Thursday, July 2, 2020

செக் குடியரசு நாட்டில் கொரோனாவுக்கு பிரியாவிடை

 செக் குடியரசு நாட்டில் கொரோனா வைரசுக்கு விடை கொடுப்பதை குறிக்கும் வகையில் சார்லஸ் பாலத்தில் நடந்த பிரியாவிடை விருந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

செக் குடியரசு நாட்டில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கடந்த மாதம் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. கடந்த வாரம் இந்த கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டு, பொது நிகழ்ச்சிகளில் 1000 நபர்கள் வரை பங்கேற்கலாம் என அரசு அனுமதி அளித்தது 

குறிப்பாக நீச்சல் குளங்கள், அருங்காட்சியகங்கள், உயிரியல் பூங்காக்கள், கோட்டைகளில் சுற்றுலாப் பயணிகள் செல்வதற்கு கட்டுப்பாடுகள் முழுவதும் நீக்கப்பட்டன. இதனால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர் 

இந்நிலையில், கொரோனாவுக்கு பிரியாவிடை கொடுப்பதை குறிக்கும் வகையில், தலைநகர் பிராக்கில் உள்ள சார்லஸ் பாலத்தில் வித்தியாசமான பிரியாவிடை விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது  கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையிலும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தைக் கொண்டாடுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் வரலாற்று சிறப்பு மிக்க இந்த சார்லஸ் பாலத்தில் நடந்த பிரியாவிடை விருந்துக்காக கூடினர். 

பாலத்தின் மீது 500 மீற்றர் நீளத்தில் மேஜை அமைக்கப்பட்டு, இருபுறமும் நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. பொதுமக்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டு வந்த உணவுகளை சாப்பிட்டனர். ஒருவருக்கொருவர் உணவு மற்றும் பானங்களை பகிர்ந்தனர். இதுதவிர உள்ளூர் கலைஞர்கள் வாத்தியங்களை இசைத்தும் பாட்டு பாடியும் அனைவரையும் உற்சாகப்படுத்தினர்.

 

இந்த பிரியாவிடை விருந்துக்கான ஏற்பாடுகளை உள்ளூர் கபே உரிமையாளரான கோப்ஸா செய்திருந்தார். கொரோனா நெருக்கடி முடிவுக்கு வந்ததை கொண்டாடவும், மக்கள் பயப்படவில்லை என்பதை காட்டவும் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததாக அவர் தெரிவித்தார் 

செக்குடியரசு நாட்டில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 349 பேர் உயிரிழந்துள்ளனர்

 


No comments: