Sunday, September 16, 2018

மறுக்கப்படும் நீதியால் காவுகொள்ளப்படும் உண்மைஇலங்கைத் தமிழர்களை உலக நாடுகளில் இருந்து அந்நியப்பட வைத்த அந்தத் துயர சம்பவம் நடைபெற்று இருபத்தேழு வருடங்கள் கடந்துவிட்டன. குற்றமற்றவர்கள் விடுதலையாகி வெளியே வருவார்கள் என்ற பெற்றவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறும் நாள் நெருங்கிவிட்டது. இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதால் இலங்கைத் தமிழர்களுக்கும்  தமிழகத் தலைவர்களுக்கும் இடையிலான தொப்புள்கொடி உறவு துண்டிக்கப்பட்டது. இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெறும் அநீதிகளைத் துயரத்துடனும்  அனுதாபத்துடனும் பார்த்த இந்தியா பகை உணர்ச்சியுடன் பார்க்கத் தொடங்கியது.

 1991 ஆம் ஆண்டு நடந்த இந்தியப் பொதுத் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மே மாதம் 21 ஆம் திகதி தமிழகத்தில் உள்ள ஸ்ரீபெரும்புதூருக்குச் சென்ற ராஜீவ் காந்தி குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்கொலைக் குண்டுதாரியால் இலக்கு வைக்கப்பட்டதால்  ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார் என புலன் விசாரணையில் தெரிய வந்தது. தற்கொலைக் குண்டு என்ற கோணம் விடுதலைப் புலிகள் மீது நேரடியாகக் குற்றம் சாட்டியது. இலங்கைக்குச் சென்ற அமைதிப் படை வடக்கு ,கிழக்கில் செய்த கொடுமைகளால் கோபமடைந்த பிரபாகரனின் உத்தரவில் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட செய்தி இந்தியாவுக்கும் இலங்கைத் தமிழருக்கும் இருந்த பாசப் பிணைப்பை அறுத்தெறிந்தது.

விடுதலைப் புலிகளின் அமைப்பைச் சேர்ந்த ஒற்றைக் கண் சிவராசன், தணு, சுபா என்ற கோணத்தில் விசாரனையை ஆரம்பித்த இந்தியப் புலனாய்வு அதிகாரிகள் சிவராசனுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்தனர்.  இந்தியத் தலைவர், நேரு குடும்பத்தின் வாரிசு கொல்லப்பட்டதால் குற்றவாளிகளைப் பிடித்து தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என்ற அவசரம்  புலனாய்வு அதிகாரிகளுக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக உண்மையான குற்றவாளிகளை நெருங்காது சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்களைக் குற்றவாளியாக்கினார்கள். 26 பேர் மீது 1992 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் திகதி பூந்தமல்லி தடா சிறப்பு நீதிமன்றத்தில்  குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. 1998 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் திகதி குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேன்முறையீட்டின் பின்னர்  1991 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் திகதி  நளினி ,சாந்தன், முருகன்,பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்குத்தண்டனை உறுதி செய்யப்பட்டது. ஜெயக்குமார்,ரொபேட், ரவிச்சந்திரன் ஆகிய மூவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டு ஏனையவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 ஆம் திகதி அன்றைய முதலமைச்சர் கருணாநிதியின் பரிந்துரையின் பேரில் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.  2014 ஆம் ஆண்டு  பெப்ரவரி 14 ஆம் திகதி மூவரின் மரணதண்டனையை ஆயுள்தண்டனையாகக் குறைத்த உச்சநீதிமன்றம் மூவரின்  விடுதலையை தமிழக அரசு முடிவு செய்யலாம் எனப் பரிந்துரைத்தது.

தமிழக அரசு, தமிழக கவர்னர், தமிழக முதலமைச்சர்கள், ஜனாதிபதி,உயர் நீதிமன்றம் உச்ச நீதிமன்றம், காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கிடையில் அரசியல் காரனங்களுக்காகச் சிக்கித் தவித்த எழு பேரின் விடுதலை கைக்கெட்டியதூரத்தில் இருக்கிறது.

பேரறிவாளன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது: ராஜிவ் கொலை தொடர்பான விசாரணை முழுமையடையவில்லை. இந்த வழக்கில் 24 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக கவர்னருக்கு 2015 டிசம்பரில் கருணை மனு அனுப்பினேன். இரண்டு ஆண்டுகளாகியும் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லைஎன அவர் அதில் கூறியிருந்தார்.

மத்திய அரசு தொடர்ந்த வழக்கு மற்றும் பேரறிவாளன் தொடர்ந்த வழக்குகளை இணைத்து விசாரித்த நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், நவின் சின்ஹா, கே.எம். ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு   இந்த வழக்கை முடித்து வைத்தது. 'பேரறிவாளன் கொடுத்துள்ள கருணை மனுவை தமிழக ஆளுநர் பரிசீலிக்க வேண்டும்' என கூறியுள்ள உச்ச நீதிமன்றம் மத்திய அரசின் வழக்கை முடித்து வைப்பதாக கூறியுள்ளது.

இந்த வழக்கில் தண்டனை பெற்றுள்ள ஏழு பேருக்கும் நேரடியாக எந்த நிவாரணத்தையும் உச்ச நீதிமன்றம் அளிக்கவில்லை. அதே நேரத்தில் 'பேரறிவாளனின் கருணை மனுவை தமிழக கவர்னர் பரிசீலிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளது. அதன்படி, மீதமுள்ள ஆறு பேரும் தங்களை விடுதலை செய்யும்படி கவர்னருக்கு கருணை மனுவை அனுப்பும் வாய்ப்பு ஏற்பட்டது.

ஆளுநரின் கையில் ஏழு பேரின் தலைவிதி தங்கி உள்ளது.     விடுதலை செய்யலாம், மறுக்கலாம், தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பலாம், மாநில அரசுக்குட்பட்ட வழக்குகளில் ஆளுநரின் முடிவு செல்லுபடியாகும் தேசிய வழக்குகளில் ஆளுநர் தலையிட முடியாது என்ற குறிப்பும் உள்ளது. பாரதீஜ ஜனதாவின் பிரதிநிதியான ஆளுநரின் தலயில் ஏழுபேரின்  விடுதலையை சுமத்திவிட்டு தமிழக அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது.

ராஜீவ் கொலையைப் பற்றிபல புத்தகங்களும் திரைப்படங்களும் ஆவணப் படங்களும்  வெளிவந்துள்ளன. அவற்றில் காணப்படும்  பல சந்தேகங்களுக்கு இன்னமும் விடை கிடைக்கவில்லை.  சிபிஐ தலமைப் புலனாய்வு அதிகாரியாக இருந்த  ரகோத்தமன், வெளியிட்ட புத்தகத்தில் சாந்தனிடம் மன்னிப்புக் கேட்டுளார். சிபிஐ தேடிய சாந்தன் , கைது செய்யப்பட்டு  சிறையில் இருப்பவர் அல்ல என்ற உண்மையை வெளியிட்டதுடன் சாந்தனுக்கு மன்னிப்புக் கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

டில்லிப் பத்திரிகையாளர் பெரோஸ் அஹ்மத்  எழுதிய புத்தகத்தில் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளார்.
''இது என்னுடைய கற்பனை அல்ல. பல்வேறு தரவுகளின் அடிப்படையில் நான் இந்த முடிவுக்கு வந்துள்ளேன். ராஜீவ் காந்தி கொலையின் பின்னணிப் பாதுகாப்பை விசாரித்த ஜெயின் கமிஷன் மற்றும் வர்மா கமிஷன் என்ன கூறியது என்பதை முதலில் பார்த்தேன். இவற்றோடு இந்தக் கொலை குறித்து சி.பி.ஐ இயக்குநர் கார்த்திகேயன்,ராஜீவ் கொலை வழக்கின் தலைமை புலனாய்வு அதிகாரி ரகோத்தமன், சி.பி.ஐ அதிகாரி வினோத் குமார் ராஜு, அப்போது சட்ட அமைச்சராக இருந்த சுப்பிரமணியன் சுவாமி, முன்னாள் தமிழக டி.ஜி.பி மோகன்தாஸ்,பத்திரிகையாளர் மனோஜ் மிட்டல் என்று பலர் இது பற்றி சொன்னவற்றை தொகுத்தேன். இப்படி எழுதியவர்கள் எல்லாம் முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர்கள். இதன் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்துள்ளேன் எனக்குறிப்பிட்டுள்ளார். பாதிகாப்புக் குறைபாடு வெளிநாட்டுச்சதி என்பன பற்றி யாரும் விசாரிக்கவில்லை என பெரோஸ் அஹ்மத் குறைபட்டுள்ளார்.

சிறையில் இருக்கும் நளினி எழுதிய புத்தகத்தின் மூலம் அவர் கேட்ட கேள்விகளுக்கு இதுவரையாரும் பதிலளிக்கவில்லை. ஒற்றைக்கண் சிவராசனுடன் ராஜீவின் கூட்டத்துக்குப் போனது குற்றமா?. எதற்கெனத்தெரியாமல் பற்றி வாங்கிக் கொடுத்தது குற்றமா? சாந்தன் என்ற பெயரில் வாழ்வது குற்றமா? என சாதாரணமானவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாத சிபிஐயினால், துறைசார் நிபுணர்களின் கேள்விகளுக்கு எப்படிப் பதிலளிக்க முடியும். விடுதலையானாலும் கொலைக்குற்றவாளிகள் என்ற அவப்பெயருடன்தான் அவர்கள் வாழப்போகிறார்கள். 27 வருட அவலவாழ்க்கையை ஈடு செய்ய யாராலும் முடியாது.

ராஜீவ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 7 பேர் கைது செய்யப்பட்டது முதல் அவர்களை விடுவிக்க தீர்மானம் போட்டது வரை 

கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் திகதி  முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரசாரத்துக்கு வந்தபோது அவர் படுகொலை செய்யப்பட்டார். முருகன், நளினி, சாந்தன்,பேரறிவாளன், ஜெயக்குமார், ரவிச்சந்திரன்,ராபர்ட் பயஸ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

மே 20 1992: பூந்தமல்லியில் தடா நீதிமன்றத்தில் இந்த வழக்கு குறித்து சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிறப்பு விசாரணை குழு.

1998 ஜன 28: இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கு தடா நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

1999  மே 11: இதில் நளினி, சாந்தன்,முருகன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனையையும், மற்ற 3 பேருக்கு ஆயுள் தண்டனையையும் மீதமுள்ள 19 பேரை விடுவித்தும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

1999  அக்டோபர் 8- முருகன்இ நளினி, பேரறிவாளன், சாந்தன் ஆகியோர் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

ஒக்.17: தமிழக ஆளுநருக்கு 4 பேரும் கருணை மனு அளித்தனர்.

ஒக் .27: கருணை மனுக்களை ஆளுநர் நிராகரித்தார்

நவ.25: கருணை மனுக்களை ரத்து செய்து ஆளுநர் உத்தரவை சென்னை ஹைகோர்ட் நிராகரித்தது. மேலும் சட்டபேரவையின் கருத்துகளை பெற்று புதிய உத்தரவை பிறப்பிக்குமாறு ஆளுநருக்கு உத்தரவிட்டது ஐகோர்ட்.

2000  ஏப். 19- நளினியின் தூக்கு தண்டனையை குறைக்குமாறு அப்போதைய முதல்வர் கருணாநிதி பரிந்துரை செய்தார்.

ஏப். 21- கருணாநிதியின் பரிந்துரையை ஆளுநர் ஏற்றார்.

ஏப். 28: அதே போல் சாந்தன்,முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவருக்கு மாநில அரசு பரிந்துரை செய்தது.
2008 மார்ச் : நளினியுடன் பிரியங்கா காந்தி வேலூர் சிறையில் சந்திப்பு

ஆகஸ்ட் 12, 2011- கருணை மனுக்களை ஜனாதிபதி பிரதீபா பாட்டில் ரத்து செய்துவிட்டதாக தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சரம் தெரிவித்தது.

ஓகஸ்ட் 26: கடந்த 2011-செப்டம்பர் 9-ஆம் தேதி சாந்தன்இ முருகன்இ பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிட தேதி குறிக்கப்பட்டது.

ஓகஸ்ட் 30: மூவரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்குமாறு தமிழக அரசு ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுத்து தீர்மானம் நிறைவேற்றியது. இதையடுத்து மூவரின் தூக்கு தண்டனை நிறைவேற்ற சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த கருணை மனுக்களை உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பியது.

2012 மே 1: மூவரின் பேரின் மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டது.

2014 பிப்.14- மூவரின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்தது. இதையடுத்து அவர்களை விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டது.

பிப். 19: சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ,ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்க சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

மார்ச்: தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு .இதையடுத்து 7 பேர் விடுதலை குறித்து தமிழக அரசின் முடிவுக்கு இடைக்கால தடை விதித்தது உச்சநீதிமன்றம்

டிசம்பர் 2015: 7 பேரை விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு என உச்சநீதிமன்றம் கருத்து

மார்ச் 2016- 7 பேரை விடுவிப்பது குறித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம்
ஏப்ரல் 2016- தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு
ஜனவரி 2018- 7 பேரை விடுவிப்பது குறித்து மத்திய அரசு 3 மாதத்துக்குள் முடிவு எடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

2018  செப் 6: ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள 7 தமிழர்களின் விடுதலையை தமிழக அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து மத்திய அரசின் வழக்கை முடித்து வைத்தது.

செப். 9: தமிழக அமைச்சரவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூடியது. அப்போது ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ள அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


No comments: