Sunday, May 4, 2008

தொலைபேசி விவகாரத்தால் கலங்கிப்போன தமிழக அரசு



தமிழக அரசை வீழ்த்துவதற்கு பல வழிகளிலும் முயற்சி செய்து சலிப்படைந்த ஜெயலலிதா தீபம் ஏற்றி தமிழக அரசை அகற்றுவதற்கு முயற்சி செய்துள்ளார்.
தமிழ்நாடு இப்போது இருளில் மூழ்கிக் கிடக்கிறது. இருள் அகன்று ஒளி பிறப்பதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக்கழக உறுப்பினர்கள் அனைவரும் மாலை 6.30 மணிக்கு தீபம் ஏற்றி வழிபட வேண்டும் என்று ஜெயலலிதா தனது கழகக் கண்மணிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தீபம் ஏற்றும்போது ""இருண்ட தமிழகத்தில் ஒளியேற்ற வாருங்கள் அம்மா'' என்று முழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதா குறிப்பிட்டிருந்தார்.
ஒளி ஏற்றும் விழா நிகழ்ச்சி உண்மையிலேயே திராவிட முன்னேற்றக் கழக அரசை அகற்றுவதற்குத்தானா அல்லது ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்வை உயர்த்துவதற்காகவா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கார்த்திகைத் தீபம், தீபாவளி ஆகிய இரண்டு தினங்களில் மட்டும் இந்துக்கள் தீபமேற்றி வழிபடுவார்கள். இந்த இரண்டு நாட்களுக்கும் புராணக் கதைகள் உள்ளன. ஆனால் ஜெயலலிதாவின் கட்டளைப்படி புதிய ஒரு தீபமேற்றும் நாள் உருவாக்கப் பட்டுள்ளது.
தீபமேற்றி விழாக் கொண்டாடுவது இந்து சமயத்தின் சிறப்பம்சங்களில் ஒன்று. தனது சுயநலனுக்காக தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் தீபமேற்றும்படி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஒரே நேரத்தில் பலர் கூடி பிரார்த்தனை செய்வதும் வழிபாடு செய்வதும் மதங்களில் உள்ள நடைமுறைகளில் ஒன்று. பண்டைக் காலத்தில் மன்னரின் ஆரோக்கியத்துக்காக மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் தமது வழிபாட்டுத் தலங்களில் பிரார்த்தனை செய்வார்கள். அதேபோன்ற ஒரு நிலையையே இன்று ஜெயலலிதா பின்பற்றுகிறார்.
தோஷங்களை நிவர்த்தி செய்வதற்கு பரிகாரங்களையும் யாகங்களையும் ஜெயலலிதா செய்து வருகிறார். தோஷ நிவர்த்திக்காகவே ஒரே நேரத்தில் சகலரும் ஒளியேற்றி தன்னை வாழ்த்த வேண்டும் என்று ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
ஜெயலலிதாவுக்கு எதிரான பல வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் இருந்து அவர் விடுதலை பெறுவதற்கு ஒரே நேரத்தில் விளக்கேற்றி வழிபட வேண்டும் என்று யாராவது ஒரு ஜோதிடர் கூறி இருப்பார். அதனால்தான் ஜெயலலிதா இப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்றும் கருதத் தோன்றுகிறது.
ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்குகளில் இருந்து ஜெயலலிதாவைக் காப்பாற்றிய வக்கீல் ஜோதி ஜெயலலிதாவின் எதிர்முகாமாகிய திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஐக்கியமாகி உள்ளார். ஜெயலலிதாவின் பலம் பலவீனம் அனைத்தும் அறிந்த ஜோதி திராவிட முன்னேற்றக் கழகத்தை வழி நடத்தி தனக்கு தண்டனை வாங்கித் தந்துவிடலாம் என்றும் ஜெயலலிதா பயப்படுகிறார்.
ஜெயலலிதாவின் மக நட்சத்திரத்துக்கு இந்த ஆண்டுப் பலன்கள் எதிர்மறையாக உள்ளன. அட்டமியில் வருடம் பிறந்தது ஜெயலலிதாவின் ராசிக்கு நன்மை தராது. ஜெயலலிதாவுக்கு கண்டச் சனி நடக்கிறது. ராகு, கேது பெயர்ச்சியும் ஜெயலலிதாவின் ராசிக்கு எதிராக உள்ளன. அவற்றை நிவர்த்தி செய்யவே விளக்கேற்றி வழிபடும் நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்றும் கருத இடம் உண்டு. மூட நம்பிக்கைகளை களைந்தெறிய புறப்பட்ட திராவிட கழக கண்மணிகளின் ஒளியேற்றும் விழா ஜெயலலிதாவின் வாழ்வில் ஒளியேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
அமைச்சர்கள், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள் ஆகியோரின் தொலைபேசி உரையாடல்கள் இரகசியமாக ஒலிப்பதிவு செய்யப்பட்டதென்பது ஆதாரங்களுடன் வெளியிடப்பட்டதனால் திராவிட முன்னேற்றக் கழக அரசு கதிகலங்கிப் போயுள்ளது.
தமது உரையாடல்கள் உளவுத்துறை மூலம் கண்காணிக்கப்படுகிறது. ஒலிப்பதிவு செய்யப்படுகிறது என்று பலரும் செய்த புகார்களை திராவிட முன்னேற்றக் கழக அரசு உறுதியுடன் மறுத்து வந்தது. உயர் அதிகாரிகள் சிலரின் உரையாடல்களை ஆங்கிலத் தினசரி ஒன்று ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவின்படிதான் தொலைபேசி உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்ப்பட்டதா? அல்லது உளவுத் துறை அதிகாரிகள் தமது இஷ்டப்படி ஒலிப்பதிவு செய்தார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தொலைபேசி உரையாடல்கள் ஒலிப்பதிவு செய்யப்பட்ட விபரம் பத்திரிகையில் வெளியாக முன்பு எதிர்க்கட்சித் தலைவரான ஜெயலலிதாவின் கரங்களுக்கும் போயுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழக அரசுக்குள்ளும் எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் உளவாளிகள் இருப்பதை இது அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளது.
தொலைபேசி உரையாடல் ஒலிப்பதிவு பற்றிய நீதி விசாரணை நடைபெறும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். நீதி விசாரணை நடைபெறுவது ஒருபுறம் இருந்தாலும் தமிழக ஆட்சியில் இது ஒரு கறை படிந்த சம்பவம் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
வர்மா

வீரகேசரி வாரவெளியீடு;20.04.2008

No comments: