Friday, January 31, 2014

சுவிட்ஸார்லாந்து 1954

ஐந்தாவது உலகக்கிண்ண உதை பந்தாட்டம் சுவிட்ஸர்லாந்தில் 1954 ஆம் ஆண்டு நடைபெற்றது. இப்போட்டியில் விளையாடுவதற்கென 45 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின. 16 நாடுகள் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றன.

ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து ஒஸ்ரியா, செக்கஸ்லோவாக்கியா, பிரான்ஸ்.ஹங்கேரி, ஸ்கொட்லாந்து, துருக்கி, பெல்ஜியம், இங்கிலாந்து, மேற்கு ஜேர்மனி, இத்தாலி, சுவிட்ஸர்லாந்து, யூகஸ்லோவாக்கியா  ஆகிய நாடுகள் தகுதி பெற்றன. ஆசியாவிலிருந்து தென் கொரியா, வட அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ, தென் அமெரிக்காவிலிருந்து பிரேஸில், உருகுவே ஆகியனவும் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றன.கடந்த உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடிய ஸ்பெய்ன் தகுதி பெறவில்லை.தென் கொரியா முதல் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்றது.
மேற்கு ஜேர்மனி ஹங்கேரி ஆகியன இறுதிப்போட்டியில் விளையாடின.3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மனி சம்பயனானது. 26 போட்டிகளில் 140 கோல்கள் அடிக்கப்பட்டன. 768607 பேர் போட்டிகளைப் பார்வையிட்டனர்.போட்டிகள் அனைத்தும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன.90 நிமிட போட்டியின் பின்னர் போட்டி சமநிலையில் முடிந்தால் மேலதிக நேரம் விளையாடு வதற்கு ஒதுக்கப்பட்டது.

உலகக்கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்ற 16 நாடுகளும் நான்கு குழுக்களாக்கப்பட்டன. ஒரு குழுவில் தலா நான்கு நாடுகள் இடம் பிடித்தன. முதல்  இரண்டு இடம் பெற்ற நாடுகள் கால் இறுதிக்கு முன்னேறின. பிளே ஓவ் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டதனால் ஒரு குழுவில் உள்ள சில நாடுகளுக்கிடையே போட்டி நடைபெறவில்லை.
பிரேஸில் ,யூகஸ்லோவாக்கியா , பிரான்ஸ்.மெக்ஸிகோ, ஆகியன குழு 1 இல் இடம்பிடித்தன. முதலிடம் பிடித்த பிரேஸிலும், யூகஸ்லோவாக்கியாவும் கால் இறுதிக்குத் தெரிவாகின. மெக்ஸிகோவுக்கு எதிரான போட்டியில் பிரேஸில் 5-0 கோல் கணக்கில் வெற்றிபெற்றது. ஒரு குழுவில் இருந்த பிரேஸிலும், பிரான்ஸும் சந்திக்க வில்லை.

ஹங்கேரி,ஜேர்மனி, துருக்கி, தென்கொரியா ஆகிய நாடுகள் உள்ள குழு 2 கோல் மழை பொழிந்து ரசிகர்களை திக்கு முக்காட வைத்தது. தென் கொரியாவுக்கு எதிரான  போட்டியில் 9-0 கோல் கணக்கில் வெற்றி பெற்ற ஹங்கேரி 8-3 என்ற கோல் கணக்கில் மேற்கு ஜேர்மனியை வீழ்த்தியது. துருக்கி 7-0 கோல் கணக்கில் தென் கொரியாவை வென்றது.7-2 கோல் கணக்கில்  ஜேர்மனியிடம் துருக்கி தோல்வியடைந்தது. இந்தக் குழுவில் மொத்தமாக 36 கோல்கள் அடித்தது. தென்கொரியா, ஜேர்மனி ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடவில்லை. அதே போல் ஹங்கேரியை எதிர்த்து துருக்கி விளையாடவில்லை. ஹங்கேரியும் மேற்கு ஜேர்மனியும்  கால் இறுதியில் விளையாடத் தகுதி பெற்றன.சுவிட்ஸர்லாந்து, இங்கிலாந்து, இத்தாலி, பெல்ஜியம்  ஆகியன குழு 4 இல் இருந்தன. பெல்ஜியம் சுவிட்ஸர்லாந் தையும், இங்கிலாந்து இத்தாலியையும் எதிர்த்து விளையடவில்லை.முதல் இரண்டு இடங்களைப் பெற்ற சுவிட்ஸர்லாந்தும் இங்கிலாந்தும் கால் இறுதிக்குத் தெரிவாகின.

ஒஸ்ரியா, சுவிட்ஸர்லாந்து, உருகுவே, இங்கிலாந்து, ஹங்கேரி, பிரேஸில் மேற்கு ஜேர்மனி, யுகஸ்லோவாக்கியா ஆகியன கால் இறுதியில் வெற்றி பெற்ற ஒஸ்ரியா, உருகுவே, ஜேர்மனி ஆகியன அரை இறுதிக்கு முன்னேறின.
ஹங்கேரி,      உருகுவே ஆகியவற்றுக்கிடையேயான அரை இறுதிப் போட்டியில் 4-2 கோல் கணக்கில் ஹங்கேரி வெற்றி பெற்றது. 6-1 என்ற கோல் கணக்கில் ஒஸ்ரியாவை வீழ்த்திய ஜேர்மனி இறுதிப்போட்டிக்கு தெரிவானது. உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் ஜேர்மனியும், ஹங்கேரியும் சந்தித்தன.3-2 கோல் கணக்கில் வெற்றி பெற்ற மேற்கு ஜேர்மனி வெற்றி பெற்றது.
ஐந்து போட்டிகளில் 11 கோல்கள் அடித்த ஹங்கேரியின் வீரர் சன்டோர் கொஸ்ஸில் கோல்டன் விருது பெற்றார்.தலா ஐந்து கோல் அடித்த  செப்க்கி (சுவிஸ்) , மக்ஸ் மலோசிக் (பிரான்ஸ்)எரிக் ரொட்ஸட் (ஒஸ்ரியா) ஆகியோரின்  பெயர் கோல்டன் க் வுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.

தென்கொரியாவுக்கு எதிராக இரண்டு போட்டிகளில் அதிகபட்சமாக 16 கோல்கள் அடிக்கப்பட்டது.மேற்கு ஜேர்மனி விளையாடிய பிரிட்ஸ் ஒட்டமார் வட்லர் எனும் சகோதரர்கள் ஒஸ்ரியாவுக்கு எதிரான அரை இறுதியில் கோல் அடித்து  உலகக்கிண்ணப் போட்டி ஒன்றில் கோல் அடித்த சகோதரர்கள் என்ற பெருமையைப் பெற்றன.பிரேஸில், ஹங்கேரி ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் மூன்று பிரேஸில் வீரர்கள் வெளியேற்றப்பட்டனர்.போட்டி முடிவடைந்த பின்பும் பிரேஸில் வீரர்கள் அங்குச்சென்று குழப்பம் விளைவித்தனர்.
இரண்டாவது உலக மகாயுத்தத்தால் பாதிக்கப்பட்ட மேற்கு ஜேர்மனி சம்பியனாகி ஆறுதலடைந்தது.

ரமணி  
சுடர் ஒளி  29/01/14

Thursday, January 30, 2014

உலகக்கிண்ணம் 2014

ஐவரிகோஸ்ட்
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சீ  பிரிவில் கிரீஸ், கொலம்பியா ஆகிய நாடுகளின் பலம் பலவீனம் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். ஜவரிகோஸ்ட், ஜப்பான் ஆகிய நாடுகளின் பலம் பலவீனம் பற்றி இவ்வாரம் பார்ப்போம்.

                  ஐவரிகோஸ்ட்
உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சீ  பிரிவில் கிரீஸ், கொலம்பியா ஆகிய நாடுகளின் பலம் பலவீனம் பற்றி கடந்த வாரம் பார்த்தோம். ஜவரிகோஸ்ட், ஜப்பான் ஆகிய நாடுகளின் பலம் பலவீனம் பற்றி இவ்வாரம் பார்ப்போம்.

ஐவரிகோஸ்ட்

ஆபிரிக்கக் கண்டத்திலிருந்து உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற நாடுகளில் ஒன்று ஐவரிகோஸ்ட் தர வரிசையில் 17ஆவது இடத்தில் உள்ளது. தகுதி காண் போட்டியில் தன்ஸானியா, மொரோக்கோ, சாம்பியா ஆகிய நாடுகளுடன் ஐவரிகோஸ்ட் விளை யாடியது. நான்கு போட்டிகளில் வெற்றிபெற்று இரண்டு போட்டிகளை சமப்படுத்தியது. ஐவரி கோஸ்ட் 15 கோல்கள் அடித்தது. எதிராக ஐந்து கோல்கள் அடிக்கப்பட்டன. 14 புள்ளிகளைப் பெற்றது. உலகக்கிண்ணப் போட்டியில் தகுதிபெற பிளேஓவ் போட்டியில் செனகலை சந்தித்தது. முதல் போட்டியில் 3-1 என்ற கோல் கணக்கில் ஐவரிகோஸ்ட் வெற்றிபெற்றது இரண்டாவது போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை யில் முடிவடைந்தது.

பிரான்ஸைச் சேர்ந்தே சப்ரி லெமோச்சி பயிற்சியாளராக உள்ளார். 42 வயதான இவர் பரான்ஸ், அணியிலும் இத்தாலி நாட்டு கழகத் துக்காகவும்  விளையாடியவர். டிடிர் ரொக்பா ஐவரிகோஸ்ட் அணியில் தலைவராவார். மான்சியர் கழகத்தின் மத்திய கள வீரரான யாயாதோரி ஐவரி கோஸ்ட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக உள்ளார். 20 வயதான செர்ஜி ஆகியோர் மீது ரசிகர்கள் நம்பக்கை வைத்துள்ளனர்.

ட்ரொக்பா,ஸுகோரா, கொலமன் கோலா ஆகியோர் பலம் வாய்ந்த வீரர்களாவர். சொலமன் கோலா ஐந்து கோல்கள் அடித்துள்ளனர்.2006ஆம் ஆண்டு முதல் முதல் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் விளையாடியது. ஐவரிகோஸ்ட்  , ஆர்ஜென்ரீனா, சேர்பியா ஆகியவற்றுடன் விளையாடியது. 2010 ஆம் ஆண்டு ஜீ பிரிவில் பிரேஸில், போலந்து கொரியா ஆகியவற்றுடன் விளையாடி வெளியேறியது.
1987 ஆம் ஆண்டு கனடாவில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட போட்டியில் மூன்றாது இடம்பிடித்தது.1992 ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் மூன்றாமிடம் பிடித்தது. பொகோ, பொபானாரிகி ஆகியோர் ஐவரிகோஸ்ட் அணியின் முன்னாள் வீரர்களாவர்.

யாயாதோரே (மன்சிஸ்ர்சிற்றி), கோலோ, தோரே  (லிவர்பூல்),சடிகடரொய்ரி (நியூகஸ்ரில்) அரோனா கோனே (எவரோன்) பொனி (சுவன்ஸீ) ஆகியோர் ஐரோப்பய கழகங்களில் வளையாடுகிறார்கள்.


ஜப்பான்

                                    ஜப்பான்
ஆசியாக்கண்டத்திலிருந்து தகுதி பெற்ற நாடு ஜப்பான். தரவரிசையில் ஒரு இடம் கீழிறங்கி 48 ஆவது இடத்தில் உள்ளது. மூன்றாவது தகுதிகாண்போட்டியில் வடகொரியா உஸ்பெகிஸ்தான்,தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் ஜப்பான் போட்டியிட்டது.மூன்று போட்டி களில் வெற்றிபெற்று ஒரு போட்டியை சம்ப் படுத்தி இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்தது. ஜப்பான் 14 கோல்கள் அடித்தது எதிராக மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன.10 புள்ளிக ளுடன் முதலிடம் பெற்றது.
தகுதிகாண் இறுதிச்சுற்றில் ஓமான் ஜோர் தான், அவுஸ்திரேலியா, ஈராக் ஆகியவற்றுடன்  மோதியது ஜப்பான். ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டுபோட்டிகளை சமப்படுத்தி ஒரு போட்டியில் தோல்வியடைந்தது.
ஜப்பான் 16  கோல்கள் அடித்தது. எதிராக ஐந்து கோல்கள அடிக்கப்பட்டன.17 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து உலகக்கிண்ணப் போட்டி யில் விளையாடத் தகுதி பெற்றது ஜப்பான்.

தகுதி காண் போட்டிகளில் ஜப்பான் 30 கோல்கள் அடித்தது. ஜப்பானுக்கு எதிராக எட்டு கோல்கள் மட்டுமே அடிக்கப்பட்டன. எட்டு மஞ்சள் அட்டைகள் காண்பக்கப்பட்டது. 11 போட்டிகளில் விளையாடிய னிஜி கொஸாதி எட்டு கோல்கள் அத்தார். னிஜி  கஹவா, ரியோஸி மேடா ஆகியோர் தலா நான்கு கோல் கள் அடித்தனர்.
ஜோர்தானுக்கு எதிரான போட்டியில் 6-0 கோல்களாலும், ஓமானுக்கு எதிரான போட்டி யில் 3-0 கோல்களாலும் ஜப்பான் வெற்றி பெற்றது. இத்தாலியரான அர்பேரோ ஸாச்சி ரோனி பயிற்சியாளராக உள்ளார்.60 வயதான இவர் 30வருட பயிற்சியாளர் அனுபவம் உடையவர். இவருடைய பயிற்சியிலேயே ஜப்பான் முதல்முதலாக ஆசியக்கிண்ண சம்பியனானது. இன்ரமிலான்,லசிகோ ஆகிய இத்தாலி கழகங்ககளின் முன்னாள்  பயிற்சியாளராவார். கரோ ஹசப அணியின் தலைவராக உள்ளார். 70 சர்வதேச போட்டிகளில்  விளையாடிய அனுபவம் உள்ள இவர் எஃப் சி நெதம்பேக் கழகத்தின் வீரராவார்.

ஜப்பானின் நட்சத்திரமாக னிஜி  கஹவா உள்ளார். 52 போட்டிகளில் விளையாடிய இவர் 16 கோல்கள் அடித்துள்ளார். மாயா யயாஸிடா (சவுத் ஹம்போன்)னிஜி  கஹவா, (மான்சிஸ்டர் யுடைனடட் ) கெஸிகி யஹாண்டா, நகாடா, நகமுரா ஆகியோரும் பலம் மிக்கவர்களாவர்.
 கஸியோஸிமியுரா, சுனுஸ்கிறுகமுரா, யஸடஸ்ரோனி நகாரா ஆகியோர் ஜப்பான் அணியின் முன்னாள் வீரர்களாவர்.
1998 ஆம் ஆண்டு முதல்முதல் உலகக் கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதி பெற்ற ஜப்பான் தொடர்ச்சியாக ஐந்தாவது முறை  விளையாடுவதற்கு பெற்றுள்ளது. 2010 ஆம் ஆண்டு தென்னாபிரிக்க உலகக்கிண்ணப் போட்டியில்  ஈ பிரிவில் ஜப்பான் நெதர்லாந்து, டென்மார்க், கமரூன் ஆகியன விளையாடின. இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியில் தோல்வியடைந்த ஜப்பான் கால் இறுதிக்குத் தெரிவானது. அடுத்த சுற்றில் பரகுவேயை எதிர்த்து விளையாடிய  ஜப்பான் 5-3 கோல் கணக்கில் தோல்வியடைந்து வெளி யேறியது.
இந்தப் பிரிவிலிருந்து கிரிஸ்  முதல் நாடாக அடுத்த சுற்றுக்குத் தெரிவாகலாம். இரண்டாவது நாடாக ஐவரிகோஸ்ட்  அல்லது ஜப்பான் அடுத்த சுற்றுக்குத் செல்லும் என்ற எதிர்ப்பார்பு உள்ளது.

  ரமணி 
  சுடர் ஒளி 26/01/14

Wednesday, January 29, 2014

இளையோர் இசை நாடகம்

தமிழ்மொழியின் சொத்துகளில் இயல், இசை, நாடகம் என்ற முத்தமிழும்  அடக்கம். இதில் இசை நாடகம் என்பது சற்று வித்தியாசமானது. இசை நாடகத்தில் பாடத் தெரிந்தவர்களால் மட்டுமே வெற்றி பெறமுடியும். இசை அறிவு உள்ளவர்களினால்தான் இசை நாடகப் பிரதி களை எழுத முடியும். நாடக விழாக்கள், நாடகப்போட்டிகள்  என்பன வருடாந்தம் நடைபெற்ற காலம் இருந்தது. நாடகத்தில் அறிமுகமானது நவீன ஒளி, ஒலி அமைப்புகளுடனும் சில நாடகங்கள் மனதில் இடம் பிடித்தன. மேடை நாடகங்கள் பல மாற்றங் களைக் கண்டாலும், இசை நாடகம் தன்னிலை இழக்காமல் தனித்து நின்றது.

சம்பூரண ராமாயணம், சத்தியவான் சாவித்திரி, அல்லி அர்ஜுனா,  பவளக் கொடி ஆகிய இசை நாடகங்கள் முதியோரையும் இளையோரையும் கவர்ந்தன. நாடகமும் அரங்கியலும் பல்கலைக் கழகத்தில் ஒரு பாடமாக அங்கீகரிக்கப்பட்ட பின் நாடகத்தின் அங்கீகாரமும் மதிப்பும் உயர்ந்தன. இளையோரை ஊக்கப்படுத்துவதற்காக கலாநிதி த.கலாமணியின் ஐந்து இசை நாடகப்பரதிகளை ஜீவநதி நூலாக  வெளியிட்டுள்ளது. கலாமணியின் மணிவிழாவை முன்னிட்டு  வெளியிட்டப்பட்ட ஐந்து  நூல்களின் இளையோர் இசை நாடகம் என்ற நூலும் ஒன்று.

மார்க்கண்டேயர், காத்தவன் கருணை, ஆத்மலிங்கம், பக்தபிரகலாதா, கண்ணப்ப நாயனார் ஆகிய இதிகாசக் கதைகளை இளையோர்  விரும்பப்பாடி நடிக்கும் படியாக எழுதியுள்ளார் த. கலாமணி மார்க்கண்டேயர், புத்திர பாக்கியம் இல்லாத மிருகண்டு முனிவருக்கும், மனைவிக் கும் இறைவனின் வரத்தால் பிறக்கிறார் மார்க்கண்டேயர். அவருக்கு 16 வயது மட்டுமே ஆயுள் என்பதால் 16 வயதடைந்ததும் பெற்றோர் கலங்குகின்றனர். பெற்றோரின் கவலையை அறிந்த சிவபக்தனான மார்க்கண்டேயர் இறைவனின் அருளால் என்றும் 16 என்ற வரத்துடன் வாழ்கிறார். 35 காட்சிகள் கொண்டது இந்நாடகப் பிரதி.
காத்தவன் கருணை, பாம்புக்குப் பகைகருடன் என்பர். ஆயினும், ஆதி சேஷனும், கருடனும், விஷ்ணு மூர்த்தியின் தொண்டவர்களாக இருப்பது ஆச்சரியத்துக்குரியது. ஆதியில் சகோதரர்களான நாகர்களும் கருடனும் எவ்வாறு நேசம்  பூண்டார்கள் என்பதை விளக்குகிறது இந்த  இசை நாடகம்.
இராவணன் தனது தாய் மாயா தேவிக்காக சிவனிடமிருந்து பெற்றுவந்த சிவலிங்கத்தை விநாயகர் கோகர்ணத் தில் நிலை நிறுத்திய கதையையே ஆத்மலிங்கம் என்ற இசை நாடகமாகத் தந்துள்ளார் ஆசிரியர். சிறுவன் விநாயகரின்  பாடல்களும்  வசனங் களும் சுவையாக உள்ளன.

பெரிய புராணத்தில் உள்ள 63 நாயன்மார்களில் ஒருவரான கண்ணப்ப நாயனாரின் கதையையும்  . இரணியனின் கொடுமைகளையும் பிரகலாதனின் பக்தியையும்  மனதில் நிற்கும்படியாக இசை வடிவில் தந்துள்ளார்.
கலாநிதி த. கலாமணியின்  தந்தையார் ச. தம்பிஐயா புகழ்பெற்ற அண்ணாவியார். அவர் வழிவந்த கலாமணி தானும் சிறந்த அண்ணா வியார்தான் என்பதை இலங்கையிலும், அவுஸ்ரேலியாவிலும் நிரூபித்துள்ளார். இளையோரிடத்தில் இசை நாடகத்தை அறிமுகப்படுத்தி பல மேடைகளில் அவர்களை ஜொலிக்கச் செய்தார். கலாமணியின் பிள்ளைகளான பரணிதரன், முரளீதரன், மதனா ஹரன் ஆகிய மூவரும் இசை நாடகங்களில் நடித்துள்ளார்கள். த. கலாநிதி யின் ஊரைச் சேர்ந்த வெ.துஷ்யந்தன், வி.குமரன், வி.செந் தூரன், வி.துவாகரன், க.ஜெயதர்சன், செ.அச்சுதன். வெ.நிருத்திகா, சி.விமலன், வெ.சிந்துஜன், செ.சுரேந்திரா, செ.சுபேந்திரா, க.பாக்கியநேசன், இ.இராகேஸ், ப.பரேந்திரா, சி.நிமலன், சி.நவராஜ், ப.நிலானி, ப.நிஷானி, வி.கிருபரன், க.தம்பேஸ், வி.கவிச் செல்வன், சு.கயித்தா, செ.தனேந்திரா, இ.இராஜேந்திரலிங்கம், மு.செந்தூரன், க.குருபரன், வீ.திவ்விய நாதன், சரசாங்கி, இரத்தினாங்கி, து.இராஜவேல், ர.ரதன், து.நிலோஜன் ஆகியோர் நடித்துள்ளனர்.
நாடகமும் அரங்கியலும் பல்கலைக் கழகங்களில் பாடமாகத் தொடர்ந்து போதிக் கப்படுகிறது.
பாரம்பரிய நாடக வடிவங்களில் ஒன்றான இசை நாடகமும், ஏற்றுக் கொள்ளப்பட்டு அதன் பயில்நெறியை ஊக்குவிக்கும் முகமாக  தமிழ்த்தினப் போட்டிகளில் இசை நாடகப்போட்டிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஆனாலும், வழமையான ஒரு சில இசை நாடகங்கள் மாத்திரமே போட்டிக்கான ஆற்றுகை செய்யப்படலாம் என்ற வரையறை காணப்படுகின்றது. இந்நிலையில், குறிப்பட்ட சில இசை நாடகங்கள் மாத்திரமே பலரதும் கவனத்தைப் பெறுகின்றன.
இவ்வாறான இசை நாடகங்களில் காணப்படும் கதை அம்சங்களை ஒத்த சிறப்பான கதைக்கூறுகள் புராண இதிகாசங்களில் அதிகமாக காணப்படுகின்றன. 
ஆனால், அக்கதை அம்சங்களைக் கொண்டு ஆக்கப்பட்டுள்ள நாடகப் பிரதிகள் சொற்பமானவையே. எமக்கு நடிப்பதற்குப் போதிய அளவில் நாடகப் பிரதிகள் இல்லை என்று கலாநிதி குழந்தை ம. சண்முகலிங்கம்  ஆதங்கப்படுவது இவ்விடத்தில் ஞாபகத்துக்கு வருகிறது என  தன்னுரையில்  நூலாசிரி யர் கலாநிதி  த.கலாமணி கவலைப்படுகிறார்.

 ஊர்மிளா
 சுடர் ஒளி 26/01/14

Tuesday, January 28, 2014

கசந்த காதல்

இந்திய மனித மேம்பாட்டுத்துறை அமைச்சர் சசிதரூரின் காதல் மனைவி சுனந்தா புஷ்கர், கடந்த 17ஆம் திகதி வெள்ளிக்கிழமை அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையிலிருந்து பிணமாக மீட்கப்பட்டார். மெஹார் என்ற பாகிஸ்தானின் பெண் பத்திரிகையாளரால் இந்தக் காதல் ஜோடிக்கிடையே மனக்கசப்பு ஏற்பட்ட நிலையில்,  சுனந்தா புஷ்கர் மரணமானமை சலசலப்பை உண்டாக்கியது.
சுனந்தா புஷ்கரின் மரணத்துக்கான காரணம் உடனடியாக அறிவிக்கப்படவில்லை. இயற்கைக்கு மாறான மரணம். உடலிலே  காயங்கள் இருந்தன. அந்தக் காயங்களும் மரணத்துக்குக் காரணமாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்டது. லூபுஸ் என்ற நோயால் சுனந்தா பாதிக்கப்பட்டிருந்தார். ஆளை மெல்லக்  கொல்லும் அந்த நோய் காரணமாக அவர் இறந்திருக்கலாம். லூபுஸ் நோயால் பீடிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்துவிடும். எலும்புகள் இணையுமிடத்தில் வீக்கம் ஏற்படும். இந் நோயின் தாக்கமே அவரின் உயிரைப் பறித்தது என்ற ஊகம் வெளியானது.

குடும்பச்சண்டையை டுவிட்டரில் பகிரங்கமாக்கினார் சுனந்தா..சுனந்தாவின்  பகிரங்க அறிக்கையை சசிதரூர் விரும்பவில்லை. ஆகையால்,  மறு நாள் இருவரும் இணைந்து தங்களுக்குள் பிரச்சினை இல்லை என்று அறிக்கை வெளியிட்டார்கள். விமான நிலையம், விமானப் பயணம், ஹோட்டல் போன்ற பொது இடங் களில் தம்மையும் மறந்து குடும்பச் சண்டையை வெளிப்படுத்தினார்கள். சுனந்தாவின் மரணம்  கொலையா? தற்கொலையா? என்ற விவாதமானது.
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த சுனந்தா அதற்காக மாத்திரைகளைப் பாவித்து வந்தார். அளவுக்கதிகமான மன அழுத்த மாத்திரைகளை உட்கொண்டமையே மரணத்துக்குக் காரணம்  என அறிவிக்கப்பட்டுள்ளது. அளவுக்கதிகமான மாத்திரையை சுனந்தா பாவித்தாரா  அல்லது பாவிப்பதற்கு தூண்டப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.
சுனந்தா இறப்பதற்கு முன்னர் கேரளாவில்  முழு உடல்  பரிசோதனையைச் செய்துள்ளார். இது வழக்கமான பரிசோதனைதான். இதிலே இரகசியம் எதுவும் இல்லை என்று அந்த  வைத்தியசாலை அறிவித்துள்ளது. அதேவேளை,  மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது சொத்துகளை உயில் எழுதிவைத்துள்ளார். சுனந்தாவுக்கு 112 கோடி ரூபா பெறுமதியான சொத்து உள்ளது. சசிதருரிடம் 6.34 கோடி சொத்து உள்ளது.

சசிதரூர் , சுனந்தா இருவருக்குமே இது மூன்றாவது திருமணம். அரசியல்வாதியான பின்னர் சர்ச்சைகளில் சிக்கிய சசிதரூரின் திருமணமும் சர்ச்சைக்குள்ளானது. விமானப் பயணத்தின்போது மூன்றாம் வகுப்பு, கால்நடைகளின் வகுப்பு,  தேசிய கீதம் பாடும் போது  அமெரிக்கர்கள் போன்று கையை  நெஞ்சினிலே வைக்க வேண்டும் என்ற சசிதரூரின் கருத்துகள் பெரும் சர்ச்சையை  உருவாக்கின.
ஐ.பி.எல். கொச்சி அணியை வாங்கியதில் முறைகேடாக பணப்பரி மாற்றம் செய்யப்பட்டதால் சசிதரூர்  மீதும் அவரது மனைவி மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. காஷ்மீரைச் சேர்ந்த சுனந்தாவின் வீடு 1990ஆம் ஆண்டு தீவிரவாதிகளால்  தீக்கிரையாக்கப்பட்டபோது காஷ்மீரிலிருந்து வெளியேறினார். கனடா, துபாய் ஆகிய நாடுகளுக்குச் சென்று முதலீடு செய்து கொச்சியில் தங்கினார்.
வழக்கறிஞர், எழுத்தாளர், மனித உரிமை ஆர்வலர், பிரபல நிறுவனங்களின் ஆலோசகர் என பல பெருமைகளைப் பெற்றவர் சசிதரூர். ஐ.நாவின் துணைப் பொதுச் செயலாளராக (தொடர்பு  பொதுத் தகவல்) பணியாற்றியவர். 2007ஆம் ஆண்டு இந்தியாவின் சார்பில் ஐ.நா. பொதுச் செயலா ளர் பதவிக்குப் போட்டியிட்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தார். சசிதரூரை இழக்க விரும்பாத காங்கிரஸ்,   அவருக்குத்  தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கியது. தேர்தலில் வெற்றிபெற்ற சசிதரூக்கு வெளிவிவகார அமைச்சு வழங்கியது இந்திய மத்திய அரசு.  பிரச்சினைகள் காரணமாக அவரது அமைச்சுப்பதவி மாற்றப்பட்டது.
சுனந்தாவின் மரணம் தொடர்பான சகல விசாரணைக்கும் சசிதரூர் ஒத்துழைப்பு வழங்குகிறார். சுனந்தா சந்தேகப்பட்டது போல் தங்களுக்கிடையில் தப்பான உறவு இல்லை என பாகிஸ்தானில் உள்ள பெண் பத்திரிகையாளர் மெஹார் கூறியுள்ளார்.

வானதி 
சுடர் ஒளி 26/01/14

Monday, January 27, 2014

கருணாநிதியின் வலையில் சிக்குவரா விஜயகாந்த்

நாட்டையும்,  நாட்டு மக்களையும் போற்றிப் பாதுகாப்பதே அரசியல்வாதியின் தலையாய  பண்பு. தன்னலம் கருதாது பொதுமக்களின் தேவைகளை நிறைவுசெய்வதற்கு முன்னுரிமை கொடுப்பவரே அரசியல்வாதி. தனக்கும் தனது அரசியல் கட்சிக்கும் அதிகளவு  அள்ளிக் கொடுப்பவர்களுடன்தான் கூட்டணிப் பற்றிப் பேசுவேன் என்கின்றார்  ஓர் அரசியல் தலைவர். நாட்டையும்,  நாட்டு மக்களையும் பற்றி எவ்விதமான அக்கறையும் இல்லாமல் தனது  அரசியல் எதிரி வீழ்த்தப்படவேண்டும் என்கிறார்  இன்னொரு அரசியல்வாதி. நிறைய அனுபவமும், முதிர்ச்சியும் நிறைந்த தலைவர் ஒருவர்  நேற்று முளைத்த காளானுக்காக கதவைத் திறந்து வைத்தபடி  தூங்காமல் காத்தி ருக்கிறார்.  தன்னை உயரத்தில் இருத்தியவர்களைப்  பற்றிக் கவலைப்படாது வண்டியை இயக்கத் தொடங்கிவிட்டார் இன்னொருவர்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிப்பேரம்  முற்றுப்பெறாததனால் தனியாகக் களம் இறங்கிவிட்டார்  கருணாநிதி. வீறாப்புப் பேசும் கருணாநிதி ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி கூட்டணி  சேர்வார் என்றே எதிர்பார்க்கப்பட்டது. காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று  பலமுறை அடித்துக்கூறிய கருணாநிதியின் பார்வை விஜயகாந்தின் மீது விழுந்துள்ளது. எமது கூட்டணிக்கு விஜயகாந்த் வந்தால் சந்தோஷம் என வருந்தி அழைக்கிறார். பிடிகொடாது நழுவும் விஜயகாந்துக்கு மேலவைத் தேர்தலின் மூலம் செக் வைத்துள்ளார் கருணாநிதி.  
     
ஜெயலலிதாவின் புண்ணியத்தில் சட்ட மன்றத் தேர்தலில் பெருவெற்றி பெற்றதனால் நாடாளுமன்றத் தேர்தலிலும் தனது கட்சிக்கு அதிக தொகுதி வேண்டும் என்று விஜயகாந்த் எதிர்பார்க்கிறார். விஜயகாந்தின் கட்சியில் உள்ளவர்களுக்கு அரசியல் அனுபவம் இல்லை. சட்டமன்றத்திலேயே அவர்களது செயற்பாடு எதிர்பார்த்தளவு இல்லை. விஜயகாந்த் எதிர்க் கட்சித் தலைவர்போல்  செயற்படவில்லை. இந்நிலையில்,  இந்திய நாடாளுமன்றத்தில்  இவர்கள் எப்படிச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துடனும், பாரதீய ஜனதா கட்சியுடனும்   பேச்சு நடை பெறுகிறது. இதில் சம்பந்தப்பட்ட எவரும் வெளிப் படையாக உண்மையைக் கூறவில்லை. விஜயகாந்தின் பிடிவாதத்தால் மனமுடைந்த கருணாநிதி,  மேலவைத் தேர்தலில் திருச்சி சிவா  போட்டியிடுவார் என அறிவித்தார். இந்த  அறிவிப்பு விஜயகாந்துக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையா? சமிக்ஞையா? எனத் தெரியாது குழப்ப மாக உள்ளது.

கூட்டணிப்பற்றிய கேள்விகளுக்கு விஜயகாந்த் குழப்பமான பதிலையே  கொடுக்கிறார். விஜயகாந்துடன் கூட்டணிப்பற்றிப்  பேசவில்லை என்று கூறும் கருணாநிதி,  விஜயகாந்த் வந்தால் சந்தோஷம் என்கிறார். தமிழ்ச் சினிமாவின் நகைச்சுவைக் காட்சி போன்று அவர் வருவார், வரமாட்டார் என்ற தோரணையில் உள்ளது தமிழக அரசியல்.
தமிழக மேலவைத் தேர்தலில் வெற்றிபெற 34 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு தேவை. திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் 26 உறுப்பினர்கள்தான் உள்ளனர். கருணாநிதியின் நடவடிக்கையால் விஜயகாந்த்  தனது வேட்பாளரைக் களமிறக்கக்கூடும். விஜயகாந்தின் வேட்பாளருக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தால் அங்கேயும் 26 உறுப்பினர்கள்தான் உள்ளனர்.
பாட்டாளி மக்கள் கட்சிக்கு மூன்று உறுப்பினர்கள் உள்ளனர். இத்தேர்தலை பாட்டாளி மக்கள் கட்சி புறக்கணிக்கும்.  அவர்களை எவருமே கணக்கில் எடுக்கவில்லை. இந்தத் தேர்தலில் இரகசியமாக வாக்களிக்கலாம். ஆகையால் விஜயகாந்தின் கட்சியிலிருந்துதான் கருணாநிதி ஆதரவை  எதிர்பார்க்கிறார். விஜயகாந்தை விட்டுப்பிரிந்து ஜெயலலிதாவிடம் சரணடைந்தவர்கள் அல்லது விஜயகாந்தின் நடவடிக்கை   பிடிக்காத அவரது கட்சி உறுப்பனர்களின் மீது திராவிட முன்னேற்றக் கழகத்தின் பார்வை விழுந்துள்ளது.
இந்திய  நாடாளுமன்றத்தில் இலங்கை விவகாரம் விவாதத்துக்கு எடுக்கப்பட்டபோது தெளிவாகவும், ஆதாரத்துடனும் குரல் கொடுத்தவர் திருச்சி  சிவா. அவர் கனிமொழியின்   ஆதரவாளர். அவரை நியமித்தது ஸ்டாலினுக்குப் படிக்கவில்லை  என்ற தகவல் கசிந்தது. நாடாளுமன்ற விவகாரத்தில் அனுபவமும், சிறந்த பேச்சாளருமான  திருச்சி சிவாவின் தெரிவு சரியானதுதான். ஆனால், தான் எப்படி வெல்லப் போகிறேன் என்று அவருக்குகே தெரியவில்லை.

மேலவைத் தேர்தலில் போட்டியிட நான்கு வேட்பாளரின் பெயரை ஜெயலலிதா அறிவித்துள்ளார். தூத்துக்குடி நெல்லை மாவட்டங் களிலிருந்தே  நான்கு வேட்பாளர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். நெல்லை மேயர் விஜிலா சாந்தி, தூத்துக்குடி மேயர்  சசிகலா புஷ்பராஜா, முத்துக்கருப்பன், என்.சின்னதுரை ஆகியோர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் மாக்ஸிஸ்ட்டுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். 
இந்திய நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய அறிவிப்பு  இன்னமும் வெளிவராத நிலையில்,  கூட்டணி சேர்வதற்குத்   தலைவர்கள் ஆலாப் பறக்கிறார்கள். கருத்துக்கணிப்புகள் அவர்களின் ஆசையில் மண்ணைப்போடுகின்றன. ஐ.பி.என்.  நடத்திய கருத்துக் கணிப்பில்  அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், காங்கிரஸ் ஆகியன முதல் மூன்று இடங்களில் உள்ளன. பரவலாக வீசும் மோடி அலை தமிழகத்தில் இல்லை என்று  ஐ.பி.என். கணிப்பு தெரிவிக் கின்றது.

கூட்டணிக் கட்சிகளிடமிருந்து அதிக தொகுதிளை எதிர்பார்க்கும் விஜயகாந்தின் கட்சிக்கு செல்வாக்கு இல்லை என்று கருத்துக்கணிப்பு கூறுகிறது. விஜயகாந்துக்கு  எட்டு சதவீதம் முதல் பத்து சதவீத வாக்கு இருப்பதாகவே கருதப்பட்டது. ஐ.பி.என்னின் கருத்துக்கணிப்பு விஜயகாந்துக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள அதேவேளை,  ஏனைய கட்சிகளுக்குத் தெம்பை அளித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலை  தனியாக சந்திக்கப்போவதாக ஜெயலலிதா அறிவித்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 15 முதல் 23 தொகுதிகளிலும், திராவிட முன் னேற்றக்கழகம்7 முதல் 13 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒன்று முதல் ஐந்து தொகுதிகளிலும் வெற்றிபெறும் என ஐ.பி.என்னின் கருத்துக் கணிப்பு கூறுகிறது. ஏனையவர்கள் நான்கு முதல் 10 தொகுதிகளிலும் வெற்றிபெறுவார்கள். மோடி,   விஜயகாந்த், வைகோ, ராமதாஸ் ஆகியோர் ஏனையவர்களுக்குள் அடங்குகிறார்கள். அவர்களின் கட்சி வெற்றிபெறும் என கருத்துக் கணிப்பு தெரிவிக்கவில்லை.
 நாடாளுமன்றத்தில் கூட்டணி சேரும்போது இன்றைய கருத்துக்கணிப்புகள் அனைத்தும் தவிடுபொடியாகிவிடும். மேலவைத் தேர்தலின் வேட்புமனு தாக்கல் செய்யும் இறுதிநாள் 30ஆம் திகதியன்று எல்லா உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்துவிடும்.

 வர்மா
சுடர் ஒளி 26/01/14

Saturday, January 25, 2014

இன்னும் உயிரோடு

சாய்ந்தமருது பிரதேச கலாசார உத்தியோகத்தர் எம்..எம். அஷ்ரப் எழுதிய கவிதைகளைச் சுமந்து வெளிவந்துள்ளது "இன்னும் உயிரோடு".

தினகரன்,வீரகேசரி,தினமுரசு,தினக்குரல்,சிந்தாமணி,ஜனனி,மெட்ரோ நியூஸ்,பூமி,தாகம்,கலை அமுதம்,நவமணி ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் பிரசுரமான் 38 கவிதைகள் இதிலே உள்ளன.

அன்பு,மனிதம்,இயற்கை,இழப்பு,கல்வி,சோகம்,யுத்தம்,வெள்ளம்,காதல் ஆகியவற்றைத்தனது கவிதைகளின் மூலம் வெளிப்படுத்துகிறார்.

"ஏழு நிறங்கள்
வான விற்களுக்கு
மாத்திரம் தானா உண்டு
பச்சோந்திகளும்
காட்டிடுமே
அந்த
நிறங்களை எல்லாம்"

பச்சோந்திகளின் நிறமாற்றத்தை "பச்சோந்தி" என்றகவிதையில் அழகாகப்படம் பிடித்துக்காட்டியுள்ளார்.

"சோவெனப்பய்தமழை
சோர்ந்திடாமல் பெய்ததால்
நிரம்பி வழிந்தது
கங்கை குளங்கள்
கடலுடன் சங்கமிக்க
மறுத்துப் போராடி
தகர்த்தது
தங்குதடைகளை
சீறிப் பாய்ந்தது ஊருக்குள்
என ஆரம்பித்து
இந்த இடத்தில்
இனம் மொழி
சாதி சமயமெல்லாம்
மறந்து போனது மனிதம்
ஆம், இத்தோடு
பிழைத்துக்கொண்டது
மனித நேயம்
இன்னும் வாழ்கிறது" என முடித்திருக்கிறார்.

"பிழைத்துக்கொண்டது மனிதநேயம்" என்ற கவிதையின் மூலம் மனிதநேயம் வாழ்கிறது என  வெளிப்படுத்திகிறார்.

அடை மழை பெய்து ஆறு போல வெள்ளம் பாய்ந்தோடியபின் எப்படி இருக்கும் என கற்பனை செய்தால் அழிவுதான் எம் கண்முன்னே வரும்.  "வெள்ளத்தின் எச்சங்கள்" என்ற கவிதையின் மூலம் கவிஞர் எம்மை எச்சரிக்கிறார்.

"நீச்சலடித்த குடம்பிகள்
இயற்கைபெற்று
உணவுக்காய்
எமைத்துரத்த
தலைதெறிக்க ஓடினாலும்
விடேன் என்று விரட்டும்
மலிந்து விட்ட தொற்று
நோய்த்தாக்கங்கள்
சூழலை சின்னா பின்ன மாக்கும்
வெள்ளத்தின் எச்சங்கள்"

என வெள்ளத்தின் பின்னரான உண்மையை ஆவணப்படுத்தி உள்ளார்.

"விரல் மடித்து
எண்ணப்பட்டு
கொண்டிருக்கும்
சுயநலம் மிகுந்த
துயரத்திகதிகள்
விடியலில்
வெறுமையைமாத்திரம்
விதைத்துச்  சென்றது
சலனமற்ற வாழ்வால்
தினமும்
தலயணை
நனைந்து போகும்"

"வெறுமையான பொழுதுகள்" என்ற கவிதையின் மூலம் மனதை உருக்குகிறார்.

"கருவறை சுமந்த
காலங்கள் சுகமானது
பற்றி எரியும் குரோதங்கள்
பண்பற்றா சகவாசங்கள்
பார்த்திடாத
தனிமைப்பொழுதுகள்"

"குருதிப்பன்னீரால்
நாடு
கழுவப்பட்டபோது
கரு மேகத்தை
மறந்துபோனது வானம்"

"விலை மதிப்பற்ற மனிதம்
வேண்டாத சுமை என்று
விபத்துப் பலிபீடம்
எங்கும் வியாபித்திட
மனுச்செய்து
வெற்றி கொண்டது
யுத்தத்தின் அழிவை"

"நிம்மதி தேடிய மனிதம்" என்ற தலைப்பிலே யுத்தத்தின் வடுவை ஆழமாகப் பதிந்துள்ளார் அஷ்ரப்.

"யுத்த மீதங்கள்" என்ற தலைப்பிலான கவிதையில்

"ஏர் உழுத இடங்களெல்லாம்
எரிந்த தழும்பாய் மறியது
போர் மேகங்கள் பூமியைச் சூழ்ந்து
புழுதி யானது பொன்னான வயல்கள்"

என யுத்தத்தின் கோர முகத்தை வெறிப்படுத்துகிறார்.
கவிதை,சிறுகதை,கட்டுரை ஆகியவற்றின் மூலம் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார்.

சூரன்

சுடர் ஒளி 19/01/14

சீ பிரிவின் சிறந்த வீரர்கள்

ரடமெல் பல்கோ
கொலம்பியா, ஐவரிகோஸ்ட், ஜப்பான், கிரீஸ் ஆகியன உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் சீ பிரிவில் உள்ளன. இந்த நான்கு நாடுகளும் ஏனைய நாடுகளை விட சற்று பலம் குறைந்த நாடுகளாக உள்ளன. கொலம்பியாவிலிருந்து ஆறு வீரர்களையும், ஐவரிகோஸ்ட்டிலிருந்து மூன்று வீரர்களையும், ஜப்பான், கிரீஸ் ஆகியவற்றிலிருந்து தலா ஒரு வீரரையும் கொண்ட அணி உருவாக்கப் பட்டுள்ளது. 

கிரீஸ், கொலம்பியா, ஐவரிகோஸ்ட் ஆகியன இறுதி நேரம் வரை காத்திருந்து தகுதி பெற்றன. ஜப்பான் உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடத்தகுதி பெற்றது என்றாலும் ஐரோப்பிய,வட அமெரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளுடன் ஒப்படும் போது பலம் குறைந்த நாடாக உள்ளது.

கொலம்பியாவின் வீரரான டேவிட் எஸ்பனா கோல் கீப்பராகத் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பின்கள வீரர்களாகசொக்ரரிஸ் பபசதொபொலுஸ்[கிரீஸ்],கொலோ தோர்[ஐவரிகோஸ்ட்]கிரிஸ்ரியன் சபாடா[கொலம்பியா]   ஆகியோரும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மத்திய கள வீரர்களாக யாயாரொரி(ஜப்பான்), பிரடி குரின்(கொலம்பியா), சைடோ டொம்பியா(ஐவரிகோஸ்ட்) ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்கள வீரர்களாக ரடமெல் பல்கோ (கொலம்பியா), ஜக்ஸன் மரினஸ்(கொலம்பியா), சைடன் டும்பியா(ஐவரிகோஸ்ட்) ஆகியோர் தெரி வாகியுள்ளனர். மேலதிக வீரர்களாக இஜி சுவஸ் ஹிமா,அஸ்சுரோ இடா, லுயிஸ் முரில் ஆகிய ஜப்பான் வீரர்களும், ஜுனு ஸுனிதா என்ற கொலம்பிய வீரரும் தெரிவாகியுள்ளனர். 

கோல்கீப்பர், இரண்டு பின்கள வீரர்கள் கொலம்பிய வீரர்களாக இருப்பதனால் எதிரணி கோல் அடிக்கும் சாத்தியக்கூறு குறைவு. ஒரு மத்தியகள  வீரரும் இரண்டு முன்கள வீரர்களும் கொலம்பியாவைச்  சார்ந்ததனால் கொலம்பியாவின் பலம் அதிகரித்துள்ளது.
கிரீஸ் நாட்டின் பின்கள வீரர் பபிஸ்ரசோ பொலு சோவைத் தாண்டிச் செல்வது சிரமமானது. அதே போன்றுதான் கோலோ ரெஸி, சபாடாவும் கடுமையாகப் போராடுவார்கள்.

மஸின்ராஸ், டும்பியா ஆகிய இருவரும் தகுதி காண் போட்டியில் தலா எட்டு கோல்களை அடித்து அசத்தியுள்ளனர். கொலம்பியா, ஐவரிகோஸ்ட், கிரீஸ், ஜப்பான் ஆகிய நாடுகள் பலமுறை மோதியிருக்கின்றன. ஆனால் உலகக் கிண்ண உதைபந்தாட்டப் போட்டியில் இந்த நான்கு நாடுகளும் இப்பொழுதுதான் முதன்முதலில் சந்திக்கவுள்ளன.

கொலம்பியா, கிரீஸ் ஆகியவற்றுக்கிடையேயான போட்டியில் கிரீஸ் வெற்றிபெற்றது. ஜப்பானை இரண்டு முறை சந்தித்த ஐவரிகோஸ்ட் இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெற்றது. ஜப்பானிடம் கொலம்பியா தோல்வியடையவில்லை. கொன்பரடேசன் கிண்ணப் போட்டியில் கிரீஸைச் சந்தித்த கொலம்பியா வெற்றியடைந்தது.
 ரமணி 
சுடர் ஒளி 19/01/14

Friday, January 24, 2014

ஜீவநதி ஜனவரி

ஜீவநதி  கலை இலக்கிய மாத சஞ்சிகை யின் ஜனவரி மாத இதழ் கிடைத்துள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆர்ட் அன்ட் டிசைன் பயிலும் தேவராஜா பவி ராஜின் ஓவியம் அட்டைப்படத்தை அலங்கரிக்கிறது. பொங்கலைக் குறிக்கும் வித்தியாசமான! புதுமையான ஓவியம். ஓவியங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஜீவநதியின் பணி பாரட்டுக்குரியது.

ஆசிரியரின் புதுவருட சங்கற்பம் காலத்தின் தேவையானது. அதிகமான நிகழ்ச்சிகள் குறிப்பட்ட நேரத்தில் ஆரம்பமாவதில்லை. அதிதிகள், பிரதிநிதிகள் வந்தாலும் மக்கள் வருவதில்லை. பார்வையாளர்கள் வந்தால் சிலவேளை பிரதம விருந்தினர்கள் சரியான நேரத்துக்கு வருவதில்லை. நேரத்துக்கு முக்கியத்துமளித்து உரிய காலவரையறைக்குள் நிகழ்வுகளை நடத்தி முடிப்போம் என்ற ஆசிரிய தலையங்கத்தின் உறுதிமொழியை அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை என்ற கட்டுரையை பேராசிரியை கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ் எழுதியுள்ளார். கவிதை எழுதுபவர்களும், கவிதையைப் பற்றி அறிய விரும்புபவர்களும் கண்டிப்பாகப் படிக்கவேண்டிய கட்டுரை.
கம்பன், பாரதி, கா. சிவத்தம்பி, க.கைலாசபதி ஆகியோரின் பார்வையில் கவிதை பற்றிய விளக்கங்களைத் தந்துள்ளார். இக் கட்டுரை அடுத்த மாதமும் தொடரும். தமிழ் திரைப் பாடலாசிரியர்கள் வரிசையில் கவியரசு கண்ணதாசன் பற்றி மா.செல்வதாஸும், இலங்கையில் உருவகக் கதைத்துறையில் படைப்பாளி முத்துமீரானின் பங்களிப்புப் பற்றிப் பேராசிரியர் ஹ.மு.நந்தர் சா ஆகியோரும் எழுதியுள்ளனர்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஐரோப்பிய  திரைப்பட விழா  2013 பற்றிய விளக்கமான கட்டுரையை அ.யோகராசா எழுதியுள்ளார். முருகபூபதியின் சொல்லவேண்டிய கதைகள் சுவையாக உள்ளது. ஆர்வத்துடன் சேகரித்த புத்தகங்களையும், அன்பளிப்பாகக் கிடைத்த புத்தகங்களையும் என்ன செய்வதென்று தெரியாது  பலர் திக்குமுக்காடுகின்றனர். ஒருசிலர் புத்தகங்களை உதாசீனம் செய்கின்றனர்.
சார்ல்ஸ் பு கோவ்ஸ்கி எனும் கவிஞரைப் பற்றி கெக்கிறாவ ஸீலைஹா சிறு குறிப்புக் கொடுத்துள்ளார். விவாத மேடையில் கி.நடராஜாவின் கருத்துகள் தெளிவாக உள்ளன.

முருகேசு ரவீந்திரன், இ.சு.முரளிதரன், மூதூர் மொகமட் ராபி, ச.முருகாந்தன் ஆகியோரின் கதைகளும், த.அஜந்தகுமார் கவிஞர் ஏ.இக்பால், கு.றஜீபன், வல்வை ச.கமலகாந்தன், வேரகேணியன், ஆனந்தி  செல்லக்குட்டி கணேசன், வனஜா நடராஜா,  பாலமுனை பாறூக், இப்னு அ ஸுமத், க.முரளிதரன், எஸ்.முத்து மீரான் ஆகியோரின் கவிதைகளும் இம்மாத ஜீவநதியை அலங்கரிக்கின்றன.

ஊர்மிளா
சுடர் ஒளி 19/01/14

Thursday, January 23, 2014

பிறேஸில் 1950

உருகுவே
நான்காவது உலகக்கிண்ண உதைப் பந்தாட்டப் போட்டி பிறேஸிலில் 1950 ஆம் ஆண்டு நடைபெற்றது. இரண்டாவது உலக மகாயுத்தத்தின் பின்னர் நடை பெற்ற முதலாவது உலகக்கிண்ணப் போட்டி என்பதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஜேர்மனியும், ஜப்பானும் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத்தடை செய்யப்பட்டது.
உலகக்கிண்ண உதைப்பந்தாட்டப்போட்டியில் விளையாடுவதற்கு இந்தியா தகுதி பெற்றது. வெறுங்காலுடன் வீரர்கள் விளையாடியதால் உலகக் கிண்ணப்போட்டியில்  விளையாட அனுமதிக்கப்படவில்லை. 1934 ஆம் ஆண்டு விளையாடிய பிரான்ஸ், ஜேர்மனி,  ஹங்கேரி ஆகியவை தகுதி பெறவில்லை. பொலிவியா முதன் முதலாக உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது.
ஐரோப்பாக் கண்டத்தில் இருந்து இங்கிலாந்து, ஸ்பெய்ன், சுவிட்ஸ்ர்லாந்து, இத்தாலி, சுவீடன், யூகஸ்லோவியா, தென் அமெரிக்காவிலிருந்து, பொலிவியா,  சிலி,உருகுவே,பிறேஸில், பரகுவே, வட அமெரிக்காவிலிருந்து மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 13 நாடுகள் உலகக்கிண்ண உதை பந்தாட்டப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றன.

22 போட்டிகள் நடைபெற்றன 88 கோல்கள் அடிக்கப்பட்டன. பிறேஸில் அதிகபட்சமாக 22 கோல்கள் அடித்தது. 1045246 இரசிகர்கள் போட்டி களைப் பார்வையிட்டனர். பிறேஸில், உருகுவே ஆகியவை இறுதிப்போட்டியில் விளையாடின. உருகுவே இரண்டாவது முறை சம்பியனானது. சுவீடன் மூன்றாம் இடத்தையும், ஸ்பெய்ன் நான்காம் இடத்தையும்  பிடித்தன. தகுதி காண்போட்டியில் 34 நாடுகள் விளையாடின.

