Monday, October 14, 2019

கடவுளின் குழந்தைகள்


அரிது அரிது, மானிடராய் பிறத்தல் அரிது
கூன் குருடு செவிடு பேடு நீங்கி பிறத்தல் அரிது"
என்பது ஒளவையார் பாடல்
இதன் பொருள் யாதெனில், உலகில் மிகவும் அரியது எது என்றால், மானிடராகப் பிறப்பது தான் அரியது. மானிடராகப் பிறந்தாலும் கூன்,குருடு, செவிடு முதலிய குறைகள் இல்லாமல் பிறத்தல் அரியது.
எதைய்யா குறை அங்கத்தில் இருக்கும் குறையா இல்லவே இல்லை. பல நிலைகெட்ட மனிதர்களின் நெஞ்சத்துக் கண் இருக்கும் கறையே உலகின் மிகப்பெரும் குறை. அந்தக் குறையை உள ரீதியாக  சிந்திக்க வைத்தவர்கள் வாய் பேசமறுத்த, காது கேட்க மறுத்த மாற்றுத் திறனாளிகள்.
ஐம்புலன்களில் ஏதாவது ஒன்றின் சீரிய இயக்கம் மறுக்கப்படும் போதே குறைகள் ஏற்படும். அது உடலியல் ரீதியான குறை. இறைவன் முழுமையானவன் அந்த முழுமையிலிருந்தே மானுடர்களாகிய நாம் தோன்றியுள்ளோம். இருப்பினும் இத்தகைய மாற்றுத்திறனாளிகளினதும், விசேட தேவை உடையவர்களினதும் பிறப்பானது இறைவன் குறித்த எண்ணக்கருவில் முரண்பாட்டை ஏற்படுத்தும்..


ஆனால், இறைவன் ஒன்றை கொடுக்க மறுத்தால் நிச்சயம் நமது வாழ்க்கையை வளப்படுத்த இன்னொரு திறனை அள்ளி வழங்கியிருப்பான்.
இந்த வார இறுதி நாட்கள் வதிரி டைமன்  மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளான வாய் பேசமுடியாத காது கேட்க முடியாதவர்களின் கிரிக்கட்,உதைப்பந்தாட்ட போட்டிகள்  நடைபெற்றன.
. வடமராட்சி செவிப்புலனற்றோர் விளையாட்டுக் கழகத்தின் 7ஆம் ஆண்டு நிறைவை ஒட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் . வடமராச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய இடங்களில் இருந்து வருகை தந்திருந்தனர். கிரிக்கெற்,உதைபந்தாட்டம் ஆகியவற்றின் விதிகள் அனைத்தும் அவர்களுக்குத் தெருந்திருந்தன. கிறிக்கெற்ரில் வடமராட்சி சம்பியனாகியது. உதைபந்தாட்டத்தில்  மட்டக்களப்பு சம்பியனாகியது. இருதிப்போட்டி முடிந்ததும் மைதானத்தில் தமது சீருடையைக் கழற்றி தலைக்கு மேலே சுழற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.சிறந்த உதைபந்தாட்ட வீரன், சிறந்த கோல்காப்பாளர், சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர் போன்ற விருதுகளும் வழங்கினார்கள்.
ஃபேஸ்புக், வட்ஸப், வைபர், வீடியோ   போன்றவை அவர்களுக்கு   கைகொடுக்கின்றன. தமது தொடர்பாடல்கள் அனைத்தையும் போனில் உள்ள வீடியோ மூலம்  மேற்கொள்கிறார்கள். நேரடி ஒளிபரப்புச் செய்கிறார்கள்.

இவர்களைக் கொண்டு எம்மை நாமே மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். காரணம் மைதானத்தில் என்ன நிகழ்வு நடந்தாலும் மைதானம் சுத்தமாகிறதோ இல்லையோ எமது வீட்டை பழைய நிலைக்கு கொண்டு வர இரண்டு நாட்களேனும் தேவை.
ஆனால், கடவுளின் குழந்தைகள் இவரகளிடமிருந்து நாம் கற்க வேண்டிய பண்பாடும், மனிதத்துவமும் அளப்பரியது. அவர்களைப் பார்க்கும் போது அவர்களின் பழக்கவழக்கத்தைப் பார்க்கும் போது ஐந்து புலன்களும் சீராக இயங்கி அதைத் தீய வழியில் வழி நடத்துவதை விட இவர்களின் வாழ்க்கை இறைவனுக்கு மிக அருகில் இவர்களை இருத்தி வைத்துள்ளது போல உள்ளது.
மானுடராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மாஇல்லை இல்லை மனிதப்பண்புடன் பிறக்கவே மாபெரும் தவம் செய்திருக்க வேண்டும். புலன் குறையாக இருப்பினும் அவர்கள் நிறைவானவர்கள், அவர்களது திறன்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது.
அவர்கள் வீட்டிற்கு  வரும் ஒவ்வொரு நேரமும் மெதுவாக கேட்டைத் திறந்து மெதுவாக பைப்பைத் திறந்து தண்ணி அருந்திவிட்டு கேட்டை பூட்டிவிட்டு சென்றார்கள்

 சுத்தத்தை அவர்களிடம் காணக்கூடியதாக இருந்தது. மைதானத்தில் தாம் பயன்படுத்திய அனைத்து பொருட்களையும் அப்புறப்படுத்தினார்கள். மைதானத்தில் பரிமாறிய உணவுப் பொருட்களின் தட்டுகள் வன் டே கப் அனைத்தையும் உடனுக்குடனேயே அப்புறப்படுத்தினார்கள்.
தாம் உண்ட உணவுப் பொதிகளைக் கூட காணி ஒன்றினுள் இட்டார்கள். இவ்வளவு ஏன் விளையாட்டு முடிந்ததும் சுத்தப்படுத்தி வந்த குப்பைகளை   அனுமதி கேட்ட பின்னரே   எரித்துவிட்டு சென்றார்கள்.
என்ன இல்லை அவர்களிடம் இறைவன் அவர்கள் கூடவே தான் இருக்கிறார். என்ன ஒரு பண்பாடு பழக்க வழக்கம். அவர்களை மெச்ச வார்த்தைகள் இல்லை.
 அவர்களிடமிருந்து என்னால் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு விடயம் யாதெனில் எங்களால் ஏனையோருக்கு எந்தவொரு தீங்கும் வரக் கூடாது என்பதே.அவர்கள் மாற்றுத்திறனாளிகள் அல்ல. உண்மையில் திறமைசாலிகள், பண்பாட்டாளர்கள் அவர்களே. மனித்துவத்தை மறந்து இருக்கும் நாம் தான் மாற்றுத் திறனாளிகள்.
யார் யாருக்கோ எல்லாம் தட்டும் கைகளை இவர்களுக்காகவும் தட்டுங்கள். நீங்கள் கை தட்டியவர்கள் உங்களை மறந்தாலும் இவர்கள் மறக்க மாட்டார்கள். காரணம் இவர்களே மனித நேயப் பண்புடன் கூடிய மனிதர்கள்.

No comments: