Friday, November 9, 2007

ஜேன் ஆச்சி

ஜேன் ஆச்சி

ராஜ ஸ்ரீகாந்தன்

இருளின் போர்வை இன்னும் முற்றுமுழுதாக அகலவில்லை. பனியின் குளிர் நடுக்கியது. சயந்தன் வழமைபோலத் தன் நடையினைத் தொடர்ந்தான். காலநிலையின் கொடுமைகள் என்றுமே அவன் நடையைப் பாதித்ததில்லை. அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சியைச் செய்ததபின் ஒரு குறிப்பிட்ட தூரம்வரை நடக்காவிடில் அன்றைய பொழுது அவனுக்கு முழுமைபெறாது.

பாடசாலைத் தோட்டங்களினூடு சென்று பயிர்களின் பூரிப்பினில் மெய்மறந்து, விடுதியை அடுத்துள்ள வெண்சாலையில் செவ்வலரிப் பூமரங்களினூடாக நடந்து பாடசாலையின் வாசற்புறத்தை அடைந்தான்.
ஜேன் ஆச்சி இன்னும் வரவில்லை. அவள் வரும் பாதை, முதியோபர் விடுதியிலிருந்து அந்தச் செவிடர் பாடசாலையை இணைக்கும் சரளை பெயர்ந்த அந்தச் சாலை வெறிச்சோடிக்கிடந்தது. சயந்தன் நடையினைத் தொடர்ந்தான். பாடசாலை விளையாட்டரங்கிற்கு வெளியே அடர்ந்து வளர்ந்திருந்த பற்றைகளின் நடுவேயுள்ள முதியோர் விடுதியின் பிரேதச்சாலைக்குச் சென்று மீண்டபோது தூரத்திலே ஜேன் ஆச்சி வருவது தெரிந்தது.

இடது கையிற் பூக்கூடை, வலது கையிற் கொக்கைத் தடி. அந்தக் கொக்கைத் தடியினையே ஊன்றுகாலாகவும் பாவித்துத் தாண்டித் தாண்டி வந்து கொண்டிருந்தாள். சயந்தன் மணிக்கூட்டை நோக்கினான்.

ஆறுமணியாயிருந்தது. என்றுமேயில்லாமல் இன்று ஜேன் ஆச்சி அரை மணித்தியாலம் பிந்திவிட்டாள்.

"ஆயுபோவன் ஜேன் நோனா"
"வணக்கம் தொரே"

சயந்தன் சிங்களத்திலேயே உரையாடலைத் தொடர்ந்தான்.
"என்ன இன்று அரை மணித்தியாலம் பிந்திவிட்டீர்கள்?"

"ஆமா தொரே ரொம்பப் பிந்திப் போச்சு ஜேன் ஆச்சி தமிழிற் கூறினாள்.
ஜேன் ஆச்சியின் காலியிலுள்ள வந்துறம்பைக் கிராமத்தைச் சேர்ந்த உயர்குடிப் பிறந்த சிங்கள மாது. கணவன் அரசாங்க உயர்அதிகாரியாகக் கடமையாற்றி இறந்துபோக மக்கட் பேறற்ற ஜேன் நோனா தனது பெருந்தனத்தை தர்மஸ்தாபனங்களுக்குத் தானஞ் செய்துவிட்டு முன்பின் அறியாத இந்தக் கிராமத்திலுள்ள முதியோர்விடுதியில் வந்து சேர்ந்துவிட்டாள்.

சயந்தன் செவிடர் பாடசாலைக்கு வந்து ஒரு சில மாதங்கள் தான் ஆகின்றன. இந்தக் கால இடைப்போதில் ஒருவருடன் ஒருவர் சுய அறிமுகம் செய்துகொண்டு, தினமும் அதிகாலையில் நிகழ்வுறும் பதினைந்து நிமிட நேரச் சந்திப்பின் போது சயந்தன் பெற்றுக் கொண்ட தகவல்கள் தான் மேற்கூறியவை.

அவர்களிடையே நிகழும் உரையாடல் மிகவும் விசித்திரமானது. சயந்தன் தனது அரைகுறைச் சிங்களத்தில் அவளுடன் பேசுவான். ஜேன் ஆச்சி குழந்தைத் தமிழில் அவனுடன் பேசுவாள். சிலபோது ஒருவரின் பேச்சு அடுத்தவருக்கு புரியாமலிருப்பதும் உண்டு. ஆனால் புரிந்து கொண்டதுபோற் பாவனை பண்ணுவார்கள்.

உயர இருந்த பாதிரிப் பூங்கொத்தைக் கொக்கைத் தடியினால் ஜேன் ஆச்சி வளைத்தாள். இலையொன்று ஒடிந்ததால் வழிந்த ஒரு துளி பால் அண்ணாந்து நின்ற அவளுடைய வலது கண்ணில் விழுந்துவிட்டது. துடித்தாள். பூக்கூடை கீழே விழுந்து பூக்கள் சிதறின.

"தொரே, ஓடி வாங்க தொரே, என் கண் போயிடிச்சு"

கீழே விழுந்த கிழவியைச் சயந்தன் ஓடிவந்து தாங்கிக் கொண்டான். வயோதிப முதிர்வினால் தளர்ந்து போயிருந்த அந்த உடல் வேதனையால் மேலும் நடுங்கியது. சுருக்கம் விழுந்த முகத்தில் இடுங்கியிருந்த வலது கண்ணை இரண்டு கைகளாலும் பொத்தியிருந்தாள். சயந்தன் அவளது கைகளை வலிந்து விலக்கிவிட்டு தனது கைக்குட்டையைப் பொதிந்து வாயில் வைத்து ஊதி அவளுடைய கண்ணில் மெதுவாக அழுத்தினான். பின்னர் அவளைத் தாங்கிச் சென்று அருகிலிருந்த நீர்க் குழாயில் கண்களை நன்றாகக் கழுவச் செய்தான்.

ஜேன் ஆச்சி ஒருபடி கண்ணைத் திறந்துகொண்டாள். வலது கண் கோவைப் பழம் போற் சிவந்திருந்தது. சயந்தன் நிலத்திற் சிந்தியிருந்த பூக்களை எடுத்துக் கூடையிற் போட்டான்.

"ஓ, தொரே அதுவளைப் போடவாணாம், வீசுங்கோ. மண்ணில் விழுந்தா கணதெய்யோ கோவிச்சுக்கும்"

சயந்தன் மனதிற்குள் சிரித்துக் கொண்டே புதிய மஞ்சள் அரளிப் பூக்களையும், பாதிரிப் பூக்களையும் பறித்துக் கூடையில் நிரப்பினான்.

"ஏன் நோனா உங்கள் விடுதியில் புத்தகோயில் இல்லையா?"

"அங்க கணதெய்யோ, கதரகமதெய்யோ தான் இருக்கின்றார்கள். எது இருந்தாத்தான் என்ன தொரெ நானுகள் ஒரு தெய்யோவோடேயோ பிறந்தது. இது எல்லாம் நாம்பள் வாழும்போது நடுவிலே தானே வருவுது. ஒவ்வொருத்தன் ஒவ்வொரு பெயரு வெச்சுக்கிட்டான். மறும்படி எல்லாமே ஒண்ணுதான். நாம்பளு மனசிலே அமைதி கிடைச்சா போதும் தொரெ"

சயந்தன் பிரமித்துவிட்டான். அண்மையில் அவன் சென்ற சர்வமத வாதிகளின் கூட்டத்தில் மெத்தப்படித்த மேதாவியொருவர் பல மணித்தியாலங்கள் பேசியும் புரிய வைக்க முடியாத சர்வ மத வாதிகளின் தவமொன்றை எவ்வளவு எளிமையாக தனது குழந்தைத் தமிழில் பேசிவிட்டாள்.

"ஆமா தொரே, உங்களோடை ஊமைப்பிள்ளைங்க எப்படிப் பேசிக்கிறாங்க?"

எவ்வளவோ மாதங்களாக அந்த ஊமைப் பாடசாலைக்கு வந்து பூக்கள் பறித்துச் செல்லும் ஜேன் ஆச்சிக்கு இன்று தான் அந்தக் கேள்வியைக் கேட்க வேண்டும் போற் தோன்றியது.

"சைகைகளாற் பேசிக் கொள்கிறார்கள்." சயந்தன் மிகச் சிரமப்பட்டு "சைகை" என்ற சொல்லுக்கேற்ற "சிங்கள" பதத்தைக் கண்டுபிடித்துக் கூறினான். அவள் அதனைப் புரிந்து கொண்டாள்.

"தெமலுப் பிள்ளங்க, சிங்கலப் பிள்ளங்க எல்லாமே ஒரே மாதிரி பேசிக்குவாங்கலா?"

"ஆம் நோனா" என்று சயந்தன் பூக்கூடையை அவளிடம் கொடுத்தான்.

"அப்ப ஒலகத்தில எல்லா மனுசங்களுமே ஊமைங்களாகப் பிறந்தா நல்லது தொரே" என்றவாறு கொக்கைத் தடியை ஊன்றுகோலாக்கி அந்த ஊமைப் பாடசாலையிலிருந்து முதியோர் விடுதியை நோக்கிச் செல்லும் சரளைபெயர்ந்த சாலையில் தாண்டித் தாண்டிச் சென்றாள் ஜேன் ஆச்சி.

No comments: