Wednesday, December 1, 2010

ஸ்பெக்ரம் ஊழல் பிரச்சினையால்தடுமாறுகிறது இந்திய மத்திய அரசு
இந்தியாவையே உலுக்கிக் கொண்டிருக்கும் ஊழல்களுள் முதன்மையாகக் கருதப்படுவது "ஸ்பெக்ரம் 3ஜி' முறைகேடு. சுமார் 1.76 இலட்சம் கோடி மதிப்பான "ஸ்பெக்ரம் 3ஜி' விஷயத்தில் முறைகேடு நடந்திருப்பதாக ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டி தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவுக்கு எதிராக களமிறங்கின. எதிர்க்கட்சிகளின் நெருக்குதலை சமாளிக்க முடியாத மத்திய அரசு கொடுத்த நெருக்கடி காரணமாக ராசா அமைச்சுப் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். ராசாவின் ராஜினாமாவை கனத்த இதயத்துடன் அனுமதித்த முதல்வர் கருணாநிதி குற்றமிழைக்காத ராசா மீண்டும் அமைச்சராவார் என்று எதிர்பார்த்தார்.
குற்றம் என்ன செய்தார் ராசா என்று கேட்ட கருணாநிதிக்கு தகுந்த ஆதாரங்களுடன் குற்றப் பட்டியலை வெளியிட்டன டில்லி ஊடகங்கள். இணையத்தளங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வெளியான ஆதாரங்களைக் கண்டு திகைத்துப் போயுள்ள முதல்வர் கருணாநிதி ராசாவின் ராஜினாமாவுடன் ஸ்பெக்ரம் விவகாரம் முற்றுப் பெற்றுவிடும் என்றே இந்திய மத்திய அரசு எதிர்பார்த்தது. ராசா ராஜினாமாச் செய்த பின்னரும் தொடர்ச்சியாக இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் செயற்படவிடாது எதிர்க்கட்சிகள் முடக்கின.
தொலைத் தொடர்புத்துறை அமைச்சு தயாநிதிமாறனுக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்திருந்த வேளை ராசாவின் கைகளுக்குச் சென்றது. கருணாநிதி, மாறன் குடும்பப் பிரச்சினை சுமுகமாகத் தீர்ந்துவிட்டதால் தயாநிதிமாறனுக்கு தொலைத் தொடர்பு அமைச்சுப் பதவி வழங்கப்படாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தொலை தொடர்புத்துறை அமைச்சராக தயாநிதிமாறன் வரக்கூடாது என்பதில் டில்லியில் உள்ள சில தரகர்கள் உறுதியாக இருந்தார்கள். தங்களுடைய தொழிலுக்கு தயாநிதிமாறன் இடைஞ்சலாக இருப்பார் என்று அந்தத் தரகர்கள் நம்பினார்கள். இது பற்றி நீரா ராடியார், கனிமொழி, ஆர். ராசா ஆகியோரின் தொலைபேசிப் பரிவர்த்தனைகள் அம்பலமாகியுள்ளன.
சி.பி.ஐ. பொறுப்பெடுத்த ஸ்பெக்ரம் ஊழல் விவகாரத்தில் பல பெரும்புள்ளிகள் அகப்படலாம் என்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெக்ரம் ஒதுக்கீடு ரத்துச் செய்யப்படலாம் என்ற கருத்தும் உள்ளது. இந்த விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருப்பதனால் அரசாங்கம் இதில் தலையிட முடியாது. முறைப்படி ஏலம் விடாது ஒதுக்கீடு செய்ததனால் சுமார் 1.76 இலட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றனர். இந்த இழப்பீட்டை நிவர்த்தி செய்தால் எதிர்க்கட்சிகள் அமைதியடைந்துவிடும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
இதேவேளை அப்படி ஒரு முடிவை அரசாங்கம் எடுத்தால் அன்று பெறுமதி குறைத்துக் கொடுத்ததற்கான காரணத்தை அரசாங்கம் வெளியிட வேண்டிய நெருக்கடி ஏற்படும். தவறு நடந்ததை அரசாங்கமே ஒப்புக் கொண்டதாக ஏற்பட்டுவிடும்.
ஸ்பெக்ரம் விவகாரத்தை இந்திய அரசு தீர்த்து வைத்தால் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கருதப்படும். நீதிமன்றம் கேட்ட சில கேள்விகள் இந்திய அரசை சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளன. ஸ்பெக்ரம் ஊழல் பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு பிரதமர் இன்னமும் பதிலளிக்காதது ஏன் என்ற நீதிமன்றத்தின் கேள்வி அரசாங்கத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
ஸ்பெக்ரம் விவகாரத்தினால் காங்கிரஸ் கட்சிக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படும் என்று எதிர்க்கட்சிகள் எதிர்பார்த்தன. பீகார் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பலத்த அவமானத்தைக் கொடுத்துள்ளது. பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படு தோல்வி அடைந்துள்ளது. 243 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி ஆறு இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற ராகுல் காந்தியின் பரீட்சார்த்த முயற்சி காங்கிரஸ் கட்சியை படுகுழியில் வீழ்த்தியுள்ளது.
பீகாரில் மாநில கட்சிகளுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி ராகுலின் விருப்பத்துக்கு இணங்க தனித்துப் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியின் பரம எதிரியான நீதிஸ்குமாரின் தலைமையிலான கூட்டணி அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ளது. ராகுல் காந்தியின் வழிகாட்டல்களினால் வட இந்தியாவில் எழுச்சி கண்ட காங்கிரஸ் கட்சி பீகார் தேர்தல் முடிவும் சாதகமாக அமைந்தால் அதே வழியில் தமிழகத்திலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற கோஷம் எழுந்திருக்கும். பீகாரில் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த படுதோல்வி தமிழகத் தலைவர்களின் மனதை மாற்றிவிடும் ஒரு நிலை ஏற்படலாம்.
விஜயகாந்த் நடித்து முதன் முதலாக இயக்கிய விருதகிரி அரசியல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் அதிக கவனம் செலுத்திய விஜயகாந்த் நடித்து அண்மையில் வெளிவந்த படங்கள் அனைத்தும் தோல்வி அடைந்துள்ளன. திரைப்படத் தோல்வியிலிருந்து மீள்வதற்கு சொந்தமாகப் படத்தைத் தயாரித்து தானே இயக்கினார் விஜயகாந்த். விருதகிரி படத்தை வெளியிடுவதற்கு தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று விஜயகாந் கூறியுள்ளார்.
தமிழக சினிமாத்துறை தமிழக அரசின் செல்வாக்கு மிகுந்தவர்களின் கைகளில் இருப்பதாகக் குற்றச்சாட்டு உள்ளது. அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போவதாகக் கூறிய விஜயை பணிய வைத்த திரைப்பட நிறுவனம் அவர் நடித்த படங்களைத் தோல்விப்படமாக்கியது. தமிழ்த் திரைப்படத்தின் அவலத்தை முதல்வரின் முன்னால் முழங்கிய அஜித் வீட்டுக்கு அழைத்து மிரட்டப்பட்டார் என்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் ஜெயலலிதா குற்றம் சாட்டினார்.
ஜெயலலிதாவின் குற்றச்சாட்டு உண்மை என்பது போல் விஜயகாந்தின் கூற்று உள்ளது. கலாநிதிமாறன், ஸ்டாலினின் மகன் உதயநிதி, அழகிரியின் மகன் துளா தயாநிதி ஆகியோர் தமிழ்த் திரைப்படங்களை வாங்கி வெளியிடுகிறார்கள். தவிர இவர்கள் தமிழ்த் திரைப்படங்களைத் தயாரிக்கிறார்கள். தமிழகத்தின் பல தியேட்டர்கள் இவர்களின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன. தமிழகத்தின் பிரதான நகரங்களில் உள்ள வசதி மிக்க தியேட்டர்களை இந்த மூவரும் ஒப்பந்தம் செய்துள்ளனர். ஆகையினால் அந்தத் தியேட்டர்களில் விஜயகாந்தின் திரைப்படம் திரையிடப்பட மாட்டாது.
தமிழகத்தில் உள்ள தியேட்டர்கள் ஏ.பீ.சீ. என்று தரம் பிரிக்கப்பட்டுள்ளன. ஏ தரம் உள்ள நல்ல தியேட்டர்கள் கலாநிதி, உதயநிதி, துளா தயாநிதி ஆகியோரின் கைகளில் உள்ளன. அவர்களின் வசமுள்ள தியேட்டர்களில் விஜயகாந்தின் திரைப்படம் திரையிடப்பட மாட்டாது. தரம் குறைந்த தியேட்டர்களில்தான் விருதகிரி திரையிடப்பட வேண்டிய நிலை உள்ளது. விஜயகாந்தின் படத்துக்கு எதிர்பார்த்த வசூல் கிடைப்பது சாத்தியமில்லை. திராவிட முன்னேற்றக்கழகத்தின் கைகளில் உள்ள அச்சு ஊடகங்களும், இலத்திரனியல் ஊடகங்களும் விஜயகாந்தின் படத்தை இருட்டடிப்புச் செய்து விடும்.
விஜயகாந்தின் அரசியல் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் திராவிட முன்னேற்றக் கழகம் விஜயகாந்தின் திரைப்பட வளர்ச்சியை அடியோடு புரட்டிப் போட கங்கணம் கட்டியுள்ளது.
அண்ணாதிராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து மைலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினராகத் தெரிவான நடிகர் எஸ்.வி. சேகர், விஜயகாந்தைப் புகழ்ந்து பாராட்டியுள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினரான எஸ்.வி.சேகர் கட்சியுடனான சகல தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டு முதல்வர் கருணாநிதியைச் சந்தித்து புகழ்ந்து பாடினார்.
எஸ்.வி. சேகர் கட்சி மாறப் போகிறார் என்ற செய்தி பரபரப்பாக அடிபட்டது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து கொண்டே தமிழக அரசைப் பாராட்டிப் பேசினார். பின்னர் ராகுல் காந்தியைச் சந்தித்தார். அப்போது அவர் காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறார் என்று வதந்தி பரவியது. விஜயகாந்த்தான் நாட்டை ஆளத் தகுதியானவர் என்று இப்போது திருவாய் மலர்ந்தருளியுள்ளார்.
விஜயகாந்துக்கு ஆதரவாக பிரபல நடிகர்கள் யாரும் குரல் கொடுக்காத நிலையில் எஸ்.வி. சேகர் விஜயகாந்தை ஆதரித்துக் குரல் கொடுத்துள்ளார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கினால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற எஸ்.வி. சேகரினால் விஜயகாந்துக்கு எந்தவித நன்மையும் ஏற்படப் போவதில்லை.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாரவெளியீடு28/11/10

1 comment: