Sunday, July 25, 2010

தேர்தலுக்கு தயாராகும் ஜெயலலிதாகூட்டணி அமைக்க காத்திருக்கிறார்



அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரமுகர்கள் சிலர் திராவிட முன்னேற்றக் கழகத்துக்குத் தாவுகின்றனர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி சேர விரும்பும் கட்சிகள் அதிக தொகுதிகளை எதிர்பார்க்கின்றன. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்குத் தயாராகும்படி ஜெயலலிதா விடுத்த உத்தரவையடுத்து, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் உசாரடைந்துள்ளனர்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கோட்டைகளில் ஒன்றான கோவையில் நடைபெற்ற செம்மொழி மாநாட்டினால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செல்வாக்கு கோவையில் சற்று அதிகரித்துள்ளது. இதனை உணர்ந்து கொண்ட ஜெயலலிதா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான கூட்டமொன்றை கோவையில் வெற்றிகரமாக நடத்திமுடித்துள்ளார். கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கண்டனப் பேரணியை நடத்துவதற்கு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல முட்டுக்கட்டைகள் போடப்பட்டன. இதன் காரணமாக, பேரணி கூட்டமாக மாற்றமடைந்தது.
தமிழக அரசுக்கு எதிராக கோவையில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய கூட்டத்தில், இலட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். ஜெயலலிதாவின் அணுகுமுறையில் தற்பொழுது பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஜெயலலிதாவை இலகுவில் எவரும் சந்திக்க முடியாது. ஆனால், இப்பொழுது தொண்டர்களையும் சந்திப்பதற்கு ஜெயலலிதா முன்னுரிமை கொடுத்துள்ளார்.
இந்திய மத்திய அரசும் தமிழக அரசும் இலங்கை அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதை எதிர்த்து மீண்டும் பிரசாரம் செய்யத் தொடங்கி விட்டார் ஜெயலலிதா. இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டதால் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களும் முடிவுக்கு வந்து விடும் என்று தமிழக மீனவர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இலங்கையில் யுத்தம் முடிவடைந்து ஒரு வருடம் கழிந்த நிலையிலும் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தத் திராணியற்ற அரசு என்று ஜெயலலிதா மிகக் காட்டமாக தமிழக அரசை விமர்சித்துள்ளார். கடந்த வாரம் நடுக் கடலில் இந்திய மீனவர்கள் நிர்வாணமாக்கப்பட்டு தாக்கப்பட்டனர். இத்தாக்குதலின் காரணமாக ஒருவர் இறந்துள்ளார். இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல்களைத் தடுத்து நிறுத்தத் தவறிய தமிழக அரசின் மீது தமிழக மீனவர்கள் வெறுப்படைந்துள்ளனர்.
தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலைக் கண்டிக்கத் தவறிய தமிழக அரசை எதிர்த்து உரையாற்றிய இயக்குனர் சீமான், கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுக்கும் சீமான் அடிக்கடி கைது செய்யப்படுவது வழமையாகி விட்டது. இந்திய அரசின் இறையாண்மையையும் ஒற்றுமையையும் சிதறடிக்கும் வகையில் உரையாற்றியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள இந்தியத் தூதரகத்தை மூட வேண்டும் என்று போராட்டம் நடத்திய வைகோ, நெடுமாறன் உட்பட பலர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டனர். இலங்கைக்கு எதிராகப் பேசுபவர்களும் போராட்டம் நடத்துபவர்களும் தமிழகத்தில் கைது செய்யப்படுகின்றனர். இதேவேளை இந்திய மீனவர்கள் மீதான தாக்குதலைத் தடுப்பதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எதனையும் தமிழக அரசு செய்யவில்லை. இந்திய மீனவர்கள் தாக்கப்படும் போதெல்லாம் கண்டன அறிக்கை வெளியிட்டு, இந்தியப் பிரதமருக்கு கடிதம் எழுதி அனுப்பிவிட்டு அதனுடன் தனது கடமை முடிந்து விட்டதென்று நிம்மதியாக இருக்கிறார் கருணாநிதி.
தமிழக அரசின் இந்த நழுவும் போக்கை தனது பிரசாரத்தில் முதன்மைப்படுத்துகிறார் ஜெயலலிதா. தமிழக அரசின் மீது கடும் சொற்பிரயோகங்களை வீசிய ஜெயலலிதா காங்கிரஸ் கட்சியை விமர்சிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி சேர்வதற்கு ஜெயலலிதா காத்திருப்பதையே இது வெளிப்படுத்துகிறது.
காங்கிரஸ் கட்சிக்கும் விஜயகாந்துக்கும் ஜெயலலிதா அதிக முக்கியத்துவம் கொடுப்பதனால் வைகோ வெறுப்புற்றிருக்கிறார் என்ற தகவல் காற்று வாக்கில் பரவியதால் வைகோவை கடந்த வாரம் சந்தித்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஜெயலலிதா.
வைகோ அணி மாறுவார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் வைகோ, ஜெயலலிதா சந்திப்பினால் ஏமாற்றமடைந்துள்ளனர்.
வைகோ, ஜெயலலிதா சந்திப்பின் மூலம் வைகோ அணி மாற மாட்டார் என்பது உறுதியானதால், திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்பார்ப்பும் பொய்த்துப் போய் விட்டது. கூட்டணியிலிருந்து கோபித்துக் கொண்டு வெளியேறிய டாக்டர் ராமதாஸை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டு வரும் முயற்சியை தொடங்கியுள்ளார் ஜெயலலிதா.
டாக்டர் ராமதாஸ் இருக்கும் கூட்டணி வெற்றி பெறும் என்ற கருத்து ஒரு காலத்தில் இருந்தது. இப்போது வெற்றி பெறும் கூட்டணியைத் தேடி அலைகிறார் டாக்டர் ராமதாஸ். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்து வெளியேறிய டாக்டர் ராமதாஸ் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சேர்வதற்காகத் தூது விட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் விதித்த நிபந்தனைகளினால் முடிவு கூறாமல் காத்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இருவருடனும் பேரம்பேசி அதிக தொகுதிகளை தரும் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்காக அவர் காத்திருக்கிறார்.
ஜெயலலிதா விரும்பும் கட்சிகளுடன்தான் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் இதுவரை கூட்டணி அமைத்து வந்தது. மக்கள் விரும்பும் கூட்டணியே அமையும் என்றும் மக்கள் விருப்பமே எனது விருப்பம் என்றும் ஜெயலலிதா கூறியதால், தொண்டர்கள் மகிழ்ந்து போயுள்ளனர். ஜெயலலிதாவின் விருப்பமே கட்சியின் விருப்பம் என்ற நிலை மாறி மக்களின் விருப்பமே ஜெயலலிதாவின் விருப்பம் என்பதனை ஜெயலலிதா பகிரங்கமாக வெளிப்படுத்தியதால், கூட்டணி பற்றிய இரகசியப் பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகக் கருத முடிகிறது. திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணிக்கு எதிரான அந்தப் பலமான கூட்டணி பற்றிய அறிவிப்பு தமிழக சட்டமன்றத் தேர்தல் வரை இரகசியமாக இருக்கும்.

வர்மா

வீரகேசரிவாரவெளியீடு 18/08/10

No comments: