Thursday, February 18, 2010

தி.மு.க.வின் திட்டத்தால்அதிர்ந்து போயுள்ள பா.ம.க.


பெண்ணாகரம் இடைத் தேர்தலின் மூலம் தமது பலத்தைக் காட்டுவதற்காக தமிழக அரசியல் கட்சிகள் களமிறங்கத் தயாராக இருந்த வேளையில் பெண்ணாகரம் இடைத் தேர்தலை ஒத்தி வைக்கும் நிலை எழுந்துள்ளது.
கடந்த தேர்தலில் வாக்களித்த சுமார் 30 ஆயிரம் வாக்காளர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் உட்பட எட்டு எதிர்க்கட்சிகள் டெல்லியில் உள்ள தேர்தல் தலைமை ஆணையகத்தில் புகார் செய்ததனால் பெண்ணாகரம் தொகுதியில் திருத்தப்பட்ட வாக்காளர்ப் பட்டியல் வெளியிடுவதை நிறுத்துமாறு தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பெண்ணாகரம் தொகுதியில் இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. அதேவேளை ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிவாகி இருந்தது. அப்படி இரண்டாவது பெயரைத்தான் நீக்கினோம். 30 ஆயிரம் பேரை நீக்கியதாகக் கூறியதில் எந்தவித உண்மையும் இல்லை என்று தர்மபுரி மாவட்ட கலெக்டர் அமுதாவி விளக்கமளித் துள்ளார்.
எதிர்க்கட்சிகளிடம் ஒருமித்த கருத்து இல்லாமையினால் பெண்ணாகரம் இடைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கான வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டினால் பெண்ணாகரம் இடைத் தேர்தல் தள்ளிப் போகும் சூழ்நிலை எழுந்துள்ளதே தவிர, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றியை அது எந்தவிதத்திலும் தடுக்கப் போவதில்லை.
பெண்ணாகரத்தில் வெற்றிக் கனியைப் பறித்து விட வேண்டும் என்ற ஆர்வத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் டாக்டர் ராமதாஸ் அவரின் மகன் அன்புமணி உட்பட அக் கட்சியின் பிரமுகர்கள் அனைவரும் பெண்ணாகரத்தில் முகாமிட்டுள்ளனர். பாட்டாளி மக்கள் கட்சிக்குப் போட்டியாக திராவிட முன்னேற்றக் கழகமும் பெண்ணாகரத்தில் களமிறங்கியுள்ளது. தேர்தல் அறிவிக்கப்பட முன்பே அங்கு தேர்தல் பிரசாரம் ஆரம்பமாகி விட்டது. அதேவேளை, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும் ஆதரவாளர்களையும் கவரும் திட்டங்களையும் திராவிட முன்னேற்றக் கழகம் அறிமுகப்படுத்தி வருகிறது.
பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர் தோல்விகளையும் அக்கட்சி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து நிற்பதையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திய திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரசாரத்தினால் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய பிரமுகர்களும் தொண்டர்களும் மனம் மாறியுள்ளனர். அமைச்சர் வேலுவின் முன்னிலையில் ஆயிரக்கணக்கான பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர்.
துணை முதல்வர் ஸ்டாலின் பெண்ணாகரத்துக்கு விஜயம் செய்த போது மாற்றுக் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 5000 பேர் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தனர். அவர்களில் பாட்டாளி மக்கள் கட்சியினர் அதிகளவு இருப்பது பாட்டாளி மக்கள் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்ணாகரத்தில் அரச கல்லூரி கட்டப்படும் என்ற துணை முதல்வர் ஸ்டாலினின் வாக்குறுதி தமிழக அரசின் இலவச கொங்கிறீட் வீட்டுத் திட்டம், இலவச உயர் கல்வித் திட்டம் ஆகிய அறிவிப்புகளும் பெண்ணாகரம் வாக்காளர்களைக் கவர்ந்துள்ளன.
பாட்டாளி மக்கள் கட்சியின் செல்வாக்கு மிக்க பெண்ணாகரத்தில், வெற்றி பெறும் நோக்கத்துடன் திராவிட முன்னேற்றக் கழகம் களமிறங்கி உள்ளது.
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி ஆகிய இரு பெரும் சுறாக்களுக்கு மத்தியில் தனியாகப் போட்டியிடும் திட்டத்துடன் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி "இனமா? பணமா?' என்ற கோஷத்தை மக்கள் முன் வைத்துள்ளது.
மற்றக் கட்சிகளிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்ற கோஷத்தை பாட்டாளி மக்கள் கட்சியின் முன் வைத்துள்ளனர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது பெண்ணாகரம் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 54,000 வாக்குகளும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 45,000 வாக்குகளும் பெற்றிருப்பது பாட்டாளி மக்கள் கட்சியை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இந்தியத் தேர்தல் கமிஷனின் வைர விழாவில் ஜெயலலிதாவைக் கலந்து கொள்ளுமாறு தலைமைத் தேர்தல் கமிஷனர் நவீன் சாவ்லா நேரடியாக தொலைபேசி மூலம் அழைத்த விவகாரம் டெல்லிவரை பதற்றத்தை ஏற்படுத்தியது. டெல்லி செல்லும் ஜெயலலிதா சோனியாவைச் சந்திக்கிறார், புதிய கூட்டணி உதயமாகிறது என்று தமிழகத்தில் கொளுத்திப் போட்ட வெடி டெல்லிவரை அதிர்ந்தது. தலைமைத் தேர்தல் கமிஷன் விளக்கமளிக்க வேண்டிய சூழ்நிலையும் இதனால் ஏற்பட்டது.
தமிழக அமைச்சரவையில் பங்கு தரும் கட்சியுடன் தான் கூட்டணி சேர வேண்டும் என்று தமிழகக் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் சிலர் விரும்புகின்றனர். ராகுல் காந்தியும் இதே நிலைப்பாட்டில் தான் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், திராவிட முன்னேற்றக் கழகத்தை வீழ்த்துவதற்காக தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சிக்குப் பங்கு கொடுக்க அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் முன் வருவது சந்தேகமே.
கூட்டணிக் கட்சிக்குரிய மரியாதையையும் மதிப்பையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஓரளவு கொடுத்து வருகிறது. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருத்து கூட்டணிக் கட்சிக்குரிய மதிப்பும் மரியாதையும் கொடுக்கப்படுவதில்லை. ஆகையினால் தமிழக காங்கிரஸ் தலைவர்களின் அமைச்சராகும் கனவு தற்போதைக்கு நிஜமாகும் சூழ்நிலை இல்லை.
வர்மா
வீரகேசரிவாரவெளியீடு 14/02/10

No comments: