Wednesday, December 26, 2018

ஸ்டாலினை எதிர்க்க எம்ஜிஆரைக் கூப்பிடும் மோடி


கருணாநிதி ஜெயலலிதா ஆகியோரைச் சுற்றிவந்த தமிழக அரசியல் அவர்கள் இருவரும் மறைந்தபின்னர் சசிகலா,ஓ.பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி,டி.டி.தினகரன் எனச்சுற்றிச் சுழன்றது. இவர்களின் மத்தியில் ஸ்டாலினின் பெயர் மழுங்கடிக்கப்பட்டது. இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என ஸ்டானின் பிரகடனப்படுத்தியதால் எம்ஜிஆரின் துணையுடன் அவரை எதிர்க்க களம் இறங்கியுள்ளார் மோடி.

தமிழக , மத்திய அரசுகள் மீது ஸ்டாலின் மென்மையான போக்கைக் கடைப்பிடித்துவந்தார். கருணாநிதியைப் போல ஸ்டாலின் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. எடப்பாடியின் அரசை மோடி காப்பாற்றுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த  உண்மை. அதனைத் திராவிட முன்னேற்றக் கழகம் உரத்துச் சொல்லும்போது பாரதீய ஜனதாவுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இரகசிய ஒப்பந்தம் இருக்கிறது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்திசை திருப்புவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் “காவியை இல்லாமல் செய்ய வேண்டும்என காட்டமாக உரையாற்றினார். அன்று தொடங்கிய பாரதீய ஜனதாவுக்கான எதிர்ப்பை ஸ்டாலின் இன்னமும் கைவிடவில்லை. இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி எனப் பிரகடனம் செய்த ஸ்டாலின், மோடியை :சாடிஸ்ட்என அறிவித்தார். ஸ்டாலினின் பேச்சால் எரிச்சலடைந்த மோடி, தனது அரசியல் எதிரியான  ராகுல் காந்தியை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஸ்டாலினுக்கு எதிராகத் தனது பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

தமிழகத்தில் எம்ஜிஆருக்கு தனி மதிப்பு உள்ளது. எம்ஜிஆரின் ரசிகர்கள்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களாகி அவரை முதலமைச்சராக்கினார்கள். எம்ஜிஆருக்குப்பின் ஜெயலலிதவை அரியணையில் ஏற்றியதும் அவர்கள்தான்.  எம்ஜிஆரின் வாக்கு வங்கியைக் குறிவைத்து ஸ்டாலினுக்கும் ராகுல் காந்திக்கும்  எதிரான பிரசாரத்தை மோடி ஆரம்பித்துள்ளார்.

 “எம்ஜிஆரின் ஆட்சியை கலைத்த காங்கிரஸுக்கா உங்கள் ஆதரவு?என தமிழக மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார் மோடி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலமையிலான கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கூட்ட்ணியில் காங்கிரஸும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டாலினின்  முழக்கம் மோடியை மிகவும் பாதித்துள்ளது. அதனால்தான் ஸ்டாலினின் தகப்பன் காலத்து அரசியல் நட்சத்திரமான எம்ஜிஆரை,  மோடி ஞாபகப்படுத்துகிறார். அடுத்து நடைபெற்ற தேர்தலில் தனது ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் எம்ஜிஆர் கூட்டணி சேர்ந்ததை மோடி மறந்திருக்கலாம், தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஈழத்தமிழர் விவகாரமும் பின்னிப் பிணைந்துள்ளது. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கூட்டணி இலட்சக் கணக்கான ஈழத் தமிழ் மக்களைக் கொன்றது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்  தலைவர்களும்  தமிழக பாரதீய ஜனதாத் தலைவர்களும்  மேடைதோறும் முழங்குகின்றனர். புலிகளைத் தோற்கடிப்பதற்கு  இந்தியாவின் முன்னாள்  பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் மிக்ப்பெரிய பங்காற்றியது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்ததை  தமிழக பாரதீய ஜனதாத் தலைவர்கள் மறந்துவிட்டனர்.

காங்கிரஸையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் குற்றம் சாட்டும் மோடியின் தலைமையிலான மத்திய அரசாங்கம்தான் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு செங்கம்பளம் விரித்து வரவேற்றது. இதனைத் தமிழக மக்கள் மறந்துவிடுவார்கள் என மோடி  நினைக்கிறார்.

மாற்றான் மனப்பான்மைஅயுடன் பிரதமர் மோடி தமிழகத்தை நோக்குவதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். மேகதாது அணை விவகாரம், தூத்துக்குடி சம்பவம், கஜாபுயல் பாதிப்பை பார்க்க வராமை, தமிழக அரசு கேட்ட கஜா புயல் பதிப்பு நிவாரணத்தை  வழங்காமை போன்றவை மோடிக்கு எதிராக இருக்கின்றன. தேர்தல் காலத்தில் இவை எல்லாம் விஸ்வரூபம் எடுக்கும். ஈழத் தமிழர் விவகாரமும் எம்ஜிஆரின் செல்வாக்கும் தமிழக அரசியலில் செல்வாக்குச்  செலுத்தப்போகும் சூழ்நிலை எழுந்துள்ளது. மோடியா லேடியா என்ற கோஷம் மறைந்து ஸ்டாலினா மோடியா எனும் கோஷம் முன்னிறுத்தப்படவுள்ளது.

சூரன் ஏ.ரவிவர்மா.

Monday, December 24, 2018

சென்னையில் ஸ்டாலின் கொழுத்திப்போட்டதிரி டில்லியில் வெடிக்கிறது.


தமிழக அரசியலில் மட்டுமன்றி இந்திய அரசியலிலும் கொடிகட்டிப் பறந்தவர் கருணாநிதி.  கருணாநிதி இல்லாத திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கட்டி எழுப்பும் திறமை ஸ்டாலினிடம் இருக்கிறதா என்ற சந்தேகம் அவரை எதிர்க்கும் அரசியல் தலைவர்களிடன் இருக்கிறது. அந்தச் சந்தேகத்துக்கு கருணாநிதியின் சிலை திறப்புவிழாவில் விடையளித்துள்ளார் ஸ்டாலின். காங்கிரஸின் தலைமையிலான கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக ராகுலை வழிமொழிகிறேன். ஏனைய தலவர்களும் அவரை ஆதரிக்க வேண்டும் என்ற ஸ்டாலினின் உரையால் டில்லி அரசியல் அதிர்கிறது.  பாரதீய ஜனதாக் கட்சியின்  பிரதமராக  மோடி முன்நிறுத்தப்படுகிறார். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பிரதமராக ராகுலை முன்னிறுத்துவீர்களா என்ற கேள்விக்கு ஸ்டாலின் விடையளித்துள்ளார்.

பாரதீய ஜனதாவை எதிர்க்கும் மமதா  பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத்பவார் போன்ற தலைவர்களின் மனதில் பிரதமராகும் ஆசை இருக்கிறது. தேர்தலின் பின்னர்  பிரதமர் வேட்பாளரை முடிவு செய்யலாம் என்பது அவர்களின் விருப்பம். ஆகையினால்  பிரதமர்  வேட்பாளரை அறிவிக்காமல் தேர்தலைச் சந்திக்க அவர்கள் விடும்புகின்றனர். காங்கிரஸை விட கூடுதலான தொகுதிகளில் வெற்ரி பெற்றால் தான் பிரதமராகலாம் என்ற எண்ணத்தில் அவர்கள்  இருக்கிறார்கள். தங்கள் கூட்டணியின் பிரதமராக ராகுல்காந்தியை ஸ்டாலின் வழிமொழிந்ததை அவர்கள் ரசிக்கவில்லை.

ஸ்டாலினும் ராகுல் காந்தியும் வாரிசுகளாக அரசியலில் கால் பதித்தவர்கள். அரசியலில் அவர்களால் பிரகாசிக்க முடியாது என எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. அண்மையில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சியிடம் இருந்த மூன்று மாநிலங்களை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியதால் ராகுல் காந்தியின் செல்வாக்கு அதிகரித்துள்ளது. கருணாநிதியின் நிழலில் வளர்ந்தவர் ஸ்டாலின். கருணாநிதி நோய் வாய்ப்பட்டிருந்தபோது செயல் தலைவராக ஸ்டாலின்,சிறப்பாகப் பணியாற்றினார்.தமிழக அரசியலில் மட்டும் பேசப்பட்ட ஸ்டாலின் இப்போது டில்லி அரசியலாலும் நோக்கப்படும் தலைவராக உயர்ந்துள்ளார்.

இந்திய அரசியலில் இந்திரா காந்தி ஓரம் கட்டப்பட்டபோது 1980 ஆம் ஆண்டு “நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருகஎன  இந்திரா காந்தியை தமிழகத்துக்கு அழைத்துஅவரின் ஆழுமையை வெளிப்படுத்ஹ்டியவர் கருணாநிதி. காங்கிரஸ் கட்சிக்கு சோனியா  காந்தி தலைமை ஏற்ற போது வெளிநாட்டைச் சேர்ந்தவர் என அரசியல் எதிரிகள் அவரை ஒதுக்கினார்கள். 2009  ஆம் ஆண்டு சோனியாவைத் தமிழகத்துக்கு அழைத்து அவரின் அரசியல் பயணத்துக்கு உற்சாகமூட்டியவர் கருணாநிதி. ராகுல் காந்தியைப் பிரதமராக ஏற்பதா இல்லையா என காங்கிரஸுடன் கூட்டணி சேர் இருக்கும் கட்சிகள் தயங்கிக் கொண்டிருக்கும் வேளையில் கருணாநிதியைப் போன்று ராகுலை அடையாள காட்டியுள்ளார் ஸ்டாலின்.

ராகுல் காந்திக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பிடிக்காது. தமிழ்கத்துக்கு அவர் விஜயம் செய்யும் போது மரியாதை நிமித்தமாக  கருணாநிதியைச் சந்திப்பதில்லை. ஸ்டாலினுக்கும் ராகுல் காந்திக்கும் ஒத்துவராது. ராகுல் மீது ஸ்டாலின் கோபமாக இருக்கிறார் போன்ற செய்திகள் கடந்த காலங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டன். அவை எல்லாவற்றுக்கும் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பாரதீய ஜனதாக் கட்சியைத் தோற்கடிக்கச்செய்வதற்காக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர ஆர்வமாக இருக்கும் கட்சித் தலைவர்கள் ஸ்டாலினின் பேச்சை ரசிக்கவில்லை. தேர்தலுக்குப் பின்னர்தான் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வோம் என அவர்கள் கண்டிப்பான தொனியில் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என்பது திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பம்  என ஸ்டாலின் மீண்டும் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார். ஸ்டாலினின் பேச்சு அரசியல் அரங்கை அதிரச்செய்துள்ளது.  தனது கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடிய பின்னர் தான் ஸ்டாலின் அதனை வெளிப்படையாக அறிவித்திருப்பார்.  

ராகுல் காந்தியை பிரதமராக முன்மொழியபோகும் தகவலை காங்கிரஸ் கட்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் முன்பே தெரியப்படுத்தி இருக்கும். கூட்டணிக் கட்சித் தலைவர்களின் நாடியைப் பிடித்துப் பார்க்கும் சந்தர்ப்பமாக காங்கிரஸ் கட்சி இதனை எதிர் நோக்குகின்றது. கூட்டணித் தலைவர்களின் எதிர்ப்பை சமாளிப்பதற்காக   திராவிட முன்னேற்றக் கழகத்தின் விருப்பம் அது என்று சொல்லி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது  காங்கிரஸ் கட்சி.  மாம்தா பான்ர்ஜி, அகிலேஷ் யாதவ், சரத் பவார் போன்றவர்களுக்கு ஒருசில மாநிலங்களில் தான் செல்வாக்குள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு நாடு பூராகவும் தொண்டர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சி அடுத்த தேர்தலில் அதிகளவான தொகுதிகளில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் முதல்வர் பதவி ஏற்கும் நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்துகொண்டது விஷேடமாக நோக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சியையும், பாரதீஜ ஜனதாக் கட்சி ஆட்சியையும் கங்கிரஸ், பாரதீய ஜனதாக்  கட்சிகள் இல்லாத ஆட்சியையும் மத்தியில் அமைத்த பெருமைக்குரியவர் கருணாநிதி. கருணாநிதியின் இடத்தை ஸ்டாலின்  பிடிப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவின் அடுத்த பிரதமரைத் தெரிவு செய்வதில் ஸ்டாலினின் பங்கு அதிகமாக இருக்கும் என கருதப்படுகிறது.
சூரன்.ஏ.ரவிவர்மா. 

Monday, December 17, 2018

தினகரனை குப்புற விழுத்திய செந்தில் பாலாஜி


ஜெயலலிதா மறைந்தபின்னர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பீடத்தைக் கைப்பற்ற  சசிகலா முயற்சி செய்தார். சசிகலா சிறைக்குச் சென்றதால் தினகரன் அதிரடியாக அரசியல் களத்தில் குதித்தார். ஜெயலலிதாவுக்காக சசிகலாவை மன்னித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட தினகரனை ஏற்றுக்கொள்ளவில்லை. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தையும் இரட்டை இலைச் சின்னத்தையும் கைப்பற்றுவேன் என சபதம் செய்த தினகரன் அம்மா முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை உருவாக்கி அரசியல் நீரோட்டத்தில் குதித்தார்.

ஜெயலலிதாவும் கருணாநிதியும் மறைந்ததால் தமிழகத்தின் தலைவராவதற்கு தினகரன் முயற்சி செய்தார். எத்தகைய கடுமையாக கேள்வியானாலும் கோபப்படாமல்  சிரித்துக்க்கொண்டே பதிலளிக்கும் தினகரனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்  நெருக்கடியை எதிர்கொண்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட தினகரன் வெற்றி பெற்றதால் தமிழகத்தின் பெரிய தலைவர் என்ற பிம்பம் உருவாகியது.  தினகரனின் நம்பிக்கைக்குரிய செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால் தினகரன் தரப்பு மட்டுமல்லாது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தலைவர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

முதலமைச்சர் எடப்பாடி பன்னீர்ச்செல்வத்துக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கிய தினகரனின் ஆதரவாளர்களான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 18 சட்ட மன்ற  உறுப்பினர்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்தார். அதனை எதிர்த்து 18 உறுப்பினர்களும்  நீதினம்றத்தில் முறையிட்டார்கள். தகுதி நீக்கம் செல்லும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. தினகரனை நம்பிய 18 உறுப்பினர்கள் பதவியை இழந்தார்கள். 18 உறுப்பினர்களை பலிக்கடாவாக்கிய தினகரன் சட்டசபை உறுப்பினராகிவிட்டார். மேல் முறையீடு செய்யாமல் இடைத் தேர்தலைச் சந்திக்க தினகரன் தரப்பு முடிவு செய்தது. கருணாநிதி,ஏகே,போஸ் ஆகியோர் மரணமானதால் இரண்டு தொகுதிகள் காலியாக உள்ளன. அவற்றையும் சேர்த்து 20 தொகுதிகளில் தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதிதான் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரியது. ஏனைய 19 தொகுதிகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்குரியவை. அவற்றில் ஒரு தொகுதி மட்டும் ஆட்சி செய்யும் அண்ணா திராவிட முன்னெற்றக் கழகத்துக்குரியது. ஏனைய 17  அனைத்தும்  தினகரனின் விசுவாசிகள் வெற்றி பெற்ற தொகுதிகள்.  எட்டுத் தொகுதிகளில் வெற்றி பெற்றால் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைத் தக்க வைக்கும். மாறாக 20 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றால் அது ஆட்சியைக் கைப்பற்றும். இந்த இரண்டு நூறு சதவீதம் நடக்கும் என எதிர்வு கூற முடியாது.

தமிழகத்தில் காலியாக உள்ள 20 தொகுதிகளில்  இடைத்தேர்தல் நடைபெற்றால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வெற்ரி பெற்றவர்களையே தினகரன்  வேட்பாளர்களாக அறிவிப்பார்.தொகுதிக்குள் உள்ள தனிப்பட்ட செல்வாக்கினால் சிலர் வெற்ரி பெறுவார்கள். ஏனையவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வாக்குகளைப் பிரிப்பர்கள்.  வெற்றி பெறும் வேட்பாளர்களில் ஒருவரான செந்தில் பாலாஜி கட்சி மாறியதால் தினகரன் அதிர்ச்சியடைந்துள்ளார். தேர்தல் பற்ரிய அரிவிப்பு வரும் முன்னரே தினகரனின் கையை விட்டு ஒரு தொகுதி பறிபோயுள்ளது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பலமுறை பச்சைக்கொடி காட்டியும் தினகரனின் பின்னால் நின்ற 18 பேரும் அசையவில்லை.  நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்னர் தினகரனைத் தவிர மற்றைய அனைவரும் வருங்கள் உங்களை மன்னிக்கிறோம் என முதலமைச்சர், துணை முதலமைச்ச்ர், அமைச்சர்கள் அனைவரும் வருந்தி அழைத்தார்கள். யாருமே இம்மியும் அசையவில்லை.

தினகரனின் விசுவாசத்துக்குரிய செந்தில் பாலாஜி, திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் செல்லப்போகிறார் என்ற செய்தி பரவியது. தினகரனின் ஆட்கள்  அதனை மறுதலித்தார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகதவர்கள் உருவாக்கிய கட்டுக்கதை என அவர்கள் தெரிவித்தார்கள். செந்தில் பாலாஜி அமைதியாக இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகம் மெளன காத்தது. ஜெயலலிதாவின் நினைவு நாளன்று நடைபெற்ற பேரணியில் செந்தில் பாலாஜி கலந்துகொள்ளவில்லை.நமது எம்ஜிஆரில் வழ்மையாகக்கொடுக்கும் விளம்பரங்களை செந்தில் பாலாஜி கொடுக்கவில்லை. வருடாந்தக் கலண்டர் அடிப்பதர்கு ஒப்பந்தம் செய்யவில்லை. இவை எல்லாம் செந்தில் பாலாஜியின் நடவடிக்கை மீது சந்தேகத்தை எழுப்பின.

செந்தில் பாலாஜி எங்களுடன் தான் இருக்கிறார்.  சொந்தப் பிரச்சினை காரணமாக அவர் கட்சிப்பணியில் இருந்து ஒதுங்கியுள்ளார் எனத் தினகரன் தரப்புத் தெரிவித்தது. ஆனால், ஒருமாத இடைவெளியில் திராவிட முன்னேற்றக் கழகத்துடனான பேச்சு வார்த்தையை வெற்றி கரமாக முடித்தார் செந்தில் பாலாஜி.  தமிழகத் தலைவர்களில் தனி ஆளாகத் தன்னை முன்னிறுத்திய தினகரனுக்கு அதிர்ச்சையளித்து திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார் செந்தில் பாலாஜி. இது தினகரனுக்கு மிகப்பெரிய பின்னடைவு. செந்தில் பாலாஜியைத் தொடர்ந்து வேறு சிலரும் தினகரனைக் கைவிட்டுச்  செல்லலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செந்தில் பாலாஜியை இழந்த தினகரன் தரப்பும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினரும் அதனி வெளிக்காட்டாது அரிக்கை விடுகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் செல்லாமல் எமது பக்கம் வந்திருக்கலாம் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர் ஆதங்கப்படுகின்றனர். செந்தில் பாலாஜியின் செல்வாக்கும் அவரிடம் இருக்கும் செல்வமும்  தேர்தலின் போது அவருக்கு வெற்றியைத் தேடிக்கொடுக்கும் என்பதில் சந்தேகமில்லை. செந்தில் பாலாஜி திராவிட முன்னேற்றக் கழகத்துக்குச் சென்றதைப் பொறுக்க முடியாத அவரது ஆதரவாளர்கள் சிலர் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக்த்துக்கு திரும்பிச் சென்றனர். அவருக்கு நம்பிக்கையான சிலர் தினகரனுடன் இருக்கிறார்கள் காலப் போக்கில் அவர்கள் தன்னைத் தேடிவருவார்கள் என்ற நம்பிக்கை செந்தில் பாலாஜிக்கு இருக்கிறது.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் பாஜாஜி 1996 ஆம் ஆண்டு 20 ஆவது வயதில் திராவிட முன்னேற்றக் கட்சியில் கவுன்சிலராக அரசியலில் அறிமுகமானார். அந்தக் காலத்தில் அவரிடம் பண வசதி இருக்கவில்லை. அங்குள்ள கே.சி.பழனிச்சாமி, நாகேந்திரன்  போன்றவர்களை எதிர்த்து அவரால் அரசியல் செய்ய முடியவில்லை.2000 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில்  இணைந்தார். மணல்  கொள்ளைக்கு எதிராக ஜேபிசி இயந்திரத்தின் முன்னால் படுத்துப் போராட்டம் செய்தார். அவரின் போராட்டத்தால் உள்ளூர் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள் பதறினார்கள்.   ஜெயலலிதாவின் கடைக்கண் பார்வையைப் பெற்ற செந்தில் பாலாஜி படிப்படியாக பதவிகளைப் பெற்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அசைக்க முடியாத அரசியல்வாதியானார்  போக்கு வரத்து அமைச்சரான  செந்தில் பாலாஜி ஜெயலலிதாவினதும் சசிகலாவினதும் விசுவாசத்தை ஒருங்கே  பெற்றார்.

தேர்தலின் போது வாக்காளர்களின் காலில் விழுந்து வாக்குச் சேகரித்ததால் அனைவரின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பினார் செந்தில் பாலாஜி. அம்மா போத்தல் தண்ணீர், அம்மா சொகுசு பஸ் போன்றவற்றினால் ஜெயலலிதாவின் மிகுந்த நம்பிக்கையைப் பெற்றார். ஜெயலலிதாவின் கீழ் அமைச்சராக இருந்தவர்கள் எப்போ பதவி பறிபோகுமோ என கலக்கத்தில் இருந்தார்கள். செந்தில் பாலாஜியின் பதவியில் ஜெயலலிதா கைவைத்ததில்லை. கடைசியில் செந்தில் பாலாஜியை ஜெயலலிதா தூக்கி எறியும் நிலை ஏற்பட்டது. போக்கு வரத்துத் துறையில் ஏற்பட்ட நஷ்டம், ஊழல் காரணமாக செந்தில் பாலாஜி பதவி இழந்தார்.

ஜெயலலிதா இறந்தபின்னர் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்தபோது செந்தில் பாலாஜியின் பெயரும் அடிபட்டது. சசிகலாவின் விசுவாசத்துக்குரிய செந்தில் பாலாஜி முதல்வராகலாம் என செய்தி பரவியது. அப்படிப்பட்ட ஒருவர் இன்று அணி மாறியது சசிகலாவுக்கும் தினகரனுக்கும் பெரிய இழப்பு. ஒன்றரை வருடங்களாக பதவி இல்லை. வழக்குக்காக 56 கோடி ரூபாவை செந்தில் பாலாஜி செலவளித்ததாக செய்தி வெளியாகியது.  20 தொகுதிகளுக்கு இடைத்தேதல் நடக்கும் போது 10 தொகுதிகளின்  செலவை செந்தில் பாலாஜி ஏற்க வேண்டும் என தினகரன் வேண்டுகோள் விடுத்தகாகவும் அதனால் தான் செந்தில் பாலாஜி  கட்சி மாறியதாகவும் தெரிகிறது.

கொங்குமண்டலத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மூத்த தலைவரான தம்பித்துரை போன்றவர்களை ஓரம் கட்டினார் செந்தில் பாலாஜி. வி. செந்தில் குமார் என்னும் இயற் பெயரை வி.செந்தில் பாலாஜி என மாற்றியபின் யாராலும் எட்ட முடியாத இடத்துக்குச் சென்றார். 2010 ஆம் ஆண்டு நமது எம்ஜிஆரில் பிரசுரமான விளம்பரத்துக்கு பணம் செலுத்த முடியாமல் தவித்த செந்தில் பாலாஜியை நம்பித்தான் இன்று   நமது எம்ஜிஆர் வெளியாகிறது.

கொங்கு மண்டலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் பலவீனமாக உள்ளது. செந்தில் பாலாஜியின் வருகை கழகத்துக்கு உதவியாக இருக்கும். அங்கு செல்வாக்குச் செலுத்திய பழனிச்சாமி இப்போது நொடிந்துபோயுள்ளார். வயது முதிர்வு காரணமாக அவரல் முன்புபோல்  சுறு சுறுப்பாக இயங்க முடியாது அந்த இடத்தை செந்தில் பாலாஜி நிரப்புவார் என திராவிட முன்னேற்றக்கழகம் எதிர்பார்க்கிறது.

தினகரனின் கூடாரத்தில் இருந்து இன்னும் பலர் வெளியேறப்போவதாக தகவல் பரவியுள்ளது. அவர்களை இழுக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முயற்சி செய்கிறது. செந்தில் பாலாஜியைப் போன்ற இன்னொரு இழப்பை தினகரனால் தாங்க முடியாது. இருப்பவர்களைத் தக்கவைக்க வெண்டிய கட்டாயம் தினகரனுக்கு ஏற்பட்டுள்ளது.தினகரன் அடுத்து யாரை  யாரிடம் இழக்கப்போகிறார் என்பதை அறிய தமிழக அரசியல் ஆர்வமாக இருக்கிறது.

Friday, December 14, 2018

முடங்கியது மோடி அலை துளிர்த்தது ராகுலின் நம்பிக்கை


மத்தியப் பிரதேசம்,ராஜஸ்தான்,சத்தீஸ்கர்,மிசோராம்,தெலுங்கானா ஆகிய ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் மோடி அலையை முடக்கியுள்ளது. மோடி பிரதமராகப் பதவி ஏற்ற பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் பாரதீய ஜனதாக் கட்சி பெரு வெற்றி பெற்று, காங்கிரஸ் கட்சி தோல்வியுற்றது. அறுதிப் பெரும்பான்மை இல்லாத போதிலும் மோடி, அமித் ஷா ஆகியோரின் வியூகத்தால் பாரதீய ஜனதா சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்கும் மோடியின் கனவை ராகுல் சிதறடித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்கு ராகுல் தலைவராகப் பொறுப்பேற்ற ஒரு வருடத்தின் பின்னர் ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற  தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியின் பிடியில் இருந்த மூன்று மாநிலங்களின் ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ராகுலுக்கும் மோடிக்குமிடையிலான போட்டியில் ராகுல் முந்தியுள்ளார். மோடி தோல்வியடைந்துள்ளார்.

மத்தியப்பிரதேசம்,சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தொடர்ந்து மூன்று முறை 15 ஆண்டுகள் ஆட்சியில் இருந்த பாரதீய ஜனதாக் கட்சி, காங்கிரஸிடம் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. மிசோராமில் தொடர்ந்து 10 வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மிசோ தேசிய முன்னணியிடம் ஆட்சியை இழந்துள்ளது. மிசோராம் தோல்வியை காங்கிரஸ் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. வடகிழக்கு இந்தியா காங்கிரஸின் கையை விட்டுப் போயுள்ளது. இந்திய நாடாளுமன்றத் தேர்தல் மூலம் அதனைச் சரிசெய்யலாம் என காங்கிரஸ் நினைக்கிறது.

தெலுங்கானாவில் சந்திரசேகரராவ் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதீய ஜனதாவும் தென் மாநிலங்களில் கோலோச்ச முடியாது என்பது நிரூபணமாகியுள்ளது. சந்திரபாபு நாயுடுவுடன் மெகா கூட்டணி அமைத்தும் காங்கிரஸால் வெற்றி பெறமுடியவில்லை. தேர்தலுக்கு ஒரு வருடம் இருக்கையில் முன்கூட்டியே ஆட்சியைக் கலைத்த சந்திரசேகரராவ் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றதை விட அதிக தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சிபீடமேறியுள்ளார். கடந்த தேர்தலில் 63 தொகுதிகளில் வெற்றி பெற்ற சந்திரசேகரராவின் கட்சி  இம்முறை 88 தொகுதிகளில் வெற்றி பெற்றார். கடந்த தேர்தலில் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இம்முறை மெகா கூட்டணி அமைத்தும் 21  இடங்களில் தான் வெற்றி பெற்றது.

மிசோராமில் 2013 ஆம் ஆண்டி நடந்த தேர்தலில் காங்கிரஸ் 34 தொகுதிகளிலும் மிசோ தேசிய முன்னணி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.  இப்போது நடந்த தேர்தலில் மிசோ தேசிய முன்னணி 26 தொகுதிகளிலும் காங்கிரஸ் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. கடந்த தேர்தலில் 8 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதீய ஜனதா இம்முறை ஒரு தொகுதியில் வெற்றி பெறவில்லை

ராஜஸ்தானிலும் சத்தீஸ்கரிலும் மிக இலகுவாக வெற்றி பெற்ற காங்கிரஸ் ராஜஸ்தானில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறவில்லை. 200 தொகுதிகள் உள்ள ராஜஸ்தானில் வேட்பாளர் ஒருவர் மரணமானதால் 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அறுதிப் பெரும்பான்மைக்கு இரண்டு குறைவாக இருந்தமையால் இரண்டு தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்ற மமதா பானர்ஜி ஆதரவுக் கடிதம் கொடுத்தமையினால் காங்கிரஸ் ஆட்சியமைக்கிறது. 2013 ஆம் ஆண்டுத் தேர்தலில் பாரதீஜ ஜனதாக் கட்சி 163 தொகுதிகளிலும் காங்கிரஸ் 73 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இம்முறை  காங்கிரஸ் கட்சி 99 தொகுதிகளிலும் பாரதீஜ ஜனதா 21 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.

மத்தியப் பிரதேசத்திலும்  ராஜஸ்தானிலும் பாரதீய ஜனதா கடிமையான  போட்டியைக் கொடுத்தது. அதிக மான தொகுதிகளில்  நூற்றுக்  கணக்கான வாக்கு வித்தியாசத்தில் பாரதீய ஜனதா தோல்வியடைந்தது. மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை விட அதிகமான வாக்குகளைப் பெற்றும் குறைந்த தொகுதிகளிலேயே பாரதீஜ ஜனதா வெற்றி பெற்றது. முன்னாள் முதலமைச்சரும் 12 அமைச்சர்களும் தோல்வியடைந்தது பாரதீய ஜனதாவுக்குப் பின்னடைவே. மத்தியப் பிரதேசத்தில் ஒரு சதவீத வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 2013 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சியும்  காங்கிரஸ்  கட்சியும் பெற்ற வாக்குகளைவிட குறைந்த வாக்குகளையே இந்தத் தேர்தலில் பெற்றுள்ளன. வாக்குகள் ஏனைய கட்சிகளுக்கும் பிரிந்து சென்றுள்ளன. சுயேட்சைகள் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார்கள்.
பண மதீப்பீட்டு இழப்பு, ஜி எஸ்.டி வரி, விவசாயிகளின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமை, ஆளும் கட்சிகளுக்கு எதிரான மனநிலை, வறுமை, வேலையின்மை நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை மோடி நிறவேற்றாமை ஆகியவற்றைத் தேர்தலின் முடிவு உணர்த்தியுள்ளது.

ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.  மோடிக்கு எதிராக ராஜீவால் நிற்க முடியுமா என்ற கேள்விக்கும் விடை கிடைத்துள்ளது.
சூரன்.ஏ.ரவிவர்மா


Monday, December 3, 2018

தமிழக அரசியல்வாதிகளை தடுமாறவைக்கும் ஊடக அரசியல்


தமிழக அரசியல் வரலாற்றில் திராவிட முன்னேற்றக் கழகமும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் பரம விரோதிகளாகச் செயற்பட்டு வருகின்றன. தமிழகத்தின் ஏனைய அரசியல் கட்சிகள்அனைத்தும் தேர்தல் காலத்தில் இந்த இரண்டு கட்சிகளுடனும் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டன. தேசியக் கட்சிகளான காங்கிரஸும் பாரதீய ஜனதாக் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. அவையும் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு திராவிட முன்னேற்றக் கழகத்துடனும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடனும்  கூட்டணி சேர்ந்தன.

எதிரணி அரசியல்  தலைவர்களின்  எதிர்பாராத சந்திப்பை தமிழக ஊடகங்கள்  மிகைப்படுத்தி ஊதிப்பெரிதாக்குவதில் அதிக அக்கறை காட்டுகின்றன. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு எதிராக வைகோ நடைப்பயணம் செய்தார். அப்போது  அதேபாதையால் சென்ற ஜெயலலிதா காரைவிட்டு இறங்கி வைகோவை நலம் விசாரித்தார்.  அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவுடன் வைகோ இணைவார் என ஊடகங்கள் கருத்துத் தெரிவித்தன.  அது நிஜமாகாமலே ஜெயலலிதா இறந்துவிட்டார்.

காங்கிரஸ் தலவர் ராகுலை, திருமாவளவன் சந்தித்தபின் அடுத்த தேந்ர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் தனது கட்சி போட்டியிடும்  என அறிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு ராகுல் செக் வைத்துள்ளார் என ஊடகங்கள் தெரிவித்தன. கமலும் ராகுலும் சந்தித்த பின்னர் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கழற்றிவிட,  காங்கிரஸ் தயாராகிவிட்டதாக ஊடகங்கள் கதை அளந்தன. ஸ்டாலினும் தினகரனும் ஹோட்டலில் தங்கியபோது இரகசியப் பேச்சு வார்த்தைஎன செய்தி வெளியாகியது.

மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் கடந்த தேர்தல்களின்போது ஒன்றாக இணைந்த வைகோவும் திருமாவளவனும் அடுத்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைய விருப்பம் கொண்டுள்ளனர். ஸ்டாலினை முதலமைச்சராக்குவேன் என வைகோ சபதமிட்டுள்ளார். கஜா புயலில் கோரத்தாண்டவத்தின் பிற்பாடு   அமைச்சர்கள் செயற்படவில்லை என ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஆனால், வைகோ புகழந்து தள்ளியுள்ளார். இயற்கை அனர்த்தத்தின் போது போது ஜெயலலிதாவைவிட சிறப்பாக தமிழக அரசு  செயற்படுகிறது என வைகோ கருத்துத் தெரிவித்தார். ஸ்டாலினை கைவிட்டு எடப்பாடியுடன் கைகோர்க்க வைகோ தயாராகிவிட்டார் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.


அரசியல்வாதிகள் எதிர்பார்க்காத கோணத்தில் செய்திகளை வெளியிட்டு அவர்களைத் திக்கு முக்காடவைப்பதில் ஊடகங்கள் முனைப்புக் காட்டுகின்றன. ஊடகங்களில் வெளியாகும் செய்திகளைப்பார்த்து தொண்டர்கள் கலக்கமடைவார்கள். காலையில் வெளியான செய்தியைத் தலைப்பாக்கி இரவில் சுடச்சுட விவாதக்  களமாக்குவதில் தொலைக்காட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. நெறியாளராகச் செயற்படுபவர்கள் தாம் நினைக்கும் பிழையான பாதையில் விவாதிப்பபவர்களை அழைத்துச் செல்ல முயற்சிப்பர்கள். சிலர் அவர்களது வலையில் விழுந்துவிடுவார்கள். சிலர் சாமர்த்தியமாகத் தப்பிவிடுவார்கள்.
காங்கிரஸ், முஸ்லீம் லீக் ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. வைகோவின் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,  திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய இரண்டு கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இணைய விரும்புகின்றன. திராவிட முன்னேற்றக் கழகப் பொருளாளர் துரைமுருகனின் தொலைக்காட்சிப் பேட்டி ஒன்று வைகோவையும் திருமாவளவனையும் பதறவைத்துள்ளது. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகமும் விடுதலைச் சிறுத்தைகளும் நட்பு கட்சிகள். காங்கிரஸ், முஸ்லிம் லீக் ஆகியன ரெகுலர் கட்சிகள் என துரைமுருகன் பேட்டியில் தெரிவித்தார். அந்தப் பேட்டியின் சாராம்சத்தை அப்படியே மாற்றி கொழுத்திப் போட்டன ஊடகங்கள்.

வைகோவுக்கும் திருமாவளவனுக்கும் திராவிட முன்னேற்றக் கூட்டணியில் இடம் இல்லை என ஊடகங்கள் செய்தியை வெளியிட்டன. இதனால் கலக்கமடைந்த வைகோ,ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டும் என அறிவித்தார். திருமாவளவன் பதற்றப்படாமல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து கருத்துத் தெரிவித்தார். பரபரப்பாக செய்திகள் வெளியான சந்தர்ப்பத்தில் ஸ்டாலினைச் சந்தித்த வைகோவும்   திருமாவளவனும் தெளிவடைந்தனர்.


காவிரிக்குக் குறுக்கே  மேகதாது எனுமிடத்தில் கர்நாடகம் அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒப்புதலளித்துள்ளது. அதனை எதிர்த்து போராட்டம் நடத்துவதற்காக திராவிட முன்னேற்றக் கழகம் அனைத்துக் கட்சிக்கூட்டத்தைக் கூட்டியது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பாரதீய ஜனதாக் கட்சி ஆகியவற்றுக்கு எதிராக அரசியல் செய்யும்  திராவிட முன்னேற்றக் கழகம் டாக்டர் ராமதாஸ், விஜயகாந்த்,வாசன், கமல், தினகரன் ஆகியவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் அனைத்துக் கட்சிக் கூட்டத்தை நடத்தியுள்ளது. அடுத்த தேர்தலுக்கான கூட்டணிக் கூட்டமாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.

காங்கிரஸ்,மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்,விடுதலைச் சிறுத்தைகள்,இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி, மாக்ஸிஸ் கட்சி, முஸ்லிம் லீக், மனித நேயக்கட்சி ஆகியன அடுத்த தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் இடம் பிடிக்கும் கட்சிகள் என கண்டறியப்பட்டுள்ளன. தமிழகத்தில் பல கட்சிகள் பதியப்பட்டிருந்தாலும் திராவிட முன்னேற்றக் கழகம்,அண்னா திராவிட முன்னேற்றக் கழகம்,தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகியவைதான் தேர்தல்  திணைக்களத்தால் அங்கீகாரம் வழங்கப்பட்ட கட்சிகள். தேர்தலில் குறைவான வாக்குகள் பெற்றதால் ஏனைய கட்சிகளின் அங்கீகாரம் நீக்கப்பட்டது. தேர்தல்  திணைக்களத்தின் அங்கீகாரத்தை இழந்த கட்சிகள் மீண்டும் அதனைப் பெறுவதற்கு முயற்சிக்கின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் இணைந்தால்தான் இழந்த அங்கீகாரத்தைப் பெறலாம் என வைகோவும் திருமாவளவனும் நம்புகின்றனர்.

நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் அதிக தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெறவேண்டும் என ஸ்டாலின் எதிர்பார்க்கிறார். திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேரத் துடிக்கும் கட்சிகளின் தலைவர்களும் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கிறார்கள். தேர்தல் கூட்டணிப் பேச்சு வார்த்தையின்  பின்னர்தான் உள்ளே இருப்பது யார்? வெளியேறப் போவதுயார்? புதிதாக இடம் பிடிப்பது யார்?  போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கும்.

சூரன் ஏ. ரவிவர்மா.