Monday, August 18, 2008

தமிழக அரசியல் கட்சிகள் மத்திய அரசைக் காப்பாற்றுமா?


காங்கிரஸ் தலைமையிலான இந்திய மத்திய அரசாங்கம் நீடிக்குமா இல்லையா என்ற முடிவு 22 ஆம் திகதி தெரிந்துவிடும். ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்திருந்த இடதுசாரிகள் தமது ஆதரவை வாபஸ் பெற்றதனால் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான மத்திய அரசாங்கம் அறுதிப் பெரும்பான்மையை இழந்துவிட்டது.
காங்கிரஸ் கட்சியை அரியாசனத்தில் இருத்தி அழகுபார்த்த இடதுசாரிகள், தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கியது மட்டுமன்றி காங்கிரஸ் கட்சியை ஆட்சிபீடத்திலிருந்து வெளியேற்றவேண்டும் என்று கங்கணம் கட்டியுள்ளன.
இடதுசாரிகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு எதிர்க்கட்சிகள் பக்கபலமாக உள்ளன. நம்பிக்கை வாக்கெடுப்பில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால் பொதுத் தேர்தலைச் சந்திப்பதற்காக பலமான கூட்டணி அமைப்பதில் எதிர்க்கட்சிகள ஆர்வமாக உள்ளன.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் 260 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியில் 263 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். காங்கிரஸ் கட்சியை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்ற முடிவை இன்னமும் எடுக்காமல் 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர்.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தினால் தான் இந்திய அரசாங்கம் ஆட்டம் கண்டுள்ளது. இதேவேளை இந்த அரசியல் மாற்றத்துக்கு இந்தியாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களான அம்பானி சகோதரர்களும் காரணம் என்றும் கூறப்படுகிறது. அம்பானி சகோதரர்களில் ஒருவர் காங்கிரஸை ஆதரிப்பதாகவும் இன்னொருவர் காங்கிரஸை ஆட்சியில் இருந்து வெளியேற்ற முயற்சிப்பதாகவும் தெரிகிறது.
2004 ஆம் ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தலில் தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
இந்தியப் பொதுத் தேர்தலின்போது ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. நான்கு தொகுதிகளிலும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றது.
தமிழக சட்டமன்ற தேர்தலின்போது தொகுதிப் பங்கீட்டினால் திருப்திப்படாத மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் அக்கூட்ட ணியிலிருந்து வெளியேறி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தது. இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இணைந்து போட்டியிட்டு வெற்றி பெற்ற நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிரணி வரிசைக்கும் போனார்கள்.
மறுமலர்சசி திராவிட முன்னேற்றக் கழகத்தில் உட்கட்சிப் பிரச்சினையால் அக்கட்சியை விட்டு வெளியேறிய செஞ்சி ராமச்சந்தின், எல். கணேசன் ஆகிய இருவரும் மீண்டும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் சங்கமமானார்கள்.
22 ஆம் திகதி நடைபெறவுள்ள நம்பிக்கை வாக்கெடுப்பில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் எதிர்த்து வாக்களிப்பார்கள். அதாவது, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பலத்தில் வெற்றி பெற்ற இரண்டு உறுப்பினர்களும் தாம் நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்படுவதற்குக் காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சியை எதிர்க்க உறுதி பூண்டுள்ளனர்.
ஆனால் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய நாடாளுமன்ற உறுப்பினர்களில் இருவரும் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க உள்ளனர்.
காங்கிரஸ் கட்சியை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கும் வைகோ தமது சகாக்கள் இருவரையும் எச்சரித்துள்ளார். காங்கிரஸை ஆதரித்தால் அவர்களின் நாடாளுமன்ற பதவிக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று வைகோ சொல்லியுள்ளார்.
செஞ்சி ராமச்சந்திரனும் எல். கணேசனும் தமது பதவியை காப்பாற்றுவார்களா? காங்கிரஸ் கட்சியை காப்பாற்ற முயற்சிப் பார்களா என்பது மத்திய அரசு பெரும் பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பின் போதுதான் தெரியவரும்.
ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தன்னகத்தே கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும் காடுவெட்டி குருவின் விடு தலைக்காக மறைமுகமாக பேரம்பேசுகிறது. காடுவெட்டி குரு கைது செய்யப்பட்டபோது மத்தியில் இருக்கும் தனது செல்வாக்கினால் அவரை வெளியே கொண்டுவந்துவிடலாம் என டாக்டர் ராமதாஸ் நினைத்திருந்தார். அவர் எதிர்பார்த்தபடி காடுவெட்டி குருவை வெளியே கொண்டுவர முடியவில்லை.
டில்லியில் முதல்வர் கருணாநிதியின் செல்வாக்குக்கு முன்னால் டாக்டர் ராமதாஸின் செல்வாக்கு செல்லாக்காசாகி விட்டது. 22 ஆம் திகதிக்கு முன்னர் காடு வெட்டி குருவை விடுதலை செய்வது சிரமம், காங்கிரஸ் தலைமையிலான அரசு மத்தியில் நீடிப்பதற்கு பாட்டாளி மக்கள் கட்சி உதவி செய்தால் காடுவெட்டிகுருவைப்பற்றி பரிசீலிக்கலாம் என காங்கிரஸ் தரப்பில் இருந்து பதிலளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சி கலைக்கப்பட்டால் காடுவெட்டி குரு விடுதலையாவது சந்தேகம். அதேவேளை பாட்டாளி மக்கள் கட்சி இரண்டு அமைச்சர்களை இழக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அமைச்சர்களே அரசுக்கு எதிராக
(தொடர்ச்சி 7 ஆம் பக்கம்)
வாக்களிப்பது என்பது நடைமுறைச் சாத்திய மற்றது.
அமைச்சுப் பதவிகளைத் தூக்கி எறிந்து விட்டு எதிர்த்து வாக்களிக்கலாம்.
எனினும் அமைச்சு பதவி, காடுவெட்டி குருவின் விடுதலை ஆகிய இரண்டு காரணங்களினால் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வாக்களிக்க முடியாத நிலையில் உள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு மாற்றீடான கூட்டணியில் இடம் கிடைத்தால் பாட்டாளி மக்கள் கட்சி எதிர்த்து வாக்களிக்கும் எனக் கருதப்ப டுகிறது. மிகக் குறுகிய நாட்களே உள்ளதால் பாட்டாளி மக்கள் கட்சி அணி மாற சந்தர்ப்பம் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தினால் ஒதுக்கப்பட்ட தயாநிதிமாறன் நடுநிலை வகிப்பார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறியுள்ளனர். தயாநிதி மாறன் இது தொடர்பாக கருத்து எதனையும் வெளிப்படுத்தவில்லை.
பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் தயாநிதி மாறனின் மீது மதிப்பு வைத்துள்ளதால் அவர் எதிர்த்து வாக்களிப்பது சாத்தியமில்லை.
காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் மீள தக்க வைத்துக்கொள்வதற்கு 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்க வேண்டும். 12உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சி பக்கம் சாய்வார்களா அல்லது காங்கிரஸ் கட்சியில் இருந்து சிலர் வெளியேறுவார்களா என்பது 22ஆம் திகதி தெரிந்துவிடும்.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு;20.07.2008

1 comment:

Unknown said...

plant more trees to arrest the global warming.please do this work quickly..