தகுதி பெற்ற 13 நாடுகளும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டன. குழு 1 இல் பிரேஸில், யூகஸ்லோவியா, சுவீடன்,மெக்ஸிகோ, குழு 2 இல் ஸ்பெய்ன், இங்கிலாந்து,சிலி, அமெரிக்கா, குழு 3இல் சுவீடன், இத்தாலி, பரகுவே, குழு 4 இல் உருகுவே, மெக்ஸிகோ ஆகியவை இடம் பெற்றன. நான்கு குழுக்களிலும் வெற்றி பெற்று முதலிடத்தைப் படித்த நான்கு நாடுகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகின.
 பொலிவியாவுக்கு எதிரான போட்டியில் 8!0 கோல்களினால் உருகுவே வெற்றி பெற்றது. சுவீடனுக்கு எதிரான போட்டியில் 7-1 என்ற கோல் கணக்கிலும் ஸ்பெய்னுக்கு எதிரான போட்டியில் 6-1 கோல் கணக்கிலும் பிறேஸில் வெற்றிபெற்றது.
பிறேஸில் வீரர் அட்மிர் அதிகபட்சமாக 8 கோல்கள் அடித்து கோல்டன் சூ´ விருதைப்  பெற்றார்.

 போட்டி நடைபெறும் இடம் தூரமாக இருந்ததனால் அடுத்தபோட்டியில் சென்று விளையாடுவதற்கு பிரான்ஸ் மறுத்து விட்டது. 1949 ஆம் ஆண்டு விமான விபத்தில் எட்டு இத்தாலி வீரர்கள் மரணமடைந்ததனால் அந்நாட்டுக்கு பின்னடைவு ஏற்பட்டது. பிறேஸிலுக்கு எதிரான போட்டியில் யூகஸ்லோவிய வீரர் ரிஜ்கோமிரிக்கின் தலையில் இரும்பு கேட் ஒன்று விழுந்து காயமடைந்ததால் 10 பேருடன் யூகஸ் லோவியா விளையாடியது.

 சுடர் ஒளி 
19/01/14

Wednesday, January 22, 2014

உலகக்கிண்ணம் 2014

கிரீஸ்
பிரேஸிலில் நடை பெற உள்ள உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டியில் பிரிவு சியில் கிரீஸ், கொலம்பியா, ஜவரிகோஸ்ட், ஜப்பான் ஆகிய நாடுகள் உள்ளன. இந்தப்பிரிவில் உள்ள நான்கு நாடுகளும் சமபலத்தில் உள்ளன. இந்த நான்கு நாடுகளின் பலம், பலவீனம் பற்றி ஒரு பகிர்வு.
                        கிரீஸ்
ஐரோப்பா கண்டத்திலிருந்து உலகக்கிண்ணப் போட்டிக்குத் தெரிவான கிரீஸ் தரவரிசையில் 12ஆவது இடத்தில் உள்ளது. கடைசி நேரம் வரை காத்திருந்து பிளே ஓவ் மூலம் தகுதிபெற்றது கிரீஸ். தகுதி காண் போட்டியில் குழு ஜியில் பொஸ்னியா,கிரீஸ், ஸ்லோவாகியா, லிதுவேனியா, லட்வியா,லிக்சென்ரின் ஆகிய நாடுகள் போட்டியிட்டன. 

10 போட்டிகளில் விளையாடிய கிரீஸ் எட்டு போட்டிகளில் வெற்றி பெற்று ஒரு போட்டியை சமப்படுத்தியது. ஒரு போட்டியில் தோல்வியடைந்தது. பொஸ்னியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் கோல் அடிக்காது சம நிலையில் முடிந்தது. இரண்டவதுபோட்டியில் 3-1 கோல் கணக்கில் கிரீஸ் தோல்வியடைந்தது.

பொஸ்னியா, கிரீஸ் ஆகிய இரு நாடுகளும்  தலா 25புள்ளிகள் பெற்றன. அதிக கோல்கள் அடித்த பொஸ்னியா முதலிடத்தைப் பிடித்து உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடத் தகுதிபெற்றது. பொஸ்னியா 30கோல்களும் கிரீஸ் 24கோல்களும் அடித்தன. இதனால் பிளே ஒவ்போட்டியில் விளையாடி வெற்றி பெறவேண்டிய நிலை ஏற்பட்டது.  

ரொமேனியாவுக்கு எதிரான முதலாவது போட்டியில் 3-1 கோல் கணக்கில் கிரீஸ் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இரு நாடுகளும் தலா ஒரு கோல் அடித்ததனால் சமநிலையில் முடிந்தது. மிரோடுலோவ்  ஐந்துகோல்களும், சல்பன் நிடிஸ் நான்கு கோல்களும் அடித்தனர்.

1994ஆம் ஆண்டு முதன் முதலாக உலகக்கிண்ணப் போட்டிக்குத் தகுதி பெற்ற கிரீஸ் மூன்றவது முறையாக உலகக்கிண்ணப்போட்டியில் விளையாடுகிறது. 2010 ஆம் ஆண்டு பீ பிரிவில் ஆர்ஜென்ரினா,தென்கொரியா, நைஜீரியா ஆகியவற்றுடன் விளையாடிய கிரீஸ் ஒருபோட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்து மூன்றாவது இடம் படித்து வெளியேறியது.
பெர்னாண்டோ சன்தோஸ் கிரீஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார். 39 வயதான இவர் போத்துகலைச் சேர்ந்தவர். 2012 யூரோ கிண்ணப்போட்டியில் கால் இறுதி வரை அணியை  அழைத்துச் சென்றவர் ஜோக்கியோ கர கோனிஸ். கிரீஸ் அணியின் தலைவர் யூரோ 2004 சம்பயன் கிண்ணத்தை கிரீஸ்  பெற உதவியவர். லைக் கரகோனிஸ் 72 போட்டிகளில் 32 கோல்கள் அடித்தவர். சல்பயன், கிடிஸ் சமராஸ் ஆகியோர் கிரீஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களாக உள்ளனர். ஸ்கோரிகாஸ் நிகோபொலிடிஸ் பசினாஸ் ஆகியோர் கிரீஸ் அணியின் முன்னாள் வீரர்களாவர்.
கொலம்பியா
 தென்னமெரிக்காவிலிருந்து உலகக்கிண்ண உதை பந்தாட்டப்போட்டிக்குத் தகுதி பெற்ற கொலம்பியா தரவரிசையில் நான்காவது இடத்தில் உள்ளது.பொலிவியா, கொலம்பியா, வெனிசுவெலா,ஆர்ஜென்ரீனா, பெரு, ஈக்குவடோர், உருகுவே, சிலி,பரகுவே ஆகிய நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின.16 போட்டிகளில் விளையாடிய கொலம்பியா ஒன்பது வெற்றி பெற்று மூன்று போட்டிகளை சமப்படுத்தி நான்கு போட்டிகளில் தோல்வியடைந்தது.
கொலம்பயா 27 கோல்கள் அடித்தது. எதிராக 13கோல்கள் அடிக்கப்பட்டன. 30 புள்ளிகளைப் பெற்றது. கொலம்பியாவுக்கு எதிராக 37 மஞ்சள் அட்டைகளும் ஒரு சிவப்பு அட்டையும் காட்டப்பட்டன. ரடமெல் பல்கோ ஒன்பது கோல்கள் அடித்துள்ளார். 1990 ஆம்  ஆண்டு இரண்டாவது சுற்றுக்குத் தெரிவானதே உலகக்கிண்ண சாதனையாகும்.பொலிவியாவுக்கு எதிராக 5-0 கோல்களாலும். உருகுவேக்கு எதிராக 4-0 கோல்களாலும் வெற்றிபெற்றது. ஐந்தாவது முறையாக உலகக்கிண்ணப்போட்டியில் விளையாட உள்ளது. கொலம்பியா. ஆர்ஜென்ரீனாவைச் சேர்ந்த ஜோஸ்பெக்மன் கொலம்பியாவின் பயிற்சியாளராக உள்ளார். மரியோ அணித்தலைவராக உள்ளார். பரகு வேக்கு எதிரான போட்டியில் அதிரடியாக இரண்டு கோல்கள் அடித்தார். மத்திய களவீரரான  இவர் அட்லாண்டா கழகத்தின் முன்னாள் வீரராவார்.

கொலம்பியாவின் நம்பிக்கை நட்சத்திரமான பல்கன் 67 போட்டிகளில் 52 கோல்கள் அடித்துள்ளார். 22 வயதான இவரை 55 மில்லியன் டொலருக்கு மொனாகோ கழகம் ஒப்பந்தம் செய்தது.22 வயதான ஜேம்ஸ் ரொட்ரிகோவையும், மொனாகோ 40 மில்லியன் டொலருக்கு ஒப்பந்தம் செய்தது. மரியோயேபெஸ்,லுயிஸ் பெரோ, ஜேம்ஸ் ரொட்ரி  ஆகியோரும் கொலம்பியாவின் நம்பிக்கை நட்சத்திரங் களாவர். 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற 20 வயதுக்குட்பட்ட உலகக்கிண்ணப்போட்டியில் கொலம்பியா மூன்றாம் இடம் பெற்றது.
ஹிகுதா,வல்டெரமா, அஸ்பரில்லா ஆகியோர் கொலம்பியாவின் முன்னாள் வீரர்களாவர்.

ரமணி 
 சுடர் ஒளி 12/01/14


Tuesday, January 21, 2014

கனவுகாணும் தலைவர்கள் காக்திருக்கும் மக்கள்

இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் வியூகம் வகுத்து வரும் வேளையில், கருத்துக்கணிப்புகளும் பல அதிர்ச்சியான முடிவுகளுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரதமர் கனவில் சில தலைவர்கள் திளைத்திருக்க பிரதமர் யார் என்பதை பொதுமக்கள் தெளிவாகத் தெரிவித்துள்ளனர். டில்லியில் ஏபிபி நியூஸுக்காக ஏ.சி. நெல்சன் நிறுவனமும்,தமிழ்நாட்டில் ஜுனியர் விகடனும் கருத்துக் கணிப்புகளை நடத்தி உள்ளன.

மோடி பிரதமராவதையே டில்லியும், தமிழகமும் விரும்புவதாக கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. டில்லியில்  இரண்டாவது இடத்தில் கெஜ்ரி வாலும், மூன்றாவது இடத்தில் ராகுலும் இருக்கிறார் இந்தியாவின் அடுத்த பிரதமர் ஜெயலலிதா என்றே அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் கூறுகிறார்கள். ஆனால், தமிழகமக்கள் ஜெயலலிதாவை மூன்றாவது இடத்தில் வைத்துள்ளனர். டில்லிமக்கள் மோடிக்கும் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் பெருமளவு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே போன்று தான் தமிழக மக்களும் மோடியையும் அவரது கட்சியையும் ஆதரித்துள்ளனர். திராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் அண்ணாதிராவிட முன்னேற்றக்கழகத்துக்கும் சமமான விகிதா சாரத்தையே தமிழக மக்கள் வழங்கி உள்ளனர்.

 பலமான கூட்டணி அமைத்தால் தான் நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை அரசியல் கட்சிகளுக்கு மக்கள் உணர் த்தியுள்ளனர். இந்த உண்மையை உணர்ந்து கொண்டதனால் மிகப்பெரிய கூட்டணிக்கான கதவை கருணாநிதி திறந்து வைத்துள்ளார். ஜெயலலிதாவின் எண்ணம் வேறாக உள்ளது. தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பனர்களுடன் மத் தியஅரசில் நுழைந்து விடலாம் என்று நினைக்கிறார் ஜெயலலிதா.

15ஆவது நாடாளுமன்றம் ஜுன் 3ஆம் திகதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் அல்லது மே யில் பொதுத்தேர்தல் நடைபெறவேண்டும் மோடியை முன்னிலைப்படுத்திய பாரதிய ஜனதாக்கட்சி தேர்தல் பரப்புரையை ஆரம்பித்து விட்டது. ஆட்சி அமைப்பதற்கு 272 உறுப்பினர்கள் தேவை. இதனை கருத்தில் கொண்டு இந்தியா 272 டொட்கொம்,மோடி 272 பிளஸ் என இலத்திரனியல் திட்டங்களை பாரதீயஜனதாக்கட்சி பிரசாரத்துக்காகப் பயன்படுத்துகிறது.

வாஜ்பாய்க்குப் பின்னர் மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர் இல்லாத பாரதீய ஜனதாக் கட்சியைக் கரைசேர்க்க  மோடி கிடைத்துள்ளார். மோடியின் வளர்ச்சியும்,பாரதீயஜனதாக் கட்சியின் எழுச்சியும் காங்கிரஸை கிலிகொள்ள வைத்தது. வீழ்ந்தது காங்கிரஸ் என்ற வெற்றிப் பெருமிதத்துடன் இருந்த பாரதீய ஜனதாக் கட்சிக்கு வில்லனாக வந்தது ஆம் ஆத்மி அரவிந்த கெஜ்ரிவாலின் தலைமையில் முதன் முதலாக டெல்லி மாநிலத்தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸூக்கும், பாரதீய ஜனதாவுக்கும் அச்சுறுத்தலாக உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து ஆம் ஆத்மி வியூகம் வகுத்தால் இரண்டுகட்சிகளும் பாதிக்கப்படும்.

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அதிரடி நடவடிக்கைகள் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளன. ஊழல் பற்றிய புகா ரைத் தெரிவிக்க  விஷேட தொலைபேசி இலக்கம். ஊழல் செய்த அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் அரச ஊழியர்களின் பிள்ளைகள் அரசாங்கப் பாடசாலையில் தான் படிக்க வேண்டும் இப்படிப்பட்ட திட்டங்கள் தமது மாநிலத்திலும் நடைபெறவேண்டும் என்றே அதிக மானவர்கள் விரும்புகிறார்கள். மத்தியில்  ஒரு கட்சி அமைந்தால் எப்படி இருக்கும் என்று இந்திய மக்கள் சிந்தித்தால் மோடியின் எதிர்பார்ப்பும் கனவாகவே போய்விடும்.

மோடிக்கு நிகரான தலைவர் காங்கிரஸ் கட்சியில் இல்லை. தலைமை பொறுப்பை ஏற்பதற்கு யாருமே முன்வரவில்லை அடுத்த தலைவர் ராகுல்தான் என்று அறிக்கை விடுகிறார்கள். இது காங்கிரஸில் தன்னம்பிக்கைக்கு சவாலாக உள்ளது. இத்தனை காலமும் கண்ணாமூச்சி விளையாடிய ராகுல் எந்தப் பொறுப்பையும் ஏற்கத்தயார் என்று அறிவித்துள்ளனர். ஆகையினால் காங்கிரஸ் கட்சி தனது பிரதமர் வேட்பாளரை விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கும் கனிமொழிக்கு எதிரான 2 ஜி ஊழல் வழக்கும்  நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் முன்னிலை வகிக்கும். ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக தீர்ப்பு வரவேண்டும் என்று திராவிட முன்னேற்றக் கழகத்தவர்கள் கூறுகிறார்கள். ஸ்பெகிரம் ஊழல் வழக்கில் கனிமொழி கைதுசெய்யப்படலாம் என்று கருதப்படுகிறது. ஜெயலலிதா குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டால் அவரது பிரதமர் கனவு தவிடு பொடியாகவிடும். கனிமொழி மீண்டும் கைது செய்யப்படால் திராவிடமுன் னேற்றக்கழகத்துக்எதிரான பிரசாரமாக அது முன்னிலைபெறும். இரண்டு பெண் பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகளினால் தமிழக அரசியலில் திருப்பம் ஏற்படலாம்.
அரசியல் தலைவர்களின் விருப்பமும் கருத்துக்கணிப்புகளும் செய்திகளாகவும் அறிக்கைகளாகவும் வெளிவருகின்றன. நாடாளு மன்றத்தேர்தலையும், சட்டமன்றத் தேர்தலையும் ஒன்றாகத் தமிழக மக்கள் கருதவில்லை. இரண்டு தேர்தல்களையும் ஒன்றாக போட்டுக் குழப்பிக்கொள்ளாமல் வாக்களித்துள்ளனர்.
 திராவிடமுன்னேற்றக்கழகம் 1967 ஆம் ஆண்டு ஆரம்பக்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற  நாடாளுமன்றத் தேர்தல்களின் போது அதனுடைய கையே மேலோங்கி இருந்தது. எம்.ஜீ. ஆர் கட்சியிலிருந்து. வெளியேறிய போது வீழ்ச்சியடைந்தது பின்னர் தனது செல்வாக்கை உயர்த்தியது. வைகோ பிரிந்து போனபோது எவ்விததாக்கமும் ஏற்படவில்லை. எம்.ஜி.ஆர். சுகவீன முற்றிருந்த போதும், இந்திரா, ராஜீவ் ஆகியோர் கொல்லப்பட்டபோதும் நடைபெற்ற தேர்தல்களில் திராவிட முன்னேற்றக்கழகம் படுதோல்வியடைந்தது. பின்னர் பழைய நிலைக்கு உயர்ந்தது.

 நாடாளுமன்றத் தேர்தல்களில் 50 சதவீதமான வெற்றியை திராவிட முன்னேற்றக்கழகம் பெற்றுள்ளது. மத்தியில் தொடர்ந்து மூன்று முறை அரசமைக்க உதவியது இட ஒதுக்கீடு மெட்ரோ ரயில் திட்டம், வேலைவாய்ப்பு போன்ற திராவிடமுன்னேற்றக்கழக அமைச்சர்களின் செயல்பாடு வெற்றியைத் தேடித்தரும் என கருணாநிதி நம்புகிறார். 1998ஆம் ஆண்டு மத்திய அரசுக்கு ஆதரவு வழங்கிய ஜெயலலிதா ஒரே வருடத்தில் தேநீர் விருந்து வைத்து ஆட்சியைக் கவிழ்த்தார். அதன் பின்னர் மத்திய அரசில் அவர் சேருவதற்கான வாய்ப்பை தமிழகமக்கள் வழங்கவில்லை. மக்களின் மனநிலையை சரியாகப் புரிந்து கொண்டால் தான் தேர்தல் வெற்றி பெற முடியும் என்பதை சில அரசியல் தலைவர்கள் இன்னமும் உணரவில்லை.

 வானதி 
சுடர் ஒளி 19/01/14

Monday, January 20, 2014

கூட்டணிக் குழப்பத்தில் தமிழகத் தலைவர்கள்


இந்தியப் பொதுத் தேர்தலில்யாருடன் கூட்டணி சேர்வது என்ற கூட்டல் கழித்தலில் அரசியல் கட்சிகள் அனைத்தும் முனைப்புக்காட்டி வரும் நிலையில், பெப்ரவரி 7ஆம் திகதி மேலவைத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மேல்சபையில் 235 நாடாளு மன்ற உறுப்பினர்கள் உள்ளனர். சட்ட சபை உறுப்பினர்கள் இவர்களைத் தேர்ந் தெடுப்பார்கள். 16 மாநிலங்களின் 55 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவதனால் புதியவர்களைத் தெரிவுசெய்வதற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்திலிருந்து மேல்சபைக்குத் தெரிவுசெய்யப்பட்ட ஆறு உறுப்பனர்களின் பதவிக்காலம் முடிவடைகிறது. தமிழகத்திலிருந்து 16 உறுப்பினர்கள் மேலவையில் உள்ளனர். இரண்டு வருடங்களுக்கொரு முறை இத்தேர்தல் நடைபெறுகிறது. சட்ட சபையின் ஆட்சி மாறும்போது நாடாளு மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையும் மாறுபடும்.

திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஜின்னா, வசந்தி ஸ்டாலின், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், அண்ணா திராவிட முன்னேற்றக்கழக பால கங்கா, மார்க்ஸிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ரங்கராஜன் ஆகியோரின் பதவிக் காலம் முடிவடைகிறது. திராவிடமுன்னேற்றக் கழகக் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணி ஆகியவற்றிலிருந்து தலா மூன்று உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். பெப்ரவரி 7ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் இந்த எண்ணிக்கை மாறிவிடும். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற தேர்தலில் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்தது. கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டுக்கு ஒன்றை விட்டுக்கொடுத்தது. காங்கிரஸின் தயவில் கனிமொழியை எம்.பியாக்கினார் கருணாநிதி.


மேலவைத் தேர்தலில் கூட்டணிக் கட்சியின் ஆதரவின்றி நான்கு உறுப்பினர்களைத் தேர்வு செய்யும் வல்லமை அண்ணா திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு உண்டு. ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையினால் கூட்டணிக் கட்சியில் உள்ள ஒருவர் நாடாளுமன்றம் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. ஜூன் மாதம் நடைபெற்ற மேலவைத் தேர்தலில் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜெயலலிதா ஆதரவு வழங்கினார். இம் முறை மார்க்ஸிஸ்ட் கட்சிக்கு அவர் சந்தர்ப்பம் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதாவின் புகழ்பாடும் நிறுவனமாகவே கம்யூனிஸ்ட் கட்சி விளங்குகிறது. மார்க்ஸிஸ்ட் சற்றுத்தள்ளியே நிற்கிறது. நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குவதனால் ஜெயலலிதா என்ன முடிவு எடுப்பார் என்பது இரகசியமாக உள்ளது. விஜயகாந்தின் கட்சியைச் சேர்ந்த ஒருவரை எம்.பியாக்கலாம்.
தமிழகத்திலிருந்து மேலவைக்கு ஐந்து உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவது உறுதியாகிவிட்டது. ஆறாவது உறுப்பினர்  யார் என்பது அரசியல் அரங்கின் பெறுமதி மிக்க கேள்வியாக உள்ளது. கடந்த ஜூன் மாதம் கனிமொழியை வேட்பாளராக்கிவிட்டு காங்கிரஸிடமும் விஜயகாந்திடமும் ஆதரவு கோரினார் கருணாநிதி. கடைசிநேரம் வரை இழுத் தடித்துவிட்டு கனிமொழியை எம்.பி யாக்கியது காங்கிரஸ். ஆனால் விஜயகாந்த் அப்போதும் பேரம்பேசினார். தனது மனைவி பிரேமலதா அல்லது மைத்துனர் சுதீஸை களமிறக்க விரும்பிய விஜயகாந்த் தனது கட்சிக்கு முதலில் சந்தர்ப்பம் தரும்படி கோரிக்கை விடுத்தார்.
 விஜயகாந்தின் கோரிக்கையை கருணாநிதி கண்டுகொள்ளவில்லை. ஆறாவது இடத்துக்குப் போட்டி நடந்தால் தனது கட்சி வே பாளர் வெற்றிபெறுவார் என்று உறுதியாக நம்பினார் கருணாநிதி. தனது வேட்பாளர் தோல்வியடைவார் எனத்தெரிந்தும் வீம்புக்கு வேட்பாளரை நிறுத்தினார் விஜயகாந்த். 34 சட்டசபை உறுப்பினர்களின் வாக்கின் மூலம் மேலவை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்வுசெய்யப்படுவார். திராவிடமுன்னேற்றக்கழகம் 23. காங்கிரஸ் 5 விஜயகாந்தின் கட்சி 21 உறுப்பினர்களையே கொண்டுள்ளது. விஜயகாந்தின் ஏழு உறுப்பினர்கள் ஜெயலலிதாவிடம் சரணடைந்து விட்டனர். கட்சியின் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் வெறுப்பினால் சட்டசபை உறுப்பினர் பதவியையும் இராஜினாமா செய்துவிட்டு வெளியேறி விட்டார்.  ஒரு உறுப்பினர் உள்ள மனிதநேயக்கட்சி,  புதிய கழகம் ஆகியன திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. காங்கிரஸுடன் கைகோர்த்தாலும் விஜயகாந்தினால் வெற்றிபெறமுடியாது.

காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்த கருணாநிதி என்னசெய்யப் போகிறார் என்பதை அறிய அரசியல் உலகம் ஆவலாக உள்ளது. கனிமொழிக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவித்ததனால் நன்றிக் கடனாக ஆதரவு தெரிவிக்குமா? அல்லது தனது கட்சி வேட்பாளரைக் களம் இறக்குவாரா? தமிழக காங்கிரஸ் தலைவர்களில் சிலர் கருணாநிதியைக் கடுமையாக விமர்சனம் செய்தாலும் டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை கருணாநிதியின் கையைப் பிடிக்கத் துடிக்கிறது. திராவிட முன்னேற்றக்கழகத்தின் ஆதரவு இல்லாமல் தமிழககாங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகமுடியாது என்பதை இப்போது ஒரு சிலர் உணர்ந்துள்ளனர்.
தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை விஜயகாந்த் இன்னமும் வெளிவிடாது மர்மமாக வைத்துள்ளார். மேலவைத் தேர்தலைப் பொறியாக வைத்து அவரைத் தம் பக்கம் இழுப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் முயலக்கூடும். ஜூன் மாதத்தேர்தலில் கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்திருந்தால் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னரே விஜயகாந்தின் கட்சிக்கு ஒரு எம்.பி. கிடைத்திருப்பார்.

நாடாளுமன்றத் தேர்தலின் புதிய கூட்டணி எது என்பதை மேலவைத் தேர்தல் மூலம் அறிந்துகொள்ளலாம். அவசரப்படாது ஆறுதலாக முடிவெடுக்கக் காத்திருக்கும் விஜய காந்த் இந்தப் பொறியில் அகப்பட்டால் தமிழகத்தின் கூட்டணிக் கணக்குத் தெரிந்து விடும். மேலவைத் தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராது அவர் தனித்து நின்றால் இன்னமும் அதிகமான தொகுதிகளை எதிர்பார்க்கிறார் என்பதை சூகமாக வெளிப்படுத்துகிறார் என்பதை அவருடன் கூட்டணி சேர விரும்புபவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
ஜூன் மாத மேலவைத் தேர்தலில் காங்கிரஸிடம் திராவிட முன்னேற்றக் கழகம் தூது சென்றது. இப்போது திராவிடமுன் னேற்றக்கழகத்தை நோக்கி காங்கிரஸ் செல்லவேண்டிய நிலை ஏற்பட்டுளள்ளது.
 வர்மா 
சுடர் ஒளி 19/01/14

Thursday, January 16, 2014

பிரான்ஸ் 1938

பிரான்ஸில்  1938ஆம் ஆண்டு மூன்றாவது உலகக்கிண்ண உதைபந்தாட்டப்போட்டி நடைபெற்றது. ஜூன் மாதம் 4ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை நடைபெற்ற போட்டியில் இத்தாலி சம்பியனானது. 37 நாடுகள் தகுதிகாண் போட்டியில் விளையாடின. உலக உதைபந்தாட்டப் போட்டியில் 15 நாடுகள்  விளையாடுவதற்குத் தகுதிபெற்றன. 18 போட்டிகள் நடைபெற்றன. 84 கோல்கள் அடிக்கப்பட்டன. 3,75,760 ரசிகர்கள் போட்டியைப் பார்வையிட்டனர்.

ஐரோப்பாக் கண்டத்திலிருந்து பெல்ஜியம், பிரான்ஸ், ஹங்கேரி, நெதர்லாந்து, போலாந்து சுவீடன், செக்கஸ்லோவாக்கியா, ஜேர்மனி, இத்தாலி, நோர்வே, ரொமேனியா, சுவிட்ஸர்லாந்து ஆகிய 12 நாடுகள் விளையாடத் தகுதிபெற்றன வட அமெரிக்காவிலிருந்து கியூபாவும், தென் அமெரிக்காவிலிருந்து      பிரேசிலும் விளையாடத் தகுதிபெற்றன.  ஆசியாக்கண்டத்திலிருந்து டச்சு கிழக் கிந்தியத் தீவுகள் தகுதிபெற்று ஆச்சரியமளித்தன. கடந்த உலகக் கிண்ணத்தில் விளையாடிய ஆர்ஜென்ரீனா, இங்கிலாந்து, ஸ்பெய்ன், உருகுவே ஆகியன விளையாடும் தகுதியை இழந்தன.

முதல் சுற்றில் வெற்றிபெற்ற நாடுகள் கால் இறுதிக்குத் தெரிவாகின. டச்சு, கிழக்கிந்திய தீவுகளுக்கெதிரான போட்டியில் 6-0   கோல்கள் அடித்து அசத்தியது. ஹங்கேரி, இத்தாலி, போலாந்து ஆகியவற்றுக்கிடை யேயான போட்டியில் இரு  அணிகளும் தலா நான்கு கோல்கள் அடித்ததனால் பெனால்டி வழங்கப்பட்டது. 6-5 கோல்களால் வெற்றிபெற்றது பிரேஸில். பிரேஸில், செக்கஸ் லோவாக்கியா,  ஹங்கேரி, சுவிட்ஸர்லாந்து, சுவீடன்,   கியூபா, இத்தாலி, பிரான்ஸ் ஆகியன கால் இறுதியில் விளையாடின. கியூபாவுக்கு எதிரான போட்டியில் 8-0  கோல்கள் அடித்து வெற்றி பெற்றது சுவீடன்.  செக்கஸ்லோவாக்கியா, பிரேஸில் ஆகியவற்றுக்கிடையிலான  போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் அடித்தமையால் பெனால்டி வழங்கப்பட்டது. பெனால்டியிலும் இரண்டு அணிகளும் தலா ஒரு கோல் அடித்து சமப்படுத்தின. மீண்டும் இரண்டு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் 2-1 கோல் கணக்கில் பிரேஸில் வெற்றிபெற்றது.
கால் இறுதியில் வெற்றிபெற்ற ஹங்கேரி, சுவீடன், இத்தாலி, பரேஸில் ஆகியன அரை இறுதிக்குத் தகுதி பெற்றன. சுவீடனுக்கு எதிரான போட்டியில் 5-1 கோல் கணக்கில் வெற்றிபெற்ற ஹங்கேரியும், பிரேஸிலுக்கு  எதிரான போட்டியில் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்ற இத்தாலியும் இறுதிப்போட்டியில் விளையாடத்தகுதி பெற்றன. பிரேஸில், சுவீடன் ஆகியவற்றுக்கிடையே நடைபெற்ற மூன்றாவது  இடத்துக்கான போட்டியில் 4-2 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

இத்தாலி, ஹங்கேரி ஆகியவற்றுக்கிடையேயான இறுதிப் போட்டி பரபரப்பானது. உலகக்கிண்ண சம்பியன் பட்டத்தை இத்தாலி தக்கவைக்குமா? ஹங்கேரி தட்டிப்பறிக்குமா  என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஹிட்லரின் ஆட்சியில் உலகை கலக்கிய வேளையில் "வின் ஓ டை" என்ற தகவலை இத்தாலி அணிக்கு ஹிட்லர் அனுப்பி வைத்தார். இறுதிப் போட்டியில் 4-2 கோல் கணக்கில் இத்தாலி வெற்றிபெற்று தொடர்ந்து இரண்டாவது முறை சம்பியனானது.

பிரான்ஸில் நடைபெற்ற உலகக்கிண்ண போட்டிகளின் மூலம் சீருடையில் இலக்கம் பொறிப்பது அறிமுகமானது. இத்தாலி அணி கப்ரன் மெஸ்ஸாஸ்,  அரை இறுதிப்போட்டியில் பெனால்டி அடித்தபின் கட்டை விரலை உயர்த்திக்காட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடுவதற்கு ஒஸ்ரியா தகுதிபெற்றபோதிலும் ஜேர்மனியால் ஆக்கிரமிக்கப்பட்டதனால் உலகக்கிண்ணப் போட்டியில் விளையாடும் சந்தர்ப்பத்தை இழந்தது. ஒஸ்ரியா வீரர்கள் சிலர் ஜேர்மனிக்காக விளையாடினார்கள்.
சுவிட்சர்லாந்து ஏர்னஸ்ட் லியோஸ்ரக்கன் ஓன் கோல் அடித்து முதல் முதலாக தன் பெயரைப் பதிவு செய்தார். இத்தாலியின் பயிற்சியாளரான பொஸ்ஸோ 12 வருடங்களின் பின் சுவிஸ் நாட்டின் பயிற்சியாளரானார்.

கறுப்புவைரம் என்றழைக்கப்பட்ட பிரேஸில் வீரர் லியோனிடாஸ்,  ஏழு  கோல்கள் அடித்து கோல்டன்  ஷீ´ விருதைப் பெற்றார். இத்தாலியின் சில்வியோ பெனோடா, ஹங்கேரியைச் சேர்ந்த ஜோர்ஜ் கரோஸி, கியூபாவின் செஸன் எல்லே ஆகியோர் தலா ஐந்து கோல்கள் அடித்து கோல்டன்  ஷீ´ விருதுக்கு போட்டியிட்டனர். ஹங்கேரி பதினைந்து  கோல்களும், பிரேஸில் 14 கோல்களும், இத்தாலி, சுவீடன் ஆகியன தலா பதினொரு  கோல்கள் அடித்தன. நெதர்லாந்து டச்சு கிழக்கிந்தியத் தீவுகள் ஆகியன கோல் அடிக்காது தோல்வியடைந்தன.

ரமணி 
சுடர் ஒளி 12/01/14