Friday, April 1, 2011

பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா



இந்திய பாகிஸ்தான் அணிகளுக்கிடையே மொஹாலியில் நடைபெற்ற இரண்டாவது அரை இறுதி ஆட்டத்தில் 29 ஓட்டங்களினால் வெற்றி பெற்ற இந்தியா, இறுதிப் போட்டியில் விளையாடும் தகுதியைப் பெற்றது. உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இப்போட்டியில் பாகிஸ்தானின் செயற்பாடு ரசிகர்களை ஏமாற்றிவிட்டது. இந்திய அணியின் பந்துவீச்சும் களத்தடுப்பும் பாகிஸ்தானை கட்டிப்போட்டது. இந்திய அணியில் அஸ்வின் நீக்கப்பட்டு நெஹ்ரா அணியில் இணைக்கப்பட்டார். நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுக்களை இழந்து 260 ஓட்டங்களை எடுத்தது. ஷேவாக், சச்சின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். ஷேவாக் வழக்கம் போல் பௌண்டரியுடன் ஆட்டத்தை ஆரம்பித்தார். உமர் குல்லின் முதல் ஓவரில் ஒரு பௌண்டரி அடித்த ஷேவாக் உமர் குல்லின் அடுத்த ஓவரில் ஐந்து பௌண்டரிகள் அடித்தார். அந்த ஓவரில் 27 ஓட்டங்கள் எடுக்கப்பட்து. ஷேவாக்கின் அதிரடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை. வஹாப் ரியாஸின் பந்தில் 38 ஓட்டங்களுடன் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். சச்சின், ஷேவாக் ஜோடி 36 பந்துகளில் 48 ஓட்டங்கள் எடுத்தது. ஷேவாக் வெளியேறியதும் கம்பீர், சச்சினுடன் இணைந்தார். இவர்களின் ஆட்டம் பாகிஸ்தானுக்கு அச்சுறுத்தலைக் கொடுத்தது. இந்த ஜோடியும் அதிக நேரம் நின்று பிடிக்கவில்லை. 27 ஓட்டங்கள் எடுத்த கம்பீர் மொஹமட் ஹபீஸின் பந்தை உமர் அக்மலிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 79 பந்துகளில் 68 ஓட்டங்கள் எடுத்தனர். அடுத்து வந்த விராத் கோஹ்லி ஒன்பது ஓட்டங்களுடன் வெளியேறினார். பத்தாவது உலகக் கிண்ணத் தொடரில் சிறப்பாக விளையாடிய யுவராஜ் சிங் வஹாப் ரியாஸின் பந்தில் ஓட்டம் எதுவும் எடுக்காது ஆட்டம் இழந்ததும் பாகிஸ்தான் ரசிகர்களின் ஆரவாரம் மொஹாலியை அதிரவைத்தது. இந்திய ரசிகர்களின் அதிர்ச்சியடைந்தனர். ஐந்தாவது இணைப்பாட்டத்தின் டெண்டுல்கருடன் டோனி இணைந்தார். இந்த இணை ஒற்றை இலக்கத்தில் ஓட்ட எண்ணிக்கையை அதிகமாக்கியதால் ரசிகர்களின் ஆரவாரம் குறைந்தது. ஒருநாள் அரங்கில் 95 ஆவது அரைச் சதம் அடித்தார் டெண்டுல்கர். சிறந்த முறையில் துடுப்பெடுத்தாடிய சச்சின் 85 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 25 ஒட்டங்களில் டோனி ஆட்டமிழந்தார். இந்திய வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டம் இழக்க மறுமுனையில் ரெய்னா போராடினார். கடைசி கட்டத்தில் பவர்பிளேயைப் பயன்படுத்தி உமர் குல்லின் ஓவரில் இரண்டு பௌண்டரிகள் அடித்தார் ரெய்னா. ரெய்னா ஆட்டமிழக்காது 36 ஓட்டங்கள் எடுத்தார். வஹாப் ரியாஸின் பந்துவீச்சு இந்திய அணியை அதிரச் செய்தது. வஹாப் ரியாஸ் ஐந்து விக்கட்டுகளையும் சயிட் அஜ்மல் இரண்டு விக்கட்டுகளையும் மொஹமட் ஹபீஸ் ஒரு விக்கட்டையும் வீழ்த்தினர். 261 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 49.5 ஓவரில் சகல விக்கட்டுகளையும் இழந்து 231 ஓட்டங்கள் எடுத்தது. கம்ரன் அஜ்மல், மொஹமட் ஹபீஸ் ஜோடி களமிறங்கியது. இவர்கள் இருவரும் இணைந்து 54 பந்துகளுக்கு 44 ஒட்டங்கள் எடுத்தனர். சஹீர்கானின் பந்தை யுவராஜிடம் பிடிகொடுத்து கம்ரன் அக்மல் 19 ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். முனாப் பட்டேலின் பந்து வீச்சில் டோனியிடம் பிடி கொடுத்த மொஹமட் ஹபீஸ் 43 ஒட்டங்களில் ஆட்டம் இழந்தார். சுழற் பந்தில் அசத்திய யுவராஜ் சிங் அஸாட் சபீக்கை 30 ஓட்டங்களிலும் யுனிஸ்கானை 13 ஓட்டங்களிலும் வெறியேற்றினார். யுவராஜின் பந்தில் இரண்டு சிக்சர், ஒரு பௌண்டரி அடித்து மிரட்டினார் உமர் அக்மல், உமர் அக்மலின் ஆட்டத்தினால் பாகிஸ்தான் ரசிகர்கள் உற்சாகமாகினர். ஹர்பஜனின் சுழலில் சிக்கிய உமர் அக்மல் 29 ஓட்டங்களில் வெளியேறினார். முனாப் பட்டேலின் பந்துவீச்சில் 3 ஓட்டங்களுடன் அப்துல் ரஸாக் வெளியேறினார். பாகிஸ்தான் அணி 36.2 ஓவர்களில் ஆறு விக்கட்டுகளை இழந்து 150 ஓட்டங்கள் எடுத்தபோது மிஸ்பா உல் ஹக்குடன் ஜோடி சேர்ந்தார் அணித் தலைவர் அப்ரிடி. மிஸ்பா உல் ஹக், அப்ரிடி ஜோடி அணியை மீட்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஹர்பஜனின் பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்ற அப்ரிடி ஷேவாக்கிடம் பிடிகொடுத்து 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். இவர்கள் இருவரும் இணைந்து 34 பந்துகளுக்கு 34 ஓட்டங்கள் எடுத்தனர். அப்ரிடி வெளியேறியதும் பாகிஸ்தானின் நம்பிக்கை தகர்ந்தது. இறுதிவரை போராடிய மிஸ்பா உல் ஹக் 56 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். 49.5 ஓவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்த 231 ஓட்டங்கள் எடுத்தது. ஆட்ட நாயகனாக சச்சின் தேர்வு செய்யப்பட்டார். ரமணி சூரன்.ஏ.ரவிவர்மா மெட்ரோநியூஸ்

No comments: