Wednesday, December 26, 2018

ஸ்டாலினை எதிர்க்க எம்ஜிஆரைக் கூப்பிடும் மோடி


கருணாநிதி ஜெயலலிதா ஆகியோரைச் சுற்றிவந்த தமிழக அரசியல் அவர்கள் இருவரும் மறைந்தபின்னர் சசிகலா,ஓ.பன்னீர்ச்செல்வம், எடப்பாடி பழனிச்சாமி,டி.டி.தினகரன் எனச்சுற்றிச் சுழன்றது. இவர்களின் மத்தியில் ஸ்டாலினின் பெயர் மழுங்கடிக்கப்பட்டது. இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி என ஸ்டானின் பிரகடனப்படுத்தியதால் எம்ஜிஆரின் துணையுடன் அவரை எதிர்க்க களம் இறங்கியுள்ளார் மோடி.

தமிழக , மத்திய அரசுகள் மீது ஸ்டாலின் மென்மையான போக்கைக் கடைப்பிடித்துவந்தார். கருணாநிதியைப் போல ஸ்டாலின் இல்லை என்ற விமர்சனம் எழுந்தது. எடப்பாடியின் அரசை மோடி காப்பாற்றுகிறார் என்பது அனைவருக்கும் தெரிந்த  உண்மை. அதனைத் திராவிட முன்னேற்றக் கழகம் உரத்துச் சொல்லும்போது பாரதீய ஜனதாவுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் இரகசிய ஒப்பந்தம் இருக்கிறது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினர்திசை திருப்புவார்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்றதும் “காவியை இல்லாமல் செய்ய வேண்டும்என காட்டமாக உரையாற்றினார். அன்று தொடங்கிய பாரதீய ஜனதாவுக்கான எதிர்ப்பை ஸ்டாலின் இன்னமும் கைவிடவில்லை. இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் காந்தி எனப் பிரகடனம் செய்த ஸ்டாலின், மோடியை :சாடிஸ்ட்என அறிவித்தார். ஸ்டாலினின் பேச்சால் எரிச்சலடைந்த மோடி, தனது அரசியல் எதிரியான  ராகுல் காந்தியை ஓரமாக ஒதுக்கி வைத்துவிட்டு ஸ்டாலினுக்கு எதிராகத் தனது பிரசாரத்தை ஆரம்பித்துள்ளார்.

தமிழகத்தில் எம்ஜிஆருக்கு தனி மதிப்பு உள்ளது. எம்ஜிஆரின் ரசிகர்கள்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொண்டர்களாகி அவரை முதலமைச்சராக்கினார்கள். எம்ஜிஆருக்குப்பின் ஜெயலலிதவை அரியணையில் ஏற்றியதும் அவர்கள்தான்.  எம்ஜிஆரின் வாக்கு வங்கியைக் குறிவைத்து ஸ்டாலினுக்கும் ராகுல் காந்திக்கும்  எதிரான பிரசாரத்தை மோடி ஆரம்பித்துள்ளார்.

 “எம்ஜிஆரின் ஆட்சியை கலைத்த காங்கிரஸுக்கா உங்கள் ஆதரவு?என தமிழக மக்களைப் பார்த்து கேள்வி எழுப்பி உள்ளார் மோடி. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலமையிலான கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தக் கூட்ட்ணியில் காங்கிரஸும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஸ்டாலினின்  முழக்கம் மோடியை மிகவும் பாதித்துள்ளது. அதனால்தான் ஸ்டாலினின் தகப்பன் காலத்து அரசியல் நட்சத்திரமான எம்ஜிஆரை,  மோடி ஞாபகப்படுத்துகிறார். அடுத்து நடைபெற்ற தேர்தலில் தனது ஆட்சியை கலைத்த காங்கிரஸ் கட்சியுடன் எம்ஜிஆர் கூட்டணி சேர்ந்ததை மோடி மறந்திருக்கலாம், தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

தமிழக அரசியல் வரலாற்றில் ஈழத்தமிழர் விவகாரமும் பின்னிப் பிணைந்துள்ளது. காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கூட்டணி இலட்சக் கணக்கான ஈழத் தமிழ் மக்களைக் கொன்றது என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்  தலைவர்களும்  தமிழக பாரதீய ஜனதாத் தலைவர்களும்  மேடைதோறும் முழங்குகின்றனர். புலிகளைத் தோற்கடிப்பதற்கு  இந்தியாவின் முன்னாள்  பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம் மிக்ப்பெரிய பங்காற்றியது என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்ததை  தமிழக பாரதீய ஜனதாத் தலைவர்கள் மறந்துவிட்டனர்.

காங்கிரஸையும் திராவிட முன்னேற்றக் கழகத்தையும் குற்றம் சாட்டும் மோடியின் தலைமையிலான மத்திய அரசாங்கம்தான் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு செங்கம்பளம் விரித்து வரவேற்றது. இதனைத் தமிழக மக்கள் மறந்துவிடுவார்கள் என மோடி  நினைக்கிறார்.

மாற்றான் மனப்பான்மைஅயுடன் பிரதமர் மோடி தமிழகத்தை நோக்குவதை மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். மேகதாது அணை விவகாரம், தூத்துக்குடி சம்பவம், கஜாபுயல் பாதிப்பை பார்க்க வராமை, தமிழக அரசு கேட்ட கஜா புயல் பதிப்பு நிவாரணத்தை  வழங்காமை போன்றவை மோடிக்கு எதிராக இருக்கின்றன. தேர்தல் காலத்தில் இவை எல்லாம் விஸ்வரூபம் எடுக்கும். ஈழத் தமிழர் விவகாரமும் எம்ஜிஆரின் செல்வாக்கும் தமிழக அரசியலில் செல்வாக்குச்  செலுத்தப்போகும் சூழ்நிலை எழுந்துள்ளது. மோடியா லேடியா என்ற கோஷம் மறைந்து ஸ்டாலினா மோடியா எனும் கோஷம் முன்னிறுத்தப்படவுள்ளது.

சூரன் ஏ.ரவிவர்மா.

No comments: