Saturday, November 23, 2019

பண்டைய கால வரலாற்றைக் கூறும் ஓவியக்கலை



வரலாற்று ஆதாரங்களை,  ஆவணங்களை வெளிக்கொணர்வதில் ஓவியம், முக்கிய பங்கு வகிக்கிறது. பண்டைக்கால வரலாற்றுப் பொக்கிஷங்கள் ஓவியமாக ஆங்காங்கே தமது இருப்பை வெளிப்படுத்துகின்றன. அஜந்தா,எல்லோரா போன்ற குகை ஓவியங்கள் இன்றும் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு ஓவியத்தின் மூலம் வரலாற்றின் காலத்தை நிர்ணயிக்க முடியும். எத்தனையாம் நூற்றாண்டில், எந்த மன்னரின் காலம் என்பதை ஓவியத்தின் வாயிலாக வரையறுத்துக் கூறும் சாதனங்கள் இப்போது உள்ளன.

நவீன தொழில்நுட்பங்கள் எவற்றினாலும் ஓவியத்தின் மாண்பு  குலையவில்லை. உன்னத வளர்ச்சியை நோக்கி ஓவியக்கலை முன்னேறிக்கொண்டிருக்கிறது. ஒவியம் பயிலும் மாணவர் தொகை அதிகரித்துள்ளது. ஓவியக் கண்காட்சிகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. 25 ஆயிரம், 30 ஆயிரம், 50 ஆயிரம் ரூபா கொடுத்து ஓவியங்களை வாங்கிச் செல்வதற்குப் பலர் ஆர்வமாக  இருக்கிறார்கள். நகரங்களில் வாழும்  வசதி படைத்தவர்கள் தமது பிள்ளைகளை ஓவியம் பயில  அனுப்புகிறார்கள். ஆங்கிலம், கணிதம், விஞ்ஞானம்,தமிழ் ஆகிய பாடங்களில் எத்தனை புள்ளி எனக் கேட்பவர்கள் சித்திரம் படிக்கிறாயா எனக்கூடக் கேட்பதில்லை. ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரியினால்  சாவகச்சேரியில் ஓவியம் படிக்கும் மாணவர்களின் தொகை அதிகரித்துள்ளது. 

சாவகச்சேரி றிபோக் கல்லூரியை மீள ஸ்தபித்ததில் பெரும் பங்கு வகித்த வணபிதா தோமஸ் பீற்றர் ஹண்ட்-டின் குடும்பத்தினால்  சாவகச்சேரியில்  ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரி உருவாக்கப்பட்டடு கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி சிக்காக்கோ பல்கலைக்கழக பேராசிரியர் ஜெனிபர் ஹேரெத்தினால் திறந்து வைக்கப்பட்டது. ஆண்டு ஒன்று முதல் ஆண்டு ஐந்து வகுப்பில் பயிலும் 90 மாணவர்கள், ஆண்டு ஆறு முதல் ஆண்டு ஒன்பது வரை பயிலும் 15 மாணவர்கள், க.பொ.த [சா/த], க.பொ.த [உ/த]] பயிலும் 15 மாணவர்கள் ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரியில் படிக்கிறார்கள். தென்மராட்சி மாணவர்கள் மட்டுமல்லாது யாழ்ப்பாணத்தில் இருந்தும் மாணவர்கள் அங்கு சென்று படிக்கிறார்கள்.

தோமஸ் பீற்றர் ஹண்ட்-டின் மகன், தோமஸ் ஹண்ட். நில அளவையாளராக அரசாங்கத்தில்  பணி புரிந்தவர். பேராதனை பலகலைக் கழகத்தை நிர்மாணித்த  குழுவில் இவரும் ஒருவர்.  இவருடைய மகள் திருமதி அழகரத்தினம் யோகேஸ்வரியின்  எண்ணக்கருவில் உருவானது ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரி. உடுவில் மகளிர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தான் வரைந்த ரோஸ் நிற வோட்டர் கலர்  சித்திரம் ஒன்றுதான் அவரது மனதில் இன்றைக்கும் இருக்கிறது. இலண்டனில் உயர்கல்வி, தாதியர் பயிற்சியை அடுத்து நாடு திரும்பியவர், டாக்டர் அழகரத்தினத்தைத் திருமணம் செய்தார். அவர் அக்கரப்பத்தனையில் மாவட்ட வைத்திய அதிகாரியாகப் பணியாற்றினார்.

இலங்கையில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக யோகமணியின் குடும்பம் அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தது. மூன்று குழந்தைகளுக்குத் தாயாகி, பேரபிள்ளைகளைக் காண்டபின்னரும் யோகமணிக்கு   ஓவியத்தின்  மீதிருந்த ஆர்வம் குறையவில்லை.70 வயதில் தான் வசிக்கும் நகரத்தில் உள்ள ஓவியக்கல்லூரியில் சேர்ந்து ஓவியம் பயின்றார். அங்கு நடைபெற்ற ஓவியக்கண்காட்சியில் யோகமணியின் 10 ஓவியங்கள் விலைப்பட்டன. அந்தப் பணத்தை தான் பயின்ற உடுவில்  மகளிர் கல்லூரிக்கு அனுப்பினார். யோகமணியின் விருப்பப்படி ஆசிரியர் அருள் ரமேஸ் ஓவியம் பயிலும் மாணவிகளுக்கு அப்பணத்தின் மூலம் சிறப்புப் பயிற்சிகளை வழங்கினார். உடுவில் மகளிர் கல்லூரியில் பயிலும் 30 மாணவிகளின்  ஓவியங்கள் கொழும்பு ரிடிசி பெரேரா ஆர்ட் கலரியில் காட்சிப்படுத்தப்பட்டன. அதிபர் சிராணி, ஆசிரியர் அருள் ரமேஸ் ஆகியோருடன் 150 பெற்றோர் ஓவியக்கண் காட்சிக்காக கொழும்புக்குச் சென்றனர்.

யுத்தத்தின் போது குண்டுவீச்சில் வீடு அழிந்து நிலத்தில் பாரிய பள்ளம் உண்டானது அதனை செப்பனிட்டு ஆர்ட் கலரி உருவாக்கப்பட்டது. ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரியில் கடந்த ஒரு வருடத்தில் பாடசாலை மட்டத்திலான மாகாண, மாவட்ட கண்காட்சிகள் நடைபெற்றன. அங்கு பயிலும் மாணவர்களும் தமது ஓவியக்கண்காட்சியை அங்கு நடத்தினர். யாழ்ப்பாணத்தின்  பிரபலமான ஓவியர்கள் ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரியில் தம் ஓவியக்கண்காட்சியை நடத்தினர். ஓவியர் ஆசைராசையா, ஓவியர் சிவதாசன் ஆகியோரின் காண்காட்சிகள் கடந்தமாதம் ரி.பி. ஹண்ட் மெமோரியல் ஆர்ட் கலரியில் நடைபெற்றன. ஓவிய ஆர்வலர்களும் வெளிநாட்டவரும் கண்காட்சிகளைப் பார்வையிட்டு பெறுமதியான பணம் கொடுத்த ஓவியங்களை வாங்கிச் சென்றனர்.  தனது ஓவியம் 25 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டதை தன்னால் நம்ப முடியவில்லை என  ஓவிய ஆசிரியை தெரிவித்தார்.  ஓவியத்துக்குத் தேவையான வர்ணம்,தூரிகை போன்றன அங்கு  விற்பனை செய்யப்படுகிறது. கொழும்பில் இருந்து அவற்றை வரவழைத்து இலாபம் இல்லாமல் விற்பனை செய்கிறார்கள்.

யாழ்ப்பாணம்,கிளிநொச்சி,வவுனியா,முள்ளிவாய்க்கால்,தீவகம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் வருமானம் குறைந்த  பிள்ளைகளின் படிப்புக்காக தன்னாலான உதவிகளை யோகமணி செய்து வருகிறார். தென்.மராட்சி பாடசாலை மட்டத்தில் ஓவியப்போட்டிகளை நடத்தி பரிசு வழங்கி ஓவியத்தின் மீதான ஆர்வத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துவதில் யோகமணி முன்னிலை வகிக்கிறார்.
ரி.பி.தோமஸ் ஹண்ட் ஓவிய ரென்பது அங்குள்ளவர்கள் சொல்லித்தான் தனக்குத் தெரியும் என்க்றார் யோகமணி. ஆட்சிஸத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இலவச ஓவியக்கல்லூரி ஒன்றை அமைக்க வேண்டும் என்பது யோகமணியின் ஆசை.



No comments: