள்ளது.ஆர்ஜென்ரீனா, நைஜீரியா, கிரீஸ் ஆகிய நாடுகளுடன் "பி' பிரிவில் கொரியக் குடியரசு உள்ளது.

Thursday, January 7, 2010

உலகக்கிண்ணம்2010


அவுஸ்திரேலியா
உலகக் கிண்ண உதைப்பந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு அவுஸ்திரேலியா உட்பட ஆசிய நாடுகளில் இருந்து 43 நாடுகள் போட்டியிட்டன. மூன்றாவது சுற்றில் ஐந்து குழுக்களாக 20 நாடுகள் போட்டியிட்டன. நான்காவது சுற்றில் இரண்டு குழுக்களாக 10 நாடுகள் போட்டியிட்டன. அவுஸ்திரேலியா, கொரியக் குடியரசு (தென்கொரியா), வட கொரியா, ஜப்பான் ஆகிய நான்கு நாடுகள் உலகக் கிண்ணப் பந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதி பெற்றன.இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகியன முதல் சுற்றிலேயே வெளியேறின. கட்டாருடனான போட்டியில் 10, 50 ஆகிய கோல் கணக்கில் இலங்கை தோல்வியடைந்தது. ஒருபோட்டியில் கட்டார் அடித்த அதிகூடிய கோல் இதுவாகும். லெபனானுடனான முதல் போட்டியில் 41 கோல் கணக்கில் தோல்வி அடைந்த இந்தியா இரண்டாவது போட்டியை 22 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்தது. ஒருபோட்டியில் லெபனான் அடித்த அதிகூடிய கோல் இதுவாகும். ஈரானுடனான போட்டியில் 70 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த பாகிஸ்தான் இரண்டாவது போட்டியை 00 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்தது. ஒரு போட்டியில் ஈரான் அடித்த அதிகூடிய கோல் இதுவாகும். தஜிகிஸ்தானுடனான முதல் போட்டியை 1 1 என்ற சமநிலையில் முடித்த பங்களாதேஷ் இரண்டாவது போட்டியில் 5 0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.உலகக் கிண்ண உதைப்பந்தாட்ட தகுதிகாண் போட்டிகளில் சரயூற்சைக்கண்டி (தாய்லாந்து), மக்ளிம் சற்கி உஸ்பெகிஸ்தான் ஆகியோர் தலா எட்டு கோல்களும் அஹமட் அஜப் (குவைத்), இஸ்மாயில் மதார் (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) ஆகியோர் தலா ஆறு கோல்களும் ஸியாட் சாபோ (சிரியா), பாக் ஜி சுங் (கொரியக் குடியரசு) மொஹமட் கட்டார் (லெபனான்), சபஸ்ரியன் குயின்ரனா (கட்டார்) ஆகியோர் தலா ஐந்து கோல்களும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ரிம் சகில், பிரெட் எமோட்டன் ஆகியோர் தலா நான்கு கோல்களும் அடித்து முத்திரை பதித்துள்ளனர்.மூன்றாவது சுற்றில் அவுஸ்திரேலியா, கட்டார், ஈராக், சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்டன. ஆறு போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலியா மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமநிலையில் முடித்தது. இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. ஏழு கோல்கள் அடித்த அவுஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. 10 புள்ளிகளுடன் நான்காவது சுற்றுக்குத் தெரிவானது அவுஸ்திரேலியா.அவுஸ்திரேலியா, ஜப்பான், பஹ்ரேன், கட்டார், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் நான்காவது சுற்றில் குழு ஒன்றில் இடம்பெற்றன. நான்காவது சுற்றில் எட்டு போட்டிகளில் விளையாடிய அவுஸ்திரேலியா ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளை சமநிலையில் முடித்தது. அவுஸ்திரேலியா 12 கோல்கள் அடித்தது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே ஒரு கோல் மட்டும் அடிக்கப்பட்டது.மூன்றாவது நான்காவது சுற்றில் 14 போட்டியில் விளையாடிய அவுஸ்திரேலியா ஒன்பது போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமநிலையில் முடித்து இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தது. 19 கோல்கள் அடித்த அவுஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு கோல்கள் அடிக்கப்பட்டன. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக 25 முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது.கட்டாருக்கு எதிரான போட்டியில் 4 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதே அவுஸ்திரேலியாவின் பெரிய வெற்றியாகும். ஈராக், சீனா ஆகிய நாடுகளுக்கு எதிரான போட்டியில் தலா 1 0 என்ற கோல் கணக்கில் அவுஸ்திரேலியா தோல்வி அடைந்தது. தொடர்ச்சியாக ஏழு போட்டிகளில் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருபோட்டியில் ஒரு கோல்கூட அடிக்கவில்லை. அவுஸ்திரேலியாவின் கோல் கீப்பரான மாக்செக்வஸரின் திறமையினால் எதிரணியினால் அதிக கோல்களை அடிக்க முடியவில்லை.ரிம்சகில் ஹரிகீவெல் பிரெட் எமோட்டன், வின்ஸ்கிரெல்லா, ஜாசான் குலினா ஆகியோரின் திறமையில் அவுஸ்திரேலியா நம்பிக்கை வைத்துள்ளது. பின்பேவிக் அவுஸ்திரேலிய உதைப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார். ரிம்சகில் ஹரி கீவெல் ஆகியோர் தலா நான்கு கோல்கள் அடித்துள்ளனர். ஜேர்மனி, கானா, சேர்பியா ஆகியவற்றுடன் "டி' பிரிவில் அவுஸ்திரேலியா உள்ளது.

Tuesday, January 5, 2010

உலகக்கிண்ணம்2010


உருகுவே
தென் அமெரிக்காவில் இருந்து உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்குத் தெரிவான ஐந்தாவது நாடு உருகுவே. 18 போட்டிகளில் விளையாடிய உருகுவே ஆறு போட்டிகளில் வெற்றி பெற்று ஆறு போட்டிகளை சமநிலைப்படுத்தி ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்தது. 28 கோல்கள் அடித்த உருகுவேக்கு எதிராக 20 கோல்கள் அடிக்கப்பட்டன.
ஆர்ஜென்ரீனா, உருகுவே ஆகிய நாடுகளுக்கிடையேயான போட்டி மிக முக்கியமானதாக இருந்தது. அப்போட்டியில் ஆர்ஜென்ரீனா தோல்வி அடைந்தால் உலகக் கிண்ண வாய்ப்புக்காக இன்னொரு போட்டியில் வெற்றி பெற வேண்டிய நிலை இருந்தது. ஒரே ஒரு கோல் அடித்து ஆர்ஜென்ரீனா வெற்றி பெற்றதனால் தோல்வி அடைந்த உருகுவேக்கு இன்னொரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
கொஸ்ரம்ரிக்காவுடனான முதலாவது போட்டியில் விளையாடிய உருகுவே இடைவேளைக்குப் பின்னர் ஒரு கோலை அடித்து வெற்றி பெற்றதனால் தனது வாய்ப்பை பிரகாசமாக்கியது. கொஸ்ரம்ரிக்காவுக்கு எதிரான இரண்டாவது போட்டி 11 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிந்ததனால் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடும் வாய்ப்பை 24 புள்ளிகளுடன் உருகுவே பெற்றுக் கொண்டது.
பொலிவியாவுக்கு எதிராக 5 0 என்ற கோல் கணக்கிலும் பெருவுக்கு எதிராக 6 0 என்ற கோல் கணக்கிலும் வெற்றி பெற்று தனது கோல் எண்ணிக்கையை உயர்த்தியது. உருகுவேக்கு எதிராக பிரேஸில் 40 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. உருகுவேக்கு எதிராக அடிக்கப்பட்ட அதிக கோல்கள் இதுவாகும். உருகுவேயின் இளம் வீரரான டிகோ லுகனோ மீது ரசிகர்கள் அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். தியோதோ போர்லன், லூயிஸ் அயரெஸ், அஜெக்ஸ் அம்பெடம் ஆகியோரின் திறமை உருகுவேக்கு வெற்றியைத் தேடித் தரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.டியோகோ பேர்லன் ஏழு கோல்களையும் லூயிஸ் சூரிச், செபஸ்தியன் எதியூரின் ஆகியோர் தலா ஐந்து கோல்களையும் அடித்து முன்னணியில் உள்ளனர்.

Monday, January 4, 2010

உலகக்கிண்ணம்2010


ஆர்ஜென்ரீனா
உலகின் மிகப் பலம் வாய்ந்த உதைபந்தாட்ட அணிகளில் ஒன்றான ஆர்ஜென்டீனா மிக மிக கஷ்டப்பட்டு உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கான தகுதியைப் பெற்றது. பீஃபாவின் சிறந்த விளையாட்டு வீரராகவும் ஐரோப்பாவின் சிறந்த உதைபந்தாட்ட வீரராகவும் தெரிவு செய்யப்பட்ட லியோனல் மேர்ஸி ஆர்ஜென்டீனா உதைபந்தாட்ட அணியின் தலைவராக உள்ளார்.
உதைபந்தாட்ட ஜாம்பவானான பீலே க்கு அடுத்த படியாகப் போற்றிப் புகழப்படும் மரடோனா ஆர்ஜென்டீனா உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள் ளார்.
உதைபந்தாட்ட உலகில் சர்ச்சைகளின் நாயகனான மரடோனாவை சர்ச்சைகள் இன்றும் துரத்துகின்றன. ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக மரடோனா பொறுப்பேற்ற பின்னர் அணியின் தரம் வீழ்ச்சி கண்டுள்ளது என்று குமுறிய ஆர்ஜென்ரீனா உதைபந்தாட்ட ரசிகர்கள் மரடோனாவை மாற்ற வேண்டும் என்று போர்க் கொடி தூக்கினர். வாழ்வா சாவா என்ற இறுதிப் போட்டியில் உருகுவேயை 1 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற் றது ஆர்ஜென்ரீனா.
18 தகுதிகாண் போட்டிகளில் விளையாடிய ஆர்ஜென்டீனா எட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்று நான்கு போட்டிகளை சமப்படுத்தி ஆறு போட்டிகளில் தோல்வி அடைந்தது. 23 கோல்கள் அடித்த ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக 20 கோல்கள் அடிக்கப்பட்டன. 37 முறை மஞ்சள் அட்டை காண்பிக்கப்பட்டது. ஒரு முறை எச்சரிக்கை விடப்பட்டது. மூன்று தடவை சிவப்பு அட்டை காட்டப்பட்டது.
பிரேஸில்ஆர்ஜென்டீனா அணிகளுக்கிடையேயான முதலாவது போட்டியில் இரு அணிகள் கோல் எதுவும் அடிக்காது சமநிலையில் முடிந்தது. வெனிசுலாவுக்கு எதிரான போட்டியில் அதிகபட்சமாக 40 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.ஆர்ஜென்டீனாவுக்கு எதிரான போட்டியில் வெனிசுலா 61 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆர்ஜென்ரீனாவுக்கு எதிராக அதிக கோல்கள் அடித்த நாடாக வெனிசுவெலா திகழ்கிறது. முதல் பாதியில் 3 1 கோல் கணக்கில் முன்னணியில் இருந்த வெனிசுலா இரண்டாவது பாதியில் மேலும் மூன்று கோல்கள் அடித்தது. இந்தப் போட்டி ஆர்ஜென்ரீனாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.
பிரேஸிலுடனான போட்டியில் 31, பரகுவேயுடனான போட்டியில் 10 கோல் கணக்கில் தோல்வி அடைந்த ஆர்ஜென்ரீனா பெருவுடனான போட்டியில் 2 1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. என்றாலும் உலகக் கிண்ண உதைபந்தாட்டத்துக்கு தகுதி பெறும் புள்ளி கிடைக்காமையினால் தடுமாறிய ஆர்ஜென்ரீனா கடைசிப் போட்டிவரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. கடைசிப் போட்டியில் உருகுவேயை 10 கோல் கணக்கில் வீழ்த்தி உலகக்கிண்ண உதைபந்தாட்டத்தில் விளையாடும் தகுதியைப் பெற்றது ஆர்ஜென்ரீனா.
உலக உதைபந்தாட்ட தகுதிகாண் போட்டியில் ஐந்து கோல்கள் அடித்த
ஜாவிர் மஸ்ரரானோ தலா நான்கு கோல்கள் அடித்த லியோனல் மேர்ஸி, ஜூன் ரெகியூலம் ஆகியோருடன் ஜுலியன் செபஸ்தியன் வோரோ ஆகியோர் ஆர்ஜென்ரீனாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாவர்.
தென் கொரியா, நைஜீரியா, கிரீஸ் ஆகிய நாடுகளுடன் பீ பிரிவில் ஆர்ஜென்டீனா உள்ளது.

Sunday, January 3, 2010

இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால்நிம்மதியடைந்துள்ள எதிர்க்கட்சிகள்




பெண்ணாகரம் தொகுதி மக்களுக்குக் கிடைக்க வேண்டிய பொங்கல் அன்பளிப்புகளை எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து தடுத்து விட்டன. பெண்ணாகரம் தொகுதியின் உறுப்பினரான பெரியண்ணன் மரணமானதால் ஜனவரி 20 ஆம் திகதி இடைத் தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் நடந்த இடைத் தேர்தலில் படுதோல்வி அடைந்த எதிர்க்கட்சிகள், பெண்ணாகரம் இடைத் தேர்தலை உடனடியாகச் சந்திக்கத் தயங்கின.
பொங்கல் சமயத்தில் இடைத்தேர்தல் நடைபெற்றால் பொங்கல் இனாம் என்ற பெயரில் முறைகேடுகள் நடைபெறலாம் என்று எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியதை ஏற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம், பெண்ணாகரம் இடைத் தேர்தலை ஒத்தி வைத்தது. 2006 ஆம் ஆண்டு மதுரையில் தொடங்கி திருச்செந்தூர் வரை நடைபெற்ற 10 இடைத் தேர்தல்களிலும் தமிழகத்தை ஆளும் திராவிட முன்னேற்றக் கழகமும் அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளன.
"சிறுபான்மை அரசு ' என்று ஜெயலலிதா தமிழக அரசை இளக்காரமாகக் கூறி வந்தாலும் இடைத் தேர்தலின் வெற்றி மூலம் தனது உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தி உள்ளது திராவிட முன்னேற்றக் கழகம். ஒரு இடைத் தேர்தல் முடிந்து அதன் வரவு செலவுக் கணக்கைப் பார்ப்பதற்கு முன்னரே அடுத்த தேர்தலில் போட்டியிட வேண்டிய நிலையில் தமிழகக் கட்சிகள் உள்ளன.
பெண்ணாகரம் இடைத் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பி வந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் இன்பசேகரனை வேட்பாளராக அறிவித்து பிரசாரத்தை ஆரம்பித்து விட்டது.
தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட பின்னர் சலுகைகள், இலவச விநியோகங்களை அரசாங்கம் அறிவிக்கக் கூடாது. 6 ஆம் திகதி சட்ட மன்றத்தில் ஆளுநர் உரை நிகழ்த்தும்போது புதிய அறிவிப்புக்களை வெளியிட்டால். தேர்தல் சட்ட விதிகளின்படி அது குற்றமாகுமா? பொங்கலுக்கு ஏழைகளுக்கு அரசாங்கம் இலவச வேஷ்டி சேலை வழங்குவது வழமையானது. பொங்கலுக்கு வழங்கும் இலவச வேஷ்டி சேலை குற்றமாகுமா? போன்ற கேள்விகள் தமிழக அரசின் சார்பில் எழுப்பப்பட்டன.
பெண்ணாகரம் இடைத் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டதால் எதிர்க்கட்சிகள் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளன. திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியைத் தடுக்கும் ஒரு வேலைத் திட்டத்தைமுன்னெடுக்க வேண்டிய நிலை க்கு எதிர்க்கட்சிகள் தள்ளப்பட்டுள்ளன.
வந்தவாசி, திருச்செந்தூர் ஆகிய தொகுதிகளின் இடைத்தேர்தல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் விஜயகாந்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளன. அடுத்த தேர்தலுக்கு எப்படி முகம் கொடுக்க வேண்டும் என்று ஜெயலலிதாவும் விஜயகாந்தும் சிந்திக்கத் தொடங்கி விட்டனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்கடிப்பதற்கு பலமான ஒரு கூட்டணி அமைக்க வேண்டிய தேவையை எதிர்க்கட்சிகள் உணர்ந்துள்ளன. கௌரவப் பிரச்சினை காரணமாக பலமான கூட்டணி அமைவது தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. கருத்து வேறுபாடு காரணமாக எதிர்க்கட்சிகள் பிரிந்திருப்பது திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு சாதகமானதாக உள்ளது.
திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளின் வெற்றி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு அளவில்லாத மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரும் கட்சிகள் பேரம் பேசும் சக்தியை இழந்துள்ளன. தனி வழி செல்லும் விஜயகாந்தும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் எதிர்பார்த்த வாக்குகளைக் கூடப் பெறாது தோல்வியடைந்துள்ளன.
திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்தபோது வெற்றி பெற்ற பாட்டாளி மக்கள் கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், இடதுசாரிகள் ஆகியன அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்த போது படுதோல்வி அடைந்தன. அந்தக் கட்சிகள் மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் சேர்ந்தால் பேரம் பேசுவதில் தமது பழைய செல்வாக்கைக் காட்ட முடியாத நிலை உள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் அபரிமித வளர்ச்சியைத் தடை செய்ய முடியாத நிலையில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் சிதறி உள்ளன.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சவால்விடக் கூடிய எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொறுப்பான எதிர்க்கட்சியாக செயற்படாமையினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சி எவ்வித தங்கு தடையுமின்றி உயர்ந்து கொண்டிருக்கிறது.
திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய தொகுதிகளில் விஜயகாந்துக்கு ஏற்பட்ட தோல்வி அவருடைய கட்சிக்கு விழுந்த மிகப் பலமான அடியாக உள்ளது. திராவிடக் கழகத்தை ஆட்டிப் படைக்கப் போகும் கட்சி, கறுப்பு எம்.ஜி.ஆர்., எம்.ஜி.ஆரைப் போன்று திரை உலகில்
இருந்து அரசியலுக்கு வந்தவர் போன்ற
மாயைகளுடன் அரசியலில் அடி எடுத்து வைத்த விஜயகாந்தின் கூட்டங்களுக்கு இலட்சக் கணக்கில் கூட்டம் சேர்ந்தது. விஜயகாந்த்துக்கு கூடிய கூட்டம் வாக்களித்திருந்தால் முதல்வர் கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஓரம் கட்டப்பட்டிருப்பர்.
பெண்ணாகரம் இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி அறிவித்துள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் இந்த அறிவிப்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வீதத்தைக் குறைக்குமே தவிர, அதன் வெற்றியைத் தடுக்க உதவாது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவானவர்கள் பெண்ணாகரம் தொகுதியில் அதிகளவில் உள்ளனர். பெண்ணாகரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி தனித்துப் போட்டியிட்டபோது கணிசமான வாக்குகளைப் பெற்றதே தவிர, வெற்றி பெறவில்லை. பாட்டாளி மக்கள் கட்சியின் வாக்கு வங்கியும் செல்வாக்கும் குறைந்துள்ள நிலையில் பெண்ணாகரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளின் வாக்குகள் தான் சிதறுமே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியில் எதுவித பாதிப்பும் ஏற்படாது.
டாக்டர் ராமதாஸுக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான பலப் பரீட்சையில் முன்னணியில் நிற்பது யார் என்பதை தீர்மானிக்கும் போட்டியாகவே பெண்ணாகரம் இடைத் தேர்தல் கருதப்படுகிறது. பெண்ணாகரம் தொகுதியில் வெற்றி பெற முடியாது எனத் தெரிந்தும் அதிக வாக்கு பெறுவது யார் என்ற போட்டியே ராமதாஸுக்கும் விஜயகாந்துக்கும் இடையே ஏற்படவுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உட்கட்சித் தேர்தலில் நடந்த ஊழல் காரணமாக ஏற்பட்ட பிரச்சினை போயஸ்கார்டன் வரை எதிரொலிக்கிறது.
மதுரை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உட் கட்சித் தேர்தல்களில் நடைபெற்ற முறைகேட்டை வெளிப்படுத்துவதற்காக சென்னையில் உள்ள ஜெயலலிதாவின் வாசஸ்தலமான போயஸ் கார்டனின் முன்னால் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தல்கள் இதுவரை காலமும் எதுவித பிரச்சினையுமின்றி சுமுகமாக நடைபெற்று வந்தன. இந்த ஆண்டு நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் நடைபெற்ற முறைகேடுகளை மூடி மறைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதுவரை காலமும் நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் தமக்கு விருப்பமில்லாதவர்கள் வெற்றி பெற்ற போதும் அமைதியாக இருந்தவர்கள் இம்முறை அமைதியாக இருக்காது ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டு வருவது பற்றி ஜெயலலிதா அக்கறை காட்டுகிறாரா இல்லையா என்பது தெரியாதுள்ளது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உட்கட்சித் தேர்தலினால் வெறுத்துப் போய் இருப்பவர்களை இழுக்கும் பணியை சிலவேளை திராவிட முன்னேற்றக் கழகம் ஆரம்பிக்கலாம். கட்சியின் தலைமைப் பீடத்துடனான முரண்பாடு, கட்சித் தொண்டர்களைப் பாதித்தால் தொண்டர்கள் கட்சி மாறும் சூழ்நிலை ஏற்படும்.
பெண்ணாகரம் இடைத் தேர்தலுக்கு முன்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுள் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு ஜெயலலிதா முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை அறிய பலரும் காத்திருக்கின்றனர்.
வர்மா


வீரகேசரிவாரவெளியீடு 03/01/10

உலகக்கிண்ணம்2010


பரகுவே
உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடுவதற்கு தென் அமெரிக்காவில் இருந்து தெரிவான மூன்றாவது நாடு பரகுவே. மிகுந்த நம்பிக்கையுடன் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியை எதிர்பார்த்துள்ளது பரகுவே. 18 உலகக் கிண்ண உதைபந்தாட்ட தகுதி காண் போட்டியில் விளையாடி 10 போட்டிகளில் வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமநிலையில் முடித்த பரகுவே ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்தது. 24 கோல்களை பரகுவே அடித்துள்ளது. பரகுவேக்கு எதிராக 16 கோல்கள் அடிக்கப்பட்டன. 42 தடவை மஞ்சள் அட்டைகள் காட்டப்பட்டன. ஒரு தடவை எச்சரிக்கை விடப்பட்டது. ஒருமுறை சிவப்பு அட்டை காட்டப்பட்டது. 33 புள்ளிகள் பெற்று தெரிவானது.
முதல் சுற்றில் பலம் வாய்ந்த நாடுகளான பிரேசிலை 20, உருகுவேயை 10, சிலியை 30 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. ஆர்ஜென்டீனாவுடனான போட்டி 11 என்ற கோல் கணக்கில் சமநிலையுடன் முடிந்தது.
இரண்டாவது சுற்றில் இரண்டு போட்டிகள் மீதமிருக்கையில் ஆர்ஜென்ரீனாவை 21 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது பரகுவே. இந்தச் சந்தோஷத்தைக் கொண்டாட ஒருநாள் தேசிய விடுமுறை அறிவிக்கப்பட்டது.
ஈக்குவடோருக்கு எதிராக 51 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. பொலிவியா 4 2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
1998ஆம் ஆண்டு பிரான்சிலும் 2002ஆம் ஆண்டு கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளிலும் நடைபெற்ற உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகளில் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்ற பரகுவே 2010 ஆம் ஆண்டும் இரண்டாவது சுற்றில் விளையாடும் நம்பிக்கையுடன் உள்ளது.
பரகுவேயின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மார்ட்டினோ, மெக்ஸிக்கோவிலும் ஐரோப்பாவிலும் உள்ள கழகங்களில் விளையாடி வருகிறார். நெல்சன் சயாடா வல்டஸ் 11 கோல்கள் அடித்து எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார். ரொகியோ சாந்த குரூஸ், சல்வடோர், கபனாஸ் ஆகியோரும் நெருக்கடி கொடுக்க காத்திருக்கிறார்கள். ஆர்ஜென்டீனாவைச் சேர்ந்த செரார்டோ மாட்டினோ பரகுவே உதைபந்தாட்ட அணியின் பயிற்சியாளராக உள்ளார்.இத்தாலி, நியூசிலாந்து, ஸ்லோவேனியா ஆகிய நாடுகளுடன் எஃப் பிரிவில் பரகுவே உள்ளது
ரமணி
மெட்ரோநியூஸ்