
தொடக்க வீரர் சுனில் கவாஸ்கர் 174 பந்துகளை சந்தித்து ஒரே ஒரு பவுண்டரியுடன் ஆட்டமிழக்காமல் 36 ரன் எடுத்து சாதனை படைத்தார் (உலக கோப்பையில் ஆமை வேக ஆட்டம்). இங்கிலாந்து 202 ரன் வித்தியாசத்தில் முதல் வெற்றியை ருசித்தது. இதில் வேடிக்கை என்னவென்றால், கவாஸ்கர் 2வது பந்திலேயே டக் அவுட் ஆகியிருக்க வேண்டியது. பந்து மட்டையில் உரசிச் சென்றதை நடுவர் சரியாக கவனிக்கத் தவறியதால் அவுட் இல்லை என்று சொல்லிவிட்டார். போட்டி முடிந்து, மோசமான சாதனைக்கு சொந்தக்காரரான கவாஸ்கர், ‘சே... 2வது பந்திலேயே அவுட் என்பதை ஒப்புக் கொண்டு ஏன் வெளியேறாமல் போய்விட்டேன்? என்று தன்னைத் தானே நொந்துகொண்டார். இந்த தொடரில் இந்தியா மொத்தம் 3 லீக் ஆட்டங்களில் விளையாடியது. 2வது போட்டியில் கிழக்கு ஆப்ரிக்காவை 10 விக்கெட் வித்தியாசத்தில் பந்தாடினர். கிழக்கு ஆப்ரிக்கா 55.3 ஓவரில் 120 ரன்னுக்கு ஆல் அவுட். இந்தியா 29.5 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 123 ரன். கவாஸ்கர் 65, பரூக் இன்ஜினியர் 54 ரன் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது.
இந்தியா 60 ஓவரில் 230 ரன்னுக்கு ஆல் அவுட். அபித் அலி அதிகபட்சமாக 70 ரன் விளாசினார். அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 58.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன் எடுத்து வென்றது. தொடக்க வீரரும் கேப்டனுமான கிளென் டர்னர் ஆட்டமிழக்காமல் 114 ரன் அடித்தார். முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தையும், 2வது அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி நியூசிலாந்தையும் வீழ்த்தி பைனலுக்கு முன்னேறின. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 21ம் தேதி நடந்த விறுவிறுப்பான இறுதிப் போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 17 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்து புருடென்ஷியல் உலக கோப்பையை முத்தமிட்டது. வெஸ்ட் இண்டீஸ் 60 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 291 ரன் (ரோகன் கன்ஹாய் 55, கேப்டன் கிளைவ் லாயிட் 102). ஆஸ்திரேலியா 58.4 ஓவரில் 274 ரன்னுக்கு ஆல் அவுட் (கேப்டன் இயான் சேப்பல் 62, ஆலன் டர்னர் 40). ஆஸி. வீரர்கள் 5 பேர் ரன் அவுட் ஆனது குறிப்பிடத்தக்கது.
* நியூசிலாந்து வீரர் கிளென் டர்னர் 4 போட்டியில் விளையாடி 333 ரன் குவித்து (அதிகம் 171*, சராசரி 166.50) முதலிடம் பிடித்தார்.
* விக்கெட் வேட்டையில், ஆஸ்திரேலியாவின் கில்மோர் 2 போட்டியில் 11 விக்கெட் கைப்பற்றி (சிறப்பு: 6/14) முதலிடம் பிடித்தார்.
* 1975
உலக கோப்பையின் முதல் பந்தை வீசிய பவுலர் என்ற பெருமை இந்தியாவின் மதன் லாலுக்கு கிடைத்தது. முதல் விக்கெட் வீழ்த்தியவர் இந்தியாவின் மொகிந்தர் அமர்நாத்.
* முதல் சதம் அடித்தவர் இங்கிலாந்து தொடக்க வீரர் டெனிஸ் அமிஸ் (137 ரன்). மொத்தம் 6 சதங்கள் அடிக்கப்பட்டன. நியூசிலாந்தின் கிளென் டர்னர் 2 சதம் விளாசினார் (171*, 114*).
* ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் மெக்காஸ்கர் & ஆலன் டர்னர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 182 ரன் சேர்ததே அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ஆக அமைந்தது (இலங்கைக்கு எதிராக).
* இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து குவித்த 334/4 அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது.
No comments:
Post a Comment