Thursday, February 23, 2017

நம்பிக்கை இல்லாத நம்பிக்கை வாக்கெடுப்பு


 ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் தமிழக அரசியலில் நிலவிய குழப்பநிலை  எடப்பாடி பழனிச்சாமி முதல்வரானதால் மேலும் சிக்கலடைந்துள்ளது. ஜெயலலிதாவுக்குப் பதிலாக அவசர அவசரமாக  பன்னீர்செல்வம் முதலமைச்சரானார். அவரை இறக்கிவிட்டு தான் முதலமைச்சராவதற்கு சசிகலா முயற்சி செய்தார். அதற்கு பன்னீர்செல்வம்  முட்டுக்கடை போட்டார்.சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டதால் சசிகலாவின் கனவு தவிடு பொடியாகியது. பன்னீர்செல்வத்தைத்  தூக்கி எறிந்துவிட்டு  தனக்கு விசுவாசமான எடப்பாடி பழனிச்சாமியை முதல்வராக்க சசிகலா வியூகம் வகுத்தார்.  சசிகலாவை முதல்வராக்குவதற்காக கூவத்தூர் சொகுசு ஹோட்டலில் சிறைவைக்கப்பட சட்டசபை உறுப்பினர்கள் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய இக்கட்டான நிலை தோன்றியது. தனக்கு ஆதரவு தெரிவிக்கும் சட்ட சபை உறுப்பினர்களின் பெயர் விபரங்களுடன் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யா சாகர் ராவை எடப்பாடி சந்தித்தார்.  ஜெயலலிதாவால் விரட்டப்பட்ட தினகரனும் எடப்பாடியுடன்  வித்யாசாகர் ராவை சந்தித்தார்.


சசிகலாவின் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராக தனி ஒருவனாகப் போராடபோவதாக அறிவித்த பன்னீர்செல்வத்துக்கு  11    சட்டசபை உறுப்பினர்கள்  ஆதரவளித்தனர்.  நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னாள் தமிழக அமைச்சர்களும் பன்னீர்செல்வத்தைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.சசிகலாவின் குடும்பத்தவர்களால் சிறைவைக்கப்பட்டிருக்கும் சட்டசபை உறுப்பினர்களில் பலர் தனக்கு ஆதரவானவர்கள் என பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினர். இரண்டு தரப்பினரும் ஏட்டிக்குப் போட்டியாக  பொறுப்பு ஆளுநரைச் சந்தித்து தமது நியாயங்களைக் கூறினர். வித்யாசாகர் ராவின் முடிவுக்காக தமிழக அரசியல் காத்துக் கிடந்தது.   தமிழகத்தின் அடுத்த முதல்வர் எடப்பாடியா பன்னீரா என்ற கேள்வி அனைவர் மனதிலும் தொக்கி நின்றது.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் அனைவரும் பன்னீரை விரும்பினர். சொகுசு ஹோட்டலில் தங்கி இருக்கும் எம்.எல்.ஏக்களுக்கு எதிராக தொகுதிகளில்  போராட்டங்கள் நடைபெற்றன. சொகுசு ஹோட்டல் இருக்கும் கூவத்தூர் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை இழந்தனர். சசிகலாவின்  கிராமமான மன்னர் குடியில் இருந்து வரவழைக்கப்பட்டவர்கள் ஹோட்டலைச் சுற்றி பாதுகாப்பாக நின்றனர். பொற்சிறையில் இருந்தவர்கள் குடியும் கும்மாளமுமாகக்  கூத்தடித்தனர். தமக்கு வாக்களித்தவர்களின் மன ஓட்டத்தைப் பற்றிச் சிறிதும் அக்கறை இல்லாது மிச்சமாக உள்ள நான்கு ஆண்டுகளை அனுபவிப்பதற்கு அவர்கள் முடிவு செய்தனர். சொகுசு ஹோட்டலில் இருந்து தப்பி  பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்த சரவணன் என்பவர் அங்கு நடப்பவற்றை ஊடகங்களுக்குத் தெரிவித்தார். சசிகலாவும் எடப்பாடி பழனிச்சாமியும் தன்னைக் கடத்தி தடுத்து வைத்ததாகப் பொலிஸில் புகார் செய்தார். அந்தப் புகார் அப்படியே கிடப்பில்போடப்பட்டு விட்டது.

ஊடகங்கள் அனைத்தும் தமிழக அரசியலை மையப்படுத்தியே   செய்திகளை வெளியிட்டன. பன்னீரின் பக்கத்தில் உள்ள நியாயங்களும் குறைகளும் அலசி ஆராயப்பட்டன. அதேபோல்   எடப்பாடியின் பக்கத்தில் உள்ள குறை நிறைகள் அரங்கத்துக்கு வந்தன. கடந்த 16 ஆம் திகதி வியாழக்கிழமை பதினைந்து நாட்களுக்குள் சட்ட சபையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வித்யாசாகர் ராவ் வேண்டுகோள் விடுத்தார்.எடப்பாடி தரப்பு உற்சாகமடைந்தது.சசிகலாவின் கனவு நிறைவேறப்போவதை நினைத்து அவர்கள்  சந்தோஷமடைந்தனர். 18  ஆம் திகதி சனிக்கிழமை பரபரபப்பான நிலையில் தமிழக சட்ட மன்றம் கூடியது. எடப்பாடி தரப்பில் இருக்கும் சிலர் பன்னீரின் பக்கம் தாவுவார்கள் என்று எதிர்பார்ப்பு எழுந்த நிலையில் திடீரென‌  திராவிட முன்னேற்றக் கழகம் போராட்டம் நடத்தியது.

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக வாக்களிக்கப்போவதாகத் தெரிவித்த திராவிட முன்னேற்றக் கழகம் இரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனக் கோரியது. சபாநாயகர்  தனபால் அதற்கு இணங்க மறுத்தார். நம்பிக்கை வாக்கெடுப்பின் வெற்றியும் தோல்வியும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கே உரியது. திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதுவித பயனும் ஏற்படப்போவதில்லை. எம்.ஜி.ஆர் மறைந்தபின்னர் அவருடைய மனைவி ஜானகி தலைமையிலும், எம்.ஜி.ஆரின் சினிமாபடக் கதாநாயகி ஜெயலலிதா தலைமையிலும் கழகம் இரண்டாகி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அன்றைய நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகி வெற்றி பெற்று ஜெயலலிதா தோல்வியடைந்தார். 28  வருடங்களின் பின்னர் ஜெயலலிதாவின் மறைவால் கழகம் இரண்டாகி நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. ஜெயலலிதாவின் விசுவாசியானபன்னீர்செல்வம்  ஒருஅணிக்கு தலைமை தாங்கினார்.  ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரி சசிகலா இன்னொரு அணிக்குத் தலைமைதாங்கினார். .சசிகலா சிறைக்குச்சென்றதால் அவருடைய பிரதிநிதியாக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பதவிக்குப் போட்டியிட்டார். இப்போதும்  ஜெயலலிதா தோல்வியடைந்து விட்டார்.

மக்கள் மன்றத்தின் சபாநாயகர்  நடுநிலையானவராக இருக்க வேண்டும். ஆனால்,பல சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தின் பிரதிநிதியாகவே சபாநாயகர் செயற்படுகிறார். இரகசிய  வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழக அங்கத்தவர்கள் கோஷமிட்டனர். அவர்களின் கோஷங்களுக்கு சபாநாயகர் மிரளவில்லை. நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த விடாது திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டனர். எதிர்க்கட்சிகள் கோஷமிட்டால் பொங்கி எழும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அமைதி காத்தனர். முன்னதாக சட்டசபைக்குள் எதிர்க்கட்சித் தலைவரின் வாகனம் அனுமதிக்கப்படவில்லை., சிறை வைக்கப்பட்டிருந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களின் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டன.  சபாநாயகரின் முடிவே இறுதி முடிவு முடிவெடுக்க முடியாத சபாநாயகர் மூன்று முறை  சபையை ஒத்தி  வைத்தார்.
 திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் சபாநாயகரை முற்றுகையிட்டதால் அவரது ஒலிவாங்கி மேசை என்பன சேதமாக்கப்பட்டன. சபாநாயகர் வெளியேறியதும் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் இருவர் அதில் அமர்ந்தனர்.  சபாநாயகரின் உத்தரவுக்கமைய சபைக் காவலர்களால் வலுக்கட்டாயமாக திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலினின்  உடை கிழிக்கப்பட்டது. தங்களுக்கு நேர்ந்த கதியை  ஸ்டாலினும் மற்றையவர்களும் தொலைக் காட்சிக்குத் தெரிவித்துக்கொண்டிருந்த வேளை சட்ட சபைக்குள் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிச்சாமி வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார்.    122 உறுப்பினர்கள் எடப்பாடிக்கு ஆதரவளித்தனர்.  11  உறுப்பினர்கள் எடப்பாடியை எதிர்த்தனர்.

ஸ்டாலினும்  ஏனைய உறுப்பினர்களும் அலங்கோல உடையுடன் ஆளுநரைச் சந்தித்து முறையிட்டனர். அங்கிருந்து மெரீனாவுக்குச் சென்ற அவர்கள் மறியல் செய்தனர். அவர்களைக் கைது செய்த பொலிஸார் பின்னர் விடுதலை செய்தனர். முதலமைச்சர் எடப்பபாடியின் தலைமையிலான தமிழக அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் தமிழகம் முழுவதும்  அறப்போராட்டம் நடத்துகிறது. தமிழக அரசுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய உண்ணா  விரதப் போராட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸ் கட்சியும்தான் தமிழக அரசுக்கு எதிராகப் போராடுகின்றன.ஏனைய கட்சித் தலைவர்கள் தமது கண்டணங்களைத் தெயவித்து  விட்டுப் பேசாமல் இருக்கின்றனர். இப்போது தேர்தல் நடைபெற்றால் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இருக்கிறது.  தேர்தலில் வெற்றி பெறும்  நம்பிக்கை மற்றைய கட்சித் தலைவர்களுக்கு  இல்லாததனால் அவர்கள் அமைதியாக இருக்கின்றனர்.

தில்லு முல்லுகள், விதி மீறல்களின் மத்தியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தி உள்ளன.  சப் இன்ஸ்பெக்டர் தரத்தில் உள்ளவர்கள் தான் சபை காவலர்களாக மார்சல் உடையில் சபாநாயகரின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும். சட்டசபைச்செயலர் ஜமல்டினின் உத்தரவுப்படி கமிஷனர்,துணை கமிஷனர், இணை கமிஷனர் தரத்தில் உள்ளவர்கள் சபைக் காவலர்களாக உள்ளே இருந்ததாகத் தெரிய வருகிறது.  வெளியேற்றப்படும் உறுப்பினர்களின் பெயரை சபாநாயகர் தெரிவிக்க வேண்டும். பெயர் சொல்லாமல் எல்லோரையும் வெளியேற்ற உத்தரவிட்டது தவறு சபாநாயகரின் முன்நிலையில் தான் .வெளியேற்றப்பட வேண்டும் சபாநாயகர் தனது அறியில் இருக்கும் போது சபைக் காவலர்கள் சட்ட சபைக்குள் நுழைந்தது தவறு என்கிறார்கள் முன்னாள்   சபாநாயகர்கள்.   சேடப்பட்டி முத்தையா,ஆவுடையப்பன்,வி.பி துரைசாமி ஆகியவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும்  திராவிட முன்னேற்றக் கழகமும் அட்சியில் இருந்தபோது சபாநாயகர்களாகக் கடமையாற்றியவர்கள். நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சபையில்  ஒருமுறைதான் கோரமுடியும். சபாநாயகர் இரண்டு முறை கோரியது சட்டப்படி தவறு என்றும் இவர்கள் கூறுகின்றனர்

சொகுசு ஹோட்டலில் சிறைவைக்கப்பட்ட அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களை சுதந்திரமாக வெளியில் விடாது பத்து நாட்கள் அடைத்து வைத்து நம்பிக்கைக் வாக்கெடுப்பை நடத்தியது தவறு என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் கூறுகிறார்கள். வாக்களித்த மக்களின் விருப்பத்தை அறியாமல் எடப்பாடியை முதலமைச்சராக்கியதை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் விரும்பவில்லை. பன்னீரை ஆதரித்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்களுக்கு அவர்களது தொகுதிகளில் மாலை மரியாதையுடன் வரவேற்பளிக்கப்படுகிறது. எடப்பாடியை ஆதரித்தவர்கள் இரண்டு நாட்கள் சென்னையில் தங்கி இருந்துவிட்டு பொலிஸ்  பாதுகாவலுடன் தொகுதிக்குச் சென்றுள்ளனர். நான்கு வருடங்களுக்குப் பின்னர் தமிழக சட்ட சபைத் தேர்தல் நடைபெறும் போது இன்று நடந்தவற்றை மக்கள் மறந்து விடுவார்கள் என எடப்பாடியை ஆதரித்தவர்கள் நினைக்கிறார்கள்.

நான்கு வருடங்கள் இந்த ஆட்சி நிலைக்குமா என்பது சந்தேகம். சட்ட சபையில் நடைபெறும் கலவரங்கள் பற்றிய விபரங்கள்பற்றி ஆளுநர் உள்துறை அமைச்சுக்கு அறிக்கை அனுப்புவது வழமை. தமிழக சட்ட சபையில் நடந்தவை பற்றிய அறிக்கையை உள்துறை அமைச்சுக்கு அனுப்பிய ஆளுநர் அதனை பிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பியுள்ளார். இது தமிழக  அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. சபாநாயகரின் செயலுக்கு எதிராக ஸ்டாலின் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. சுப்பிரமணியன் சுவாமியும் வைகோவும் எடப்படிக்கு ஆதரவாகக் அக்ருத்துக் கூறியுள்ளனர்.

தமிழக மக்களின் விருப்பத்துக்கு மாறாக இயங்கும் தமிழக அரசை அகற்றுவதற்கு சகல வழிகளிலும் ஸ்டாலின் முயற்சி செய்கிறார்.எடப்பாடி முதல்வரானதை  பாரதீய ஜனதாக் கட்சி விரும்பவில்லை. பத்து மாதங்களில் மூன்று முதலமைச்சர்களைத் தமிழகம் கண்டுள்ளது.
எடப்பாடிக்கு எதிரான அரசியல் வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில்  அவருக்கு எதிராக தினகரன் களத்தில் இறங்கி உள்ளார் தினகரனை முதல்வராக வேண்டும் என்ற குரல் அண்ணா திராவிட  முன்னேற்றக் கழகத்தில் இருந்து ஒலிக்கத் தொடங்கி விட்டது
வர்மா

No comments: