Saturday, June 7, 2008

வாரிசுகளுக்கு வழிவிடுகிறார் தமிழக முதல்வர் கருணாநிதி

கர்நாடக சட்ட சபைத் தேர்தலில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றதனால் காங்கிரஸ் கட்சி அதிர்ந்து போயுள்ளது. தென் இந்தியாவில் முதன் முதலாக பாரதீய ஜனதாக் கட்சி பெரு வெற்றி பெற்றுள்ளது.
ஒனேக்கல் குடிநீர்ப் பிரச்சினை பற்றி எரிந்த போது ஒனேக்கலுக்குச் சென்று தமிழகத்துக்கு ஒரு சொட்டுத் தண்ணீர்கூட கொடுக்கமாட்டேன் என்று வாக்குறுதியளித்த எடியூரப்பா கர்நாடக
முதல்வராகியுள்ளார்.



ஒனேக்கல் குடிநீர்த் திட்டத்தை தமிழக அரசு ஆரம்பித்தபோது கர்நாடகத்தில் உள்ளவர்கள் கிளர்ந்து எழுந்தார்கள். கர்நாடகத்தில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த வன்செயல் தமிழகத்துக்கும் பரவியதால் தமிழகத்தில் உள்ள கர்நாடக மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. ஒனேக்கலை மையமாக வைத்து வன்செயல் வெடித்ததால் கர்நாடகத் தேர்தல் முடியும்வரை ஒனேக்கல் குடிநீர்த் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தமிழக முதல்வர் அறிவித்தார்.

தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு தமிழகத்தில் எதிர்ப்பு எழுந்தது. தமிழக முதல்வரின் இந்த அறிவிப்பால் கர்நாடகத்தில் உருவாகிய பதற்றம் ஒரு முடிவுக்கு வந்தது.
ஒனேக்கல் குடிநீர் பிரச்சினையால் கர்நாடகத்தில் தோல்வி கிடைத்து விடுமோ என்று காங்கிரஸ் கட்சி பயந்திருந்தது. காங்கிரஸ் கட்சியைத் திருப்திப்படுத்துவதற்காகவே தமிழக முதல்வர் ஒனேக்கல் குடிநீர்த் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தினார் என்ற கருத்தும் எழுந்தது.
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும் பேச்சுவார்த்தையின் மூலம் ஒனேக்கல் பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று தமிழக முதல்வர் நினைத்திருந்தார். கர்நாடகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றதால் அந்த எண்ணம் தடைப்பட்டுள்ளது.

கர்நாடகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி வெற்றி பெற்றதனால் தமிழகத்தில் உள்ள பாரதீய ஜனதாக் கட்சித் தலைவர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். கர்நாடகத்தைத் தொடர்ந்து தமிழகத்திலும் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி அமைக்கும் என்று அவர்கள் நம்புகின்றனர்.
ஒனேக்கல் குடிநீர்த் திட்டத்துக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். ஆனால், தமிழக பாரதீய ஜனதாத் தலைவர்களோ, தமிழகத்துக்கு உரிமையான நீரை, கர்நாடக அரசு விட்டுக் கொடுக்கும் என்று அடித்துக் கூறுகிறார்கள்.

மத்தியிலும் தமிழகத்திலும் திராவிட முன்னேற்றக் கழகமும் காங்கிரஸும் இணைந்து ஆட்சி புரிகின்றன. கர்நாடகத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. ஆனால் தமிழகத்துக்குத் தேவையான குடிநீரை வழங்குவதற்கு கர்நாடக அரசு தடையாக இருந்தது.
தற்போது கர்நாடகத்தில் பாரதீய ஜனதாக் கட்சி ஆட்சி பீடம் ஏறியதால் ஒனேக்கல் பிரச்சினைக்கு யாரிடமும் அனுமதி கேட்காது அதனை நடை முறைப்படுத்தும் நடவடிக்கையில் தமிழக அரசு முனைப்புடன் செயல்படும். கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தது தமிழக அரசுக்கு ஒரு வகையில் சாதகமாக உள்ளது.

இதேவேளை ஜூன் மாதம் 3ஆம் திகதி தனது பிறந்த நாளைக் கொண்டாடுவதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்த முதல்வர் கருணாநிதி இப்போது பச்சைக் கொடி காட்டி விட்டார். கட்சிக்குள்ளும் குடும்பத்திலும் ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகளினால் மனமுடைந்த முதல்வர் ஓய்வுக்குப் பின்னர் உற்சாகமாகிவிட்டார்.

முதல்வரின் மனதில் இருந்த பல பாரங்கள் இறங்கி விட்டன. பல பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். தீர்க்க முடியாமல் இருந்த பல பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வழி வகைகளை தயாரித்துவிட்டார். நாளை திங்கட்கிழமை திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழு கூடுகிறது. மிக முக்கியமான பல முடிவுகள் பொதுக் குழுவில் தீர்மானமாக நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதற்கு முதல்வர் கருணாநிதி விரும்புகிறார். அரசியல் சூழ்நிலையும் கட்சிக்குள் இருக்கும் வேறுபாடுகளும் அவரது முடிவை பின்தள்ளுகின்றன. முதல்வர் கருணாநிதி அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டால் கட்சியின் தலைமைப் பொறுப்பு ஸ்டாலினிடம் வழங்குவதற்கு ஏதுவாக ஸ்டாலினை துணை முதல்வராக்கும் எண்ணம் இருப்பதாகத் தெரிகிறது.

முதல்வர் கருணாநிதியை போன்ற ஆளுமையும் சிந்தனையும் ஸ்டாலினிடம் இல்லை. ஆனால் முதல்வரின் எண்ணத்தை ஈடேற்றும் வல்லமை ஸ்டாலினிடம் உள்ளது.
ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தால் அழகிரிக்கு ஒன்றும் இல்லையா என்று அழகிரியின் ஆதரவாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் இதுவரை காலமும் பொறுப்பான பதவி ஒன்றையும் வகிக்காத அழகிரிக்கும் பெரிய பதவி காத்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகின்றது.

இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என்று கூறும் தமிழக முதல்வர் வாரிசுகளுக்கு வழிவிட தயாராகிறாதி

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு;01.06.2008

No comments: