Wednesday, June 12, 2013

உள்ளத்தை உருக வைத்த உன்னத பாடகர்


தமிழ்த்திரை உலகை சுமார் 60 ஆண்டு காலம் தனது கம்பீரக்குரலால் கட்டி வைத்திருந்தவர் ரி.எம்.எஸ். சௌந்தரராஜன். எம்.கே.தியாகராஜ பாகவதர், திருச்சி லோகநாதன் போன்ற இசைவித்தகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த வேளையில் 1946ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ணவிஜயம் என்ற படத்தின் மூலம் ~ராதே என்னை விட்டு ஓடாதே என்ற பாடலுடன் தமிழ்த்திரை உலகில் புகுந்தார் ரி.எம்.. சௌந்தரராஜன். சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, எஸ்.எஸ்.ஆர் போன்ற மூன்றெழுத்து நாயகர்கள் தமிழ்த்திரை உலகை ஆக்கிரமித்திருந்த போது தன் குரலால் அவர்களை உயர்த்தித் தூக்கி விட்டவர் தான் ரி.எம்.எஸ் என்ற மூன்றெழுத்துக்குரிய ரி.எம்..சௌந்தரராஜன்.

                நடிகர்களும், நாட்டியத் தாரகைகளும் தமது முகத்தின் மூலம் நவரசங்களை வெளிப்படுத்தியது போல தனது குரலால் நவரசங்களையும் வெளிப்படுத்திய ஒரே பாடகர் ரி.எம்.எஸ் தான். இவரின் காதல் பாடலைக் கேட்டால் மனம் காதலில் லயித்துவிடும். ~ஆடலுடன் பாடலைக் கேட்டு” என்ற பாடலைக் கேட்டால் ஆடாமல் இருக்க முடியாது. ~அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா” என்ற பாடல் புரட்சிக்கு வித்திட்டது. ~ஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நானறிவேன்” என்பது இன்று வரை காதலின் தேசிய கீதமாக உள்ளது. ~உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி” என்ற பாடலைக் கேட்கும் போது மனம் கரைந்து கண்ணீர் வெளிப்படும்.

                ~அம்மம்மா தம்பி என்று நம்பி”, ~மலர்ந்தும் மலராத” போன்ற பாடல்கள் சகோதர பாசத்தால் தவிப்பவர்கள் மனதைக்கலங்கடித்துவிடும். ~உள்ளம் உருகுதையா முருகா” என்பது முருகனை விளித்துப் பாடும் பக்திப் பாடல் தான் என்றாலும் கல் மனதையும் கரைத்து விடுகிறது அவரது சாரீரம்.

                ரி.எம்.எஸ்ஸின் குரலில் ஒலிக்கும் பாடலைக் கேட்டாலே அது சிவாஜி படமா, எம்.ஜி.ஆர் படமா என்பதைக் கூறிவிடலாம். சிவாஜி, எம்.ஜி.ஆர் மட்டுமல்ல ஏனைய நடிகர்களுக்கும் அவர்களது குரலுக்கு ஏற்றவாறு பாடும் வல்லமை பெற்ற ஒரேயொரு பாடகர் அவர்தான். சிவாஜி, எம்.ஜி.ஆர், எஸ்.எஸ்.ஆர், ஜெமினி, முத்துராமன், ஜெய்சங்கர், என்.டி.ராமராவ், ராஜ்குமாமர், நாகேஸ்வரராவ், ரவிச்சந்திரன், நாகேஷ், அசோகன், ரஞ்சன், கமல், ரஜினி உட்பட பல நடிகர்களுக்காகப் பாடியுள்ளார். தமிழ், மலையாளம், ஹிந்தி, தெலுங்கு, சிங்களம், கன்னடம் ஆகிய மொழிகளில் 52 இசையமைப்பாளர்களின் இசையில் பாடியுள்ளார்.
நவராத்திரி படத்தில் ஒன்பது வேடங்களில் நடித்த சிவாஜியை அனைவரும் புகழ்ந்தார்கள். அப்படத்தில் சிவாஜிக்குப் போட்டியாகப் பாடல்களைப் பாடி சவால் விட்டார் ரி.எம்.எஸ். அப்படத்தில் வரும் பாத்திரமாகவே மாறிப் பாடினார். அப்படத்தில் உள்ள இரவினில் ஆட்டம் பகலினில் தூக்கம் இது தான் எங்கள் உலகம் என்ற பாடல் காட்சி படமாக்க ஆயத்தமான போது படப்பிடிப்பு இரத்துச் செய்தார் சிவாஜி. மூன்று நாட்களாகியும் சிவாஜியிடமிருந்து சாதகமான பதில் வராமையினால் தயாரிப்பாளர் சிவாஜியைத் தொடர்புகொண்டு பாடலில் ஏதாவது தவறு உள்ளதா எனக் கேட்டார். இல்லை அற்புதமாகப் பாடி உள்ளார் அதற்கு எப்படி நடிக்க வேண்டும் என ஒத்திகை பார்க்கிறேன் எனப் பதிலளித்தார் சிவாஜி.

                தெய்வ மகன் படத்தில் மூன்று சிவாஜிக்கு மூன்று குரல், கௌரவம் படத்தில் வயது முதிர்ந்த சிவாஜிக்காக நீயும் நானும் கண்ணா நீயும் நானுமா, இளம் சிவாஜிக்காக மெழுகுவர்த்தி எரிகின்றது என வித்தியாசமாகப் பாடி உள்ளார். கௌரவம் படத்தில் ஒரு பாடல் ஒலிப்பதிவு செய்யும் போது ரி.எம்.எஸ் வெளிநாட்டுக்குப் போய்விட்டார். எம்.எஸ்.விஸ்வநாதன் அப்பாடலைப்பாடி படப்பிடிப்பும் முடிந்து விட்டது. அப்பாடலில் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு முழுத்திருப்தி இல்லை. ரி.எம்.எஸ் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியதும் சிவாஜியின் வாயசைப்புக்கேற்ப அப்பாடலை மீண்டும் ஒலிப்பதிவு செய்து படத்தில் சேர்த்தார். அதன் பின்னர் தான் பாலூட்டி வளர்த்த கிளி என்ற பாடலுக்கு கம்பீரம்
வந்தது.

                சிவாஜி எப்படி நடிப்பார் என்று ரி.எம்.எஸ்ஸ_க்குத் தெரியும். அதே போல் ரி.எம்.எஸ் எப்படிப் பாடுவார் என்று சிவாஜிக்குத் தெரியும். உயர்ந்த மனிதன் படத்தில் அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே என்ற பாடல் காட்சி பற்றித் தெரிந்ததும் ஸ்ரூடியோவைச் சுற்றி ஓடிய பின் மூச்சிரைக்கப் பாடினார். அப்படத்தில் உள்ள வெள்ளிக் கிண்ணம் தான் என்ற பாடலின் பதிவு முடிந்ததும் பாடலைக் கேட்ட தயாரிப்பாளர் அப்பாடல் சிவகுமாருக்கானது என ரி.எம்.எஸ்ஸ_க்குத் தெரியுமா எனக் கேட்டார். ஏனென்றால் அப்பாடல் சிவாஜிக்காகப் பாடப்பட்டது போல் தெரிந்தது. சிவகுமாருக்கான பாடல் எனக் கூறியதும் குரலை மாற்றிப் பாடினார்.
அவன் தான் மனிதன் படிப்பிடிப்பு சிங்கப்பூரில் நடைபெற்ற போது மனிதன் நினைப்பதுண்டு என்ற பாடல் சகற்றை கொண்டு செல்ல மறந்து விட்டார்கள். இதை அறிந்த சிவாஜி அவர் எப்படிப் பாடி இருப்பார் எனக் கூறிவிட்டு வாயசைத்து நடித்தார். வசந்த மாளிகை படத்தில் உள்ள யாருக்காக யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை என்ற பாடலுக்கு ஸ்பெஷல்எபெக்ட். போட வேண்டும் என ரி.எம்.எஸ் கூறினார். தயாரிப்பாளர் மறுத்த போது பாடலைப் பாடி முடியாது என்றார். வேண்டா வெறுப்பாக ஒப்புக் கொண்டார் தயாரிப்பாளர். தியேட்டர்களில் அப்படக் காட்சியின் போது உணர்ச்சி வசப்பட்ட‌ ரசிகர்கள் தாமும் பாடி ஆர்ப்பரித்த போது ரி.எம்.எஸ்ஸின் தீர்க்க தரிசனத்தை உணர்ந்தார் தயாரிப்பாளர்.

                எம்.ஜி.ஆரின் படங்களும், பாடல்களும் தான் அவரை முதலமைச்சராக்கியதுஎன‌ அவரது ரசிகர்கள் பெருமையுடன் கூறுவார்கள். எம்.ஜி.ஆரின் கனவு நனவாகக் குரல் கொடுத்தவர் ரி.எம்.எஸ். நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் என்ற பாடலை எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் என்றைக்கும் மறக்கமாட்டார்கள். அதோ அந்தப் பறவை போல, ஓடும் மேகங்களே, சின்னப் பயலே சின்னப் பயலே, திருடாதே பாப்பா திருடாதே, மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், நான் உங்கள் வீட்டுப்பிள்ளை, உன்னை அறிந்தால் நீ உன்னை அறிந்தால் போன்ற காலத்தால் அழியாத பாடல்களை எம்.ஜி.ஆருக்காகப் பாடி உள்ளார். எம்.ஜி.ஆருக்கும் ரி.எம்.எஸ்ஸ_க்கும் இடையிலான உறவில் அடிக்கடி விரிசல் விழுந்தது. அடிமைப் பெண் படப்பாடல் ஒலிப்பதிவின் போது மகளின் திருமணம் முடிந்த பின்னர் தான் ஒலிப்பதிவுக்கு வருவேன் என்றார் ரி.எம்.எஸ் அதனால் கோபமடைந்த எம்.ஜி.ஆர் ஆயிரம் நிலவே வா என்ற பாடலைப் பாடும் சந்தர்ப்பத்தை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வழங்கினார். சாண்டோ சின்னப்பதேவர் தயாரித்த நல்ல நேரம் படத்தின் பாடல்களை ரி.எம்.எஸ் பாடப்போவதை அறிந்த எம்.ஜி.ஆர் எதிர்ப்புத் தெரிவித்தார். ரி.எம்.எஸ் இல்லையென்றால் படப்பிடிப்பை நிறுத்தி விடுவேன் என்றார் தயாரிப்பாளர். எம்.ஜி.ஆர் மீதான கோபத்தை மறந்து பழைய உற்சாகத்துடன் பாடினார் ரி.எம்.எஸ்.

                சிவாஜியின் படத்தை மட்டும் தயாரிப்பவர்கள் சிவாஜி படத்துக்கு மட்டும் திரைக்கதை வசனம் எழுதுபவர்கள். சிவாஜி படத்தில் மட்டும் நடிப்பவர்கள் எனவும் எம்.ஜி.ஆர் படத்தை மட்டும் தயாரிப்பவர்குள். எம்.ஜி.ஆர் படத்துக்கு மட்டும் திரைக்கதை வசனம் எழுதுபவர்கள். எம்.ஜி.ஆர் படத்தில் மட்டும் நடிப்பவர்கள் என்ற தமிழ்த்திரைப் பாடல்கள் இரண்டுபட்டிருந்த போது ரி.எம்.எஸ், எம்.எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசன் போன்றோர் அணியோடு இருவருடனும் ஒரே மாதிரிப் பழகினார்கள்.
தமிழ் மீதும் தனது கொள்கையின் மீதும் பற்றும் உறுதியும் கொண்டவர் ரி.எம்.எஸ் பல சந்தர்ப்பங்களில் பாடல் வரிகளை மாற்றினால் தான் பாடுவேன் என்று தான் விரும்பியவராறே மாற்றி வைத்தவர். கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும். அவன் காதலித்து வேதனையில் சாக வேண்டும் என்று கண்ணதாசன் எழுதிய பாடலைப் பாட மறுத்தார். கவிஞரே கடவுளை எப்படி சாகடிப்பீர்கள் என்று எதிர்த்துக் கேட்டார். ரி.எம்.எஸ்ஸின் பிடிவாதத்தால் அவன் காதலித்து வேதனையில் வாட வேண்டும் என்று மாற்றினார் கவிஞர்.

                பாகப்பிரிவினை படத்தின் நூறாவது நாள் விழா எழும்பூர் ஹோட்டலில் நடைபெற்றது. கலைஞர்களுக்கு நினைவுப் பரிவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இறை வணக்கம் பாட ரி.எம்.எஸ்ஸைஅழைத்த போது பாடகர்களுக்கு விருது தராததனால் பாட முடியாது என மறுத்து விட்டார். அன்றைய சம்பவத்திற்குப் பின்னரே பாடகர்களுக்கு விருது வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. தென்னகத்தில் முதன் முதலாக பாடகருக்கான ரசிகர் மன்றம் ரி.எம்.எஸ்ஸ_க்காக ஆரம்பிக்கப்பட்டது.

                தமிழ் உச்சரிப்பு சரியாக இருக்க வேண்டும். பாடலின் பொருள் தெரிய வேண்டும் என்பது ரி.எம்.எஸ்ஸின் கொள்ளை. அருணகிரிநாதர் படத்தில் முத்தைத் தரு பத்தித் திருநகை என்ற திருப்புகழ் பாடுவதற்கு முன் அதன் கருத்து என்ன என்று கேட்டார். யாருக்குமே தெரியவில்லை. உடனே திருமுருக கிருபானந்த வாரியாரிடம் சென்று அதற்கான பொருளைக் கேட்டறிந்த பின்னரே பாடினார். இசை உலகில் கொடிகட்டிப் பறந்த ரி.எம்.எஸ், தேவகி, அருணகிரிநாதர், பட்டினத்தார் கல்லும் கனியாகும் ஆகிய படல்களில் நடித்தார். அனைத்துமே தோல்விப் படங்கள்.
பாடகராவதற்கு அவர் மிகுந்த சிரமப்பட்டார். மதுரை ஆலயங்களில் தேவாரமும், பக்திப் பாடல்களும் பாடியவர் பின்னாளில் இசை உலகின் சக்கரவர்த்தியானார். மதுரை மீனாட்சி அய்யங்கார், வெங்கிட அம்மாள் தம்பதியாரின் மகனே ரி.எம்.சௌந்தரராஜன் பிரபல வித்துவான் பூச்சி அய்யங்காரின் மருமகன் ராஜாமணி அய்யங்காரிடம் முறையாக இசை பயின்றவர். தொளுவா இனத்தைச் சேர்ந்த இவர் தனது பெயரை ரி.எம்.சௌந்தரராஜன் என வெளிப்படுத்தினார். தியாகராஜ பாகவதர், மதுரை சோமு, கே.பி.சுந்தராம்பாள் ஆகியோரை மானசீகக் குருவாகக் கொண்டதாலும் தியாகய்யர், முத்துசாமி தீட்சிதர், சியாமளா சாஸ்திரிகள் ஆகிய மும்மூர்த்திகள் ஆசியாவிலும் தனது ரி.எம்.எஸ் என்ற மூன்றெழுத்து பிரபலமானது எனக் கூறுவார்.

                மதுரைப் பல்கலைக்கழகப் பேரவை செம்மல் என்ற பட்டத்தையும், பெல்ஜியம் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தையும் வழங்கி கௌரவித்தன. இவை தவிர கலைமாமணி, பத்மஸ்ரீ, ஞானகலா பாரதி போன்ற பட்டங்களையும் பெற்றார். கருணாநிதியின் ஏழிசை மன்னர் என்ற பட்டம் வழங்கப்பட்டது. எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது சீர்காழி கோவிந்தராஜனை அரசவைக் கவிஞராக்கினார். தமிழக முதல்வர்களுடன் மிக நெருக்கமாகப் பழகிய இவர் தனக்காகவும் தன் குடும்பத்துக்காகவும் எதனையும் கேட்டுப் பெறவில்லை.

                சென்னை நியூ உட்லண்ட் ஹோட்டலில் பணிபுரியும் ஒருவர் பல பக்திப் பாடல்களை எழுதி வைத்திருப்பதாக அறிந்து அவருடைய பாடல் ஒன்றை இசை அமைத்துப் பாடினார். உனைப்பாடும் தொழிலின்றி வேறில்லை என்ற அப்பாடல் இன்றும் கம்பீரமாக ஒலிக்கின்றது. தபால் அட்டையில் வாலி எழுதி அனுப்பிய கற்ப என்றாலும் கற்சிலை என்றாலும் பாடல் மூலம் வாலியை இனம் காட்டினார்.
                மிக உயரத்தில் இருந்த ரி.எம்.எஸ்ஸின் புகழ் சிறிது காலம் சரியத் தொடங்கியது. ரி.ராஜேந்திரனின் இசை அமைப்பில் நான் ஒரு ராசியில்லாத ராஜா, என் கதை முடியும் நேரமிது ஆகிய பாடல்களைப் பாடிய பின் தனது வீழ்ச்சி ஆரம்பமானதாக பலரிடம் கூறியுள்ளார். இளையராஜாவுடனானமுரண்பாடும் அவரது வீழ்ச்சிக்குக் காரணமானது. ரி.எம்.எஸ் பாட வேண்டிய பா பாடல்களை மலேஷியா வாசுதேவனுக்குக் கொடுத்தார் இளையராஜா.

                ரி.எம்.எஸ்ஸின் குரலை முதன் முதலில் வானலையில் தவழவிட்ட பெருமை இலங்கை வானொலியையே சாரும். அன்னம் இட்ட வீட்டிலே என்ற பாடல்தான் முதன் முதலில் வானொலியில் ஒலிபரப்பானது. இசை ஜாம்பவான்களின் பாராட்டுதல்களைப் பெற்ற ரி.எம்.எஸ்ஸ_க்கு முதன் முதலில் பாராட்டுக் கடிதம் அனுப்பியவர் மட்டக்களப்பைச் சேர்ந்த தமிழ் ரசிகர்.

                மிகப்பெரிய விளம்பரங்களுடன் புற்றீசல்கள் போல் வெளிவந்த பாடல்கள் பல வந்த சுவடு மாறமுன்பே காணாமல் போயின. ரி.எம்.எஸ் தனித்தும் சகல பாடகர்களுடனும் இணைந்து பாடிய பல பாடல்கள் இன்றும் மனதை வருடுகின்றன. மிக அதிகமான பாடல்களை பி.சுசீலாவுடன் இணைந்து பாடினார்.

                வீரமணி ஐயர் எழுதிய கற்பக வல்லி, நின் பொற்பாதங்கள் என்ற பாடலுக்கு உயிர் கொடுத்தவர் ரி.எம்.எஸ். கற்பனை என்றாலும், உள்ளம் உருகுதையா, சொல்லாத நாளில்லை, மண்ணாணாலும் , அழகென்ற சொல்லுக்கு முருகா, உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே, புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே போன்ற பக்திப் பாடல்கள் மனதை ஆன்மீகத்தின் பக்கம் திருப்பும் வல்லமை பெற்றவை

சுடர் ஒளி 09/06/13 

No comments: