Friday, September 27, 2019

சைவப்பெரியார் சூரன் பெருமானார்


இலங்கை சைவநெறிக் கழகமும் யாழ்ப்பாண விழாவும்

கடந்த சனிக்கிழமை ( 21 -09 - 2019) யாழ்ப்பாணம்,இணுவில் அறிவாலயம் மண்டபத்தில் வெகுசிறப்பாக இலங்கை சைவநெறிக் கழகத்தின் இருநூல் அறிமுகவிழா நடைபெற்றது.

விழாவுக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்கள்,ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர்களுடன் சைவஞானபானு ஆறு.திருமுருகன் அவர்களும் வருகை தந்திருந்தார்கள். பல கல்விமான்கள் முன்னிலையில் நடைபெற்ற இவ்விழா புதியதொரு அத்தியாயத்தினைத் தோற்றுவித்துள்ளதென்பது எம் நம்பிக்கை. இவ்விழா சிறப்புற மூவர் முதன்மைக்காரணர். எமது கழகத்தின் காப்பாளர்களாகிய விடைக்கொடிச்செல்வர்,சைவநெறிக் காவலர் சைவத்திரு.சி.தன்பாலா அவர்களும்,கொழும்பு கதிர்வேலாயுதசுவாமி கோயில் அறக்காவலர் சைவத்திரு.கரகரத்தினம் ரகுநாதன் அவர்களும் கழகத்தின் யாழ்.ஒருங்கிணைப்பாளர் சைவத்திரு.ஜீவா.ஷஜீவனும் அவ்முதன்மைக்காரணர்.

எமது கழகத்தினால் 2018ம் ஆண்டு ஏப்பிரல் மாதம் 7ம் நாள் சைவம்போற்றுதும் விழா வெகுசிறப்பாக கொழும்புத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது. அதுவே எமது அமைப்பின் முதலாவது விழாவாகும். இலக்கியத்தையும் பண்பாட்டையும் சைவசித்தாந்தத்தையும் இணைக்கும் கந்தபுராணப்பாரம்பரியத்தின் நீட்சியாக, சைவவிழாவாக இவ்விழா திகழ்ந்ததென்பதில் மாற்றுக்கருத்து எவருக்கும் இருக்காதென்பது திண்ணம். அனைவராலும் பாராட்டப்பட்ட இவ்விழாவினைத் தொடர்ந்து, எமது இருநூல் வெளியீட்டுவிழா கொழும்பில் நடைபெற்றது. இவ்விழா, எமது ஒழுக்கமைப்பில் ஒரு சறுக்கலாகவே இருந்ததென்பது உண்மை. விழாவின்போது எமது கைகளில் வெறும் 20 புத்தகங்களே இருநூல்களிலும் கிடைத்திருந்தன. எனவே முதன்மை,சிறப்பு விருத்தினர்களுக்கு மாத்திரமே கையளிக்கக்கூடியதாகவிருந்தது.விழாவின்போது அச்சகத்தாரால் கொண்டுவந்து சேர்க்கப்பட்டுவிடுமென்ற உத்தரவாதம், இறுதியில் பலிக்காமல்ப்போய்விட்டது.எனினும், விழாவில் கலந்துகொண்ட பேச்சாளர்களின் தரமான உரைகள், விழாவின் தரத்துக்கு மகுடமாய் விளங்கியதெனலாம்.
அதனைத்தொடர்ந்துஇ எமது கழகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் நடைபெற்ற இருநூல் அறிமுகவிழாவில் கிழக்குப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்,விரிவுரையாளர்களுடன் பலகல்விமான்கள் கலந்துகொண்டனர். அவ்விழாவும் சைவம்போற்றுதும்போல் ஓர்வெற்றிவிழாவாகவே அமைந்திற்று. அவையில் 110 பேர் குறைந்தபட்சம் கலந்துகொண்டதை உறுதிப்படுத்திக்கொண்டோம். அதிலும் விழாமுடியும்வரை அனைவரும் இருக்கையைவிட்டு எழும்பாது,இலயித்திருந்ததைக் காணக்கூடியதாகவிருந்தது. இலங்கையின் மட்டக்களப்பு,மலையகம்,யாழ்ப்பாணம் என்னும் பலபிரதேசங்களின் சங்கமாக எமது அமைப்புத் திகழ்வதை முதன்மை,சிறப்பு விருந்தினர் கொண்டாடினர். சைவத்திற்கு நடந்துவரும் கேடுகளை பல்கலைக்கழகப் பெருந்தகையினர் உணர்ந்துகொண்டு,மாற்று உபாயகங்களைக் கைக்கொள்ளவேண்டியதன் அவசியத்தினை வெளிப்படுத்தினர். இன்றுவரை அதற்குரிய பணிகளை அவர்கள் முன்னெடுப்பதாக, நம்பிக்கையூட்டிவருகின்றனர்.

இவ்விழாவினைத் தொடந்து  யாழ்ப்பாணத்தில் இருநூல் அறிமுகவிழா கைக்கெட்டியது. யாழ்ப்பாணத்தில் ஏறத்தாழ 50 பேரே விழாவுக்கு வருகை தந்திருந்தனர். ஆனால் வந்திருந்த அனைவரும் கனதியானவர்களென்பதில் மாற்றுக்கருத்தில்லை. நாம் குறைந்தபட்சம் 40 பேர்வரையே அவைகூடும் என்று அனுமானித்திருந்தமையால்  ஏற்கனவே இதுபோன்ற நூல்வெளியீட்டு விழாக்களுக்கு அன்புக்கட்டளைகளால் ஆட்களை இழுத்துவருகின்ற பழக்கமே தற்சமய யாழ்ப்பாண வழக்கமாக இருக்கின்றதென்ற அங்குள்ள பெரியவர்களின் விழாவுக்கு முன்னைய அனுபவப்பகிர்வுகளினால்  கூட்டத்திற்குரிய எண்ணிக்கை- திருப்திகரமானதேயாகும்.
ஸ்மார்த்தத்தின் பிடிக்குள் வீழ்ந்துகொண்டிருக்கும் சைவத்தினை மீட்டெடுத்து இளைஞர்களின் தோளில் ஏற்றவேண்டுமென்று கனவுகாணும் இளைஞர்கள் சிலரும் தாமே முகநூலினூடாக அறிந்து  அவைக்கு வந்திருந்தமை இரட்டிப்பு மகிழ்ச்சியை ஊட்டியது.

இவ்விழா இருநிகழ்வுகளை பிரதானமாகக் கொண்டிருந்தது.
1. நூல் அறிமுகம்
2. இந்துவெனும் பெயரில் சைவத்தை வீழ்த்தி  அசுர வளர்ச்சிகண்டுவரும் ஸ்மார்த்தம்.
நூல் அறிமுகத்தில். சிவப்பிரகாசககதவம் நூல் அறிமுகவுரையை ஆற்றுவதற்கு தயாராகவிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளரின் உறவினர் தவறிவிட்டமையினால்  அவரால் கலந்துகொள்ளமுடியாத இயலாமைக்குள் உள்ளாயினார். எனினும் திருவருட்துணையால் விரிவுரையாளர் சைவத்திரு.ஜெயந்திரன் அவர்கள் முன்வந்து  வெறுமனே 15 நிமிடத்தயார்ப்படுத்தலில்  சிறப்புரையை வழங்கினார். உண்மையில் இவ்விழாவில் அவருக்கு பேசவேண்டுமென்று நான் அவரிடம் கடந்தவருடமே கதைத்திருந்தேன்.எனினும் அது நேரப்பிரச்சினைகளால் விழாத்திட்டமிடலில் சித்திக்கவில்லை.ஆனால்  கொடுத்த வாக்கைத் தவறிவிட்டோம் என்னும் மனவருத்தம் அடிநெஞ்சுக்குள் இருந்தவாறேயிருந்தது. ஈற்றில்  திருவருள் அவரையே சிவத்தைப் பிரகாசிக்க நியமித்தமை எம்மை வியப்புள் ஆழ்த்திற்று. திருவருள் நிச்சயம் உண்டு!!!!!!!
அலகிலா ஆடல்-சைவத்தின் கதை நூல் அறிமுகவுரையும் அற்புதமாக நிகழ்த்தப்பட்டது. காரசாரமான கருத்துப்பகிர்வுகளுடன் கூடிய பொதுச்செயலாளரின் ஏற்புரை- ஒரு கந்தபுராண அரங்கேற்றத்தின் காட்சியை கண்முன்னே கொணர்திற்று.
ஸ்மார்த்த இந்துத்துவம்  சைவசமயத்தின் கொடிமுதல் கோயில்வரை செய்துள்ள சீரழிப்புக்களையும் ஸ்மார்த்தம்-சைவம் வேறுபாடுகளையும் பட்டியலிட்டு நாம் நடத்திய  கணினி அரங்களிக்கை நிகழ்ச்சி - அவையோரை விழிப்புக்குள்ளாக்கியதென்பதில் நம்பிக்கையுண்டாயிற்று. எமது அரங்க அளிக்கையை முடித்ததும்  அவையிலிருந்து ஒருவர் எழும்பினார். ஒருநிமிடம் கதைக்கலாமோ என்று வினாவினார். எதிர்ப்புக்குரலோவென்று யோசித்தவாறு அனுமதித்தோம். "இங்குள்ள பெருந்தகைகள் நினைத்தால் சைவத்தைக் காப்பாற்றலாம்" என்று கூறி  இப்படியொரு அரங்க அளிக்கையை நடத்தி உண்மைகளை இங்குள்ளவர்கள் உணருமாறு வழியேற்படுத்தியமைக்கு நன்றியென்று கூறினார். சைவத்தின் மகுடமென்று இணுவிலுக்கு ஒருபெயருண்டென்று கேள்விப்பட்டுள்ளேன்.ஆனால்  அவையே அவருக்குக்கொடுத்த கரகோசத்தில் அது உறுதியாயிற்று.கண்ணாரக்கண்டேன்.

எம் அரங்க அளிக்கையின் பின்னர்  சைவஞானபானு அவர்கள் சைவத்தினைக் காப்பதற்கு முதலில் செய்யவேண்டியவையென்று பல நடைமுறைச்செயற்திட்டங்களைக் கூறினார். அவற்றை இலங்கை சைவநெறிக் கழகம் ஏற்கனவே முன்னெடுத்துவருகின்றமையை சைவப்புலவர் சைவநெறிச்செம்மல் செல்லத்துரை ஐயா அவர்கள் அவைக்குத் தெளிவுபடுத்தியதோடு குழந்தைக்கு உயிர் இருந்தால்த்தான் அது தவழ நடக்கப்பழக்கமுடியுமென்பதையும்-உயிரில்லாத குழந்தைக்கு தவழ,நடக்கப்பழக்குவதில் பயனில்லையென்பதையும் உணருமாறு நல்லுரையொன்றை ஆற்றினார்கள். சைவத்தின் தத்துவம்,தனித்துவம் காத்தாலத்தான், சைவசமயத்தின் ஏனைய விழுமியங்களைக் கட்டமைக்கமுடியுமென்பதற்கு நாவலரின் பணிகளிலிருந்து நாம் தெளியலாம். சைவம் அழியாதென்று கொடுக்கும் நம்பிக்கைகளெல்லாம்  இலங்கையைத் தமிழர் ஆளலாமென்று சேர்.பொம்.அருணாசலம்கொடுத்த நம்பிக்கையை ஒத்ததேயென்பதை அவையோர் உணர்ந்திடவேண்டுமென்று எண்ணிய எமக்கு  சைவநெறிச்செம்மல் அவர்களின் உரை திருப்தியாக்கிற்று.
பல்கலைக்கழக சமஸ்கிருதப்பீடத்தலைவர் சிவத்திரு. பாலகைலாசநாத ஐயர் அவர்கள், "எம்மைச் சிந்திக்கத்தூண்டியுள்ளது" என்று உரையாற்றினார்கள். அவரது உரை திருவருள் சைவத்தைக் கைவிடாது என்பதன் வெளிபாடாகவிருந்தது. முதுநிலைப்பேராசிரியர் வேதநாதன் ஐயா அவர்கள் ஆற்றிய உரையும்  அவர் எம்முடன் தனிப்பட்டரீதியில் கதைத்தவிடயங்களும்- இலங்கை சைவநெறிக் கழகம் சரியான பாதையில் நடப்பதால்- தடைகளும் இடர்களும் ஏராளம் சந்திக்கவேண்டியிருக்கும் என்னும் அவர்தம் அனுபவத்தினை எம்முள் விளைக்கச்செய்திற்று.

இவ்விழாவில், சிவபூமிச் சைவமுதலிகள்,தேசிகர்,தாதையர் பிரகடனத்தில் தங்கம்மா அப்பாக்குட்டியார் போன்ற பெருந்தகையினர் சேர்க்கப்படவில்லையென்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. இங்கு சைவக்கற்புக்கு பங்கமில்லாது வாழ்ந்தார் மட்டுமே பிரகடனத்தில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்பதை இலங்கை சைவநெறிக் கழகம் வெளிப்படுத்தவிரும்புவதோடு பல சைவக்கற்புடை பெரியார்கள் இப்பிரகடனத்தில் உள்ளடக்கப்படாமைக்குக் காரணம் - அவர்களெல்லோரும் இப்பிரகடனத்தில் வெளிப்படுத்தப்பட்டவர்களின் பணிகளைத் தொடர்ந்தோரேயொழிய-தொடக்கியவர் அல்லர் என்பது பொருட்டாகும். இவைபற்றி விரிவான உரையாடல்களுக்கு இலங்கை சைவநெறிக் கழகம் தயாரகவேயுள்ளது. ஏற்கனவே வேளாளர்களாலும் சிவப்பிராமணர்களும் மட்டுமே சைவப்பெரியார்களாக வெளிப்படுத்தப்பட்டுள்ள இலங்கைச்சைவ சமூகத்தில்  அவர்கள் மட்டுமே பாடத்திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்  சைவப்பெரியார் சூரன் பெருமானாரைப் பாடத்திட்டத்தில் சேர்த்துக்கொள்ளாமைபற்றி வருந்துவதற்குப்பதில்  சைவப்பாடப்புத்தகங்களில் இணைக்கப்பட்டுள்ள தங்கம்மா அப்பாக்குட்டியார்  இப்பிரகடனத்தில் இல்லையென்று வெளிவந்த வருத்தம்- எமக்குப் பெரும் ஏமாற்றமேயாகும்!!!! இணுவிலில் அனுபட்ச ஆஞ்சநேயர் தனிக்கோயிலுக்கு வித்திட்ட தங்கம்மா அப்பாக்குட்டியாருக்கும் அனுபட்சக்கோயிலில் நடந்துவந்த மிருகபலியை தம்முயிரைத் தியாகம்செய்யவெளிக்கிட்டுத் தடுத்துநிறுத்தி சம்புபட்சக்கோயிலாக மாற்றிய சைவப்பெரியார் சூரன் பெருமானாரும் ஒரேதாராசில் வைத்து அளக்கப்படக்கூடியவர்கள் அல்லர்!!!! ஆதலாலேயே பிரகடனத்தில் இல்லை!

விழா முடிந்ததும் எமது கழகத்தின் உறவுகள் "அண்ணா நீங்கள் பலருடைய எதிர்ப்பை சம்பாதிக்கின்றீர்களே.......எங்கள் கழகத்தினை வளரவிடுவார்களா???'' என்றனர். அதைத்தான் முதுநிலைப் பேராசிரியர் வேதநாதன் பெருமானாரும் எமக்கு அறிவுறுத்தியிருந்தார் என்று அவர்களிடம் கூறிவிட்டு எல்லாம் திருவருட்சம்மதம் என்றேன்!!!!!
மருத்துவர்.சைவத்திரு.கி.பிரதாபன்
தலைவர். இலங்கை சைவநெறிக் கழகம்

No comments: