Friday, July 18, 2008

முடிவிலும் ஒன்று தொடரலாம்

அவன் கையில் அழகான குழந்தையின் படம் இருந்தது. அதனை எங்கே தொங்க விடுவது என்று அவனும் அவளும் சிறிது நேரம் சர்ச்சைக்குட்பட்டõர்கள் இருவரும் இணைந்து அந்தப் படத்தைத் தொங்க விடும் இடத்தைத் தீர்மானித்தார்கள்.

அவன் ஒரு மேசையில் ஏறி நின்று ஆணியை அடித்தான். அவள் மேசையைக் கவனமாகப் பிடித்தாள். அவன் அடித்த ஆணிகளில் ஒன்றுகூட சுவரில் ஏறவில்லை. முனை மழுங்கி, உடைந்து நெளிந்து போன ஆணிகள் பல மேசைக்குக் கீழே கிடந்தன. அப்போது அங்கே வந்த ஒரு பெண் ஒரு ஆணியைக் கொடுத்தாள். இரண்டு முறை அடித்ததும் சுவரில் சிக்கென இறுகியது ஆணி. அவன் அதிசயமாக அவளைப் பார்த்தான்.

அவள் சிரித்துக் கொண்டு இரண்டு விரல்களை வடிவில் உயர்த்திக் காட்டினாள். அவளின் விரல்களுக்கிடையில்டயமண்ட்என்ற ஆங்கில எழுத்து மின்னியது.

தொலைக்காட்சி வானொலி, பத்திரிகை ஆகியவற்றில் வெளியான டயமண்ட் ஆணிபற்றிய விளம்பரங்கள் அøனத்தும் அமைதியாகிவிட்டன. மூன்று வருடங்களில் கிடுகிடு வென முன்னேறிய டயமண்ட் ஆணி முதலிடத்தைப் பிடித்தது. தரத்தில் சிறந்த ஆணி என்ற உள்நாட்டு விருதுகளும் சர்வதேச விருதுகளும் டயமண்ட் ஆணிக்கு கிடைத்தன.

வெளி உலகில் டயமண்ட் ஆணிக்கு மதிப்பு இருந்தாலும் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்கள் மத்தியில் இருந்த மனக் கசப்பு வெளி உலகத்துக்குத் தெரியவில்லை. ஊழியர் சேமலாபநிதி என்பனவற்றினைக் கழித்துக் கொண்டுதான் சம்பளம் கொடுத்தார்கள். ஆனால், மூன்று வருடங்களாக அவை கட்டப்படவில்லை.தொழிலாளர்கள் அங்கு வேலை செய்வதற்கான அத்தாட்சி எவையும் இல்லை. மூன்று வருடங்களாக யாரும் நிரந்தரமாக்கப்படவில்லை. இதற்கு முடிவு காண வேண்டும் என்று நினைத்த தொழிலாளர்கள் ஒருநாள் திடீரென வேலை நிறுத்தம் செய்தனர்.

தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கின. நிர்வாகம் இவற்றைக் கண்டு கொள்ளாது நிறுவனத்தை இழுத்து மூடியது. பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று அடித்துக் கூறிவிட்டது.

டயமண்ட் ஆணித்தொழிற்சாலை இழுத்து மூடப்பட்டதனால் கந்தையாவின் குடும்பமும் தத்தளித்தது. நானூறு தொழிலாளர்கள் ஒரே நாளில் நடுத்தெருவில் விடப்பட்டனர். கந்தையாவின் மூத்த மகன் குமரன் உயர்வகுப்பு படிக்கிறான். வரவு செலவு தெரியாது செலவு செய்யும் இரண்டாவது பையன் வரதன் எட்டாம் வகுப்பு படிக்கிறான். செல்லமும் சிணுங்கலுமாக தாயின் சேலையைப் பிடித்தபடி இருக்கும் கடைக்குட்டி மாலதி ஐந்தாம் வகுப்பு படிக்கிறாள்.

மூன்று மாதமாக கடன்பட்டு குடும்பத்தைப் பார்த்த கந்தையா அடுத்து என்ன செய்வது என்று தெரியாது தவித்தார்.

"அப்பா ஆதித்தன் அங்கிள் வாறார்'' இளையவள் மாலதி கட்டியம் கூறினாள்.
வேலை இல்லாமல் இருக்கும் மூன்று மாதமும் கந்தையாவுக்கு ஆறுதல் சொல்பவன் ஆதித்தன். முற்றத்தில் நிற்கும் மாமரத்தில் சைக்கிளைச் சாத்திவிட்டு வீட்டுக்குள் நுழைந்த ஆதித்தன் கந்தையாவின் முன்னால் உள்ள கதிரையில் அமர்ந்தான்.

""மீனாச்சி தம்பிக்கு தேத்தண்ணி கொண்டுவா'' என குசினிப்பக்கம் பார்த்து சத்தமாகக் கூறிவிட்டு தம்பி நிலைமை என்ன மாதிரிக் கிடக்கு'' என்று ஆதித்தனிடம் கேட்டார்.
""சரிவாற மாதிரித் தெரியவில்லை. நிர்வாகம் இப்போதைக்கு விட்டுக் கொடுக்க மாட்டாது. வேலைக்கு வந்தால் தான் பேச்சுவார்த்தை நடத்துமாம் இல்லை என்றால் புதுசா ஆட்களை எடுத்து கம்பனியை நடத்துமாம் என்றான் ஆதித்தன்.

ஆதித்தனும் கந்தையாவும் கதைத்துக்கொண்டிருக்கும் போது தேநீருடன் வந்த மீனாட்சி தேநீரை ஆதித்தனிடம் கொடுத்துவிட்டு ""என்ன முடிவு வரும் தம்பி'' என ஆவலுடன் கேட்டாள்.வாற பதினைந்தாம் திகதிக்கு முதல் எல்லோரையும் வேலைக்கு வரட்டாம். இல்லையென்றால் வேலை நிறுத்தம் செய்கிறவர்கள் தாங்களாகவே வேலையிலிருந்து நின்றதாக கருதி புதிய ஆட்களை எடுப்பினமாம்' என்றான் ஆதித்தன்.

""தம்பி மூன்னூறு பேர் ஆணி பக்ரறியில் வேலை செய்தனாங்கள் அதில நாங்கள் ஐம்பது பேர் இனி அங்கு வேலை செய்ய மாட்டம். மிச்சப் பேர் கட்டாயம் போவினம் என்றார் கந்தையா.

""உங்கட கோரிக்கைகள் நியாயமானது தான் ஏதாவது பேச்சுவார்த்தை நடத்தி முடிவெடுக்கலாம் தானே'' தனது சந்தேகத்தைக் கேட்டான் ஆதவன்.

""எங்கட முதலாளியைப்பற்றி எனக்கு நல்லா தெரியும் தம்பி அவயின்ர கௌரவம் முக்கியமானது. தொழிலாளர் நலன் இரண்டாம் பட்சம்தான் காமன்ஸ், பெயின்ற் எண்டு இன்னும் ஏழு பக்ரறி அவைக்கு கிடக்கு. இந்த பக்ரறி மூடினதால அவைக்கு இழப்பு இல்லை. விரல் போனவைக்கும் கைபோனவைக்கும் நட்ட ஈடு கொடுக்கல அவங்கள வேலையால நிப்பாட்டிப் போட்டினம். உயிர் போனாக் கூட ஒண்டும் தர மாட்டினம்'' என்றார் கந்தையா.
கந்தையா கூறிய அனைத்தும் ஆதித்தனுக்கும் தெரிந்த விடயம்தான். மன ஆறுதலுக்காக கந்தையா கூறியதைக் கேட்டான் ஆதித்தன்.

""மீனாச்சி தான் யோசிக்கிறாள். இதைவிட நல்ல வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கிருக்கு தம்பி. இந்த முறை வெள்ளாமை என்ன மாதிரி? ""எனக்கேட்டார் கந்தையா.
""வயல் நல்லா இருக்கு எட்டுக்கு பத்து தேறும் எண்டு நினைக்கிறேன்"" எனக்கூறிய ஆதித்தன் சைக்கிளையும் உருட்டிக் கொண்டு கந்தையாவின் வீட்டை விட்டு வெளியேறினான்.
டயமண்ட் ஆணித் தொழிற்சாலைக்கு புதிதாக தொழிலாளர்களை சேர்ப்பதற்கான விளம்பரம் பத்திரிகைகளில் பிரசுரமாகியது. நான்கு மாதங்களின் பின்னர் நல்லதொரு நாளில் டயமண்ட் ஆணித்தொழிற்சாலை உற்பத்தியைத் தொடங்கப்போவதாகவும் பத்திரிகைகளில் விளம்பரம் வெளிவந்தது.

கந்தையாவின் ஊரைச்சேர்ந்த மூன்று பேர் டயமண் ஆணித்தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்துள்ளதாக கந்தையா அறிந்தார். அவர்களில் ஆதித்தனும் ஒருவர் என்பதை அறிந்த கந்தையா ஆச்சரியப்பட்டார்.

ஆதித்தனைப்பற்றி கந்தையா வைத்திருந்த எண்ணம் எல்லாம் தவிடு பொடியானது. ஆதித்தன் இப்படிப்பட்ட ஒருவேலையைச் செய்வான் என கந்தையா கனவிலும் நினைக்கவில்லை. டயமண்ட் ஆணித்தொழிற்சாலை மீண்டும் இயங்கத் தொடங்கி ஒரு மாதமாகிவிட்டது. கந்தையாவுக்கு இன்னமும் வேலை கிடைக்கவில்லை.
""அப்பா ஆதித்தன் மாமா இந்தக் கடிதத்தை உங்களிடம் கொடுக்கச் சொன்னவர் என்று ஒரு கடிதத்தை தகப்பனிடம் கொடுத்தான் வரதன்.

வேண்டா வெறுப்பாக கடிதத்தை வாங்கி படித்தார் கந்தையா.
அன்பின் கந்தையா அண்ணா அறிவது.

எனது முதல் மாத சம்பளம் அனுப்பியுள்ளேன். உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை இந்த என்பலப் உங்களைத் தேடிவரும்.
அன்புடன்
ஆதித்தன்

""ஏ வரதா ஆதித்தன் எங்கேடா ஓடடா ஓடு ஓடிப்போய் அவனைக் கூட்டிவா"" என சத்தமாகச் கூறினார் கந்தையா.

சூரன் ஏ. ரவிவர்மா
மித்திரன் வாரமலர் 20 07 2008

No comments: