Saturday, January 6, 2018

ரஜினியின் அரசியல் அரங்கேற்றம்

இந்திய அரசியலில் சாணக்கியம் புரிந்த கருணாநிதி மெளனமாகிவிட்டார். இரும்புப் பெண்மணி எனப் புகழப்பட்ட ஜெயலலிதா   மறைந்துவிட்டார். இதனால் தமிழக அரசியலில்  வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.இந்த வெற்றிடத்தை நிரப்புவதற்காக   அரசியலில் களம் இறங்கியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.தமிழக அரசியல்,  சினிமாப்பின்னணியுடன் பெரும் விருட்சமாக வியாபித்து கம்பீரமாக நிமிர்ந்து நிற்கிறது.

இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்துக்கும் இல்லாத ஒரு தனிச்சிறப்பு தமிழகத்துக்கு இருக்கிறது. சினிமா நடிகர் ஒருவர்  அரசியல் கடையை விரித்துவிட்டால் அந்த வலையில்  விழுவதற்கு அப்பாவித்த தமிழர்கள் தயாராக இருக்கிறார்கள். அவர்களைப் பிரபலயப்படுத்துவதற்கு தமிழக ஊடகங்கள் வரிசைகட்டி நிற்கின்றன.கடந்த ஆண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்புமனுத் தாக்கல் செய்தபோது தொலைக் காட்சிகளும் பத்திரிகைகளும் அவருக்குக் கொடுத்த முக்கியத்துவம் அளவிட முடியாதது.

ரஜினியைப் பற்றிய சிறு தகவலுக்குக் கூட பெரும் சலசலப்பை ஏற்படுத்தும் சக்தி உள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசம் என்பது தமிழகத்தையும் இந்தியாவையும் தாண்டி உலகளவில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறேன். தமிழகத்தில் உள்ள 234 சட்ட மன்றத் தொகுதிகளிலும் கட்சியில் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என ரஜினி அறிவித்ததும் அவரின் முன்னால் கூடி இருந்த ரசிகர்கள் பெருத்த ஆரவாரம் செய்தனர். தமிழ் மக்கள் வாழும் உலக நாடுகளிலும்  இந்தச்செய்தி அதிர்வலையை ஏற்படுத்தியது.

ஜெயலலிதாவுக்கு எதிராக ரஜினியின் முதலாவது அரசியல் குரல் வெளிப்பட்டது. ஜெயலலிதாவின் அரசுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிரான அலையின் போது கருணாநிதிக்கும் மூப்பனாருக்கும் ஆதரவாக ரஜினி குரல் கொடுத்தார்.  ரஜினியின் பாட்ஷா படம் வெளியாகிய தருணத்தில் அதற்கு எதிராக அன்றைய முதல்வர் ஜெயலலிதா கருத்து வெளியிட்டபோது ரஜினியின் குரல் அரசியலாக வெளிப்பட்டது.  அப்போது நடைபெற்ற தேர்தலின் முடிவில் ஜெயலலிதாவின் தோல்வியும் கருணாநிதி, மூப்பனார் ஆகியோரின் இணைத் தலைமையின் வெற்றியும் ரஜினியின் குரலால் கிடைத்தாகத் தோற்றம் உண்டானது.

தமிழக ரசிகர்கள் மத்தியில் ரஜினிக்கு உள்ள செல்வாக்கினால் அரசியல் தலைவர்கள் அனைவரும் அவருடன் இணக்கமாகச்செல்வதையே விரும்பினர். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின்  நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,  ரஜினிக்கு எதிராகச் செயற்பட்டார். பாபா படம் வெளியானபோது ரஜினி ரசிகர்களும் பாட்டாளி மக்கள் கட்சித் தொண்டர்களும் மோதிக்கொண்டனர். திரைப்படங்களில் ரஜினி சிகரெட்  புகைப்பதால் எழுந்த கோபம் மோதலாக வெடித்தது.  அப்போது கருணாநிதி தலமையிலான கூட்டணியில் ராமதாஸின் கட்சி இணைந்திருந்தது. பாட்டாளி மக்கள் கட்சிக்கு எதிரான ரஜினியின் கோபம் ஜெயலலிதாவின் தலமையிலான இரட்டை இலைக்கு வாக்களிக்கத் தூண்டியது. அந்தத் தேர்தலிலும் அதற்குப் பின்னர் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் ரஜினியின் குரல் வெற்றியைக் கொடுக்கவில்லை.

அரசியலில் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்ற எண்ணம் ரஜினிக்கு இருக்கிறது. அவரின் குடும்பத்தவர்களும் அதனை விரும்புகின்றனர். ஆன்மீகம், சோதிடம் ஆகியவற்றில் ஆழ்ந்த நம்பிக்கை வைத்திருக்கும் ரஜினி அதற்கான  காலம் வரும் வரையில் காத்திருந்தார். 1996 ஆம் ஆண்டு  தமிழக முதல்வர் பதவி தன்னைத் தேடிவந்தபோது தான்  ஏற்றுக்கொள்ளவில்லை என அவர் இப்போது கூறியுள்ளார். கால நேரம் பார்த்துத்தான் அரசியல் பற்றிய அறிவிப்பை ரஜினி வெளியிட்டுள்ளார்.

கமலின்  அரசியல்  கருத்துக்களால் டுவிட்டர் சூடாகி உள்ளது. கமல் அரசியலுக்கு வருகிறார் என்ற அறிவிப்பு அரசியலுலகில் வலம் வரத் தொடங்கியது. அதே நேரத்தில் ரஜனியில் அரசியல் பிரவேசம்  பற்றிய செய்திகளும் பரவத்தொடங்கியது.  தமிழகத்தின்  அடுத்தமுதலமைச்சர் ரஜினிதான் என சுமார் இருபது வருடங்களாக ஜோதிடர்கள் தெரிவித்து வருகின்றனர்.ரஜினி கிங் மேக்கராக இருக்கலாம் ஆனால், முதலமைச்சர் பதவிக்கு ஆசைப்படக் கூடாது என கர்நாடகத்தில் உள்ள பிரபல ஜோதிடர்  தெரிவித்துள்ளார். ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய செய்திகள், ஊகங்கள்,வதந்திகள் ஆகியவற்றுக்கு முற்றுப்புள்ளி  வைக்கப்பட்டுள்ளது.தமிழ்த்திரை  உலகில் சூப்பர் ஸ்டாரான ரஜினிகாந்த் அரசியலில் உச்சத்தைத் தொடுவாரா என்ற விவாதம் களை கட்டத் தொடங்கிவிட்டது.

தமிழகத்தில் சுமார் 45 வருடங்களாக வாழும் ரஜினி, தமிழ் நாட்டு மக்களுக்காக என்ன செய்தார் என்ற  கேள்வி எழுந்துள்ளது. புயல்,வெள்ளம், சுனாமி போன்ற  இயற்கை அழிவுகளின்போது ஓடி வந்து கைகொடுத்தாரா என்ற கேள்விக்கு ரஜினியை ஆதரிப்பவர்களிடம் பதில் இல்லை. டெல்டா மாவட்ட விவசாயிகளின் பிரச்சினை, தமிழக மீனவர்கள் கடலில் சுட்டுக்கொல்லப்படுவது, ஜல்லிக்கட்டுப் போராட்டம், மீதேன் பிரச்சினை போன்றவற்றின் போது ரஜினி என்ன செய்தார் என்று வீரபாண்டிய கட்டபொம்மன் பாணியில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ரஜினியை ஆதரிப்பவர்களால் பதில் கூறமுடியவில்லை.  

தமிழக விவசாயிகளின் முக்கிய பிரச்சினயான காவிரி நீர் பற்ரி ரஜினி என்றைக்குமே வாய் திறக்கவில்லை. ரஜினியின் சொந்தமநிலமானகர்நாடகத்துக்கும்  அவரை வாழவைக்கும் தமிழகத்துக்குமிடையில் நீருக்காக தீப்பிடித்த சம்பவங்கள் பல நடந்துள்ளன. அப்போதெல்லாம் நியாயத்தின் பக்கம் ரஜினி நிற்கவில்லை.இது போன்ற அவரின் கடந்தகால சம்பவங்கள் எல்லாம் எதிர்காலத்தில் விமர்சனங்களூக்குள்ளாக்கப்படும்.

 எம்.ஜி. ஆரைப் போன்று ரஜினியும் அரசியலில்  வெற்றிபெறுவார் எனச்சிலர் கருதுகின்றனர். அம்.ஜி. ஆரின் ரசிகர்கள் அனைவரும் அன்று திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களாக இருந்தனர். அம்.ஜிஆர் கட்சியை விட்டுவெளியேறியபோது தொண்டர்களான அவரது ரசிகர்களும் கட்சியின் சில தலைவர்களும் அவருடன் சென்றனர். ரஜினியின் ரசிகர்கள் தமிழகக் கட்சிகள் பலவற்றில் அங்கத்தவர்களாக இருக்கின்றனர்.ரஜினியின் அரசியல்கொள்கையால கவரப்பட்டால் அவர்கள் இடம் மாறும் சந்தர்ப்பம் ஏற்படும். அரசியல் கொள்கை பற்றிக் கேட்டபோது இரண்டு நிமிடம் தலை சுற்றியதாக ரஜினி தெரிவித்த சொல் வைரலாகப் பரவியுள்ளது.

தனிக்கட்சி தொடங்கப்போவதாகவும் தமிழகத்தில் இருக்கும் 234 தொகுதிகளிலும் தனது கட்சியில் சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாகவும் ரஜினி அரிவித்துள்ளார். ஊழல் அற்ற நேர்மையான அரசியல்வாதிகளை அவரால்தேடிப்பிடிக்க முடியுமா என யோசிக்க வேண்டி உள்ளது. தேர்தலில் போட்டியிடுபவர் ஒரு கோடி ரூபா எனும் ரஜினியின் அறிவிப்பு ஏழைத் ரசிகனின் எதிர்பார்ப்பில் விழுந்த சாட்டை அடியாக உள்ளது. 2021 ஆம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடப்பாவதாக ரஜினி அறிவித்துள்ளார்

ரஜினியின் பின்னால் இருந்து பாரதீய ஜனதாக் கட்சி இயக்குவதாக அவரது அரசியல் எதிரிகள் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளனர். ஆன்மீக ரசியல் என்ற ரஜினியின் அறிவிப்பு இதற்கு வலுச்சேர்த்துள்ளது.  இதனால் மற்றைய மதத்தவர்கள் ரஜினியை சந்தேகக்கண் கொண்டு பார்க்கவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகிய மூவரும் சமயத்திதை ஒருபுறம் ஒதுக்கிவைத்துவிட்டு அரசியலில் ஜொலித்தவர்கள். எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிக்கும் போது கடவுளை ஆதரிக்கும் வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் தடை போட்டவர். அரசியலில் கடைசி காலத்தில் கோயில்களுக்குச் சென்றவர்.  வெளிப்படையான கடவுள் நம்பிக்கையுடன் ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. ரஜினியின் மதக் கொள்கைக்கைக்குப் பரவலான எதிர்ப்பு உள்ளது. இதனை அவர் எப்படி எதிர்கொள்ளப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

உண்மை உழைப்பு நேர்மை என்பது ரஜினியின் அரசியல் கொள்கை. ஊழலற்ற அரசியல் என்கிறார். அரசியலில் இருந்து பிரிக்கமுடியாத அங்கமாக ஊழல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிஸ்டம் சரியில்லை. அதனை மாற்ற வேண்டும் என்பது ரஜினியின் விருப்பம். கறுப்புப் பணம் தாராளமாகப் புழங்கும் துறைகளில் சினிமாவும் ஒன்று. சினிமாவில் உள்ள சிஸ்டத்தை முதலில் மாற்றும்படி அரசியல்வாதிகள் ரஜினிக்கு அறிவுரைகூறியுள்ளனர்.அண்மைக்கால இந்திய அரசியலில் தனிக்கட்சி ஆட்சி என்பது நடக்கமுடியாத ஒன்று. நடிகர் ரஜினியை சகலரும் விரும்புபார்கள். அரசியல்வாதி ரஜினிக்கு பலத்த எதிர்ப்பு இருக்கும். எதிர்ப்புகள் அனைத்தையும் கடந்து வெற்றி  பெறுவதில்தான் ரஜினியின் எதிர்காலம் தங்கி உள்ளது.


No comments: