Monday, August 15, 2011

வெளியேறுகிறது பா.ம.க.தனிமரமாகிறது தி.மு.க.

தமிழக சட்ட மன்றத் தேர்தலின் படுதோல்வியின் பின்னர் கூட்டணிக் கட்சிகளால் ஒதுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக்ழகம் தனிமைப்பட்டுள்ளது. தமிழக சட்ட மன்றத் தேர்தலின் தோல்விக்குப் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலே காரணமென்று தோழமைக்கட்சிகள் கருதுகின்றன. திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர்ந்ததனால் தான் தோல்வியடைந்ததாக காங்கிரஸும், பாட்டாளி மக்கள் கட்சியும் தெரிவிக்கின்றன.
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் துவண்டிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தை தூக்கிவிட காங்கிரஸ் கட்சி தயாராக இல்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தை கைவிட காங்கிரஸ் கட்சி தயாராக உள்ளது. ஆனால் உடனடியாகக் கழற்றிவிடும் எண்ணம் காங்கிரஸுக்கு இல்லை. காங்கிரஸின் போக்கை நன்கு உணர்ந்துள்ள திராவிட முன்னேற்றக்கழகம் சற்று எட்டி நின்று போக்குக் காட்ட முயற்சிக்கின்றது. மத்திய அமைச்சரவையிலிருந்து ராசாவும் தயாநிதி மாறனும் இராஜினாமா செய்து விட்டார்கள். காலியான இரண்டு அமைச்சரவைகளையும் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு கொடுப்பதற்கு காங்கிரஸ் விரும்புகிறது. காலியாக உள்ள இரண்டு அமைச்சரவைகளையும் பொறுப்பெடுத்து காங்கிரஸின் வலையில் விழுவதற்கு திராவிட முன்னேற்றக்கழகம் விரும்பவில்லை.
திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் சிலர் நெருக்குதல் கொடுக்கின்றனர். தமிழக காங்கிரஸின் பலவீனத்தை நன்கு புரிந்துக்கொண்டுள்ள தலைமையகம், திராவிட முன்னேற்றக்கழகத்தை போன்ற பலம் வாய்ந்த கட்சி என்று தமிழகத்தில் கிடைக்கும் வரை கூட்டணியைத் தொடர்வதற்கு விரும்புகிறது.
நிலம் அபகரிப்பு, குறைந்த விலையில் நிலம், கட்டடம் ஆகியவை வாங்கியது போன்ற குற்றச்சாட்டில் திராவிட முன்னேற்றக் கழகப்புள்ளிகள் குறிவைக்கப்படுகிறார்கள். தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டுள்ளார். அழகிரியின் வலது கைகள் மீது பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கைது செய்யப்படுகின்றனர். அழகிரியின் நிழல்களாக செயற்பட்டவர்கள் பிணையில் வெளியே வரமுடியாத வகையில் குற்றஞ்சுமத்தப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு எதிராக தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக கூட்டணிக் கட்சிகள் வாயைத் திறக்க வில்லை. தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் பொய்ய õனவை. நீதிமன்றத்தின் மூலம் குற்றச்சாட்டுக்கள் அனைத்தையும் பொய்யானவை என்பதை நிரூபிப்போம் என்று திராவிட முன்னேற்றக்கழகம் அறிவித்துள்ளது.
திராவிட முன்னேற்றக்கழக பிரமுகர் கைது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய புள்ளி மீது பொலிஸ் நிலையத்தில் புகார் என்று தினமும் வெளியாகும் செய்தியினால் திராவிட முன்னேற்றக்கழகம் அதிர்ச்சியில் உள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை பிணையில் விடுவிக்கவும் பொலிஸ் நிலையங்களில் செய்யப்பட்ட புகார்களுக்கு சட்ட நடவடிக்கை எடுப்பதிலுமே அதிக காலத்தை செலவிடுகிறது, திராவிட முன்னேற்றக்கழகம். சி.பி.ஐ. விரித்த வலையில் இருந்து எப்படி விடுபடுவது என்று தெரியாமல் தவிக்கும் திராவிட முன்னேற்றக்கழகம் தமிழக அரசின் கெடுபிடியினால் கதிகலங்கிப் போயுள்ளது. "இருதலைக் கொள்ளி எறும்பு போல்' தவிக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் தமிழக அரசுக்கு எதிராக் போராடுவதற்கு சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக சுமத்தப்பட்ட பொய் வழக்குகள், கைதுகள் என்பவற்றை கண்டித்து கடந்தவாரம் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நடத்துவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதி கோரியது. பொலிஸாரிடமிருந்து அனுமதி கிடைக்கவில்லை. எனினும் திட்டமிட்டப்படி ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தியது திராவிட முன்னேற்றக்கழகம். ஸ்டாலின் உட்பட பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டு மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக புதிய போராட்டத்துடன் தொண்டர்களை உற்சாகப்படுத்த வேண்டும் என்று திராவிட முன்னேற்றக்கழகம் விரும்புகிறது.
தமிழ சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணியை விட்டு வெளியேறியுள்ள. திராவிட முன்னேற்றக் கூட்டணியில் தொடர்ந்து இருந்தால் உள்ளாட்சி தேர்தலிலும் தோல்வி அடையும் என்று பாட்டாளி மக்கள் கட்சி அச்சப்பட்டுள்ளது. கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறுவதால் திராவிட முன்னேற்றக்கழகத்துக்கு எதுவித பாதிப்பும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் புதிய கூட்டணியுடன் களமிறங்க வேண்டிய நிலையில் உள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.
ராமதாஸின் மகன் அன்புமணிக்கு இராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்குவதற்கு ஜெயலலிதா மறுத்ததனாலேயே அண்ணா திராவிட முன்னேற்றக் கூட்டணியிலிருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறியது. அன்புமணிக்கு இராஜ்யசபா உறுப்பினர் பதவி ஒதுக்குவதாக கருணாநிதி வாக்குறுதி வழங்கியதாலேயே திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைந்தது. ராஜ்யசபை உறுப்பினர் ஆவதற்குரிய சட்டசபை அங்கத்துவ எண்ணிக்கை திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிக்கு இல்லை என்பதனால் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை பாட்டாளி மக்கள் கட்சி துணிச்சலுடன் எடுத்தது.
திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு திருமாவளவனும் விரும்புகிறார். காங்கிரஸ் கட்சியினுடனான உறவை திருமாவளவன் விரும்பவில்லை. காங்கிரஸ் கட்சியிலிருந்து திராவிட முன்னேற்றக்கழகம் வெளியேற வேண்டும் என்று மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் திருமாவளவன் பல முறை தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியுடன் திராவிட முன்னேற்றக்கழகம் தொடர்ந்தும் கூட்டணி வைத்தால் கூட்டணியிலிருந்து திருமாவளவன் வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்படும். பாட்டாளி மக்கள் கட்சியும், விடுதலை சிறுத்தைகளும் கூட்டணியிலிருந்து வெளியேறினால் கூட்டணி பலவீனமாகிவிடும்.
உள்ளாட்சித் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர்கள் விரும்புகின்றனர். பல கோஷ்டியாகப் பிரிந்திருக்கும் தமிழக காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் வெற்றி பெறமுடியாது என்பதை காங்கிரஸ் தலைமை புரிந்துள்ளது. கூட்டணியிலிருந்து எத்தனைக் கட்சிகள் வெளியேறினாலும் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரை திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும் பிரிவதற்குரிய சந்தர்ப்பம் இல்லை.
திராவிட முன்னேற்றக் கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவற்றுடன் கூட்டணி சேராது தனியே தேர்தலில் போட்டியிடப்போவதாக வைகோ சூழுரைத்துள்ளார். திராவிட முன்னேற்றக்கழகம், அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவை இல்லாத புதிய அணியொன்றை உருவாக்குவதற்கு வைகோ முயற்சி செய்து வருகிறார்.
எதிர்க்கட்சிகள் பலவீனமான நிலையில் இருப்பதால் ஜெயலலிதாவுக்கு சாதகம் அதிகம். திராவிட முன்னேற்றக்கழக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒன்றை ஒன்று சந்தேகக் கண் கொண்டு பார்ப்பதால் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெறும் சாத்தியம் குறைவாக இருக்கும். தமிழகச் சட்டசபைத் தேர்தலின் பிரமாண்டமான வெற்றியையும் படுதோல்வியையும் நாடி பிடித்து அறியும் களமாக உள்ளாட்சித் தேர்தல் அமைய உள்ளது.
வர்மா
சூரன்.ஏ.ரவிவர்மா
வீரகேசரிவாவாரவெளியீடு08/08/11

No comments: