Sunday, September 25, 2016

அவிழ்க்கப்படாத மர்மமுடிச்சு

  
  கர்நாடகம் தரமறுத்த கவிரிநீரை   தமிழகத்துக்குக் கொண்டுவந்த சந்தோசத்தைக் கொண்டாட முடியாத நிலையில் தமிழக அரசு சிக்கித் தவிக்கிறது.தமிழகத்துக்குத் தண்ணீரைத் திறந்துவிட்டதால் கர்நாடகத்தில் ஏற்பட்ட வன்முறை, கர்நாடகத்தில் தமிழரின் சொத்துக்கள் தீயிடப்பட்டமை, கர்நாடகத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு எதிரான போராட்டம் தமிழக அரசுக்கு எதிராகத் திசை திரும்பியமை,சட்ட மன்றத்தைக் கூட்டிய  கர்நாடகம் காவிரி நீரைத் தரமறுத்தது,சுவாதி கொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தமை ஆகியன தமிழக அரசுக்கு எதிராகக் கடந்த வாரம் மிகப் பெரும் அதிர்வலையைத் தோற்றுவித்துள்ளன.

நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சனநெரிசல் மிகுந்த  காலைவேளை சுவாதி என்ற இளம் பெண் அரிவாளால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டாள். சுவாதி பிராமணப்பெண். உடனடியாக அக்கொலைக்கு இந்து, முஸ்லிம் சாயம் பூசப்பட்டது. சுவாதிக்கு முஸ்லிம் நண்பர் இருந்ததால்,  பொலிஸாரின் விசாரணைக்கு முன்னமே சில இணைய தளங்களும், சமூக வலைத்தளங்களும் தமது கற்பனைக்கு ஏற்றவாறு பரபரப்பான செய்திகளை உணமைபோல் வெளியிட்டன. உண்மையான குற்றவாளியைக்  கண்டுபிடிக்க வேண்டிய அழுத்தம் பொலிஸார் மீது திணிக்கப்பட்டது.

சுவாதி கொல்லப்பட்டு இரண்டு வாரங்களின் பின்னர் மீனாட்சிபுரத்தில் ராம்குமார்  என்ற இளைஞரை  அவரது வீட்டில் நள்ளிரவு பொலிஸார் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.  ரம்குமாரைக் கைது செய்ய பொலிஸார் சென்றபோது அவர் கழுத்தை அறுத்து தற்கொலைசெய்ய முயன்றதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் சுவாதி படுகொலை வழக்கு பரபரப்பானது.இணைய தளங்களும்,சமுக வலைத்தளங்களும் கேள்விமேல் கேள்வி கேட்டன. சுவாதியைக் கொலை செய்தது  ராம்குமார் தான் அதற்கான போதிய அதரங்கள் உள்ளன என பொலிஸ் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், பொலிஸாரால் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை.


ராம்குமார் தான் சுவாதியைக் கொலை செய்தான் என சிலரும் ராம்குமார் சுவாதியைக் கொலை செய்யவில்லை. சுவாதியைப் படுகொலை செய்த பின்னணியில் பலமானவர்கள் இருப்பதனால் அவர்களைக் காப்பாற்ற பொலிஸார் முயற்சி செய்கின்றனர் என்ற செய்தி பரவலாக வெளியானது.  அப்படி நடக்க  சந்தர்ப்பம் இல்லை என ஆரம்பத்தில் கருதியவர்கள் சந்தேகப்பட வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டனர். சுவாதியைக் கொலை செய்தவர்கள் பற்றிய தகவல்களை சிலர் மேலோட்டமாக வெளியிட்டனர். அவர்களால் போதிய ஆதாரங்களை வெளியிட முடியவில்லை.
ராம்குமாரின் ஒருதலைக் காதல் தான் சுவாதி கொலை செய்யப்பட்டதற்கான கரணம்  என பொலிஸ் தரப்பில்  கூறப்பட்டது. தன்னை யாரோ பின் தொடர்வதாக சுவாதி கூறியதாக அவரது நண்பர்கள் தெரிவித்தனர். சுவாதியை ஒரு இளைஞன் ரயில் நிலையத்தில் அடித்ததைக் கண்டதாக ஒரு ரயில் பயணி வாக்கு மூலம் கொடுத்துள்ளார். சுவாதி பெங்களூரில் தங்கி இருந்ததால் அவரது நடவடிக்கைகள் ஆராயப்பட வேண்டும் என சிலர் கருத்துத் தெரிவித்தனர். ராம்குமாரின் பின்னணியை ஆரய்ந்தபோது அவர் முன்னரும் ஒரு தடவை ஒருதலைக்காதலில் சிக்கி  தப்புச் செய்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.   பொலிஸ்  விசாரணைக்கு அப்பால் வெளியான இத்தகவல்களால் சுவாதி கொலை வழக்கு விசாரணை மேலும் சிக்கலாகியது.

ராம்குமார் குற்றவாளி இல்லை எனக் கூறிக்கொண்டு ஒரு வழக்கறிஞர் தானாக முன்வந்து ஆஜரானார். அவர் பாரதீய ஜனதாக்  கட்சியின் ஆதரவாளர் என்ற உண்மை வெளியானதால் அவர் பின் வாங்கிவிட்டர்.  ராம்குமார் குற்றவாளி இல்லை என்றவர்களின் குரல் ஓங்கி ஒலித்தபோது அவருடைய தகப்பனும்  தன மகன் குற்றவாளி இல்லை என அறிவித்தார்.  ராம்குமாருக்காக வாதாட களம் இறங்கிய வழக்கறிஞர் அவர் குற்றவாளி இல்லை என்பதில் உறுதியாக இருந்தார். ராம்குமார் பிணையில் வெளிவராத முறையில் குற்றப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்  அதுவும்  தொண்ணூறு நாட்களுக்கிடையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என்றால்  ராம்குமார் பிணையில் வெளிவந்து விடுவார். சுவாதி கொலை வழக்கை விசாரணை செய்யும் பொலிஸாருக்கு அழுத்தம் அதிகரித்த வேளையில் ராம்குமார் சிறையில் தற்கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

குற்றவாளிகள் மீதும் சந்தேக நபர்கள் மீதும் சிறைச்சாலைகளில் சித்திரவதை நடைபெறுவதாக குற்றச்சட்டுகள் அதிகரித்து வரும் வேளையில் ராம்குமாரின் தற்கொலை  அதனை உறுதிப்படுத்துவது  போல் இருக்கிறது. சிறையில் ராம்குமார் சித்திரவதை செய்யப்படுவதாக அவரது தகப்பனும் வழக்கறிஞரும் தெரிவித்திருந்தனர். நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சிசிரிவ் கமரா இல்லாமையால் சுவாதியைப் படுகொலை செய்தது ரம்குமார்தான் என நிரூபிக்க முடியவில்லை. வெளியில் இருந்த சிசிரிவி கமராவில் பதிந்த உருவத்தை வைத்து ராம்குமார் கைது செய்யப்பட்டார்.  புழல் சிறையில் இருந்த சிசிரிவி காமரா பழுதடைந்தமையினால் ராம்குமார் தற்கொலை செய்ததை உறுதிப்படுத்த முடியவில்லை.

 தற்கொலை செய்ய முயற்சி செய்த கைதியை உரிய முறையில்  கண்காணிக்க வில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நாங்கள் மிகக் கவனமாக ரம்குமரைக் கையாண்டோம் எதிர்பாரத முறையில் இது நடந்துவிட்டது என சிறை நிர்வாகம் அறிவித்துள்ளது. சிறையில் அடைக்கப்படும் கைதி தற்கொலை செய்ய முடியாத வகையில் தான் சிறைச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்படி இருந்தும் சில கைதிகள் தற்கொலை செய்கின்றனர் என ஒரு கருத்து உள்ளது.  சிறை அதிகாரிகளின் அசமந்தப்போக்கு தான் சிறையில் கைதிகள்  தற்கொலை செய்வதற்கு முக்கியகாரணம்.

ராம்குமார் தற்கொலை செய்யவில்லை. திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்றுதான் பலர் சந்தேகப்படுகிறார்கள். சுவாதியைக் கொலை செய்தது ராம்குமார் தான் என நிரூபிக்க  முடியாமையால் அவரைக் கொலை செய்து வழக்கை முடிப்பதற்கான திட்டமிடுதலில் ஒரு பகுதிதான் இத் தற்கொலை என்று சிலர் வாதாடுகின்றனர். ராம்குமார் உயிரோடு இருந்த போது அவர்தான் குற்றவாளி என நிரூபிக்கத் தவறியவர்கள், ராம்குமார் இறந்தபின்னர் எப்படி உறுதி செய்வார்கள் என்ற கேள்வி மேலெழுந்துள்ளது.  கைக்கு எட்டாத உயரத்தில் இருக்கும் சுவிஸ் பெட்டியை உடைத்து கடித்து தற்கொலை செய்வதற்கு போதிய அவகாசம் வழங்கப்பட்டதா   என்ற கேள்விக்கு சரியான பதில் வழங்கப்படவில்லை.
ராம்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்யமுடியாத நிலை தோன்றியுள்ளது. அரச வைத்தியரில் நம்பிக்கை இல்லை. தனியார் வைத்தியர் வேண்டும் என ராம்குமார் தரப்பில் கோரிக்கை விடப்பட்டது. இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட கருத்துகளைச் சொன்னதால் மூன்றாவது நீதிபதியின் தயவு நாடப்பட்டது. அவரின் முடிவையும் ராம்குமாரின் தரப்பு ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் மரண விசாரணை தள்ளிப் போகிறது. மரண விசாரணை அறிக்கையில் சந்தேகம் இருந்தால் மென் முறையீடு செய்யலாம். அதனை விடுத்து தாம் விரும்பும் ஒருவர் மரணவிசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுப்பதும் சட்ட விரோதம்.

ராம்குமாரின் உடல் உரிய முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் அதற்கு அவரது குடும்பம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ராம்குமாரின் மரணத்தில்  புதைந்திருக்கும்  மர்மத்தை வெளிக்கொணர்வதற்கு அவரது  குடும்பம் முயற்சி செய்ய வேண்டும்.
வர்மா 

No comments: