Saturday, June 7, 2008

மதில்மேல் பூனையாக காத்திருக்கும் பா.ம.க.

திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிராக பாட்டாளி மக்கள் கட்சி தொடுத்து வரும் குற்றச்சாட்டுகளுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி நேரடியாக பதிலளிக்க தொடங்கிவிட்டார். பாட்டாளி மக்கள் கட்சி நிறுவுனர் டாக்டர் ராமதாஸின் அறிக்கைகளுக்கு முதல்வர் கருணாநிதி சூடாகப் பதிலளிப்பதால் தமிழக அரசியலும் சூடாகத் தொடங்கிவிட்டது.



தமிழகத்தை முன்னேற்றுவதற்காக தமிழக அரசு பல திட்டங்களை அறிவித்தது. ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்ப்புக் காரணமாக அவற்றை கைவிட நேர்ந்தது. சென்னையில் அமையவிருக்கும் சிறப்புப் பொருளாதார மண்டலங்களை டாக்டர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். அதேவேளை சிறப்புப் பொருளாதார மண்டலங்களை தடுப்பதற்காக போராட்டங்களை நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.

சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அமையவுள்ள இடங்கள் பொதுமக்களுக்குச் சொந்தமான இடமல்ல. சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக விவசாய நிலங்கள் சுவீகரிக்கப் படவில்லை என்று முதல்வர் கருணாநிதி பொறுமையாகப் பதிலளித்துள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் அறிவிப்புக்களை வரவேற்பதைத் தவிர்த்து அவற்றில் குற்றம் காண்பதிலேயே பாட்டாளி மக்கள் கட்சி கண்ணும் கருத்துமாக உள்ளது. அறுதிப் பெரும்பான்மை இல்லாமல் ஆட்சி புரியும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தொல்லை கொடுப்பதிலேயே பாட்டாளி மக்கள் கட்சி குறியாக உள்ளது.

திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தயாராக உள்ளது. கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறும் நாளை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்பார்த்து காத்திருக்கிறது. கூட்டணியில் இருந்து வெளியேறுவதற்குரிய காலம் இது அல்ல என்பதை உணர்ந்த பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணிக்குள் இருந்து குழப்பத்தை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது.
பொருளாதார ரீதியில் தமிழகத்தை முன்னேற்றுவதற்கு திராவிட முன்னேற்றக் கழகம் அறிவிக்கும் திட்டங்களுக்கு டாக்டர் ராமதாஸ் முட்டுக்கட்டை போட்டுக்கொண்டிருக்கிறார். தமிழகத்தை பொருளாதார ரீதியில் வளர்ப்பதற்கு தாம் மேற்கொள்ளும் திட்டங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி தடையாக இருப்பதை மக்கள் மத்தியில் பரப்புவதில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தமிழகத்தை ஆட்சி செய்வதற்குரிய பெரும்பான்மை பலத்தை திராவிட முன்னேற்றக் கழகம் பெற்றுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவு இல்லாமலேயே திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி செய்ய முடியும்.
கூட்டணியில் இருந்து பாட்டாளி மக்கள் கட்சி வெளியேறினால் எதிர்க்கட்சிகள் வலுவடைந்துவிடும் என்பதனால் திராவிட முன்னேற்றக் கழகம் பொறுமையுடன் பதிலளித்து வருகிறது.

18 சட்ட சபை உறுப்பினர்களைக் கொண்ட பாட்டாளி மக்கள் கட்சி தமிழக அரசை ஆட்டிப் படைக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்ப்பை திராவிட முன்னேற்றக் கழகம் பெரிதாக எடுக்கவில்லை. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறக் கூடாது என்பதிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் கவனம் செலுத்துகின்றது.

தமிழக அரசாங்கத்தை தீர்மானிக்கும் கட்சி என்ற முத்திரையுடன் வலம் வந்த பாட்டாளி மக்கள் கட்சி இப்போது தள்ளாடுகிறது. விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கும் பலத்த அடியாக உள்ளது. விஜயகாந்தின் அசுர வளர்ச்சி பாட்டாளி மக்கள் கட்சியின் மதிப்பைக் குøறத்துள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இருந்து வெளியேறப் போவதாக பாட்டாளி மக்கள் கட்சி மறைமுகமாகக் கூறிய போதும் அதனை வரவேற்க வேண்டிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அலட்டிக் கொள்ளாமல் உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியில் செல்வாக்கு சரிந்துள்ளதை அறிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பார்வை காங்கிரஸ் கட்சியின் மீதே உள்ளது.

கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேறும் நாளை அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியை அனுசரித்துப் போவதிலேயே திராவிட முன்னேற்றக் கழகம் அதிக அக்கறை காட்டுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு எந்தவிதமான நெருக்கடியையும் கொடுக்காது அரசியல் காய்களை நகர்த்தி வருகிறார் முதல்வர் கருணாநிதி.
ஒ÷கனக்கல் குடிநீர்ப் பிரச்சினை, சேது சமுத்திரத் திட்டம், பிரியங்கா, நளினி சந்திப்பு ஆகிய பிரச்சினைகளில் முற்று முழுதாக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக திராவிட முன்னேற்றக் கழகம் செயற்பட்டு வருகிறது.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பக்கம் காங்கிரஸும் விஜயகாந்தும் செல்லக்கூடாது என திராவிட முன்னேற்றக் கழகம் விரும்புகிறது. ஆனால் விஜயகாந்தும் காங்கிரஸ் கட்சியும் இணையவே வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர்.

காங்கிரஸும் விஜயகாந்தும் இணைந்தால் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி சேருவதைத் தவிர வேறு வழி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு இல்லை. காங்கிரஸ் தலைவி சோனியாவும் பிரதமர் மன்மோகன்சிங்கும் முதல்வர் கருணாநிதியின் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பதால் திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் இருந்து காங்கிரஸ் கட்சி வெளியேற சந்தர்ப்பம் இல்லை.

முதல்வர் பொறுப்பை ஸ்டாலின் ஏற்பதற்கு மறைமுக ஒத்திகை கடந்த வாரம் சட்ட சபையில் அரங்கேறியது. வாய் மூலக் கேள்விகளுக்கு முதல்வரின் சார்பாக அமைச்சர் ஸ்டாலின் பதிலளித்தார். கேள்விகளுக்கு தர்க்க ரீதியாக ஸ்டாலின் பதிலளிக்கிறாரா என்பதைப் பரீட்சிப்பதற்காகவே முதல்வர் அந்தச் சந்தர்ப்பத்தை வழங்கினார் என்று எண்ணத் தோன்றுகிறது.

அமைச்சர் ஸ்டாலின் பதிலளிக்கும்போது ஒரு தகவல் விடுபட்டது. அப்போது துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து தவறைத் திருத்தினார் முதல்வர். டைட்டல் பார்க் பற்றிய தகவல்களை அமைச்சர் ஸ்டாலின் குறிப்பிடும்போது வாய்மொழியாக சில தகவல்களைக் கூறி மகனை உசார்படுத்தினார் முதல்வர் கருணாநிதி. அமைச்சர் ஸ்டாலின் பதிலளிப்பதைப் பார்ப்பதற்காக கனிமொழி, ஸ்டாலினின் மனைவி, மகன், நண்பர்கள் ஆகியோர் சட்ட சபையில் பார்வையாளர் மண்டபத்தில் இருந்தனர்.

ஸ்டாலினின் உரையை சகல கட்சி உறுப்பினர்களும் அமைதியாகச் செவிமடுத்தனர். பிரதான எதிர்க்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர்கள் மிகவும் அமைதியாக அமைச்சர் ஸ்டாலினின் உரையை செவிமடுத்தனர். முதல்வரின் துறைகளை கையாள்வதற்கான முன்னோட்டத்தில் அமைச்சர் ஸ்டாலின் தேர்ச்சி பெற்றுவிட்டார்.
முதல்வர் பதவியில் இருந்து தான் வெளியேறி மகன் ஸ்டாலினிடம் முதல்வர் பதவியை ஒப்படைப்பதற்கு கருணாநிதி தயாராக இருக்கிறார். ஸ்டாலின் முதல்வராவார் என்று பல ஆரூடங்கள் வெளியாகியுள்ளன.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கும் மூத்த அரசியல்வாதிகள் சிலர் இன்னமும் பச்சைக் கொடி காட்டாததால் ஸ்டாலின் முதல்வராகும் நிகழ்ச்சி தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது.

முதல்வரின் பொறுப்பில் உள்ள அமைச்சுகளின் மாநிலக் கோரிக்கைகளுக்கு மகன் ஸ்டாலினை பதிலளிக்க ஏற்பாடு செய்து சட்டசபையில் அவரின் நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளிப்பதையும் ஸ்டாலினுக்கு எதிரானவர்கள் உணர்வதற்கு ஒரு சந்தர்ப்பத்தை முதல்வர் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார். முதல்வரின் எதிர்பார்ப்பை ஸ்டாலின் பூர்த்தி செய்துவிட்டார்.

வர்மா; வீரகேசரி வாரவெளியீடு; 11.05.2008

1 comment:

Anonymous said...

hollo sar goodmarning you greate massage rong all india rich mediyam poor pepols